எஸ். ராமகிருஷ்ணன்

மகாகவி தாகூரின் வாழ்க்கை குறித்துச் சத்யஜித் ரே எழுதி இயக்கிய ஆவணப்படம் Rabindranath Tagore. 1961 ஆம் ஆண்டுத் தாகூரின் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது.
சத்யஜித் ரே, சாந்தி நிகேதனிலுள்ள விஸ்வபாரதியில் பயின்றவர். தலை சிறந்த இயக்குநராக மட்டுமின்றிச் சிறந்த இசையமைப்பாளராகவும் ஓவியராகவும் எழுத்தாளராகவும் வடிவமைப்பாளராகவும் விளங்கியவர். இந்தப் பன்முகத்தன்மை சாந்தி நிகேதனிலிருந்துதான் உருவானது.
நேருவின் ஆலோசனைப்படியே இந்த ஆவணப்பட உருவாக்கம் திட்டமிடப்பட்டது. நேருவின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ரேயிற்கு இருந்தது. இதற்காக நேருவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஆனால் அன்றிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக நேரு அதை விரும்பவில்லை என்று ஆண்ட்ரூ ராபின்சன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
தாகூரைப் பற்றிய ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் நிறைய வேறுபாடுகள், தகவல் பிழைகள் இருந்தன. இதிலிருந்து மாறுபட்டு அதிகாரப்பூர்வமாக அவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை இந்திய அரசு உருவாக்க வேண்டும் என்று விரும்பியது. இதற்கான பொறுப்பு சத்யஜித்ரே வசம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் இதை மரபான ஆவணப்படங்களைப்போல உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்
இந்த ஆவணப்படப் பணியைக் கண்காணிக்க அரசு ஒரு குழுவை ஏற்படுத்தியது. அவர்களின் வழிகாட்டுதலின் படியேதான் படம் உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காதம்பரி தேவியின் தற்கொலை குறித்தோ, காந்தியோடு ஏற்பட்ட பிணக்குகள் பற்றியோ, முசோலினியைப் பாராட்டியதைப் பற்றியோ, எந்தத் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறக்கூடாது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படத்தில் அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்புக் குழு உறுதியாகச் சொன்னது.
தாகூரை மகாகவியாகச் சித்திரிக்கவே விரும்புகிறேன். அவரது ஆளுமையின் உருவாக்கம். அவரது கவிதைகள், அரசியல் சமூகச் செயல்பாடுகள், சாந்தி நிகேதன் உருவாக்கம், இந்திய விடுதலை இயக்கத்தில் அவரது பங்கு இவற்றையே முதன்மைப்படுத்த இருப்பதாக ரே தெரிவித்தார்.

இந்த ஆவணப்படத்திற்காக ஒரு திரைக்கதையைச் சத்யஜித் ரே எழுதினார். அதை வைத்துக்கொண்டு தேவையான இடங்களில் மறுஉருவாக்கம் செய்வது, தேவையான இடங்களில் சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்று முடிவு செய்தார்.
பல்வேறு நாடுகளுக்கும் தாகூர் பயணம்செய்து உரை நிகழ்த்தியிருந்தபோதும் எங்கும் அவரது காணொளிப் பதிவு கிடைக்கவில்லை. அது பெரும் குறையாக அமைந்தது.
இந்தப் படத்தை உருவாக்கும் முன்பாகவே படத்தில் தாகூரின் கவிதைகளைத் திரையில் வாசிக்கப்போவதில்லை என்று ரே முடிவு செய்துவிட்டார். ஆகவே படத்தில் தாகூரின் கவிதைகள் பற்றிக் குறிப்பிடப்படுகிறதே அன்றி அவரது கவிதைகள் எதுவும் வாசிக்கப்படவில்லை. மாறாகக் கவிதைகள் எழுதப்பட்ட விதம், அது ஆங்கில உலகிற்கு அறிமுகமானது, நோபல் பரிசுபெற்ற பின்புலம் இவையே விளக்கப்படுகின்றன.
