தமிழில்: ச.அனுக்ரஹா

தாகூருக்குப்பின் வங்க கவிகளில் முதன்மையானவராகவும், வங்க நவீன கவிதையின் முன்னோடியாகவும் கொண்டாடப்படுபவர் ஜீபனானந்த தாஸ். 1899-இல், இன்றைய பங்களாதேஷ நகரான ‘பரிஸல்’-இல் பிறந்தவர், கல்லூரி படிப்பை கல்கத்தாவில் முடித்தார். வெகு சில மாதங்கள் டில்லியில் பணிபுரிந்தது தவிர்த்து, தன் பெரும்பாலான நாட்களை கல்கத்தாவிலும் தன் சொந்த ஊரான பர்ஸலிலும் கழித்தார். தன் தந்தையைப் போலவே கல்வி துறையில் பணியாற்றினார். தன் வாழ் நாள் முழுவதும், வேலைக்கான, வருமானத்திற்கான தேடலிலும் பணகஷ்டத்திலும் தவித்தார். அவர் கவிதைகளுக்கு அங்கீகாரமும் புகழும் வெகு தாமதமாகத்தான் கிடைத்தன. அவர் இறந்தபின், அவரது “ஸ்ரேஷ்ட கபிதா” தொகுப்பிற்கு 1955-இல் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. 1957-இல், வெளியான அவரது ‘ருபோஷி பங்களா’ (Ruposhi Bangla) ‘அழகிய வங்கம்’ எனும் தொகுப்பு உடனடியான புகழைப் பெற்றது. 1971 பங்களாதேச சுதந்திரப் போராட்டத்தில், வங்க தேசிய உணர்வெழுச்சியின் குரலாக ஒலித்தது.
ரயில்கள் நிறுவப்படாத, வங்கத்தின் அழகு நிறைந்த நதிகள் ஓடும் தன் சொந்த ஊரான பர்ஸலையும், பிரிடிஷ் ராஜ்-இன், தொழில் புரட்சியின் தலை நகரான கல்காத்தாவையும் தன் கவிதைகளில் நுட்பமாக வரைந்திருக்கிறார், ஜீபனாந்தா. அதுபோலவே, அவர் கண்ட காலங்கள் – இந்திய சுதந்திர புரட்சி மற்றும் வங்க பிரிவினை – அவற்றின் ரத்தம் படிந்த சூழலும், அவர் கவிதைகளில் படிந்திருக்கின்றன.

1930-களில் வங்க நவீன அலையின் துவக்கமாக கருதப்படும் “கல்லோல்” இயக்கத்தின் பஞ்ச பாண்டவர்களாக கருதப்பட்டவர்கள் சுதீந்திரநாத் தத்தா, பிஷ்னு தேவ், அமியா சக்ரவர்த்தி, புத்ததேப் போஸ் மற்றும் ஜீபனானந்த தாஸ்.
புத்ததேவ் போஸ் எழுதிய வங்க இலக்கிய அறிமுக நூலான “An acre of green grass”-இல், ஜீபனானந்த தாஸ்-ஐ பற்றி இப்படி கூறுகிறார்:
“வடிவத்தில் கச்சிதம், வார்த்தைகளில் விசித்திரம் – ஜீபனானந்தா, பிடிவாதமாக தன்னைப் போலவே, மரபின் சொந்தவெளியை விட்டு, தன்னுடையதேயான யக்ஷர்களின் வெளியை உருவாக்குகிறார். அவர் உலகம், பிணைந்த நிழல்களும், நெளியும் நீர்வழிகளும், எலியும் ஆந்தையும் வவ்வாலும், நிலவொளிர் வனத்தில் விளையாடும் மான்களும், விடியலும் இருளும், கடல் தேவதைகளும், இனிய பரந்த கடலும் கொண்டது. கண்ணுக்கு தெரியாத, கைவிடப்பட்ட, பதுங்கியிருக்கும் எல்லா வலுக்கட்டாயமான மீறல்களும், மனிதரல்லாதவையும் அவருக்கு நெருக்காமனவை. அவர் முத்திரை கொண்ட கவிதைகள் பலவும் பறவைகளையும் மிருகங்களையும் பற்றியவை….
…………………………………………….
…………………………………………….
