ஆத்மஜன்

சுசித்ரா பட்டாச்சர்யா

தமிழில்: உஷா வை.

அம்மா இன்று எங்களை விட்டுப் போய்விட்டாள். சற்று நேரத்துக்குமுன் அவள் மின்சார அடுப்புக்குள் நுழைந்துவிட்டாள். வேகமாய் எரிந்து இவ்வுலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டாள்.

இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. காலையில் வேலைக்குக் கிளம்பும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. எப்போதும்போல.

நாள் மற்ற தினங்களைப் போலத்தான் தொடங்கியது. இம்முறை குளிர் திடமாகவே படிந்திருந்தது. வழக்கம்போலக் காலையில் போர்வையைவிட்டு வெளியே வரத் தோன்றவில்லை. படுக்கையில் படுத்திருந்த எனக்கு வீட்டு வேலைகளில் சுப்தி பரபரப்பாய் இருந்தது தெரிந்தது. என்றும் போலவே மம்பியும் கொகோலும் பாலைப் பற்றி குறை சொல்லி அமர்க்களம் செய்து கொண்டிருந்தனர். சுப்தி குழந்தைகளை நன்றாய்த் திட்டிவிட்டு, எனக்கு டீ கொடுத்துவிட்டு, அம்மாவை கவனித்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டிருந்த பெண்ணிடம் ஏதோ உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தாள். வீட்டின் ஓசைகள் வழக்கம் போலவே போய்க்கொண்டிருந்தன, அம்மாவைக் கவனித்துக் கொள்பவள் அவளைத் துடைத்து விட நீரைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் ஏதோ உரையாடல் போய்க்கொண்டிருந்தது. சுப்தி குழந்தைகளுக்கு சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்தாள். இதற்கிடையே மம்பி கொகோலின் பள்ளிப் பேருந்து வந்தது. நான் படுக்கையை விட்டு குதித்தெழுந்து கடைத்தெருவுக்குச் சென்றேன். திரும்பி வந்து வேகமாய் சவரம் செய்து, ஐஸ் போல் குளிர்ந்த நீரில் விறுவிறுப்பாய் குளித்தேன். சாப்பாட்டு மேஜையில் சுப்தி எனக்கு ஒரு சின்ன பட்டியலைக் கொடுத்தாள். இரண்டு நாட்களுக்குப் பின் மம்பியின் பள்ளியில் ஏதோ விளையாட்டு நிகழ்ச்சி இருந்தது. அதற்கு அவளுக்கு சிவப்பு கரையுடைய ஸாக்ஸ் ஒரு ஜோடி தேவை. தண்ணீர் படுக்கையில் படுத்தும் அம்மாவுக்கு படுக்கைப் புண்கள் வந்திருந்தன. அதற்கான மருந்து வாங்கி வர வேண்டும்.  அப்புறம் ஆபீஸ்பாராவில் இருக்கும் கடையிலிருந்து டீத்தூள் வாங்கி வர நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் மினி பஸ்சுக்கான வரிசை, தாமதமாய் வந்ததற்கான குறியை குறுகலாய் தப்பி, பொது மேலாளரின் அறைக்குள்ளும் வெளியுமாய் இரண்டு மூன்று தரம், கோப்புகள், கணினி, இடையிடையே சக அலுவலர்களுடன் தாழ்ந்த குரலில் பேச்சு… தமன்பாபு நாற்பத்தேழு வயதில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார், நாங்கள் அவருக்குப் பரிசாய் விக் கொடுப்பதா, பொய் பல்செட் கொடுப்பதா என்ற உரையாடல் கொஞ்சம் நகைப்பை ஏற்படுத்தியது.

எல்லாம் வழக்கமான தாளத்தில்தான் போய்க் கொண்டிருந்தது. அல்லது தாளமின்றி.. மதியவேளையில் காட்சி மாறியது. திடுமென்று.

சிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்… பாவம் உண்மையிலேயே அந்தப் பெண் மொத்தமாய் அடைபட்டிருந்தாள். ஒருபக்கம் குழந்தைகள், குடும்பம், இன்னொரு பக்கம் பக்கவாதத்தில் என்றென்றைக்குமேயோ என்பது போல படுத்தபடுக்கையாய் கிடந்த மாமியார். இரண்டுக்கும் இடையில் சுப்தி முற்றுமாய் நசுக்கப்பட்டிருந்தாள். வெளியே போவது, சினிமா, நாடகங்கள் எல்லாம் நின்றுவிட்டன. வீட்டில் நோய்வாய்பட்ட மாமியார் இருக்கையில் அவளால் எத்தனை நாட்கள் அவளது அப்பா வீட்டில் இருக்க முடியும். போனாலும் ஒவ்வொரு கணமும் திரும்பிப் போவதற்குத் தவித்து கொண்டேதான் இருப்பாள். ஆகவே, அமைதியைக் காப்பதற்காக நானும் சீக்கிரமாய் குகைக்குள் என்னை நுழைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று நான் இரண்டாவது ஆட்டத்திலிருக்கும் போது, ரோபின்தா அழைத்தார், “அமித், உனக்கு போன்”.

சிவப்புக்காய் கிட்டத்தட்ட பாக்கெட் அருகில் தொங்கிக்கொண்டிருந்தது. ஸ்ட்ரைக்கரை குறி வைத்துக் கொண்டே “யார் அது” என்றேன்.

.”உன் வீட்டிலிருந்து. உன் மனைவி போல் இருக்கிறது.”

எனக்கு சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. அவசரமாய் இருந்தாலொழிய சுப்தி போன் செய்ய மாட்டாள். சிவப்புக் காய் அது இருந்த இடத்திலேயே இருந்தது. வேகமாய் போனை எடுக்கப் போனேன்.

“அலோ, என்ன விஷயம்?”

“அம்மா எப்போதும் போல் இல்லை”

“என்ன? ஏன்? என்ன ஆச்சு?”

“கடுமையான மூச்சுத் தொல்லை. கண்கள் மேலே சொருகிப் போயிண்டிருக்கு”

“கடவுளே, எப்போதிலிருந்து?”

“இப்போதான். நான் மோனிகாதீ வீட்டுக்குப் போயிருந்தேன். ரமா கூப்பிட்டாள். சாதம் சாப்பிட்டத்துக்கப்புறமே அம்மா எப்போதும் போல இல்லைன்னு அவ சொல்றா”

”அம்மாவுக்கு அவ எப்போ சாப்பாடு கொடுத்தாள்?”

“வழக்கமா கொடுக்கிறது போலத்தான். பனிரெண்டு, பனிரெண்டேகால்..”

“ அவ ஏன் இதை முன்னாடியே உன்கிட்ட சொல்லலை?” .

“அப்போ சந்தேகப்படும்படி எதுவும் இல்லைன்னு சொல்றா. அம்மாவுடைய கை காலெல்லாம் கூட சில்லிட்டு போயிண்டிருக்கு.”

“டாக்டரை கூப்பிட்டாயா?”

“அவர் வந்து கொண்டிருக்கிறார். நீங்களும் வீட்டுக்கு வந்துடுங்க. இது கொஞ்சம் சீரியஸ்னு தோணறது”

அப்போது கூட விஷயம் தீவிரம் என்ற நினைப்பு என் தலைக்குள் நுழையவில்லை. டாக்ஸியில் திரும்பும் போது யோசித்துக் கொண்டே இருந்தேன் – ஏன் இப்படி ஆயிற்று? நுரையீரலில் நோய்தொற்றா? தொடர்ந்த செயல்பாட்டின்மையால் இதுபோன்ற நோயாளிகளின் தசைகள் வலுவிழந்து போய் சாப்பிடுகையில் ஏதேனும் உணவுத் துகள்கள் நுரையீரலில் அடைத்துக் கொள்வது அசாதாரணமானதல்ல என்று வழக்கமான பரிசோதனையின் போது ஒருதரம் டாக்டர் சொல்லியிருந்தார். அதிலிருந்து நோய் தொற்று ஆரம்பிக்கும். அவர் அந்த நோயின் பெயரைச் சொல்லி இருந்தார். ஏதோ நிமோனியா.. சளி பிடித்தால் கூடத்தான்….

எத்தனையோ நாட்கள் படுக்கையை நனைத்த பின் அதிலேயே அம்மா கவனிக்கப்படாமல் கிடந்திருக்கிறாள். ரமா எழுந்திருக்காமல் குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள். .பொறுப்பில்லாத பெண். இப்போது திரும்பவும் பிரச்சினை. இது கடுமையானால் அவளை நர்ஸிங் ஹோமுக்கு கொண்டுபோக வேண்டும். எவ்வளவு பணம் இருக்கிறது? இன்று பத்தொன்பது – மிஞ்சிப் போனால் ஆயிரமோ இரண்டாயிரமோ, அது எந்த அளவுக்கு உதவும்? வங்கிக் கணக்கு கிட்டத்தட்ட காலியாய் இருந்தது… கடன் வாங்க வேண்டுமா? மறுபடியுமா? நாசமாய் போச்சு., கடன் பாரத்திலேயே அழுந்திக் கிடக்க வேண்டியதுதான். யாரைப் போய்க் கேட்பது? உனக்கு ஏதானும் பணம் தேவை என்றால் எனக்கு தெரியப்படுத்து என்று ப்ரபீர்தா ஒருமுறை பாடுவது போன்ற தொனியில் சொல்லி இருந்தார், சுப்திக்கு அவள் அண்ணணிடம் பணம் கேட்பதில் விருப்பமில்லை. குக்கு அக்காவை அணுகலாம். அவள் அம்மாவின் அக்கா பெண்தான் என்றாலும் அம்மாவுக்குப் பெண் போலத்தான். குக்கு அக்காவின் கலியாணத்தின் போது அம்மா தன் நெக்லஸை அழித்து செய்த நகையை அவளுக்கு பரிசாகக் கொடுத்தாள். குக்கு அக்கா மறுக்காமல் தரக் கூடும். ஆனால் அந்தப் பணத்தை எப்படி திருப்பிக் கொடுப்பேன்? திரும்ப சேமநிதியிலிருந்து கடனா? அல்லது நர்ஸிங் ஹோமுக்கு பதில் ஆஸ்பத்திரியா…? அப்படியானால் செலவு கட்டுக்குள் இருக்கக் கூடும்..

