கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை

This entry is part 9 of 48 in the series நூறு நூல்கள்

தமிழில் : B.R. மகாதேவன்

(மரிச்ஜபி படுகொலை பற்றிய ‘தி ப்ளட் ஐலண்ட்’ எனற நூலில் இருந்து முன்னுரையும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமும்.)

அகதிகளைக் குடியமர்த்துவதென்பது எளிய விஷயம் அன்று. பங்களாதேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு கூட்டம் கூட்டமாக, லட்சக்கணக்கில் வந்து குவிந்தவர்களை எப்படித்தான் கையாளுவது? அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பங்களாதேச இந்து அகதிகளை தண்டகரண்ய முகாமில் (ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர், மத்யபிரதேசம் மாநிலங்களில் இருந்தது) கால்நடைகளைக் கொட்டிலில் அடைப்பதுபோல் மிக மோசமான நிலையில் வாழவைத்தன. எதிர்கட்சியாக இருந்தபோது இடதுசாரிக் கட்சியினர் அந்த அகதிகளைப் பார்த்து ஆறுதல் சொன்னார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகதிகள் அனைவரையும் மேற்கு வங்கத்துக்கு அழைத்து வசதிகள் செய்து தருவதாகச் சொன்னர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியைக் கைவிட்டனர்.

மலின அரசியலினாலும் தண்டகாரண்ய அகதி முகாம்களின் பரிதாபகரமான நிலைகளினாலும் மனம் வெறுத்துப் போயிருந்த சில அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தர்வனங்களில் இருந்த சிறிய மரிச்சபி தீவுக்குச் சென்று குடியேறினர்.

கங்கைச் சமவெளியில் அமைந்திருக்கும் சுந்தரவனப் பகுதியானது உலகிலேயே மிக மிகப் பெரிய சதுப்பு நிலக்காட்டுப் பகுதியாகும். இந்தியா, பங்களாதேசம் என்ற இரண்டு தேசங்களிலுமாக அது பரந்து இருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பானது இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது. பிரம்மபுத்திரா, கங்கை, மேக்னா, பத்மா என நான்கு பெரும் நதிகளால் உருவாக்கப்பட்ட சதுப்பு நிலம் இது.

சுமார் 18 மாத காலம் அந்த சதுப்பு நிலச் சகதித் தீவை வாழிடமாக ஆக்கிக் கொண்டிருந்தனர். அந்த பதினெட்டு மாத காலமும் அரசாங்கமானது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டும் வந்தது.

அரசாங்கத்திடம் அகதிகள் பண உதவியோ பிற எந்தவொரு உதவியோ கேட்டிருக்கவில்லை. வேறு ஆட்களின் நிலங்களை ஆக்கிரமித்திருக்கவும் இல்லை. அவர்களுக்கு தங்கி வாழ்வதற்கான ஓர் இடம் மட்டுமே தேவையாக இருந்தது.

14, 16 மே 1976 தேதிகளில் நடந்த இடதுசாரி அரச பயங்கரவாதமானது சுதந்தர இந்தியாவில் நடந்த மிக மிகக் கொடூரமான மனித உரிமை மீறல் வன்முறையாக ஆகிப்போனது. மேற்கு வங்க அரசு சுமார் பத்தாயிரம் பேரை அல்லது அதற்கும் மிக அதிகமான எண்ணிக்கையிலானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. பாலியல் வன்கொடுமை, கொலை, குடி நீரில் விஷம் கலப்பது, குடிசைகளுக்குத் தீவைப்பது என அனைத்து பயங்கரங்களும் அரசால் நிகழ்த்தப்பட்டது. கொல்லப்பட்ட உடல்களைக் கடலில் வீசினர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையே தெரியாது. உயிர் தப்பித்த சிலரும் அந்தக் கொடூரத்தை வெளியே சொல்ல அஞ்சி முடங்கினர். சுமார் ஏழாயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர்’.

