சத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள்

இது திரைப்படமாகாத திரைக்கதையின் கதை. சிதார் இசை எனும் பெயரிடப்பட்ட  இந்தத் திரைக்கதையைச் சத்யஜித் ரே பதேர் பாஞ்சாலி இயக்குவதற்கு முன்னேரே எழுதிவிட்டார். அக்காலகட்டத்தில் அவர் சிதார் மேதை ரவிஷங்கருடன் நெருங்கிப் பழகிவந்தார்.

“புயலும், மழையும், மரங்களும் இணையும் ஓர் அந்தி வேளையில் மெல்லத் தவளை ஓசைபோல ஓர் ஆலாபனை. இசை நிறையும்போது மெல்லக் காட்சி மறைகிறது. ஆலாபனையின் ஒரு ஸ்வரம் மட்டும் நீண்டு ஒலிக்கிறது.”

அவ்வளவுதான். இத்துடன் நான் எடுக்க நினைத்த காட்சி அறுபட்டு நிற்கிறது என 1977ஆம் ஆண்டு சிதார் இசை எனும் திரைக்கதை படமாகாதது குறித்து ஒரு பேட்டியில் ரே குறிப்பிடுகிறார்.

ஆரம்ப காலத்தில் ரே திரைப்படங்களுக்கு ரவி ஷங்கர் இசையமைத்தார். “தீன் தால்” படத்திலிருந்து அவரது படங்களுக்கு தானே இசையமைக்கத்தொடங்கினார். ஆனாலும், ரவி ஷங்கரின் இசைமீது மிகப்பெரிய மரியாதை இருந்தாலும் தன்னுடைய காட்சிகளைத் தானே இசையமைக்கும்போது திரையாக்கம் இரட்டிப்பாகிறது எனும் நம்பிக்கை கொண்டிருந்தார் ரே.

இந்த திரைக்கதையின் பின்னணியைப் பார்ப்பதற்கு முன்னர் ரே மற்றும் ரவி ஷங்கர் இருவரும் பீட்டர் செல்லர்ஸை சந்தித்த மற்றொரு நிகழ்வைப் பற்றிப் பார்க்கலாம். ஏலியன்ஸ் எனும் ஆங்கிலத் திரைப்படத்தை இயக்குவதற்காக ரே மும்முரமாக ஈடுபட்டிருந்த நேரம். அப்படத்தில் நடிப்பதற்காகப் பீட்டர் செல்லர்ஸ் வந்திருந்தார். இரவுணவுக்குப் பின்னர் ரே மற்றும் ரவிஷங்கர் இருவருடனும் பீட்டர் செலல்ர்ஸ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரவிஷங்கர் சிதார் இசைப்பதைக் கேட்க விரும்பினார் பீட்டர் செல்லர்ஸ். இளமாலை தொடங்கிய கச்சேரி அதிகாலை வரை தொடர்ந்தது. அப்போது ரவி இசைத்ததைப்போல பின்னர் எப்போதும் இசைத்ததில்லை என ஒரு பேட்டியில் ரே பின்னர் கூறினார்.

அப்போது ரவிஷங்கருடன் அல்லா ராக்காகானும் தபேலாவில் இணைந்திருந்தார். ரவியைப் பற்றி திரைப்படம் எடுக்க வேண்டும் என நினைப்பு முன்னர் வந்ததா அல்லது அவர் இசைக்கும் காட்சிகள் படமாகத் தனக்குள் ஓடியதா எனும் குழப்பத்தை அவரது பேட்டி நமக்கு அளிக்கும். ஆனால் ஒரு காலகட்டத்தில் ரவியின் இசை தனது படங்களில் வருவதைப்போலவே அவரது இசையின் செல்வாக்கு தனக்குள் வந்திருக்கலாம் என ரே குறிப்பிடுகிறார். அந்தளவு ஒருவரின் கலை வெளிப்பாடு மற்றொருவரை பாதித்திருந்தது. சலனப்படக் காட்சியைப் பார்க்கும்போது ரே மனதில் இருந்த இசை எனக்குக் கேட்டது என ரவிஷங்கர் சொல்வதிலிருந்து நம்மால் இதை உணர முடிகிறது.

