என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி!

ஒவ்வோர் ஆண்டும் 25ஆவது பைஷாகின்போது, பண்பாட்டு அக்கறைமிக்க வங்காளிகளுக்கு ரவீந்திரநாத் தாகூரின் (1861-1941) பிறந்தநாள் என்பது ஒரு சிறப்புக் கொண்டாட்டத்திற்குரிய நாளாகும். இத்தருணத்தில் சமகாலப் பின்னணியில் தாகூரின் முடிவற்ற பொருத்தப்பாட்டை மறுகண்டுபிடிப்பு செய்வதற்கான ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்; மேலும் மேம்பட்ட இன்பம், ஆக்கப்பூர்வமான சமூக நெறிமுறை உத்வேகம், கம்பீரமான திடுக்கிடும் இடையீடு ஆகியவற்றின் ஆதாரமான நீரூற்றாக அவருடைய எப்போதும் புதுமையான பண்பாட்டு வெளிப்பாடுகளை மீள்பார்வை செய்கிறோம். வாசித்தல், நிகழ்த்துதல், பார்த்தல், கேட்டல், எழுதுதல், எல்லையற்ற மதிப்புகொண்ட அவருடைய படைப்புகள் பற்றி சிந்தித்தல் ஆகிய வழிகளில் தாகூருடனான நம்முடைய அன்றாட தொடர்பாடல் வலுப்பெறுகிறது. நம்முடைய தொடர்பியல், இருத்தலிய, மிகையின்ப களங்களை கலை மற்றும் பண்பாட்டு கொண்டு உறையிட்டதன் மூலம் தாகூர், வாழ்க்கைத் தரத்தில் மிகப் பெரிய வளம் சேர்த்துள்ளார்.

உலகில் வேறு எந்தவொரு படைப்பாளுமையும், ஒவ்வொன்றிலும் மைதாஸின் தொடுகையை உடைய பல்வேறு இலக்கியக் கலைப் படைப்புகளால் தன் இனத்தின்மீது இத்தகைய தாக்கம் செலுத்தியதில்லை. பல்வேறு வகைமைகளால் ஆன, மிகச்சிறந்த தரத்துடன் சீரிய அளவில் உள்ள அவரது பங்களிப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன. அவர் யாருக்கும் குறைவில்லாத ஒரு கவிஞர், உளவியல் மற்றும் இறைமை நாவலாசிரியர், அற்புதமான கட்டுரையாளர், மதியூக்கமிக்க சிறுகதையாசிரியர் மற்றும் கடித எழுத்தாளர், ஓவியர், தேசப்பற்றாளர், தொலைநோக்காளர், பாடல்களைப் புனைபவர், கல்வியாளர், மற்றும் நவீன வங்க மொழி மற்றும் இலக்கியத்தின் சிற்பி. 

சுவாரசியமாக, வங்க மொழியில் எழுதப்பட்ட கீதாஞ்சலி, க்ஹேயா, கீதிமால்யா, சாய்தாலி போன்ற 103 கவிதைகள் அடங்கிய சாங் ஆஃபரிங்க்ஸ்-இன் கையெழுத்துப் பிரதி 1912இல் இலண்டன் சேரிங் கிராஸ் ரயில் நிலையத்தில் தொலைந்து போனது. தாகூர் இதை இறையின் விதி என்று எடுத்துக் கொண்டார். ஆனால், அவருடைய மகன், கணினிக்கு முந்தைய அக்காலத்தில் விடாப்பிடியாகத் தேடி, கைப்பிரதியின் மொத்தமும் இருந்த ஒரு தோல் பையைக் கண்டெடுத்தார். இலண்டனின் இலக்கிய வட்டம் உடனடியாக அதை வெளியிட முடிவுசெய்தது, இது மிகப்பெரிய கோரிக்கைகளையும் வெற்றிகளையும் சந்தித்தது. எஸ்ரா பவுண்ட் எட்டு தேர்ந்தெடுத்த வரிகளை அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அனுப்ப, அங்கு அது மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. இலக்கியத்துக்கான ராயல் சங்கத்தின் உறுப்பினரான டி.எஸ்.மூர் தன்னுடைய அதிகாரத்துக்குட்பட்டு இதை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்தார். 