தாகூருக்குச் செலுத்தப்பட்ட மிகச்சிறந்த காணிக்கை என்றே இப்படத்தைச் சொல்வேன். காணிக்கை என்பதன் முழு அர்த்தமும் இந்தப் படைப்பினுள் காணமுடிகிறது. இந்த ஆவணப்படம் தாகூரின் வாழ்க்கையை மட்டும் சித்திரிக்கவில்லை. மாறாக வங்காளத்தின் பண்பாட்டு, அரசியல் வரலாற்றையும் சேர்த்தே சித்திரிக்கிறது.
எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களில் பெரும்பாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஆய்வாளர்களின் நேர்காணல்களே அதிகம் இடம்பெறுவது வழக்கம். இந்த ஆவணப்படத்தில் அப்படியான ஒரு நேர்காணல்கூடக் கிடையாது. கவனமாக அதைச் சத்யஜித்ரே தவிர்த்திருக்கிறார்.
தாகூர் வம்சாவளியில் துவங்கி அவரது பால்யகாலம், இளமைப்பருவம், சாந்திநிகேதன் உருவான விதம். நோபல் பரிசு பெற்றது. ஜாலியன் வாலா பாக் படுகொலை, விஸ்வபாரதி பல்கலைக்கழக உருவாக்கம், இந்திய விடுதலைப்போராட்ட நாட்கள் எனத் தாகூர் வாழ்வின் விரிந்த பக்கங்களை அழகான கோட்டுச் சித்திரம்போல ரே உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.
தாகூரின் குடும்ப வரலாறும் சத்யஜித்ரேயின் குடும்ப வரலாறும் பல்வேறு விதங்களில் ஒன்றுபோலவே இருக்கிறது. இரண்டு குடும்பங்களிலும் படித்தவர்கள் அதிகம். நுண்கலைகள், பத்திரிக்கை, இசை, நாடகம்மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து சென்று கல்வி பயின்றிருக்கிறார்கள்.
ரவீந்திரநாத் தாகூர் என்ற இந்த ஆவணப்படத்தின் துவக்கப் பணி 1958 ஆம் ஆண்டின் முற்பகுதியில் துவங்கியது. கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் தனிச்சிறப்பு இசை. தாகூரின் ஆன்மாவை உணரும் வண்ணம் இசை நம்மைக் கரையச் செய்கிறது. கறுப்பு வெள்ளைக் காட்சிகளுடன் தனித்துவமான இசை இணைந்து ஒலிக்கும்போது மனதில் உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன.
தாகூரைப் பற்றிப் பலரும் அறிந்த விஷயங்களைப் பெரும்பாலும் ரே தவிர்த்திருக்கிறார். அவரை ஒரு பிம்பமாக மாற்றுவதற்குப் பதிலாகச் சிறந்த கவியாக, கலைஞனாக, குருவாக அடையாளப்படுத்தவே ரே முயன்றிருக்கிறார்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்ற மிருணாள் சென் எழுதிய நூலில் தாகூரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இளைஞரான மிருணாள் சென் அந்த ஊர்வலத்தினை நேரில் கண்டதை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். பெருந்திரளான மக்கள் செல்லும் இறுதி ஊர்வலத்தில் காவலர்கள் கூட்டத்தினைப் பிடித்துத் தள்ளி வழியை உண்டாக்கினார்கள். எங்கும் புழுதி பறந்தது. ஒரு கவிஞனுக்கு இதைவிடச் சிறந்த அஞ்சலி செலுத்த முடியாது, அபூர்வமான காட்சியது என்கிறார்.
அதுபோன்ற காட்சி ஒன்றிலிருந்துதான் ரேயின் ஆவணப்படம் துவங்குகிறது. 7 ஆகஸ்ட் 1941ல் தாகூர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் கல்கத்தா வீதியில் மிகப் பிரம்மாண்டமாகச் சென்றது. அந்த ஊர்வலக் காட்சிகளை ரே ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கண்ணீர் சிந்தும் மக்களின் ஊடாகத் தாகூரின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. தாகூரின் அழியாப் புகழுக்கான அடையாளமது. அங்கிருந்துதான் தாகூரின் குடும்ப வரலாற்றை விவரிக்க ஆரம்பிக்கிறார் சத்யஜித் ரே.
