பால் டம்ளர்

கவியோகி வேதம்

தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த ஒரு அற்புத மொழிபெயர்ப்பாளர் திருமதி ராஜி ரகுநாதன். இவர் கடந்த 23 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் இருந்துகொண்டே தெலுங்கு மொழியில் வித்வத்வம் பெற்று குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், அமுதசுரபி போன்ற பிரபல ஏடுகளில் சொந்தமாய்ச் சில சிறுகதைகள் எழுதியும் தெலுங்கு மொழியிலிருந்து பல கதைகளை மொழிபெயர்த்தும் எழுதிவருபவர். சில இலக்கியப் பரிசுகளும் பெற்றவர். மங்கையர் மலர் கதைப் போட்டியில் வென்று பரிசும் பெற்றவர். தன் மொழிபெயர்ப்புப் பணிக்காக 2018-இல் திருப்பூர் சக்தி விருது பெற்றவர்.

இவரது ‘பால் டம்ளர்’ என்னும் தெலுங்கு – தமிழ் மொழிபெயர்ப்புக் கதைத் தொகுப்பின் விமர்சனம், கல்கியில் வந்ததைப் பார்த்து இவரிடமிருந்தே தபால் மூலம் அந்த நூலை வாங்கிப் படித்து மிக மகிழ்ந்தேன். பரவசமுற்றேன்.

தெலுங்கில் பிரபல எழுத்தாளர் துர்கா ஜானகிராணி அவர்கள் எழுதிய ‘ரோஜா’ என்னும் கதையே முதலில் என்னை மிகவும் கவர்ந்தது. எப்படியோ ஒரு இனக்கவர்ச்சியில் முறை தவறி மைசூரில் ஒரு காஷ்மீர அழகிய இளைஞன் மூலம் கர்ப்பமாகிவிட்ட ஒரு பெண்ணை அவள் தாயாரே வெறுத்து ஒதுக்கும் நிலையில் தாயின் தோழி ஜானகி மிக அன்புடன் வீடுவந்து அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்லி மகளிடம் தூண்டித்துருவி முறை தவறிய அசாத்ய நிலைமையைக் கண்டறிந்து இந்த அவசர நாகரிகக் கவர்ச்சி உலகில் இது ஒன்றும் அப்படி மோசமான விஷயமில்லை, அந்தப் பெண்ணும் இந்த நிலைமைக்கு முழுக் குற்றவாளி இல்லை என்று நேரிய வழியில் ஆலோசனை கூறி இந்த நிலைமையைப் பிறர் அறியாதவண்ணம் எப்படிச் சமாளிப்பது என்று ஒரு வழி கண்டுபிடித்து அந்தத் தாயையும் பெண்ணையும் காப்பாற்றுகிறார். பெற்ற ஒரு குழந்தையுடனேயே திருமணம் செய்யத் தயாரான ஒரு நேர்மையான தியாக வாலிபனையும் கண்டறிகிறார்.

இக்கதையின் இறுதி வாக்கியம்தான் என் கண்ணில் நீர் கசியவைத்தது. ‘வாசற்படி இறங்கும்போது அந்தப் பெண் ‘சுமா’ ஜானகியின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டே ”தேங்க் யூ என் பெரீம்மா! என்றாள். அவள் கண்களிலிருந்து நீர் முத்துக்கள் உருண்டன, என்று சொல்லித் தாயாரின் தோழியை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றும் அக்காட்சி என் நெஞ்சில் பசக் என்று ஒட்டிக்கொண்டது. எப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த நிலைமையையும் கருணையும் அன்பும் கொண்ட நேரிய ஒரு தெய்வீக மனத்தால் சமாளிக்கமுடியும் என்று எனக்கு இக்கதை சொல்லித்தந்தது.

அடுத்ததாக ஒரு மன வளர்ச்சி குன்றிய பெண்ணைத் தன் வீட்டில் வைத்துக் காப்பாற்ற முடியாமல், அவளின் அண்ணனே கொஞ்சமும் மனமின்றி ஒரு அசாதாரணச் செயலைச் செய்துவிட்டதைச் ‘சமுதாயப் பிராணி’ எனும் கதையில் தெலுங்கு எழுத்தாளர் வித்யாசமாய்ச் சொன்னதை மிக நயமாக எளிய, நெகிழ்த்தும் சொற்களால் ராஜி அவர்கள் கண்ணீர் கசிய வரைகிறார். இப்படிச் செய்துவிட்டேனே என்னும் சோகத்தில், ‘மூச்சு விடமுடியாமல் ஒரு மார்க்கமும் புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்; பிறகு கைகளால் முகத்தை மூடி சிறு பிள்ளைபோல் அழ ஆரம்பித்தான்’ – என்று இவர் கதையை முடிக்கும்போது நம் நெஞ்சிலும் துயரம் கப்புகிறது. எந்த நேரிய அன்பு வழியிலும் ஒரு மனிதன் போகமுடியாத சூழ்நிலை வரும்போது என்னதான் செய்யமுடியும்? எனும் ஓர் ஆதங்கத்தை என்னுள் கிளப்பிற்று.

