- வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020
- வலிதரா நுண் ஊசிகள்
- சூர்ய சக்தி வேதியியல்
- மெய்நிகர் நோயாளிகள்
- இடவெளிக் கணினி
- இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்
- மின்சக்தி விமானங்கள்
- சிமென்டும் கரி உமிழ்வும் தீர்வும்
- குவாண்டம் உணர்தல்
- பசும் நீர்வாயு (Green Hydrogen)
- முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)
பானுமதி ந.
மனிதர்களை உருவகப்படுத்துதலால் மேம்படும் பாதுகாப்பும் துரித உயிர் காத்தலும்

‘பல சக்திகளைக் கொட்டும் முகிலாய், அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய், தூல அணுக்களாய், சூக்குமமாய், சூக்குமத்தில் சாலவுமே நுண்ணியதாய்’ எனப் பரசிவ வெள்ளத்தைப் பாடுகிறார் பாரதியார்.
‘அணுவிற்கணுவாய், அப்பாலுகப்பாலாய், கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி..’ என்கிறது விநாயகர் அகவல். நம் உடலின் உள்உறுப்புகளை மெய்நிகரில் காட்டி நம் மருத்துவமுறைகளில் ‘இன் சிலிகோ’ (in silico) புதுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளது.
மனித உடலை, அதன் உள் உறுப்புக்களை, உயிரை, தன்னுணர்வை, மனதை ஆராய்வதில் மெய்ஞானமும் விஞ்ஞானமும் வெவ்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகின்றன. உயிர் குடியிருக்கும் உடலை ஓம்பச் சொல்கிறார் திருமூலர். உடலில் ஏற்படும் நோய்ச் சிக்கல்களைக் கையாள்வதில் இன்று, மருத்துவத் துறையின் உடலியல் துறை மட்டும் ஈடுபடவில்லை. நுணுக்கமான மேம்பட்ட கணிதம், திரவ இயங்கியல், உயிர் தொழில்நுட்ப இயல், வேதியியல், பொறியியல் என்று பல்வகைப்பட்ட அறிவியல் துறைகள் இணைந்து கைகோர்த்து மனித நலத்தைக் குறைந்த செலவில், குறைந்த பின்விளைவுகளோடு, உலகளவில் மிகப் பரந்துபட்ட மனித உயிரினங்களைக் காப்பதற்கான கடமைகளைச் செய்துவருகின்றன.
உடல் நம்முடையது என்றாலும் உள்ளே என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நோயின் அறிகுறிகள் நம் உறுப்புகளில் ஒன்று அல்லது பல, சில வகைச் சிரமங்களில் இருப்பதைச் சொல்லவே காலமெடுக்கிறது. அதிலும், மிகச் சிக்கலான அல்லது தீவிரமான நிவாரணம் கோரும் வியாதியால் அவதியுறும்போது, ‘இதுவா, இப்படியா’ என்ற கேள்விகள் மருத்துவர்களையும் அசைத்துப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட மருத்துவச் செயல்முறை எத்தகைய பக்க விளைவுகளைக் கொண்டுவருமோ எனச் சுற்றமும் நட்பும் பயந்து திகைக்கும்போது, மெய்நிகர் வழிகள் எத்தனை அற்புதமானவை என்பதை நாம் இங்கே பார்க்கலாம்.
கணினிகள், மருத்துவர்களின் சிறப்பிடத்தைப் பெற்றுவிடும் என்று கூறப்பட்டிருப்பதை மெய்ப்பிப்பதுபோல் ஒவ்வொரு நாளும் புது கணினிச் செயல்முறைகள் வெளிவந்து மிகத் துல்லியமாக நோயையும் அதன் வீரியத்தையும் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டறிந்து கையாள உதவுகின்றன. அவை ஏன் மருத்துவரின் இடத்தை மட்டும் பிடிக்கவேண்டும்? நோயாளிகளின் பிரச்சனையை அறிவதற்கு அவை மருத்துவர்களாகவே ஆகிவிட்டால்தான் என்ன? இந்தத் தீநுண்மிக் காலத்தில், இது எத்தகையதொரு வரமாக அமைந்திருக்கக்கூடும்? கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதிலும் அதை மெய்நிகர் உறுப்புகளில் செலுத்தி அதன் பக்க விளைவுகளை அறிந்து அதை மேம்படுத்துவதிலும் இவை அரும்பங்காற்றி இருக்கக்கூடும்; நேர விரயம், பொருட் செலவு, உயிரிழப்புகள், தொற்றுப் பரவல் ஆகியவற்றை மிகவும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்க முடியும்.