எதுவுமே தேவைப்படவில்லை. வீட்டுக்குள் வந்த போது எல்லாம் முடிந்து விட்டிருந்ததைப் பார்த்தேன். அக்கம்பக்கத்து ஃப்ளாட்டுகளிலிருந்து சிலர் வருத்தமான முகங்களுடன் நின்றிருந்தார்கள். சுப்தி அம்மாவின் படுக்கையின் மூலையைப் பிடித்தபடி ஜடமாய் நின்றிருந்தாள். அவளது காலருகே ரமா இருந்தாள். மம்பியும் கொகோலும் இன்னும் பள்ளியிலிருந்து திரும்பி வந்திருக்கவில்லை.

எனக்கு ஏதோ பிரமை பிடித்தது போலிருந்தது. அத்தனை நீண்ட சலிப்பான கட்டம் திடுமென்று முடிந்து போய்விட்டதா?

அம்மா முழுசாய் இரண்டு வருடங்கள் படுத்த படுக்கையாய் இருந்தாள். மூளை அதிர்ச்சி ஏற்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால் இன்னும் அதிகமாய் இருக்கும். கிட்டத்தட்ட இருபத்தைந்து மாதங்கள். சரியாகச் சொன்னால் எழுநூற்று ஐம்பத்திநான்கு நாட்கள். இந்த சமயத்தில், எழுந்து உட்காருவதென்ன, அவளாகவே அசையக்கூட அவளால் முடியவில்லை; அவள் திரும்பவே யாரானும் உதவி செய்ய வேண்டும். இந்த இருபத்தைந்து மாதங்களில் ஒற்றைச் சப்தம் கூட  அம்மாவின் உதட்டைத் தாண்டி வந்ததில்லை. ஒரு முனகல் கூட இல்லை. அம்மா இப்படியே இருந்து விடுவாள் என்பது நிச்சயம் என்பது போல் நான் இருந்தேன்.. அம்மா நம்முடன் இன்றைக்கு இருந்து விட்டாள், நாளையும் இருப்பாள், அடுத்த நாளும்… இப்படி ஒவ்வொரு நாளும் உணர்வேன்.

இத்தகைய எண்ணங்கள் எப்போதும் தனியாய் வருவதில்லையோ என்னவோ.. என் ஆழ்மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் இருந்தது – அம்மா என்றென்றைக்குமாய் இருப்பாளோ இப்படியே வெறுமே இருந்துகொண்டு. இதைத் தாண்டி ஒன்றும் நடக்க முடியாதோ என்னவோ.

செய்தி கேட்டதும் உறவினர்கள் ஒவ்வொருவராய்  வந்தனர்.  சாயந்திரத்துக்குள் வீடு மனிதர்களால் நிரப்பப் பட்டிருந்தது. நர்ஸிங் ஹோமுக்கு குழுக்களாய் அவர்கள் பார்க்க வந்தது போலவே இருந்தது. இன்றைக்கு அதிகமாய் இருந்தார்களோ என்னவோ.

எல்லாம் இப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது. சோகம் மனிதர்களை ஈர்க்கிறது. இறப்பு கூட. ஒவ்வொரு நாளும் கடந்த பின் அம்மாவின் இறப்பின் சாத்தியம் தூரமாகிக் கொண்டு வந்தபோது அவர்களின் கவலை குறைந்து போயிருந்தது. எங்களுக்கும், உறவினர்களுக்கும் கூட. இந்த ஒன்றரை வருடத்தில் அவர்களில் எத்தனை பேர் அவளைப் பார்க்க வந்தார்கள்? சில சமயம் ஒரு போன்கால், எப்போதோ ஒரு வருகை, அவ்வளவுதான். ஆனாலும் இன்று மயானத்தில் என்னருகே அத்தனை பேர் இருந்தார்கள். என் பெரியப்பா பிள்ளைகள், என் பெரியம்மா மகன், என் அத்தை மகன், மைத்துனன், என் சகலை,, நண்பர்கள்.

இப்போது, இந்தக் குளிர்கால இரவில், என் தாயை இயந்திரப்படுத்தப்பட்ட சிதையில் இட்டபின் அவர்களெல்லாம் இங்கும் அங்குமாய் பரவி நின்றிருந்தார்கள். ப்ரபீர்தா குக்கு அக்காவின் கணவருடன் கைகளை அசைத்து பேசிக் கொண்டிருந்தார். கிஷோரும் ஷோமுவும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். பால்துவும் மற்றவர்களூம் டீ குடிக்கப் போயிருந்தார்கள்.

இரவு வழக்கத்துக்கும் மேல் சில்லென்று இருந்தது. நாங்கள் வெளியே இருந்ததாலோ என்னவோ?  சுற்றிலும் உணவு சிதறி இருந்தது: ஹேலோஜென் விளக்குகள் மங்கலாய், கிட்டத்தட்ட அணைந்துவிடுவதுபோல் தெரிந்தன, வேலியால் சூழப்பட்ட இடத்தில் சில பருவகால மலர்கள் மலர்ந்திருந்தன. மலர்கள் கூட பொலிவற்றனவாய் தெரிந்தன. இது மயானம் என்பதாலோ? ஒரு மாடடொர் வாகனம் வளாகத்துள் நுழைந்தது: விசித்திரமான மந்திர உச்சாடனங்களுக்கிடையில் சில சின்னப்பையன்கள் சேர்ந்து ஒரு படுக்கையைக் கீழே இறக்கினார்கள். யாரோ யாருக்காகவோ கத்தினார்கள். எங்கோ தூரத்தில் சிரிப்புச் சத்தம் கேட்டது. உட்புற அறையிலிருந்து உரத்த அழுகை கிளம்பியது. அப்புறம் நின்று போயிற்று. 

சந்தனும் ரோனி அண்ணாவும் என்னருகிலிருந்து சென்று விட்டிருந்தனர், இப்போது திரும்பி வந்தனர். ரோனி அண்ணா புகைத்துக் கொண்டிருந்தார். அவர் சிகரெட்டிலிருந்து சாம்பலைத் தட்டினார்..  என் தோளின் மேல் கையை லேசாக வைத்து, “ஏன் இங்கே இருக்கிறாய், இந்தக் குளிரில் நடுங்கிக் கொண்டு? வா, உள்ளே உட்காருவோம்” என்றார்.

‘இல்லை, இல்லை, இதே சரியாய் இருக்கு. அங்கே நாத்தமடிக்கிறது, ஒரே குழப்பம், அழுகை… உள்ளே எனக்கு மூச்சுவிடவே கஷ்டமாக இருந்தது.”

“அப்படியானால் போர்வையை சரியாக சுற்றிப் போட்டுக் கொள். காதை மூடிக்கொள். இப்போ சளி பிடித்தால் காரியத்துக்கு ஆகாது.”

“நான் சரியாய்தான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்.”

ரோனி அண்ணா அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. சிமெண்ட் பெஞ்சில் என் அருகே உட்கார்ந்து கொண்டார். சற்று நேரம் அவரது கண்களை  வானத்தை நோக்கி எழுப்பினார். இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழ்ந்து ஊத ஆரம்பித்தார்.

திடீரென்று “ அத்தை வித்தியாசமாகத் தெரிந்தாள் இல்லையா பப்லூ?” என்றார்.

நான் பெருமூச்சு விட்டேன் “‘ஹ்ம்ம்.” 

“அவள் முகத்தில் நோயின் அறிகுறியே இல்லை.. அவள் சருமத்தில் வண்ணம் திரும்பியிருந்தது. பழைய அத்தையைப் போலவே தெரிந்தாள்.”

சந்தன் பேசினான். “பெரியம்மாவின் உதட்டைச் சுற்றி ஒரு சின்ன சிரிப்பு விளையாடியதை நீ கவனித்தாயா?”

“ஹ்ம்ம். அத்தனை கஷ்டத்துக்கும் எப்படிப்பட்ட முடிவு” 

“நிச்சயமாய். அவளால் பேசவோ, தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. அதுதான் கொடுமை! போன வருஷம் துர்க்கா பூஜைக்கப்புறம் அவளைப் பார்க்க வந்தபோது அவள் முகத்தைப் பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. எப்பேர்ப்பட்ட மனுஷி, எந்த நிலைமையில் அவள் இருந்தாள்!”