இப்படியே நம் மொழிபெயர்ப்பாசிரியர் ராஜி அவர்கள், சில சமுதாயப் பிரச்னைகளை வித்யாசமாக அலசித் தெலுங்கில் அற்புதமாக எழுதிப் பல வாசகர்களைக் கவர்ந்த சிறப்பான சிறுகதைகளையே தம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தமிழில் மிக நுண்ணிய முறையில் தம் உயரிய எழுத்தால் செதுக்குகிறார். அந்தக் கதைகளை எல்லாம் எல்லோராவில் ஒரு சிற்பி எப்படிச் செதுக்கி நம்மையெல்லாம் கவர்ந்தானோ அதே முறையில் தமிழில் எளிய நடையில், மனம்கவர் வர்ணனை மூலம் வரைந்து நம்மையெல்லாம் இலக்கியச் சிறையில் பிடித்துப் போட்டுவிடுகிறார்.

’இப்படியும் ஒரு அன்னை’ இத்தகைய ஒரு வித்யாசமான சமுதாயப் பிரச்னையை அலசும் ஒரு மனோதத்துவக் கதை. ஷோபா பெருந்தேவி தெலுங்கில் வரைந்தது.

கால் ஊனமுற்ற பெண்ணுக்கு நல்ல அக்கறை எடுத்து, மிக முயன்று அவளுக்குத் திருமணம் செய்துவைக்காமல் சுயநலமாய் அவள் சம்பளத்திலேயே சுகமாய் வாழமுயலும் ஒரு வினோதப் பெற்றோரைக் காட்டுகிறது. இது நம் சமூகத்தில் நிலவும் ஒருவிதப் பிரச்னை. இதற்கு எப்படிக் கதாசிரியர் தீர்வு கண்டார் என்பதை ஒரு சஸ்பென்ஸோடு சொல்ல முயன்றிருக்கிறார்.

அந்த நொண்டிப் பெண் மனத்துக்குள் மறுகுகிறாள். ‘இறைவா! என்னை ஏன் இப்படிப் படைத்தாய்? இன்னும் எத்தனை நாள் மரக்கட்டை போன்ற இந்த அவல வாழ்க்கையை நான் இழுத்துப்பிடித்து நிற்கமுடியும்?” -என்று அழுது அழுது நித்திரையில் ஆழ்ந்துபோனாள் கன்யா… என ஆசிரியரும் சேர்ந்து குமுறும்போது நமக்கு உள்ளே என்னவோ செய்கிறதே! ஆயின் அடுத்தநாளே அந்தக் கன்யா தன் தோழி நடத்தும் மேட்ரிமோனியல் அலுவலகம் போய்த் தன்னைப் போன்ற ஒரு முதிர்கன்னி அவலமாக இந்த சமுதாயத்தில் வாழலாகாது எனக் கருதி, வாதிட்டு ஊனமுற்றோர்க்காக அங்கே ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறாள்.

தன் போன்று எவளும் இனி மரக்கட்டை வாழ்வு வாழக்கூடாது என்று சொல்லிய அவளுக்காக அங்கே ஒரு தனி மேட்ரி வெப்சைட் உருவாகிறது. அதுகண்ட சந்தோஷத்தில் வீட்டுக்கு வருகிறாள். அவள் தாயார்க்கோ இவளின் மகிழ்ச்சி நிலை கண்டு தீராத ஒரு சந்தேகம் வருகிறது. ஆனாலும் அது என்னவென்று கண்டறிய முடியவில்லை. ஆனால் கன்யாவின் தோழியோ முதல் கேஸாக எடுத்துக்கொண்டு அவளுக்காக அவளது பெற்றோரின் சுயநலத்தை முறியடிக்கும் விதமாய்க் கன்யாவுக்காகப் பாடுபட முன்வருகிறாள். அது கன்யாவுக்குத் தெரியாது என சஸ்பென்ஸோடு அக்கதை முடிகிறது என்று ஆசிரியர் சொல்கையில் என் நெஞ்சில் ஒரு தீர்வு கண்ட பரவசம் மின்னி மறைந்தது.

இப்படி நான் எல்லா 21 கதைகளையும் அவற்றின் அற்புத சமுதாய நோக்கத்தையும் அவற்றின் கதாநாயகர்கள் எப்படி எப்படி அழகுறத் தீர்வு கண்டார்களென்று சொல்லிக்கொண்டே போகலாம். இடம் வேண்டாமா?

மொத்தத்தில் சொல்லப்போனால் தெலுங்கிலிருந்து இந்த 21 கதைகளும் மொழிபெயர்த்தவை என்னும் சொல்லுக்கே இடமில்லாததுபோல் மிக அருமையான எளிய தமிழ் நடையில் ஆசிரியை ராஜி ரகுநாதன் அவர்கள் அத்தனை கதைகளையும் இந்நூலில் உழைத்துத் தொகுத்துள்ள இனிமையை எத்தனை பாராட்டினாலும் தகும். இலக்கிய மனம் உள்ளவர்கள் வாங்கிப் படித்து அனுபவிப்பார்களாக!

“பால் டம்ளர்” (தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு நூல்) – மொழிபெயர்ப்பாளர்: ராஜி ரகுநாதன். பதிப்பாளர்: கனவு, திருப்பூர், செல் எண்: 98490 63617. விலை ரூ. 150/-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.