சிற்றடி: ஏன் இந்த முயற்சி?

மைத்ரேயன்

2020 இலிருந்தே துவங்குவோம். கடந்த பத்து வருடங்களில் செய்யாதவற்றைச் செய்ய எண்ணம் வந்தது அந்த வருடத்தில்தான். வீட்டோடு அடைந்து கிடக்கையில் உலகத்தைச் சுற்றும் அவா பெரிதாவதில் அதிசயம் இல்லை. இருந்த இடத்திலிருந்தே அப்படி மெய்நிகர் வழிகளில் சுற்றும் வசதிகளும் இப்போது அதிகம்.

நூறாண்டு முன்புவரை இப்படி இருந்த இடத்திலிருந்து ஊர், உலகம் சுற்றும் அவாவை இலக்கியம் நிறைவேற்றி வந்தது. கடந்த முக்கால் நூறாண்டாகக் காட்சி ஊடகங்கள் அதை மேன்மேலும் நிஜ உலாபோல ஆக்கித் தரத்துவங்கின.

ஆனால் இன்றும்கூட, உலக உலா போவதை அருமையாகச் செய்யும் ஒரு செயல்முறை மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் துளைவதே.

சொல்வனத்தில் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளுக்கு இடம் கொடுத்துவந்திருக்கிறோம். என்றாலும் இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள் அத்தனை இல்லை. அப்படிக் கிட்டும் சிலதும் நேரடியாக இந்திய மொழிகளிலிருந்து மொழியாக்கம் பெற்றவை அல்ல. அவை பெரும்பாலும் இங்கிலிஷ் வழியேதான் தமிழாக்கம் பெற்றுவந்தன.

இது அடிப்படையிலேயே தவறான அணுகல் என்று எனக்குப் பல ஆண்டுகளாகத் தோன்றியிருந்தது. இது பல ஆண்டுகளின் வாசிப்பில் கிட்டிய முடிவு. சாஹித்ய அகதமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்ற சில பெரும் அமைப்புகளிடம் நிறைய நேரடி மொழிபெயர்ப்புகள் புத்தகங்களாகக் கிட்டுகின்றன. அவற்றில் என்னால் முடிகிற மட்டில் பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் பெற்று வாசித்துப் பார்த்தபோது அவற்றின் சுகந்தம், நேரடித் தாக்கம், ஸ்பரிசானுபவமே போன்ற வாசிப்பனுபவம், எனக்கு இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குச் சென்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை, அதேபோல இந்திய மொழிகளிலிருந்து இங்கிலிஷுக்குப் போய் அங்கிருந்து தமிழாக்கம் பெற்ற புத்தகங்களிலும் கிட்டவில்லை.

நான் இந்திய மொழிகளை உன்னதம் என்றும் இங்கிலிஷை மட்டம் என்றும் நினைக்கும் நபர் அல்லன். மொழிகளில் உயர்வு தாழ்வு என்றேதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மொழியும் ஒருவகை பண்பாட்டு வடிகட்டியோடுதான் புழங்குகிறது. எத்தனைக்கு நம் நாடு, பண்பாடு, மக்களிடமிருந்து ஏராளமான விதங்களில் வித்தியாசமான மொழியொன்றின் மூலமாகவே நம் பன்மொழிக் கூட்டத்திடையே உறவுகளை ஏற்படுத்துகிறோமோ அத்தனைக்கு நம் பரஸ்பரப் புரிதல்களில் இடைவெளிகள் அதிகரிக்கும்.

இடைவெளிகளைக்கொண்டே பெரும் பிளவுகளை ஏற்படுத்தப் பாடுபட்டு, அந்தப் பிளவுகளை நம்மில் நெடுங்காலம் இருக்கும் விதமாக நிறுவிவிட்டுத்தான் சென்றிருக்கிறது பல நூறாண்டுக் காலனிய ஆட்சி. இந்திய மொழிகளை ஆளும் மொழி, வாழும் மொழி என்றும், இந்தோ யூரோப்பிய மொழிகள், இதர மொழிகள் என்றும் தமக்கு வசதியான வகைப்படுத்தல்களைக்கொண்டு பிரித்து, அந்தக் கருத்தாக்கத்தின் நச்சை, நம்மீது அவர்கள் சுமத்திய கல்வி முறைமூலம் பரப்பி நம்மை நூற்றாண்டுகளாகப் பிரித்துவைத்துப் போயினர். தமிழகத்தில் இன்று ஆளும் அரசியலே அந்த நச்சின் வழியே பிரிவினைவாதமாகப் பரவி இருக்கிற பொய்மைதான். மொழியே இனம் என்றும் ஒரு வாதத்தைக் கருத்தியலாகப் பரப்பிவிட்டுப் போயிருக்கின்றனர் காலனிய ஆதிக்க சக்திகள்.

