வ. அதியமான் கவிதைகள்

வ. அதியமான்

தனி அழைப்பு

மந்தையிலிருந்து
தனி பாதைக்கு
இழுத்தபடி
எபோதும்
ஒரு குரல்
ஒரு மந்திரச்சொல்
செவிகளுக்குள்
இனித்துக் கொண்டே
இருக்கிறது

காரணமே இல்லாமல்
துள்ளும்
என் நான்கு கால்களையும்
ஒரு சுருண்ட வாலையும்
தரதரவென
இழுத்துச் செல்வது
பெரும்பாடாய் இருக்கிறது

கண் எதிரே
சொடுக்கி எழுந்த
ஒரு குட்டி வால்
அசைந்து அசைந்து
எனக்கான ஆணைகளை
விட்டைகளோடு சேர்த்து
உதிர்த்தவாறு
செல்கிறது

முன்னமே
பிரிந்து சென்ற ஆடுகள்
குரல் கொடுப்பதும்
இல்லை
சொல் எடுப்பதும்
இல்லை
அவை மீளா பாதைகள்
என்பதறிவேன்

நரகமே
வாய்த்தாலும் சரி
ஒரு நாள்
பார்த்துவிட வேண்டும்
கிளை பிரியும்
தனிப்பாதைகள்
மெய்யாகவே
எங்கு தான் முடிகிறது?
எதில் தான் கலக்கிறது?
எதை தான் திறக்கிறது?

முதன் முதலாய்

நெடுயுகமாய்
நாளும்
வனம் தின்று
விருந்தாடும்
காட்டெரி
முதன் முதலாய்
சிறு சுடராகி
கல் அகலில்
கால் மடக்கி
அமர்ந்த போது
என்ன எண்ணியிருக்கும்?

தன் குழையா
கற்தசை சுவர்கள்
முதன் முதலாய்
செம்பொன்னில்
குழைந்து
உருகுவதை
உறங்கா விழி காணும்
அந்த மலைக்குகை
என்ன எண்ணியிருக்கும்?

தாளம் பிசகாது
நடனமிடும்
அச்சின்னஞ்சிறு
ஒளித் தளிரை
முதன் முதலாய்
மடியேந்தி
ஓயாது முத்தமிட்டு
முலைக் கனியும்
அந்த இருட்பெருங்கடல்
அப்போது
என்ன தான்
எண்ணியிருக்கும்?

இரண்டாம் ஆட்டம்

இங்கே இதுவரை
பாதை ஏதுமில்லை
அப்படித்தான் சொன்னார்கள்
ஒரு முறை
கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
வலிக்கத்தான் செய்கிறது
இது கனவும் அல்ல

சீரான ஒற்றையடி பாதை
சுருளவிழும் நாகமென
நீள்கிறது
நம்பவே முடியவில்லை
அதில் செதில் செதிலாய்
அச்சு அசல்
என் பாதச்சுவடுகள்
எனக்கும் முன்னமே
தடம் மலர்ந்திருக்கிறது

முன்னொரு மனிதன்
முன்னொரு பயணம்
முன்னொரு பாதை
முன்னொரு உலகம்
போதாதா?
இன்னொரு முறையுமா?

பரிசு

இன்னும்
ஒருமுறை
நீ
இந்த பூமியை
முழுதாய்
தின்று முடித்து
நிறைந்து
மறைந்து
மண்ணாகி
மரமாகி
பூத்து
காய்த்து
கனியாகி
என் கைகளில்
வந்து சேரும்
காலம் வரைக்கும்
என்னால்
இனி
காத்திருக்க இயலாது

என்னிடம்
சொல்லிச் சொல்லி
வழியனுப்பிய
வேருக்கே
மீண்டும் நான்
திரும்பி விடட்டுமா?

2 Replies to “வ. அதியமான் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.