“இருந்தும், அத்தை மற்றவர்களின் விஷயத்தில் என்றும் தலையிட்டதில்லை. என் அம்மா அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் – கடவுள் செய்தது நியாயமே இல்லை. இத்தனை நல்ல மனுஷி, ஆனால் இப்படிக் கஷ்டப்பட வேண்டியிருந்தது – வாழ்க்கை முழுவதும் அவள் சிரமப்பட வேண்டி இருந்தது. ஒரு நோயில்லை, ஒரு நோவில்லை அத்தையின் புருஷன் அப்படியே போய் சேர்ந்தார்… இடி விழுந்தது போல…பப்லூ அப்போ அரை நிஜாரில் இருந்தான். ஆனால் அத்தை அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு திடமாய் இருந்தாள். வேலைக்குப் போய் தனியாய் பப்லூவை வளர்த்து ஆளாக்கினாள். அவளுக்கென்று ஒரு வீடும், பேரப்பிள்ளைகளும் கிடைத்து சந்தோஷத்தை அவள் கண்ணால் பார்க்க ஆரம்பித்தப்போது கடவுள் இந்த அடியைக் கொடுத்தார்.”

“நாங்கள் அத்தனை வேண்டிக் கொள்வோம், பெரியம்மாவை விட்டுவிடு, பெரியம்மா இப்போ போயிடட்டும்.”

“உண்மைதான், ஒரு காய்கறியைப் போல அவள் இருந்ததும் ஒரு வாழ்வா என்ன?”

“முழுக்க காய்கறி போலில்லை. அந்தப் பாவமான நிலைமையிலும் பெரியம்மாவுக்கு சுய உணர்வு இருந்தது.”

அதுதான் இன்னும் பரிதாபமான விஷயம்..

ஆ! இப்போது இவர்கள் எதைத் தொடங்கி விட்டார்கள்? இதையெல்லாம் விவாதிக்க இதுதான் சமயமா? அம்மா எப்படிப்பட்டவள், அவள் எனக்கு என்னவெல்லாம் செய்தாள், இதெல்லாம் முடிந்த கதை. அதெல்லாம் எல்லோரும், நான் உட்பட, அறிந்ததுதான். நானும் அம்மாவுக்கு என் கடனைத் தீர்க்க  முயற்சி செய்திருக்கிறேன். என் வசதிக்கு மேலாய் என்னை நீட்டி அவளுக்கு செய்திருக்கிறேன்.  அம்மாவுக்கு அந்த பாரிசவாதம் வந்தபோது செலவைப் பற்றிக் கவலைப்படாமல் அவளை ஒரு பெரிய நர்ஸிங் ஹோமுக்கு அவசரமாய் அழைத்துப் போனேன். அங்கிருந்து அவள் ஜடமாய் திரும்பி வந்தாள்.; அப்போதும் நான் நம்பிக்கையை விட்டேனா? முதல் மூன்று மாதங்கள் காலையும் மாலையும் பிஸியோதெரபி ஆறு மாதங்கள் தொடர்ச்சியாய். அதோடு, டாக்டர், நர்ஸ், கூடவே இருந்து கவனிக்க ஒரு ஆள்… ஒரு தாய் தன் குழந்தையை நேசிப்பதும் தன்னையே தியாகம் செய்வதும் இயல்பே. அதனால் நான் என் தாயை குறைவாக நேசித்தேன் என்றா அர்த்தம்? நான் கவலைப்படவில்லையா? நர்ஸிங் ஹோமில் தூக்கமின்றி எத்தனை நாட்கள்; இந்த நரம்பியல் மருத்துவரிடம் போவது, அந்த நரம்பியல் மருத்துவரிடம் அவசரமாக எடுத்து போவது, ஒரு அரிய மருந்துக்காக  நகரம் முழுதும் சுற்றி அலைவது….அப்படியும் அம்மாவுக்கு குணமாகாதது அவளுடைய தலையெழுத்து. இருந்தும், அவளுக்கு அந்த அளவுக்கேனும் சுய உணர்வு திரும்பி வந்திருந்தது என்னுடைய பிரயத்தினங்களால்தான். இதை எல்லாம் யாரும் சொல்லாதது ஆச்சர்யம்.

அம்மாவின் மூளை ஏதோ ஓரளவு மீண்டது ஆனால் நரம்புகளை இயக்கும் மண்டலம் மொத்தமாய் சிதைந்து போயிருந்தது. அவளை நர்ஸிங் ஹோமிலிருந்து அழைத்து வந்த மூன்று மாதங்களுக்குப் பின் இதை நான் கவனித்தேன். அவளுடைய விழிப்புணர்வு மீண்டிருந்ததற்கான ஒரே ஒரு அறிகுறி இருந்தது. என்னைப் பார்த்தபோதெல்லாம் அவளது கண்கள் அசைந்தன. நான் எங்கே போனாலும், வலம், இடம், ஜன்னலருகே, கதவருகே, அம்மாவின் கண்கள் என்னை எல்லா இடங்களிலும் தொடர்ந்தன. ஆம், நான் மட்டும்தான், சுப்தி அவளை அத்தனை நன்றாகப் பார்த்துக் கொண்டாள், கொகோலும், மம்பியும் அவர்களது பாட்டியின் ஆன்மா. ஆனாலும் அம்மாவின் பார்வை என்னைப் பார்க்கும் போது இருப்பதைப் போன்ற இயக்கத்துடன் வேறெப்போதும் இருக்கவில்லை.

முதலில் எனக்குக் கொஞ்சம் சஞ்சலமாய் இருந்தது. பலமுறை நான் அவள் அருகே உட்கார்ந்து கேட்டிருக்கிறேன் – என்னத்தைப் பார்க்கிறாய் அம்மா? ஏதாவது சொல்லேன்.

கண்ணின் மணிகளில் ஒரு விசித்திரமான துடிப்பு தெரியும்; வார்த்தைகள் பீறிட்டு வர முயல்வது போல், ஆனால் முடியாதது போல். விடுபடத் தவிப்பது போல.

போகப்போக அது எனக்குப் பழகிப் போனது. பின்பு, இதெல்லாமே ஒரு விளையாட்டு போல ஆனது. அம்மாவைப் பார்க்க யார் வந்தாலும் சொல்வார்கள் – அந்த அலமாரி பக்கமாய் போய் நில் பப்லூ, அவள் கண்கள் எங்கே போகின்றன பார்க்கலாம்.. படுக்கைக்கு பின்னால் போ, இப்போ அவள் கண்களுக்கு உன்னைக் கண்டுபிடிக்க முடியாது.. ஒ பாரு பாரு, ரேணு அக்காவின் கண்கள் பப்லு அறையை விட்டுப் போகும்போது அவன் பின்னாலேயே போகின்றன. – அவள் கண்ணின் மணி அவன் – பாவம்!

மாதங்கள் கடந்த போது, அம்மாவுடன் உட்கார எனக்கு நேரம் கிடைப்பது அரிதானது. என்ன பிரயோஜனம்?? தவிர எனக்கும் என் குழந்தைகள், என் மனைவி, என் ஆபீஸ் எல்லாம் இல்லையா? அப்போதும் வழக்கப்படி ஓரிரு தடவை அவளிடம் போவேன். சிறிது நேரம் அவள் அருகில் நிற்பேன், நாடித்துடிப்பை சரி பார்ப்பேன், அவளுடைய உதவிக்கான பணியாளரிடம் அவளுடைய நிலைமை பற்றி கேட்பேன். அவளுடைய ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க  ஒரு கருவியை சமீபத்தில் வாங்கி இருந்தேன், அதை நானே உபயோகிப்பேன்.. தினமும் பத்து ரூபாய் எத்தனை நாட்களுக்கென்று செலவழிக்க முடியும்? ரமா சாதாரண பணியாளர்களைப் போலத்தான். கற்றுக் கொள்ளும் ஆர்வம் அவளிடம் கிடையாது, இந்த வேலைகளைச் செய்ய அவளை நம்ப முடியாது. ஆபீசுக்குப் புறப்படுவதற்கு முன்பு கூட ஒரு முறை அவள் அறையில் எட்டிப் பார்த்து விட்டுப் போவேன். 

இன்றைக்கு அவளைப் பார்க்கப் போனேனா? ஞாபகம் இல்லை. கைக்குட்டையோ ஏதோ கிடைக்கவில்லை; என்னுடைய அவசரத்தில் இருக்கலாம். அட, இந்தக் குட்டி விவரங்களை நினைவு வைத்துக் கொள்வது எப்போதும் சாத்தியமா என்ன? அதுவும் ஒரே ஸ்திதியிலேயே ஒவ்வொரு தினமும், பல மாதங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி?

இன்னொரு பிணம் வந்தது ஒரு கண்ணாடி சவப்பெட்டியில். ஒரு முதிய பெண்மணி.

”நமக்கு  அதிருஷ்டம்” ரோனி அண்ணா தன் நெற்றியைத் தொட்டு மெதுவாக சொன்னார்.

நான் திரும்பிப் பார்த்தேன் – “என்ன சொல்கிறீர்கள்?”

“அத்தையை நாம சரியான நேரத்தில் கொண்டு வந்தோம். எத்தனை பெரிய வரிசை உருவாகிவிட்டது என்று உனக்கு பார்க்க முடியவில்லையா? இன்னும் ஒரு பத்து நிமிடம் தாமதமாகியிருந்தால், மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்திருக்கும்.”