இந்த நச்சின் தீவிளைவுகளை நாம் இன்னமும் முழுதும் அறியவும் இல்லை, அதை இந்தியாவில் நெடுக முறிக்கத் தேவையான முயற்சிகளை எடுக்கவும் இல்லை. ஏனெனில் ’விடுதலை’ பெற்றபின் அரை நூற்றாண்டானபின்னும் நம் அன்னிய மோகமும், யூரோப்பியத்துக்குப் பாதுகை தாங்கும் அடிமை மனோபாவமும் நம்மைவிட்டு விலகவில்லை. உதாரணமாக, இந்தியப் பல்கலைகளில் முனைவர் பட்டத்துக்குக் கொடுக்கப்படும் ஆய்வுகள் ஏற்கப்படுவதற்கு ஓர் அயல்நாட்டு நடுவர் அவற்றுக்குத் தரமானவை என்று சான்று தர வேண்டும் என்று வெகுகாலம் இருந்தது. இது இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மாமிசத்துக்கும் ஹலால் சான்றிதழ் பெற வேண்டும் என்று இந்தியரே நினைப்பதை ஒத்தது. அல்லது இந்தியாவில் தடுப்பூசி போடக்கிடைக்கும் மருந்துக்கு அமெரிக்க எஃப் டி ஏ அமைப்பின் சான்றிதழ் உண்டா என்று சோதிப்பதை ஒத்தது. இந்தியரின் எந்தச் சாதனைக்கும் வெள்ளையரின் பாராட்டு உண்டா என்று பார்த்துப் புளகிப்பதை ஒத்தது. இந்திய விவசாயிகளுக்கு நார்வீஜியச் சிறுமியின் ஆதரவைத் தேடிப்பெறும் அடிமை மனோபவத்தைப் போன்றது.

ஆனால் நம் ‘போராளி’ அறிவாளர்கள் உலகரங்குகளில்கூட ‘டீகாலனைசேஷன்’ என்ற புரட்சிகரமான கருத்தைப் பற்றிப் பேருரை ஆற்றுவதில் சிறிதும் தளர்வற்று உலவுகிறார்கள். டீகாலனைசேஷன் என்பதை இந்தியாவுக்குள் நடத்துவதை அதே கூட்டம் பெருமுயற்சி செய்து தடுக்கவும் செய்கிறது. இந்தியா என்ற அமைப்பே புனைவு, இந்தியம் என்பது ஒரு கானல் நீர் என்றோ அல்லது அது சுரண்டல்காரர்களின் பயங்கர ஆயுதம் என்றோ பிரச்சாரம் செய்வதுதான் இந்த அறிவாளர்களின் அன்றாடப் பொழுதுபோக்கு.

இவர்களின் பேராயுதம் இங்கிலிஷ் மொழி என்பதால், அது வெறும் மொழி, தொடர்புக்கான வழிமுறை என்ற ஸ்தானத்தை விட்டுவிட்டு, அடிமைகளைக் கட்டுக்குள் வைக்கும் பிளவு ஆயுதம் என்ற காலனியக் காலத்துப் பயன்பாட்டையே மறுபடி மறுபடி நமக்குக் கொடுக்கிறது. யூரோப்பியம் இந்தியருக்குத் தந்துவிட்டுப் போனது பலவகைத் தொற்று நோய்கள் மட்டுமல்ல, பல நூறாண்டுகள் நீடிக்கப்போகிற பெரும் வறுமை மட்டுமல்ல, நம் பண்பாட்டு ஒற்றுமையைச் சிதைத்து நம்மிடையே விதைத்த பகைமையுணர்வுகள் மட்டுமல்ல, நாம் இன்னமும் காலனியத்தின் சேவகர்கள் என்பதை அறியவிடாது அந்த ஆயுதத்தை நம் அறிவுத் தேட்டைக்கான பெரும் நுட்பம் என்று நம்மை எண்ணவைக்கும் மாயாஜாலமும்தான். அதுவே அனைத்திலும் பெரிய அழிப்பு சக்தி.

