காளியின் குழந்தை ராம்பிரசாத்

ஜடாயு

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் தொகுப்பை வாசித்தவர்களுக்கு ராம்பிரசாத் என்ற பெயர் மிகவும் பரிச்சயமான ஒன்று. தனது பூஜையிலும் ஆன்மீக சாதனைகளின் போதும் குருதேவர் தக்ஷிணேஸ்வரத்துக் காளியின் சன்னிதியில் ராம்பிரசாதின் வங்கமொழிப் பாடல்களை மனமுருகப் பாடுவார். பக்தர்களுடன் இருக்கையில், ராம்பிரசாதின் பாடல்களைப் பாடிக்கொண்டே மெலிதாக அசைந்து நடனமும் ஆடுவார், அதன் மத்தியிலேயே “பாவ சமாதி” எனப்படும் ஆழ்ந்த பரவச நிலைக்குச் சென்றுவிடுவார். குருதேவரின் ஆன்மீக தாகத்திற்கும், உணர்ச்சி ததும்பும் மனநிலைக்கும் உற்ற துணையாக ராம்பிரசாதின் பாடல்கள் இருந்தன என்பது அவரது வாழ்க்கைச் சரிதத்திலிருந்து தெரியவருகிறது.

கேள் ஓ மனமே
நீ விரும்பும் எந்த விதத்திலும்
காளியைத் தொழுக

குரு அளித்த மந்திரம் நாளும் ஜபித்து
படுத்துக் கிடப்பதே நமஸ்காரமாகுக
உறக்கமே அன்னை மீது உயர் தியானமாகுக
ஊரில் சுற்றியலையும்போது
அன்னை சியாமாவுக்குத் திருவலம் என்றெண்ணுக

காதால் கேட்பதெல்லாம்
மாதாவின் மந்திரங்கள்
ஐம்பது அட்சரங்களிலும் காளியே உருக்கொண்டாள்
ஒவ்வோர் எழுத்தும் ஓரோர் திருநாமம்

ராம்பிரசாத் உவகையுடன் சொல்கிறான்:
அனைத்திலும் நிறைந்திருக்கிறாள்
பிரம்மமயி.
உண்கையில் அன்னைக்கு ஆகுதி என்றெண்ணுக.

(ओरे मन बलि भज काली इच्छा हय जे आचारे என்ற பாடல்.)

வங்கத்தின் மகத்தான சக்தி உபாசகர், பக்திக் கவிஞர் ராம்பிரசாத். (1723-1803.) பிளாசி யுத்தம் முடிந்து வங்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக நிலைகொள்வதற்குச் சற்று முன்பாக, பிரிட்டிஷாரின் அதிகாரத்திற்குட்பட்டு நவாப்கள் ஆட்சிசெய்துகொண்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் பிறப்பதற்கு சுமார் நூறாண்டுகள் முன்பு, கல்கத்தாவிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள 24 பராகனாஸ் மாவட்டத்தில், நவத்வீபத்திற்கு அருகில் கல்விச் சிறப்புக்குப் பெயர்பெற்ற குமார்ஹத்தா என்ற கிராமத்தில் ராம்ராம் சேன், சித்தேஸ்வரி தம்பதியருக்கு மகனாக ராம்பிரசாத் பிறந்தார். தந்தையார் சிறந்த ஆயுர்வேத வைத்தியர். தாந்திரீக உபாசகரும்கூட. சிறுவயதில் கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்ற ராம்பிரசாத் ஆயுர்வேதத்தில் ஆர்வம் காட்டவில்லை. 22 வயதில் சர்வாணி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தார்கள், நான்கு குழந்தைகளும் பிறந்தன. ஆயினும் ராம்பிரசாத் வழக்கமான லௌகீக குடும்பஸ்தர்போல “பொறுப்பாக” இல்லாமல், நதிக்கரைகளில் திரிதல், குலகுருவிடம் பெற்ற மந்திர தீட்சையின்படி, தனிமையில் அமர்ந்து தியானித்தல் என்று விட்டேற்றியாக இருந்தார். அந்நிலையில், அந்த ஊருக்கு வந்த ஆகமவாகீசர் என்ற ஆசாரியர், ராம்பிரசாதின் ஆன்மீக நாட்டத்தை அறிந்து அவருக்கு மந்திரங்களையும் உபாசனைகளையும் கற்பித்தார். அதோடு, அருகிலிருந்த கிராமத்தின் ஜமீன்தார் ஒருவர் வீட்டில் கணக்கெழுதும் உத்தியோகமும் கிடைத்தது.

