ஜோதி தாளம் . . .

வாகையடிமுக்கு லாலா கடை திறந்திருந்தது. உரிமையாளர் நயன் சிங் இப்போது பெரிய மீசை வைத்திருந்தான். அரை டிரவுசர் போட்ட காலத்திலேயே அவனுடைய தகப்பனார் அவனுக்கு தங்கள் குடும்பத் தொழிலைப் பழக்கியிருந்தார். இப்போது அவன் தான் முதலாளி. பழைய காலத்து எண்ணெய்ச் சிக்கு பிடித்த மரக்கதவுகள் இல்லாமல் கடையை நவீனமாக மாற்றியிருந்தான். கண்ணாடிப்பேழைகள் புத்தம் புதுசாக ஜொலித்தன. சுற்றிலும் அலங்கார விளக்குகள்.

‘ஆளே மாறிட்டியேடே. கடையையும் மாத்திட்டே!’

‘காலத்துக்கு ஏத்த மாதிரி மாறணும்லாண்ணே. இல்லென்னா பொளைக்க முடியாதுல்லா! நீங்களும்தான் திருச்சிக்குப் போனதுக்கப்புறம் மாறிட்டியோ. சின்ன வயசுல இருந்த மாரி இப்பமும் என்ன ஸ்டெப் கட்டிங்க்லயா இருக்கியோ!’

நயன் சிங்கின் பேச்சு மாறவில்லை. அதே பாஷை. அல்வா சாப்பிட்டபின் வழக்கமான நெய்க்கடலையை ஒரு தாளில் போட்டுக் கொடுத்தான். அதைக் கொறித்தபடியே எதிரே இருக்கும் கல்பனா ஸ்டூடியோவைப் பார்த்தான் சிவகுரு. பெரிய தூண்கள் உள்ள திண்ணை காலியாக இருந்தது. முன்பெல்லாம் ‘சூப்பர் டோன்ஸ்’ இசைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் அங்கு குழுமியிருப்பார்கள். கச்சேரி இல்லாத சாயங்கால நேரத்தில் அங்கு வந்தால் அவர்கள் பேசுவதை, பாடுவதை, கேலி செய்து கொள்வதை ரசித்துப் பார்த்தபடி நேரம் போவதே தெரியாமல் அங்கு நின்று கொண்டிருப்பான் சிவகுரு. அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத சின்னப்பையன் என்றாலும் அவர்கள் அவனிடம் ‘நீ ஏன்டே இங்கெ நிக்கே? என்று கேட்பதில்லை. அவ்வப்போது அல்வா, மிக்சர் மற்றும் சிகரெட் வாங்கிக் கொடுக்கச் சொல்வார்கள்.

‘அடுத்த கச்சேரி எங்கண்ணே?’

‘விக்கிரமசிங்கபுரத்துல. வாரியா?’

வீட்டுக்குத் தெரியாமல் அவர்களுடன் வேனில் தொற்றிக் கொண்டு சில ஊர்களுக்கு சிவகுரு போயிருக்கிறான். ரேடியோவிலோ, டேப் ரெக்கார்டரிலோ கேட்பதை விட, பாட்டுக் கச்சேரிகளில் சினிமா பாட்டு கேட்பதென்றால் சிவகுருவுக்கு அத்தனை இஷ்டம். சினிமா பாட்டு மட்டுமல்ல. எந்த பாட்டும் அவனுக்கு நேரடியாகக் கேட்க வேண்டும். அம்மன் சன்னதியில் ஜி ஆர் ஸார் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி போஸ்ட் ஆஃபீஸ் வீட்டில் பித்துக்குளி முருகதாஸ் தன் குழுவினருடன் அமர்ந்து பாடுவதைக் கேட்டிருக்கிறான்.

‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா

உன் பாதம் சரணடைந்தோம் எங்கள் முத்துமாரியம்மா’ என்ற பாரதியார் பாடலை முருகதாஸ் பாடும்போது அந்தச் சின்ன வயதில் சிவகுருவுக்குக் கண்கள் நிறைந்திருக்கின்றன. ‘கந்தா முருகா வருவாயே. சாந்தி பெறவே அருள்வாயே’ பாடும் போது முருகதாஸ் கோஷ்டியுடன் இணைந்து சிவகுருவும் மெய்மறந்து பாடியிருக்கிறான். வீட்டுக்குத் திரும்பி வரும் போது தன்னை மறந்து சத்தமாக ‘கந்தசாமியே எங்கள் சொந்தசாமியே கந்தநாதனே எங்கள் சொந்தநாதனே’ என்று பித்துக்குளி முருகதாஸின் பஜன் பாடலைப் பாடியபடியே வந்திருக்கிறான். இதையெல்லாம் இப்போது வீட்டில் சொல்லும் போது அவன் மனைவியும், மகளும் சிரிப்பார்கள்.