அந்த நேரத்தில் நோபல் அகாதெமியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவநம்பிக்கை நாவலாசிரியரான தாமஸ் ஹார்டியைக் கூட்டாக விருதுக்குத் தெரிவு செய்திருந்தனர்; அதன் தலைவரும் தன்னுடைய ஒப்புதலை வழங்கியிருந்தார். ஆனால் அவரது கவிதைகளின் மெலிதான உரைநடை மொழிபெயர்ப்பின் மூலம் எப்போதும் நம்பிக்கைமிக்க மற்றும் அகங்காரமற்ற தாகூரைப் படித்தது அவர்களுக்கு மிகுந்த அடைக்கலத்தின் சுவையை அளித்தது. இந்த முடிவு அப்போதைய பிரிட்டிஷ் காலனியைச் சேர்ந்த இந்தியா என்று அழைக்கப்படும் வங்காள எழுத்தாளருக்கு நம்பமுடியாத அளவிற்கு ஆதரவாக மாறியது. 1913இல் நோபல் பரிசு பெற்றதன் மூலம், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெரும் முதல் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் என்ற சற்றும் எதிர்பாராத வரலாற்றை உருவாக்கியதன் மூலம் வங்காளமும் இந்தியாவும் ஒரே இரவில் சர்வதேச முக்கியத்துவம் பெற்றன. இந்தப் புத்தகம் மனிதகுலத்தின் முழுமையான வாழ்க்கையைக் குறிக்கும் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் ஒரு விளைபொருள்/தயாரிப்பு என்று கண்டறியப்பட்டது.

இந்த புத்தகத்தைப் போல் வேறு எதுவும் கடந்த ஆண்டுகளில் என் ரத்தத்தைத் தூண்டவில்லை (உணர்வுகளைத் தூண்டவில்லை) என்று சாங் ஆஃபரிங்க்ஸுக்கு டபிள்யூ.பி.யேட்ஸ் எழுதிய முகவுரையில் இருந்து, புத்திசாலித் திறனறிவாளர்களிடம் தாகூர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பதை ஊகிக்க முடியும். தாகூரின் அனுபவத்தின் முழுமையால் மனிதகுலத்தின் அனைத்து வேட்கைகளும், உடலின் அழுகையும், ஆன்மாவின் அழுகையும் இலக்கியத்தில் முதன்முறையாக இணைந்திருப்பது குறித்து அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். “வாழ்வதற்கு மறுக்காமல், ஆனால் வாழ்க்கைக்கு வெளியே பேசிய நம்முடைய புனிதர்களில் முதன்மையானவரான அவர்,” என்று யேட்ஸ் துல்லியமாக மதிப்பிடுகிறார். 

சாங் ஆஃபரிங்க்ஸ் எனும் கவிதைகளின் மெலிதான உரைநடை மொழிபெயர்ப்பு சர்வதேச முக்கியத்துவத்தை அவருக்குக் கொண்டுவந்தபோது, தாகூர், “என்னுடைய இந்தக் கவிதைகள் என்னுடைய உண்மையான சுயம் பற்றிய என்னுடைய வெளிப்பாடல்களே… என்னுடைய உள்ளார்ந்த உணர்வுகளின் பாவங்களே, அவை என்னுடைய பணிவான பிரார்த்தனைகள், என்னுடைய மனப்பூர்வமான சாதனா மற்றும் என்னுடைய சுக துக்கங்களின் பிரதிபலிப்பு”, என்றதை விளக்கினார். பிரபல ஜெர்மானிய தத்துவவியலாளரான நீட்ஷே, “ஒவ்வொரு பெரிய தத்துவமும் தனிச்சையான, தன்னுணர்வற்ற சுயசரிதை வகையாகும்” என்று எழுதினார். 

தாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.” இந்த உணர்தலும், நங்கூரமிட்ட தன்மையும் தாகூரின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. துன்பங்கள் ஒருபோதும் இவற்றில் இருந்து அவரை திசை திருப்பவில்லை; மாறாக ஆழ்ந்த துயர்கள் அவரது தெய்வீக அன்பைத் தொடர்ந்து ஆழப்படுத்தின. “மேகங்கள் என் வாழ்வில் மிதந்துவந்தன, அவை இனி மழையைச் சுமந்துகொண்டோ, புயலைக் கொண்டுவரவோ மாட்டா; ஆனால், என்னுடைய அந்திவானில் வண்ணம் சேர்ப்பதற்காக.” 