குறைவான காட்சிகளின் வழியே நூற்றாண்டுகளின் வரலாற்றைச் சொல்லி விடுகிறார். கல்கத்தா நகரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் துவங்கி தாகூரின் வம்சாவழி விவரிக்கப்படுகிறது.
தாகூரின் குடும்பம் வசதியானது. கல்வியில் மிகத் தேர்ச்சி பெற்றது. கல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையை அவர்கள் உருவாக்கிய விதம்பற்றிச் சொல்லும் ரே, அந்த ஜோராசாங்கோவில்தான் தாகூர் 1861 ஆண்டுப் பிறந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்.
இன்று அந்த மாளிகை நினைவகமாக உள்ளது. அதன் பழைய தோற்றமும் பிரம்மாண்டமும் மதுரை திருமலைநாயக்கர் மகாலை நினைவுபடுத்துகிறது.
தாகூர் குழந்தையாக இருந்தபோதே அவரது தாய் இறந்துவிட்டார். தாயின் அன்பிற்கான ஏக்கம் வாழ்நாள் முழுவதும் அவருக்குள் இருந்தது. தாகூரின் குடும்பம் முன்னோடியானது. வங்காளத்தில் நடந்த முக்கிய அரசியல் மாற்றங்கள். வங்காள மறுமலர்ச்சி இயக்கங்கள் ஜோராசாங்கோ மாளிகையில்தான் திட்டமிடப்பட்டன.
அந்த மாளிகையின் நினைவுகளில் எத்தனையோ ரகசியங்கள் புதையுண்டு இருக்கின்றன. அங்கு வாழ்ந்த ஆண்களின் உலகம் வேறு. பெண்களின் உலகம் வேறு. ஆண்களின் உலகம் கொண்டாட்டத்தையும் சுதந்திரத்தையும் முதன்மைப்படுத்தியது. பெண்களின் உலகமே துயரமும் தனிமையும் கொண்டிருந்தது. ஜோராசாங்கோவின் பெண்கள் உலகின் கண்களிலிருந்து விலகியவர்கள். அவர்களின் உண்மையான வாழ்க்கை எப்படியிருந்தது என்று இன்றும் எவராலும் அறிந்து கொள்ளமுடியவில்லை. அதே நேரம் அந்த வீட்டிற்குள்ளிருந்துதான் முதற்பெண் நாவலாசிரியர் உருவானார். பெண் விடுதலை குறித்த வாதங்கள் துவங்கின. ஒரு நாளில் இருளும் வெளிச்சமும் பாதிப் பாதியாக இருப்பதுபோல அந்த வீட்டிற்கும் இரண்டு முகங்கள் இருந்தன.
துவாரகநாத் தாகூரின் மூத்த மகன் தேபேந்திரநாத் தாகூர் ஒரு சீர்திருத்தவாதி. ராஜாராம் மோகன்ராயுடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தார். ஆகவே அவரது வீடு எப்போதும் அரசியல் மற்றும் பண்பாடு குறித்த விவாதக்கூடமாக விளங்கியது.
தாகூரின் பால்ய வயது, குறைவான காட்சிகள் வழியே அழகாகக் காட்டப்படுகிறது. ரோபி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தாகூர் ஒரு காட்சியில் பயில்வானிடம் மல்யுத்தம் பயிலுகிறார். பெரிய பயில்வான் முன்பாகச் சோட்டாவாக நிற்கிறார். பயில்வான் ஒரு மலரைக் கையில் ஏந்துவதுபோலத் தாகூரை ஏந்துகிறார். தரையில் வீழ்த்துகிறார்.
இன்னொரு காட்சியில் தந்தையின் ஏற்பாட்டில் துருபத் இசைக் கலைஞர் ஒருவர் சங்கீதம் கற்றுத் தருகிறார்.
ஏழு வயதில் ரோபி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். தலையில் தொப்பி அணிந்து சாரட் வண்டியில் ஏறும் தாகூரின் தோற்றம் அவ்வளவு அழகாகியிருக்கிறது. பள்ளியில் வகுப்பறை பிடிக்காமல் வெளியே சப்தமிடும் பறவைகளின் ஒலியை, இயற்கையின் வனப்பை ரசித்தபடியே அமர்ந்திருக்கிறான். அழகான புல்லாங்குழல் இசையோடு அந்தக் காட்சி காட்டப்படுகிறது. கனவு காணும் கண்கள்கொண்ட சிறுவனாகத் தாகூர் சித்திரிக்கப்படுகிறார். இன்னொரு காட்சியில் எலும்புக்கூடு ஒன்றைக் கையால் தொட்டுப்பார்த்து வியக்கிறான்.