‘அத ஏன் கேக்கே? எங்க கல்யாணத்தன்னைக்கு ரிஸப்ஷன்ல உங்கப்பா களுத்துல போட்டிருந்த மாலையோட மேடையேறி ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சுன்னு’ என்னைப் பாத்துப் பாடுனா. நான் நிமிந்தே பாக்கலியே. ஒங்க ராமலிங்கம் மாமா அப்பமே வந்து ‘ஏட்டி மாப்பிள்ளை இப்படி ஒரு கோட்டிக்காரன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா அப்பளக்கடைக்காரர் மகனுக்கே பேசி முடிச்சிருக்கலாமே’ன்னு தலைல அடிச்சுக்கிட்டான். என் தங்கச்சி வாள்க்கய இப்பிடி கெடுத்துக் கட்டமண்ணாக்கிட்டேனேன்னு இன்னைக்கும் பொங்கப்படி குடுக்க வரும்போதெல்லாம் சொல்லத்தான் செய்தான்.’

லோகு இப்படி சொல்வது சும்மா தன்னைப் பழிப்பதற்காகத்தான் என்பது சிவகுருவுக்குத் தெரியுமென்பதால் பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொள்வான். அவளும் சினிமா பாடல்களின் ரசிகைதான். கல்யாணம் ஆன புதிதில் அவளுமே சிவகுருவுடன் கச்சேரிகளுக்குச் சென்றிருக்கிறாள். அவனுடன் நெல்லை சங்கீத சபாவில் எம்.எஸ்.உமாபதியின் கச்சேரிக்குப் போயிருந்த போதுதான் லோகுவுக்குப் பிடித்த பாடகி வாணி ஜெயராம் என்பது சிவகுருவுக்குத் தெரிந்தது. அன்றைக்கு உமாபதியுடன் இணைந்து பாடிய கண்ணம்மா, ‘நிழல் நிஜமாகிறது’ திரைப்படத்தின் ‘இலக்கணம் மாறுதோ’ பாடலைப் பாடும் போது லோகு ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று சிலிர்த்துக் கொண்டாள். சிலோன் ரேடியோவில் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் ‘அவன் தான் மனிதன்’ படப்பாடலான ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ பாடலுக்கான அறிவிப்பு வந்தவுடன் எங்கிருந்தோ ஓடி வந்து ரேடியோவின் சத்தத்தை அதிகரிப்பாள், லோகு. ஆனால் வாணி ஜெயராமின் பாடல்களில் எப்போதும் தன்னுடைய விருப்பப் பாடலாக அவள் சொல்வது ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ திரைப்படத்தின்  ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ பாடலைத்தான். அதற்காக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் ‘என்னுள்ளில் எங்கோ’ பிடிக்காது என்று சொல்லி விட முடியாது. அந்தப் பாடல் எங்கு ஒலித்தாலும் முழு பாட்டையும் நின்று கேட்ட பின் தான் நகர்ந்து செல்வாள். அவள் குடும்பமே வாணி ஜெயராமின் ரசிகர்கள். சிவகுருவின் மாமியாருக்கு ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’. மாமனாருக்கு ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’. சொல்லப்போனால் லோகுவின் அண்ணன் ராமலிங்கமும் சினிமா பாட்டு ரசிகன் தான். அவனது ரசனை வித்தியாசமானது. பி.எஸ்.சசிரேகாவின் குரலில் அவனுக்கு அப்படி ஒரு மயக்கம். ‘லட்சுமி’ திரைப்படத்தின் ‘மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே’ பாடல் வானொலியில் வரும் போதெல்லாம் அவன் வேறு உலகத்துக்குச் சென்று வெகு நேரம் கழித்தே திரும்பி வருவான்.

சிறுவயதில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து, பின் அவர்களுடன் கச்சேரிக்குச் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக ‘சூப்பர் டோன்ஸ்’ குழுவில் ஓர் அங்கமாகவே மாறியிருந்தான், சிவகுரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல்களைப் பாடுகிற சுலைமானை தன் வீட்டுக்கு அருகில் இருந்த அம்மன் சன்னதி ஜி.ஆர். ஸாரிடம் டியூஷன் படிக்க வந்த காலத்திலேயே பழக்கம் என்பதால் சுலைமானுடன் ஒட்டிக் கொள்வான். பழக்கம் என்றால் பேசிப் பழக்கம் என்றில்லை. முகம் பார்த்து சிரித்துக் கொள்வதுதான். அப்படி ரொம்ப வருஷமாக சுலைமானும், சிவகுருவும் சிரித்திருக்கிறார்கள். சுலைமானுடன் ஒன்றாகப் பயணிப்பது சிவகுருவுக்குப் பெருமையாக இருக்கும். ‘நந்தா என் நிலா’ பாடுகிற சுலைமான் என்றால் சும்மாவா? நான்குநேரியில் சுலைமான் ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடும் போது கூடியிருந்த கூட்டத்தில், எதிர்வீட்டுத் தட்டட்டியில் நின்ற சிகப்பு தாவணி பெண், தன் கழுத்தில் உள்ள மெல்லிய செயினை வாயில் வைத்துக் கடித்தபடியே சுலைமானை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி சிவகுருவின் மனதில் பதிந்து போய்விட்டது.