முதல் நான்கைந்து படங்களுக்குப் பின்னர் ரவிஷங்கர் ரே படங்களுக்கு இசைக்கவில்லை. வேறு யாராலும் தனது காட்சிகளுக்கு இசைவடிவம் கொடுக்க முடியாது என முடிவெடுத்திருந்த ரே தானே இசையமைக்கத் தொடங்கினார். ரவிஷங்கரின் தாக்கத்தைக் கடப்பதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

ரே இயக்க இருந்த படத்தின் முதல் காட்சியில் ஒரு மேடைமீது மெல்லிய வெளிச்சம் படரும்போது ரவிஷங்கரின் கோட்டுருவம் சிதாருடன் காட்சி தருகிறது. ஓர் ஆலாபனைபோல கேமிரா மெல்ல மேடைக்கருகே செல்கிறது. கண்மூடிய ரவிஷங்கரின் முகத்தருகே சென்றதும் கேமிரா மெல்ல மேடைக்குப் பின்புறம் நகரத் தொடங்குகிறது. சுழன்று நிற்கும் கேமிரா ஆளில்லாத இருண்ட இருக்கைகளைக் காட்டி அசைகிறது. ராக சஞ்சாரம்போல கேமிரா கோணங்களும் ரவிஷங்கரின் முக பாவங்களும் மேடையையும் சிதாரையும் தொட்டுத் தொட்டுச் செல்கின்றன. வாதி விவாதி ஸ்வரங்களைச் சுற்றி அடிக்கும் சிறகென வெளிச்சம் ஊசாலாடுகிறது. மெல்ல முழு வட்டம் அடித்தபின் மேடையின் பின்புறத்திலிருந்து அவரது முகப்பு நோக்கி நகர்ந்து கேமிரா மெல்ல மேடையிலிருந்து விலகிச் செல்கிறது. சூரியோதயம்போல எழுந்த வெளிச்சம் மெல்ல மங்கிச் செல்கிறது.

ரவி ஷங்கரை வைத்து ரே எடுக்க நினைத்த திரைப்படத்தைப் பற்றி அவரது நெருக்கமானவர்களுக்குக்கூடத் தெரியாது. ரே வரைந்து வைத்திருந்த கேமிரா கோணங்களும், ரவி இசைக்கும்படி இருக்கும் நிழல் ஓவியங்களையும்கொண்டு நாம் அவர் எடுக்க நினைத்த படத்தைப் பற்றி ஓர் அனுமானத்துக்கு வரலாம். ஓர் இசை மேதைக்கு ஒரு திரை மேதை செலுத்திய உச்சகட்ட மரியாதை இது. திரைப்படமாக வெளிவந்திருந்தால் ஒருவேளை ரவிஷங்கரின் மேதைமைக்கு நிகர்செய்ய இயலாமல் போயிருக்கலாம். ஒரு சாதாரண ரசிகராக நமக்குத் தோன்றியது ரேவுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

மாலை ஒளிமங்குவதைப்போல கடைசியாக வரைந்த காட்சிகளை அமைத்திருக்கிறார் ரே. இது அவரது வழக்கமான பாணி அன்று என்றாலும் ஒரே ஒரு ராகத்தை மையமாகக்கொண்டு அவரது திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம் என ஆசிரியர் சந்தீப் ரே நினைக்கிறார். ஏன் இதை ஒரு மாலை ராகமாகக் கருத வேண்டும்? முதல் காட்சியில் சூரியோதயம்போல வரைந்தவர் முடிவுக் காட்சியை அந்தி மறைவதில் வைத்துள்ளார். இசை பற்றிய திரைக்கோப்பில் காலம் பற்றி இருக்கும் ஒரே குறிப்பு இது மட்டுமே.