பள்ளிக்கூடப் படிப்புப் பிடிக்காமல் வீட்டிலே பாடம் கற்கத் துவங்குகிறான் ரோபி. சகோதரர் ஹேமேந்திரநாத்திடம் நீச்சல், மலையேற்றம், ஜூடோ குத்துச்சண்டை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார். . ஓவியம் வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார்.
தாகூர் தனது 12வது வயதில் தந்தையுடன் வட இந்தியப் பயணம் ஒன்றினை மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தின்போது இமயச் சிகரத்தின்முன் நின்றபடியே எதிரொலிப்பைக் கேட்டு மகிழும் தாகூரின் பால்வடியும் முகம் அத்தனை அழகாகயிருக்கிறது.
ராபி தொலைதூர சிகரங்களின் அழகினையும் பனிமூட்டத்தையும் ரசிக்கிறான். தன்னை மறந்து பாடுகிறான். அவனது தந்தை மௌனமாக அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மிகக் கவித்துவமான காட்சியது.

தாகூரின் பால்ய வயதின் காட்சிகள் பதேர் பாஞ்சாலியில் வரும் அபுவை நினைவுபடுத்துகின்றன. அபு பள்ளிக்குப் போவதும், பாடம் கற்றுக் கொள்வதும், வீட்டில் படிப்பதும், வளர்ந்த பையனாக உயர்கல்வி படிப்பதும் அப்படியே தாகூரின் காட்சிகளாக மாறியிருக்கின்றன. பதேர்பாஞ்சாலியில் நடித்த அதே பையன்தான் இதில் தாகூராகவும் நடித்திருக்கிறான்.
தாகூர் தனது பதினேழு வயதில், உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அந்தப் பகுதியில் தாகூருக்கு மேற்கத்திய இசையும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் மட்டுமே பிடித்திருந்ததை ரே முதன்மையாகக் குறிப்பிடுகிறார்,
சத்யஜித்ரேயும் மேற்கத்திய இசையில் விற்பன்னர். அவர் இசையமைத்த படங்களில் இந்திய இசையும் மேற்கத்திய இசையும் மிக அழகாக ஒன்றிணைவதைக் காணமுடியும். மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில்1965ல் வெளியான ஷேக்ஸ்பியர் வாலா திரைப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்துள்ளார். இதன் இசைக்கோர்வைகளைக் கேட்டுப் பாருங்கள். அவர் எவ்வளவு சிறந்த இசையமைப்பாளர் என்பது புரியும்.
தாகூரின் முதல் இசை நாடகம், வால்மீகி பிரதிபா, இதில் மேற்கத்தியச் சங்கீதமும் இந்தியச் சங்கீதமும் இணைந்து ஒலித்தது. இந்த நாடகத்தில் தாகூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தாகூரின் தோற்றமும் அவரது உடைகளும் மிக அழகானவை. இளவயது தாகூரின் புகைப்படங்களைப் பார்த்தால் அவர் நிகரற்ற அழகன் என்பது புலப்படும்.
கிழக்கு வங்காளத்திலிருந்த தனது பண்ணையைப் பராமரிப்பு செய்வதற்காகத் தாகூர் அங்கே இடம்பெறுகிறார். படத்தின் மிக அழகான பகுதியது. அங்கே படகில் அமர்ந்தபடியே கவிதைகள் எழுதுகிறார். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தபடியே சிறுகதைகள். கட்டுரைகள் என எழுதித் தள்ளுகிறார். மயக்கும் இசையோடு அமைந்த காட்சிகள்.
தாகூரின் மூத்த சகோதரர் விஜேந்திரநாத் ஒரு தத்துவ அறிஞர் மற்றும் கவிஞர், மற்றொரு சகோதரர் சத்யேந்திரநாத் முதல் இந்தியக் குடிமைப் பணியாளர் ஆவார். மற்றொரு சகோதரரான ஜோதிர்ந்திரநாத் இசையமைப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர். இவரின் சகோதரி சுவர்ண குமாரி முதல் பெண் நாவலாசிரியர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.