ஆய்வாளர்கள் மரிச்சபி படுகொலையை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் பேசியிருக்கிறார்கள். சமூகவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தலித் போராளிகளெனப் பலரும் எதனால் அந்தப் படுகொலை நடந்தது என்பது பற்றிய கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். அமிதவ் கோஷ் மரிச்சபி நிகழ்வை புனை கதையாக ‘தி ஹங்க்ரி டைட்’ என்ற நாவலில் பதிவு செய்துள்ளார்.

மரிச்சபி படுகொலை பற்றி ரோஸ் மல்லிக் எழுதிய மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரை ‘வனப் பகுதிகளில் அகதிகள் குடியேற்றம்: மேற்கு வங்க அரசின் கொள்கை மாற்றம் மற்றும் மரிச்சபி படுகொலை’. அதில் அவர் 1979-ல் இடது சாரி அரசு ஏன் , எப்படி அந்தப் படுகொலையைச் செய்தது என்பதை அலசியிருக்கிறார். ‘போஸ்னியப் படுகொலையைப் போன்றதுதான் மரிச்சபி படுகொலையும். ஆனால், அதைச் செய்த ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்டார்கள். விசாரணை நடைபெற்றது. பலர் தலைமறைவானார்கள். ஆனால், மரிச்சபி படுகொலையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மீது கூட எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதுதொடர்பாக ஒரு விசாரணைகூட நடக்கவில்லை’ என்று மல்லிக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘மரிச்சபி தீவில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்ந்த ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இடதுசாரி அரசு அவர்களிடம்அலட்சியமாகவே நடந்துகொண்டது. வர்க்கபேதமற்ற, சாதியற்ற சமுதாயத்தைப் படைக்க விரும்புவதாக சொல்லிக்கொண்டாலும் இடதுசாரி அரசானது மேல் ஜாதியினரால் நிரம்பியதுதான்’ என்று சொல்கிறார் அன்னு ஜலாய்ஸ். 23, ஏப், 2005 பொலிட்டிக்கல் வீக்லியில் ‘மரிச்ஜபி நினைவுகள்: புலிகள் ‘குடிமக்க’ளானபோது அகதிகள் ‘புலிகளின் உண’வானபோது’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இடதுசாரிகளின் ஜாதி உணர்வு பற்றி இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

மரிச்சபி படுகொலை பற்றி செய்தித்தாள் வாசகர்களுக்கு நான் எதுவும் எழுதியதில்லை. 1978–79-ல் நடந்தவற்றைக் கட்டுடைத்து ஆய்வு செய்ய எந்தவொரு ஆய்வுலக நண்பருடன் தேநீர் அருந்தியபடியே உரையாடியதில்லை. மாறாக, அந்தக் கொடிய நிகழ்வை நேரில் அனுபவித்த சிலரைச் சந்தித்து அவர்கள் வாய்மொழியாகவே அந்த வரலாறை ஆவணப்படுத்த விரும்பினேன்.

மனா கோல்தர், பத்திரிகையாளர் சுகோரஞ்சன் சென் குப்தாவின் அறிக்கை, அகதித் தாய் ஃபோனிபாலாவின் கொடூர அனுபவம், அந்த சகதித் தீவில் தமது நினைவுகளையும் புதைத்துவிட முடியாதபடி நடைபிணமாக வாழும் சிலரைக் காப்பாற்றி, தன் உயிரையும் கையில் பிடித்தபடி ஒரு பெரும் ஆற்றைக் கடந்த ஒருவர் என சிலருடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்தேன்.