‘அங்கெ ஒரு அக்கா ஒன்னயே பாத்துக்கிட்டிருந்தா சுலமாண்ணே! நீ கவனிக்கவே இல்ல.’

‘அதையெல்லாம் கவனிச்சா அப்புறம் பாட முடியாதுடே’.

சுலைமான் அப்படித்தான். மைக்கைக் கையில் பிடித்து விட்டால் வண்டி அங்கே இங்கே திரும்பாது. நம்ம ஊர் சிங்காரி மட்டுமல்ல. எங்கேயும் எப்போதும் பாடலுக்குக் கூட உடலில் அசைவில்லாமல் வேறெங்கும் பார்க்காமல் பாடுவார். ‘சொர்க்கம் மதுவிலே’ பாட்டுக்கெல்லாம் ஒருத்தன் ஆடாம பாட முடியுமாய்யா? ஆனால் அதற்கும் சுலைமான் அசைய மாட்டார். சிவகுருவுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்போதெல்லாம் ‘சூப்பர் டோன்ஸ்’ கச்சேரிகளின் இறுதியில் பாடப்படும் ‘வண்ணக்கிளி’ திரைப்படத்தின் ’சித்தாடை கட்டிக்கிட்டு’ பாடலுக்கு சிவகுரு மேடைக்கு பின்புறம் சென்று ஆடுவான். இவன் வயதையொத்த அரை டிரவுசர் சிறுவர்களும் ஆட்டத்தில் சேர்ந்து கொள்வார்கள்.

சூப்பர் டோன்ஸில் எஸ்.சி.கிருஷ்ணன் குரலில் பாடுவது ‘மொராக்கஸ்’ சண்முகம். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் ‘பாண்டியன் நானிருக்க’ பாடலை கிருஷ்ணவேணியுடன் இணைந்து பாடுவார். திருச்சி லோகநாதன் குரலில் ‘ஆரவல்லி’ படத்தின் ‘சின்னக்குட்டி நாத்தனா’ பாடலையும் ‘மொராக்கஸ்’ சண்முகம்தான் பாடுவார். இப்படி வாத்தியம் வாசிப்பவர்கள் ஏதேனும் சில குறிப்பிட்ட பாடல்களைப் பாடுவதுண்டு. கிடார் வாசிக்கும் அந்தோணி ஒரே ஒரு பாடல் மட்டும் பாடுவார். ‘ஆறு புஷ்பங்கள்’ திரைப்படத்தின் ‘ஏன்டி முத்தம்மா ஏது புன்னகை’ என்று அவர் பாட ஆரம்பிக்கும் போது தூரத்தில் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பவர்களெல்லாம் தானாக சைக்கிளைத் திருப்பி கச்சேரி கேட்க வந்துவிடுவார்கள். சிவகுருவுக்கு தானும் இந்த மாதிரி ஏதேனும் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று சிறு வயதில் ஆசை இருந்ததுண்டு. ஆனால் அதற்கான தைரியத்தை அவன் வரவழைத்துக் கொண்டதேயில்லை. அடக்க முடியாத அந்த ஆசையை தன் திருமண வரவேற்பில் தீர்த்துக் கொண்டான். முதலும், கடைசியுமாக சிவகுரு பாடியது அந்த ஒரு முறை மட்டும்தான். அதற்கே வீட்டில் கேலி பண்ணி அம்மாவும், மகளும் இன்னும் சிரிக்கிறார்கள்.

சிவகுருவை கேலி செய்வதற்கு அவன் மகளுக்கும் விஷயம் இல்லாமலில்லை. ஒவ்வொரு முறை டியூஷன் முடிந்து வீட்டுக்குள் நுழையும் போதே அவள் அம்மாவை சத்தம் போட்டு அழைத்தபடியே, ‘இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா?’ என்று ஆரம்பிப்பாள். சிவகுரு தன் பைக்கை நிறுத்தி, பூட்டி விட்டு வருவதற்குள் அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்திருப்பாள்.

‘திருவெறும்பூர்ல எங்க டியூஷன் செண்டருக்கு எதுத்தாப்ல ஒரு புரோட்டா கடைம்மா. அதுல கொத்து புரோட்டா போடற மாஸ்டர்தான் அப்பா ஃபிரெண்டு. டியூஷன் முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து அங்கே உக்காந்துக்கிட்டு அந்த புரோட்டா மாஸ்டர்க்கிட்டதான் பேச்சு. நீ வேணா என்னன்னு கேளேன்.’