தாகூரின் கவிதைகளில் கலையும் சாரமும் பிரிக்கமுடியாத ஒன்றிணைவாக நம் மனத்தைக் கிறங்கச் செய்யும். ஆனால், அவருடைய கவிதைகளில் மையக் கரு என்பது விசித்திர வாழ்வின் கண்டடைதலும் ஆகிவருவதன் (becoming) இன்பமிக்க நிகழ்வும்தான். தன்னுடைய கவித்துவப் பயணம் என்பது எல்லைக்குட்பட்டதில் இருந்து எல்லையில்லாததற்கு, வண்ணமயமான வடிவங்களில் இருந்து வடிவமற்றைவைகளுக்கு, மற்றும் பிரபஞ்ச மெல்லிசையிலிருந்து முற்றுமையின் ஒலியற்ற நிசப்தத்துக்கு. அவர் ஒருபோதும் துன்பப்படும் மனிதகுலத்தின் வேதனையை குறைத்துப் பார்க்கவில்லை, ஆனால் தெய்வீகப் பார்வை இல்லாமல் வழக்கமான வாழ்க்கை முறையில் அபத்தத்தைக் கண்டார். வண்ணமயமான காட்சி விருந்து மற்றும் படைப்பின் சிம்பொனிக்கான மகிழ்ச்சியான அழைப்பாக இப்புவியில் சிறிதுகால தங்கலை அவர் கண்டார். அங்கு தாங்கமுடியாத துக்கம் என்பது மென்மையான வாழ்வின் செயலற்ற தன்மை மற்றும் அமைதி மற்றும் மிகையின்பத்துக்கான வழி என்பது வெளிப்புற தூண்டுதல்கள் அற்றது. 

அநேக ஆயிரம் எண்ணங்கள் கொண்ட தாகூரின் தேசபக்திக் கவிதைகள் மற்றும் பாடல்கள் இந்தியச் சுதந்திர இயக்கத்தின்போது சுதந்திரப் போராட்ட வீரர்களையும், வங்கதேசத்தில் முக்தியுத்யாவையும் பெரிதும் பாதித்தன. அவநம்பிக்கையான மனிதநேயம் மற்றும் கல்வி பற்றிய கருத்துக்கான அவரது ஆக்கபூர்வமான சமூகத் திட்டம் தேவைக்கு எப்போதும் உயிர்ப்போடு இருக்கிறது, எப்போதும் ஊக்கமளிக்கிறது. அவரது பாடல்கள் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையின் தேசிய கீதங்களாகும். ஆங்கில இலக்கியத்தில் இந்த வகை இலக்கியம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் வங்க மொழியில் அற்புதமான சிறுகதைகளை இயற்றினார். சின்னபத்ரா என்ற அவரது தனித்துவமான கடிதங்கள், இப்போது வங்கதேசத்தின் சின்னபத்ராவின் நிலத்தை மீண்டும் கண்டுபிடிக்க நமக்கு உதவுகிறது, அங்கு அவர் இயற்கையுடனும் சாமானியர்களுடனும் நெருங்கிய தொடர்புகொண்டார்.

வாழ்க்கைச் சக்தியுடன் உயிரூட்டப்பட்ட இயற்கையுடனான அவரது முன்ஈடுபாடும், பிரபஞ்ச எதிரணியாக உயிர்ப்புடன் இருப்பதும் இயற்கை கவிதைக்கு ஒரு புதிய சேர்க்கையாகும். உலகளாவிய வாழ்வுடனான ஒற்றுமையின் ஒரு தீவிர அனுபவம் அவரது பிரபஞ்சக் கவித்துவ அம்சமாகும். “The same stream of life that runs through my veins night and day runs through the world and dances in rhythmic measures…..If I be mud or water, grass or flower or move along with all creatures I will be blessed remaining tied to my endless self.” (“இரவும் பகலும் என் நாளங்களூடேயோடும் உயிரோடை உலகினூடோடி தாள ஜதியிட்டாடும்.. வண்டலோ நீரோ, புல்லோ மலரோ, சகல ஜீவன்களோடும் நகர்வேனாகிலோ எல்லையற்ற என் ஆன்மாவில் பிணைந்து அருள் பெற்றவனாவேன்.. “)

