தொலைந்துபோன புயல்

ஜகதீஷ் சந்திர போஸ்

(ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம்: போதிசத்வ சதோபாத்யாய்
தமிழில் : சிஜோ அட்லாண்டா)

பாகம் 1 – ஓர் அறிவியல் புதிர்:

சில வருடங்களுக்குமுன், அமெரிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு மீயியற்கை நிகழ்வு கண்டறியப்பட்டது. அந்த நிகழ்வை விளக்கும் விதமாகப் பலதரப்பட்ட அறிவியல் இதழ்களில் பல்வேறு விதமான கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் இதுவரை அந்த நிகழ்வுக்கு ஒரு திருப்திகரமான விளக்கம் கண்டுபிடிக்கப்படவில்லை.

செப்டம்பர் 28-ஆம் தேதி, கல்கத்தாவின் முன்னோடி ஆங்கில நாளிதழ் சிம்லாவிலிருந்து வந்த பின்வரும் செய்தியைப் பதிப்பித்தது: சிம்லா வானிலை அலுவலகம், செப்டம்பர் 27: வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளிப் புயல் வெகுவிரைவில் உறுதி.

செப்டம்பர் 29-ஆம் தேதி, மேலே குறிப்பிட்ட நாளிதழ் பின்வரும் செய்தியை பதிப்பித்தது: வானிலை அலுவலகம், அலிபூர்: ஒரு பிரம்மாண்டமான சூறாவளி இரண்டு நாட்களில் வங்காளத்தைத் தாக்கவிருக்கிறது. டயமண்ட் ஹார்பரில் அபாய சமிக்ஞை இடப்பட்டுள்ளது.

30ஆம் தேதியின் செய்தியோ மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது: கடந்த அரைமணி நேரத்தில காற்றழுத்தமானி இரண்டு அங்குலம் தாழ்ந்திருக்கிறது. நாளை பத்து மணிக்குள், கல்கத்தா கடந்த பல வருடங்களில் கண்டிராத மிக மோசமானதும் ஆபத்தானதுமான சூறாவளியைச் சந்திக்கவிருக்கிறது.

அன்றிரவு கல்கத்தாவில் யாரும் உறங்கவில்லை. தங்களுடைய நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தில் அந்த பயந்த ஆத்மாக்கள் விழித்திருந்தன.

அக்டோபர் 1-ஆம் தேதி, வானம் மேகமூட்டமாக இருந்தது, பகலில் சில மழைத்துளிகள் விழுந்தன. பகல் முழுவதும் இருண்டே இருந்தது, ஆனால் கிட்டத்தட்ட மாலை நான்கு மணி அளவில் வானம் சூறாவளிக்கான ஒரு தடயமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாகியது.

அடுத்த நாள், வானிலை இலாகா பின்வரும் செய்தியை பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பியது: கல்கத்தாவைத் தாக்கவிருந்த சூறாவளி வங்காள விரிகுடாவை விட்டு விலகியது. அநேகமாக அது இந்தியப் பெருங்கடலில் வேறு திசை நோக்கிச் சென்றிருக்கக்கூடும்.

ஆனால், சூறாவளியின் தடத்தைப் பின்தொடர பல விஞ்ஞானிகள் முயற்சித்தும் அதன் புதிய திசையை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முன்னோடி ஆங்கில நாளிதழ் பின்வரும் செய்தியைப் பதிப்பித்தது: அறிவியல் ஞானம் முற்றிலும் தவறானது என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.

இன்னொரு நாளிதழ் பதிப்பித்தது பின்வருமாறு: அறிவியலின் முடிவுகள் தவறு எனின், நம்பகத்தன்மை அற்ற வானிலை இலாகாவுக்கு செலவு செய்து ஏன் மக்களின் வரிச்சுமையைக் கூட்ட வேண்டும்?

பல நாளிதழ்கள் ஒத்தூதின: வானிலை இலாகா தேவை இல்லை! அதை விட்டொழிப்போம்! 

 அரசாங்கத்தின் நிலையோ தர்மசங்கடமாயிற்று. சில நாட்களுக்கு முன்னரே ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான செலவில் வானிலை இலாகாவிற்காக புதிய கருவிகள் வாங்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றுக்கு உடைந்த கண்ணாடிக் குப்பிகளுக்குக் கிடைக்கும் விலைகூடக் கிடைக்காது! அதோடு, வானிலை இலாகாவின் முதன்மை அதிகாரியை எங்கே இடமாற்றம் செய்வது?