லோகுவிடம் சிவகுருவைப் பிடித்துக் கொடுத்து விட்டு உடை மாற்ற தன் அறைக்குச் சென்ற ப்ரியாவுக்கும் கேட்குமாறு சோஃபாவில் அமர்ந்து சொல்ல ஆரம்பித்தான் சிவகுரு.

‘உனக்கென்ன தெரியும்? போன வாரம் உன்னை டியூஷன்ல விட்டுட்டு வரும் போது அந்த மாஸ்டர் ‘இளமை இதோ இதோ’ பாட்டு பிகினிங்ல வர்ற பீட்டை புரோட்டா போடுத கல்ல வாசிச்சாரு. வேற யாருக்கும் அது தெரியல. நான் போயி ‘சகலகலா வல்லவன் தானேன்னு கேட்டேன். அந்த நிமிஷமே நாங்க ஃபிரெண்ட்ஸாயிட்டோம். ஒவ்வொரு நாளு ஒவ்வொரு பாட்டோட தாளம் வாசிப்பாரு. நான் கரெக்டா சொல்லுவேன். இப்படியே ஒரு விளையாட்டு. நேத்து ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’. இன்னைக்கு ‘தகிட ததிமி தகிட ததிமி தந்தானா’.

முகத்தைத் துடைத்தபடி வந்து சிவகுருவின் அருகில் அமர்ந்தாள், ப்ரியா.

‘அந்த ஆளுக்குக் காசு குடுத்தியோ?’

‘பொறவு? இந்த மாதிரி ஆட்கள்லாம் வயித்துப் பொளப்புக்கு சம்பந்தமில்லாத வேலைய செஞ்சுக்கிட்டிருக்காங்க. அவங்கள இனம் கண்டுக்கிட்டு ஏதோ நம்மாலான சின்ன உதவியை செஞ்சா அவங்களுக்கும் சந்தோஷம். நம்மளுக்கும் ஒரு திருப்தி.’

மெல்லிசை கச்சேரிகள் செழிப்பாக இருந்த காலத்தை சிவகுரு பார்த்திருக்கிறான். அநேகமாக முழு பரிட்சை முடிந்து விடுமுறை நாட்களில் வாரத்துக்கு இரண்டு கச்சேரிகளுக்காவது ‘சூப்பர் டோன்ஸ்’ குழுவினருடன் செல்வான். சுலைமான், ‘மொராக்கஸ்’ சண்முகம் தவிர மற்றவர்கள் சிவகுருவிடம் அவ்வளவாகப் பேசுவதில்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் சிவகுரு, சுலைமானின் ஆள். நட்சத்திர பாடகனான சுலைமான் மீது அவர்கள் அனைவருக்குமே ஒரு எரிச்சல் உண்டு. ஆனால் சுலைமான் எப்போதும் போல தான் உண்டு தன் பாட்டு உண்டு என்று இருக்கும் ஆள். யாருடனும் தனக்கு பெரிதாக பேச்சுவார்த்தை இல்லையென்றாலும் பார்த்தால் எல்லோரும் புன்னகைப்பதுண்டு. கிருஷ்ணவேணி, ஜெயலட்சுமி போன்ற பாடகிகள் ‘என்னடே? பரிச்ச நல்லா எளுதியிருக்கியா?’ என்று கேட்பதுண்டு. அதிலும் ஜெயலட்சுமி ஒவ்வொரு முறையும், ‘நீ எத்தனாப்புலேருந்து எத்தனாப்பு போறே?’ என்று கேட்பாள். அந்த இடத்தில் ‘தபலா’ ஜோதி இருந்தால் மட்டும் ஜெயலட்சுமி வாயைத் திறக்க மாட்டாள். ஜெயலட்சுமிதான் என்றில்லை. யாருமே ‘தபலா’ ஜோதி முன் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. ஜோதியை எல்லோரும் மாமா என்றழைத்தார்கள். இத்தனைக்கும் அவர் ஒன்றும் அவ்வளவு வயதானவரெல்லாம் இல்லை. ஆனால் முதிர்ச்சியான தோற்றத்தை வரவழைத்துக் கொண்டவர். சந்தனக் கலர் பட்டுச் சட்டையும், அகல ஜரிகை வேட்டியும்தான் அவரது உடை. நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்திருப்பார். தோளில் சிறு தேங்காப்பூ துண்டு. சுத்தமாக சவரம் செய்த முகம். வெற்றிலைச் சிவப்பு உதடுகள். ஞானஸ்தர். முக்கியமான ஜதி சொல்லும் பாடல்களை தபலா வாசித்தபடியே பாடுவார். உடன் பாடுபவர்கள் நின்றபடியும் ஜோதி உட்கார்ந்தபடியும்தான் பாடுவார். ‘பலே பாண்டியா’ திரைப்படத்தின் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலை சௌந்தர்ராஜன் குரலில் பாடும் தியாகராஜன் நின்றபடியும், எம்.ஆர்.ராதா குரலில் எம்.எஸ்.ராஜு போலவே ‘தபலா’ ஜோதி முகத்தை அஷ்டகோணலாக்கி ‘அய்யய்ய வவ்வவ்வ’ என்று பாடுவார். ‘தரிகிட தரிகிடதோம் தரிகிட தரிகிடதோம் ஸா’ என்று ‘அழகு மலர் ஆட’ பாடலின் விருத்தத்தை தபலா வாசித்தபடியே ஜோதி பாடும் போது, ஜெயலட்சுமி அவரைப் பார்த்து பயந்தபடியேதான் முழு பாடலையும் பாடுவாள். பாடலை ஆக்ரோஷமாக ‘தக தகிட தக தகிட தரிகிட தரிகிட தோம்’ என்று ஜோதி முடித்தபின் சில நொடிகள் அமைதிக்குப் பின்னரே ஜனங்கள் கை தட்டுவார்கள். தன்னிடமுள்ள சின்ன தேங்காப்பூ துண்டால் முகத்தைத் துடைத்தபடி அமைதியாக எந்த சலனமுமில்லாமல் அடுத்த பாட்டுக்காக தபலா சுதியை சரி பார்ப்பார், ஜோதி.