1979 ஜனவரி வாக்கில் மரிச்சபி தீவைச் சுற்றி காவல் அரண் எழுப்பி உணவோ மருந்தோ கிடைக்காத வகையிலும் செய்திகள் வெளியே கசியாவண்ணமும் சிவப்பு வேலிகள் எழுப்பப்பட்டு முற்றுகையிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மேற்கு வங்க இடதுசாரி அரசின் உத்தரவின் பேரிலேயே முழுத் தாக்குதலும் நடைபெற்றதாக உயிர் தப்பிய அகதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

காந்தி கங்குலியிடம் நான் பேசியபோது கிடைத்த தகவல்கள், ஸ்டேட்ஸ்மென் இதழில் வெளியானவை, சுந்தர்வன காவல்துறை சூப்பரிண்டண்டெண்ட் அமியா குமார் சமந்தா (இவர்தான் மரிச்சபி களையெடுப்பை நிகழ்த்தியவர்) சொன்னவை இவற்றை வைத்துப் பார்த்தால் வெறும் பத்து பேர் மட்டுமே அந்த தீவில் இறந்ததாகச் சொல்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட பிறருடைய வாக்குமூலங்களில் இருந்து சுமார் ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. வேறு சிலர் இதைவிடவும் அதிகம் பேர் இறந்திருப்பார்கள் என்று சொன்னார்கள்.

ஏன் இப்படியான முற்றிலும் மாறுபட்ட தகவல்கள் வந்தன?

மரிச்சபி தீவு கல்கத்தாவில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால் வங்காள பத்திரிகை ஊடகம் இந்தப் படுகொலைச் செய்தியை மிக மேலோட்டமாகவே பதிவு செய்தது. உண்மையில் அங்கு என்ன நடந்தது என்ற விவரங்கள் எல்லாம் பின்னாளில் நேரடி சாட்சிகளாக இருந்தவர்களின் கூற்றுகள் மூலமே தெரியவந்தன.

படுகொலையின் காரணம்

மரிச்சபியில் குடியேறியிருந்த பட்டியல் ஜாதி அகதிகளை ஜோதி பாசு அரசு ஏன் வலுக்கட்டாயமாக வன்முறை மூலம் அப்புறப்படுத்தியது?

அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்ட காரணம் என்னவென்றால், மரிச்சபி தீவானது சுற்றுச் சூழல் நோக்கில் பாதுகாக்கப்பட்ட தீவு; அகதிகள் மரங்களை வெட்டி அந்தத் தீவின் சுற்றுச் சூழலைச் சீர்கெடுத்ததால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொல்கிறது.

அகதிகளில் பெரும்பாலானோர் பட்டியல் ஜாதியினராக இருந்ததால் இந்த வன்முறைக்குப் பின்னால் ஜாதி வெறி காரணமாக இருந்திருக்கும் என்றும் சிலர் சொல்கிறார்கள். வர்க்கபேதமற்ற ஜாதிகளற்ற சமூகம் பற்றி குளிரூட்டப்பட்ட கருத்தரங்க மேடைகளில் முழங்கும் பத்ரலோக் மார்க்சியர்களின் மனதில் உறைந்துகிடக்கும் ஜாதி வெறியை இது காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இடதுசாரி அரசு அகதிகளை மேற்கு வங்கத்துக்கு அழைத்துவருவோம் என்ற கொள்கை முடிவை மாற்றிக்கொண்டுவிட்டதால் இந்த அகதிகள் தமக்கு எதிராகச் செயல்படக்கூடும் என்று நினைத்து அப்படி நடந்துகொண்டதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

எது காரணமாக இருந்தாலும் மரிச்சபியில் குடியேறியவர்களுக்கு நேர்ந்த கொடுமையை நியாயப்படுத்தவே முடியாது.

– -தீப் ஹல்தர்.