இந்த கனமான தருணத்திலும், எனக்கு சிரிப்பு வந்தது. நீண்ட இருபத்தைந்து மாதங்களுக்கு இந்த மூன்று மணிகளால் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது?

ஷந்து அண்ணாவும் டுலுவும் பேசிக்கொண்டே எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஐம்பது வயதைத் தாண்டிய ஷந்து அண்ணாவிடம் ஒரு  வியக்கத்தக்க குணம் இருந்தது. அவர் எங்கே இருந்தாலும் சரி, ஏதாவது உறவினர் அல்லது நண்பர்களின் மறைவுச் செய்தி கேட்ட உடனேயே வந்துவிடுவார். சடங்குகள் எல்லாம் முடியும் வரை அத்தனை பொறுப்புகளையும் முன்வந்து எடுத்துக் கொள்வார். இன்றும் கூட போன்கால் கிடைத்த உடனேயே பெரிய மாமி, அண்ணியுடன் வந்துவிட்டார். வந்ததும் உடனே செய்ய வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்தார். கண்ணாடி சவப்பெட்டி, பூக்கள், உலர்ந்த தானியம், ஊதுவத்தி, வாசனைப் பொருட்கள்…அம்மாவின் மார்பில் கீதைப் புத்தகம் வைக்கப்பட்டதா, தானியங்கள் இருக்கும் பொட்டலத்தில் நாணயங்கள் வைக்கப்பட்டனவா – காரணம் ஷந்து அண்ணா ஒவ்வொரு சின்ன விவரத்தின் மேலும் கண் வைத்திருந்தார் மயானத்திலும் அவர் அத்தனையே சுறுசுறுப்புடன் இருந்தார். மாநகராட்சிக்கு விரைவது, புரோகிதருடன் பேரம் பேசுவது… கையில் நெருப்புடன் நான் அம்மாவின் உடலைச் சுற்றி வருகையில் அவர் என் பக்கத்தில் இருந்தார்.

ஷந்து அண்ணா ஒரு ப்லாஸ்டிக் பொட்டலம் வைத்திருந்தார், அதை ப்ரபீர்தாவிடம் கொடுத்துவிட்டு என்னிடம் வந்தார் – பப்லூ உனக்கு துணிகள் வாங்கியாச்சு. அவை ப்ரபீர்தாவிடம் இருக்கின்றன. குளித்த பிறகு அவற்றை அணிந்துகொள்.:

“இந்தக் குளிர் இரவில் அவன் எப்படி குளிப்பான்? வேண்டாம், வேண்டாம், கொஞ்சம் கங்கை நீரை மேலே தெளித்துக் கொள்ளட்டும்.”

“ஆஹா, நான் என்ன அவனை கங்கையில் குதித்துக் குளிக்க சொல்கிறேனா? அவன் வீட்டில் குளிக்கட்டும். ஹே பப்லூ, அத்தைக்காக உன்னால் இத்தனை செய்ய முடியாதா?”

கண்டிப்பாக. நான் அத்தைக்காக “இத்தனை” மட்டும்தானே செய்து கொண்டிருந்தேன்.

ஷந்து அண்ணா என் முகம் கோணியதை கவனிக்கவில்லை. மேலே பேசினார், “அத்தையின் இறப்புச் சான்றிதழ் என்னிடம் இருக்கிறது, புரிந்ததா? நான் மூன்று நகல்கள் எடுத்து உன்னிடம் கொடுக்கிறேன். அதை கவனமாக வைத்துக் கொள். அதைத் தொலைத்தால் அத்தையின் உடமைகள் எதுவும் உனக்குக் கிடைக்காது.”

ஏதோ அத்தையிட்ம் நிறைய சொத்து இருந்தது போல்.  ஓய்வு பெற்ற போது கிடைத்ததை எல்லாம் ஃப்ளாட்டுக்கு செலவழித்தாயிற்று. நான் அவளைத் தடுத்துப் பார்த்தேன், அவள் கேட்கவில்லை –  அத்தனை பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் பப்லூ? அதற்கு பதில், எத்தனை முடியுமோ அத்தனை பணமாய் கொடுத்துவிடு, வங்கிக் கடன் குறையும். கோபப்படாதே, உன்னுடைய வீடு என்னுடையதுதானே, என்னை வெளியே துரத்தி விடுவாயா? ஆக, அவள் சேமிப்பு அப்படிப் போயிற்று. என்ன மிச்சம் இருந்ததோ அதில் அவளுடைய பேத்திக்கு ஒரு தங்க சங்கிலி வாங்குவாள், அல்லது கொகோலின் பெயரில் ஒரு கேஷ் சர்டிபிகேட்… அந்தப் பணத்தை அவள் சேமித்திருந்தால், தேவைப்பட்ட நேரத்தில் உதவியிருக்கும்.

பால்துவும் தீபூவும் திரும்ப வந்து ஹாலுக்குள் நுழைந்தனர். இப்போது அவர்கள் அழைக்கின்றனர் ‘ பப்லூவை உங்களுடன் கூட்டி வாருங்கள். நம்முடையது ஆச்சு.”

ஷந்து அண்ணா உடனே சுறுசுறுப்பானார். ”வா, வா… இது ரொம்பவே சீக்கிரம்.” 

ரோனி அண்ணா என்னை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டார். இன்னொரு பக்கம் ப்ரபீர்தா. அவர்கள் என்னை அம்மாவின் அஸ்தியை நோக்கி அழைத்துச் சென்றனர் என்னை எதற்காக இத்தனை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? நான் விழுந்துவிடுவேன் என்று பயப்படுகிறார்களா? இல்லை உடைந்து விடுவேன் என்றா?

ஹாலைத் தாண்டி, எழுப்பப்பட்டிருந்த மேடையில் ஏறினோம். நெருப்புக்குள் நுழையக் காத்திருந்த நான்கு சவங்களைத் தாண்டிப் போனோம். அடுப்பிலிருந்து சூடு பரவியது என் உடலைச் சுற்றி ஒரு வினோதமான கதகதப்பு பரவியது.

கதகதப்பா. அல்லது கனமின்மையா?

எனக்கு சரியாய் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

                                                    II

படுக்கையில் சாய்ந்தபடியே, பட்டியலின் மேல் கண்ணை ஓட்டினேன். புரோகிதர் என்ன ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார்? அரிசி, பருப்பு, எண்ணை, உப்பு, காய்கறிகள், பூக்கள், பழங்கள், விளாமரத்து இலைகள், தர்ப்பை, எள், பார்லி, சாம்பிராணி, நெய், தேன், சர்க்கரை, வாழை இலைகள், வெற்றிலை, பாக்கு, வாசனைப் பொருட்கள் – அதில் என்ன இல்லை? தானம் செய்ய வேண்டிய பட்டியலும் சின்னதாக இல்லை. தட்டு, கிண்ணங்கள், தம்ளர், குடை, செருப்பு, புடவை, பாத்திரம், தொட்டி, விளக்குக்கம்பம் …”லேடீஸ் செருப்பு” என்பதற்கு பக்கத்தில் அளவும் குறிக்கப்பட்டிருந்தது, குடை வண்ணத்துடன் இருக்க வேண்டும்…அவர் படுக்கை, மெத்தை, தலையணை இவற்றைக் குறிப்பிட்டிருக்கவில்லை. அதற்கான பணத்தை வாங்கிக் கொள்வார். நான் எத்தனை மிச்சம் பிடிக்கமுடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

இதற்கெல்லாம் எத்தனை செலவாகும்? பட்ஜெட்டைத் தாண்டி போகாமல் இருக்க வேண்டும். வங்கியிலிருந்த கடைசி பத்தாயிரத்தை நான் எடுத்திருந்தேன், ப்ரபீர்தாவிடம் ஐந்தாயிரம் கடன் வாங்கியிருந்தேன், – இது போதுமா? பந்தலுக்கே மூன்றாயிரம் போய் விடும். கட்டிடத்தின் மேல்மாடியை வெறும் வெள்ளைத் துணியால் மூடுவதற்கு எதற்காக இத்தனை கேட்கிறார்கள்? நாற்காலிகள், மேஜைகளுக்கு தொள்ளாயிரம் – சுமார் ஆயிரம். சிராத்த சடங்குக்கு தொண்ணூறு பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள். தொண்ணூறை ஐம்பத்தைந்தால் பெருக்கினால் சுமார் ஐயாயிரம். மத்ஸ்யமுக் விருந்துக்கு முப்பது விருந்தினர்கள். எண்பதால் பெருக்கினால் கிட்டத்தட்ட இரண்டரை. ஆக மொத்தம் பதினொன்றரை. சிராத்தத்துக்கு மூன்றாயிரத்துக்கு மேல் தேவைப்படாது என்று நம்பினேன். இரண்டு நாளைக்குப் பின் செய்ய வேண்டிய காட் சடங்குகளுக்கும் கொஞ்சம் செலவாகும்…இது போதும் என்று தோன்றுகிறது. அப்படியும் தேவைப்பட்டால் சிராத்தத்தின் போது ஒரு வகை இனிப்பை குறைக்கலாம். ஒரு தட்டுக்கு ஐந்து ரூபாய் சேமிக்கலாம். மொத்தமாய் நானூற்று ஐம்பது. குறைவான தொகை இல்லை, ஒவ்வொரு காசும் முக்கியம்.