தாமரை இதழ்களின் கூம்பில் உறையும் பெண் முகத்தைக் காட்டும் ஓவியம் ராஜபுத்திர பாணியில் இருக்கிறது. இன்னொரு படத்தின் பின்னணியில் இருள் பெருத்த மேகங்களும், ஊளைக்காற்று ஊடுருவிச் செல்லும் மரக்கிளையின் திசைகளும், சிறு குளத்தைச் சுற்றியிருக்கும் செடிகளும் பதேர் பாஞ்சாலியின் ஆரம்பக் காட்சியை நினைவூட்டுகின்றன. பிபூதிபூஷனின் நாவலில் கருமேகங்கள் வரயிருக்கும் அவலத்தை சுட்டி இருந்தாலும், ரே காட்டும் திரைக்காட்சியில் சந்தோஷமும் சுதந்திரமும் இருப்பதாக் சந்தீப் ரே கூறுகிறார். திரைப்படத்தைப் பார்க்கும்போது நமக்கும் அந்தச் சுதந்திரம் தொற்றிக்கொள்ளும். ஒரு மேதையாக ரே தாண்டிச் சென்று தனது தனித்துவமானப் பார்வையைக் காட்டிய இடம்.

கடுமையான வறட்சியையும் வெப்பத்தையும் கடந்து காற்று தனது தடத்தைப் பதித்துச் செல்லும் ஓடை மற்றும் மரக்கிளைகளைக் காணும் துர்காவின் குதூகலத்தை பதேர் பாஞ்சாலியில் அவர் காட்டியிருந்தார். அதை தேஷ் ராகத்தின் துள்ளலோடு சிறு ஸ்வரக்கோர்வையை ரவி இசைத்திருப்பார். ரே வரைந்த காட்சியைப் பார்க்கும்போது அந்தத் துள்ளல் இசையை நம்மால் உணர முடிகிறது. அதுபோல, ரவிஷங்கர் ஓவியங்களில் ஒரு நடனத்தன்மையை நம்மால் உணர முடிகிறது. தீற்றலான ஓவியத்தில் தெரியும் அசைவுத்தன்மை நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. தேஷ் ராகத்தின் ஸ்வரங்களை அவர் இசைப்பதுபோலத் தீட்டப்பட்ட ஓவியங்கள் எனச் சந்தீப் கூறுகிறார். ரவிஷங்கரைப் பற்றிய காணொளியாக அல்லாமல் இதைச் சிதார் இசை பற்றிய படமாகப் பார்த்தால், ஹிந்துஸ்தானி இசையின் நளினங்களை இதில் உணர முடியும். தேஷ் ராகத்தில் மத்யமத்திலிருந்து காந்தாரம் வழியாக ரிஷபத்தை அடையும் பயணம் ராக லஷ்ணமாகும். இந்த மீண்ட் (கிட்டத்தட்ட கமகம்) இசையோடு மட்டுமல்லாது திரை ஓவியத்திலும் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது.

நாம் கேட்காத இந்த இசைக்கு ரே வரைந்த ஓவியங்கள் முகவரியை அளிக்கிறது. ரவிஷங்கரின் முக பாவங்கள் இருக்கும் இந்த ஓவியங்களில் தபலா வாசிப்பவரின் முகம் இல்லை. தபலா இருக்கிறது. அதை வாசிப்பவர் இல்லாததால் விரல் நுணுக்கங்களைக்கொண்டு நம்மால் அந்தக் கையின் சொந்தக்காரரை அறிய முடியவில்லை. ரவியுடன் நெருங்கிப் பழகியவரான அல்லா ராக்கா கானின் விரல்களாக இவை இருக்கலாமோ? தபலா வாசிப்பவரைக் காட்டாது சிதார் மேதையை மட்டும் வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும் எனும் ஆவலாகக்கூட இருக்கலாம். பாலசரஸ்வதி பற்றிய படத்தில் அவர் மிக வயதானவராக இருக்கிறாரே எனும் கேள்விக்கு ரே –‘பாலசரஸ்வதி பற்றிய டாக்குமெண்டரி இல்லாதிருப்பதைவிட வயதானத் தோற்றத்துடனான டாக்குமெண்டரி மேலானது,’ என்றார். அது போல, கலைஞரின் தோற்றம் முக்கியமல்ல அவரது ஆளுமை முக்கியம். தங்கள் கலையில் அவர்கள் லயிக்கும்போது ஆளுமை தானாகவே வெளிப்படும். அந்தக் கலைஞர்மீதான அபிமானம் அவரை இயக்கும் வல்லமையை அளித்துவிடும் என்பதாக ரே ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