ஜோதிர்ந்திரநாத்தின் மனைவி காதம்பரி தேவி, தாகூரைவிட வயதில் சற்று மூத்தவர். தாகூர்மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். இவர்களின் உறவைப் பற்றியே சத்யஜித்ரே சாருலதா என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதுவும் தாகூரின் நாவலின் திரைவடிவமே.
காதம்பரி தேவி தாகூரின் கவிதைகளுக்கு முதல் வாசகராகவும் விமர்சகராகவும் இருந்தவர். அவர்களுக்குள் ரகசியக் காதல் இருந்தது. தாகூர் 1883 ஆம் ஆண்டில் மிருணாளினி தேவியினைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த காதம்பரி தேவி 1884 ஆம் ஆண்டில் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் துயரம் தாகூரை ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்கிறார்கள். இவை ஆவணப்படத்தில் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
தாகூரைத் திருமணம் செய்துகொண்டபோது மிருணாளினி தேவிக்கு வயது 9. அவர் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர், அங்கு அவரது தந்தை தாகூரின் பண்ணையில் பணிபுரிந்தார். கல்கத்தாவிலிருந்த ஜோராசாங்கோ மாளிகையில் பிரம்ம சமாஜ முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது தாகூருக்கு இருபத்தி இரண்டு வயது.
தாகூருக்கு ஐந்து பிள்ளைகள். தன்னுடைய பிள்ளைகள் மரபான கல்விக்கு மாற்றாகச் சுயசிந்தனையுள்ள, கலைகளுடன் இணைந்த புதிய கல்வியைப் பெறவேண்டும் என்று விரும்பினார். இதற்காகத் தனது சாந்திநிகேதனில் ஒரு பள்ளியைத் துவங்க முற்பட்டார். இதற்குத் தேவையான நிதி திரட்ட முயன்றபோது அவரது மனைவி தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார் என்பதை ரே அழுத்தமாகச் சித்திரிக்கிறார்.
பதேர்பாஞ்சாலி திரைப்படம் எடுக்க முயன்றபோது சத்யஜித்ரேயின் மனைவி தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார் என்பதும் இந்தக் காட்சியினுள் மறைமுகமாக எதிரொலிக்கவே செய்கிறது.
சாந்தி நிகேதனில் இருந்த வீட்டில் தாகூர் குடியிருக்கத் துவங்கினார். அங்கே 1902ல் மிருணாளினி தேவி எதிர்பாராத விதமாக நோயுற்றார். அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சாந்திநிகேதனில் இருந்து கல்கத்தாவுக்குக் குடும்பம் இடம்மாறியது. தொடர் மருத்துவச் சிகிச்சைகள் பலன் தரவில்லை. இதனால் ஒரு ஹோமியோபதி மருத்துவர் அழைக்கப்பட்டார். அவரது சிகிச்சையும பலன் அளிக்கவில்லை. நவம்பர் 23 இரவு, மிருணாளினி தேவி இறந்துபோனார்.
இதன் சில மாதங்களிலே அவரது மகனும் விஷக்காய்ச்சலில் இறந்து போனான். அடுத்தடுத்த இழப்புகள் தாகூரைத் துயரத்தில் ஆழ்த்தின.
கவிதையும் இசையும் கலைகளும்தான் அவருக்கான மீட்சியாக இருந்தன. இந்த ஆவணப்படத்தில் தாகூரின் சொந்தவாழ்க்கை மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது கலைவாழ்க்கையும் பொதுவாழ்க்கையுமே முதன்மையாகப் பேசப்படுகின்றன.
ஒரு கவிஞரைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் கவித்துவமாக இருக்க வேண்டும் என்று சத்யஜித்ரே விரும்பினார். படத்தைக் காணும்போது பார்வையாளர்களால் அதை நன்றாகவே உணரமுடிகிறது.
