கா. சிவா

நானும் அம்மாவும் மின்சார அலுவலகத்திற்குக் கிளம்பினோம். வீட்டில் யாரும் வெளியே கிளம்பும் சிறு அரவம் கேட்டவுடனேயே என் மகனின் உடல் விதிர்த்துவிடும். பிறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நடக்க ஆரம்பிக்காமல் தவழ்ந்தே முழு வீட்டையும் அளந்து திரிகிறான். ம்ம்..மா என்றும் னா..னும்.. என்றும் மட்டுமே உச்சரிக்கிறான். வெளியே எவர் கிளம்பினாலும் இரண்டு வார்த்தைகளையும் சேர்த்து உச்சரித்தபடி கைகளை உதற ஆரம்பிப்பான்.
அவன் நாங்கள் செல்வதை அறிந்து கை கால்களை உதற ஆரம்பிக்க என் மனைவி, சிறுவன் வழுக்கைத் தலையுடன் அமர்ந்த நிலையிலிருக்கும் ரப்பர் பொம்மையை அவன் கையில்கொடுத்து, அவனைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்று, நாங்கள் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் சென்றபின், நாங்கள் கிளம்புவதற்குப் பத்து நிமிடங்களாவது ஆகியிருக்கும்.
மின் கணக்கீடு செய்ய வந்தவர் மின் கட்டணத்துடன் இரண்டாயிரம் ரூபாய் முன்தொகையும் செலுத்த வேண்டுமெனக் குறித்துவிட்டு சென்றிருக்கிறார். அதை கட்டுவதற்காக அண்ணாநகர் பனிரெண்டாவது பிரதான சாலையிலுள்ள அலுவலகத்திற்குச் சென்றோம். கட்டுவதற்கான இடத்தில் வரிசையில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். இதுவே கடைசி நாளாக இருந்திருந்தால், காவல்துறையிலிருந்து இருவர் வந்து ஒழுங்கு செய்யுமளவிற்கு கூட்டம் நெரியும். எங்களுக்கு விதிக்கப்பட்ட முன்தொகை அதிகமாக இருந்ததாக தோன்றியதால் அங்கிருந்த உயர் அலுவலரிடம் கேட்கலாமென்று அம்மா உள்ளே சென்றார். நான் வேண்டாமென்றாலும் அம்மா கேட்கமாட்டார் என்பதால் தடுக்காமல் வெளியே நின்றேன்.
வரிசையில் முதலில் நின்று கொண்டிருந்த பெரியவர் கையை நீட்டி “ஏய்… ஏய்.. போ.. போ..” என சைகை காட்டினார். நான் நின்ற இடத்திலிருந்து சற்று விலகிநின்று பார்த்தேன். அவருக்கு அருகில் வெண்ணிற நாயொன்று தன் உடலைக் குறுக்கியபடி படுத்திருந்தது. இவருடைய சத்தத்திற்கும் சைகைக்கும் தன் உடலை வளைப்பதை மட்டுமே எதிர்வினையாகக் காட்டியதே தவிர எழவோ குரைக்கவோ இல்லை. வரிசையின் அருகில் சென்ற காக்கி நிற சீருடையணிந்திருந்த அலுவலக ஊழியர் ஒருவர், “சார், அது இங்கேயேதான் கிடக்கும். என்னதான் சத்தம் போட்டாலும் அடிச்சாலும் வெளிய போகாது. என்னவோ இந்த எடம் அதுக்குப் பிடிச்சுப் போச்சு. வெறங்கேயும் போக மாட்டேங்குது. கொரக்கிற மாதிரி இருந்தாக்கூட அடிச்சு இழுத்து வெளியே போடலாம். சும்மா குறுகிக்கிட்டு கெடக்குறத என்ன செய்யறது. அது ஒன்னும் செய்யாது. பயப்படாம நில்லுங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அந்நாய்க்கு உணவு கொடுப்பவர் அவராகத்தான் இருக்கும் என்று தோன்றியபோதே, எனக்கு என் ஊரின் நினைவும் எங்கள் ஆயாவின் முகமும் மனதில் தோன்றியது.