கடுமையான நெருக்கடியில், அரசாங்கம் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தது: “நாங்கள் மருத்துவக் கல்லூரியில் ஒரு புதிய இருக்கையை உருவாக்க விரும்புகிறோம். ‘காற்றழுத்த மாறுதல்களினால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் விரிவுரைகள் வழங்கப்படும்.” மருத்துவக் கல்லூரி முதல்வர் பின்வரும் பதிலை எழுதினார்:

அருமையான பரிந்துரை. காற்றழுத்தத்தில் குறைவு ஏற்படும்போது மனித உடலின் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. இது ஐயத்திற்கிடமில்லாமல் உடலுக்கு புத்துயிர்ப்பூட்டும். ஆனால், கல்கத்தாவாசிகள் தற்போது பின்வரும் அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கிறார்கள்:

முதலாவது – காற்று. அழுத்த விகிதம்: ஒரு சதுர அங்குலத்திற்கு பதினைந்து பவுண்டுகள்.
இரண்டாவது – மலேரியா. அழுத்த விகிதம்: ஒரு சதுர அங்குலத்திற்கு இருபது பவுண்டுகள்.
மூன்றாவது – காப்புரிமைக்குட்பட்ட மருந்துகள். அழுத்த விகிதம்: ஒரு சதுர அங்குலத்திற்கு முப்பது பவுண்டுகள்.
நான்காவது – பல்கலைக்கழகம். அழுத்த விகிதம்: ஒரு சதுர அங்குலத்திற்கு ஐம்பது பவுண்டுகள்.
ஐந்தாவது – வருமான வரி. அழுத்த விகிதம்: ஒரு சதுர அங்குலத்திற்கு எண்பது பவுண்டுகள்.
ஆறாவது – நகராட்சி வரி. அழுத்த விகிதம்: ஒரு சதுர அங்குலத்திற்கு ஒரு டன்.

சில அங்குலக் காற்றழுத்தக் குறைவு ஏற்கெனவே இருக்கும் அதீதமான எடையில் ஒரு கையளவு சுள்ளிகளைக் குறைப்பது போலத்தான். தற்போதைக்கு, கல்கத்தாவில் இந்த இருக்கை அமைவதினால், இந்த நகரவாசிகளுக்குக் குறிப்பிடத்தக்க பலன்கள் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. சிம்லாவின் குன்றுகளில், காற்றழுத்தமும், மற்ற அழுத்தங்களும் ஒப்புநோக்கக் குறைவே. அதனால் குறிப்பிட்ட இருக்கை சிம்லாவில் அமைக்கப்பட்டால், அதன் பலன் அங்கு அதிகமாக இருக்கும்.

அரசாங்கம் இதன்பின் இந்த விஷயத்தில் மௌனம் காத்தது. வானிலை இலாகா இந்த நெருக்கடியிலிருந்து தப்பிப் பிழைத்தது.

சூறாவளியின் புதிரோ இன்னும் அவிழாமலேயே இருந்தது.

‘இயற்கை’ இதழில் ஒரு விஞ்ஞானி ஓர் ஆய்வுக் கட்டுரையைப் பதிப்பித்தார். ஒரு கண்ணுக்குத் தெரியாத வால் நட்சத்திரத்தின் ஈர்ப்பு ஆற்றலால் சூறாவளி சிதறடிக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தை அவரது கட்டுரை முன்வைத்தது. ஆனால் இவை எல்லாம் ஊகங்களே.