காந்தியின் அரசியல் பிரவேசம், அவருடன் தாகூருக்கு ஏற்பட்ட நட்பு, மாற்றுக் கல்விமீதான தாகூரின் ஈடுபாடு. கலைகள் பயிலுவதற்கான கலாபவனை உருவாக்கியது போன்ற முக்கிய நிகழ்வுகளையும் சத்யஜித்ரே சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.
1912 ஆம் ஆண்டில் தாகூரின் இங்கிலாந்துப் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம், அங்கு கீதாஞ்சலியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் ஆங்கில ஓவியர் வில்லியம் ரோதன்ஸ்டைனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடுகிறார்.
ரோதன்ஸ்டைன் அந்தக் கவிதைகளை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுக்குக் காட்டினார். அவற்றை வாசித்த யேட்ஸ் இவை மிக உன்னதமான கவிதைகள் என்று போற்றி அதனை இங்கிலாந்தில் வெளியிடுவதற்கு உதவி செய்தார். அப்படித்தான் கீதாஞ்சலி ஆங்கிலத்தில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக 1913 இல் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்பதையும் ரே சுட்டிக்காட்டுகிறார்.
தாகூருக்கு யேட்ஸ் வழியாகக் கிடைத்த இந்த அங்கீகாரம் போன்ற ஒன்று பாரதிக்குக் கிடைக்கவில்லை. பாரதியும் தாகூரும் ஒருமுறைகூடச் சந்தித்துக்கொண்டதில்லை. ஆனால் பாரதி தொடர்ந்து தாகூரின் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். தாகூர் சென்னைக்கு வந்திருந்தபோதுகூடப் பாரதி அவரைச் சந்திக்கவில்லை
நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் உருவாக்கினார். அத்தோடு புதிய கல்விமுறைகள் பற்றி அறிந்துகொள்ள உலகப்பயணம் மேற்கொண்டார்.
தாகூர் கலந்துகொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காணும்போது அவர் ஒரு ஞானகுரு போலவே காட்சி தருகிறார். முக்கிய ஆளுமைகள், படைப்பாளிகள் பலருடன் நெருக்கமாகத் தாகூர் உள்ள புகைப்படங்களில் தாகூரின் கண்களில் அன்பு கசிவதைக் காணமுடிகிறது. 1915 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசின் உயரிய கௌரவமான நைட்ஹூட் தாகூருக்கு அளிக்கப்பட்டது. 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு அவர் அந்தப் பட்டத்தைத் துறந்தார்.
தாகூரின் கடிதங்கள், கவிதை வரிகள், புகைப்படங்கள், தாகூர் வாழ்ந்த இடங்கள், அவர் உருவாக்கிய சாந்தி நிகேதன், தாகூரின் உலகப் பயணக் காட்சிகள் என்று தேர்வுசெய்து சத்யஜித்ரே மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
நாம் போர்ஹெஸை வியந்து படிப்பதுபோல அர்ஜெண்டினாவில் தாகூரை நிகரற்ற கவிஞராகக் கொண்டாடுகிறார்கள். அவரது கவிதைகளின் ஸ்பானிய மொழியாக்கம் இன்றுவரை தொடர்ந்து வாசிக்கவும் கொண்டாடப்படவும் செய்யும் கவிதைத் தொகுப்பாக உள்ளது.
1924 இல் ரவீந்திரநாத் தாகூர் ப்யூனஸ் அயர்ஸ்க்குச் சென்றார். அப்பொழுது பெண் கவிஞரான விக்டோரியா ஒகாம்போவின் தொடர்பும் நட்பும் கிடைத்தது. விக்டோரியா தாகூரின் கீதாஞ்சலியின் ஸ்பானிய மொழி பெயர்ப்பைப் படித்து இருந்தார். ஆகவே உடல்நலம் குன்றி இருந்த தாகூரை தன்னுடைய இல்லத்தில் தங்க வைத்துக் கவனித்துக்கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு அன்பு மயமானது. தனது சுயவரலாற்று நூலில் தாகூரைப் பற்றி விக்டோரியா நிறைய எழுதியிருக்கிறார். தாகூருக்கும் விக்டோரியாவிற்குமான நட்பினை மையமாகக்கொண்டு Thinking of Him என்ற திரைப்படம் 2018ல் வெளியாகியுள்ளது.