இதைப்போலவே, சில தடுப்பூசிகள் எதிர்பார்த்த வகையில் இந்தத் தொற்றுப்பரவலைத் தடுக்கமுடியாது என்பதையும் அவற்றை உருவாக்குவதற்கான நேர, பொருள் விரயங்களைத் தவிர்ப்பதற்கும் அதி முக்கியமாகத் தன்னார்வல மனிதர்களுக்கு இவற்றைச் செலுத்தவேண்டிய அவசியம் நேரிடாமலும் இந்த மெய்நிகர் நோயாளிகள் மிக எளிதாகச் சாத்தியப்படுத்தியிருப்பார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நிகர்நிலை உறுப்புகள் அல்லது உடல் அமைப்புகளில் ‘இன் சிலிகோ’ மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரும் மிகப்பெரும் பயன் இது. கணினியின் ‘சிப்’பிற்கு சிலிக்கான் எவ்வளவு இன்றியமையாததோ அதேபோல இந்த மருந்துகள் நிகழ்நிலையில் நோய், அதற்கான மருந்து, மருத்துவ முறை, அதன் எதிர்வினை ஆகியவற்றை அறிய உதவுவதால், ‘இன் சிலிகோ’ மருந்து அல்லது மருத்துவமுறை என்றழைக்கப்படுகின்றன. (மரபியல், உயிர் தொழில்நுட்பம், பெருந்தரவுகள், ஆழ் கற்றல் ஆகியன இடம்பெறும் உயிர் தொழில்நுட்பக் கம்பெனியான பாக் ஷெக் காக் [Pak Shek Kok] ஹாங்காங்கில், ‘இன் சிலிகோ’ மருந்துகளை மெய்நிகர் உறுப்புகளில் செலுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.)
பரிசோதனைக்காக மனிதர்களைப் பயன்படுத்துவது இதனால் குறையும்; உடனடி வருங்காலத்தில், உண்மையான நோயாளிகளிடம்தான் தீவிர நோய்த்தன்மையைக் கண்டறிய முடியும் என்ற நிலையில் தற்போது நாம் இருந்தாலும், முதல் நிலைச் சோதனை, பாதுகாப்பு, குறைந்தபட்சச் செலவுகள், நேரச் சேமிப்பு, துல்லியமான முடிவுகள், சிகிச்சை முறையின் திறனை அறிய உடனே கிடைக்கும் தரவுகள் ஆகியவை, இம்முறையினை வரவேற்கச் செய்கின்றன.
ஆமாம், இந்த நிகழ்நிலை உறுப்புகள் எப்படி அமைக்கப்படுகின்றன? இங்கேதான் கணிதம் வருகிறது. ஓர் உறுப்பின் செயல்பாட்டினைச் சிக்கலான கணித மாதிரியில் அமைக்கிறார்கள்; குறிப்பிட்ட நபரின் உடலைத் துளைத்து உட்செல்லாமல் பெருந்தெளிவுக் காட்சிப்படுத்தலின் மூலம் பெறப்படும் உடலியல் தரவுகளை மேற்கூறிய சிக்கலான கணித மாதிரியிடம் சேர்ப்பிக்கிறார்கள். திறன் வாய்ந்த கணினிகள் இந்தத் தரவுகளைக்கொண்டு பெறப்படும் சமன்பாடுகளையும் அறியாதவைகளையும் ஆராய்ந்து ஒரு நிகழ்நிலை உறுப்பைச் சமைக்கின்றன. அது உண்மையைப்போலவே தோன்றுகிறது; நடந்தும்கொள்கிறது.
‘இன் சிலிகோ’ முறை, மருத்துவச் சோதனைகளில் தற்சமயம் ஓரளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. நவீன ‘முலை ஊடுகதிர்’ அமைப்பில், நிஜ மனிதர்களுக்குப் பதிலாகக் கணினி ‘உருவகப்படுத்தல்’ முறையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை பயன்படுத்துகிறது. மருந்து மற்றும் கருவிகளைச் சோதனை செய்வதற்கு இத்துறை வழங்கியுள்ள வழிகாட்டி மெய் நிகர் நோயாளிகளையும் உள்ளடக்கிய ஒன்று.
சில நோய் நிலைகளைக் கண்டறிவதில், அவற்றிற்கான மருத்துவ முறைகளைத் தீர்மானிக்கையில், ‘இன் சிலிகோ’ முறை வேகமானது மட்டுமன்று, மருத்துவப் பரிசோதனைகளில் ஏற்படும் ஆபத்துக்களையும் தவிர்க்க உதவுவதும்கூட. சி டி ஊடு கதிரால் (CT Scan) மருத்துவர்கள், இதய நோயாளியின் இரத்தக் குழாய் நோயை இதய ஓட்டப் பகுத்தாய்தல் (Heart Flow Analysis) மூலம் உடனே அறியமுடிகிறது. இந்த மேகம் சார்ந்த சேவை (நோயாளியின் இதய சந்தேசம்!) உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒன்று. இதய ஓட்டப் பகுத்தாய்தல், இந்தக் காட்சிப்படுத்தலைக் கொண்டு, கரோனரி இரத்தக் குழாய்களில் பாயும் குருதியைத் திரவ இயங்கு மாதிரியாக (Fluid Dynamic Model) அமைக்கிறது; இதன் மூலம், அசாதாரண நிலைகளையும் அதன் தீவிரத்தையும் அடையாளப்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம் இல்லையென்றால் மருத்துவர்கள், அந்த இரத்தக் குழாய்களை எப்படிச் சரிசெய்வது, எப்படிக் கையாள்வது என்பதையே உடலின் மார்புப் பகுதியில் கத்தியைச் செலுத்தி உள்நுழைந்து ‘ஆஞ்சியோகிராம்’ செய்துதான் கண்டுபிடிக்க நேரிடும். தனிப்பட்ட நோயாளிகளின் இலக்க முறை மாதிரிகளில் நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகள் அந்தந்த நோயாளிகளின் உடலுக்கேற்ற, நோயின் தீவிரத்திற்கேற்ற தனிப்பட்ட சிகிச்சை முறைகளைக் கட்டமைக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கான மருத்துவத்தில் இப்போது நடைமுறையில் உள்ளது.
‘இன் சிலிகோ’ முறையின் விஞ்ஞானம் புதிதன்று. ஒரு பொருளைக் கட்டமைப்பதிலும் அதன் உருவகத்திலும் பல்வகைப்பட்ட சூழல்களில் அதன் செயல்பாட்டுத் தேவைகளால், பொறியியலாளர்களின் முக்கியத் திருப்பு முனையாக பல பத்தாண்டுகளாக இந்த ‘போலச் செய்தல்’ நடப்பில் இருக்கும் ஒன்றுதான். புரோட்டோ டைப்கள்போல என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்; மின்னணுச் சுற்றல்கள், ஆகாய விமானங்கள், கட்டிடங்கள் ‘உருவகங்களாக’ எழும்பி வந்ததை நினைவில் கொண்டுவரலாம். பரவலாக இம்முறையை மருத்துவச் சிகிச்சையிலும் ஆய்விலும் மேற்கொள்ளப் பல தடைகள் உள்ளன.
முதலாவதாக, இதன் கணிக்கும் திறனும் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்படத் தேவையான பலவிதமான முன்னேறங்கள் வேண்டும். பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த நோயாளிகளான ஆண்கள், பெண்கள் இவர்களைப் பற்றி மிகத் தரம்வாய்ந்த மருத்துவத் தகவல் தரவுகள் உருவாக்கப்பட வேண்டும். உடலின் உட்செயல்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் கணித மாதிரிகள் செம்மையுற வேண்டும். பேச்சிலும் காட்சி அறிதலிலும் பயன்படும் செயற்கை நுண்ணறிவு மேலும் செறிவூட்டப்பட்டு உயிர் சார்ந்த தகவல்களில் ஒளி பாய்ச்ச வேண்டும். அறிவியலாளர்களும் தொழில் அதிபர்களும் இவற்றிற்கான முன்னெடுப்பைச் செய்துள்ளார்கள்; தஸ்ஸீட்(Dassault) அமைப்பின் ‘வாழும் இதயம் திட்டம்’ (Living Heart Project), ‘உள்ளிணைந்த உயிர் மருத்துவ ஆய்வில் நிகழ்நிலை மனித நல அமைப்பு’ (The Virtual Physiological Human Institute for Integrative Biomedical Research) மற்றும் மைக்ரோசாஃப்டின் ‘அடுத்த உடல் நலம்’ (Healthcare NExT) என்பவை இவற்றில் சில.
பரவலாக வணிகப்படுத்தி, சில நோய்களைக் கணினிகளின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு FDA மற்றும் யூரோப்பிய நெறிமுறையாளர்கள் சமீப காலங்களில் அனுமதி அளித்திருக்கிறார்கள்; ஆனால், அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அதிக நேரமும் பணமும் செலவாகின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கானத் தேவையை உடல் நலம் சார்ந்த பிரத்யேகச் சூழல்களால் உணர வைப்பதும் சவாலான ஒன்றுதான். மருத்துவர்களும் உடல் நலம் சார்ந்த துறையாளர்களும் இந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் பழக்கிக்கொள்ள வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். நோயாளிகளின் மருத்துவச் செலவுகள் இதனால் கட்டுக்குள் வரும்.
இப்பொருளைக் கண்டார், இடருக்கோர் எல்லை கண்டார்.
தொழில்நுட்பம் தொடர்பான வார்த்தைகளைக் கொண்ட கட்டுரையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வது என்பது எளிதல்ல. தமிழில் அதற்கு நிகரான வார்த்தையை உபயோகிப்பதும் சற்றேறக்குறைய நமது வழக்கில் இல்லை. இக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து அதை எல்லோரும் படித்து புரிந்து கொள்ளும் அளவில் தந்திருக்கும் ஆசிரியர் ந. பானுமதி அவர்களுக்கு நன்றிகள் பல. ஒரு கடினமான முயற்சியில் இறங்கி அனைவருக்கும் அதை இனிமையாக்குவது என்பது ஒரு தனி கலை. அதை தன்னகத்தே பொக்கிஷமாய் வைத்து நம் எல்லோருக்கும் பயன்படும் படி ஒரு கட்டுரையை மொழிபெயர்த்து தந்துள்ள ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். அவரது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்