ஒருமுறை கச்சேரி இல்லாத நாளன்று கல்பனா ஸ்டூடியோ வாசலில் உட்கார்ந்திருந்த ‘தபலா’ ஜோதி, ‘பாப்புலர் தியேட்டர் பக்கத்துல உள்ள கடைல போயி என் பேரச் சொல்லி பொகையில வாங்கிட்டு வாரியாடே?’ என்று சிவகுருவிடம் கேட்டார். ‘இன்னா வாங்கிட்டு வாரேன், மாமா’ என்று கிளம்பிய சிவகுருவைத் தடுத்து நிறுத்தி, ‘இந்தா துட்டு’ என்று சட்டைப் பையில் இருந்து எடுத்து கொடுத்தார்.

‘என்ட்ட இருக்கு மாமா. நான் வாங்கிட்டு வாரேன்’.

அதற்கு பதிலேதும் சொல்லாமல் திண்ணையிலிருந்து எழுந்து ரோட்டில் இறங்கி தானே பாப்புலர் தியேட்டர் நோக்கி நடக்க ஆரம்பித்தார், ‘தபலா’ ஜோதி. அதற்குப் பிறகு கச்சேரி சமயத்திலும், மற்ற சமயங்களிலும் ‘தபலா’ ஜோதி இருக்கும் பக்கம் போவதற்கு பயந்து சிவகுரு ஒதுங்கிக் கொண்டான்.

‘ஒரு காலத்துல கல்பனா ஸ்டூடியோ திண்ணைல ஒரே பாட்டும், சிரிப்புமா இருக்கும். என்னடே?’

‘அப்பம்லாம் கச்சேரின்னா அதுல இருபது பேராது வாசிப்பாங்க, பாடுவாங்க. கச்சேரியும் நெறய நடக்கும். இப்பம் ஆட்கள் கொறஞ்சுட்டுல்லா. வயலினு, ஃப்ளூட்டு, டிரம்ஸு எல்லாத்தையும்தான் கீபோர்டுல ஒருத்தனே வாசிச்சிருதானெ. முணு நாலு பேரு முளு கச்சேரியையும் முடிச்சிருதானுவொ! சூப்பர் டோன்ஸுலாம் இப்பம் இல்ல. சுலைமான் அண்ணனை மட்டும்தான் பாக்கென். மத்தவங்கல்லாம் எங்கெ போனாங்கன்னே தெரியலண்ணே’.

நயன்சிங்கின் குரலில் ‘இனி அதைப் பத்தில்லாம் பேசி என்னத்துக்கு’ என்கிற தொனி தெரிந்தது.

திருச்சிக்குத் திரும்பியதும் இதையெல்லாம் சொல்லி மனைவியிடமும், மகளிடமும் வருத்தப்பட்டான் சிவகுரு.

‘சுலைமான் அண்ணனையாவது போயிப் பாத்திருக்கலாம்லா?’

லோகுவும் சுலைமான் பாடுவதைக் கேட்டிருக்கிறாள்.