சுனில் கங்கோபாத்யாயா தனது நேர்காணல் ஒன்றில், “தாகூரின் நிழல் விழாமல் எந்த வங்கப் படைப்பாளியாலும் எழுத இயலாது. இளைஞனாக இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத் தாகூரைத் தாண்டிப் போவதுதான் முக்கியமான இலக்காக இருந்தது” என்று குறிப்பிடுகிறார்.
அதே நேர்காணலில் “நாங்கள் ஒன்றுகூடும் நேரமெல்லாம் தாகூரைக் கடந்து செல்வதைப் பற்றி விவாதித்தோம். தாகூர் ஒரு காலத்தின் குரல். நம் இன்றைய வாழ்க்கை அவரிடமிருந்து மாறுபட்டது. நாம் தாகூர்மீதான மரியாதையை, அன்பை ஒருபோதும் கைவிடத் தேவையில்லை. ஆனால் அவரை விமர்சிக்கவும், ஆராய்ந்து விவாதிக்கவும் முற்படுகிறோம். தாகூரைக் கடவுளைப்போல நினைத்து ஆராதனை செய்பவர்களுக்கு அது கோபத்தை உருவாக்கவே செய்யும். அதுதான் எங்களின் நோக்கம்” என்றும் சொல்கிறார்.
First Light நாவலில் தாகூரைப்பற்றிச் சுனில் கங்கோபாத்யாயா எழுதியிருக்கிறார். அதில் காதம்பரி தேவியோடு அவருக்கு இருந்த காதலைப்பற்றியும் இளங்கவியாக இருந்த தாகூரின் லட்சிய வேட்கையினையும் குறிப்பிடுகிறார்.
சுனில் கங்கோபாத்யாயாபோல வங்காளத்திலிருந்த இலக்கியவாதிகளில் ஒரு தலைமுறையே தாகூரைக் கடந்து போகமுயன்றது. இன்றைய நவீன வாழ்க்கை சிக்கல்களை, பன்னாட்டு வாழ்வின்மூலம் உருவான புதிய நெருக்கடிகளைப் பேசும் புதிய வங்க நாவல்களின் வழியே தாகூரைத் தாண்டிய படைப்பாளிகள் உருவாகவே செய்தார்கள். ஆனால் இந்த வருகையால் தாகூரின் இடம் பறிபோய்விடவில்லை. அவர் எப்போதும் வழிகாட்டும் வெளிச்சம்போல ஒளிர்ந்துகொண்டேதான் இருக்கிறார்.
சத்யஜித்ரேயின் ஆவணப்படத்தைக் காணும்போது இந்த உண்மையை ரே நன்றாக உணர்ந்திருக்கிறார். காண்பவர்களையும் இதை உணரச்செய்ய முற்படுகிறார் என்றே தோன்றுகிறது.
இந்த ஆவணப்படத்தில் தனக்குத் தேவையான இடங்களில் ரே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார். அதன் வழியே புகைப்படத்தைத் தாண்டிய நெருக்கத்தை உருவாக்க முயலுகிறார்.
கடந்த காலத்தை மறுஉருவாக்கம் செய்யும் சவாலில் கலை இயக்குநருடன் இணைந்து மிகக் கவனமாகச் செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக உடைகள். அரங்க அமைப்புகள். மிகத் துல்லியமாக மறுஉருவாக்கம் பெற்றுள்ளன.
தாகூரின் ஓவியங்களில் மனிதர்கள், பறவைகள், மீன் மற்றும் விலங்குகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. விசித்திரமான கனவுபோலவே ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. தாகூர் வரைந்துள்ள பெண் உருவங்களில் உடற்கூறியல் துல்லியமாக இல்லை. ஆனால் உணர்ச்சிகள் துல்லியமாக வெளிப்படுகின்றன. அதுவும் துயரார்ந்த முகங்களைக் காணும்போது அது நிறைய உணர்த்துகிறது என்கிறார் சத்யஜித்ரே.
தாகூரின் இறுதி ஊர்வலத்தில் துவங்கும் ஆவணப்படம் கைகூப்பி நின்று பிரார்த்தனை செய்யும் தாகூருடன் நிறைவுபெறுகிறது. அந்த வேண்டுதலின்போது தாகூரின் கூப்பிய கரங்கள் எதைப் பிரார்த்திக்கின்றன, தாகூர் என்ன வேண்டுகிறார் என்று தெரியவில்லை.