திடீரென்று எனக்கு சிரிப்பு வந்தது. என்ன குழந்தைத்தனமான எண்ணம்! பானையிலிருந்து லட்சக்கணக்கில் வெளியே ஓடி இருக்கிறது, இங்கே நான் ஒரு பைசாவை சேமிக்க சுண்ணாம்பு தேடிக்கொண்டிருக்கிறேன். நர்ஸிங் ஹோமுக்கு மட்டும் நாற்பதாயிரம் செலவாயிருக்கிறது, பிஸியோதெரபிஸ்ட்டுக்கு இருபது, இருபத்தைந்தாயிரம். முதல் மூன்று மாதங்களுக்கு இரண்டு நர்ஸ்கள் இருந்தார்கள், அரை நாளைக்கு ஒருவர் என்று. அவர்களால் எனக்கு நூற்று இருபது, நூற்று இருபது மொத்தம் இருநூற்று நாற்பது பின்னடைவு. அந்தச் செலவைக் குறைக்கத்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாய் கிழே இறங்கி வரவேண்டியிருந்தது. இரண்டு நர்ஸ்களிலிருந்து, இரவில் ஒரு நர்ஸ், பகலில் துணைக்கு ஒரு ஆள் என குறைத்தேன்; பின்பு இரண்டு துணையாட்கள்; கடைசியில் அந்த ரமா. அவள் இரவும் பகலும் இங்கே தங்கி இங்கேயே சாப்பிட்டாள். சாப்பிடட்டும்; அவளுக்கு சம்பளம் குறைவாகத்தான் கொடுத்தேன். அத்தனை சிக்கனம், அத்தனை போராட்டம்; இன்னும் சேம நிதியில் எடுத்த கடன் இருக்கிறது, கூட்டுறவுக் கடன்…நாசமாய் போக, அதையெல்லாம் யோசிக்கக் கூடத் தோன்றவில்லை. எல்லாம் போகட்டும், போகட்டும் – ஒரேயடியாய் எல்லாம் முடிந்து போகட்டும். நானும் சுப்தியும் இப்படி இருக்கமாட்டோம் என நம்பலாம். அப்படி ஆனோமானால், மம்பியும் கொகோலும் நன்றாய் சபிப்பார்கள்.

சுப்தி அறைக்குள் வந்தாள். அலமாரியைத் திறந்தாள். தட்டுகளில் துழாவினாள்.

”எதைத் தேடுகிறாய்?”

“என்னை எப்படி படுத்துகிறாள் பாருங்கள்.”

”யாரு?”

”ரமா. ஒரு புடவைக்காக என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறாள்,”

“அவளுக்கு ஒன்றைக் கொடேன்.”

“ஒன்றில்லை, இரண்டு கொடுத்தேன், அம்மாவின் புடவைகள். வெள்ளையாய் இருந்தால் என்ன, அவற்றுக்கு ப்ரிண்ட் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவளுக்கு திருப்தி இல்லை.”

“அவளுக்கு என்ன வேண்டுமாம்? ஒரு பனாரஸ் பட்டா?”

“அது மாதிரி ஏதோ.” சுப்தி முகத்தை சுளித்து மேலே சொன்னாள் : “நான் தீதாவின் அழுக்கையெல்லம் கையாண்டிருக்கிறேன். எனக்கு ஒரு பட்டுப் புடவையாவது கிடைக்க வேண்டாமா? எங்கிறாள்”

இந்த உலகத்தில் எல்லோரும் அவரவருக்குத் தேவையானவற்றை கவனித்து கொள்கிறார்கள். ரமாவை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? என் அம்மா ரமாவுக்கு ஏதும் உபகாரம் செய்யவில்லை. அவளிடமிருந்து ஒவ்வொரு சொட்டுக் கடமையையும் அவள் எடுத்துக் கொள்ளவில்லையா?

கடுகடுப்பான முகத்துடன் “ இந்தத் தொல்லையை எல்லாம் விட்டுவிடு. அவளுக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடு” என்று சொன்னேன்.

ஒரு சாயம் போன மூர்ஷிதாபாத் பட்டுப் புடவையை எடுத்துக் கொண்டு சுப்தி வெளியே போனாள்.

நான் பட்டியலை மேஜை மேல் வைத்துவிட்டு மல்லாந்து படுத்தேன். என் கண்கள் திரும்பவும் கனத்தன. என் உடல் முழுதும் களைப்பு அடித்தது. காலையிலிருந்து நிறைய அலைச்சல், அழைப்புகளைக் கொடுக்க என்னுடன் டுலுவை அழைத்துப் போயிருந்தேன் மணிக்தலா, ஷ்யாம்பஜாரில் முடித்தோம்…வட கொல்கத்தா. சிலர் போனில் அழைக்கப்படிருந்தார்கள்; இருந்தும் பலருக்கு ஒரு துயரமான முகத்தைப் பார்க்கும் வரை திருப்தி இல்லை. அதன் பின் மதியம் இரண்டு ஐம்பதுக்கு வெந்த சோறும், நெய்யும் அவசரமாய் விழுங்கியதன் பலன் நெஞ்செரிச்சல். இப்போதும் கூட.

ஆனால் களைப்பு அஜீர்ணத்தால் இல்லை. அது வேறு மாதிரி இருந்தது. மாரத்தான் ஓட்டத்தை இப்போதுதான் முடித்த ஓட்டப்பந்தய வீரரின் களைப்பை ஒத்ததாக அது இருந்தது. அம்மாவின் தகனத்திலிருந்து திரும்பிய பின் என் உடல் தளர்ந்து போயிருந்தது.

இந்த எண்ணத்தில் ஒரு கசப்பு இருந்ததா? ஓட்டப்பந்தய வீரர்கள் தங்கள் உடம்பை நான் வருத்தியது போல் வருத்தி ஓடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அவர்கள் ஓட்டத்தின் முடிவுக் கோட்டைத் தொடுவதை அம்மாவின் இறப்புடன் ஒப்பிடலாமா? முதல் நாளிலிருந்து இந்த இலக்கை அடையவா நான் விரும்பினேன்? இல்லை, இல்லை, இல்லை, இல்லை, எப்போதும் இல்லை. மாறாக, அலைகளுக்கு எதிராய் நீந்தியிருந்தேன், அம்மாவை காப்பாற்றப் போராடியிருந்தேன். அம்மா மீண்டு வரவேண்டும், அவள் நடக்க வேண்டும், முன்போல் இல்லையென்றால் கூட ஏறக்குறைய இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று மனதாலும் ஆன்மாவாலும் வேண்டிக் கொண்டிருந்தேன். தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்த பின்னும் சிறிதும் முன்னேற்றம் இல்லையெனில் ஒருவன் எப்படி உணர்வான்? பந்தயப் பாதை மெதுவாய் பின்பக்கமாய்த் திரும்புவது போலவும், ஒரு நீண்ட சுற்று வழியை அவன் கடப்பது போலவும் இப்போது தோன்றுமா? மேலும் ஓடிக் கொண்டே, என் வியர்வையில் குளித்து, நாக்கு வெளியே தொங்க, கலோரிகள் எரிந்துகொண்டு. எத்தனை நேரம் ஒரு மனிதனால் இப்படியே தொடர முடியும்?

சுப்தி திரும்ப உள்ளே வந்திருந்தாள், கையில் டீயுடன். மேஜை மேல் கோப்பையை வைத்துவிட்டு படுக்கையில் உட்கார்ந்தாள். தன் சிவப்பு நிற பார்டர் கொண்ட புடவையின் நுனியால் படுக்கையின் ஓரத்தை தூசி தட்டியபடி, “உங்கள் ஷந்து அண்ணா ஜெயித்து விட்டார்” என்றாள்.

நான் முகத்தை சுளித்து “ஏன்?” என்றேன்.

”அம்மாவின் அறையில் சடங்குகளை செய்யணும் என்ற நம் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை,”

“ஷந்து அண்ணா சொன்னதில் தவறில்லை. அம்மாவின் அறை ரொம்பவே சிறியது. சடங்குகளை முன் ஹாலில் செய்வது இன்னும் வசதியாய் இருக்கும்: மக்கள் உட்காரலாம்…அணி செய்பவர்களிடம் ஜமக்காளங்களை விரிக்கும்படி சொல்லியிருக்கிறேன்.”

“எனக்கு எதிலும் ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால் எனக்கு எரிச்சல் எதனால் தெரியுமா? உங்கள் ஷந்து அண்ணா பேசும் தோரணை… அத்தையின் அறை ஒரு கூண்டு…மூச்சு திணறும்…சரியான காற்றோட்டம் இல்லை… இதெல்லாம் சொல்லுவதற்கு என்ன அர்த்தம்? நாம் வேண்டுமென்றெ அம்மாவை ஒரு இருட்டு வளையில் வைத்திருந்தது போல.”

சுப்தியின் வருத்தத்துக்குப் போதுமான காரணம் இருந்தது.  ஃப்ளாட்டுக்குக் குடி வரும் முன் திரும்ப திரும்ப அம்மாவிடம் வருந்திக் கேட்டுக்கொண்டிருந்தாள், அம்மா இணங்க மறுத்து விட்டாள். அம்மா ஒரு விஷயத்தில் பிடிவாதமாக இருந்தாள்… நான் ஒற்றை ஆள், எனக்கு அந்த அறை எதற்குத் தேவைப்படும்? மேலாய், நீ பெரிய அறையை எடுத்துக்கொள், குழந்தைகள் நடு அறையை எடுத்துக் கொள்ளட்டும், அவர்கள் கை கால்களை கொஞ்சம் நீட்டிக்கொள்ளட்டும்.