இப்போதும்கூட இந்தச் சர்ச்சை விஞ்ஞானிகளிடையே விவாதப் புயல்களைக் கிளப்பிக்கொண்டுதான் இருக்கிறது. ஆக்ஃஸ்போர்டில் நடந்த பிரிட்டிஷ் சபை மாநாட்டில் ‘ஓடிப்போன புயலைப்’ பற்றி ஒரு ஜெர்மானியப் பேராசிரியர் சமர்ப்பித்த ஓர் அறிவார்ந்த ஆய்வு அவரது சகாக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

பேராசிரியரின் ஆய்வுப்படி, “சூறாவளி என்பது வளிமண்டலத்தின் ஒரு தோற்றம் மட்டுமே. நாம் முதலில் வளிமண்டலம் எப்படி உருவானது என்று ஆராய்வோம். இந்தப் புவி சூரியனிலிருந்து உருகிய உலோக வஸ்துவாக உருவானபோது அதற்கு வளிமண்டலம் இருக்கவில்லை. இந்த உலோகக் குழம்பிலிருந்து ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் ஹைட்ரஜனும் எப்படி உருவாயின என்பது இன்னமும் படைப்பின் மர்மங்களில் ஒன்று. அதிலிருந்து வந்த உயிர் பரிணாமம் அதைவிடப் புதிரானதும் சுவாரசியமானதுமாகும். வளிமண்டலம் எப்படியோ உருவாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதைவிடப் பெரிய பிரச்சினை இந்த வளிமண்டலம் எப்படிக் கலைந்து விண்வெளியில் தொலைந்து போகாமல் இருக்கிறது என்பதுதான். அதற்குக் காரணம் பூமியின் புவியீர்ப்பு விசை. புவியீர்ப்புப் பொருளின் எடையைப் பொருத்து வேறுபடக்கூடியது. அதாவது எடை கூடக்கூட அதன் மேலுள்ள ஈர்ப்பு விசையும் கூடும், அதனால் அப்பொருள் ஒப்புநோக்க அதன் நிலையில் கட்டுண்டு இருக்கும். எடை குறைந்த பொருளின்மேல் புவியீர்ப்பு விசையும் குறைவு என்பதால் அது ஒப்புநோக்க ஒரு நிலையில் கட்டுண்டிருக்காது. அதனால்தான் நாம் நீரையும் எண்ணெயையும் கலக்கும்போது, எடை குறைந்த எண்ணெய் மேலே மிதக்கிறது. ஹைட்ரஜன் எடை குறைவானது என்பதனால் அது வளிமண்டலத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறது, ஆனால் அதுவும் புவியீர்ப்பு விசையிலிருந்து முழுமையாக விடுபட முடியாது. 

ஆனால் ஒப்புமை நிரை (Relative Mass) என்னும் கொள்கை இயற்பியலைத் தாண்டிய புலங்களில் எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் என்று நமக்கு ஐயமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியா என்ற நாட்டில், ஆண்கள் ஒப்புநோக்க எடை மிகுந்தவர்களாக இருந்தாலும், கட்டற்றவர்களாகவே இருக்கிறார்கள். பெண்கள் ஒப்புநோக்க எடை குறைந்தவர்களாக இருப்பினும், வீட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், ஒரு பொருள் புவியீர்ப்பினால்தான் பூமியில் கட்டுண்டு இருக்கிறது. அந்தப் பொருளின் இறப்பிற்குப்பின், அது புவியிடமிருந்து விடுதலை அடைகிறது. மனிதனின் ஆவி அவனைவிட்டுப் பிரிந்ததும் புவியீர்ப்பு அவன் நகர்வைக் கட்டுப்படுத்தவதில்லை. சிலரின் கூற்றுப்படி, மரணம்கூட மனிதனை இப்புவியிலிருந்து விடுவிக்க முடியாது, ஏனெனில் ஆவிகள்கூட  பிரம்மஞான சபையின் கட்டளைகளுக்குட்பட்டுத்தான் அலைய முடியும். பொருண்மையைப் பொருத்தவரை, அது ஐந்து நிலைகளை எட்டும் என்பது தவறு – ஏனெனில் மூன்று நிலைகளையே நாம் காண்கிறோம். கதிரியிக்கத்தினால் துளைக்கப்படுகையில், பொருண்மை ஆல்ஃபா, பீட்டா, காமா என்று மூன்று நிலைகளாகச் சிதறுகிறது. அப்படியாகப் பொருண்மை சிதையும்போது அபொருண்மை நமக்கு புலப்படாத ஒரு வெளிக்குள் தப்பிச் சென்றுவிடுகிறது. உயிருடன் இருக்கும்போதோ, புவியீர்ப்பு ஆற்றலிலிருந்து தப்புவது கடினம்.”