இந்த நிலையை மாற்ற இந்திய மொழிகளும், மொழிக் குழுக்களும், தம்மிடையே இங்கிலிஷின் இடையீடு இல்லாமல் நேரடிப் பரிமாற்றங்கள் செய்வது ஒரு சுலபமான வழியாக இருக்கும். இங்கிலிஷ் என்னும் வேலிக்காத்தான் வெளி பூராவும் பரவிப் படர்ந்து அடர்ந்து இருக்கையில், அதற்கெதிரான கவசத்தோடுதான் இந்தியர் நடை போகக்கூட முடியும். அந்தக் கவசம், இந்தியம் என்பதில் ஆழ்ந்த பற்று என்பது என் கருத்து. சக இந்தியர்மீது நன்னம்பிக்கை கொள்ளல் என்ற எளிய பண்பாட்டு நகர்வு. இந்தியத்தை அழிக்க முனையும் எதையும் வேரோடு கெல்லி எறிதல் என்ற இயக்க முனைப்பு.


ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவில் நெடுகப் பயணம் செய்வது என்பது நிறையத் துன்பங்கள் நிறைந்த காலமாக இருந்தபோது இந்தியர் தமது பல மொழிக்குழுக்களிடையே கொண்டிருந்த உறவுகள் செழுமையாக இருந்தன என்றும், இன்று அப்படிப் பயணம் செய்வது மிகச் சுலபமாக ஆன காலத்தில் இப்படி நாம் கொள்ளக்கூடிய உறவுகள் அத்தனை காத்திரமாக இல்லை என்றும் தோன்றுகிறது.

குறிப்பாக, இந்திய மொழிகளோடு தமிழுக்கு இருக்கும் உறவு படிப்படியாக மங்கிக்கொண்டு போவதாகத் தோன்றுகிறது.

இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் பிரதிகள் சாஹித்ய அகதமியின் அலமாரிகளில் பழுப்பேறிக்கொண்டே போவதையும், பல பத்தாண்டுகளாக விற்காத புத்தகங்களை அவர்கள் புத்தகக் கண்காட்சிக் காலத்தில் பெரும் தள்ளுபடி விலைக்கு விற்பதையும் நான் பார்த்திருக்கிறேன். தள்ளுபடி இல்லை, 80-90களில் அச்சான புத்தகங்களின் விலைகள் அன்றைய விலைகளாகவே புத்தகத்தில் அச்சடித்தபடி இருப்பதை மாற்றாமல் விற்கிறார்கள் என்பது சில சமயம் கொடுக்கப்படும் விளக்கம். ஆனால் அந்த விலையிலும் தள்ளுபடி என்பதையே நான் பார்த்திருக்கிறேன். அவை அத்தனை க்ஷீணித்த நிலைக்கு வரும்வரையில்கூட விற்கப்படவில்லை என்பது நாம் கவனிக்கத்தக்கது. வாங்குவோர் இருந்தால்தானே விற்பனை ஆகும்?

இத்தகைய புத்தகங்கள் ஏதோ பெயர் தெரியவராத எழுத்தாளர்களின் புத்தகங்கள் இல்லை. பலவும் இந்திய அளவில் பெயர் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களாகவே இருக்கின்றன. என் சில நண்பர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகங்களுக்குத் தரமான இங்கிலிஷ் மொழி பெயர்ப்புகள் கிட்டும்போது, நாங்கள் எதற்காக ஏனோதானோவென்று தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும்?