நான் கையை அசைத்து “ ஷந்து அண்ணாவைத் தனியே விடு. அவர் ஒத்தாசையாய் இருக்கிறார்… நாம் அம்மாவுக்கு என்ன செய்தோம் என்பது நமக்குத் தெரியும்” என்றேன்.

“சடங்குகளை வீட்டிலேயே செய்யாமல் இருந்தால் மேலாய் இருந்திருக்கும். கட்டிட சொஸைட்டியிடம் அனுமதி வாங்கு, இவர் முன்னால் கையைத் தேய், அவர் சொல்வதைக் கேள் – இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை.”

“என்ன செய்வது? சைதன்யாமத், கவுரியாமத், இந்த மத் அந்த மத் என்று எல்லா இடங்களையும் சுற்றியாச்சு.  பெற்றோரை தகனம் செய்வதற்கு முன்பே மக்கள் சிராத்தத்துக்கு இடம் முன்பதிவு செய்வார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?… ஒரு விதத்தில் இதுவும் நல்லதே. நான் மடத்துக்கு பணம் கட்டி அம்மாவின் ஈமச்சடங்குகளை முடித்து விட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது.”

“பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள். கொஞ்ச நேரம் முன்னாலேதான் உங்கள் குக்கு அக்கா நைச்சியமாய் என்னென்னவோ சொன்னாள்.”

”என்ன சொன்னாள்?”

“சித்திக்கு நீங்கள் மூக்கு வழியாய் குழாயில் உணவு கொடுத்திருக்கலாம்; ரமா போன்றவர்களால் உணவை ஜாக்கிரதையாக கொடுக்க முடியுமா…மொத்தத்தில் நாம் அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை என்று சொல்ல முயற்சி செய்தாள்.”

“அவள் பேசட்டும். நாம் செய்ததெல்லாம் நமக்குத் தெரியும்.” நான் மறுபடியும் எரிந்து வெடித்தேன். “வெளியாட்கள் சொல்வதை கேட்காதே.”

“வலிக்கிறது. புரிகிறதா, அது வலிக்கிறது. குடும்பச் செலவை எல்லாம் இரண்டு வருஷங்களாய் எப்படி சுருக்கி இருக்கிறேன். குழந்தைகளுக்கு பழம் வாங்குவதை நிறுத்தி விட்டு அம்மாவுக்கு திராட்சையும், மாதுளம்பழ ஜூஸும் கொடுத்தேன். துர்கா பூஜையின் போது மம்பிக்கும் கொகோலுக்கும் ஒரு செட்டுக்கு மேல் துணி எடுத்துக் கொடுத்தேனா? எங்கே பார்த்தாலும் கடனுக்கு மேல் கடன். மாசக்கடைசியில் எத்தனை மிச்சம் இருந்தது என்று யாராவது விசாரித்தார்களா? தூரத்திலிருந்து பரிதாபத்துடன் த்ஸு கொட்டினார்கள். நாளைக்கு மம்பி ஒன்பதாவது வகுப்பில் இருப்பாள். அவளுக்கு ஒரு நல்ல டியூஷன் ஆசிரியர் வேண்டும். நமக்குக் கட்டுப்படி ஆகுமா? அம்மாவை பெரெனியல் தாட் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தது, அம்மாவுக்கு ஹார்லிக்ஸ் வாங்கணும், அல்லது காம்ப்ளான்…

“அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு போனபோதெல்லாம், எனக்கு எங்கேயாவது நிம்மதி இருந்ததா? நாதுன் சித்தியின் பெண் கலியாணத்துக்கு, நான் காலையில் முகத்தை காட்டினேன், நீங்கள் சாயந்திரம். ஏன்? அம்மாவுக்காக? அப்படி இருந்தும், உங்கள் பெரியம்மா போகும்போது சொல்லிவிட்டுப் போனாள் – ரேணுவுக்கு இழுப்பு வந்த போது நீ அங்கே இருக்கவில்லையா பௌமா? என்று…அது கேட்க எப்படி இருக்கிறது, சொல்லுங்க? சொல்லுங்க.”

“அதை விடு. யார் நிறைய செய்கிறார்களோ அவர்களைப் பற்றித்தான் அதிகம் குறை சொல்வார்கள், அதுதான் நிஜம்…” நான் ஒரு பெருமூச்சு விட்டு சொன்னேன் “சரி. உன் டீயைக் குடி. ஆறிப் போய்க் கொண்டிருக்கிறது.”

சுப்தி கண்களைத் துடைத்துக் கொண்டு டீயை ஒரே மடக்கில் குடித்தாள். எழுந்து அடுத்திருந்த குளியலறைக்குள் சென்றாள். வெளியே வந்து ஆர்வமற்ற குரலில் “இப்போ ஏதாவது சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டாள்.

நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தேன். தீக்குச்சியை ஆஷ்ட்ரேயில் நுழைத்துக் கொண்டே “ என்ன சாப்பிடணும்?” என்று கேட்டேன்.

“கொஞ்சம் பழங்கள் கொடுக்கிறேன்.”

“பழங்களா, டீ குடித்த பிறகா?”

“கொஞ்சம் கழித்து சாப்பிடுங்கள்.”

“எத்தனை பழம்தான் நான் சாப்பிட முடியும்? குரங்குகள் கூட இத்தனை பழங்களை சாப்பிட முடியாது.”

சுப்தி சிரித்தாள். “உங்க துஷி அக்கா கலையில் நிறைய வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா எல்லாம் விட்டுவிட்டுப் போனாள். கொகோலும் மம்பியும் அவற்றைப் பார்த்து பயந்து போனார்கள். வந்தவர்களெல்லாம் பழங்களும் இனிப்பும், பழங்களும் இனிப்பும் கொண்டு வந்தார்கள்… கொகோல் இனிப்பு திருடுவான், இப்போது ஃப்ரிட்ஜ் கிட்டத்தில் கூட அவன் போவதில்லை.”

“தூக்கி எறி. இல்லை வேலைக்காரியிடம் கொடு.”

“எத்தனை கொடுக்க முடியும்?”

“அப்போ நீயே உட்கார்ந்து அதை எல்லாம் சாப்பிடு. உனக்கு ஆப்பிள் பிடிக்குமே.”

“முன்னே பிடிக்கும். இப்போ சகிக்க முடியலை.”

“ அப்போ ஒண்ணு பண்ணு. பழங்கள் எப்படியோ போகட்டும். மம்பிக்கும் கொகோலுக்கும் பூரி பொரிக்கும் போது, எனக்கும் கொஞ்சம் பண்ணு. மதியம் சாப்பாடு சாப்பிட்டேன், இப்போ ஒண்ணும் வேண்டாம்; ராத்திரி சாப்பாடு சீக்கிரமாய் சாப்பிட்டு விடுகிறேன்…”

“உங்களுக்கு பூரி சாப்பிடணுமா?”

“அதனால் என்ன? நான் என்ன மாட்டிறைச்சியா சாப்பிடுகிறேன்?”

“அது சரி. உங்க சொந்தக்காரர்களில் ஒருவர் வரட்டும், பிறகு உலகம் பூரா சொல்லித் திரிவார்கள் சுப்தி மாமியாரின் சாவைக் கொண்டாட அவள் புருஷனுக்கு பூரி பண்ணிக் கொடுத்தாள் என்று.”

“அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நாம் மற்றவர்களுக்காகவா வாழ்கிறோம்? சுத்திகரிப்புக்கான விதிகளை அனுசரிப்பது நம்முடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தது, அப்போதும் கூட நான் அதை எல்லாம் கடைப் பிடிக்கிறேன்…அம்மாவுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்தது என்பதற்காக மட்டுமே… இந்த வேட்டியைக் கட்டி கொள்வதே எனக்கு ஒருமாதிரி அசிங்கமாக இருக்கு.”

“அவற்றைச் கெய்யும் போது சரியாய் செய்யுங்கள். இன்னும் கொஞ்ச நாள்தான். இத்தனை நாட்களுக்கு இத்தனை செய்ய முடிந்த போது, இன்னும் கொஞ்சம் நாட்களே இருக்கும் போது பொறுமை இழப்பானேன்?”

வாசற்கதவு மணி ஒலித்துக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாய்…மம்பியாய் இருக்கலாம். ஸ்கூலுக்குப் பிறகு அவசரமாய் ட்யூஷனுக்கப் போயிருந்தாள், இப்போது திரும்பி இருந்தாள். கொகோல் கதவை திறந்ததுமே ஒரே அமர்க்களம், சாப்பாட்டறையும் வரவேற்பறையும் இணைந்த இடத்தில் தட்டும் சப்தம்.

நான் முகத்தை சுளித்து “ என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இந்த அமர்க்களம்?” என்று கேட்டேன்.

“வேறென்ன? கொகோல் கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்தான். மம்பி அவனிடமிருந்து ரிமோட்டை பிடுங்கியிருப்பாள்.”