சிதார் மேதையை மட்டுமே வரைந்திருப்பதற்கு நாம் வேறொரு காரணமும் சொல்ல முடியும். இப்படத்தின் மையம் என்பது இசைக் கச்சேரி அன்று. ஒரு தனித்துவமான இசைக்கருவி ஒரு தேர்ந்த கலைஞனைச் சந்திக்கும்போது இயல்பாக வெளிப்படும் லயம், மெல்லிசை போன்றவற்றின் சங்கமத்தைக் காட்சிப்படுத்துவதும் இந்தத் திரைப்படத்தின் நோக்கமாகும். ‘இசையின் ஸ்வரங்கள் காற்றில் சுழன்று செல்வதை நான் காணவேண்டும்,’ என ரே குறிப்பிடுகிறார். இந்தளவு நுணுக்கமாக ஒருவரைக் காட்சிப்படுத்தும்போது பிற அனைத்து முகங்களும் தேவையற்ற இடையூறுகளே என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

ரே இயக்கிய “Two” எனும் குறும்படத்தின் பின்னணி இசையுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம். இருவித வாழ்க்கைப் பின்னணியுடன் வளரும் குழந்தைகளின் உலகம் விளையாட்டுப் பொருட்களை ஒப்பிட்டுக்கொள்ளும் புள்ளியில் இணைகிறது. பணக்கார வீட்டுப்பிள்ளையின் பொம்மைகள் சாவி கொடுத்து வேலை செய்கின்றன. ஜம்பமாக ஒவ்வொரு பொம்மையாக அவன் எடுத்துக் காட்டும்போதெல்லாம் குடிசை வீட்டில் வாழும் சிறுவனின் முகம் இருளும். பொம்மைகளின் விசித்திர வகைகள் அவனுக்குள் பயத்தை உருவாக்கும். அப்போது வரும் பின்னணி இசை அந்தச் சிறுவனின் கையறு நிலையைக் கச்சிதமாகப் படம்பிடிக்கும். இத்தனைக்கும் தூரத்திலிருந்து மட்டுமே அவனது உருவம் தென்படும். முக பாவனைகளில் தெளிவு இருக்காது. சட்டென அவன் உள்ளே சென்று ஒரு குழலை எடுத்து ஓர் எளிமையான இசையை உருவாக்கிவிடுவான். அந்த நொடியில் பிற சத்தங்கள் நின்றுவிடும். மூன்று நோட்டுகள்கொண்டு இசையை அச்சிறுவன் வாசிக்கத் தொடங்கியதும் பணக்கார வீட்டுப் பிள்ளையால் அதை முதலில் புரிந்துகொள்ள முடியாது. அந்த மூன்று நோட்டுகள் மட்டுமே அவனைச் சாய்த்துவிடும். அப்படியே அவன் சோகத்தில் படுக்கையில் கவிழும்போது, காற்றடித்து அவனது பொம்மைகள் சரிந்துவிழும்.

இவனால் உருவாக்க முடியாத ஓர் உன்னதத்தை அந்த குடிசைச் சிறுவன் உருவாக்கிவிட்டான். ரே இசையமைத்த இந்தக் குறும்படம் கலையின் அசாத்தியமான சக்தியை நமக்கு உணர்த்துகிறது. அப்படி ஒரு தேர்ந்த ரசனைக்காரரின் கண்வழியே சிதார் மேதையின் இசை பற்றிக் காணமுடியாமல் போனது நம் துரதிஷ்டமே. ஒருவருக்கு ஒருவர் காட்டிய சினேகமும் அவர்கள் சார்ந்த கலைமீது கொண்டிருந்த அளவுக்கதிமான மரியாதையும் அவர்கள் சொல்லிமுடிக்காத கதையின் நீட்சியாக இன்றளவும் நிற்கிறது.

Satyajit Ray’s Ravi Shankar in Amazon

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.