இப்படியாக, பொருண்மை விண்வெளியில் எப்படித் தப்பிப் போகிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான விளக்கத்தைப் பேராசிரியர் கொடுத்தபோதும் வங்காள விரிகுடாவில் தோன்றிய புயல் எப்படி மாயமாக மறைந்தது என்பதை அவரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

இந்த மர்மத்தின் உண்மையான காரணம் இந்த உலகத்திலேயே என் ஒருத்தனுக்குத்தான் தெரியும். அடுத்த பாகத்தில் இந்த நிகழ்விற்கான விரிவான விளக்கத்தை அளிக்கிறேன்.

பாகம் 2

சில வருடங்களுக்கு முன் நான் கடுமையான நோய்வாய்ப்பட்டேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் படுத்த படுக்கையாயிருந்தேன். மருத்துவர் நான் உயிர்பிழைக்க வேண்டுமானால் ஒரு கடல் பயணம் மிகவும் அவசியம் என்றார்; அது நடக்கவில்லையெனில் இந்த நோய் மீண்டும் தாக்கும் பட்சத்தில் நான் தப்பிப் பிழைக்கமாட்டேன் என்றார். அதனால் நான் இலங்கைக்குப் பயணம் செய்ய முடிவு செய்தேன்.

நோய் ஒரு காலத்தில் அடர்ந்திருந்த என் கேசத்தைப் பதம் பார்த்திருந்தது. ஒரு நாள் என் எட்டு வயது மகள் என்னிடம் வந்து “அப்பா, தீவு என்றால் என்ன?” என்று கேட்டாள். அதற்கு நான் பதில் சொல்வதற்குள் என் பளபளக்கும் தலையில் எஞ்சியிருந்த ஒன்றிரண்டு முடிக்கற்றைகளைப் பிடித்து “இவைதான் தீவுகள்” என்றாள். சற்று நேரத்துக்குப்பின், “உங்களுடைய பையில் ‘கூந்தல் கேசரி’ குப்பி ஒன்றை வைத்திருக்கிறேன். பயணத்தின்போது இதைத் தினமும் பயன்படுத்துங்கள். இல்லையென்றால், கடலின் உப்புநீரில் மிச்சமிருக்கும் தீவுகளும் மறைந்து விடும்” என்றாள்.

’கூந்தல் கேசரி’ கண்டுபிடிக்கப்பட்ட கதை மிகவும் சுவாரசியமானது. ஒரு பிரிட்டிஷ் துரை தனது சர்க்கஸ் குழுவுடன் இந்தியா வந்திருந்தார். பெரிய பளபளக்கும் கருமை நிறப் பிடரி கொண்ட ஒரு சிங்கம்தான் அந்த சர்க்கஸின் பிரதான கவர்ச்சி. துரதிர்ஷ்டவசமாக, ஒரு நுண்ணியிர் நோயினால் பயணத்தின்போது சிங்கம் தன் பிடரி மயிர் முழுவதையும் இழந்துவிட்டது. கப்பல் கரைசேர்ந்தபோது சிங்கத்துக்கும் ஒரு முடியிழந்த தெரு நாய்க்கும் பெரிய வித்தியாசமெதுவும் இருக்கவில்லை. வேறு வழியில்லாத சர்க்கஸ் நிர்வாகி ஒரு சன்னியாசியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஒரு தீர்வை அளிக்குமாறு கைகூப்பி மன்றாடினார். ஒரு கிறித்துவர், அதுவும் வெள்ளைக்காரர்! துரையின் பக்தியால் ஈர்க்கப்பட்ட சன்னியாசி, தனக்குக் கனவில் வந்த சூத்திரத்தின்படி உருவாக்கப்பட்ட எண்ணெயைக்  குப்பியொன்றில் அருள்கூர்ந்து அளித்தார். இதே எண்ணெய்தான் பின்னால் ‘கூந்தல் கேசரி’யாகப் பிரபலம் அடைந்தது. இந்த எண்ணையைத் தடவியதால் சிங்கத்தின் பிடரிமயிர் ஒரே வாரத்தில் திரும்ப வந்து விட்டது. எல்லா வழுக்கையருக்கும், அவர்களது துணைகளுக்கும் இந்த எண்ணைய் ஒரு வரப்பிரசாதம். இந்தச் செய்தி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எல்லா தேசிய பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது. நாட்டின் முன்னணி மாதாந்திரப் பத்திரிக்கை இந்தச் செய்தியைத் தன் முன்னட்டையில் பிரதானமாக வெளியிட்டது.