இந்தக் கேள்வியில் எத்தனை பிரச்சனைகள் உண்டு என்பதை எண்ணினால் அன்றைய தினமே இருண்டுவிடும்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் விற்பனை மையத்தில் இதேபோல பல இந்திய மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள் மூல விலையிலிருந்தும் தள்ளுபடி செய்யப்பட்டுக் கிட்டுவதை நான் பார்த்தேன். [அப்படிப் பலவற்றை வாங்கியும் வந்தேன்.]

இதுவே தமிழர் இந்திய மொழிப் புத்தகங்களின் தமிழாக்கங்களைப் படிப்பதில்லை என்பதற்கு நிரூபணமா என்றால் கறாராக அப்படிச் சொல்லிவிட முடியாது. மலையாளம், கன்னடம் போன்ற சில மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்த கதைகள் பல பத்திரிகைகளில் இன்றும் பிரசுரமாகின்றன. சில மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்கள்கூட இலக்கிய வாசகர்கள் நடுவே பிரபலமாகி இருக்கின்றன. பல வாசகர்கள் பொது நூலகங்களிலிருந்து இத்தகைய புத்தகங்களை வாசிப்பவர்களாக இருக்கலாம்.

என் பள்ளிக்கூடப் பிராயத்தில் ஒரு சிற்றூரில், புழுதி படர்ந்த கடைத்தெருவில் ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த அந்த ஒற்றை அறை பொது நூலகத்தை நினைக்கையில் எனக்கு இன்னமும் ஆச்சரியம் வருகிறது. பத்துப் பனிரெண்டு அலமாரிகளும் சில படிப்பு மேஜைகளும் நாற்காலிகளும்தான் அங்கிருந்தன. நூலகர் என்ற பட்டத்தோடு ஒரு நபர் அங்கு உற்சாகமின்றி அமர்ந்திருப்பார். அவருடைய முக்கியப் பணி உள்ளே நுழையும் சிறுவரை அழிப்பு வேலைகளில் ஈடுபடாமலும், இரைச்சலோடு ஓடித் திரியாமலும் பார்த்துக்கொள்வதுதான். பல அலமாரிகளும் அத்தனை நிரம்பாமல்தான் இருந்தன. செய்தித்தாள்களைப் படிக்க வருவோர்தான் அதிகம். வருவோரைத் தடுக்கவே மாடியில் நூலகத்தை வைத்தனர் என்றுகூட எனக்குச் சில சமயம் தோன்றும். குறைந்தபட்சம் நூலகத்துள் குப்பைக் கூளம் இல்லை, அது பெரிய விஷயம்தானே.

ஏழு, எட்டாம் வகுப்பில் படிக்கையில், அரை நிஜார் அணிந்த சிறுவனாக அங்கு சில வாரங்களுக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அங்கு எனக்குக் கிட்டிய பல மொழிபெயர்ப்பு நூல்களில் ஒரு சிலதான் எனக்கு நினைவிலிருக்கின்றன. நிறைய ரஷ்ய மொழி நூல்கள் – அவை நேரடியாக ரஷ்ய மொழியிலிருந்து தமிழானவையா என்று எனக்கு நினைவில்லை. ஆனால் அமைதியாகப் பாய்கிறது டான் நதி என்ற (அல்லது அது போன்ற) தலைப்புக்கொண்ட நூலை அங்குதான் படித்தேன். (And Quiet flows the Don- Mikhail Sholokov என்று பின்னாளில் தெரிந்துகொண்டு இங்கிலிஷில் அதைப் படித்தபோது சிறுவயதில் படித்த கிளர்ச்சி கிட்டவில்லை. ) அன்று மனதில் பதிந்த பெயரான ஷோலொகொவ், இன்னும் அழியவில்லை. லியெஃப் டால்ஸ்டாயின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் அங்கேதான் கிட்டியிருந்தது. எத்தனை நிலம் ஒரு மனிதனுக்கு வேண்டும் என்ற கவர்ச்சிகரமான கருத்தைக்கொண்ட அந்தக் கதையை, அதிபுனைவு என்று இன்று நாம் கருதக்கூடிய கதையை அங்கேதான் முதலில் படித்தேன் என்று நினைவு.

