கல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020

இந்தியாவின் முக்கியமான இரண்டு புத்தகச் சந்தைகள் நேஷனல் புக் ட்ரஸ்ட் நடத்தும் புதுதில்லி உலக புத்தகச் சந்தையும் கொல்கத்தா புத்தகச் சந்தையும் என்பது  பரவலாக அறியப்பட்ட செய்தி. சென்னை புத்தகச் சந்தை இவற்றுக்கு நிகரான வாசகர் வருகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று பல ஆண்டுகளாக பேசிவருகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய அழைப்பை ஏற்று புத்தகச் சந்தைக்கு வந்த  மலையாள  எழுத்தாளர் சக்கரியா, மக்கள் வெள்ளத்தைப் பார்த்துவிட்டு அசந்துபோய், ‘சென்னை புத்தகச் சந்தை புத்தகங்களின் கும்பமேளா’  என்று ஒரு டிவிட்டை தட்டிவிட்டார்! ஒரு புத்தகச் சந்தைக்கு மதிப்பைக் கூட்டும் கூறுகளில் வாசகர் வருகைக்கும் விற்பனைக்கும் முக்கிய இடமுண்டு. ஆனால் அவை மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டுத் தளத்திலும் அது மிளிர வேண்டும்.

தில்லி புத்தகச் சந்தைக்கு 2001 முதல் பலமுறை காலச்சுவடு அரங்கமைத்திருக்கிறோம். ஆனாலும் நேரில் பார்த்து என் கருத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கொல்கத்தா புத்தகச் சந்தைக்கு கடந்த ஆண்டுவரை போனது இல்லை. அங்கு வர்த்தகத்திற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் காலச்சுவடுக்கு செலவு வைக்காமல் போய்வரும் வாய்ப்புக்காக காத்திருந்தேன்.

2019இல் தில்லியில்  பிரெஞ்சு தூதரகத்தின் புத்தகப்பிரிவினர் இரு நாள் கருத்தரங்கிற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். 2020 பாரிஸ் புத்தகச்சந்தையில் இந்தியா சிறப்பு விருந்தினர் என்றும் 2021இல் தில்லி புத்தகச்சந்தையில் பிரான்ஸ் சிறப்புவிருந்தினர் என்றும் திட்டம் இருந்தது. இதன் பின்புலத்தில் பிரான்ஸ் புத்தகச்சூழல் பற்றி ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு அது. அதில் பிரெஞ்சு பதிப்புத்துறையுடன் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள அழைத்திருந்தார்கள். இந்த கருத்தரங்கிற்கு ஜாதவ்பூர் பல்கலையின் பதிப்புத்துறை பொறுப்பாளர் பேராசிரியர் அபிஜித் குப்தாவும் வந்திருந்தார். என்னுடைய உரை முடிந்த பின்னர் ஜாதவ்பூர் வந்து மாணவர்களுடன் கலந்துரையாட அழைத்தார். 

இரண்டு நிபந்தனைகளுடன் வருவதாகச் சொன்னேன். ஒன்று கொல்கத்தா புத்தகச்சந்தை நடக்கும்போது அழைக்கவேண்டும். இரண்டு ஒருவாரம் விருந்தினர் விடுதியில் தங்க அனுமதிக்கவேண்டும். உடன் ஏற்றுக்கொண்டார்.

2020 பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் கொரோனாவின் பிடிக்குள் இந்தியா நுழைந்துகொண்டிருந்த வேளையில் கொல்கத்தா சென்றேன். (திரும்பும் வழியில் கொச்சி விமானமுனையத்தில் விமானம் மாறுகையில் கெடுபிடி உச்சத்திலிருந்தது அதிர்ச்சியாக இருந்தது.)

மாணவர்களுடன் இரண்டு நாள்கள் வகுப்புகள் இருந்தன. ‘எனது பதிப்புத்துறை அனுபவங்கள்’, ‘படைப்புரிமையின் வர்த்தகம்’ ஆகிய இரண்டு பொருட்களில் உரையாற்றினேன்.

அதன் பின்னர் இரண்டு நாட்கள் புத்தகச்சந்தைக்குப் பயணம். நகரில், பல்கலை ஒரு பக்கம் சந்தை ஒரு பக்கம். ஜாதவ்பூர் பல்கலையின் பதிப்புத்துறையும் சந்தையில் ஒரு அரங்கை எடுத்திருந்தார்கள். எனவே ஒரு வாகனம் காலை சுமார் பத்துமணி அளவில் கிளம்பும். அதில் ஏறிக்கொள்வேன். ஒரு மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்து போய்சேருவோம்.