அவர்களுடைய பாட்டியின் இறப்புக்குப் பின் இருவரும் கொஞ்சம் அடங்கி இருந்தனர்; இப்போது அவர்களின் பழைய சொரூபத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மம்பியின் சிரிப்புடன், கொகோலின் குரல் உச்சஸ்தாயிக்கு உயர்ந்து கொண்டிருந்தது.

எரிச்சலுடன் சுப்தி சொன்னாள் “இருங்க, அவங்களுக்கு ரெண்டு அறை வெச்சுட்டு வரேன். இத்தனை பெரிய பெண், அவளை விட அஞ்சு வயசு குறைந்த தம்பி கிட்டே எப்படி நடந்துக்கறா.”

“இருக்கட்டும், ஒண்ணும் சொல்லாதே, ஃப்ளாட்டுக்கு கொஞ்சம் உயிர் திரும்பி வரட்டும்” என்று யோசிக்காமல் அவசரமாகச் சொன்னேன். “போன சில நாட்களின் மூச்சடைப்பு கொஞ்சம் குறையட்டும்.”

சன்னமான குரலில் சுப்தி கேட்டாள், “இந்த சில நாட்களா, இல்லை இருபத்தைந்து மாதங்களா?”

அப்புறம் அவள் மௌனமாகிவிட்டாள். நானும் சொற்களுக்காகத் தடுமாடிக் கொண்டிருந்தேன். மத்தியான வெளிச்சம் எப்போதோ குறைந்து போயிருந்தது; ஆனாலும் மறைந்துகொண்டிருந்த வெளிச்சம் மூடிய கதவையும் ஜன்னல்களையும் ஊடுருவிக்கொண்டிருந்தது. அவற்றின் வழியே கசிந்து கொண்டிருந்தது.

III

சுத்திகரிப்பு விதிகள் முடியும் உடைக்கும் நாள். எல்லாம் நல்லபடியாக முடிந்திருந்தது.

கிட்டத்தட்ட அழைத்த அனைவருமே வந்திருந்தனர். இரண்டு மூன்று பேரைத் தவிர. சந்தனும் அவன் மனைவியும் கடைசி நேரத்தில் சிக்கிக் கொண்டனர். இன்னும் பால் குடித்துக் கொண்டிருந்த அவர்களது குழந்தை காலையிலிருந்து வாந்தியும் பேதியுமாய் இருந்தது. ஷந்து அண்ணாவின் மனைவியும் வரவில்லை. வெள்ளிக்கிழமைகளில் அவளுக்கு சந்தோஷி மா பூஜையோ எதுவோ இருந்தது, அதனால் அவள் வெளியே சாப்பிட முடியாது.

சாப்பாட்டுக்குப் பிறகு சும்மா கூடி உட்கார்ந்திருந்தோம். இந்த விஷயம், அந்த விஷயம், இப்படி…ரோனி அண்ணா வறுத்த டாப்ஷே மீன் துண்டங்களில் ஒன்பது சாப்பிட்டிருந்தார் இன்று. ஷந்து அண்ணா பதிநான்கு ரசகுல்லாக்கள் சாப்பிட்டார் – உணவு ஏற்பாடு செய்தவரின் முகத்தில் இருந்த கவலையைப் பற்றி எங்களிடம் சொல்லும் போது துஷி அக்காவும் குக்கு அக்காவும் வெடித்து சிரித்தனர். உணவைப் பற்றிய பேச்சு போய்க் கொண்டே இருந்தது – யார் வீட்டில் அந்த ஒல்லியான மனிதர் எண்பது மீன் துண்டங்கள் சாப்பிட்டார், அதை யார் பார்த்தது. யார் வீட்டில் நாற்பது குடம் தயிரை யார் காலி செய்தார், எப்படி ஒரு சமயம் மாப்பிள்ளை வீட்டவர் தாம் சாப்பிட்ட எல்லா இனிப்புகளின் மேலும் உப்பைத் தடவி சாப்பிட்டார்கள் என்றெல்லாம். ஷந்து அண்ணாவிடம் பிணங்களை எரிப்பது பற்றிய கதைகள் நிறைய இருந்தன: அவற்றில் சிலவற்றை எக்கச்சக்கமான விவரங்களோடு அவர் விவரித்தார். இதற்கிடையில், திடீர் என்று கொஞ்ச நேரத்துக்கு அவ்வப்போது அம்மாவும் நினைக்கப் படுவாள், சிராத்த தினத்தைப் போலவே. சிலசமயம் சத்தத்திலும், கிண்டலிலும் அவள் தொலைந்து போவாள். இதுமாதிரியான விஷயங்கள் நடக்கும் போலிருக்கிறது. சிராத்தச் சடங்குகளின் ஆடம்பரத்தில் இறந்தவர் ஒருமாதிரி மங்கிப் போய்விடுகிறார். துயரம் இருக்கிறது ஆனால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதற்கு கிடைப்பதில்லை.

கூட்டம் சாயங்காலம் கலைந்தது. ஒவ்வொருவராய் விடைபெற்றுக் கொள்ளத் தொடங்கினர்.

கிளம்பும் போது குக்கு அக்காவின் கணவர் சொன்னார் “பப்லூ, நீங்கள் எல்லோரும் சில நாட்களுக்கு எங்கேயாவது விடுமுறை எடுத்துப் போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” குக்கு அக்காவும் சொன்னாள், “ஆமாம், முடிந்தால் நீங்கள் போகத்தான் வேண்டும். சித்தியால் எல்லோரும் கஷ்டப்பட்டீர்கள். மனதையும் உடலையும் மீண்டும் தெம்பாக்கிக் கொள்ள வேண்டும்.”

போக முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். நான் முற்றிலும் சோர்வடைந்திருந்தேன், நோயாளி, நோய், மருந்துகள், டாக்டர்கள் என்றெல்லாம். ஆனால் இப்போது எப்படிப் போக முடியும்? அம்மா இல்லை என்றாலும் கடன்கள் இருந்தனவே.

இருண்ட முகத்துடன் ”பார்ப்போம். கொஞ்ச நாட்கள் போகட்டும்” என்று பதிலளித்தேன்.

வீடு காலியானதும் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருந்தது. இரண்டு நாட்களாய் சோஃபாவும், மேஜைகளும் சுவரருகே தள்ளப்பட்டிருந்தன. போகும் முன் ஷந்து அண்ணா ஓரளவுக்கு அவற்றை அதனதன் இடத்தில் இழுத்துப் போட்டிருந்தார். மிச்சமிருந்த உணவு சமையலறையில் குவிந்திருந்தது; அவற்றில் கொஞ்சம் சின்னக் கிண்ணங்களில் போட்டு ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்கப்பட்டது. மீன் வறுவல் வெளியே வைக்கப்பட்டது: குளிர்காலத்தில் அவை கெட்டுப் போகுமா? தரையும் விவரிக்க முடியாத அளவுக்கு குப்பையாய் இருந்தது; அதை சுத்தம் செய்வது பெரிய வேலையாய் இருந்தது. இதற்கிடையில் உணவு ஏற்பாடு செய்தவரின் கணக்கைத் தீர்த்தேன். சந்தன் எட்டு மணிக்கு வந்தான். முதலில் தயங்கினாலும், கொஞ்ச நேரம் இருந்தான். சுப்தி மதிய உணவின் மிச்சத்தை அவனை சாப்பிட வைத்தாள்.  

இரவில் நான் எதையும் தொடவில்லை. சுப்தியும். காற்றில் இன்னும் சூழ்ந்திருந்த மீன் வாசம் பிரட்டியது. மம்பியும் கொகோலும் மிகவும் களைத்துப் போயிருந்தனர்; சாயந்திரத்திலிருந்தே கொகோல் தூங்கி வழிந்து கொண்டிருந்தான். இருவரும் சந்தனுடன் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தூங்கிப் போனார்கள்.

படுக்கப் போகும் முன், சோஃபாவில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தேன். டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. விளையாட்டு சேனல். ஒரு பரபரப்பான கால்பந்தாட்டப் பந்தயம் ஓடிக்கொண்டிருந்தது, ஸ்பானிஷ் லீக்காக இருக்கக்கூடும். சத்தத்தை குறைத்துவிட்டு திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எதையும் கவனித்துக் கொண்டிருக்கவில்லை. என் தலை இறுக்கமாய் இருந்தது. கடந்த சிலநாட்கள் எவ்வளவு பதட்டமானவை..

சுப்தி கொசுவலையைப் போடுவதற்காக குழந்தைகளின் அறைக்குச் சென்றிருந்தாள். அவள் வந்து என்னருகே அமர்ந்தாள். சிறிது நேரத்துக்கு அவளுடைய கண்கள் டி.வி. திரையின் மேல் நிலைத்திருந்தன.

சடாலென பெருமூச்சு விட்டு அவள் சொன்னாள் “வீடு திடீர் என்று இத்தனை வெறுமையாய் இருக்கிறது.” அவளது சொற்கள் எனக்குப் புரியவில்லை. ஏன் வெறுமையாய்? கடந்த சில நாட்களாய் அத்தனை கூட்டம் இருந்ததாலா?

அவள் திரும்பவும் பெருமூச்சு விட்டாள், “அம்மா எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும், நம்முடனாவது இருந்தாள்.”

“ஹ்ம்.”

