முடிவு

வளவ. துரையன்

பேருந்திலிருந்து இறங்கிய கதிரவன் சலித்துக்கொண்டான். “இந்த மயிலாடுதுறைப் பேருந்து நிலையம் மட்டும் இன்னும் மாறவே இல்லையே? சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயிலில் எல்லாம் புதியதாகப் பேருந்து நிலையங்கள் விசாலமாய் அமைந்து விட்டன. தஞ்சாவூரில் விமான நிலையம்போல இருக்கிறது. எல்லாமே இப்போது கட்டப்பட்டவைதானே? இங்கு மட்டும் இதைப் பெரிதாக வேறு இடத்தில் அமைக்காமல் மைதானத்தில் மற்றுமொரு நிலையம் அமைத்துவிட்டார்கள்?”

நினைத்துக்கொண்டே பேருந்துகள் உள்ளே வரும் வழியை நோக்கி வந்தான். அதைத்தான் பெரும்பாலோர் வெளியே செல்லும் வழியாகப் பயன்படுத்துகின்றனர். நாளிதழ்களும் மாத மற்றும் வார இதழ்களும் விற்கும் கடையைத் தாண்டி இடப்புறம் திரும்பினான். வழியெங்கும் பூக்கடைகள். திடீரென்று நினைத்துக்கொண்டு மல்லிகைப் பூ ஒரு முழம் வாங்கினான். வாங்கிப் பையில் வைத்துக் கொண்டவன் அங்கு அருகில் இருந்த மாரியம்மன் கோயில் வாசலைப் பார்த்தான். சுகுணா இன்னும் வரவில்லை.

யார் முதலில் வந்தாலும் கோயிலின் உள்ளேயோ வெளியிலோ காத்திருக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கிறது. எனவே உள்ளே சென்று பார்த்தான். அங்கும் இல்லை. கைக்கடிகாரம் மணி ஒன்பது நாற்பது என்றது. வெளியில் வந்து பார்த்தால் சுகுணா வந்துகொண்டிருந்தாள். வரும்போதே ”அந்த வண்டியை விட்டுட்டேன். அதான் நேரமாயிடுச்சு” என்றாள். “சரி, போலாமா?” என்று கேட்டதற்கு, “இருங்க அம்மனைப் பாத்துட்டு வரேன்” என்று கூறி உள்ளே சென்றாள். “சீக்கிரம்” என்றான் கதிரவன்.

அவள் வந்தவுடன் இருவரும் கிழக்குத்திசையில் இருக்கும் மணிக்கூண்டை நோக்கி நடக்கத் தொடங்கினர். அதிசயமாக அத்தெருவிற்கு நெ.டூ ரோடு எனப்பெயர். பெரிய சவுளிக்கடை, கடிகாரங்கள் விற்கும் பெரிய கடை, ஓர் உணவு விடுதி, மிதிவண்டிகள் விற்பனை செய்யும் கடை, தேநீர்க்கடை இரண்டு இவற்றுடன் தெரு ஓரத்திலேயே சில விற்பனைக் கடைகளும் வைத்திருந்தார்கள். எப்பொழுதும் நெருக்கடியாகவே இருக்கும் அத்தெருவில் மெதுவாக நடந்து மணிக்கூண்டை நெருங்கி இருவரும் வலப்புறம் திரும்பினார்கள்.

அப்படியே அரை கிலோமீட்டர் சென்றால் அவர்களிருவரும் பணியாற்றும் வங்கி வரும். அந்த இடத்தைச் சின்னக் கடைத்தெரு என்று அழைப்பார்கள். இப்பொழுது தெருவில் கூட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. பையில் இருந்து பூவை எடுத்து சுகுணாவிடம் தந்தபோது அவள் வாங்கிக்கொண்டே, “என்னா பூவெல்லாம் புதுசா இருக்கு?” “என்னமோ திடீர்னு நெனச்சேன்; வாங்கிட்டேன்.” வாங்கித் தலையில் வைத்துக்கொண்டவள் சிரித்தது அழகாக இருந்தது. எதிரே வேகமாக வந்த ஆட்டோவிற்காக இருவரும் நகராட்சிப்பள்ளி வாசலில் ஒதுங்கினர். “இன்னிக்கு சாயந்தரம் கொஞ்ச நேரம் தியேட்டர் எதிரே இருக்கற பூங்காவுல ஒக்காந்து பேசிட்டுப் போவமா” என்றான் கதிரவன். உடனே அவள் லேசாகப் புன்னகைத்து, “இன்னிக்கு வேணாம். நாளைக்கு வேணாப் பாக்கலாம்” என்றாள்.