எல்லா கவிஞர்களும், ஒரு வகையில் இயற்கை கவிஞர்களே, ஜீபனானந்தாவும், ஆனால் ஒரு விசேஷ வகையில். அவர் இயற்கையில் மூழ்குகிறார், ஸ்தூலமான இயற்கையில், விசேஷமாக அதன் சில அம்சங்களில், இயற்கையை அருவமாகவோ, கடவுளாகவோ பார்க்காமல். அவர் “பேகனை” (pagan) போல புலன்வழியாக இயற்கையை நேசிப்பவர், சின்னங்களாகவோ குறியீடுகளாகவோ, பூர்ணத்தின் வகைமாதிரிகளாகவோ இல்லாமல், அது எப்படி இருக்கிறதோ அப்படியே நேசிப்பவர். இயற்கையை வெறுமனே பார்ப்பதில் மட்டும் திருப்தி அடையாமல், அதை தொடுகை மற்றும் வாசனை எனும் ஆதி புலன்களால் அடையவேண்டும், அவருக்கு. பறவைச் சிறகுகளின் வாசனையயும், அரிசி களைந்த வெதுவெதுப்பான நீரின் மணத்தையும் நேசிக்கிறார். பெரிய அடர் பச்சை புல்-அன்னையின் இனிய ஆழமான கருவறையில் புல்லாக பிறக்க விரும்புகிறார்.”
[மூலம்: An acre of green grass, pg.54]
“மிக தனிமையான கவிஞர்” என்று புத்ததேப் போஸ்-ஆல் அழைக்கப்பட்ட ஜீபனானந்தா, தன் கவி வெளியில் மட்டுமல்லாது, சொந்த வாழ்விலும் அப்படியே இருந்துவிட்டார். திருமணம் ஆகி இரு பிள்ளைகள் இருந்த போதும், அவரது சம்சார வாழ்கை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. 1954-இல், கல்கத்தா ராஷ்பிஹாரி அவன்யூ-வில் சாலைக் கடக்கும்போது, ட்ராம்-இல் அடிபட்டு, சில நாட்களுக்குபின் இறந்தார்.
ஜீபனானந்த தாஸ் எழுதிய பல கவிதைகளிலிருந்து மூன்றை இங்கு மொழிபெயர்த்திருக்கிறேன். ஆங்கிலம் வழி மொழிபெயர்த்திருப்பதால், இவை, மூலத்தின் சந்தத்துடன் ஒலிக்குமா என்று தெரியாது. ஆனால், அதன் கவித்துவத்தையும், வார்த்தை விளையாட்டையும், புதிர் போன்ற உருவகங்களையும் ஓரளவாவது புரிந்துகொள்ள உதவும் என நினைக்கிறேன்.
1.
அவர் கவிதைகளில், இருட்டும் வெளிச்சமும் வாழ்வும் சாவும் என எதிர்மறைகள் அருகருகே வருகின்றன. இறப்பைப் பற்றியும் மறுபிறவியைப் பற்றியும் பல இடங்களில் ஆராய்கிறார். அப்படி, மறுபிறவியில் கமலாப்பழமாக வருவேனோ என தியானிக்கும் அவரது இந்த கவிதை, மிகவும் பிரசித்தமானது.
கமலாப்பழம்

ஒருகணம் இவ்வுடம்பை நீங்கிவிட்டால்
மீண்டும் உலகுக்கு வரமுடியுமா?
முடியுமென்றால்,
ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.
ஆங்கில மூலம்: Tangerine, translated by Clinton B.Seely
2.
பிரிடிஷ் காலனியத்தின் தலை நகர், ஓயாத புரட்சிகளின் களம், மனித நகர்வுகளின் சங்கமமான கல்கத்தா நகரை கண்முன் எழுப்பி, அற்புதமான நீல வான திரையைக் கொண்டு மறைக்கிறது இக்கவிதை.
நீல வானம்
வெயில் ஜ்வலிக்கும்
விடியல் வானம், நடுநிசி நீலம்
மீண்டும் மீண்டும் அளவில்லா அற்புதமாய் தோன்றுகிறாய்,
இக்கைவிடப்பட்ட நகரின் சிறை மதில்களின் மேலே.
சுருண்டு அடர்ந்த புகை மேலெழும்பி விரிகிறது இங்கு.
கனறும் அடுக்களை நெருப்பு எரிந்துகொண்டே இருக்கிறது இங்கு.
கானல்-மறைப்பில்
பாலையின் சுடு-சுவாசம் பூசிய சிவக்கும் சரளை,
பாதை கிட்டாது, எப்போதும் விரக்தியாய் தேடும்
எத்தனையோ பயணிகளின் மனங்கள்,
அவர்கள் கால்களோ அதிகாரத்தின் இறுகிய சங்கிலியால்- பிணைக்கப்பட்டு.