இந்தியாவின் விடுதலையைத் தாகூர் காணவில்லை. அவர் ஒரு லட்சிய உலகைக் கனவு கண்டார். கலைகளின் வழியே மனிதர்கள் மீட்சி அடைய முடியும் என்று நம்பினார். வன்முறையால் இந்தியப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமுடியாது என்று அறிந்திருந்தார். அதேநேரம் ஒடுக்குமுறைகளைத் தொடர அனுமதிப்பது அநீதியானது என்றும் உணர்ந்திருந்தார். அவரது கூப்பிய கைகளுக்குப் பின்னே இந்த எண்ணங்கள்தான் வேண்டுதலாக மாறியிருக்குமா?
தாகூரின் கவிதைகளைவிடவும் இன்று அவரது சிறுகதைகளும் நாவல்களும் அதிகம் வாசிக்கப்படுகின்றன. டெலிவிஷன் தொடராகவும் திரைப்படமாகவும் வெளியாகின்றன. இன்று தாகூரை வாசிக்கும் ஒருவன் அவரது தேசபக்தி மற்றும் சீர்திருத்த விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை. புனைவில் அவரது தனித்துவம் மற்றும் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காகவே அவரை வாசிக்கிறான். பாராட்டுகிறான். ரவீந்திர சங்கீதம் இன்றும் வங்கத்தில் ஒலிக்கிறது. ஆனால் அது ஒரு பக்திமார்க்கமாக மாறியிருக்கிறது.
இன்று தாகூரின் காதலும் அவரது மனைவிக்கும் அவருக்குமிருந்த இடைவெளியும், விக்டோரியா ஒகம்போவின் நட்பும் நெருக்கமும் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அவை இந்த ஆவணப்படத்தில் இல்லை. ஒருவகையில் இந்த ஆவணப்படத்தில் எதைத் தவிர்க்கச் சொன்னார்களோ, அல்லது விடுபட்டதோ அவையே இன்று முக்கியமாக மாறியிருக்கின்றன..
தாகூரைக் கொண்டாடும் விதமாக அவரது கதைகளை மையமாகக்கொண்டு Stories by Rabindranath Tagore என்று அனுராக் பாசு இயக்கத்தில் 2015ல் தொலைக்காட்சி தொடர் வெளியானது. அந்தத் தொடரைக் காணும்போது இந்த ஆவணப்படத்தில் உருவாகும் தாகூரின் பிம்பம் தோன்றவேயில்லை. அந்தக் கதைகளின் வழியே தாகூர் மகத்தான எழுத்தாளராகவே ஒளிருகிறார்.
காலம் விசித்திரமானது. அது தரும் அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. இடைவெளிகளை வாசித்துப் பழகிய நமக்குத் தாகூரின் வாழ்க்கையிலும் மறைக்கப்பட்ட, விலக்கப்பட்ட பக்கங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலேதான் ஆர்வம் அதிகமாகயிருக்கிறது.
தாகூரின் குரலை நாம் படத்தில் கேட்பதில்லை. ஆனால் அவரது மௌனமான பார்வை நிறையவே உணர்த்திவிடுகிறது. அதைச் சாத்தியமாக்கியதே சத்யஜித்ரேயின் பெருமை.
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
படத்தை நேரில் பார்த்த அனுபவம் உங்கள் எழுத்துக்கள் மூலம் கிடைக்கிறது. நன்றிகள் எஸ்ரா ஐயா.
எஸ் ரா அவர்கள் சத்தியஜித்ரே பார்வையை கட்டுரையில் சொல்வது மட்டும் இல்லாமல் தாகூரை பற்றிய தன்னுடைய கோணத்தையும் அழகாக சொல்லி இருக்கின்றார்.
இவர்டைய வலைதளத்தில் மற்றும் ஒரு கட்டுரை காதம்பரி தேவி பற்றியும் தாகூர் வாழ் வியலையும் சாருலதா படம் பற்றியும் அழகாக விமர்சித்துள்ளார். அருமை.