கணக்கெழுதும் பணிக்கு இடையிடையில் தன்னை மறந்து ராம்பிரசாத் தியானத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்துவிடுவதும் நடந்துவந்தது. யதேச்சையாக ஒரு நாள் ஜமீன்தார் கணக்குப் பேரேடு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், வழக்கமான கணக்கு வழக்குகளுக்கிடையில் கீழ்க்கண்ட வாசகங்களும் எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்.

உனது பொக்கிஷதாரன் எனும் பதவியை
தாயே எனக்குக் கொடு
உனது பாதமெனும் பொக்கிஷத்தை
கண்டவர்களும் கொள்ளையடிப்பது
எனக்குச் சகிக்கவில்லை

மறதிக்காரரான திரிபுராரி உனது காரியஸ்தர்
அந்த சிவனார் இயல்பிலேயே தாராளமானவர்
ஊதாரியும்கூட
ஆயினும் உன் பொக்கிஷத்தை
அவரது பொறுப்பில் வைத்திருக்கிறாய்
பாதி உடலை அளித்தாய்
எவ்வளவு அதிமான ஊதியம்.

நான் ஊதியமேதும் இல்லாமல்
உன் பணியாளனாக இருப்பேன்.
உனது கால் தூசி மீதான உரிமை மட்டும் எனக்குப் போதும்

உனது தந்தையின்* வழிகளைக் கடைப்பிடிப்பாயானால்
நான் தோற்றேன்.
என் தந்தையின் வழிகளைக் கடைப்பிடிப்பாயானால்
நான் உன்னை அடையக்கூடும்
பிரசாத் கூறுகிறான்:
இந்தப் பதவியின் தொல்லைகளால்
நான் சலித்துவிட்டேன்
ஆனால் உன் திருவடி மட்டும் கிடைக்குமெனில்
என் கஷ்டங்களை எல்லாம் கடந்துவிடுவேன்.

(आमाय दाओ मा ताविलदारी என்ற பாடல்.)

[* உனது தந்தை – பார்வதியின் தந்தையான ஹிமவான். மலைபோன்ற, கல்போன்ற மனம்கொண்ட என்ற பொருள்.]

பாடலை வாசித்து மெய்சிலிர்த்த ஜமீன்தார், தன்னை மறந்து ராம்பிரசாத் தான் இயற்றிய பாடல்களைப் பாடுவதையும் கேட்டு மேலும் பரவசமடைந்தார். பணிச்சுமைகளிலிருந்து விடுவித்து, அவருக்குத் தொடர்ந்து சன்மானமும் ஆதரவும் அளித்துவந்தார்.

குடும்ப பாரத்தைப் பற்றிய கவலைகள் குறைந்த நிலையில், ராம்பிரசாத்தின் இதய கங்கையில் அன்னை காளியின்மீதான அன்பின் வெள்ளமாகப் பாடல்கள் பிரவாகிக்கத் தொடங்கின. கங்கை நதி ஓட்டத்தில் நின்றுகொண்டு இப்பாடல்களை அவர் பாடுவதைக் கேட்கும் படகுக்காரர்களும், படித்துறைகளுக்கு வரும் மக்களும் பக்தி உணர்வில் தோய்ந்தனர். ஒருமுறை அந்தப் பக்கமாக படகில் வந்த நவத்வீபத்தின் சிற்றரசர் மஹாராஜா கிருஷ்ணசந்திரர் ராம்பிரசாதின் பாடல்களைக் கேட்டு பரவசமடைந்தார். பல கலைஞர்களையும், அறிஞர்களையும் ஆதரித்துவந்த அவர் தனது சபையை அலங்கரிக்க வேண்டும் என்று ராம்பிரசாதிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் ராமபிரசாதிற்கு அரசவைக்குச் செல்வதில் சிறிதும் நாட்டமில்லை. எனவே, 40 ஏக்கர் (100 Bhigas) நிலத்தைச் சன்மானமாக ஏற்குமாறு மகாராஜா கோரினார். இதனால் ராம்பிரசாதின் குடும்பம் கவலைகளினின்று நிம்மதியாக வாழ்க்கை நடத்தும் சூழல் உருவாயிற்று.