(மனா கொல்தர் – மரிச்ஜபி படுகொலையின்போது சிறுமியாக இருந்தவர். இப்போது மேற்கு வங்காளத்தில் பதேர் சேஷ் என்ற பகுதியில் வசித்துவருகிறார்.) அவருடைய வாக்குமூலத்திலிருந்து…

அப்பாவுக்கு மரிச்ஜபி தீவில் ஆள் நடமாட்டமே இல்லை என்பது பெரும் விடுதலையைத் தருவதாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் தாயா பிள்ளையாகப் பழகிய இஸ்லாமியர்கள் அடித்து விரட்டினர். மேற்கு வங்காளத்தில் தாய் மொழி பேசியவர்கள் அலட்சியமாக நடத்தினர். தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் இருந்த ஆதிவாசிகள் கூட எங்களை வெறுத்தனர். அரசு அதிகாரிகள் எல்லாம் விபத்தில் அடிபட்டு மயங்கிக் கிடப்பவர்களிடம் நகையைத் திருடும் கொடூரர்கள் போல் அகதிகளிடம் எஞ்சியிருந்த மானம் மரியாதையையும் சூறையாடினர். அரசியவாதிகள் அகதிகளையும் தமது அரசியல் பகடையாட்டத்தில் உருட்டிவிளையாடினர். எனவே, அப்பாவுக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை முற்றாக அழிந்துபோய்விட்டதுபோலும். ஆளரவமற்ற தீவில் நமக்கு எந்தத் துன்பமும் யாராலும் வராது என்று அவர் நினைத்தார்.

தோழர்கள் வேறு கொஞ்சம் தோழமையுடன் நடந்து கொண்டிருந்தனர். மரிச்ஜபி தீவானது இழப்பதற்கு எதுவும் இல்லாத அகதிகளுக்காகக் காத்திருக்கும் பொன்னுலகமாகத் தெரிந்தது. ஆனால், கம்யூனிஸ்ட்கள் வாக்களிக்கும் பொன்னுலகம் எப்படி இருக்கும் என்பது அவருக்கும் பிற அகதிகளுக்கும் தெரியாமல் போய்விட்டது. செம்பருந்தின் மிருதுவான இறகுகள் இதமான கதகதப்பைத் தரும் என்று நம்பிய கோழிக் குஞ்சுகள் போல் ஆகிவிட்டது. அந்தக் கள்ளப் பருந்துக்கு மென் சதைகளைக் குத்திக் கிழிக்கும் கூர்மையான அலகுகள் உண்டு என்பதையும் நகரவிடாமல் அழுத்திப் பிடிக்கும் வலிமையான கால்கள் உண்டு என்பதையும் அறிந்திருக்கவில்லை.

மரிச்ஜபி தீவில் வாழ்க்கை எப்படி இருந்தது?

மிகுந்த மன நிறைவுடன் இருந்தோம். குறுகிய காலத்தில் அனைத்தையும் உருவாக்கிவிட்டிருந்தோம்.எட்டாம் வகுப்பு வரையான பள்ளிக்கூடம், மருத்துவ மையம் என எல்லாம் உருவாக்கிக் கொண்டுவிட்டோம். சிறு சிறு குட்டைகளில் மீன் வளர்க்க ஆரம்பித்திருந்தோம். சிறிய அளவில் மரம் வெட்டுதல், உப்பளம் என எல்லா வேலைகளும் செய்தோம். படகுகள் தயாரித்தோம். என் அப்பாவுக்கு சொந்தமாக ஒரு படகு இருந்தது. சில மாதங்கள் அந்தத் தீவு எங்களுடைய புதிய பொன்னுலகமாகவே மின்னியது. அதன் பிறகுதான் கம்யூனிஸ உலகமாக அது ஆனது. முதல் அறிகுறி அக்கம் பக்கத்துத் தீவுகளுக்குச் செல்ல முடியாதபடி நாங்கள் தடுக்கப்பட்டோம். உணவுப் பொருள், மருந்துகள், பிற தேவையான எதையும் பெற முடியாமல் போனது. எந்த வர்த்தகமும் செய்ய முடியாமல் ஆனது.