ஒரு சில கன்னட, மலையாளப் புத்தகங்கள் கிட்டியிருந்தன. ஆனால் எதையும்விட ஈர்த்தவை ரவீந்த்ரநாத் தாகுரின் சில நாவல்கள். அவற்றில் ‘கோரா’ என்ற நாவல் அன்று புரிந்தும் புரியாமலும் படித்த புத்தகம். கோரா என்பது வெள்ளை நிறத்தைக் குறிப்பது என்றுகூடப் புரியாமல் படித்திருந்தேன். அல்லது அன்று புரிந்தது நெடுநாள் மனதில் நிற்கவில்லை. தோல் நிற அரசியலில் அப்போதிலிருந்தே ஈடுபாடு இல்லாதது காரணமாயிருக்கலாம்.

அதில் இருந்த தர்க்கம் புரியாவிடினும், தலைமுறைகளிடையே நடக்கும் எதிரெதிரான உரையாடல் மனதை ஈர்த்திருந்தது. அந்த வருடங்களில் மொழிபெயர்ப்பு நூல்களின்மீது சேர்ந்த நல்லெண்ணம் இன்றுவரை வளர்ந்த வண்ணமே இருக்கிறது. இன்று உலகத்து நாடுகளில் பலவற்றிலிருந்து மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்தாலும், இன்னமும் இந்திய மொழிகளிலிருந்து கிட்டும் மொழிபெயர்ப்புகளில் கிட்டும் அன்னியோன்னிய உணர்வு வேறெதிலும் கிட்டுவதில்லை.


தமிழ்நாட்டில் இத்தகைய மொழிபெயர்ப்புகளில் இடதுசாரிச் சாயம் இருப்பவை கணிசமாக விற்கவும் செய்கின்றன, அந்த சாரியினரின் புத்தக விநியோக வலை பல பத்தாண்டுகளின் முயற்சியால் தமிழகத்தில் நெடுகப் பரவி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். வருடாந்தரச் சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பார்த்தால், அனேகமாக எல்லாப் புத்தகக் கடைகளுமே இடது சாரியினரின் கடைகள் என்றுகூடத் தோன்றும். இத்தனை கடைகள் இருக்கும் பிரதேசத்தில் நாளைக்கே புரட்சித் தீ பற்றிக்கொள்ளும் என்றுகூடத் தோன்றும்.

இருப்பினும் மொழிபெயர்ப்புகளின் நலம் பற்றிச் சரியான முடிவுக்கு வருவதற்குப் பிரசுரகர்த்தர்களின் விற்பனைக் கணக்குகளைக் கேட்டறிந்தால் ஓரளவு தெளிவு கிட்டலாம். [அவர்கள் சரியான கணக்கைக் கொடுப்பார்களா என்பது வேறு வகைப் பிரச்சனை! ]

இந்திய மொழிபெயர்ப்பு இலக்கியம் அத்தனை தூரம் தமிழகத்தில் பிரபலமாகவில்லை என்பதும், இங்கிலிஷிலிருந்து மொழிபெயர்க்கப்படுவன நிறைய வெளியாகின்றன, படிக்கப்படுகின்றன என்பதும் எங்களுக்குத் தோன்றிய முடிவுகள்.

இதைச் சற்றாவது மாற்றும் நோக்கத்தோடு, இந்திய மொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொணரும் வேலையைச் செய்யலாம் என்று தோன்றியது. ஒரு தடைக்கல், பல மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களைக் கண்டடைவது சுலபமாக இல்லை. இதை தொடர்ந்த முயற்சிகளால் மாற்றிவிட முடியும் என்றே தோன்றுகிறது. இப்போதைக்கு இந்தத் தகவல்களைச் சேகரிக்க முயல்கிறோம். வாசகர்களில் இப்படிப் பல இந்திய மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யும் நல்லாரை யாருக்காவது தெரியும் என்றாலோ, அல்லது அவர்களே இப்படி மொழியாக்கம் செய்யக்கூடியவர்கள் என்றாலோ எங்களுக்கு எழுதித் தெரிவித்தால் நன்றியுடையவர்களாக இருப்போம்.