”ஏன் இன்னிக்கு என்னா?”

“இன்னிக்கு என்னைப் பொண்ணு பாக்க வராங்க; சீக்கிரமா வரச்சொல்லி இருக்காங்க” என்று சொன்ன சுகுணா கதிரவனின் முகம் சுருங்குவதையும் கவனித்தாள்.

அதற்குப் பிறகு கதிரவன் ஒன்றுமே பேசவே இல்லை. சற்றுத்தள்ளிச் சென்று சின்னக் கடைத்தெருவின் ஆரம்பத்திலேயே இருந்த வங்கியின் உள்ளே நுழைந்தனர். மாலை ஐந்து மணிவரை இனி இருவருமே இயந்திரங்கள்தாம். சுகுணா பணியில் சேர்ந்து மூன்றாண்டுகள் ஆகிஇருந்தது. கதிரவனிடம் அலுவலகத்தில் தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தொடங்கிய பழக்கம் இருவரையும் கொஞ்சம் நெருக்கமாக்கிவிட்டது. மேலும் மாலை போகும்போது இருவரும் ஒரே பேருந்தில்தான் செல்வார்கள். சுகுணா சீர்காழிக்கும் கதிரவன் வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் செல்லவேண்டும்.

மாலையில் அலுவலகம் விட்டுப் பேருந்து நிலையம் வரும் வழியில் கதிரவன் அதிகம் பேசவே இல்லை. கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னான். கூட்டம் இல்லாத சிதம்பரம் வண்டியில் இருவரும் ஏறிப் பக்கத்துப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டனர்.

“என்னா உம்முனு இருக்கீங்க” என்றாள் சுகுணா.

“இல்லியே” என்று சொல்லி வலுவில் புன்னகை செய்தான் கதிரவன். “மாப்பிள்ளை எந்த ஊராம்?” என்று கேட்டான்.

“திருச்சி பக்கம் கிராமமாம். நெலம் நெறைய இருக்காம், காருகூட வச்சிருக்காங்களாம்.”

வீட்டிற்குச் சென்ற கதிரவன் உடனேயே படுத்துவிட்டான். காப்பி எடுத்து வந்த அவன் அம்மா, “என்னடா, படுத்திட்ட; ரொம்ப வேலை அதிகமா?” என்றாள்.

“இல்லம்மா, தலைதான் லேசா வலிக்குது” என்றான்.

”கண்ணை மூடிக்கிட்டு கொஞ்ச நேரம் அப்படியே படுத்துக்க” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

”தலைய மட்டும் இல்லம்மா; சுகுணா சொன்னதிலேந்து மனசு பூரா வலிச்சுக்கிட்டு இருக்குன்னு அம்மாவிடம் சொல்ல முடியுமா” என்று நினைத்தான். கண்ணை இறுக்க மூடிக்கொண்டான்.

“இவருதாம்மா மாப்பிள்ளை” என்று சுகுணாவின் அப்பா காட்டினார். எல்லாருக்கும் கொண்டுவந்த பலகாரங்களைத் தந்துவிட்டு ஓரமாக சுகுணா உட்கார்ந்தாள். பையன் நன்றாகத்தான் இருந்தான். தலை நிறைய முடி. அரும்பு மீசை. அவள் ”கிராமத்து ஆளுன்னு சொல்றாங்களே எப்படி இருப்பாரோன்னு நெனச்சேன், பரவாயில்ல” என்று நினைத்தாள். ”எங்களுக்கு மருமவப் பொண்ணு வேலக்குப் போணும்னு இல்ல. இவன்கூட எம்.ஏ படிச்சிருக்கான். வேலைக்கு எதுவும் போகவேணாம்னு நெலத்தைப் பாத்துக்கிட்டு இருக்கான்” என்றார் பிள்ளையின் அப்பா.

“அப்பறம் என்னா? வேலய உட்டுட்டுப் போக வேண்டியதுதான?” என்று கதிரவன் வாய் திறந்து சத்தமாகச் சொன்னான். சத்தம் கேட்டு வந்த அவன் அம்மா “என்னடா, தூக்கத்திலியே பேசறியா”ன்னு கேட்டுக்கொண்டே வந்துவிட்டார்.

“இல்லம்மா. ஏதோ நெனப்பு” என்றான்.