செப்டம்பர் 28ஆம் தேதி நான் ‘சூசான்’ கப்பலில் பயணத்தைத் தொடங்கினேன். முதல் இரண்டு நாட்கள் அமைதியாகவும் இனிமையாகவும் கடந்தன. ஆனால் ஒன்றாம் தேதி, கடல் ஒருவிதமான மர்மமும் பகையும்கொண்ட தோற்றம் கொள்ளத் தொடங்கியது. கடற்காற்று வீசுவது சுத்தமாக நின்றுவிட்டது. கடலின் மேற்பரப்புகூட அசைவற்று நின்றதுபோலத் தோன்றியது. கப்பல் கேப்டனின் சோர்ந்த முகம் எங்களைப் பாதித்தது. வெகுவிரைவில் மிகவும் ஆபத்தான ஒரு சூறாவளிப் புயல் நம்மைத் தாக்கப்போகிறது என்றார் அவர். கரையிலிருந்து வெகுதூரத்தில் இருந்தமையால், இப்போது எங்கள் எதிர்காலம் கடவுளின் கையில்.

சற்று நேரத்திற்குள், வானத்தைக் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டன. திடீரென இருள் பரவி, எங்கோ தூரத்திலிருந்து வந்த வலுவான காற்று எங்கள் கப்பலைப் பலமுறை தாக்கியது. அதன் பிறகு நடந்தவையெல்லாம் எனக்கு மிக மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. திடீரென, பழங்கதைகளில் உள்ள அசுரர்கள் பூமியை அழிக்க வந்ததுபோலத் தோன்றியது. புயலின் இரைச்சல் சினம்கொண்ட கடலின் இரைச்சலோடு இணைந்து, அழிவின் இசையாக எங்களைச் சூழ்ந்தது. அலைமேல் அலை வந்து கப்பலை மோதி அனைத்துத் திசைகளிலும் அதனை அலைகழித்தது. ஒரு பெரிய அலை எங்கள் பாய்மரத்தையும் உயிர்காப்புப் படகையும் அடித்துச் சென்றது. எங்கள் இறுதிக் கணங்கள் நெருங்கிவிட்டிருந்தன.

ஒருவரின் கடைசிக் கணங்களில் அவர்களது அன்புக்குரியவர் நினைவுக்கு வருவர். எனக்கும் என் பிரியமானவர்களின் நினைவு வந்தது, அதிலும் என் மகள் என்னுடைய வழுக்கையைப் பற்றிச் சொன்ன கேலி அந்த நேரத்திலும் விசித்திரமாக ஞாபகத்துக்கு வந்தது: 

“அப்பா, உங்கள் பையில் ஒரு குப்பி ‘கூந்தல் கேசரி’யை வைத்துள்ளேன்.”

திடீரென, சமீபத்தில் ஓர் அறிவியல் இதழில், நீரலைகளில் எண்ணெயின் விளைவுகளைப் பற்றிப் படித்தது நினைவிற்கு வந்தது. எண்ணெய் அசையும் நீர்ப்பரப்பை ஆற்றுப்படுத்தும் என்பதும் நினைவில் வந்தது. அந்தக் கணமே பையிலிருந்த “கூந்தல் கேசரி” குப்பியை எடுத்துக் கொண்டு மிகுந்த சிரமித்திற்கிடையில் கப்பல் மேடையில் ஏறினேன். மலைபோன்ற பிரம்மாண்டமான ஓர் அலை எங்களைத் தாக்க வருவதைக் கண்டேன்.

எல்லா நம்பிக்கையும் இழந்த நிலையில், ‘கூந்தல் கேசரி’யின் மூடியைத் திறந்து, குப்பியைக் கடலுக்குள் எறிந்தேன். மந்திரம் செய்ததுபோல் கடல் அமைதி அடைந்தது, அந்த அற்புதமான குளிர்விக்கும் எண்ணெய் முழு வளிமண்டலத்தையுமே அமைதிப்படுத்தியது. அடுத்த விநாடிக்குள் சூரியன் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டான்.

இப்படியாக மரணம் உறுதி எனற நிலையிலிருந்து நாங்கள் தப்பிப் பிழைத்தோம். இந்தக் காரணத்தினாலேயே புயல் கல்கத்தாவை எட்டவும் இல்லை. இந்த ஒரு குப்பி கூந்தல் தைலத்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் அகால மரணத்திலிருந்து தப்பித்தன என்பதை யார் கண்டார்?

ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் பின்குறிப்பு:

J.C.போஸ் (1858-1937) எழுதிய இந்தக் கதை வங்காள மொழியில் எழுதப்பட்ட தொடக்க கால அறிவியல் புனைகதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1896-இல் “Niruddesher Kahini” (தொலைந்து போன ஒன்றின் கதை) என்ற பெயரில் “குந்தலின்” (Kuntalin) கதைப் போட்டியில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது.  ‘குந்தலின்’ அந்த சமயத்தில் ஒரு பிரபலமான கூந்தல் தைலம். அதன் கண்டுபிடிப்பாளரும் உடமையாளருமான ஹேமேந்திரமோகன் பாசு 1896 ஆண்டு, வருடாந்திர புனைவுக் கதைப் போட்டி ஒன்றைத் தொடங்கினார். இந்த போட்டியின் முன்நிபந்தனை அவருடைய கூந்தல் தைலம் கதையில் இடம் பெற்று, அதற்கு விளம்பரமாக அமையவும் வேண்டும் என்பதே இப்போட்டியின் ஒரே முன்நிபந்தனை .

இந்த எண்ணெய் சுவதேசி இயக்கத்தில் இயங்கியவரான அதன் கண்டுபிடிப்பாளரின் தொழிலைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், தேசியச் சின்னமாகக்கூடிய இது போஸ் அவர்களாலேயே அறிவியல் கூறுகளுடன் தேசிய சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலாசார சின்னமாக ஆனது. இப்போட்டியின் முதல் வருடப் பரிசைப் போஸ் வென்றபின், அக்காலகட்டத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களும் அதை வென்றனர். அவர்களில் வங்காளத்தின் முதல் அறிவியல் புனைகதை எழுதியவர் (அது மிகப் பிந்தி பதிப்பிக்கப்பட்டது என்ற போதிலும்) என்று வாதிடத்தக்க ஜெகதானந்த ரேயும் உண்டு. போஸ் பிறகு இந்தக் கதையை மறுஉருவாக்கம் செய்து”Palatak Toofan” (“Runaway Cyclone”) என்ற பெயரில் தனது ‘Abyakto’ (1921) கதைத் தொகுப்பில் சேர்த்தார். 

1896-இல் வெளியான கதையில் பின்வரும் பத்தி (ஆங்கிலத்தில்) இடம்பெற்றது:

இந்தக் கதை நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘Scientific American’ இதழில் பின்வரும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் பதிப்பிக்கப்பட்டது:

ஒரு புதிரின் விளக்கம்

கல்கத்தாவின் தொலைந்துபோன சூறாவளிப் புயல் ஒரு மர்மமாக வெகுநாட்களாக வானிலை ஆய்வாளர்களின் ஆன்மாவைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. வானிலை மாற்றங்களை ஆளும் விதிகளைப் புறக்கணித்த இந்த நிகழ்வுக்கு இப்போது ஒரு விளக்கம் கொடுக்க முடிவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வங்காள வளைகுடாவில் புயல் அதன் உச்சத்தில் இருந்தபோது சூசான் கப்பலில் இருந்த ஒரு பயணி ஒரு ‘குந்தலின்’ எண்ணெய்க் குப்பியை கடலில் எறிந்ததாகக் தெரிகிறது. கொந்தளித்துக் கொண்டிருந்த நீர்ப்பரப்பில் வேகமாகப் பரவிய எண்ணெய்ப் படலம் ஓர் உறைவு அலையை உருவாக்கிப் புயல் உருவாகக் காரணமாகும் விரிவாக்கத்தை இல்லாமலாக்கியது. இதனால் அதன் மேலிருந்த வளிமண்டல அழுத்தம் விடுவிக்கப்பட்டு மிதமான காலநிலை உருவாகியது. இவ்வாறாக ஒரு தற்செயல் நிகழ்வால் மிகப்பெரிய ஓர் அழிவு தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.