ராம்பிரசாத் மேலும் தீவிரமாக தனது ஆன்மீக சாதனைகளில் மூழ்கினார். தாந்திரீக நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளபடி, தனது கிராமத்தின் அருகில் உள்ள காட்டில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து மரங்கள் நெருங்கிச் சூழ்ந்த “பஞ்சவடி” எனப்படும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கு ஐந்து மண்டை ஓடுகளால் அமைக்கப்பட்ட பஞ்சமுண்டி ஆசனம் என்ற பீடத்தில் அமர்ந்து, காட்டில் கிடைக்கும் காய், கனிகளையே உண்டு தீவிரமான தியானப் பயிற்சிகளில் ஈடுபட்டார் (பாம்பு, தவளை, முயல், நரி, மனித மண்டை ஓடுகளால் ஆன ஆசனம்). பின்பு நள்ளிரவில் இடுகாட்டில் அமர்ந்து மேலும் தீவிரமான தாந்திரீக சாதனைகளையும் அவர் செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது பாடல்களில் காணப்படும் உக்கிரமான உருவகங்கள், அவற்றைப் பொதுவான பக்திப் பாடல்களிலிருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. அவரது தாந்திரீகப் பின்னணியின் அடிப்படையிலேயே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு, இந்தப் பாடல்:

இம்முறை, காளி
உன்னை முழுதாக விழுங்கிவிடுவேன்

கெட்ட நட்சத்திரத்தில் தான் பிறந்தேன்
அப்படிப் பிறந்தவன்
தாயை விழுங்கிவிடுவான் என்று சொல்வார்கள்
நீ என்னை விழுங்க வேண்டும்
அல்லது நான் உன்னை
இரண்டில் ஒன்று நடந்தாக வேண்டும்

என் கைகள் கருப்பாகும்**
முகத்தில் கரிபூசிக் கொள்வேன்
உடலெங்கும் கருமையை எடுத்து அணிவேன்
காலன் என்னிடம் வரட்டும்
அவன் முகத்திலும் கரிபூசுவேன்

உன்னை உண்டு விடுவேன்
ஜீரணிப்பேனோ?
இதயத்தில் நிலையாக நிறுத்தி
என் அகத்தை உனக்கு பலியாக்குவேன்

காளியை உண்டு
அவள் கணவன் காலகாலனின்
கடுங்கோபத்திற்கு ஆளாவேன்
என்கிறார்கள்
எனக்கு பயமில்லை
அவனது ஆங்காரத்தின் எதிர்சென்று
என் அன்னையின் திருப்பெயரைக் கூவுவேன்

வருவது வரட்டும்
உண்டு விடுவேன்
உன்னையும் உனது கணங்களையும்
அல்லது அம்முயற்சியில்
என் உயிரை விடுவேன்.

[** காளி – காலீ – கருமை என்றும் பொருள்; காலன் என்பதன் பெண்பாலும்கூட]

(ए बार काली तोमार खाबो என்ற பாடல்.)

ராம்பிரசாத்தின் தாந்திரீக சாதனைகளின் ஊடாக, பல்வேறு தெய்வீக அனுபங்களும், தேவியின் பல்வேறு விதமான ஸ்வரூபங்களின் தரிசனமும் அவருக்கு சித்தியாயிற்று. ஒருமுறை அவர் வீட்டுத் தோட்டத்தின் வேலி முறிந்துவிட்டது, தனது மகள் ஜகதீஸ்வரி ஒரு பக்கமாக அதை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்க, பாடிக்கொண்டே ராம்பிரசாத் அதைச் சரிசெய்துகொண்டிருந்தார். நடுவில் ஏதோ வேலைக்காக மகளை அவளது அம்மா அழைக்க, அவள் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்துத் திரும்பிவந்து பார்க்கையில், வேலி முழுதாக சரிசெய்யப்பட்டிருந்தது. மகளுக்கு ஒன்றும் புரியவில்லை, யார் இவ்வளவு நேரம் இதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தது என்று கேட்டாள். நீதானே அம்மா என் பாட்டைக் கேட்டுக்கொண்டே புன்முறுவலுடன் அங்கு நின்றுகொண்டு அதைப் பிடித்துக் கொண்டிருந்தாய்? என்றார் ராம்பிரசாத். மகள் நடந்தததைச் சொல்ல, தேவியின் தரிசனமே மகள் உருவில் தனக்குக் கிடைத்ததாக எண்ணி மெய்சிலிர்த்தார்.

