சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3

This entry is part 17 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ரவி நடராஜன்

முன்பகுதியில், விஞ்ஞானிகள் பல வழிகளில் ஆராய்ந்து, புகை பிடிப்பதன் தீமையை எந்தச் சந்தேகமும் இல்லாமல் நிரூபித்ததைப் பார்த்தோம். 1954– ஒரு முக்கிய ஆண்டு. அமெரிக்கப் புற்றுநோய் சங்கம், புகைபிடித்தல் பழக்கத்தை எப்படியாவது குறைக்க வழி செய்யவேண்டும் என்று செயலில் இறங்கியது. யு.கே., கனடா, ஸ்வீடன் என்று பல நாடுகளும் கோதாவில் இறங்கின. புற்று நோய் வருமா என்ற சந்தேகத்தில் இருந்த சமூகம் (சிகரெட் நிறுவனங்களின் திரித்தல்களால்), எப்படி அதைக் குறைப்பது என்று சிந்திக்கத் தொடங்கியது.

சிகரெட் நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்புகள் அபாயகரமானவை அல்ல என்று சாதித்து வந்தனர். எட்டு ஆண்டுகள் வரை அமெரிக்க சர்ஜன் ஜென்ரலின் அறிக்கையைத் தங்களுடைய பணபலத்தால் தள்ளிப்போட வைத்தார்கள். 1964–ல் வெளிவந்த அந்த அறிக்கை, தெளிவாக, அமெரிக்கர்களுக்குப் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பது அரசாங்கத்தால் தீர்மானமாய் அறிவிக்கப்பட்டது. இதை ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக எல்லோரும் பார்க்கிறோம். ஆனால், பொது அறிவு, எல்லா நாடுகளிலும் சற்றே தாமதமாகத்தான் வளர்கிறது. 1960–களில், மேற்கத்திய மருத்துவர்கள் புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவதை முற்றிலும் ஒப்புக்கொள்ளவில்லை. மருத்துவர்களிடம் நோயாளிகள் செல்லும்போது, அவர்கள் புகைபிடிக்கிறார்களா என்று எந்த மருத்துவரும் அந்தக் காலகட்டத்தில் கேட்கவில்லை.

சிகரெட் நிறுவனங்கள், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி தெரிந்திருக்கவில்லையா? பொது வெளியில், விஞ்ஞான முடிவுகள் வெளியிட்டதை சிகரெட் நிறுவனங்கள் பார்க்கத்தான் செய்தன. இவர்களுக்கு என்றே சில விஞ்ஞானிகள், பொது மக்களைக் குழப்புவதற்குத் தயார் நிலையில் இருந்தார்கள். அட விஞ்ஞானத்தை விடுங்கள், இவர்கள், ‘Smoking and Health: The Need to Know’ என்ற பிரச்சார சினிமாவையே வெளியிட்டார்கள்! பார்க்கும் நுகர்வோரைக் குழப்பி, சர்ஜன் ஜென்ரலின் அறிக்கையில் அவ்வளவு உண்மை இல்லை என்று நம்பவைத்து, இந்த சினிமாவிற்குப் பிறகு, சிகரெட் புகைப்பதால் உடல் நலத்திற்குக் கேடு என்ற கருத்தை ஒப்புக்கொள்ளும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 18% குறைந்துள்ளதாக அறிவித்தது. இது எப்படி என்றால் கோவிட்-19 நோய்க்கு மருந்து, மாவிலையை உண்பதில் உள்ளது என்று ஒரு பிரச்சார விடியோ எடுத்து, அதைக் குறிப்பிட்ட ஒரு வயதினருக்குக் காட்டி, இந்தியாவில் கோவிட்-19–க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நம்பவைப்பதைப் போன்ற மோசடி.

சிகரெட் நிறுவனங்கள், மனித உயிரை உண்மையிலேயே மதிக்கின்றனவா? இவ்வளவு பாடுபட்டு விஞ்ஞானிகள், புகை பிடிக்கும் பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் என்று முடிவுக்கு வந்தும் எப்படி இவர்களுக்கு, எல்லாவற்றையும் தாண்டி, லாபம்மீது மட்டுமே தன் முழு பலத்தையும் காட்டமுடிகிறது? இதற்கான விடைகள் சிக்கலானவை. ஆனாலும் சற்று முயற்சிப்போம்.