‘அடுத்தமட்டம் ஊருக்குப் போகும் போது பாக்கணும்’ என்று சொல்லிக் கொண்டானே தவிர உண்மையாகவே சிவகுருவுக்கு அதில் விருப்பமில்லை. இங்கே திருச்சியில் திருமண வீடுகளில் நடக்கும் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறான். எல்லாமே அவன் காதுகளுக்கு இரைச்சலாகக் கேட்டன. அதுவும் அடைப்பட்ட மண்டபத்தின் சுவர்களில் மோதி எதிரொலிக்கிற பாடல்களைக் கேட்பது பிடிக்காமல், அவசர அவசரமாக கவரை மணமக்கள் கைகளில் திணித்துவிட்டு வெளியே ஓடி வந்து விடுகிறான். பாளையங்கோட்டையில் பாடகி கிருஷ்ணவேணியின் அக்கா மகளின் கல்யாணத்துக்கு ‘சூப்பர் டோன்ஸ்’ கச்சேரிக்கு சிவகுரு சென்றிருந்தான். முதல் நாள் இரவே மண்டபத்தில் ரிகர்ஸல் நடந்து கொண்டிருக்கும் போது சிறுவர்களுடன் அமர்ந்து தாம்பூலம் பாக்கெட் போட்டுக் கொண்டே ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான், சிவகுரு. ரிகர்ஸலில் பாடிப் பார்க்காத ‘உனக்காகவே வாழ்கிறேன்’ படப்பாடலை மறுநாள் திருமணத்தன்று கச்சேரியில் சுலைமான் அண்ணன் பாட ஆரம்பித்த போது சிவகுருவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவனது விருப்பமான பாடலது. ‘இளஞ்சோலை பூத்ததா’ என்கிற அந்தப் பாடலின் துவக்கத்தில் ஜோதி வாசித்த தபலா நடையை ரசிக்காதவர்களே இல்லை. கல்யாண வீடு என்பதையும் மறந்து குளத்து ஐயர் சத்தமாக ‘அடேய் தாயோளி’ என்று சிலாகித்தார். அன்றைக்கு ‘தபலா’ ஜோதியின் விரல்களில் கலைமகள் நடனமாடினாள். ‘கரும்புவில்’ படப்பாடலான ‘மலர்களிலே ஆராதனை’ பாடலுக்கு அவருடன் இணைந்து தபலா வாசித்த அல்ஃபோன்ஸ் திணறிப் போனான் என்றுதான் சொல்ல வேண்டும். அன்றைய பந்தியில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறும் வேலையை சிவகுரு செய்தான். குறிப்பாக ‘தபலா’ ஜோதிக்கு பரிமாற முடிந்ததில் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. மற்றவர்களைப் போல பாயாசத்தை தம்ளரில் கேட்காமல் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு வாங்கி

ஜோதி இலையில் ஊற்றி சாப்பிட்டது சிவகுருவுக்குப் பிடித்திருந்தது. ‘நானும் பாயாசத்தை எலைல ஊத்திதான் சாப்பிடுவேன், மாமா’ என்றான். அதிசயமாக ஜோதி அதற்கு லேசாகச் சிரித்துக் கொண்டார். ‘அப்படியான்னாவது கேக்கலாம்லா? என்ன மனுசன்யா இந்தாளு’ என்று நினைத்துக் கொண்டான். கூடவே ‘அம்மானை அழகுமிகும் கண்மானை’ பாட்டுக்கு தபலா வாசிச்சவருக்கு பரிமாற முடிஞ்சுதே! அதை நெனச்சு சந்தோசப்பட்டுக்கிட வேண்டியதுதான்’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான். அப்போதெல்லாம் கச்சேரிக்குப் போகும் போது சுலைமானிடம் நைசாகக் கேட்பான்.

‘இன்னைக்கு அண்ணன் ஒரு கோயிலென்றால்’ பாட்டு உண்டுமாண்ணே?’

‘ஏன்டே! அந்தப் பாட்டைக் கேக்கே?’

‘ஜோதி மாமா உருட்டி எடுத்துருவாருல்லா. அதுக்குத்தாம்ணே’.

அலுவலக வேலையாக சில மாதங்கள் ஆந்திர எல்லையிலுள்ள ராமகிரியில் தங்க வேண்டியது வந்தபோது பழைய நினைவுகளை அசைபோட சிவகுருவுக்கு நிறைய நேரம் கிடைத்தது. அலுவலக வேலைகள் முடிந்த பின் மாலையில் வீட்டுக்கு ஃபோன் பண்ணி மனைவியிடமும், மகளிடமும் பேசிய பிறகு கைபேசியில் ஒலிக்கும் ‘சூப்பர் டோன்ஸ்’ கச்சேரி காலத்துப் பாடல்கள்தான் சிவகுருவுக்கு உற்ற உறக்கத்துணையாயின.

