தமிழில்: வெங்கட பிரசாத் (வி.பி)
முற்றுப் பெறாத கடிதம்
அம்மா,
நான் உங்கள் பாதம் தொடுகிறேன்
என்னை வாழ்த்துங்கள்
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை
நான் நலமாக இல்லை, அறவே இல்லை
அம்மா, நான் எல்லாவற்றையும் துறந்து விட்டு சென்றுவிடுவதா?
நான் எங்கே போவேன்? எனக்கு யார் உள்ளார்கள்?
நீயே சகோதரனின் வீட்டில் அகதியாய் இருக்கிறாய்..
உன் மருமகன் என்னை செருப்பால் அடிக்கப்போவதாய் எச்சரிக்கிறார்
நேற்றிரவு அலறவும் கத்தவும் செய்தார் – அதோடு
என்னை கடுமையாக அடிக்கவும் செய்தார்
இல்லை அம்மா, என்னை செருப்பால் அடிக்கவில்லை
ஆனால் நிச்சயமாக அடிப்பதாய் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது
நான் ஏன் திருமணம் செய்துகொண்டேன், அம்மா ?
நேர்த்தியான பெனாரஸ் புடவை, சந்தனம், குங்குமம்
என்று அலங்கரித்திருந்தாலும்
நான் அடிமையாகத்தான் மாற வேண்டியவளா?
பதினைந்து ஆண்டுகள் ஆகிறது..
அவருக்கு பணிவிடை செய்து வருகிறேன்
அவருடைய முழு சம்பளமும் எங்கே போனது
என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்
தெரிந்துகொள்ள உரிமை இருப்பதாக நினைத்தேன்
அந்த கேள்வி மட்டுமே போதுமாயிருந்தது
என்னை செருப்பால் அடிக்கப்போவதாக
என்று அவர் எச்சரிப்பதற்கு
பாப்லுவும் முன்னாவும் இன்னும் சிறுவர்கள் தானே
அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?
என் கட்டுப்பாட்டில் இருக்கும் வீடு எது?
திருமணத்திற்கு பின் வந்த வீடா அல்லது முந்தையதா?
அம்மா, நான் எங்கே போவேன் ?
இல்லையென்றால்
மெளனமாக
அனைத்தையும் சகித்துக் கொண்டு
சமையல் செய்தும்,
பாத்திரங்களைக் கழுவியும்
தொடர்ந்து இதே போல் பணியாற்றி
தலைச்சிறந்த பெண் என்று
என் வாழ்வை வாழ்வதா?
அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?
(Translated by C.S.Lakshmi from the Hindi translation of the Bengali original Ekti Samanya Chitti (An Ordinary Letter) in Sahastini Ke Rayecho Sajo (Courageous Woman, if You are There, Get Ready) Kolkata, Ananda Publishers, 2001. )
நெருப்பில் சோதனைக்குப் பின் பாதாள உலகில் நுழை
தொடக்கத்தில், அவநம்பிக்கை இருக்கிறது –
பிற ஆணின் தொடுகையால் அவள் களங்கப்பட்டாள் என்று.
ஏற்றுக்கொள்ளும் செவிகளில் அதை கிசுகிசுக்கவும்,
வதந்தி பரவட்டும்
காற்றினால் சுமக்கப்பட்டு, அக்கதை வேரூன்றும் –
ஒரு பெண்ணின் கதை
அலர்களால் அழிக்கப்பட்டது
பிற ஆண்களால் தீண்டிய பெண் என்ற
கிளுகிளுப்பூட்டும் கற்பனை கதைகள்.
பின் அவளை அக்கினியில் இடுங்கள்
கடும் மன வாதையில் வாட்டி
தாங்கொணாத்துயரில் தள்ளுங்கள்
மண்ணெண்ணெயை அவள் மீது ஊற்றி
ஒரு தீக்குச்சி கிழித்து
அமைதியான, மஞ்சள் ஜுவாலையைப் படர விடுங்கள்
நெருப்பில் சோதனை என்றே அது அறியப்படும்
சித்ரவதை செய்யப்பட்டு எரிந்த அவள் உடல்
எண்ணற்ற இரவுகளால் விரும்பப்பட்ட அவள் உடல்
ஒரு கல்லறைக்காக பூமியை தோண்டுங்கள்
பள்ளத்தாக்கினைப் போல் மிக ஆழமாக
அக்குழியில் அவளைப் புதைத்து
அதற்கு ஒரு பெயரிடுங்கள் –
பாதாள உலகத்தில் நுழையட்டும்
மகாகாவியங்களின் மகத்துவம்
அனைத்து திசைகளிலும் சூழட்டும்
சுண்டி இழுக்கும் ஒரு உடன்கட்டை ஏறுபவள் கதையை
எந்தையின் தேசத்தில்
புகழ் ஓங்கும் பாரத தேசத்தில்
(Translated by C.S.Lakshmi from the Hindi translation of the Bengali original, Dako Agni Parkha in Onyo Manesko Batos O Khola Pata (Unmindful Wind and Open pages), Kolkata, Ananda Publishers, 1999. )
பெண் உடல்
ஒரு இறந்த உடல் களைகளில் சிக்கியுள்ளது
குளத்தின் கரைக்கு அருகில்
ஒரு இறந்த பெண்ணின் சடலம்
அங்கே சிக்கிருக்கிறது
விடுப்பட முடியாமல்
அவள் முகம் தன் குழந்தைகளை நோக்கி திரும்பிருக்கிறது
அவள் முகம் ஆண்களை நோக்கி திரும்பிருக்கிறது
அவளை வன்முறையால் அழித்த அதே ஆண்கள்
அவள் முகம் அவர்களை நோக்கியே திரும்பிருக்கிறது
அன்பும் சுய மரியாதையும் எதிர்பார்த்த அவள் முகம்
இப்பொழுது வாழ்க்கையை நோக்கி திரும்பிருக்கிறது
ஒரு இறந்த உடல் களைகளில் சிக்கியுள்ளது
குளத்தின் கரைக்கு அருகில்
ஒரு இறந்த பெண்ணின் சடலம்
அங்கே சிக்கிருக்கிறது
விடுப்பட முடியாமல்
(Translated by C.S. Lakshmi from the Hindi Translation of the Bengali Original, Meyer Manusher Lash in Nabani Nishir Gan (Song of the Ninth Night), Kolkata, Binodon, 2001.)

ஸ்பாரோ / SPARROW – Sound & Picture Archives for Research on Women