நனவின் இந்த விரிவாக்கம் அவரது நேரடி அனுபவத்திலிருந்து வெளிவந்து, “தன்னிச்சையான மற்றும் மயக்கமுள்ள சுயசரிதைகளின் ஒரு இனமாக,” ஃபிரடெரிக் நீட்சே ஒவ்வொரு பெரிய தத்துவத்தின் கட்டாயமாக வைத்திருந்ததைப் போல் நிகழ்ந்தது. பன்மைத்தன்மையின் மகத்தான ஒற்றுமையை உணர்ந்த அவர் பாடினார், “Thou art the sky and thou art the nest as well.” (“நீயே வானம், நீயே கூடும்கூட.”)

நிலப்பரப்புடன் ஆழ்நிலையின் இந்த அன்பான ஒருங்கிணைப்பு அவரது கவிதை அனுபவத்தின் தனிச்சிறப்பு, “I dive down into the ocean of forms hoping to gain the perfect pearl of formless.” இந்த டைவிங் யாத்திரை ஒரு வேதனையான செயல். ஆனால் கவிஞர் அவரை தூய்மைப்படுத்துவதைப் போலவே ரசிக்கிறார் மற்றும் பிரபஞ்சத்தின் அன்பை நெருங்கி வந்து சரணடைய உதவுகிறார். ஆகவேதான் அவர் பிரார்த்திக்கிறார், “In one salutation to thee, my God, let all my senses spread out and touch this world at thy feet …Let all my songs gather together their diverse strains into a single current and flow to a sea of silence in one salutation to thee.” (“உன்னையொரு முறை துதித்திடும் போதிலென் புலன்களனைத்தும் விரிந்து, இறைவா, உன்னடி பரவிய இவ்வுலகைத் தீண்டட்டும்… என் பாடல்கள் அனைத்தும் தம் வெவ்வேறு கீதங்கள் ஒருங்கே திரட்டி, உன்னையொரு முறை துதித்திடும் போதிலோர், ஒற்றை நதியாய் மௌனமாம் கடலில் கலக்கட்டும்…”)

இறுதியில் கவிஞர் தாகூர் தனது பிரபஞ்சப் பேரன்புடன் தடையின்றி ஒன்றிணைந்ததற்காக மாயத் தாகூரிடம் முற்றிலும் சரணடைகிறார், “My song has put off her adornments….Ornaments would mar our union; they would come between thee and me; their jingling would drown thy whispers.” (“என் கீதம் தான் புனைந்தவற்றைக் கலைத்துக் கொள்கிறாள்… அணிகலன்கள் எம் கூடலில் கேடாகும்; எனக்கும் உனக்கும் இடை வரும்; அவற்றின் கிணுகிணுப்பு ஒலியும் உன் மென்னொலியை கேளாதாக்கும்.”)

கவிதை அனுபவம் மற்றும் சாதனைகளின் வரம்புகளை அவர் உணர்ந்தார், “My poet’s vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy feet. Only let me make my life simple and straight like a flute of reed for thee to fill with music.” (“உன் தரிசனத்தில் என் கவிதா கர்வம் வெட்கிச் சாகிறது. கவிக்கோவே, உன் பாதம் அமர்ந்தேன். என் வாழ்வை மட்டும் மூங்கில் குழல் போல் எளிதாக்கு, நேராக்கு, உன் இசை அதில் நிறையட்டும்.”)