‘காலபைரவர் கோயிலுக்குப் போயி மறக்காம கருப்புக்கயிறு வாங்கிருங்க’.

‘ஊருக்குக் கிளம்பும் போது அங்கெ நந்தி வாய்ல வர்ற தண்ணிய ஒரு பாட்டில்லயோ, கேன்லயோ புடிச்சுட்டு வாங்க’.

‘பக்கத்துலதான் சுருட்டப்பள்ளி இருக்காம். பிரதோஷம் முதல்ல தொடங்கின கோயிலாம். பெருமாள் மாதிரி சிவபெருமான் பள்ளிகொண்டிருப்பாராம். போயிட்டு எல்லார் பேருக்கும் அர்ச்சனை வச்சிருங்க. எங்கம்ம நெதமும் ஞாவகப்படுத்துதா’.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலாக லோகு சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் சிவகுருவுக்கு வேலை முடிந்து அவனது அலுவலக நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த உஷ்ணமான ஓட்டு வீட்டில் வந்து குளித்து விட்டு, வெளியே வேப்பமரத்தடியில் உள்ள திண்டில் சாய்ந்தபடி பாட்டு கேட்பதில்தான் ஆர்வம் இருந்தது. இந்த வாய்ப்பு திருச்சிக்குப் போனால் கிடைக்காது. இங்குதான் அனுபவிக்க முடியும்.

ஆந்திர தமிழக எல்லை என்பதால் அங்குள்ள சில கடைகளில், வீடுகளில் தமிழ்ப் பாடல்களும் ஒலித்தன. அதுவும் சுருட்டப்பள்ளியில் அதிகமாக தமிழ் பாடல்களே ஒலித்தன. பிரதோஷம் தவிர மற்ற நாட்களில் அதிகக் கூட்டம் இல்லாத ஊர். நடைப்பயிற்சிக்காக ராமகிரியிலிருந்து சுருட்டப்பள்ளிக்கு நடக்கும் போது இயர்ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்த ‘யாரும் விளையாடும் தோட்டம்’ பாடல், அந்த சாலையில் தான் நடப்பதற்காகவே இளையராஜா இசையமைத்துத் தனக்காகப் பிரத்தியேகமாகக் கொடுத்திருப்பதாக சிவகுரு நம்பினான். இப்படி இரண்டொரு முறை கோயிலுக்குச் சென்று மறக்காமல் எல்லோருடைய பேருக்கும் அர்ச்சனையும் செய்தான். வெளி பிரகாரத்துக்கு வரும் போதெல்லாம் மனதுக்குள் ஏனோ ‘ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி’ ஒலித்துக் கொண்டே இருந்தது.

 ‘இந்தப் பாட்டெல்லாம் கச்சேரில கேட்டதே இல்லை. அப்பதான் நாம திருச்சிக்கு வந்துட்டோமே. அந்த சமயத்துல சூப்பர் டோன்ஸ் இருந்துச்சா. அதுல இந்த பாட்டை பாடினாங்களான்னு தெரியல. யார்க்கிட்ட கேக்க. பாலசுப்பிரமணியம் பாட்டுல்லா. எப்படியும் சுலைமான் அண்ணன் தான் பாடியிருப்பான். கூட அந்தச் சின்னப்பிள்ளை குரல் யார் பாடியிருப்பா?’

வந்த வேலை முடிந்து மறுநாள் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று வந்தபோது முதல்நாள் மாலை மறக்காமல் காலபைரவர் கோயிலுக்குச் சென்று லோகு சொன்ன கருப்பு கயிறை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான், சிவகுரு. ஒன்றரை லிட்டர் பாட்டிலில் நந்தி தண்ணீரையும் பிடித்து வைத்துக் கொள்ள மறக்கவில்லை.

‘கிளம்பறதுக்கு முன்னாடி சுருட்டப்பள்ளி கோயிலுக்கும் ஒருமட்டம் போயிட்டு வந்திருங்க. நாமளா நெனச்சாலும் அங்கெல்லாம் போயிக்கிட மாட்டோம்’.

நடை சாத்தும் நேரம். அவசர அவசரமாகக் கோயிலுக்குப் போய் விட்டு வெளியே வரும் போது, மனதுக்குள் ஒலித்த ‘நாதம் என் ஜீவனே’ பாடலை தொந்தரவு செய்வது மாதிரி எங்கோ தூரத்து புரோட்டா கடையில் புரோட்டா கல்லில் தாளம் போடும் சத்தம் கேட்டது. சிவகுருவுக்கு எரிச்சலாக இருந்தது. ஒழுங்கில்லாத தாளம். அடைத்த கல்யாண மண்டபத்துக் கச்சேரி இரைச்சல் போல. சாலையைக் கடக்கும் போது புதிதாக முளைத்திருந்த அந்த புரோட்டா கடையை கவனித்தான். டியூப் லைட்டில் பச்சை பிளாஸ்டிக் பேப்பர் ஒட்டியிருந்தது. அதற்குக் கீழே உள்ள புரோட்டா கல்லில் யாரோ ஒரு சிறுவன் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். அவனைத் தள்ளிப் போகச் சொல்லிவிட்டு அங்கு வந்த முதியவர் ஒருவர் புரோட்டாவைப் போட்டுக் கொத்தத் துவங்கினார். கடையில் தேநீர் இருக்கிறதா என்று கேட்கலாமா என்று சிவகுருவுக்குத் தோன்றியது. போய் ஸ்டூலை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.