சில தென்னிந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பவர்களை எங்களால் கண்டறிய முடிந்தது. இன்னும் பெரும்பாலான மொழிகளிலிருந்து இங்கிலிஷ் மூலமாகத்தான் படைப்புகளைப் பெறமுடிகிறது. இது இரட்டை மொழி பெயர்ப்பு ஆகிவிடும். இரண்டாம் காஃபி என்று நம் வீடுகளில் சொல்வார்கள். அது நீர்த்துச் சுவை குன்றிய பானமாகும். (இரண்டாம் டீயும் அப்படித்தான் இருக்கும்.) இங்கிலிஷுக்குப் போகும்போதே மொழிபெயர்ப்புகளில் ஒரு ரசமாற்றம் ஏற்படுகிறது. அங்கிருந்து மறுபடித் தமிழுக்கு வரும்போது மேலும் சில அடைப்புகளே ஏற்படுமே அன்றி மூலத்தின் சாரம் எளிதாகக் கிட்டாது என்பது நமக்கு உள்ளுணர்வால் தெரிந்திருக்கவேண்டும். அது அப்படித்தானா என்று இனிமேல் பார்க்கப்போகிறோம்.


2020 இல் யோசித்ததை 2021 இலாவது செயல்படுத்த முடிந்திருக்கிறது. முதல் காலெட்டாக வங்க மொழி இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தோம். அதுதான் ஏன்?

இந்தியா உலகப் பண்பாட்டின் வளங்களை இலக்கியத்தின் வழியே அறியவென்று மேற்கொண்ட பெருநகர்வு வங்காளத்தில்தான் முதலில் தோன்றி இருக்கவேண்டும். காலனியத்தின் அழுத்தத்தால் சிதைவுகளைக் கண்ட இந்திய மொழிக் குழுக்கள், இங்கிலிஷின் மூலம் உலகை அறியவாரம்பித்த காலை, அந்த முயற்சி பெரிதும் வேகம் பெற்றது வங்காளத்தில். ஓரளவு மராட்டிய தேசத்தில், அதேபோல இன்னோர் அளவு சென்னை மாகாணத்தில்.

இவற்றுக்குள், வேகமெடுத்துப் பாய்ந்து உலக இலக்கியத்தை ரசிக்க ஆரம்பித்த முதல் இந்திய மொழிக்குழுவினர் வங்காள மொழிக்குழுவினர். இந்திய நவீனப்படுத்தல் அங்கிருந்தே தன் துவக்கங்களைப் பெற்றது.

இந்தியாவில் மேற்கின் பாதிப்பால் இந்தியத்தை மறுவார்ப்புச் செய்யும் முயற்சியே நவீனமாதல் என்று அறியப்படுகிறது. நவீனம் என்பதே மேற்கின் கொடை என்றுகூட நம் மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றனர். இன்றளவும் தமிழிலும் பல இந்திய மொழிகளிலும் புத்தெழுச்சி என்பதே மேற்கின் கொடை என்று சொல்வோரை அறிவாளர்கள் நடுவே நிறையவே பார்க்கலாம். தொடர்ந்து பல்கலைக்கழகங்களிலும் ஊடகங்களிலும் கருத்து வெளிகளிலும் இந்தியம் என்பது பஞ்சாங்கம், பழசு, உளுத்தது, ஆகாத மாமியார், எனவே ஒழிக்கப்படவேண்டியது என்ற கருத்தே அதிகம் பரவி இருக்கிறது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சொல்வழக்கில் பழையன அழிக்கப்படுதலும் என்று சொல்லப்படவில்லை. புதியன புகுத்தப்படலும் என்றும் சொல்லப்படவில்லை. ஆனால் காலனியத்தின்கீழ் அப்படித்தான் நடந்தது. இங்கு முன்புசொன்ன வாழும் மொழி, ஆளும் மொழி என்ற பிரிவினைக் கருத்தாக்கத்தை வைத்து, நம் பாரம்பரியத்திலிருந்து நம்மைப் பிரிக்கச் சுலபமான ஓர் ஆயுதத்தைக் கையிலெடுத்தனர் காலனிய ஆட்சியாளர்கள். இன்றும் அந்த உத்தியின் தொடர்ச்சியாக, காலனியத்தின் சிப்பாய்களாக இந்தியாவில் சேவகம் செய்யும் ஏராளமான அறிவாளர்களும், அரசியல் கொள்ளையர்களும், ஒருபுறம் இந்தியாவின் பல பண்பாட்டியம் எத்தனை இயல்பான ஒன்று என்று சொல்லிக்கொண்டே, இன்னொரு புறம், இந்திய மொழிகளிடையேயும், பல மொழிக்குழுக்களிடையேயும் உள்ள பாரம்பரிய, பண்பாட்டு, வாழ்க்கைப் பரிமாற்றங்களை அறுத்துப்போட என்னென்ன முயற்சிகளை எல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்கிறார்கள்.

மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்த முதல் நாளிலிருந்து, பிற மொழியினர் மாநிலத்தில் வேலை பார்க்கக்கூடாது என்றும், வசிக்கவே கூடாது என்றும்கூட அரசியல் கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்படும் இன்றுவரை பிரித்தாளும் சூழ்ச்சியைத் தொடர்கின்றனர்.

இது தவிரப் பண்பாட்டுத் தளத்தில்கூட ஒவ்வொரு இழையாகப் பார்த்து எங்கெல்லாம் இணைப்புகள் இருந்தனவோ அவற்றை எல்லாம் அறுக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. மகர சங்கராந்தி என்று இந்தியா முழுவதும் பற்பல மாநிலங்களில் நடக்கும் ஒரு பண்டிகையை, தமிழகத்தில் மட்டும் உழவர் திருநாள் என்று பெயரிட வேண்டுமென அரசியல் நடத்தும் கூட்டங்களை நாம் இன்று காண்கிறோம்.

இப்போதைக்கு வாழ்வாதாரம் தேடும் செயல் ஒன்றாலேயே பெருவாரி இந்தியர்கள் இந்த தொடர்பறுக்கும் முயற்சிகளைத் தோற்கடித்து வருகின்றனர். விசித்திரமாக, ‘இந்திய இங்கிலிஷ்’ என்ற ஒரு தனிப் பிராணி, இந்த வாழ்வாதார முயற்சிகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

அதே பிராணிதான் இந்த வங்கச் சிறப்பிதழுக்கும் பிராணவாயுவாக இருந்து செயல்பட்டிருக்கிறது.

வங்க மொழி அறிந்து அதிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்யும் நபர்களைக் காணவியலாத எங்களுக்கு, இந்த இதழில் பிரசுரமாக்க உதவியாகப் பெருமளவு வங்க இலக்கியத்தின் இங்கிலிஷ் வடிவங்களே உதவியுள்ளன.

இனிவரும் இதர இந்திய மொழிச் சிறப்பிதழ்களிலும் இந்தப் பிரச்சனை மேலெழும் என்று ஊகிக்கிறோம். ஒரு காரணம், இப்படிப் பல மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யும் நபர்கள் பற்றிய தகவல் இன்னும் சேகரிக்கப்படவில்லை என்பது. மற்றது, இந்தப் பத்திரிகைக்குப் பணபலம் இல்லாததால் எழுதுவோருக்குச் சன்மானம் என்று எதையும் கொடுக்கவியலாத நிலையில் அப்படி இலவசமாக எழுதி உதவுவோரைக் காண்பது சுலபமாக இல்லை. அப்படி எளிதாகவும் இராது. தாம் பிரசுரிக்கும் புத்தகங்களுக்கு ஏதோ சன்மானம் கொடுக்கும் சாஹித்ய அகதமியின் பிரசுரங்களேகூட அத்தனை தரமில்லாத மொழிபெயர்ப்புகளோடும், தயாரிப்பு நேர்த்தி அற்றும் பிரசுரமாகின்றன. முழு இலவசமாகத் தயாரிப்பைச் செய்யும் இந்தப் பத்திரிகைக்கு எத்தனை வலு கிட்டும்?


வரும் மாதங்களிலும் வருடங்களிலும் ஒவ்வொரு இந்திய மொழியாக எடுத்துக்கொண்டு அவற்றின் இலக்கியம், கலை, சினிமா, வரலாறு என்று சில தளங்களை மட்டும் கவனிக்க உத்தேசித்திருக்கிறோம். சொல்வனத்தின் சிறப்பிதழ் முயற்சிகள் சராசரியாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கின்றன. வருடம் மூன்று சிறப்பிதழ்களாவது தர உத்தேசம். இடையில் வேறு வகைச் சிறப்பிதழ்களையும் கொடுப்போம்.