சிகரெட் புகைபிடிப்பதால் 10 லட்சம் பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் வந்து மரணம் நேருகிறது. அதுவும், 25 ஆண்டுகள் கழித்து. இதை ஒரு கணக்காகப் பார்ப்போம். 6 டிரில்லியன் (600,000 கோடி) சிகரெட்டுகள் 1990–ல் புகைக்கப்பட்டால் 2015–ல் 60 லட்சம் மனிதர்கள் புற்றுநோய் வந்து இறப்பார்கள். இதை வேறுவிதமாகப் பார்த்தால், 2015–ல், 5 நொடிகளுக்கு ஒரு மரணம். அடப் போங்க சார், சும்மா பூச்சாண்டி காட்டாதீங்கன்னு நீங்க சொல்வது புரிகிறது. 6 டிரில்லியன் சிகரெட் எப்படிச் சாத்தியம்? சரி கணக்கை இன்னொரு முறை சரி பார்ப்போம்.

 • ஒரு சிகரெட் பாக்கெட்டில் 20 சிகரெட்டுகள் இருக்கின்றன.
 • ஒரு சிகரெட் கார்டனில், 10 பெட்டிகள் – அதாவது 200 சிகரெட்டுகள்
 • ஒரு பெரிய பொட்டலத்தில் (master case என்று சிகரெட் தொழில் சொல்லும் விஷயம்) 50 கார்டன்கள், அதாவது 10,000 சிகரெட்டுகள்
 • ஒரு 40 அடி கண்டெய்னரில், 10 மில்லியன் சிகரெட்டுகள் – இந்த கண்டெய்னரில், 1,000 பெரும் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்படுகின்றன
 • இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள் – 6 டிரில்லியன் சிகரெட்டுகளுக்குத் தேவை எத்தனைக் கண்டெய்னர்கள்? வெறும் 6 லட்சம்தான். உலகில், எல்லா நாடுகளையும் சேர்த்தால், 6 லட்சம் கண்டெய்னர்கள் ஒரு சரியான மதிப்புதான்
 • ஒரு கண்டெய்னருக்கு 10 இறப்பு என்று வைத்துக்கொண்டால், 60 லட்சம் இறப்புகள் சாத்தியம்

இன்னொரு தமாஷான சிகரெட் கணக்கு:

 • புகை பிடிக்கப்படும் சிகரெட் ஒன்றின் நீளம் 60 மி.மீ. (ஊதப்படும் நீளம் மட்டும் இதில் அடக்கம்)
 • வருடத்திற்கு 6 டிரில்லியன் சிகரெட்டுகள் ஊதப்படுகின்றன என்று பார்த்தோம். இது, 360 டிரில்லியன் மி.மீ. அதாவது, 360 மில்லியன் கி.மீ.
 • இதை வேறு விதமாகப் பார்த்தால், 10 கி.மீ. நீள சிகரெட், நொடி ஒன்றுக்கு, மனிதர்களால் ஊதப்படுகிறது
 • நம் பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் நொடிக்கு 10 கி.மீ. வேகத்தில் சுற்றுகின்றன. உலக சிகரெட் நுகர்வோர், இந்த அளவில் இயங்கி வருகிறார்கள்

கடைசியாக, சிகரெட் கம்பெனிகளுக்கு, ஓர் உயிரின் விலை என்ன?

 • ஒவ்வொரு சிகரெட்டிலும், சிகரெட் நிறுவனம் 1 சென்ட் லாபம் பார்க்கிறது
 • ஒவ்வொரு மில்லியன் சிகரெட்டிற்கும், சிகரெட் நிறுவனம், அமெரிக்க டாலர் 10,000 லாபம் பார்க்கிறது
 • ஒரு மில்லியன் சிகரெட்டிற்கு ஓர் இறப்பு என்று வைத்துக்கொண்டால், ஓர் உயிரின் விலை 10,000 அமெரிக்க டாலர்கள்
 • தன்னுடைய ஒரு வாடிக்கையாளரை இழப்பதற்காக யாராவது 10,000 அமெரிக்க டாலர் லாபத்தை விட்டுக்கொடுப்பார்களா?
 • இருக்கவே இருக்கிறார்கள், புதிய இளைய தலைமுறையினர். இறந்த வாடிக்கையாளரை ஈடுகட்ட உடனே கடந்த 150 வருடங்களாக வந்துகொண்டே இருக்கிறார்களே!
 • வருடத்திற்கு 6 டிரில்லியன் சிகரெட்டுகள் புகைபிடிக்கப்படுகின்றன என்று பார்த்தோம். இதனால், சிகரெட் கம்பெனிகள் ஈட்டும் லாபம் – அறுபது பில்லியன் டாலர்கள்