சிவகங்கை மாவட்டத்தின் ஆரம்ப எல்லையிலிருக்கும் எங்கள் ஊர், வருடத்தில் நான்கு மாதங்கள் பசுமையாகவும் மீத மாதங்களில் வறண்டும் கிடக்கும். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் கொல்லைகளிலும் கண்மாய்க் கரையிலும் வயல்களுக்குள்ளும்தான் சுற்றி வருவேன். எத்தனை காலம்தான் பார்த்ததையே பார்த்துக்கொண்டிருப்பது என்று மனதில் வெறுமையும் அதன் தொடர்ச்சியாக வெறுப்பும் நிறைந்திருக்கும். அப்பா எப்போதாவது சென்னையிலிருந்து ஊருக்கு வரும்போது நானும் வருகிறேன் என அடம்பிடித்து அழுவேன். அவர் திரும்பிச் செல்லும்போது அருகிலிருக்கும் புதுப்பட்டிவரை அழைத்துச் சென்று ஏதேனும் தின்பண்டம் வாங்கிக் கொடுத்து ஊருக்குத் திரும்பும் யாருடனாவது அனுப்பிவைத்துவிட்டு . வெளியூர் செல்வதற்கான பேருந்தேறிச் செல்வார்.
என் அய்யா இறந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் என் ஆயா வாழ்ந்தார். ஆயாவின் முகத்திலும் கைகளிலும் தோல்கள் சுருங்கி தளர்ந்திருக்கும். பற்கள் இல்லாத வாய் உள்ளொடுங்கியிருக்கும். தன் மூன்று மருமகள்களோடு ஏதேனும் பிணக்கு வரும்போது “பாழாப் போன சாவு எனக்கு வர மாட்டேங்குது. அந்த அருமைக்கொத்த மனுசன் என்னய இப்படி பரிதவிக்க விட்டுட்டுப் போயிட்டாரே… இன்னங் கொஞ்ச நாள்ல போயிருவண்டி. நீங்கள்ளாம் சந்தோசமா வாழுங்க” என்று புலம்பியபடி வெத்தலையையும் பாக்கையும் சிறிய இரும்பு உரலில் போட்டு நைப்பார். பற்கள் கொட்டி பல ஆண்டுகள் ஆன பின்பும் வெத்தலை போடும் பழக்கத்தை அவரால் விடமுடியவில்லை. தேவையான பதத்திற்கு நைந்த வெத்தலை பாக்குக் கலவையை கடைவாய் பக்கம் வைத்து குதப்பும்போது புலம்பலை சத்தமில்லாமல் தொடர்வது போலவேயிருக்கும்.
ஆயாவின் பிலாக்கனத்தைக் கேட்டால் அம்மாவிற்கு கோபம் வந்துவிடும். “நானும் இங்க வாக்கப்பட்டு வந்து பதினஞ்சு வருசமாச்சு. வந்த நாளாத்தான் இதக் கேட்டுக்கிட்டே இருக்கேன். ஆனா போற பாட்டத்தான் காணோம்” என்று உதட்டைச் சுழித்து சத்தமில்லாமல் பொருமுவார்.
அந்த வருட முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் ஆயாவுக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. மருமகள்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆயாவின் பிள்ளைகளில் என் பெரியப்பா மட்டும்தான் ஊரில் இருந்தார். என் அப்பாவும் சித்தப்பாவும் சென்னையில் வேலை பார்த்து வந்தார்கள். தந்தி கொடுத்து இருவரையும் வரச் சொன்னார். திருச்சியில் இருந்த பெரியப்பா மகன் குணா அண்ணனும் அவசரமாக கிளம்பி வந்தார். வெளியூரிலிருந்த என் இரண்டு அத்தைகளும் கணவருடனும் பிள்ளைகளுடனும் வந்து சேர்ந்தார்கள். எங்கள் வீடு திருவிழாவின்போது இருப்பதைவிட அதிகமான நபர்களால் நிறைந்திருந்தது. திருவிழாவிற்குகூட வராதவர்கள் இப்போது வந்திருந்தார்கள்.
வியாழக்கிழமை காலையிலேயே எல்லோரும் வந்துவிட்டார்கள். திருவிழாவிற்கு ஒவ்வொருவர் வரும்போதும் வருபவரின் முகத்தில் இருக்கும் மகிழ்வால் வீட்டின் ஒளி சற்று கூடுவது போலிருக்கும். விழாவின் முதல் நாள், நிறைந்திருக்கும் எல்லோர் முகத்திலும் சுடர்விடும் ஒளியால், முழுக்க மலர்ந்த கொன்றை மரத்தைப் போன்று வீடே ஒளிர்ந்து பொலியும். ஆனால், இப்போது ஒவ்வொருவராக தங்கள் இருண்ட முகத்துடன் வரவர வீட்டினுள் இருந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மொத்த வீடும் இருளடைந்து காணப்பட்டது.
ஆயா சுயநினைவுடன் இருந்தாரா இல்லையா என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. சத்தமாக அழைக்கும் ஒவ்வொருவரையும் குழிக்குள் விழுந்த பித்திக்காய் போல இருந்த விழிகளின் மேல் சுருங்கி ஒட்டிக் கொண்டிருந்த இமைகளை பிரயாசையுடன் திறந்து நோக்கும்போது, லேசான மிளர்வு தெரிவது போலிருக்கும். ஆனால் சற்று நேரத்திலேயே இருளடைந்தது போல மாறி மூடிக்கொண்டுவிடும்.
வெள்ளிக்கிழமை காலையிலேயே எல்லோரிடமும் ஒருவித சலிப்பு தோன்ற ஆரம்பித்தது. மற்றவரிடம் வார்த்தையாக வெளிப்படுத்தாத போதும் இயல்பற்ற தலையாட்டலிலும் ஆயாவை நோக்கும் வெற்றுப் பார்வையிலும் சலிப்பு தெரிந்தது. வெள்ளிக் கிழமை மாலையில் ஊர் காவல்காரர் வந்து பெரியப்பாவிடம் பேசினார். தன்னைறியாமல் தங்கள் வாயிலிருந்து “போயிச் சேர மாட்டேங்குதே’ என்ற வார்த்தை வந்துவிடுமோ என அஞ்சியபடி ஆயாவைச் சுற்றி அமர்ந்திருந்த எல்லோருடைய முகத்திலும் “இவ்ளோ நேரம் எங்கேய்யா இருந்த’ என்று காட்டும்படியான லேசான ஆசுவாசம் வந்தது.
பெரியப்பா காவல்காரர் கூறியதை கேட்டுவிட்டு சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டு தனக்குள் சிந்திப்பதான நிலையில் இருந்தார். சில நிமிடங்களுக்குப் பின் கண்களைத் திறந்தவர் சுற்றிலும் தன் முகத்தை ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்த அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு “ஆத்தா போகனும் போகனும்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. இப்ப கெடையாக் கெடக்குறப்ப போகாம இழுத்துக்கிட்டு கெடக்குது. எல்லாரும் வேலை வெட்டிய விட்டுப்புட்டு இங்கின வந்து கெடக்குறீங்க. ஆத்தாவும் நல்லது கெட்டது எல்லாத்தையும் நெறயவே பாத்திடுச்சு” என்று கூறி சற்று நிறுத்தினார்.
அடுத்து பேசப்போகும் விசயத்தில் தனக்கு முழுச் சம்மதமில்லை என்பதைப் போன்ற பாவனை அவரின் முகத்தில் தெரிந்தது. தொண்டையை மெல்லச் செருமிக் கொண்டு “காவல்காரர் சொல்றாரு ஆத்தாவிற்கு பாலூட்டலாம்னு. நானும் செய்யலாம்னுதான் நினைக்கிறேன். ஆத்தா இப்படிக் கெடக்கிறத பாக்க முடியாமத்தான் இந்த முடிவ எடுக்க வேண்டியிருக்கு” என்று முடித்தபோது அவர் கண்களிலிருந்து வழிந்த நீரை தோளில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.
ஆயாவின் கட்டிலை தெற்குப் பக்கமாக தலையிருக்குமாறு திருப்பிப் போட்டார்கள். கையில் பிடிப்பதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கிண்ணத்தில் காய்ச்சி ஆற்றிய பசும்பாலை ஊற்றி பெரியப்பாவிடம் கொடுத்தார்கள். அதை லேசாக நடுங்கிய கைகளால் வாங்கி கண்களில் நீர்வடிய எதையோ முணுமுணுத்தபடி சிறிய தேக்கரண்டியால் அந்தப் பாலை எடுத்து சிலையின் உதடுகள்போல நிலைத்து சிறிது திறந்திருந்த ஆயாவின் வாய்க்குள் மூன்று முறை புகட்டினார். வெளியே பாதி வழிய மீதி உள்ளே போனதாகத் தோன்றியது. பிறகு பெரியவர்கள் ஒவ்வொருவராக கொடுத்தார்கள். அதன்பின் சிறியவர்கள் முறை.
பெரியவர்கள் என்ன நினைத்துக் கொண்டு கொடுத்தார்களோ தெரியவில்லை. நான் கொடுக்கும்போது “ஆயா ஒன்னப் பாக்கறப்ப ரொம்ப பாவமாயிருக்கு. ஏனிப்படி கஷ்டப்படுற. இந்தப் பாலக் குடிச்சிட்டு நீ எப்பவும் சொல்லிக்கிட்டே இருக்கிற மாதிரி நிம்மதியாப் போயேன்” என்று நினைத்துக் கொண்டே கைகள் நடுங்கி பாதியை கீழே ஊற்றி மீதியைத் தான் வாயில் ஊற்றினேன். புதுப்பட்டிவரை சென்றிருந்த ஆயாவின் முதல் பேரன் குணா அண்ணன் இரவு பதினோரு மணிக்கு வந்து, அவரின் இரண்டாவது கரண்டி பாலைக் கொடுத்தபோது மெல்ல உடல் விதிர்க்க தலையை மேற்குப் பக்கமாக சாய்த்தார்.
இறுதிக் காரியங்கள் நடக்கும்போதெல்லாம் “சாகனும்னு சொல்லிக்கிட்டே இருந்த ஆயா ஏன் இத்தனை நாள் இழுத்துக் கொண்டு கிடந்தார்” என்ற கேள்வி மனதினுள் வளைய வந்து கொண்டிருந்து. ஆயாவின் காரியத்திற்கு வந்த அப்பா கிளம்பும் போது எங்களையும் சேர்த்து கூட்டிச் செல்வதாகக் கூறினார். அம்மா ஏற்கனவே அப்பாவிடம் “பெய்யாத மழைய நம்பி ஊர்லயே வாழ்ந்துட்டு இருக்க முடியாது. நாங்களும் மெட்றாசுக்கே வந்திடறோம்னு”. கூறியிருந்தாராம். ஆயா இருக்கிற வரை பொறுத்திருங்கன்னு சொல்லியிருந்த அப்பா இப்போது தன்னுடன் அக்கா, அம்மாவுடன் என்னையும் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டாராம். விடுமுறை நாட்களிலும் திருவிழாவிற்கும் ஊருக்கு வந்து செல்லலாம் என்று அப்பா கூறினார்.
ஊரைவிட்டு வெளியே செல்ல வேண்டுமென துடித்துக் கொண்டிருந்த எனக்கு, அப்பா செய்ததாகச் சென்ன ஏற்பாடுகள் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. மனதிலிருந்த பாரமும் வெறுப்பும் காற்றடித்தவுடன் கலையும் கரும்புகையென மறைய, முகத்தில் புத்துணர்ச்சி தோன்றியதை கண்ணாடியில் பார்க்காமலேயே என்னால் உணர முடிந்தது.
அப்போதய என் மனநிலைக்கும், இறப்பதற்கு முன்பான என் ஆயாவின் மனநிலைக்கும் இடையேயான முரணை எண்ணிக் கொண்டிருந்தபோது “தம்பீ” என்று நடுங்கிய குரலுடன் அம்மா என் தோளைத் தொட்டார்.
நினைவிலிருந்து மீண்டு அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது லேசான திடுக்கிடல் தோன்றியது. தொகையை குறைக்கச் சொல்லிக் கேட்கப் போனவர், குறைக்கவில்லை என்பதற்காக இப்படிக் கலங்கி உடல் நடுங்க வேண்டிய அவசியம் என்ன. மின் அலுவலர் ஏதாவது கடுஞ்சொல்லில் வைதிருப்பாரோ. முடியாதென்றால் முடியாதெனக் கூற வேண்டியதுதானே. எதற்காக திட்டவேண்டும்.
கோபத்தில் சட்டென முகம் சிவக்க “என்னம்மா சொன்னான் அந்த ஆள்” எனக் கேட்டேன்.
“அவரு தப்பா ஒன்னும் சொல்லல. வா,, வீட்டுக்குப் போவோம்” என்று கூறியபடி வெளியே நடக்க ஆரம்பித்தார். எதுவும் புரியாமல் அவரைப் பின்தொடர்ந்தேன்.
மஞ்சள் பூக்களை தரையில் பரப்பியிருந்த கொன்றை மரத்தருகில் எனக்காக நின்றவரிடம் “என்னதாம்மா ஆச்சு. பணம் கட்டவேண்டாமா.. சொல்லேன்” என்றேன் கோபமாக.
“இனிமே அதற்கு அவசியமில்லையாம்” என்றபோது அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அப்படி இருக்குமோ என மனதில் ஓர் எண்ணம் எழ திடுக்கிடலுடன் அப்படி இருக்காது. இருக்கக் கூடாது என்று அந்த எண்ணத்தை நசுக்கி ஒதுக்கிவிட்டு அம்மாவின் முகத்தையே நோக்கினேன்.
“தம்பீ… பணம் கட்டவேண்டாம்னு சொன்னாரு”
“ஏன்”
சற்றுத் தயங்கியபடி, “இன்னும் ரெண்டு நாள்ல நம்ம வீட்ட இடிக்கப் போறாங்களாம்” என்றார்.
ஒரு கணம் மூளை செயலிழந்தது போல இருண்மை படர்ந்தது. ஆசுவாசம் அடைவதற்கு சில நிமிடங்கள் ஆயின. இங்கு சரியான வேலை அமையாமல் இரண்டு வருட ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தேன். அங்கிருந்து அனுப்பிய பணத்தில், பிரதான சாலையோரமாக இருந்த குடியிருப்பில் குடிசை ஒன்றை சகாயமான விலைக்கு வாங்கி, அதைப் பிரித்துவிட்டு, அந்த இடத்தில் சிமெண்ட் கான்கிரீட் தளம் போட்ட வீட்டை அம்மா கட்டினார். எங்கள் வீட்டில், எப்போதும் அம்மா எடுக்கும் முடிவுதான். யாரும் மறுப்போ எதிர்ப்போ தெரிவிக்க முடியாது. எப்போதுமே அப்படித்தான். அவர் எடுத்த முடிவை யாராலும் எதைச் சொல்லியும் மாற்ற முடியாது. அவருக்கே எப்போதாவது தோன்றினால்தான் மாறும். இல்லையென்றால் அம்முடிவினால் வரும் நல்லதோ கெட்டதோ அனைவருக்கும்தான். அப்படி பாதிப்பு வந்தாலும் அதற்குக் காரணமாக வேறொன்றைச் சொல்வாரே தவிர தான் எடுத்த முடிவினால்தான் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்.
நான் சிங்கப்பூரிலிருந்து வந்து பார்த்தபோதே ஏதோ தவறாகத் தோன்றியது. அம்மாதான் “நம்மிடம் இருந்த பணத்திற்கு இங்குதான் கிடைத்தது. நீயும் வெளி நாட்டுக்குப் போயி கஷ்ப்பட வேண்டாம். மெயின் ரோடுங்கிறதால வீட்டுக்கு முன்னாடியே ஒரு கடையும் கட்டிவிட்டேன். கடையும் வீடும் ஒன்னா இருக்கிற மாதிரி வேற எங்க அமையும்” என்று தன் செயலை பெருமிதமாகக் கூறினார். அவருடைய நோக்கம் சரியானதுதான். ஆனால் அதற்காக தேர்ந்தெடுத்த பிரதானச் சாலை என்பதுதான் அபாயத்திற்குரியது என்று எழுந்த சொற்களை உள்ளேயே அழுத்திக் கொண்டேன். இனி சொல்வதால் எதுவும் மாறப்போவதில்லை, அவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
சாலையை விரிவாக்கி மேம்பாலம் கட்டப் போகிறார்களாம். சாலையோரத்தில் இருக்கும் குடிசைகளை அகற்றித்தான் அப்பணிகளை மேற்கொள்ள முடியும். வீட்டிற்கு வந்ததிலிருந்து “ஹைவேஸ் எடம்னா ஏன் ரேசன் அட்டை கொடுக்கிறாங்க. ஏன் கரண்டு கனெக்சன் கொடுக்குறாங்க, அதுக்கு டெபாசிட்டும் கட்டச் சொல்றானுங்க. அதெல்லாம் இருக்கிறதனாலதான கையில இருந்த மொத்தப் பணத்தையும் இங்க வந்து கொட்டுனேன். இப்படிப் பாழாப் போகும்னு நெனக்கலையே” என்று கண்களில் நீர் வழியப் புலம்புபவரிடம் எதைக் கூறி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் என் மனைவியும் அப்பாவும் சேர்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் அழுகை வந்தாலும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனைக்காக அழுகையை ஒத்திப்போட்டேன்.
வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்துவிட்டுப்போன உறவினர் வீடொன்று இருந்தது நினைவுக்கு வந்தது. அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். வாடகைக்கு பார்க்க ஆள் வந்தால் காட்டுவதற்காக அந்த வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் வீட்டின் சாவி இருப்பதாகவும், அதைப் பெற்றுக்கொண்டு வீட்டில் சென்று தங்கிக் கொள்ளும்படியும் சொன்னார்கள்.
அதற்குள் தகவல் பரவி அருகிலிருந்த எல்லோருமே கிளம்ப ஆயத்தமானார்கள். அவர்களுடையது குடிசை வீடென்பதால் ஒரு மீன்பாடி வண்டியிலேயே மொத்தப் பொருளையும் ஏற்றிவிட முடியும். ஆனால், எங்கள் பொருள்களை எடுத்துச் செல்ல லாரி வேண்டும்.
பொருட்களை பிறகு எடுத்துக் கொள்ளலாம், முதலில் ஆட்கள் மட்டும் சென்று வீட்டை ஒழுங்கு செய்யலாம் என்று கூறினேன். என் கலங்காத திடமாக இருந்த முகம் அவர்களுக்கு வாழ்க்கையை எப்படியாவது எதிர்கொண்டு சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும்போல. எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
எப்போதுமே எதையாவது பொருட்களை எடுத்து தட்டியும் தள்ளியும் ஓசையெழுப்பியபடி இருக்கும் பையன் இப்போது அமைதியாக ஓரமாக அமர்ந்து எங்களையே திகைப்புடன் நோக்கிக் கொண்டிருந்தான். டேய்… தம்பி வாங்க… நாமெல்லாம் வெளியே போகப் போறோம்” என்றபடி அருகில் சென்றேன். திகைப்பு மாறி தாவி வருவான் என்று கையை நீட்டினேன். அவன் மறுப்பதுபோல தலையை வேகமாக ஆட்டிவிட்டு, கடகடவென தவழ்ந்து அறைக்குள் சென்று மூலையில் சுவரில் முதுகு படுமாறு அமர்ந்தான். வீட்டின் எல்லை அதுதான். எப்போதும் வெளியில் செல்வதற்கே விருப்பம் கொண்டிருந்தவனின் மென்மையான முகத்தில் இப்போது, “நான் வரமாட்டேன்” என்ற உறுதியைக் காட்டும்வண்ணம் ஓர் இறுக்கம் தெரிந்தது. அவனின் மாறுபாட்டை எண்ணிய எனக்கு, ஒரு கணத்தில் ஆயாவின் நினைவு மின்னலெனத் தோன்ற, அடக்கியிருந்த அழுகை வெடித்தெழ அவனைக் கட்டிக்கொண்டேன்.