இந்தச் சிறப்பிதழ்களை மின் நூலாகவும் ஆக்கிக் கொடுக்கவும் திட்டம் இருக்கிறது.

கூடிய சீக்கிரம் ஒலி வடிவத்தில் படைப்புகளைக் கொடுக்கவும் சொல்வனம் குழுவினர் முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றனர் என்பதையும் சொல்லி வைக்கிறேன். எமக்குக் கதைகள், படைப்புகள் அளித்துக் கௌரவிக்கும் சில எழுத்தாளர்களே இந்த ஒலிப்பதிவுகளையும் கொடுக்க முன்வந்திருக்கின்றனர். அவற்றை நேர்த்தியாகச் செய்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த ஆதரவால்தான் இத்தனையும் நடக்கின்றன. அதற்கு எங்கள் நன்றி.

சொல்வனக் குழுவின் சார்பில்,
மைத்ரேயன்

6 Replies to “சிற்றடி: ஏன் இந்த முயற்சி?”

  1. Extremely happy to hear about Solvanam’s decision in the right direction. This issue has made an excellent beginning for such a process. All the articles and translations are excellent and worth preserving for present and posterity. I am proud to be able to contribute also my little bit towards your efforts. Thanks for the opportunity and hats off to all the writers.👍👌🎉

  2. கடலூர்த்தங்கை ஜெயஸ்ரீயின் மூலம் வளவ துரையன் பாவண்ணன் நட்புக் கிட்டியது.பாவண்ணன் தமிழ் மென்பொருள் அடையாளம் காட்டினார்.சென்னைத்தங்கை மகன் திருமணந்த்தில் நாஞ்சில் நாடன் அறிமுகம் ஆனார்.சிறுவாணி அங்கத்தினன் ஆனேன்.சொல்வனத்தின் தொடர்பு இப்போது தான் தெரிந்தது.நல்ல முயற்சி.

  3. திரு மைத்ரேயன் அவர்களே, புத்தக கண்காட்சியில் நுழையும்போது மேல் தட்டு வர்க்கத்தாரின் நூல்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ஆண்டாண்டு காலமாய் கல்வி மறுக்கப்பட்டு வந்த பரம்பரையை படிக்க வைத்த மெக்காலே திட்டத்தில் குறை உள்ளதோ? இன்னும் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் புத்தி மாறவில்லையே…

    1. உங்கள் வரலாற்றுப் படிப்பும் மகாலேயின் கொள்ளையர் கூட்டம் கொடுத்த தானம்தான். அதை இன்னும் மோசமாக்கிக் கொடுத்திருப்பவர்கள் பன்னாட்டுத் திரிபு வாதிகளான மார்க்சிய வரலாற்றாளர்கள். அதைவிடக் கொடுமையாக அந்த வரலாற்றை மோசடியாக்கியவர்கள் தமிழக அரசியலாளர்கள். இவற்றில் ஊறி விட்ட உங்களுக்கு என் வரலாற்றுப் பார்வை இனிக்காதுதான்.
      உங்களுக்குப் பிடித்த மகாலே நாட்டுக் கொள்ளையர்களின் மொழியில் உள்ள இந்தக் கட்டுரை ஒரு சில பதில்களைக் கொடுக்கலாம். அதை முழுதும் சீரணிக்கும் வரையாவது நிலவுகிற வரலாற்றுத் திரிப்பை நம்பி, உங்களுடைய மூதாதையர்களை எல்லாம் இழிவாகக் கருதாமல் இருப்பது சுய மதிப்புக்கு நல்லதாக இருக்கும். ஆனால் இந்த யோசனை உங்களுக்குப் பிடிக்காது. இன்றைய அரசியல் வியாபாரிகளைத்தான் நீங்கள் நம்புவீர்கள் என்றால் அதுதான் விதி என்றுதான் கருத வேண்டி வருகிறது. இனி இந்தக் கட்டுரை: https://www.eurozine.com/on-the-uses-and-disadvantages-of-historical-comparisons-for-life/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.