2020 கொல்கத்தா புத்தகச்சந்தைக்கு 44வது ஆண்டு. புத்தகச் சந்தையில் தரை மேவப்பட்ட மைதானத்தில், சில கூடாரங்கள், தெரு ஓரக்கடைகள் என்ற இரு மாதிரிகளில் கடைகள் உருவாக்கப்படுகின்றன. கட்டண வேறுபாடு உண்டு. தெருவோரக்கடைகளில நிரந்தரக் கடைகள் போல ஒவ்வொன்றிற்கும் பாதுகாப்புக்கு கிரில் கதவுகள் வைத்து உருவாக்கப்படுகின்றன. விரும்பினால் கடைகளை அவரவர் விருப்பப்படி கட்டமைத்து அலங்கரித்துக்கொள்ளலாம். குழந்தை பதிப்பாளர்களுக்கு தனிக்கூடாரம். 

சந்தைக்கு அரசு ஆதரவு உண்டு. அரசின் மைதானத்தில் நடக்கிறது. முன் தயாரிப்பு ஒரு மாதகாலம். சலுகை கட்டணம் இல்லாமல் இதையெல்லாம் செய்வது சாத்தியம் இல்லை. வருகைதருவோருக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பை அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. அரசு ஒரு அரங்கையும் எடுத்து பகட்டாக நிர்மாணித்திருந்தது. தேடித்தேடி பார்த்தும் மம்தாவின் புகைப்படம் கண்ணில்படவில்லை. பதிப்பாளர் கூட்டமைப்பின்  தலைவரைச் சந்தித்துப் பேசுகையில் ‘திதி’யுடன் அவருக்கு அனுசரணையான உறவு இருந்ததை அறிந்துகொண்டேன்.

சந்தையில் நடக்க, நிற்க, அமர நிறைய இட வசதி உள்ளது. உள்ளே நுழையக் கட்டணம் இல்லை. பல பக்கங்களிலிருந்தும் உள்ளே நுழையலாம். நல்ல பாதுகாப்பு உள்ளது. உள்ளே நுழையும் அனைவருக்கும் பெரிய பலவண்ண வரைபடம் வழங்கப்படுகிறது. விரும்பும் கடைகளை எளிதில் கண்டுபிடிக்க ஆப்(app) வசதியும் உள்ளது.

புத்தகச் சந்தையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இசை, நடனம், நூலறிமுகம். தனியார் அரங்குகளிலும் நடக்கின்றன. அவையும் பொது ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்படுகின்றன. பேருரையாற்றும் பொது மேடை இல்லை.

புத்தகச் சந்தை நிர்வாகம் நடத்தும் ஒரு இலக்கியவிழா ஏழு ஆண்டுகளாக தனிக் கூடாரத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பெருந்தொற்றால் மரணமடைந்த சௌமித்ரா சட்டர்ஜீதான் கடந்த ஆண்டு விழாவைத் தொடங்கிவைத்தார். ‘தாதா’ ‘தாதா’ என்று அனைவரும் அவர்மேல் அன்பையும் மரியாதையையும் பொழிந்துகொண்டிருந்தார்கள். விழாவில் பன்னாட்டுப் பங்கேற்பு உண்டு. 2020இல் சிறப்பு விருந்தினராக ருஷ்யா கலந்துகொண்டது. பிரெஞ்சு பண்பாட்டு நிறுவனம் ஷோபா சக்தி உட்பட சில பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர்களை இவ்விழாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள். இதுபோல பல நாடுகளும்.

தமது புத்தகச்சந்தைக்கு ஆதரவு திரட்டவும் பன்னாட்டு பங்கேற்பை வேண்டவும் ஃபிராங்பர்ட் புத்தகச் சந்தைக்கு வருகைதரும் நிர்வாகத்தின் பார்வை தொலைநோக்குடையது. அரசின் தலையீடு இல்லாத ஆதரவு தொடர்ந்தால் இன்னும் செழித்து வளரும் சாத்தியம்  கொண்டது கொல்கத்தா புத்தகச் சந்தை.

கண்ணன் சுந்தரம்

(காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.