இன்னொரு சமயம் நதியில் நீராடச் செல்கையில் பேரழகு வாய்ந்த ஒரு பெண் உன் பாடலைக் கேட்க வேண்டும், பாடுகிறாயா என்று கேட்டாள். நீராடிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்க்கையில், அந்தப் பெண்ணைக் காணவில்லை. எதிரே இருந்த கோயிலின் சுவரில், “நான் அன்னபூரணி; உன் பாடலைக் கேட்கவே இங்கு வந்தேன். காசியில் வந்து என்னைப் பாடு” என்ற வாசகங்கள் தென்பட்டது. அதனைத் தெய்வீக ஆணையாக ஏற்று, காசிக்குப் புனிதப் பயணம் கிளம்பிய ராம்பிரசாத் வழியில் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் நீராடினார். அங்கு பாடல்கள் பிரவாகமாக அவரது மனதில் பொங்கி வந்தன. நீ இங்கிருந்து பாடியதே போதுமானது, காசிவரை வர அவசியமில்லை என்று தேவி கனவில் வந்து கூறியதாகவும், அதனால் அங்கிருந்தே ராம்பிரசாத் ஊர் திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது.

சிவனாரின் நெஞ்சில் காலூன்றி நிற்கும் தட்சிண காளியின் திருவுருவம் கட்டற்ற ஆன்மீக சுதந்திரத்தின் உருவகமாகவே உபாசகர்களால் கருதப்பட்டது. சடங்குகளையும் விதிமுறைகளையும்விட, மனத்தூய்மையும் ஏகாக்ரதையுமே காளி உபாசனையில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டன. “வீர” என்று சொல்லத்தக்க மனத்துணிவும், ஆண்மையும், மனவலிமையும் கொண்டவர்களே அன்னை காளியை அச்சமின்றி உபாசிக்க முடியும் என்று தாந்திரீக நெறிநூல்கள் கூறுகின்றன.

சிவனின் மனையாள் தான் என் அன்னை
ஆயினும் அனைத்தையும் அழிக்கும் காலதேவனும்
அடிபணிந்தாக வேண்டும் அவளிடம்

அகிலமெங்கும் திரிவாள்
ஆடைஅணிகலன் ஏதுமின்றி
அரக்கப் பகைகளை அடர்ப்பாள்
அரன் நெஞ்சகம் மீது நிமிர்ந்து நிற்பாள்
கணவன் திருமேனி மீது காலூன்றி
என்ன ஒரு விசித்திரமான மனையாள்

ராம்பிரசாத் சொல்கிறான்:
எல்லா விதிகளையும் சட்டங்களையும் தகர்த்தெறியும்
என் அன்னையின் விளையாட்டு
ஓ மனமே எப்போதும் தூய்மையையே நாடு
அது எவ்வளவு கடினமான போதும்
அப்போது உனக்குப் புரியும் அன்னையின் வழிகள்.

(शे की शुधु शिवेर सती என்ற பாடல்.)

ராமபிரசாதின் வாழ்க்கையில் வேடிக்கையும் வினோதமும் கலந்த அம்சம் என்பது அஞ்சு கோன்ஸாயி என்ற கவிஞருடன் அவருக்கிருந்த தொடர்பு. ராம்பிரசாதின் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வந்த வைணவரான அஞ்சு கோன்ஸாயி கவிதை புனையும் ஆற்றலும் கொன்டிருந்தார். ராம்பிரசாதின் தீவிரமான பாடல்களைச் சற்றே உருமாற்றி அவர் வேடிக்கையான பாடல்களாக ஆக்கிவந்தார்.

காளியின் நாமத்தைச் சொல்லிக் கொண்டு,
ஓ மனமே, இதயத்தின் அடியாழத்தில் மூழ்கிவிடு
விலைமதிப்பற்ற மணிகள் மறைந்துள்ளன அங்கே..

என்ற ராம்பிரசாதின் பாடலை,

ஓ மனமே, அடிக்கடி மூழ்காதே
எங்கு மூச்சுத்திணறல் வருமென்று தெரியாது
உனக்கோ எப்போதும் ஜலதோஷம் வேறு பிடிக்கும்..
ஜுரமும் வந்துவிட்டால், ஓ மனமே,
மரணத்தின் வாயிலுக்குத் தான் நீ செல்ல வேண்டும்..

என்று அஞ்சு கோன்ஸாயி மாற்றிப் பாடுவார். ஆனால், அந்தப் பாடலையும் கடைசியில்,

அதிகப் பேராசை துன்பத்தையே கொண்டுவரும்
அனாவசியமாக கஷ்டப்படாதே
ஓ மனமே, மூழ்கவேண்டாம்,
மிதந்துகொண்டே இரு,
‘சியாம’ எனும் படகை மட்டும் உறுதியாகப் பற்றிக்கொள்.