“குக்கு அக்கா சொன்னது சரிதான்.நாம் எங்காவது போகவேண்டும். ரொம்ப தூரம் இல்லை, எங்கேயாவது பக்கமாய், என்ன சொல்கிறீர்கள்? திகா, இல்லையென்றால் பூரி, அல்லது காட்ஷீலா, மதுபூர்…?”

“எனக்குப் புரிகிறது. ஆனால் பணம் எங்கிருந்து வரும்?”

“பணத்தைப் பற்றி யோசித்து பைத்தியமாகாதீர்கள்.” ஓரிரண்டு விநாடிகள் சுப்தி மௌனமாக இருந்துவிட்டு பின்பு தாழ்ந்த குரலில் ஆரம்பித்தாள், “அம்மாவுக்கான செலவுகள் இனிமேல் இல்லை…தவிரவும், நாம் இப்போதே போகப் போவதில்லை. மம்பிக்கும் கொகோலுக்கும் தேர்வுகள் முடியட்டும். கோடை விடுமுறை தொடங்கட்டும்.”

அதே கணத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. கறுப்பரான பந்தாட்டக்காரர் தன் மேற்சட்டையைக் கழட்டி விட்டு மைதானம் முழுதும் கொண்டாட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார். பார்வையாளர்கள் கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள். சந்தோஷத்தில் ஆடிக் கொண்டும், கொம்புகளை ஊதிக் கொண்டும், டமாரங்களை தட்டிக் கொண்டும்.

நான் ரிமோட்டை அழுத்தி டிவி யை அணைத்தேன். அந்தத் தாழ்ந்த ஒலியும் போய்விட்டது. எங்களிடையே ஒரு விசித்திரமான அமைதி இறங்கியிருந்தது. உணவருந்தும் இடத்தில் ஃப்ரிட்ஜ் முனகியது. முனகல் தொடர்ந்து திடீரென நின்றது.

சுப்தி எழுந்தாள். குறட்டையை அடக்கிக் கொண்டு கேட்டாள் “நீங்கள் தூங்கப் போவதில்லையா?”

“நீ போ. இதோ வருகிறேன்.”

சுப்தி இரண்டெட்டு எடுத்து வைத்து பின் திரும்ப வந்தாள், “ நான் ஒன்று நினைத்தேன்.”

“என்ன?”

“திங்கட்கிழமையிலிருந்து உங்களுக்கு வேலை உண்டு…நாளைக்கும், அதற்கடுத்த நாளும் அறைகளை மாற்றி அமைப்போமா?”

”எப்படி?”

மம்பியும் கொகோலும் சேர்ந்து இருக்கும் போது சண்டை போடுகிறார்கள். மம்பிக்கு தனியாய் படிக்க ஒரு இடம் செய்துவிட்டால்? அம்மாவின் அறையில்?

“மம்பி அம்மாவின் அறையில் தனியாய் இருப்பாளா?”

“அவள் தனியாய் இருக்கப் போகிறாள் என்று யார் சொன்னார்கள்? உள்ளே ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டு அதை அவளுடைய படிப்பறையாக செய்து விடலாம்.”

“அந்த மேஜை உள்ளே போகுமா?”

“அந்த அறையிலிருந்து அம்மாவின் சாமான்களில் சிலவற்றை எடுத்துவிட்டால்… அம்மாவின் தையல் மெஷீன், சின்ன அலமாரி, அந்த துணி தொங்கி…கொஞ்சம் சுத்தப்படுத்தியிருக்கிறேன்; இன்னும் சிலவற்றை…”

“ஆ,சுப்தி! இன்னும் அவள் அடுத்த உலகத்துக்குப் போய்ச் சேர்ந்தாளா என்பது கூட நமக்கு நிச்சயமாய் தெரியாது…”

என் குரல் சற்றுக் கடுமையாய் ஒலித்ததோ என்னவோ, சுப்தி திடுக்கிட்டவளாய் தெரிந்தாள். புண்பட்ட குரலில் அவள் பேசினாள் ”நான் அதை அப்படி யோசிக்கவில்லை. மன்னித்து விடுங்கள்.”

‘பரவாயில்லை. என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.”

ஆனால் சுப்தி வருத்தமுற்ற முகத்துடன் அங்கே இன்னும் சில விநாடிகள் நின்றாள். 

நான் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். கை என் மழித்த தலையைத் தடவியது. சுப்தி தவறாய் என்ன சொல்லிவிட்டாள்? நிஜம்தான், அம்மாவின் அறை எப்போதுமே வெற்றாய் இருக்க முடியாது; சீக்கிரமே மம்பியோ கொகோலோ அதை எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் அதை உடனேயே செய்ய முடியாது, அவர்களுக்கு மிகுந்த பயம் இருக்கும். சில மாதங்கள் போகட்டும். அதற்குப் பின் படுக்கையையும் அலமாரியையும் அப்புறப்படுத்திவிட்டு சுவர்களுக்கு வண்ணம் அடிக்கலாம். சுப்திக்கு என்ன வேண்டுமோ அது…

சிந்தனையில் மூழ்கியபடியே நான் எழுந்து நின்றேன். மெள்ள நடந்து அம்மாவின் கதவருகே வந்தேன். இன்னும் யோசித்துக் கொண்டே விளக்கை போட்டேன்.

உடனே என் இதயம் துள்ளியது. அம்மா என் முன்னேயே இருந்தாள்!

இல்லை, அது அம்மா இல்லை. அம்மாவின் படம்.

சிறிய அலமாரியின் மேலே சட்டம் போட்ட அவளது படம் மின்னியது. முந்தாநாள் அது மலர்களால் மூடப்பட்டிருந்தது. இன்று ஒரு தடித்த மாலை மட்டுமே இருந்தது. ரஜனிகந்தா மலர்களால் ஆனது. மலர்கள் கொஞ்சம் வாடியிருந்தன, ஆனால் ஒரு மெல்லிய மணம் அறை முழுதும் வீசியது, அதன் முன் ஊதுபத்தி சாம்பலும், ஒரு அணைந்த விளக்கும் இருந்தன.

அந்தப் படம் அப்படி ஒரு தனித்துவமான உயிரோட்டத்தோடு இருந்தது. அது நேருக்குநேராய் என்னைப் பார்ப்பதுபோல இருந்தது.

நான் சற்று நகர்ந்தேன். ஆச்சரியம். அம்மாவின் கண்களும் நகர்ந்தன. நான் வலம் சென்றேன், இடம்…அவளுடைய கண்கள் என்னைத் தொடர்ந்தன! படுக்கையின் அடுத்த கோடியில் நின்றேன்: அங்கேயும் அவளது கண்ணின் கருமணிகள் என்னிடம் வந்து சேர்ந்தன. அலமாரி அருகே போனேன் அங்கேயும்கூட….

அச்சாய் அதே உணர்ச்சி வெளிபாட்டுடைய கண்கள். என்னைப் பார்த்துக் கொண்டு. என்னை மட்டுமே.

நான் விசித்திரமாக உணர்ந்தேன். எனக்கு விளக்கம் சொல்லிக் கொள்ள முயன்றேன். இது ஒரு படம் மட்டும்தான். ஒரு புகைப்படம். மம்பியின் ஐந்தாவது பிறந்தநாளின் போது எடுத்தது. அம்மா தனியாய் இருந்த சமீபத்திய புகைப்படம் எதுவும் இல்லாததினால், சிராத்தத்துக்காக ஷந்து அண்ணா அதை பெரிதுபடுத்திக்கொண்டு வந்திருந்தார்.  கடந்த சில நாட்களாய் அதை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தோம். காமெரா லென்ஸை நேராகப் பார்த்தால் எல்லாக் கண்களும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

இல்லை இது வெறும் பிரமை.

என்னை ஒருநிலைப் படுத்திக் கொண்டு விளக்கை அணைத்தேன். நான் வெளியே வரும் போது, திடீரென்று தூரத்திலிருந்து ஒரு அழைப்பு, “பப்லூ…?”

அம்மாவின் குரல்! அம்மாவின் குரலேதான்.

இதுவும் பிரமைதானா? என் கால்கள் தரையில் ஒட்டிக் கொண்டிருந்தன. ஹிப்னாடிசத்துக்குக் கட்டுப்பட்டவன் போல நான் கேட்டேன், “ என்னம்மா? உனக்கு ஏதாவது சொல்லணுமா?”

எனக்குப் பரிச்சயமான அந்த குரல் நடுங்குவது போல் இருந்தது. “என்னை மன்னித்துவிடு பப்லூ. என் இறப்பு என் கையில் இருக்கவில்லை.”

என் உடல் முழுதும் ஆடியது. இந்தச் சொற்களைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவா அம்மா அலைபாய்ந்து கொண்டிருந்தாள்? அம்மா என்னை கண்டுபிடித்துவிட்டாளா?

அழவேண்டும் என்ற மட்டுமீறிய உந்துதலை உணர்ந்தேன்.. முதல் முறையாய், அம்மாவின் மறைவுக்குப்பின்.

***

ஆத்மஜன் – புதல்வன்

(மூலம்: ஆத்மஜா – சுசித்ரா பட்டாச்சர்யா. ஆங்கில மொழிபெயர்ப்பு: நய்னா டே.
நன்றி: தேஷ், ஆனந்த பஜார் பத்ரிகா, கோல்கத்தா, 2003)

One Reply to “ஆத்மஜன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.