இந்த லாபத்திற்காக இந்தத் தொழில் வளைக்காத விஞ்ஞானம் இல்லை. இவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். விஞ்ஞானத்தை எதிர்க்கவே விஞ்ஞானிகளைப் பயன்படுத்தியது, சிகரெட் தொழில்.

1980–ல், பிரிடிஷ் அமெரிக்கன் டொபேக்கோ நிறுவனத்தின் விஞ்ஞானி இவ்வாறு கூறினார், “எதற்காக ஒரு தொழிலின் முன்னேற்றத்தைத் தடுக்க, விஞ்ஞான நிரூபணம் தேவை? சொல்லப்போனால், விஞ்ஞான நிரூபணம், அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படவும் இல்லை. பயன்படுத்தப்படவும் கூடாது!”

என்ன அற்பமான ஒரு வாதம்! இதன் அர்த்தம் என்ன? நாங்கள் சட்டத்திற்குப் புறம்பான தொழில் ஒன்றும் புரியவில்லை. ஏராளமான வரிகளைக் கட்டி தேசத்திற்க்ச் சேவை செய்கிறோம். எங்கள்மீது விஞ்ஞானம், மெய்ஞானம் என்று நடவடிக்கை எடுத்தால் தெரியும், ஜாக்கிரதை!

1950–களிலேயே சிகரெட் நிறுவனங்களின் லாபத்திற்கு அபாயம் விளைவிக்கும் விஞ்ஞான முடிவுகள் உருவாவது தெரியும். உடனே, சிகரெட் நிறுவனங்களின் லாபத்தைப் பாதுகாக்க, பொதுத் தொடர்பு நிறுவனங்கள் அமர்த்தப்பட்டன. பொதுத் தொடர்பு நிறுவனங்களுக்கு, அதனை ஈடுபடுத்தும் நிறுவனம், என்ன பிரச்னை என்று தெளிவாகச் சொல்லவேண்டும் – இதை briefing என்று சொல்வதுண்டு. இதோ, 1950–களில் செய்த (Hill and Knowlton, 1953) briefing:

“பொது மக்களிடையே உள்ள புகைபிடித்தல் பற்றிய பீதி உடனே நீக்கப்படவேண்டும். அவர்களுக்குப் பழைய நாள்களைப்போல, சிகரெட் பிடிப்பதில் எந்த அபாயமும் இல்லை என்ற ஒரு நம்பிக்கை பிறக்க வழி செய்யவேண்டும். ஒவ்வொரு முறை சிகரெட்டைப் பற்ற வைக்கும்போதும், எந்த பயமும் இல்லாமல், புகை தரும் இன்பமே நினைவில் இருக்கவேண்டும்.”

பொதுமக்கள் தொடர்பு நிறுவனம், அனைத்துச் சிகரெட் நிறுவனங்கள் சார்பிலும் இந்தச் செய்தியைச் செய்திதாள்களில் வெளியிட்டன:

“மருத்துவ ஆராய்ச்சி, புகை பிடிப்பதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்ந்து வருகிறது. அதிகார வர்கத்தில் இவ்விஷயத்தில், பொது உடன்பாடு, இதுவரை இல்லை. சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்பதற்கு எந்த நிரூபணமும் இல்லை. புள்ளியியல் விவரங்களை வைத்து முடிவெடுப்பது சரியன்று. இன்று, புள்ளி விவரங்களைக்கொண்டு, ஒரு நோயை எந்தக் காரணத்துடனும் எளிதில் இணைக்கலாம்.”