என்று இப்படியாக முடித்து விடுவார்.

[‘சியாம’ – சியாமா என்ற காளி, சியாமன் என்ற கிருஷ்ணன் இருவரையுமே குறிக்கும்.]

அஞ்சு கோன்ஸாயியின் பாடல்களில் வேடிக்கைத் தொனியே அதிகம் இருந்தாலும், ஆங்காங்கு ஆன்மீகக் கீற்றுகளும் மின்னல்போலத் தென்படுகின்றன. இவற்றால் சிறிதும் கோபமடையாமல் இந்தப் பாடல்களையும் ராம்பிரசாத் மிகவும் ரசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.

ராம்பிரசாதின் ஆன்மீக சாதனைகளுக்கு மிகவும் உறுதுணையாக அவரது மனைவி சர்வாணியும், மக்களும் இருந்தனர். மஹாராஜா கிருஷ்ணசந்திரரிடம் தொடர்ந்து நட்புப் பூண்டிருந்த ராம்பிரசாத், மன்னர் மரணப் படுக்கையில் இருந்தபோது, அவரது அருகிருந்து தேவியின் புகழ்மாலைகளைத் தொடர்ந்து பாடி அவரை உய்வித்தார்.

வருடாவரும் நவராத்திரியின்போது துர்கா பூஜையையும், தீபாவளியின்போது காளி பூஜையையும் அவர் மிக விமரிசையாகத் தனது கிராமத்தில் கொண்டாடிவந்தார். அப்படி ஒரு தீபாவளி தினத்தன்று, பூஜைகளெல்லாம் முடிந்து வழக்கம்போல கலசத்தைத் தாங்கி விசர்ஜனத்திற்காக நதிக்குள் இறங்கிச் சென்ற ராம்பிரசாத், உச்சஸ்தாயியில் அன்னையின்மீது நான்கு பாடல்களைப் பாடி முடித்தபின்பு அப்படியே நீரில் அமிழ்ந்து ஜல சமாதியாகிவிட்டார். வாழ்க்கை முழுவதும் அன்னையின் பேரன்பு என்னும் பூரணத்துவத்தில் திளைத்து வந்தவர் பூரணமெய்தினார். கீழ்க்காணும் அற்புதமான பாடலில், காளி என்னும் சிறுமியின் பட்டம்விடும் விளையாட்டில் அறுத்துக்கொண்டு ஓடிவிட்ட பட்டமாக, ஆன்மீக விடுதலையை நோக்கிய அவரது பயணம் நிறைவு பெற்றுவிட்டது.

உலகமெனும் இரைச்சல்மிகு சந்தையில்
ஓ சியாமா, பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறாய் நீ.
நம்பிக்கையெனும் காற்றின் மீதேறி
மாயையின் நூலிழைகள் பிடித்து நிற்க
மேலே மேலே அவை வானில் உயர்கின்றன.

எலும்புச் சட்டகக் குச்சிகள் இட்டு
முக்குணத் துணியில் செய்த பட்டங்கள்.
அவற்றின் செய்நேர்த்தியெல்லாம்
வெற்று அலங்காரமாய் விட
பட்டத்தின் நூலிழைகளில்
லௌகீகமெனும் மாஞ்சாப் பசையை அன்றோ
பூசி விட்டிருக்கிறாய் நீ.

ஒவ்வொரு நூலிழையும்
அவ்வளவு கூர்மை அவ்வளவு கெட்டி.
அந்த நூறு ஆயிரம் பட்டங்களில்
அதிகபட்சம் ஒன்றிரண்டு
அறுத்துக் கொண்டு போய் விடுகின்றன.
அன்னையே, அவற்றைக் கண்டு பூரித்து
கைகொட்டிச் சிரிக்கிறாய் நீ.

ராம்பிரசாத் சொல்கிறான்:
காற்று மட்டும் சரியாயிருந்தால்
அறுந்த பட்டம் அதிவேகமாக
உலகெனும் பெருங்கடல் தாண்டி
அனந்தத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டுவிடும்.

(श्यामा मा उडाछो घुडि என்ற பாடல்.)

பின்குறிப்பு:
கட்டுரையில் உள்ள பாடல்களின் தமிழாக்கம் அனைத்தும் கட்டுரையாசிரியரால் செய்யப்பட்டது.

உதவிய நூல்கள்:
Ramaprasad, the Melodious Mystic – Swami Budhananda, Advaita Ashrama publication (1982).

One Reply to “காளியின் குழந்தை ராம்பிரசாத்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.