‘டீ இருக்கா?’

‘சூடா புரோட்டா இருக்கு. சாப்பிடுங்கோ ஸார்’.

‘புரோட்டா . . .வா?’

சிவகுரு தயங்கினான்.

‘நல்லா இருக்கும் ஸார்’.

சிவகுருவின் சம்மதத்தைக் கேட்காமலேயே ‘மாஸ்டர். ஒரு கொத்து’ என்றான், கல்லாவின் இருந்தவன்.

புரோட்டா கல்லில் ஏற்கனவே பிய்த்துப் போடப்பட்டிருந்த புரோட்டாவின் மீது புரோட்டா கரண்டி தட்டும் சத்தம். டங் டங் டங் டங் . . . கொஞ்சம் கொஞ்சமாக தாளம் சீரானது. சில நொடிகளில் சிவகுருவின் காதுகளில் ஒரு தமிழ் பாடலின் துவக்க நடை ஒலித்தது.

‘தாங்கிடதத்த தரிகிடத்தத்த தளாங்குதத்த தகதிமிதகஜுனு

தாங்கிடதத்த தரிகிடத்தத்த தளாங்குதத்த தகதிமிதகஜுனு

தாங்கிடதத் தரிகிடதத் தத்தரிகிட தத்தரிகிட தகதிமி தகஜுனு’

வழக்கமாக சிவகுருவுக்கு உற்சாகமளிக்கும் பாடலது. ‘அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்’. அவன் முதுகுக்குப் பின்னால் ஒலித்த அந்தத் தாளத்துக்குரிய விரல்களை அவன் அறிவான். சட்டென்று எழுந்துத் திரும்பிப் பார்க்காமல் ராமகிரியை நோக்கி நடக்கத் துவங்கினான், சிவகுரு.

11 Replies to “ஜோதி தாளம் . . .”

  1. 300 ரூபாய் நிச்சயம் , 3 இலட்சம் இலட்சியம் என இருந்த உங்க தெரு‌ ( அம்மன் சன்னதி தெரு ) இயக்குனர் கபாலி, கல்பனா ஸ்டூடியோ கண்ணன், EB அழகு சங்கர், நெல்லை குமார் கூட்டணியில் சேரன்மகாதேவி பீட்டர் இசையமைப்பில் கூனியூர் அக்கிரஹாரத்தில் ஒரு வீட்டில் பாடல்கள் ரிக்கார்டிங் பண்ணி , செண்பகம் பிள்ளை தெரு இராமன் ஹீரோவாக , சிவா தெரு சச்சு ஹீரோயினாக , தென்காசி முத்து ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட
    ‘ நாயகன் ‘. உருவானதும் கல்பனா ஸ்டூடியோ வாசலில்தான்..
    இத்தோடு‌ என் கலைப்பயணத்தை முடித்துக் கொள்கிறேன் என அனைவரும் என்ட் கார்டு போட்டதும் கல்பனா ஸ்டூடியோ படிகளில் இதான்…

  2. ஜான் சுந்தரின் ‘நகலிசைக் கலைஞன்’ வரும் அத்தியாயம் போலவே இருக்கிறது. காலம் ஓடும் ஓட்டத்தில், பழைய காலத்தில் அனுபவித்த மென்மையான ரசனைகளெல்லாம் அழிந்து போய், ஏக்கமே மிஞ்சுகிறது 🙁

  3. திரு. சுகா அவர்கள் எப்படி இந்த மாதிரியான ஓர் உயிரோட்டமான கதை தோணிற்று. இக்கதையில் நடந்த அனைத்து சம்பவங்களும், மனிதர்களும் நான் பார்த்திருக்கிறன். அதில் நானும் ஒருவன். இக்
    கதையை என்னுடன் மேடை இசையில் பயணித்த திருச்சி நணபர்களுடன் பகிர்வதில் பெருமை அடைகிறேன்

  4. இப்போதெல்லாம் சுகா எழுத்துக்களை பார்க்க,படிக்க முடிவதில்லையே, ஏன்? வேறு எங்கும் எழுதுகிறாரா?அல்லது சினிமாவில் மூழ்கி விட்டாரா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.