தமிழில் : முத்து காளிமுத்து

1943, இரண்டாம் உலகப் போரின் உச்சகட்டம். இடம் லண்டன். பிரிட்டிஷ் யுத்தகால அமைச்சரவை அதன் பதற்றம்மிக்க காலனியான இந்தியாவில் நிலவும் பஞ்சம் குறித்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறது. முக்கியமாகக் கிழக்கு வங்கத்தில் லட்சக்கணக்கான உள்ளூர்வாசிகள் பட்டினி கிடக்கின்றனர். இந்தியாவுக்கான உள்துறை அமைச்சரான லியோபோல்ட் அமேரி மற்றும் சீக்கிரமே இந்தியாவின் புதிய வைஸ்ராயாக நியமிக்கப்படவுள்ள பீல்ட் மார்ஷல் சர் ஆர்க்கிபால்ட் வேவல் ஆகியோர் காலனிக்கு இன்னும் அதிக உணவை எப்படி அனுப்புவது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஆனால், ஆத்திரக்காரரான பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களுக்குக் குறுக்கே வந்துவிடுகிறார்.

“இந்தியர்களைவிட கிரேக்கர்களையும் விடுவிக்கப்பட்ட நாடுகளையும் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது, அனுப்ப வேண்டியவற்றைக் கொடுப்பதற்கோ அல்லது இந்த நாட்டின் கையிருப்புகளைக் குறைப்பதற்கோ தயக்கம் உள்ளது” என்று சர் வேவெல் தனது கூட்டறிக்கைகளில் எழுதுகிறார். திரு. அமேரி மிக வெளிப்படையாகவே இருக்கிறார். “எது எப்படியோ குறைவாகச் சாப்பிடும் வங்காளிகளின் பட்டினி, உறுதிமிக்க கிரேக்கர்களோடு ஒப்பிடுகையில் முக்கியமானதன்று என்று சர்ச்சில் கூறுவது சரியாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர் பேரரசின் பொறுப்புணர்வுக்கு இந்த நாட்டில் போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை” என்று எழுதுகிறார்.
1943 ஆம் ஆண்டின் பஞ்சத்தில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் இறந்தனர். இறப்புகளில் பெரும்பாலானவை வங்காளத்தில்தான். ‘சர்ச்சிலின் ரகசிய யுத்தம்’ என்ற அதிர்ச்சியூட்டும் புதிய புத்தகத்தில், பத்திரிகையாளர் மதுஸ்ரீ முகர்ஜி, திரு, சர்ச்சிலின் கொள்கைகள் இந்திய வரலாற்றில் மிக மோசமான பஞ்சங்களில் ஒன்றுக்குப் பெரிய காரணம் என்று குற்றம்சாட்டுகிறார். இது பேரரசின் வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான அத்தியாயங்களுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டியதன்மீது கவனத்தை ஈர்க்கக்கூடியதும் அறிவுசார் விசாரணையும் உரியதாகும்.
கடும் பஞ்சம் ஏற்பட்டதற்கு, யுத்த அரங்குகளில் பயன்படுத்தவும் பிரிட்டனின் நுகர்வுக்காகவும் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவிலான உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். பஞ்சம் ஏற்பட்டிருந்தும் இந்தியா 1943 வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அந்த உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களை ஒரு முழு ஆண்டுக்கு உயிருடன் வைத்திருக்கும். கப்பல்களின் பற்றாக்குறையைக் காரணம்காட்டி இந்தியாவுக்கு உணவு ஏற்றுமதி செய்வதற்கான தீவிர வேண்டுகோளை சர்ச்சில் நிராகரித்தார். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் ஐரோப்பாவின் எதிர்கால நுகர்வுக்க்ச் சேமிப்பதற்காக ஆஸ்திரேலிய கோதுமைச் சரக்குக் கப்பல்கள், கடல் வழியாக இந்தியாவைக் கடந்துசெல்லும். இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்ததால் விலைகள் அதிகரித்தன, பதுக்கல்காரர்கள் மக்களைத் திண்டாட்டச் செய்தனர். வங்காளக் கடற்கரைகளுக்கு ஜப்பானியர்கள் வந்துவிடுவார்கள் என்று அஞ்சி, மறுப்புக் கொள்கை என்ற பெயரால் மக்களை வதைக்கும் ஓர் உலகளாவிய கொள்கையையும் சர்ச்சில் முன்வைத்தார். அதிகாரிகள் பிராந்தியத்தின் உயிர்நாடியான படகுகளை அகற்றினர், போலீசார் கிடங்குளை அழித்து அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
