புலம்பெயரும் பவளப்பாறைகள்

கோரா

COURSERA என்ற கல்வி நிறுவனம், பன்னாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உதவியுடன் நடத்திவரும் Massive Open Online Courses (MOOC)-களில் ஒன்றான புவி வெப்பமயமாதல்:தட்ப வெப்பநிலை மாற்றத்தின் அறிவியல் (Global Warming: The Science of Climate Change) என்ற நிகழ்நிலை வகுப்பில் 2014 ஜனவரியில் சேர்ந்து படித்துச் சான்றிதழ் பெற்றுள்ளேன். சிகாகோ பல்கலையின் புவி இயற்பியல் (Geophysical science) பேராசிரியரான David Archer பாடம் நடத்தினார். ஆனால் அழிந்துவரும் பவளப் பாறைகளைப் (coral reefs) பற்றி நிகழ்நிலை வகுப்பில் எதுவும் பேசப்படாதது எனக்கு வியப்பளித்தது.

தற்போது என் கவனத்துக்குவந்த Juan Enriquez எழுதிய Right or Wrong என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார்:

  1. 1900-ன் கடல் மட்டத்திற்குமேல் தற்போது 7″–8″ அளவு அதிகக் கடல் மட்ட உயர்வு காணப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட பாதி 1993-க்குப் பின்னர் ஏற்பட்டவை.
  2. வளி மண்டலத்திலும் கடல் நீரிலும் வெகுவேகமாக அதிகரித்துவரும் கரிம வாயு. ஒவ்வொரு மணி நேரத்திலும் 50 லட்சம் டன் கரிம வாயு காற்றில் கலக்கிறது.
  3. நீர் நெடுநேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் புவி வெப்பமாதலின் 90 விழுக்காடு கடலையே வெப்பப்படுத்தி வருகிறது. மொத்த வெப்பத்தின் 63 விழுக்காடு பெருங்கடலின் மேல்மட்ட நீரைச் சூடாக்கியது. 30 விழுக்காடு பெருங்கடலின் அடிப்பகுதியை சூடாக்கியது.
  4. க்ரீன்லாண்ட் பனிக்கட்டிகள் உருகினால் கடல் மட்டம் 20 அடி உயரும்.
  5. மட்காத குப்பைகளில் 70 விழுக்காடு கடலில் சங்கமமாகிறது.

புதுப்பிக்க முடிகிற மாற்று ஆற்றல், நெகிழிக் கழிவுகள், நெகிழி நஞ்சேற்றம், அறநெறி மாற்றங்கள் எனப் பற்பல விடயங்களையும் எழுதி நம்மைக் கலவரம் அடையச்செய்திருக்கிறார். இவரும் பவளப் பாறை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இருப்பினும் சூழலியலாளர்கள் பவளப் பாறைகள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அவற்றை மீட்டெடுப்பது மிக அவசியம் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். புயல் மற்றும் கடலரிப்பு ஆகியவை கடலோரப் பகுதிகளை அழித்துவிடாமல் காப்பதும் கடலின் மீன் வளத்தைப் பெருக்கிக் கரையோர மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதும் சுற்றுலா வாய்ப்புகளைப் பெருக்கிப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதலும் பவளப் பாறைகளின் முக்கியப் பயன்பாடுகள். மொத்தக் கடல் உயிரினங்களில் 25 விழுக்காடு, பவளப் பாறைகளை இல்லமாகக் கொண்டிருக்கின்றன. மணலும் மணல் சார்ந்த இடங்களும் அலையாத்திக் காடுகளும் புனல் காடுகளும்கொண்ட நெய்தல் சூழல் தொகுப்பு உருவாக்கத்தில் பெரும் பங்கை ஏற்றிருப்பவை பவளப் பாறைகளே.

கால நிலை மாற்றம், கடல் வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்ட உயர்வு சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை பெருமளவில் பவளத் திட்டை பாதித்திருக்கின்றன. மே மாதம் முடிவுற்ற ஆய்வில் கிட்டத்தட்ட 35 விழுக்காடு பவளப் பாறைகள் முற்றாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மேலும் 93 விழுக்காடு பாதிப்படைந்துள்ளதாகவும் கருதுகின்றனர்.

வரலாற்றின் தலைசிறந்த உயிரியலாளர், சார்லஸ் டார்வின் (1809-1882) பவளப்பாறை பற்றிக் குறிப்பிடுகையில் அவை அணைந்த எரிமலைத் தீவுகள் என்றார். 20-ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து அமெரிக்க பல்கலைகளில் தீவிரமான பவள அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தட்பவெப்பநிலை மாற்றம், கரிமவாயு பெருக்கத்தால் நேரும் கடல் அமிலமாதல், நெகிழிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடுகள் மற்றும் உள்ளூர்ச் சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றின் பாதிப்பால் பவள உயிரினங்கள் (coral polyps) அழிந்துவருகின்றன. எப்படி என்றால், பாலிப்கள் தம் திசுக்களுக்குள் வாழும் பாசிகளுடன் இணை வாழ்வு (symbiotic) வாழ்கின்றன. அதாவது பவள உயிரினத்தின் கழிவு பாசிகளுக்கு உணவாகிறது. பாசிகள் வெளியிடும் உயிரியம் (oxygen) மற்றும் பிற சத்துகளால் பவளத்தின் 90 விழுக்காடு ஆற்றல் தேவைகள் நிறைவேறுகின்றன. கடல் வெப்பம் உயர்வதன் காரணமாகப் பாலிப்கள் தம் உடலின் பாசிகளை வெளியேற்றிவிடுகின்றன. அதனால் அவை உடல் நிறமிகளை இழக்கின்றன. இதுவே பவள நிறமிழப்பு (Coral bleaching) எனப்படும். பெரும்பான்மையான வெளிறிய பாலிப்கள் உணவின்றி மடிகின்றன