சுமார் 18 நாட்களுக்கு மேலாக முற்றாக எங்கள் தீவு தனிமைப்படுத்தப்பட்டது. சாப்பிட எதுவுமே இல்லை. கையிருப்பு என்பது ஒரிரு நாட்களுக்குத்தான் இருந்தன. பசி அதிகரிக்கவே தென்னங்குருத்துகளை வெட்டித் தின்ன ஆரம்பித்தோம். அங்கு வளர்ந்திருந்த இலை தழைகள், காட்டுக் காய்கள் எனக் கிடைத்ததையெல்லாம் சாப்பிட ஆரம்பித்தோம். அவை பெரிதும் உப்புச் சுவையுடனே இருந்தன. நிறைய பேர் பசியாலும் கிடைத்ததைத் தின்றதாலும் இறக்கத் தொடங்கினர். குழந்தைகள்தான் அதிக அளவில் இறந்தனர்.

தீவைச் சுற்றிலும் காவல் போட்டப்ப நாங்க யாராவது வெளில வந்தாலே படகுல நின்னுகிட்டு சுட்டுத் தள்ளினாங்க. கண்ணீர் புகை வீசினாங்க. பொம்பளைங்களையெல்லாம் புள்ளைகுட்டிங்களுக்கு முன்னாலயே கதறக் கதறத் தூக்கிட்டுப் போனானுங்க.

எவ்வளவுதான் பொறுக்கமுடியும். எங்க ஆளுங்களும் சண்டைபோட ஆரம்பிச்சாங்க. எங்க கிட்ட வெறும் கம்பு, மண்வெட்டிங்கதான் இருந்துச்சு. கண்ணீர் புகை குண்டு வேற எதையும் பாக்கவிடாம தடுத்துச்சு. போலீஸுக்கும் எங்களுக்கும் இடைல நடந்த சண்டைங்கறது ஓநாய்க் கூட்டத்துக்கும் முயல்களுக்கும் இடைல நடந்த சண்டை மாதிரிதான்.

****

நீண்ட காலத்துக்கு இருளிலேயே இருந்த அவர்களுக்கு அந்தத் தீவில் குடியேறியபோது சிறியதாக ஓர் ஒளி தெரிந்தது. ஆனால் அதுவுமே சட்டென்று அணைந்துபோய்விட்டது. அது வெறுமனே அணைந்திருந்தால் கூடப் பரவாயில்லை. அவர்கள் வாழ்க்கையை மீள முடியாத இருளில் தள்ளிவிட்டுப் போய்விட்டது. இருளிலேயே கிடந்தவர்களுக்கு சூரிய உதயம் என்பது மிகவும் பெரிய விடுதலையாக இருக்கும். ஆனால் சூரியன் ரொம்பத் தள்ளி தொடுவானத்தில் உதிக்க வேண்டும். அப்போதுதான் ஒளியாக அது வாழவைக்கும். வீட்டுக்கூரை மேல் சூரியன் வந்து நின்றால் அது ஒளி இல்லை… வெப்பம்… அனைத்தையும் கருக்கிப் பொசுக்கும் வெப்பம். அன்று இரவு மரிச்ஜபி தீவுக்குள் சூரியனே வந்து விழுந்தது மாதிரித்தான் ஆனது.அவர் கள் வாழ்க்கை, கனவுகள், உடமைகள், உயிர்கள் எல்லாமே கருகிவிட்டது அதில்.

மனா மேற்கொண்டு பேச முடியாமல் உறைந்துபோனார். அந்த நினைப்பு கூட அவரைச் சுட்டுப் பொசுக்குவதுபோல் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கின.

ரொம்பக் கஷ்டப்பட்டுட்டோம் தம்பி என்று பெருமூச்சுவிட்டார்.

The Blood Island
தீப் ஹல்தர்
ஆங்கில மூலம் : ஹார்பர் காலின்ஸ் வெளியீடு
தமிழில் : B.R.மகாதேவன்.

  • ASIN : B07QWVW1RK
  • Publisher : HarperCollins India (May 25, 2019)
  • Publication date : May 25, 2019
  • Language : English
  • File size : 2618 KB
  • ISBN-13: 9789353025885
  • Pages: 192
Series Navigation<< துருவன் மகன்பாகீரதியின் மதியம் – விமர்சனம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.