முகர்ஜி பஞ்சத்திலிருந்து தப்பியவர்களில் சிலரைக் கண்டுபிடித்துப் பசி, பற்றாக்குறையின் விளைவுகளைப் பற்றிய நெஞ்சம் பதைபதைக்கும் ஒரு சித்திரத்தை நம் அகவெளியில் வரைகிறார். பெற்றோர் பட்டினியால் அவதியுறும் தங்கள் குழந்தைகளை இழுத்துச்சென்று ஆறு, கிணறுகளில் மூழ்கடித்தனர். ரயில்களின்முன் பாய்ந்து தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டனர். பட்டினி கிடந்த மக்கள் அரிசிக் கஞ்சி வேண்டிக் கெஞ்சினர். குழந்தைகள் இலைகள், கொடிகள், கிழங்குகள், புல்லென கைகளுக்குக் கிடைத்தவற்றைத் தேடியுண்டனர். மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தகனம் செய்யக்கூட இயலாத நிலையில் பலவீனமாக இருந்தனர். “சடங்குகளைச் செய்ய யாருக்கும் பலம் இல்லை” என்று உயிர் பிழைத்தவர் முகர்ஜியிடம் கூறுகிறார். வங்காள கிராமங்களில் இறந்த உடல்களின் குவியல்கள் நாய், நரிகளுக்கு விருந்தாக அமைந்தன. தப்பியோடிய ஆண்கள் வேலைகளுக்காக கல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தனர், பெண்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்டனர். “தாய்மார்கள் கொலைகாரர்களாகவும்\, கிராமத்து அழகிகள் வேசிகளாகவும் தந்தையர் மகள்களைக் கடத்துபவர்களாகவும் மாறிவிட்டனர்” என்று முகர்ஜி எழுதுகிறார்.
தப்பிப் பிழைத்தவர்கள் தங்கள் நெல் பயிரை அறுவடை செய்தபோது பஞ்சம் ஒருவழியாக அந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வந்தது. பார்லி, கோதுமையின் முதல் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் தேவைப்பட்டவர்களுக்குச் சென்றடைந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே பல்லாயிரக்கணக்கானோர் வறுமையால் அழிந்துவிட்டனர். 1943 இலையுதிர் காலத்தில், ஐக்கிய இராச்சியத்தின் 4.7 கோடி மக்களுக்கான (வங்காளத்தைவிட 1.4 கோடி குறைவு) உணவு, மூலப்பொருட்களின் இருப்பு 18.5 மில்லியன் டன்னாக அதிகரித்தது.
இது “போர்க்கால பிரிட்டனில் ரொட்டிக்கு இருந்த விநியோகக் கட்டுப்பாடு ஏற்கப்பட முடியாத இழப்பு என்று கருதியவர்களுக்கு இந்தியாவில் கடும்பஞ்சம் நிலவுவது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இது வெறும் இனவெறியால் மட்டும் நேர்ந்ததன்று.சமூக டார்வினியம் என்ற கருத்தியல் சார்பில் உள்ளே உறைந்திருக்கிற அதிகார ஏற்றத் தாழ்வால் நேர்ந்தது,” என்று முடிவில் முகர்ஜி தன்னிலைப்பாட்டை எழுதுகிறார். காலனியத்தை இன்னமும் தூக்கிப் பிடிப்போருக்கு, இந்தப் புத்தகம் அவசியமாக வாசிக்கப்பட வேண்டிய பாடம். காலனிய ஆட்சி எத்தனை தூரம் நேரடியான சுரண்டல் என்பதற்கு அதன் பயங்கரம் தெரியும்படியான விளக்கம். இந்த விஷயத்தில் இந்திய மக்கள்மீதும் இந்தியாமீதும் இகழ்வு நோக்குகொண்டதோடு அதை வெளிப்படையாகவே தெரிவித்த ஒரு மனிதனால் அந்தப் பயங்கரம் மேலும் படுமோசமாக்கப்பட்டிருந்தது.
மேலும்: