வள்ளியம்மை

தெரிசை சிவா

அந்த ஊருக்குச் சென்ற நாளிலிருந்தே ஒரு மகிழ்ச்சி. ஒரு மனநிறைவு. சொல்லில் புரிய வைக்க முடியாத ஒரு புளகாங்கித மனநிலை. மகிழ்ச்சி என்பதற்கும் சந்தோசம் என்பதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசத்தைப் புரிந்துக்கொண்டதாய் ஒரு பேரானந்தம். அடுக்கு மாடிக் குடியிருப்பு, ஜன நெருக்கடி, வாகனப் புகை வீச்சம், மருந்துக்குக்கூட சிரிக்க மறந்த அல்லது சிரிக்க முயலாத மனித முகங்கள், என ஒரு மாதிரியான மரத்துப்போன வாழ்க்கையை அனுபவித்த எனக்கு, அந்த கிராமத்து வாழ்க்கை ஒரு அசாதாரண சந்தோசத்தைத் தந்துகொண்டிருந்தது.

என் அப்பாவின் சொந்த ஊர் இதுதானாம். அவர் அந்தக் காலத்து பி.ஏ. இருபத்திரெண்டாம் வயதில் டில்லியில் அரசாங்க வேலை கிடைக்க, அவரின் பணி நிமித்தம் காரணமாக, நான் டில்லியிலேயே பிறந்து வளர வேண்டிய சூழ்நிலை. சிறிய வயதிலேயே அம்மாவை இழந்து, அப்பாவாலேயே வளர்க்கப்பட்டேன். எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஒரு வாழ்க்கை.

காலச் சக்கரம் சுழல, எனக்கும் அரசு வேலை கிடைத்து, திருமணம் முடிந்து, வாழ்க்கையின் முற்பகுதி, முழுதும் அயலூரிலேயே கழிந்தாகிவிட்டது. எனக்கும் என் மனைவிக்கும் அன்பிற்கும் ஆசைக்கும் குறைவில்லாதிருக்க, அதற்குச் சாட்சியான “குழந்தைப் பேறு” மட்டும் இல்லாமலேயே இருந்தது. நமக்குப் பிடித்த உணவை அருகிலிருந்து மற்றவர்கள் சாப்பிடும்போது ஒரு “உணர்வு” வருமே… அதே உணர்வின் ஆயிரம் மடங்கு, எங்கள் முன்னால் பெற்றோர்கள், அவர்கள் குழந்தையைக் கொஞ்சும்போதும்.

சொல்லிமாளாத நரக வேதனை. செய்ய வேண்டிய எல்லா மருத்துவ சோதனைகள் செய்தும் பலனில்லை. இருந்தும் சோகத்தை மறந்து, நாங்கள் மகிழ்ந்த நாட்களுக்கும் குறைவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் பணவசதிக்குக் குறைவில்லாத போதும், புதியவர்களைச் சந்திக்கும்போது எதிர்கொள்ளவேண்டிய “சராசரி கேள்விகளை” நினைத்து “அசுர பயம்”.

“எத்தன குழந்தைக உங்களுக்கு?” –என்ற கேள்விக் கேட்கப்படும் போதெல்லாம்…. சுக்கு நூறாய் உடைந்திருப்பேன்.. மனைவியோ சில்லுச் சில்லாய் சிதறியிருப்பாள்.

அப்பா அடிக்கடி இந்த கிராமத்திற்கு வருவதுண்டு. குடும்பத்தாரின் திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என, என் இளமைப் பருவத்தில் இரண்டு மூன்று முறை இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். எல்லா முறையும் வருவதற்குப் பிடிக்காமலேயே வந்திருக்கிறேன். இங்குள்ள சொத்துப் பத்துகளை நிர்வகிக்கும் வேலைக்காரன் வெள்ளையன் மட்டுமே பேசிப் பழக்கம். ஆறு, குளம், வாய்க்கால், வரப்பு, கோவில், தேரோட்டம் என்பவை நாலைந்து நாளில் முடிய, மீண்டும் டெல்லி நகர வாழ்க்கை.

வீட்டுக்கு ஒரே பிள்ளையான என்னிடம், இறக்கும் தருவாயில் என் அப்பா கேட்டுக்கொண்டது இந்த ஒன்றை மட்டும்தான்.
“நான் கடைசி காலத்துல நம்ம ஊரோட ஒதுங்கனும்னு நினைச்சேன்.. நடக்கல.. நீ அத கண்டிப்பா செய்யணும் மக்கா”- என்று சொல்லிய மூன்றாவது நாளில் இறந்தும் போய்விட்டார். மனைவியும் நானும் ஒரு மட்டுப்பட்ட மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதாயிற்று. ஒரு பௌர்ணமி நாளில் எதிர்பாராத விதமாக மனைவியும் இறக்க.. நாப்பத்தைந்தாவது வயதில், தாங்க முடியாத பாரத்துடனான “தனிமை” மட்டுமே என்னை ஆக்ரமித்துக்கொண்டது.

“இளைமையில் வறுமை” எவ்வளவு கொடுமையோ.. அதைவிடக் கொடுமை “முதுமையில் தனிமை”. தனிமையின் வெறுமையில் எனக்கும் என் அப்பாவைப்போல் சொந்த ஊரின் ஞாபகம். ஞாபகம் வந்த கையோடு வீட்டு வேலையை ஆரம்பித்து, ஒரு நல்ல நாளில் குடியேறி, வருகின்ற வெள்ளிக் கிழமை வந்தால் நாலு மாதம் முடிந்து விடும். ஆரம்பத்தில் ஒரு வெறுமையோடு இங்கு வந்தாலும் இப்போது இந்த கிராமத்தின், இந்த கிராமத்து மக்களின் “ஒட்டு மொத்த ரசிகன்” ஆகியிருந்தேன்.

ஆரம்ப நாட்களில் இந்த கிராமத்து தெருக்களில் இறங்கி நடக்கும்போது, எதிர்வரும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் தூவிக்கொண்டே இருக்கும் அந்த “குசலம்” எனக்கு பிடித்திருந்தது.

“ஊருக்கு புதுசா.. யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க..”

“பரமசிவ பாட்டாக்கு மகன் வந்தாச்சுன்னு.. வெள்ளையன் சொன்னான்… அதான் பாக்கலாம்னு வந்தோம்..”

“நம்ம டெல்லி பரமசிவத்துக்கு மகனா? சரியா போச்சு… நீ எனக்கு மருமவன் முறைடே…”

“மகளுக்கு கல்யாணம்…. கண்டிப்பா வந்திரணும்..உங்களுக்கு யாரும் இல்லைங்கிற நினைப்பு வேண்டாம்.. நாங்க இருக்கோம்..”

“மாமோய்… வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்க… கைவசம் ஆள் இருக்கு..”

“வெளியயே நின்னா எப்படி… உள்ள வந்து ஒரு காப்பி சாப்பிடுங்க… அப்பா வந்தா இங்க சாப்பிடாம போகவே மாட்டங்க…”

“6000 ரூபா… முன்னாடி பரமசிவம் பாட்டா வந்தபோது கைமாத்தா வாங்கியிருந்தேன்.. அவரு போயிட்டாலும்.. அத உங்கள்ட தரதுதானே முறை.. அதான் கொண்டு வந்திருக்கேன்..”

“ஏழாம் கொடை மலர் அலங்கார உபயம் எல்லா வருசமும் அப்பாதான்..பண்ணுவாங்க.. இந்த வருஷம் நீங்க பண்ணனும்..”

சாம்பலும், புளியும் போட்டு தேய்த்த “செப்பு பாத்திரமாய்” ஜொலித்தார்கள் ஒவ்வொரு மனிதர்களும். கள்ளம் கபடமற்ற “வெள்ளை நிற” பேச்சுக்கள். அன்பான உபசரணைகள். ஆசையை தூண்டும் சம்பாஷனைகள். சுற்றம் சூழ சொந்த பந்தங்களுடன் வாழும், அந்த வாழ்வின் “சுவை” எனக்கும் நிரம்பப் பிடித்திருந்தது.

ஆத்தங்கரைக் குளியல், அரச மரத்தடிப் பிள்ளையார், திண்ணைப் பேச்சுக்கள், திகட்டாதச் சிரிப்புகள் என வாழ்க்கை ஒருவாறு வசப்பட்டு விட்டது. என் வீடானது “பெண்கள்” இல்லாத வீடாக இருப்பதால் வெட்டிப் பேச்சு பேச, ரெம்ப வசதியாக இருந்தது. சில நாட்களில் அதிகாலைப் பொழுதுவரை, பேச்சுக்கள் நீளும்.

பேசி முடித்துப் படுக்கையில் விழுந்ததும், மீண்டும் தனிமையின் தவிப்பில் மனைவியின் நினைப்பு வரும். அவளும் இந்த வீட்டில் இருந்திருந்தால்…… இரண்டு மூன்று பிள்ளைகளோடும், மனைவியோடும், அப்பாவோடும் இந்த வீட்டில் வாழ்ந்திருந்தால், எப்படி இருக்கும்?… என்ற நினைப்பு, ஒரு தாங்க முடியாத “ஏக்கத்தை” ஏற்படுத்தும். சட்டென்று எழுந்து இரண்டு டம்ளர் விஸ்கியைக் குடித்துவிட்டுப் படுத்தால் நிம்மதியான “போதைத் தூக்கம்” வாய்க்கும்.

மறுநாள் காலையில் வெள்ளையனின் “சமையல் வாசம்” தூக்கத்தைக் கலைக்கும். எழுந்து, குளித்து முடித்து, வாய்க்கால் வரப்புகளைச் சுற்றி, தெரியாத விவசாய நுணுக்கங்களை வெள்ளையன் உதவியோடு மேற்பார்வைச் செய்து, மீண்டும் வீட்டுக்கு வந்துச் சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு, விழித்தெழும் போது “வெட்டிப் பேச்சுக் கோஷ்டிகள்” திண்ணையில் என் வருகைக்காகக் காத்திருக்கும். நாலைந்து மாத கிராமத்து வாழ்க்கையானது, இவ்வாறே போய்க்கொண்டிருந்தது.

ஒரு நாள் காலைப் பொழுதின் அயர்ந்த தூக்கத்தில்தான் அந்தப் பேச்சுக்குரல்கள் கேட்டது. இடையிடையே ஒரு பெண்ணின் குரலும்.

“என்ன வெள்ளையா… வெள்ளம் வத்தி போச்சா.. உனக்கு.., இப்படி ஆயிட்ட…”

“ஒரு எரப்பு எறச்சு பாக்கியா… வெள்ளம் இருக்கா..வத்திட்டானு.. அப்ப தெரியும் உனக்கு..”

“எரச்சிட்டா போச்சு.. பல ஊரு தண்ணிய பார்த்தாச்சு… உனக்குள்ளத பார்க்க குறை வப்பானேன்..”

சில பேரின் சிரிப்பொலிகள்.. மீண்டும் வெள்ளையனின் பேச்சுக்குரல்.

“பத்து நாள்ல முடிஞ்சிருமா.. சம்முகம்.. சும்ம நாள இழுத்துடக்கூடாது….”

“அது முடிஞ்சுரும்.. ரெண்டு கையாளு மட்டும் கூட விடணும்.. மண்ணெல்லாம் வெளிய செமக்கணும்லா..”

“ரெண்டோ.. மூணோ.. ஆளை விட்டுக்கோ….. முன்னாடி.. வீட்டுல ஆளுக கிடையாது… உன் இஷ்டத்துக்கு வேலை பார்த்த… இப்ப பண்ணையாரு வந்தாச்சு தெரியும்லா…”

படுக்கையில் இருந்து எழுந்து, முகம் கழுவி வெளியே வந்தேன். வெள்ளையன் ஓடி வந்தான்.

“காம்பௌண்டு செவரு குறை கிடக்குல்லா… அத முடிக்கிறதுக்கு ஆள் வந்துருக்கு…”

வெளியே வந்து பார்த்த போது.. இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். நல்ல அசலான கிராமத்து மனிதர்கள். அவர்களின் கையில் கட்டிட வேலைக்குத் தேவையான “தட்டு முட்டு சாமான்கள்”. எண்ணை வழியத் தலைச் சீவிய ஒருவனை சுட்டிக் காட்டி, வெள்ளையன் கூறினான்.

“இது நம்ம சம்முகம்.. கொத்தனார்.. நம்ம வீட்டு வேலையெல்லாம் பார்த்தவன்.. இவன்தான்”

சண்முகம் முன்னாடி வந்து கும்பிட்டு விட்டு, சிநேக சிரிப்பு சிரித்தான். எல்லாரும் கும்பிட்டார்கள்.

“மொத்த வேலையும் முடிய எத்ர நாள் ஆகும்,,, சம்முகம்…”

“பத்து நாள்ல முடிச்சிரலாம்…பண்ணையார…”

“சரி ஆரம்பிங்க”.. என்றுச் சொல்லி விட்டு, நியூஸ் பேப்பர் படித்து, பின்னர் குளித்து, சாப்பிட்டு முடித்து வெளிய வரும் போது, கட்டிட வேலை, வெகு ஜோராக நடந்துக் கொண்டிருந்தது. சண்முகம் கல்லெடுத்து அடுக்க, அந்தப் பெண்ணும், மற்ற ஒரு ஆளும் சேர்ந்து சிமெண்ட், மண், தண்ணீர் கலவையைக் கிளறிக் கொண்டிருந்தனர். கடினமானக் கட்டிட வேலைக்கு நடுவிலும்.. இடைவிடாத சந்தோஷ உரையாடல்கள். அப்பெண்ணின் இரட்டை அர்த்த வசனங்கள். சிரிப்புகள்.

“சம்முகண்ணே… மத்தவன் மம்புட்டி போட, சரி வர மாட்டான்… உனக்கு இன்னைக்கு சாந்து கலவை கிடைச்ச மாரிதான்…”

சண்முகம் வாயில் வெற்றிலைச் சிவப்போடு உருமினார்..

முருகேசா.. வள்ளியம்மை… சொல்லுகது.. சரிதானடே.. நல்ல குத்தி கிளறி கலக்குடே… கல்லு கெட்டுக்குத்தான்… கொஞ்சம் மண்ணு கூடினாலும் பிரச்சனை இல்லை…

முருகேசன் முழு வலிமையையும் சேர்த்து, சாந்துக் கலவையை கலக்கினான். வள்ளியம்மை, சிரிப்போடு சொன்னாள்.

“ மாப்பிள்ளைக்கு.. இப்ப தான் வேகம் கூடுகு….”

வாசலில் நின்று கொண்டு, கதவு இடைவெளியில் அந்தப் பெண்ணைக் கவனித்தேன். நாப்பது வயதிருக்கலாம். நல்ல கருப்பான “நாட்டு உடம்பு”. கருப்புன்னா கருப்பு இல்லை. கருங்கல்ல நல்ல கழுவி, எண்ணைத் தேய்ச்சு விட்டா, ஒரு மினு மினுப்புக் கருப்பு வருமே, அந்த கருப்பு. முகம் முழுதும் சிரிப்பு. கூடவே “முக பௌடரில்” நனைந்த வியர்வைத் துளிகள். நெற்றி நடுவே கால் இஞ்சு விட்டத்தில் சிவப்புப் பொட்டு. வெற்றிலை ஒதுக்கிய மோவாய், வெற்றிலைக் கறைப் படிந்த பற்கள்.. “கல, கல” -வென இடைவிடாதப் பேச்சு. இடையிடையே இரட்டை அர்த்த வசனங்கள். “பாக்கணும்னா… பாருங்கல” -என கவர்ச்சி அவயங்களைப் பட்டவர்த்ததனமாகக் காட்டும் “சேலைக் கட்டு”. அக்குள் வியர்வையில் நனைந்த செம்பர் மேலாடை. கழுத்தில் கருப்பு நிறத்தில் ஒரு பழுப்புக் கயிறு. கால் தடம், செருப்பின் மேல் பதிந்த “லூனார்ஸ் செருப்பு”, காலை அலங்கரித்துக் கொண்டிருக்க, “நான் நடத்தையில் கொஞ்சம் அப்படியாக்கும்”- என்பதைச், சொல்லாமல் சொல்லும் உடல் மொழிகள்.

நான் வெளியே வந்து நின்று பார்ப்பதை, வெள்ளையன் கவனித்து, அனைவரையும் மிரட்டினான்.

“ஏ…வள்ளியம்மை… அங்க என்ன பல்லைக் காணிச்சிட்டு இருக்க.., ஏல…..முருகேசா.. வெட்டி விடு டே… சாந்த.. வேலை நடக்கட்டும்பா..

புதிதாகப் பேட்டரிப் போட்ட விளையாட்டு பொம்மை போல் அனைவரும் மும்முரமாக இயங்கினர். வேலையை மேலோட்டம் பார்ப்பதுபோல் அனைவரையும் அருகில் சென்று கவனிக்கலானேன்.

ஐந்து நிமிட அமைதிக்குப் பிறகு, வள்ளியம்மை வெள்ளையன் அருகில் சென்று.. கிசுகிசுத்தாள்.

“வெள்ளையா… பல்ல காணிக்க கூடாதுன்னா…. வேற எதாவது காணிக்கட்டா”

கொத்தனார் சண்முகத்திற்குச் சிரிப்பு தாங்கவில்லை. முருகேசன் குனிந்து சிரித்துக் கொண்டே மண்ணைக் கிளரிக்கொண்டிருந்தான். வெள்ளையன் நான் நிற்பதால் வெக்கத்தில் நெளிந்தான். எனக்கும் சிரிப்பு வெளிப்பட, வீட்டிற்குள் சென்று சிரித்தேன்.

வெளியே கொஞ்சம் சத்தமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
அன்று இரவில் வள்ளியம்மையைப் பற்றி வெள்ளையனிடம் கேட்டேன்.

“வெள்ளையா.. யாரு அந்த பொம்பளை… ரெம்ப கேவலமா… என்னா பேச்சுப்…பேசுகா”

”யாரு வள்ளியம்மையா….! கேவலம்லா…. இல்ல மொதலாளி… நல்லவ தான்…. ஒரு காலத்துல “கும்பாட்ட காரியா” –யிருந்து, இங்கனோடி உள்ள அவ்வளவு ஆம்பிளைகளையும் ஆட்டி வச்சவ… ஆடாத ஊரு கிடையாது… அவ்வளவு பிரபலம்.. வள்ளியம்மை ஆடுகான்னு சொன்னாத்தான், கோவில் திருவிழாவிற்கே பெருமைன்னு இருந்த காலம்…! கருப்பா இருந்தாலும் அப்டி இருப்பா.. சும்மா.. சித்தூரு கோவில் குதிரை மாறி……”

வெள்ளையன் மூச்சு வாங்கிக்கொண்டான். பேச்சின் சுவாரஸ்யம் கூடியதால் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அம்சமா இருந்தப்போ ஆட விட்டு பார்த்தானுகோ… கொஞ்ச நாளைக்கி அப்புறம், “அனுபவிச்சு” பார்த்தானுகோ… எல்லாம் முடிஞ்சு வயசானதுக்கப்புறம்.. எச்சிலை துப்புர மாறி துப்பிடானுகோ..’

கொஞ்சம் வருத்தமும், கொஞ்சம் வக்கிரமும், கொஞ்சம் அனுதாபமும் வெளிப்பட க் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சொந்த பந்தம் ஒண்ணும் இல்லையா… வெள்ளையா?”

“அம்மக்காரி சின்ன வயசுலேயே… போய் சேர்ந்துட்டா.. அப்பன்காரன்தான் இவள ஆட்டத்துல இறக்குனதே.. அஞ்சு வருஷம் முன்னாடி அவனும் செத்துட்டான். இது இப்ப கிடைக்குற வேலை செய்து காலம் கழிச்சிட்டு இருக்கு..”

உண்மையான வருத்தத்தோடு வெள்ளையன் பேசினான். பின்னர் சிறிதாக சிரித்துக்கொண்டே கூறினான்.

“இப்பவும் பாட்டுன்னா செத்துருவா… பெரிய இளைய ராஜா ரசிகை.. நாகர்கோயில் பஸ் ஸ்டாண்டுல, பஸ்ஸ விட்டிட்டு “பாட்டு” கேட்டுட்டு நின்ன கட்சியாங்கும்… “பாட்டு கிறுக்கு” கூடுதல்.. என்னா…. கொஞ்சம் ஆம்பிளைகளே… வெக்கப் படுற மாதிரி “வாய்” மட்டும் பேசுவா….. அப்படி இல்லாட்டன்னாலும்… மொத்த பயக்களும் சேர்ந்து…..அவள பிச்சு தின்னு போடுவானுகள்ளா…,”

மிகத் தத்ரூபமாக அவள் வாழ்க்கை நிலைமையை வார்த்தையில் விளக்கினான் வெள்ளையன்.

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒரு சராசரி ஆணுக்குள் தோன்றும் முதல் உணர்ச்சி “காமமாகவே” இருக்கிறது.. பத்து நிமிடம் அவளிடம் பழகியபின்பு, அவளின் நம்பிக்கையை பெற்று, அந்த பழக்கத்தை நீடிக்க முயற்சி செய்கிறது ஆணின் மனம்.

ஒரு பெண்ணின் சுகத் துக்கங்களை அறிந்த பின்பு, துக்கத்தில் அழுகின்ற பெண்களுக்கு ஆறுதல் சொல்ல, எந்த ஆணின் மனமும் தயங்குவதில்லை. ஆனால் துக்கத்தை வெளியில் காட்டாமல், அதை சிரிப்போடு ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை, எப்படி எதிர்க்கொள்வது என்றக் குழப்பம், எல்லா ஆண்களுக்கும் உள்ளதுதான். அதே மன நிலைமையில் தான் நானும் இருந்தேன்.

அன்றைய இரவு முழுவதும், புழுதித் தண்ணீரில் சிக்காத விலாங்கு மீனை போல், என் மனவோட்டத்திற்கு அகப்படாத “விசித்திர”மாகவே இருந்தாள் வள்ளியம்மை.

மறுநாள் காலையில் வழக்கம்போல் எல்லோரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எளியவர்களின் உழைப்பிலும், சிரிப்பிலும், வியர்வையிலும் காம்பவுண்ட் சுவர் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தது. வெள்ளையன் அப்போது இல்லாததால், நானே “மேற்பார்வை” செய்து கொண்டிருந்தேன். “மேற்பார்வை” என்றால் என்னுடையப் பாணியில் “நாற்காலியை” போட்டு உட்கார்ந்து கொண்டு, “பராக்கு, பராக்குப்” – பார்ப்பதாகும்.

சண்முகமும், முருகேசனும் வேலையில் கண்ணாய் இருக்க, அதிகப்படியான முக பவுடர், தலையில் “கனகாம்பர பூ” என மின்னினாள் வள்ளியம்மை. அவளைப் பற்றி கேள்விப்பட்ட விசயங்கள், அவள் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது. வேலையினூடே ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். எனக்கு தெரிந்தப் பாட்டுதான். எப்போதோ செல்போனில் அந்த பாட்டை பதிந்து வைத்ததாய் ஒரு ஞாபகம். செல்போனை எடுத்து பாட்டைத் தேடினேன். மிதமான ஒலியில் பாட்டை ஒலிக்க வைத்தேன்.

“அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்.. என் ராசாத்திக்காக…”- என உச்ச ஸ்தாதியில் இளையராஜாவின் இசை, காற்றில் மிதந்து காதை நனைத்தது. சண்முகமும், முருகேசனும் இசையில் லயிக்க, நூறு வோல்ட் மின்சாரம் முகத்தில் எரிய, பாட்டை ரசித்தாள் வள்ளியம்மை. சில நிமிடங்களில் பாட்டு முடிய வள்ளியம்மையிடமிருந்து அந்த அதிகார குரல்.

“பண்ணையாரே.. அந்த பாட்டை திருப்பி போடுங்க…”.

அந்த “அதிகார வேண்டுதல்” எனக்குப் பிடித்திருந்தது. பாட்டை மீண்டும் இசைக்க வைத்தேன். வெள்ளையன், எல்லோருக்கும் ஐயர் கடையிலிருந்து “டீ” வாங்கி வந்திருந்தான்.

“டீ” யைக் குடித்துக் கொண்டே வள்ளியம்மை பேசினாள்.

“சம்முகண்ணே…இந்த பாட்டை எப்படிக் கேக்கணும் தெரியுமா?”

“எப்படி..?”

“வேலை முடிஞ்சு.. நம்ம பழையாத்துல குளிச்சிட்டு..ராத்திரி ஆகாரதுக்கப்புறம்.. அம்மம்மாண்ணு.. உக்காந்து கேக்கணும்..”

“அட… அட… நீ எங்கயோ போய்ட வள்ளியம்மை..” -என்றான் வெள்ளையன்.

எனக்கும், மற்றவர்களுக்கும் சிரிப்பாக வந்தது. ஆனால் வள்ளியம்மை அதை பற்றி கவலை பட்டதாக தெரிய வில்லை. அவள் தொடர்ந்து பேசினாள்.

“அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்.. என் ராசாதிக்காக…”-னு அந்த பொம்பள பாடி முடிஞ்சதும், ஒரு புல்லாங்குழல் இசை வருமே……அது அப்படியே நம்மள எங்கயோ இழுத்துட்டுப் போகும். அதுல லயிச்சு இருக்கும் போதே… “எங்க, எங்க, கொஞ்சம் நான் பாக்குறேன்”-னு பாடுவாரே.. இளைய ராசா… அப்படியே வார்த்தைகள்…. காது வழியா போய், நெஞ்சுகுள்ள இறங்கும்… கேட்டயாண்ணே…”

வெள்ளையன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“பண்ணையாரே… நான் நேத்தே சொன்னேன்லா “பாட்டு கிறுக்குன்னு” அது.. இதுதான்….”- வள்ளியம்மையும் சிரித்துக்கொண்டே தொடர்ந்தாள்.

“அதுக்கடுத்து வரும் வயலின் ஓசை….கொன்னே…..போடும் என்னையே. ஒவ்வொரு வார்த்தையும் இசையோடு சேந்து முதுகு தண்டில் இறங்கும் பண்ணையாரே… ரெம்ப நல்ல பாட்டு பண்ணையாரே”- மிக ரசனையோடுப் பேசினாள் வள்ளியம்மை.

“இவ்வளவு தீவிரமாகப் பாட்டை ரசிக்கும் ஒரு பெண்ணை முதல் முதலாகப் பார்க்கிறேன்”- என்றேன் நான்.

“இப்படி ஒரு பாட்டுக் கிறுக்கைனு சொல்லுங்க முதலாளி…”- என வெள்ளையன் கூற எல்லோரும் சிரித்தார்கள்.

“வாழ்க்கை ரெம்ப கஷ்டமாகும் போது…இந்த மாதிரி பாட்டை கடைசியா ஒருவாட்டி கேக்கணும்……. அந்தால… “பால்டால்” அடிச்சுச் சாகணும்னு”— என்று சொல்லி வள்ளியம்மையும் சிரித்தாள்.

அன்றிரவு வள்ளியம்மை சொன்ன மாதிரிப் பாட்டை கேட்டுப் பார்த்தேன். தேன் கலந்த, கரும்புச்சாறாய் இனித்ததுப் பாட்டு. விஸ்கியின் துணையின்றி உறக்கமும் வாய்த்தது.

பின் வந்த நாட்களில் எல்லாரும் சிரிக்கச் சிரிக்கப் பேசினார்கள். மனசு மிகவும் இலகுவாகி இருந்தது எனக்கு. குறிப்பாக வள்ளியம்மையின் வெளிப்படையானப் பேச்சு.

இத்தனை சோகங்களுக்கு நடுவே, அவளால் எப்படி… இப்படி இருக்க முடிகிறது என யோசித்தேன். விடைக் கிடைக்க வில்லை. ஆனால் என்னுடையத் “தனிமை சோகங்களுக்காக” இப்போது நான் வருந்துவதே இல்லை. காற்றில் பறக்கும் வாத்து இறகை போல மனசு இலேசாகி இருந்தது.

சில நாட்களுக்குள் கரையான் கட்டும் கூட்டைப்போல், காம்பௌண்டு சுவர் வளர்ந்து நின்றது. கூடவே எங்களுக்குள் உண்டானப் “பேச்சு நட்பும்”.

அன்று அப்படிதான் வெள்ளையன், வள்ளியம்மையிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டான்.

“அதான் கிழவியாயாச்சுல்லா…. இன்னும் என்ன அலங்காரம் வேண்டி கிடக்கு உனக்கு?”

“கிழவியோ… குமரியோ… வச்ச கண்ணு வாங்காம பாக்குற பயல்கதான… நீங்க எல்லோரும். ஒவ்வொரு சனிக்கிழமையும் திட்டுவிளை மஸ்தான் ஷாயிப்புக்கு, இப்பவும் நான் குமரிதான்… அதுவும் இல்லாம.. கண்ணாடில என் முகத்தை இப்படி பாக்குறதுதான்…. எனக்கும் புடிக்கும்.” – வெடித்துச் சிதறினாள் வள்ளியம்மை.

“ஏன் வள்ளியம்மை… இப்படி பச்சையா பேசுறதுல உனக்கு குறைச்சல் ஒண்ணும் இல்லையா?” – சற்றுத் தயங்கித்தான் நானும் கேட்டேன்.

“எனக்கென்ன குறைச்சல் பண்ணையாரே… இந்த ஆம்பிள்ளைக மேலுள்ள நம்பிக்கையும் போச்சு.. பயமும் போச்சு.. இந்த ஏரியாவுல பாதி பேருக்கு மேல்… ஆசை வெறியோட குஞ்ச பிடிச்சிக்கிட்டு… என் காலடில விழுந்து கிடந்தவனுகதான்… அத்தனை பேராலையும்.. உடம்புல காயம்பட்டாலும்…. மரத்துப் போனது என்னவோ மனசுதான் பண்ணையாரே…”- என்று சொல்லிச் சிறிதாகச் சிரித்தாள்.

“இவனுகள… பார்க்கும்போதெல்லாம்…எனக்கு இவனுகளோட “மத்த உணர்ச்சி மூஞ்சி” ஞாபகம் வந்து, நல்லா சிரிப்பா வருகு… நான் என்ன செய்ய?” – என்று சொல்லி, “காம உணர்வு” வேகத்தில், ஆண்களின் முகம் எப்படி இருக்கும் என்பதை உடல் மொழியில் நடித்துக் காட்டினாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

எல்லோரும் சிரித்து உருண்டார்கள். நானும் கண்ணில் நீர் கோர்க்கும் அளவிற்குச் சிரித்தேன்.

சில நாட்களில், காம்பௌண்டு சுவரின் பணி ஒருவாறாக முடிந்திருந்தது. கட்டுமான பொருட்களைக் கையோடு எடுத்து சண்முகமும், முருகேசனும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

சம்பளப் பாக்கியை கணக்குப் பார்த்து வெள்ளையன் கொடுத்தான். வள்ளியம்மை மட்டும், தேங்காய் சவரியைக் கொண்டு, சாந்து சட்டியைக் கழுவிக்கொண்டிருந்தாள்.

“வள்ளியம்மை..நாங்க போறோம்..எல்லாத்தையும் கழுவி வச்சிட்டு நீ போ… நாளைக்கி வேலை பார்த்தியாரு வீட்டிலையாக்கும்.. நேர்த்த வந்திரு..” – என்று முருகேசன் கூறிக்கொண்டே, சண்முகத்துடன் சைக்கிளில் கிளம்பினான்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன். ஏதோ கொஞ்சம் கவலையாக இருந்தது. நாளை தொட்டு, இவர்கள் யாரும் இங்கு வரப் போவதில்லை – என்பது எனக்குக் கவலையாக இருந்தது. எதை நினைத்துக் கவலைப் படுகிறேன்.. இவர்களை நினைத்தா? வள்ளியமையை நினைத்தா? போயும்.. போயும் ஒரு தேவடியாளை நினைத்தா? நான் நினைத்தால் இவளைவிட வயதிலும், அழகிலும் அழகானப் பெண்களுடன் சல்லாபித்திருக்கலாமே…? பின்பு ஏன்….எனக்கிந்தக் கவலை? வாழ்வில் என்னைப் போன்றே, யாருமே இல்லாதிருக்கும், இவள் மட்டும், கவலையை வெளியில் காட்டுவதில்லையே? அந்த உணர்வை வெளிக்காட்டாமல், இவளால் மட்டும் எப்படி நடிக்க முடிகிறது? மண்ணைக் கீறி முளைக்கும், நெல் நாற்றைப்போல்… பல கேள்விகள் நெஞ்சைக் கீறி முளைத்திருந்தன.

எல்லாவற்றையும் கழுவி முடித்து, வீட்டுக்குப் போகத் தயாரானாள் வள்ளியம்மை. அவள் சம்பளத்தைக் கையில் கொடுத்துவிட்டு, வெள்ளையன் சொன்னான்.

“எப்படியோ வேலையை முடிசிட்டயோ..! கொஞ்சம் இரு… ஒரு வாய்க் காப்பியைக் குடிச்சிட்டு போ…”- சொல்லிக்கொண்டே சமையலறைக்குப் போனான் வெள்ளையன்.

ஈரக் கையை முந்தானையில் துடைத்துக்கொண்டே, நமட்டுச் சிரிப்போடு சொன்னாள் வள்ளியம்மை.

“வெறும் காப்பி மட்டும்தானா வெள்ளையா.., “கடி” ஒண்ணும் இல்லையா?”

வெள்ளையன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்..

“பண்ணையாரு இருக்கார்… இல்லாட்ட.. சரியா… இதுக்கு நான் பதில் சொல்லி இருப்பேன்னு”..- என்று சொல்லிச் சிரித்து, சமையலைறைக்குள் நுழைந்தான்.

அதைக்கேட்டு அவள் “கல, கல” வெனச் சிரித்தாள். நான் சிறிதாகச் சிரித்தேன். பின்பு என்னை நோக்கி,

“என்ன பண்ணையாரே… என்னவோ மாறி இருக்கீங்க?”

“எனக்கென்ன வள்ளியம்மை.. நான் சும்மாதான் இருக்கேன்..!- சமாளித்தேன்.

“இல்ல பண்ணையாரே… முகம் ஏதோ கவலையா இருந்தமாறி இருந்தது… அதான் கேட்டேன்..”

“நமக்கென்ன… பிள்ளையா.. குட்டியா…வள்ளியம்ம.. கவலை படறதுக்கு. இதயம் துடிக்குற வரை வாழ்ந்திட்டு, அப்புறம் போய் சேர்ந்திட வேண்டியதுதான்…”

“என்ன பண்ணையாரே.. இப்படிச்சொல்லிடேங்க.. இம்ம்ம்னு… சொன்னீங்கன்னா… நானே பிள்ளையைப் பெத்து தந்திட்டு போய்டுறேன்…” – என்று சொல்லி வழக்கமான இரட்டை அர்த்த மொழியுடன், நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

எந்த ஒரு சங்கோசமும் இல்லாமல் அவள் அப்படிக் கேட்டது எனக்குப் பிடித்திருந்தது. சிரித்துக் கொண்டேன்.

“உடம்பு உரசி யாரு வேணும்னாலும் பிள்ளையைப் பெத்துக்கிடலாம் வள்ளியம்ம…, ஆனால் வயசான காலத்துல.. மனம் விட்டுப் பேச ஒரு துணை வேணுமே.. அதுக்கு என்ன செய்ய..? அந்த கவலைதான் எனக்கு…! உன்ன மாறி, உள்ளுக்குள் தீ பிடிக்கிற சோகத்தை வச்சிக்கிட்டு, வெளியச் சிரிச்சு பேச என்னால முடியாதுப்பா – சட்டென்று சொல்லிவிட்டேன்.

அவள் சோகத்தை நான் அடையாளம் கண்டதாலோ அல்லது அவள் நடிப்பை நான் அடையாளம் கண்டதாலோ அல்லது அவள் பேச்சிற்கு சரியான மறுபடி பேசியதாலோ…………. என்னவோ, அவள் கண்கள் கலங்கி இருந்தது.

அழுதிருந்தாள்.

எனக்கு என்னவோ மாறி இருந்தது. வெள்ளையன் காப்பிக் கோப்பைகளோடு வெளியே வருவதைப் பார்த்து, இருவரும் தன்னிலை மாற்றிக்கொண்டோம்.

எனக்கு ஒரு கோப்பையை நீட்டி விட்டு, மற்றொன்றை வள்ளியம்மையிடம் நீட்டினான்.

“குடி.. குடி.. குடிச்சிட்டு கிளம்பு.. இன்னைக்கு சனிக்கிழமைலா.. திட்டுவிளைக்கு நைட் டுட்டிக்கு போகணும்லா..”- வள்ளியம்மையை வழக்கம்போல் வம்புக்கிழுத்தான் வெள்ளையன்.

அவள் சட்டென்று திரும்பி, யாரிடமும் எதுவும் பேசாமல், வாசலைநோக்கி நடந்துக் கொண்டிருந்தாள். ஏ…வள்ளியம்மை…. ஏ…வள்ளியம்மை….னு எத்தனையோ தடவை வெள்ளையன் கூப்பிட்டும் அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை. காப்பிக் கோப்பையோடு என்னையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான் வெள்ளையன்.

நான் முகத்தைக் குனித்து வைத்திருத்தேன். அவள் உழைப்பால் கட்டிமுடித்த “காம்பௌண்டு சுவர்” மட்டும் கம்பீரமாக “நிமிர்ந்து” நின்றுகொண்டிருந்தது.

3 Replies to “வள்ளியம்மை”

  1. கிராமத்து மனிதர்களின் குசல விசாரிப்புகள் வர்ற ஓவ்வொன்று ம் ஓவ்வொரு மனிதர்களின் முகம். இம்மனு சொல்லுங்க நான் பெத்து தாறேன் னு சொல்லும் வள்ளியம்மை தாம் எத்தனை மேன்மையானவர்கள். Super ங்க சிவா.

  2. நெஞ்சினை உருக்கும் முடிவு. தன் சோகத்தை மறைக்கத்தான் வள்ளியம்மை அப்படிப் பேசி வருகிறாள், அதை யாரும் உணரவே இல்லை, பண்ணையார் மட்டுமே உணர்ந்துள்ளார். அவருக்கும் சபலம் இருக்கிறது தன் தனிமை சோகத்தை மாற்றிக் கொள்ள.நல்ல கதை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.