உபநிஷதங்களின் தத்துவத்தின்மீது அவருக்கிருந்த உள்ளார்ந்த, தடுக்க முடியாத ஈர்ப்பு, சம்பிரதாயமான பிராமண குடும்பப் பின்னணியில் வளர்ந்தது ஆகியவற்றிலிருந்து தாகூரை ஒரு வேதாந்தியாகவும் பிராமணராகவும் சித்திரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால், தற்காலிகமாக அவர் இருமை மாயவாதமான மத்தியகால சூஃபிசம் அல்லது பக்தி வழிபாட்டு மரபு மீது அதிக உணர்வுரீதியான பிணைப்பு கொண்டிருந்தார். அவரது கவிதையின் வெப்பத்திலிருந்து அவரது ஆன்மீகம் தன்னிச்சையாக எழுந்தது, மேலும் பேரன்புமிக்க ஜீவந்தேபாட்டா போன்றோருடன் நிரந்தரமான தெய்வீகக் காதல் கொண்டிருந்தார். ஆகவே, தன்னுடைய ஆங்கில மொழியாக்கங்களில் கடவுள் என்ற சொல்லைக் குறிப்பிட ஒருபோதும் அவர் பெரிய எழுத்தைப் பயன்படுத்தியதில்லை. உண்மையில், அவரது எல்லையற்ற கவிதை மனப்பான்மை எந்தவொரு பாரம்பரிய மதக் கோட்பாடுகளுடனும் ஒருபோதும் பிணைக்கப்படவில்லை. ஆக்ஸ்போர்டில் ஹிப்பெர் விரிவுரைகளில் மனித மதம் என்ற தலைப்பில் ஆற்றி உரையில் இதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது கவி இதயத்திலிருந்து பூக்கும் அவரது ஆன்மீகம், மத ரீதியானதோ தத்துவ ரீதியானதோ அன்று; மாறாக மனிதநேயம், இயற்கை இறையுரு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆழ்ந்த காதலும் கவிதையும் ஆனது.

எல்லைக்குட்டவைக்குள் இருந்து எல்லையற்றதை அல்லது வடிவங்களில் இருந்து வடிவமற்றைதை கண்டுபிடிப்பதே அவருடைய மிஸ்டிக் (மாய / மாந்திரீகக்) கவிதைகளில் திரும்பத் திரும்ப வெளிப்பட்ட கருத்தாக்கமாக இருக்கிறது, அதை அவர் உணர்ந்தவாறு, “Thou art the sky and thou art the nest as well.” எந்தவொரு வடிவம், வண்ணம் அல்லது ஒலி ஆகியவை இன்றி வானம் முடிவற்றிருக்கும்போது, வண்ணங்கள், ஒலிகள், வாசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைக்குட்பட்ட தங்குமிடத்தைக் கூடு வழங்குகிறது. இந்தக் கவிதை ஒருங்கிணைப்பு அவரது mysticismத்தின் அடையாளமாக இருந்தது. எனவே அவர் எழுதினார், “In this playhouse of infinite forms I have had my play and here have I caught sight of him that is formless.” (“எண்ணிறந்த உருவங்கள் தோன்றும் இவ்விளையாட்டரங்கில் ஆடி ஓய்ந்தேன், உருவற்ற அவனைக் கண்ணுற்றவாரே.”)

“Thou hast made me endless, such is thy pleasure”, (“எல்லை எனக்கு இல்லை எனச் செய்தாய், இதுவோ உனக்கு இன்பம்”) என்று சாங் ஆஃபரிங்க்ஸின் முதல் கவிதையில் தாகூர் எழுதுகிறார். தாகூரைப் பற்றிய நம்முடைய தனிப்பட்ட / சொந்தத் தேடலும்கூட முடிவற்றதே. வயது, அனுபவம், அதிகரித்த திறனுடன் தாகூரை நாம் மறுகண்டுபிடிப்பு செய்கிறோம். தாகூர் எப்போதுமே வாழ்க்கையின் வெற்றியை வெளிப்படுத்துவதிலும், படைப்பில் அதன் சொல்லில் அடங்காத வெளிப்பாட்டிலும் ஈடுபடுத்திக் கொண்டார். பிரபஞ்சத்தின் அழைப்பை ஏற்று, ‘ஆழ்ந்த வலி மற்றும் மகிழ்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து உயரும் வாழ்க்கை மற்றும் அன்பின் பார்வை’யோடு உருவான அவரது படைப்புக்களோடு, இந்த அற்புத உலகில் பிரபஞ்சத்தின் அழைப்பை ஏற்பதற்கு அவரைப்போல் நாமும் இதயங்களைத் திறக்க வேண்டும். 

  • M N KUNDU: Columnist.
  • எம்.என். குண்டு: பத்தி எழுத்தாளர்
  • தமிழில்: சு. அருண் பிரசாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.