பவளப்பாறைகள் பாறை வகைகளில் ஒன்றல்ல. சில வகைக் கடலினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் சில உயிரினங்களின் தொகுப்புகளுமே பவளப்பாறைத் திட்டுகளாகின்றன. இவை வெறும் சுண்ணாம்புத் திட்டுகள் மட்டுமே. இவற்றையே வாழ்விடமாக்கிக்கொண்டு வாழ்ந்து மடியும் பாலிப்புகளால் பாறை வளர்ந்து பிற கடலினங்களுக்கும் வாழ்விடமாகிறது. பெரும்பாலான பவளப்பாறைத் திட்டுகள் கடைசி பனிக்கட்டியாற்றுக் (glacial) காலத்திற்குப்பின் உருவாகின. அவற்றின் வயதும் 10,000 ஆண்டுகளுக்குக் குறைவானதாகவே இருக்கும். கடல் பரப்பில் 0.1 விழுக்காடு மட்டுமே அவை நிரப்பி இருந்தபோதிலும் 20 விழுக்காடு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இருந்துவருகின்றன. பவளப்பாறைகள் வண்ணமயமான கடலடித் தோட்டங்களாகக் காட்சி தருவதால் சுற்றுலா முக்கியத்துவமும் பெற்றுள்ளன.

பவளப் பாலிப் ஒரு நுண்ணுயிர் ஆகும். ஜெல்லி மீன்களுடன் தொடர்புடையது. பெரும்பாலும் வழுவழுப்பான உடல்கொண்ட இது, பொதுவாகவே பாறைகளுடன் ஒட்டிக் கொள்ளக்கூடியது. உருளை போன்ற உடலும் ஆக்டபஸ் கைகள் போன்ற விழுதுகளையும் கொண்டிருக்கும். விழுதுகளின் மேற்புறம் தட்டு போன்ற அமைப்பாக இருக்கும்; அது திறந்து மூடும் வாய் போன்று செயல்படும் .சின்னச் சின்ன உயிரினங்கள் தம்மைக் கடந்து செல்லும்போது விழுதுகளால் வளைத்துப் பிடித்து விழுங்கி இரையாக்கிக்கொள்கிறது.

இந்த குறிப்புகளை எழுத கூகிள்செய்த நாள்முதல், கூகிள் “Discover” இதே விடயச் சுட்டிகளை நாளுக்கு ஒன்றிரண்டு வீதம் ஒரு டஜனுக்குமேல் அறிமுகப்படுத்தி திகைக்க வைத்தது. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

These corals could survive climate change — and help save the world’s reefs: https://www.nature.com/articles/d41586-019-03629-7

Certain corals can recover from bleaching during prolonged heatwaves: https://www.newscientist.com/article/2262056-certain-corals-can-recover-from-bleaching-during-prolonged-heatwaves/

Matchmaking corals from different colonies could reduce bleaching events: https://horizon-magazine.eu/article/matchmaking-corals-different-colonies-could-reduce-bleaching-events.html

இணைக்கப்பட்டுள்ள சுட்டி, அதிகரித்துவரும் கடல் வெப்பநிலை காரணமாகப் பவள வளர்புழுக்கள் (Larvae) நில நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி மித வெப்பப் பகுதிகளுக்கு நீந்திச்சென்று அங்கே புதிய பவளப்பாறைகளை உருவாக்கி வருவதாக ஆய்வாளர்கள் கருதுவதைக் குறிப்பிடுகிறது. கடந்த நான்கு தசாப்தங்களில், வெப்ப மண்டலப் பவளப்பாறைகளில் இளம் பவள உயிரினங்களின் எண்ணிக்கை 85 விழுக்காடு சரிவடைந்திருப்பதும், மித வெப்ப மண்டலப் பவளப்பாறைகளில் அவற்றின் எண்ணிக்கை இரு மடங்கு கூடியிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது இந்தப் புலம்பெயர்வை உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள். பிற கடல்வாழ் உயிரினங்களின் இடப்பெயர்வு போல்தான் இதுவும் என்றாலும் புதிய பவளப் பாறைகளால், வெப்ப மண்டலப் பவளப் பாறைகளைப்போல் பல் வகைமைச் சூழல் தொகுதிகளுக்கு ஆதரவளிக்க முடியுமாவென ஐயுறுகிறார்கள். ஒருசில நுண்ணிய பவள வளர் புழுக்கள் மட்டுமே நீந்தியும் அலைகளின் போக்கில் மிதந்துசென்றும் புதிய இடங்களை அடையும் சக்தி கொண்டவை. அவை நில நடுக்கோட்டின் வடக்கிலும் தெற்கிலும் சம தூரத்தில் சம எண்ணிக்கையில் குடியேறி வளர ஆரம்பிக்கின்றன. இதனால் மீன் பிடிப்பு மற்றும் சுற்றுலாவுக்கெனப் புதிய வாய்ப்புகளும் வளங்களும் உருவாகலாம்.

பவளப்பாறைகள் தெளிவில்லாத ஒன்றுக்கொன்று சார்புள்ள சூழல் தொகுதி ஆகும். பவள வளர் புழுக்கள், பாசிகள் துணையுடன் மட்டுமே உயிர் வாழமுடியும். பவளப்பாறையின் வேறெந்த உயிரினம் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு செய்யும் என்பதும் வேறெந்த உயிரினம் வளர் புழுக்களின் துணையாக இருக்கப்போகிறது என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

சுட்டி :

https://phys.org/news/2019-07-coral-reefs-shifting-equator.htm

Series Navigation<< ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.