இதுதான் இவர்களது சூட்சமம். ஆரம்பத்தில், விஞ்ஞானத்தில் முழு நம்பிக்கை இருப்பதைப்போலச் சொல்லிவிட்டுக் கடைசியில் புள்ளியியல் எல்லாம் மோசடி என்று திரித்து முடிப்பது. சிகரெட் ஊதுபவர் மனதில் கடைசி வாக்கியம்தான் மனதில் நிற்கும். இவர்களது briefing-ஐ இன்னொரு முறை படியுங்கள். விஞ்ஞானமாவது மண்ணாங்கட்டியாவது. ஊதித் தள்ளுங்கள் மக்களே என்பதே இதன் சாரம்.

இதையும் தாண்டி, அரசாங்கத்திற்கு ஓர் அண்டப் புளுகையும் சொல்லியது, சிகரெட் தொழில். “மனித உடல் நலத்திற்குக் கெடுதல் விளைவிக்கும் எந்த ஒரு பொருளையும் தயாரிக்கவும் விற்கவும் மாட்டோம். விஞ்ஞான ஆராய்ச்சியில் நம்பிக்கையுள்ள ஒரு தொழில் எங்களுடையது. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். நுகர்வோருக்கு விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளை தெரியப்படுத்துவது எங்கள் கடமை.” ’இதுவல்லவா சர்க்கரைப் பேச்சு!

இன்று, சிகரெட் தொழில் சார்ந்த விஞ்ஞானிகளின் கடிதப் போக்குவரத்து பொதுவெளியில் வந்துள்ளது. ”புள்ளியியல் ஆராய்ச்சிபடி, சிகரெட் புகைப்பதற்கும் புற்று நோய்க்கும் தொடர்பு உள்ளது உண்மைதான். இந்தத் தொடர்பு, மறுக்க முடியாதது.” இந்தக் கடிதம், BAT விஞ்ஞானிகள் அமெரிக்கா சென்றபோது ஏற்றுக்கொண்ட முடிவு. அமெரிக்காவில், இவர்களின் இந்த முடிவுக்குத் துணைபோனது Philip Morris, American Tobacco மற்றும் Liggett போன்ற அமெரிக்கத் தயாரிப்பாளர்கள்.

ஆக, வெளியே ஒரு வேஷம், உள்ளே இன்னொன்று, இதுவே சிகரெட் தொழில்.

அடுத்தபடியாக, இன்னொரு முயற்சியாகச் சிகரெட் தொழில், வழக்கறிஞர்களைவிட்டு விஷயத்தை மேலும் குழப்ப முயன்றது. 1968–ல், அமெரிக்கச் சிகரெட் நிறுவனங்களின் வழக்கறிஞர்கள், இவ்வாறு விஷயத்தைப் போட்டுக் குழப்ப முயன்றார்கள். ”சிகரெட்டிற்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்வதைவிட, நுரையீரல் புற்றுநோயை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.” சரியாப் போச்சு, விஞ்ஞானிகளுக்கு வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்கத் தொடங்கினால், விபரீதம்தான்!

1970-ல் எழுதப்பட்ட இரண்டு சிகரெட் தொழிலின் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றியவர்களின் கடிதப் போக்குவரத்து. Philip Morris என்ற அமெரிக்கச் சிகரெட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் எழுதியது, “நமக்குத் தேவை, சிகரெட்டினால் எந்த வியாதியும் வராது, என்று தீர்மானமாக மறுக்கும் ஆராய்ச்சி முடிவு”. இது கிடைக்காத பட்சத்தில், அடுத்த கட்டமாகப் “பல கோடி டாலர் வரிப்பணம் செலவழித்தும் சிகரெட்டினால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்று தீர்மானமாக சொல்லமுடியாத ஆராய்ச்சியினால், நமக்கு என்ன பயன்? இந்தச் சோதனைகள் எத்தனை காலம் பிடிக்கின்றதோ, அவ்வளவு நமக்கு நல்லது.”

இப்படி, விஞ்ஞான முடிவுகளைக் குழப்பி, அரசாங்கங்கள் முடிவுகளை அமுல்படுத்தத் தடையாக இருந்து, மக்களையும் தம் வாடிக்கையாளாரையும் குழப்பி, லாபம் ஈட்டிக்கொண்டே இருந்தன சிகரெட் நிறுவனங்கள். இவர்களின் தில்லாலங்கடிகள் அடுத்த பகுதியிலும் தொடரும்.

Series Navigation<< சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.