“போ முகத்தைக் கழுவிக்கிட்டு வைத்யநாத சாமியைப் பாத்துட்டு வா; வெளக்கு வைக்கற நேரமாச்சு” என்றார். கதிரவனுக்கே வெட்கமாகப் போய்விட்டது. “எந்த அளவுக்கு ஆழமா சுகுணாவை நெனச்சிருந்தா இப்பவும் அவளைப் பத்தியே பேசியிருப்பேன்” என நினைத்துக் கொண்டான். “இனிமே சாமியைப் பாத்து என்னா ஆகப் போவுது” என்று நினைத்தாலும் கதிரவன் சற்று வெளியில் போனால் மனம் ஆறுதலடையும் என்றெண்ணிக் கோயிலுக்குப் போய்வந்தான்.

மறுநாள் சுகுணா முன்கூட்டியே வந்திருந்து அவனுக்காகக் காத்திருந்தாள். இருவரும் சேர்ந்து நடந்து சென்றனர். மணிக்கூண்டைத் தாண்டியதும், “ஏன்? இன்னிக்குப் பூ வாங்கலியா” என்று சிரித்தவாறு சுகுணா கேட்டாள். அவன் பதிலேதும் பேசவில்லை.

“ஒங்க கிட்டத்தான் கேட்டேன்” என்று அவள் மீண்டும் சத்தமாகச் சொன்னாள்.

”என்னா கேட்ட?” ”பூவைப் பத்தித்தான்” உடனே நகராட்சிப் பள்ளிக்குப் பக்கத்தில் சாலையோரம் இருந்த பூக்காரியிடம் ஒரு முழம் வாங்கினான்.

“கேட்டாதான் வாங்கிக் கொடுப்பீங்களா?”

“நேத்திக்கு நீங்க கேட்டா வாங்கித் தந்தேன்.”

”அதான் இன்னிக்கு ஏன் வாங்கித் தரல”ன்னு கேட்டேன்.” அவர்கள் பேசிக்கொண்டே போகும்போது வங்கி வந்துவிட்டது.

மாலையில் வங்கியிலிருந்து மணிக்கூண்டு வரை இருவரும் பேசாமலே வந்தனர். பொண்ணு பாக்க வந்ததைப் பத்திக் கேக்கட்டுமே என்று அவள் நினைத்தாள். நேத்திக்குப் பொண்ணு பாத்துட்டுப் போனது பத்தி அவள் சொல்லட்டுமே என்று அவன் எண்ணினான். கோயில் அருகில் வந்ததும், “இன்னிக்குப் போயிப் பூங்காவுலப் பேசிட்டுப் போகலாம்” என்றாள் சுகுணா. பொண்ணு பாத்துட்டுப்போன பெருமையைப் பத்திதான சொல்லப்போறா என்று அவன் நினைத்தான்.

“வேணாங்க, வேற ஒரு நாளு பாத்துக்கலாம்” என்றான்.

“நான் நேத்திக்கு வராததால இன்னிக்கு நீங்க வரமாட்டீங்களா? நான்தான் காரணத்தைச் சொன்னேன்ல?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல; மனசு சரியில்ல”

“அதுக்குதான் வாங்க ஒக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டுப் போலாம்னு சொல்றேன்” அவள் வற்புறுத்தினாள். அப்படியே இடப்பக்கம் செல்லும் குறுகிய தெரு வழியாக இருக்கும் மைதானத்தில் இருக்கும் சிறிய பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்துதான் தற்பொழுது காரைக்கால் மற்றும் பூந்தோட்டம் செல்லும் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. ஒரே நெருக்கடியாகப் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.

பள்ளி விட்டுவந்த மாணவர்கள் தங்கள் பேருந்து வந்தவுடன் ஓடி இடம் பிடிக்கக் காத்திருந்தனர். நெருக்கடிக்களுக்கிடையில் பல விற்பனைகளும் நடந்து கொண்டிருந்தன. அவற்றுக்கிடையே புகுந்து சென்று அடுத்த தெருவை அடைந்து திரைப்படக் கொட்டகையைத் தாண்டி பூங்காவினுள் நுழைந்தனர். கூட்டம் இன்னும் வரவில்லை. இருந்தாலும் யாரும் பார்க்காதவாறு பூங்காவின் வடக்கு ஓரத்தில் காலியாக இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தனர். ஏதாவது தின்ன வாங்கி வந்திருக்கலாம் என்றாள் சுகுணா.

அவளைப்போலத் தான் சாதாரணமாக இல்லாமல் ஒரே இறுக்கமாக இருப்பதாக அவன் நினைத்தான். பெண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறார்கள். அதே நேரத்தில் தங்கள் உணர்ச்சிகளை யாரும் பார்க்காதாவாறு மறைப்பதிலும் அல்லது விரைவாய் மாற்றிக் கொள்வதிலும் தேர்ந்தவர்கள் என்று கதிரவன் நினைத்தான். மரத்தின் மீது காகங்கள் வந்தடையத் தொடங்கின. மைனாக்களின் ஒலி பேருந்துகளின் சத்தத்தை விட அதிகம் கேட்டது. ஓய்வு பெற்ற முதியோர்கள் நான்கைந்து பேர் சற்றுத் தள்ளி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

‘ம்… சொல்லுங்க” என்றாள் சுகுணா. அவன் சற்று நேரம் பேசாமலிருந்துவிட்டு மேலே பார்த்துக்கொண்டு, ”நீங்கதான கூப்ட்டீங்க; நீங்கதான் சொல்லணும்” என்றான்.

“நேத்திக்கு நீங்க கூப்டீங்க இல்ல; அதை மொதல்ல சொல்லுங்க; அப்பறம் நான் சொல்றேன்” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே. கதிரவன் பட்டென்று “நேத்திக்குப் பொண்ணு பாத்திட்டுப் போனது என்னாச்சு?” என்றான்.

“வந்தாங்க; பாத்தாங்க; போனாங்க” என்று அவள் சிரித்தாள்.

“என்னா போயி சொல்லி அனுப்பறேன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்களா?”

”அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் பொண்ணு பாத்தவுடனேயே புடிக்குது, இல்லன்னு சொல்லிடறாங்க; தெரியுமா”

”அப்ப என்னா சொன்னாங்க?’ என்றான் ஆர்வமுடன். அவன் ஆர்வத்தை அவள் புரிந்துகொண்டாள். பதில் சொல்லாமல் கைவிரலால் பெஞ்சில் கோலமிட்டாள். அவன் பொறுமையில்லாமல் ”சொல்லு சுகுணா” திடீரென அவன் ஒருமையில் தன்னை அழைத்தது கேட்டுத் தலை நிமிர்ந்தாள். உடனே கதிரவன் சமாளித்துக் கொண்டு, ”சொல்லுங்க” என்றான்.

”இல்லிங்க, அது நின்னுபோச்சு” என்ற சுகுணாவின் முகத்திலிருந்து எதையும் அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் தன் வார்த்தைகளைக் கேட்டவுடன் கதிரவனின் முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த மலர்ச்சியை அவள் கவனித்தாள். “ம்.. நான் சொல்லிட்டேன்; இப்ப நீங்க சொல்லுங்க.” அவன் அவள் சொன்னதையே காதில் வாங்கிக்கொள்ளாமல், “ஏன் ஒங்களப் புடிக்கலயா? இல்ல நீங்க வேணாம்னு சொல்லிட்டீங்களா?”

“இல்ல நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”

”ஏன்?”

”எனக்குப் புடிக்கல.”

“ஏன் புடிக்கல?” அவள் பதில் சொல்லவில்லை. மீண்டும் கோலமிட்டாள். தலையைக் குனிந்துகொண்டே மெதுவாக, “எனக்குப் பூ வாங்கிக் கொடுக்கறவங்களைத்தான் புடிக்கும்” என்றாள்.

கதிரவனுக்குப் புரிந்துவிட்டது. மகிழ்ச்சியுடன் அவன் கோலமிடும் அவள் விரல் மீது தன் விரலை வைத்தான். விரலை எடுக்காமலேயே கீழே குனிந்துகொண்டு அவள், “ஒரு பொண்ணு ஒருத்தருக்கிட்டப் பூ வாங்கிக்கறதுன்னா ஒண்ணு அவளுக்கு அப்பாவா இருக்கணும், இல்லன்னா கூடப் பொறந்தவனா இருக்கணும், அதுவும் இல்லேன்னா மனசுக்குப் புடிச்சவனா இருக்கணும்” என்றாள். அவள் புறங்கையின்மீது தன் உள்ளங்கையை அழுத்தியவாறு “அப்ப அதுல நான் மூணாவதா வரேன் இல்லியா?” என்றான். “ஏன் அதை நான் என் வாயால சொல்லணும்னு ஆசையா இருக்கா” என்று அவள் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

“சரி, வாங்க போகலாம்” என்று அவள் சொல்லிக்கொண்டே எழுந்தாள்.

”நான் நேத்திக்கு எதுக்கு வரச்சொன்னேன்னு கேக்கலியே” என்றான் கதிரவன்.

”எனக்கு மொதல்லியே தெரியும்”

“எப்படி?”

“என்னிக்கும் பூ வாங்கித் தராவதவரு பூ வாங்கித் தராரு; அப்பறம் தனியா பேசணும்னு சொல்றாரு; இதுலேந்தே தெரியாதா?”

“தெரிஞ்சிருந்துமா பொண்ணு பாக்க ஒத்துக்கிட்ட?”

“யாரைப் பாக்க வந்தாங்க? சொன்னா ஒங்க மூஞ்சி எப்படியெல்லாம் மாறுதுன்னு பாக்கத்தான் அப்படிச் சொன்னேன்.”

“பொய் வேற சொல்லக் கத்துக்கிட்டயா” என்று அவள் தலையில் செல்லமாகக் குட்டக் கையை ஓங்க, “அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்தான்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே அவள் எழுந்தாள். இருவரும் சேர்ந்து அம்மனைக் கும்பிட்டுப் பேருந்துகளில் ஏறினார்கள். தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை அந்தப் பூங்கா அந்தக் காதலர்களை வரவேற்றது. யாரும் அறியாமல் பேச இடமளித்தது. பொதுவாக நாம் நினைக்கலாம் அப்படி என்னதான் பேசிக் கொள்வார்களோ என்று? ஆனால் காதல் செய்து பார்த்தவர்களுக்கன்றோ அந்த அனுபவம் தெரியும்.

அரசியல். சினிமா, சமயம், வங்கிப்பணிகள் என்று பலவும் பேசிக் கொண்டிருப்பார்களோ? திடீரென ஒரு நாள் சுகுணா கேட்டாள், “ஏன் அன்னிக்குத் திடீர்னு பூ வாங்கிக் குடுத்தீங்க?”

“நீ திடீர்னு பொண்ணு பாக்க வராங்கன்னு சொன்னியே; அதுபோலன்னு வச்சுக்கயேன்”

”இந்தப் பேச்ச மாத்தற வேலயெல்லாம் செய்யாதீங்க; பதில் சொல்லுங்க.” சற்று நேரம் பேசாமல் இருந்தான் கதிரவன். மேலே பார்த்தான். இரண்டு மைனாக்கள் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தன. மைனாக்கள் பெரும்பாலும் ஜோடியாகத்தான் இருக்கின்றன என நினைத்தான். அப்பொழுதுதான் புதிதாக இரண்டு குரங்குகளும் ஒரு குட்டியும் இருப்பதையும் பார்த்தான்.

“ம்…சொல்லுங்க”

“என்னா கேட்ட?”

”பூ வாங்கிக் குடுத்ததைப் பத்தி”

“அதுவா? அன்னிக்கு ரெண்டு நாளு முன்னாடிதான் எங்க வீட்ல என் கல்யாணப் பேச்சை எடுத்தாங்க. டேய், சந்திரா கேட்டுக்கிட்டே இருக்கா? என்னா பதில் சொல்றதுன்னு அம்மா கேட்டாங்க.”

“சந்திரான்றது யாரு?”

“என் அத்தை; கும்பகோணத்துல இருக்காங்க”

”அவங்களுக்குப் பொண்ணு இருக்கா?”

“ஆமா, அதாலதான் கேட்டுக்கிட்டே இருக்காங்க; பேரு கமலா; ஐ.ஓ.பியில வேலை செய்யறா”

“நல்லா அழகா இருப்பாளா”

“ஒன்னை விடவே நல்லா இருப்பா”

“சரி, போங்க; ஒங்க அம்மாக்கிட்ட அவளை செஞ்சுக்கச் சரின்னு சொல்லிடுங்க”

”அதுக்கு ஏன் ஒனக்குப் பூ வாங்கித் தரேன்” என்ற கதிரவன் தொடர்ந்தான்.

“நீ என்னா நெனக்கறன்னு தெரிஞ்சுக்கறதுக்குத்தான் அப்படிச் செஞ்சேன். அதுக்கப்பறம் அம்மாக்கிட்ட சொல்லலாம்னு.”

”சரி, சொல்லிட்டீங்களா?”

“இல்ல; வர்ற பொதன் கெழமைதான் நல்ல நாளு. அன்னிக்குதான் சொல்லப் போறேன். நீயும் அன்னிக்கு ஒங்க வீட்ல சொல்லிடு”

“சரி; பொதன் கெழமை நல்லா வரட்டும்” என்று கூறி முடித்தாள் சுகுணா.

இருவருமே புதனுக்காகக் காத்திருந்தார்கள். அன்றைக்கு சுகுணா மிகவும் தாமதமாக வரக் கதிரவன் மட்டும் தனியாக அலுவலகம் நுழைந்தான். சற்று நேரம் கழித்து சுகுணாவும் வந்த பின்தான் அவன் மனத்திற்கு நிம்மதியாயிற்று. என்ன முடிவு என்பதை அறிய இருவருமே ஆர்வமாக இருக்க அவ்வப்போது பார்க்கும் போது அவர்கள் புன்னகை செய்து கொண்டனர். அன்று வங்கியில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது. எப்பொழுது கிளம்பலாம் எனக் காத்திருந்தவர்கள் பணி முடிந்து சேர்ந்து வந்தனர். மணிக்கூண்டுப் பக்கத்தில் காளியாகுடிஓட்டலைப் பார்த்தவுடன், சுகுணா, “ஒரு காப்பி குடிச்சுட்டுப் போலாம்” என்றாள், கதிரவனும் ஒத்துக்கொண்டான்.

இருவரின் கால்களும் தாமாகவே பூங்காவிற்கு அழைத்துச்சென்றன. பூங்காவை அடையும்வரை இருவரும் பேசவே இல்லை. உட்கார்ந்தவுடன் கதிரவன், என்னா இன்னிக்குக் காப்பி?” என்றான்.

”ஒரே தலைவலி; அதான்”

”ஏன்? வீட்ல ஏதாவது பிரச்சனையா“

”அதெல்லாம் ஒண்ணுமில்ல; சரி ஒங்க வீட்ல என்ன சொன்னாங்க? சொல்லிட்டீங்க இல்ல”

”ம்…சொல்லிட்டேன்; ஒங்க அம்மா என்னா சொன்னாங்க?”

கதிரவனின் அம்மா, ”என்னாடா இப்படித் திடீர்னு குண்டத் தூக்கிப் போடற” என்றார்.

“இல்லம்மா பத்துப் பதினைஞ்சு நாளாவே சொல்லணும்னு நெனச்சிருந்தேன். நீயே அப்பாக்கிட்ட சொல்லிடு.”

“அது சரிடா. ஒன் அத்தைக்கு என்னா பதில் சொல்றது?”

“ஏம்மா நீ ஏன் ஏதாவது வாயை உட்டுட்டியா?”

“நான் ஒண்ணும் சொல்லல; அவதான் எப்ப நாம பேச்சை ஆரம்பிப்போம்னு காத்துக்கிட்டிருக்கா”

”சரிம்மா, இப்ப ஒண்ணும் நீ அத்தைக்கிட்ட சொல்ல வாணாம். சுகுணவும் அவங்க வீட்ல இன்னிக்குதான் சொல்றேன்னு சொல்லியிருக்கா.”

அம்மா சிரித்துக்கொண்டே, “ரெண்டு பேரும் இன்னிக்குதான் நாள் பாத்தீங்க போலிருக்கு” என்றாள்.

”சரி, நீ இப்ப சொல்லு” என்றான் கதிரவன். இரவு உணவை முடித்தபின் சுகுணா அம்மாவையும் அப்பாவையும் தங்கள் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றாள். தம்பியும் தங்கையும் அவரவர் அறைகளில் படிக்கத் தொடங்கி விட்டிருந்தனர். அப்பாவிடமும் அம்மாவிடமும் சுகுணா விவரம் முழுவதும் சொல்லி முடித்தாள். கேட்டுக் கொண்டிருந்த பெற்றோர் முகத்தில் வேதனையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. எல்லாவற்றையும் கேட்டபின்னர் அவர்கள் முகம் பாறைபோல இறுகிக் கிடந்ததாக சுகுணா நினைத்தாள். அவர்களிடமிருந்து எந்த வினையும் வராததால சுகுணாவே கேட்டாள்.

”என்னாப்பா? எதாவது சொல்லுங்கப்பா”

“இப்பதானம்மா சொல்லி இருக்கற; பாக்கலாம்” என்றார்.

“நீ என்னாம்மா சொல்ற?” ‘நான் என்னா தனியா சொல்லப்போறேன்? ஒன் அப்பா சொல்றதுதான்” என்றாள் அம்மா. அத்துடன் மூவரும் கீழே இறங்கிப் போய்ப் படுத்து உறங்கிவிட்டனர். காலையில் சுகுணா வங்கிக்குச் செல்லக் கிளம்பினாள். வாசலில் இறங்கும்போது, “இந்தா இதைப் போகும்போது படிச்சுப் பாரு” என்று அப்பா ஒரு காகிதம் கொடுத்தார்.

”இதைப் பாருங்க” என்று சுகுணா கதிரவனிடம் கொடுத்தாள்.

”நீ படிச்சுட்டியா?”

”நான் வண்டியிலேயே படிச்சுட்டேன்; நீங்க படிச்சுப் பாருங்கவ்”

“வாணாம் நீயே சொல்லு” என்றான் கதிரவன்.

”படிச்சாதான் நல்லாப் புரியும்; இந்தாங்க” என்று சுகுணா வற்புறுத்தக் கதிரவன் கையில் வாங்கினான்.

”அன்பு மகள் சுகுணாவிற்கு, வாழ்த்துகள், நீ நேற்று இரவு சொன்ன விஷயம் பற்றி நானும் உன் அம்மாவும் கலந்து பேசினோம். உன் திருமணம் சீக்கிரம் நடக்கவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம். பிள்ளையும் நீ சொன்னதை வைத்துப் பார்க்கும்போது நல்லவனாகத்தான் இருப்பான் என்று நம்புகிறோம். உனக்கு இப்பொழுது வயது இருபத்து மூன்றுதான் ஆகிறது. நம் வீட்டு நிலைமை உனக்கு நன்கு தெரியும். இருப்பது இந்த சொந்த வீடு மட்டுமே. நான் சுமாரான அரசுப் பணியிலிருந்து வேலை பார்த்ததால் ஓய்வூதியம் மிகக்குறைவு. ஏதோ பேங்கில் போட்டுவைத்துள்ள ஐந்து லட்சத்திலிருந்து வரும் வட்டியும் உன் சம்பளமும்தான் இந்தக் குடும்பத்தை ஓட்டுகின்றன.

உன்னைப் படிக்கவைத்த செலவும், உன் தங்கையைக் கல்லூரியில் சேர்த்த செலவுமே கடன் வாங்கியது என்று நீ அறிந்திருப்பாய். இப்போதுதான் அதைப் பாதி அடைத்திருக்கிறோம். நீ இன்னும் நான்கு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். அப்போது உன் தங்கையும் படித்து முடித்து வேலைக்குப் போயிருப்பாள். தம்பியும் கல்லூரியில் சேர்ந்திருப்பான். கடனும் முடிந்து கையில் கொஞ்சம் பணமிருக்கும். அதன் பின் வேலைக்குப் போகும் உன் தங்கை பார்த்துக் கொள்வாள். இப்பொழுது நீ திடீரென்று வீட்டைவிட்டுப் போய்விட்டால் குடும்பம் கவிழ்ந்து போகும். நாங்கள் தடை சொல்கிறோம் என நினைக்காதே. பிறகு உன் இஷ்டம்.”

படித்து முடித்து அவள் கையில் கொடுத்தான். ஒன்றும் பதில் பேசவில்லை. குட்டிக் குரங்கிற்குத் தாய் பேன் பார்க்க ஆரம்பித்திருந்தது. எங்கிருந்தோ ஒரு கருடன் வந்து வட்டமிட்டு உட்கார்ந்தது. குழந்தையைத் தள்ளுவண்டியில் உட்காரவைத்துக் கணவன் மனைவி தள்ளிக் கொண்டு வந்தனர். வேர்க்கடலை வேர்க்கடலை என்று ஒரு பையன் கூவிக் கொண்டு வந்து இவர்கள் எதற்கோ யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வாங்கமாட்டார்கள் என்று திரும்பிச் சென்றான்.

“என்னாங்க படிச்சிட்டு ஏதாவது சொல்வீங்கன்னு பாத்தா ஒண்ணும் பேசாம இருக்கீங்க?” மேலேயே குரங்குக் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருந்த கதிரவன், ”இதுல நான் என்னா சொல்றது சுகுணா? நீதான் முடிவு எடுக்கணும்” அவன் குரலில் சோகம் இருந்ததைச் சுகுணா கவனித்தாள். சுகுணாவும் அவன் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்தாள். சற்று நேரம் பேசாமல் இருந்தவள், “நான் ஒரு முடிவு எடுத்துட்டேங்க” என்றாள். அவள் பக்கம் திரும்பிய அவன் ஆர்வத்துடன் “என்னா சொல்ற?” என்றான்.

“ஆமாங்க, இவங்க இப்ப நாலு வருசம் போகட்டும்னு சொல்வாங்க; அதுக்கப்பறம் பையனும் வேலைக்குப் போயிடட்டும்னு சொல்வாங்க; படிச்சு முடிச்சவுடனேயே என் தங்கைக்கு வேலை கெடைக்கணும். இல்லன்னா இன்னும் ரெண்டு வருடம் பொறுத்துக்கோன்னு சொல்வாங்க” அவள் பேச்சில் தெரிந்த தீவிரம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

”சரி, என்னா செய்யலாம்ற”

“நீங்க ஒங்க வீட்ல சொல்லீட்டீங்க; அவங்க ஒத்துக்கறாங்க இல்ல; யார் வேணாம்னு சொன்னாலும் நம்ம கல்யாணம் நடக்குங்க” என்று தீர்மானமாகச் சொன்னாள்.

பேருந்தில் அதிகம் கூட்டமில்லை. சுகுணா மீண்டும் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள். எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று எண்ணினாள்.

வைத்தீஸ்வரன் கோயிலிலேயே திருமணம் சிறப்பாக முடிந்தது. மாலையில் அவர்கள் வேண்டிக்கொண்டபடி திருமணஞ்சேரி சென்றுவிட்டு வரவேண்டும் எனக் கதிரவன் வீட்டில் சொன்னார்கள். ஒரு கார் வைத்துக் கொண்டு திருமணஞ்சேரி சென்றார்கள். கோயிலுக்குள் அதிகம் கூட்டமில்லை. சீக்கிரம் வெளியே வந்தார்கள். அப்பொழுது அங்கு தொங்கிக்கொண்டிருந்த மாலைச் செய்தித்தாளின் சுவரொட்டியைக் கவனித்தாள். சீர்காழியில் கணவன் மனைவி மகன் மகளுடன் குடும்பம் தற்கொலை என்றிருந்தது. அந்தத் தாளை வாங்கி வரச்சொன்னாள்.

படித்தபோது அது தன் குடும்பத்தின் கதை என்று தெரிந்தது. கீழே குனிந்து அழத் தொடங்கினாள். பக்கத்தில் உட்காந்திருந்த பெண்மணி, “ஏம்மா அழுவற?” என்று கேட்டபோதுதான் அவளுக்குத் தன் நிலைமை புரிந்தது. “ஒண்ணும் இல்லம்மா, ஏதோ நெனப்பு?” என்று சொன்னவள், ”சீர்காழி வரப் போகுதா” என்று கேட்டாள். ‘ஆமாம்மா’ இன்னும் அஞ்சு நிமிஷம்”

மறுநாள் சுகுணா கோயிலில் இல்லை. வங்கிக்கும் வரவில்லை. அவள் இருக்கையைப் பார்த்தான். காலியாகக் கிடந்தது. பொறுக்க முடியாமல் மேலாளரின் அறைக்குச் சென்றான். ”சார், சுகுணா இன்னிக்கு வரலியா?”

”ஆமாம் கதிரவன். அவங்க தம்பி வந்து லீவ் லெட்டர் கொடுத்துட்டுப் போனான், ஒரு மாசம் லீவ் போட்டிருக்காங்க. ஒங்க கிட்டச் சொல்லலியா?”

“இல்லீங்க சார்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினான்.

”மிஸ்டர் கதிரவன்” என மேலாளர் அழைக்க மீண்டும் அவரைப் பார்த்தபோது. “இன்னும் ஒரு விஷயம்; சீர்காழியில நம்ம பிராஞ்சில ஒரு எடம் காலியாயிடுச்சாம் அங்க போறதுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்காங்களாம்,” கதிரவன் சோர்ந்துபோய் வந்து உட்கார்ந்தான். சுகுணாவின் இருக்கையைப் பார்த்தான். காலியாகக் கிடந்தது.

2 Replies to “முடிவு”

  1. முடிவு ” கதை குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண்களின் பரிதாபமான நிலையை அருமையாகச் சொல்கிறது.கதை உத்தியும் அருமை.குரங்கு குட்டிக்குப் பேன் பார்ப்பது,பெற்றோர் குழந்தையை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு செல்வது ஆகியவை நல்ல குறியீடுகள்.வளவ.துரையனுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.