ஓ சிமிட்டாத நீல வானமே, ஓ மாயாவியே, உன் மாயக்கோல் – கொண்டு
ஆயிரம் விதிகளாலும் சட்டங்களாலும் ஆன இச்சிறையின் அடிக்கல்லைப் பிளந்துவிட்டாய்.
மானுட இரைச்சலின் நடுவே, தனிமையில் அமர்ந்து வியக்கிறேன்,
எந்த தொலைவிடத்தின் வசியங்களைப் பூசிக்கொண்டு
இந்நிஜ உலகின் ரத்தம் படிந்த கரைக்கு நீ தனியே வந்தாய்,
ஒலி மங்கிய கனவு-மயில் தோகையாய்.
படிக விளக்குகள்மேல் உன் நீல போர்வையைப் போர்த்துகிறாய்,
வேடன் துளைத்த நிலத்தின் ரத்தக்கறை என் கண்களிலிருந்து- துடைக்கப்பட்டு
முடிவற்ற வானில் எரிதழலாய் மேலெழுந்து விரிகிறது
பூமியின் கண்ணீருடன் சூரியனில் வெந்து வெளிறிய கடற்கரையும்,
கந்தல் துணிகளும், மழித்த சந்நியாசிகளும், கருணையற்ற-இந்நெடுஞ்சாலையும்,
சாகப் போகும் பலகோடி ஜனங்களின் இச்சிறையும்,
இப்புழுதியும் – புகையை கருதரித்த இப்பரந்த இருளும்
நீல வானுள் அமிழ்கின்றன – பொங்கும் கனவு-விரி கண்களுக்குள்,
வெண்சங்கு மேகங்களுக்குள், விண்மீன்-நிறை வானின்-மின்மினுப்புக்குள்.
பூமிப்புழுவின் உலர்ந்த கூடு உடைகிறது
உன் நடுங்கும் தொடுகையால், ஓ உறக்கமிலா கற்பனையின்- தொலைவுலகே.
[ஆங்கில மூலம்: Blue Skies, translated by Clinton B.Seely]
3.
வரலாறு எனும் கோட்பாடு, காலம் எனும் கருதுபாடு இவற்றிற்கு இடையே நிகழும் கவிஞனின் மனவெளி, அவனுடனேயே வாழும் இன்னொரு உலகம் என தோன்றுகிறது.
நாம் இருவரும் இங்கே, மறுபடியும்

நாம் இருவரும் இங்கே, மறுபடியும்,
ஒலிப் பறவையின் ஒளி வெள்ளத்தின் நினைவில்.
நாம் இருவரும் எகிப்தின் மம்மிகள்
என்று நினைத்தேன்.
காலையிலிருந்து மாலைவரை சோம்பிப்படுத்திருப்போம்.
மெதுவாய் அசைந்தாடும் பச்சிலைகளின் மேல்
காலை இளங்காற்றாக,
இல்லை, நெல்லியின், சால் மரத்தின் சிறுகிளையாக,
இல்லை, பொழிகின்ற வெள்ளி நிற மழையாக,
இல்லை, இதுவெல்லாமாகவோ இருப்போம்,
நீயும் நானும், மட்டும்.
எத்தனையோ முறை மரித்தோம், மீண்டும் மீண்டும்
எத்தனையோ நகரங்களில், பஜார்களில், நீர்வழிகளில்,
குருதியின் நடுவே, நெருப்பில், மங்கிய சீரழிவுளில்,
அமங்கல தருணத்தின் இருளில்.
அப்படியும், ஒளி, திடம், வாழ்க்கைக்காக ஏங்கினோம்.
அவற்றை மனத்தில் ஏத்தி,
வரலாற்றுடன் பிணைந்தோம்.
நம் கூடு, வேறெங்கோ அமைத்தோம்.
அது உடைந்து சிதறியபோது, நாம் அழுதோம்.
கடல் நுரையின்மீது எள்ளி நகைத்தோம்.
நாம் வாழ்வை நேசித்தோம்.
வெளிச்சம் – இன்னும் வெளிச்சம் கடந்தது!
மனிதன், இன்று மறைந்தாலும்,
மனிதம் இங்கு இருக்கும்,
திரிந்த பனித்துளி,
வரலாற்றின் வழக்காடலில்,
ஆண் பெண்ணின் தலைநகரமாகும்.
ஆங்கில மூலம்: We both are here, again
சுட்டிகள்: