பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?

பேச்சுரிமை

அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களைச் சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாகச் சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகள், மெக்கின்ஸி போன்ற செல்வாக்கான மேலாண்மை நிறுவன ஆராய்ச்சிகள், நியூ யார்க்கர் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளில் வந்த முக்கியக் கட்டுரைகள், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற தினசரிகளின் தலையங்கங்கள் – இது போன்று காசு கொடுத்துப் படிக்க வேண்டிய விஷயங்களை, இலவசமாக விநியோகித்தேன். சும்மா கொடுப்பது போதும்; இனிமேல் எல்லாமே காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்று காப்புரிமை குறித்து அப்போது கெடுபிடி அதிகமான காலம். ஆலன் ஷ்வார்ஸ் தற்கொலைக்கு ஓரிரு வருடங்கள் முன்பான நேரம். ஒரே வாரம் கெடு தந்தார்கள். அதன் முடிவில் என் வலையகத்தை முடக்கி, நொடியில் வலையில் இருந்து காணாமல் போக்கிவிட்டார்கள். (தொடர்பான தற்போதைய செய்தி: Parler Was Hacked on WordPress, The Internet’s Biggest Platform. Is Everyone At Risk?) சிலிக்கான் வேலி நிறுவனங்கள் எல்லாம் எதுவும் செய்யத் துணிந்தவை என்பதை நேரடியாக பாதிப்பின் அடிப்படையில் உணர்ந்தேன். என்னுடன் வாருங்கள் என்று 8சான் (8chan) மாதிரி, க்யூஅனான் (QAnon) மாதிரி தனது பைநாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு கிளம்பும் திருமழிசைப் பெருமாள் போன்ற டொனால்டு டிரம்ப்பும் கிடையாது. நானும் ஆழ்வார் கிடையாது.

கணிகண்ணன் போகின்றான் காமருபூ கச்சி மணிவண்ணா
நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய செந்நாப்புலவனும்
போகின்றேன் நீயும் உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூகச்சி மணிவண்ணா நீ
நிற்க வேண்டாம் துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தான்
நீயும் உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

பார்லர் நிறுவனத்தை முடக்கிய கதை

ஜன.6. – பெரும்பாலோரின் முதல் எதிர்வினை நிம்மதிப் பெருமூச்சாக இருந்தது. ஜனவரி மாதத்தின் ஆறாம் நாள் அந்த அதிரடிகள் துவங்கின. தன்னுடைய பதவிக் காலத்தில் பதினான்கே பதினான்கு நாள்கள் மட்டுமே டொனால்ட் டிரம்ப் பாக்கி வைத்திருந்தார், ஜனவரி 6 – ஜனாதிபதியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. எண்ணற்ற துஷ்பிரயோகங்கள், பொய்கள் மற்றும் முட்டாள்தனங்களை இனிமேல் அவரால் டிவிட்ட முடியாது. அதன் தொடர்ச்சியாக அவருடைய அடிவருடிகள் கணக்கும் நிறுத்தி நீக்கப்பட்டது. ட்ரம்ப்பின் பல நண்பர்களும் ஆதரவாளர்கள் கணக்குகளும் மூடப்பட்டன. அவர்களின் அவலச் சத்தத்தின் முடிவு ஆனந்தமாக இருந்தது. சமாதானத்திற்கான விலை என்பது சுதந்திரப் பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது – ஜனநாயக நாடுகளுக்குத் தலைகுனிவு.

பேச்சுரிமையின் காவலராகத் தொழில்நுட்ப நிறுவனங்கள்

ஜனவரி ஏழாம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்ப்பின் கணக்கைக் காலவரையற்ற நிலுவையில் வைப்பதாக அறிவிக்கிறது. அதற்கு மறுநாள் டிவிட்டர் அவரின் கணக்கை நிரந்தரமாக மூடுகிறது. ஸ்னாப்சாட் சமூக ஊடகமும் வீடியோக்கள் போடும் கூகுள் நிறுவனத்தின் யூடியுப் தளமும் இதே போன்ற தடைகளை ஜனாதிபதி டிரம்ப்மேல் போடுகின்றன. டிரம்ப்பைப் போன்றே செல்வாக்குடன் திகழ்ந்த பல தீவிர வலதுசாரி சார்பாளர்களுக்கும் இதே கதி. அவர்களின் கணக்குகளும் முடக்கப்படுகின்றன.

கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கடையிலும் ஆப்பிள் நிறுவனத்தில் ஐஃபோன் கடையிலும் இருந்து “பார்லர்” (Parler) நீக்கப்படுகிறது. பார்லர் – வலதுசாரிகளிடம் புகழ்பெற்றது. டிவிட்டர் மாதிரி பார்லரும் ஒரு சமூக ஊடகம். ஆனால், ட்விட்டரைவிட அளவில் மிகச் சிறியது. டிவிட்டர் பயனர்கள் மொத்தம் 32 கோடி; பார்லர் மூடியபோது, அதன் பயனர்கள் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சம். ட்விட்டரை விட்டு நீக்கப்பட்டவர்கள் பார்லருக்குச் சென்று கடையைத் துவங்கினர். வலதுசாரிகளுக்கு தங்களின் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் ஆக்ரோஷமாக முன்வைக்க பார்லர் உதவியது. கூகிள் கடையும் ஆப்பிள் செல்பேசிக் கடையும் நீக்குவதனால் – இனிமேல் எந்தப் புதிய நபராலும் பார்லர் நிரலியை தரவிறக்க முடியாது. எனினும், இதற்கு சந்து பொந்து ஓட்டைகள் இருந்தன.

A screenshot included in Amazon’s letter to Parler

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் பார்லருக்கு மரண அடி கொடுத்தது. பார்லர் செயலி இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது அமேசான் வெப் செர்வீசஸ் எனப்படும் ஏ.டபிள்யு.எஸ் (AWS). அந்த வசதிகள் நிறுத்தப்படும் என்று அமேசான் ஒரு நாள் கெடு கொடுத்து, அடுத்த நாளே பார்லரை செயலிழக்க வைக்கிறது.

வெறியாட்டத்தைத் தூண்டிய மந்தை கும்பல் இவர்கள் என்று பார்த்தால் நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அமேசானும் கூகுளும் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தனியார் நிறுவனங்கள்; எனவே, தங்களின் வசதிக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்திற்கேற்ப – என்ன வேண்டுமோ அதைச் செய்யும். நாம் எல்லோரும், ஒரு நிரலியையோ செயலியையோ தரவிறக்கும்போதும், உபயோகிக்கும் போதும், “உரிமைதுறப்பு” என்பதை ஒப்புகொண்டு, அந்தந்தப் பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுவோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதிபர் டிரம்ப் கொஞ்சம் எசகுபிசகாக டிவிட்டுகிறார். அவரின் நிலைத்தகவலைக் கேட்டோர் கொதித்தெழுகின்றனர். கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, பார்லர் நிரலியை நாங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுத்ததாக அமேசான் கடிதம் போடுகிறது.

ஆனால், இன்றைய அளவிலும் அயொத்தொல்லா அலி கொமேனி டிவிட்டரில் இயங்குகிறார். டொனால்டு டிரம்ப்பைபோல் அறச்சீற்றம் எல்லாம் கொள்ள தன் ஆதரவாளர்களை அவர் தூண்டவில்லை. 8,815,000த்துக்கும் மேற்பட்ட தன் சீடர்களுக்கு, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேரடியாக “இன்னாரை தீர்த்துக் கட்டு” என்று ஃபாத்வா கொலை உத்தரவை இன்றளவும் விடுத்துக்கொண்டே இருக்கிறார். அவர் ட்விட்டரில்தான் இன்னும் இருக்கிறார். அந்த மாதிரி வெளிப்படையான வெறித்தாக்குதல் அழைப்புக்கும் மறைமுகமாகத் தூண்டிவிடுவதற்கும் உள்ள வேறுபாடுகூட சமூக மிடையக் காவலர்களுக்குத் தெரியவில்லையா? (மேலும்: All the platforms that have banned or restricted Trump so far)

Supporters listen as President Trump speaks during a Save America Rally near the White House on January 6—not long before a pro-Trump mob stormed the Capitol Building

இணையம் எவ்வாறு இயங்குகிறது?

இதற்கு வலை எவ்வாறு, எவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

உங்களின் வலைச் செயல்பாட்டிற்கும் வலையகம் இயக்குவதற்கும் “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” (acceptable use policy) என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். சேவை விதிமுறைகள் (terms of service) என்பது கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் கொண்டவை. அவை தேசங்களுக்கேற்ப மாறும். ஆனால், “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” என்பது நிறுவனங்களுக்கு நடுவே நிலவும் பரஸ்பரப் புரிதல்.

இது எப்பொழுது, எப்படி நடைமுறைக்கு வந்தது?

தொண்ணூறுகளில் எரிதம் (spam) அஞ்சல்கள் தலைவிரித்தாடியது. சாதரண மக்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், மொத்த வலையையும் ஸ்தம்பிக்க வைத்தன. வணிக நிறுவனங்களால் தங்களின் குறைந்தபட்ச சேவையைக்கூட வழங்க இயலாதவாறு எரிதங்கள் ஆக்கிரமித்தன. அப்பொழுது இந்த அடாவடியை அடக்க அடாவடியான அணுகுமுறை, பல்வேறு சேவை வழங்குநர்களால் (ISPs) ஒப்புக்கொள்ளப்பட்டன.

இதற்கெல்லாம் கண்ணாமூச்சி காட்டி மாற்றுப் பாதையில் பயணிக்க பிறிதொரு மார்க்கம் இல்லையா?

இருக்கிறது. அது ருஷிய வழி. டி-டாஸ் காவலர் (DDoS-Guard) என்னும் பேரில் தீவிரவாத ஹமாஸ் முதற்கொண்டு எல்லா பாதகர்களுக்கும் வலைச்சேவை வழங்குகிறார்கள். மற்ற நாடுகளின் சட்டங்களையும் சாதாரண தயவு தாட்சண்யங்களும் பாராமல் வெறுப்பையும் வன்மத்தையும் பஞ்சமா பாதகத்தையும் பரப்புவதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள்.

அதிருக்கட்டும். இந்தியாவில் ஓர் இணையம். சீனாவில் இன்னொரு இணையம். இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?

இணையம் என்பது கூட்டாட்சி. இந்தியாவில் அது ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல். அமெரிக்காவில் அது ஏடி அண்ட் டி, வெரைசான், ஸ்ப்ரிண்ட், டி – மொபைல். ஜெர்மனியில் டாயிச் டெலிகாம். இது சற்றே விரிவான நெட் நியுட்ராலிடி என்னும் இடத்துக்குள்ளும் சென்று புரிந்துகொள்ள வேண்டியது. இதை அடுத்த இதழில் அலச எடுக்கலாம்.

தற்போதைக்கு இதை வாசிக்கலாம்:

People associated with far-right online movements such as QAnon breached the Capitol on Wednesday

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகிறார்களா?

கிளவுட் – கம்ப்யூட்டிங் சேவைகள் உட்பட இணையத்தின் உள்கட்டமைப்பு நடுநிலையாக இருக்க வேண்டும். பிளவுபடுத்தும் பாகுபாடான போர்களில் இழுக்கப்பட்டாலும் நாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த முடிவுகளை எவர் எடுக்கிறார்கள்? தொழில்நுட்ப நிறுவனங்களின் கையில் இந்த சாவி இருக்கிறது. குடிமக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் பங்குதாரர்களாலும் இயக்குநர்களின் குழுமத்தினாலும் கணக்கிட முடியாத சில நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இவை இருக்கின்றன.

தங்களை மேய்க்கப்போகும் எல்லா செயற்குழுக்களையும் டெமோகிராட் கட்சி கையில் எடுத்துவிட்டது என்பதை FAAMG எனப்படும் ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகிள் உணர்கிறது. ஜியார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டன. இனிமேல் தங்களின் குடுமி ரிபப்ளிகன் கட்சியிடம் இல்லை. டொனால்ட் டிரம்ப்பும் அவரின் ரிபப்ளிகன் கட்சியும் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.

டெமோகிரட் பெரும்பான்மை. ஜனாதிபதி ஜோ பைடன்; செனேட் பெரும்பான்மைக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்; ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைச் செய்து நிறைவேற்றிவிட்டார்கள். இந்த சிலிகான் வாலி பெருநிறுவனங்களில் வேலை பார்ப்போரின் 95% தேர்தல் காணிக்கைகள் ஜோ பைடனுக்கு சென்றுள்ளது. (பார்க்க: Silicon Valley Opens Its Wallet for Joe Biden | WIRED). பார்லர் பெருமுதலையாக இருந்திருந்தால், இந்த மாதிரி, “எடுத்தோமா… கவிழ்த்தோமா” என்னும் மூடுவேலை சாத்தியமேயில்லை.

கீழே காணும் ட்விட்டை போட்டவர் ஜெனிஃபர் பால்மியெரி (Jennifer Palmieri). இவர் க்ளிண்டன் ஆதரவாளர்.

இதனால் கூகிள் நிறுவனம், சிலபல சில்லறையாகச் சிதற வேண்டாம். ஆப்பிள் எத்தனை காசுக்கு வேண்டுமானாலும் ஐஃபோனை விற்றுக் கொள்ளலாம். அமேசான் வருமான வரியை அதிக அளவில் கட்டவேண்டாம்.

இன்று ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் சிலிகான் வேலி நிறுவனங்கள், நாளைக்கே குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றால், அவர்களின் துதி பாடி, இன்னொரு ஆட்சி சொல்வதை சிரமேற்கொண்டு இரும்புக் கரத்தினால் இன்னொருவரை அடக்கும் என்பதில் எவருக்கும் துளிக்கூட ஐயமிருக்கக்கூடாது. ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “தனியார் நிறுவனங்கள் பேச்சு விதிகளை தீர்மானிக்கக்கூடாது,” என்றார். ருஷியாவில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளரான அலெக்ஸீ நவல்னி (Alexei Navalny), “இந்தத் தணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். (இப்போதைய செய்தி: ‘The problem is Putin’: protesters throng Russia’s streets to support jailed Navalny: More than 2,500 are arrested at rallies across the country as cities see huge turnouts in support of opposition leader)

இவ்வளவு ஏன்? ட்விட்டர் நிறுவனத் தலைவரான ஜாக் டார்சிகூட “ஆபத்தான முன்மாதிரி” என வருந்தியிருக்கிறார்.

பார்லர் போல் பல்வேறு நபர்களை இவர்கள் நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள். (மேலும்:  

List of most-downloaded apps on Apple Store, Jan. 8, 2021

வருங்காலத்திற்கான சில தீர்வுகள்

  1. ஒரு சில நிறுவனங்களே இப்போது எவர் பேசலாம், எதைப் பேசலாம், எவ்வளவு பேசலாம், எப்படி பேசலாம் என்பதை முடிவு செய்கின்றன. இந்த நிலை மாற விதவிதமான விளம்பரம் சார்ந்த, விளம்பரங்கள் சாராத வணிக அமைப்புகள் வரவேண்டும்.
  2. வைரல் ஆவது என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் முக்கியமாக அமைந்திருக்கிறது. விற்கிறதோ இல்லையோ – எல்லாவிதமான நூல்களும் அச்சிடப்பட்டது ஒரு காலம். அதுபோல், பரவலாகப் பல்லாயிரம் பேரைச் சென்றடையாவிட்டாலும் முக்கியமான விஷயங்களை முன்னிறுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.
  3. எதைத் தணிக்கை செய்வது என்பது குறித்துப் பல்வேறு சிந்தனையாளர்களிடமிருந்து கருத்துகளைப் பெறவேண்டும்.
  4. சில ஸ்டேட்டஸ் தகவலுக்கு அடியில் “இது உண்மை அன்று” என்பது போன்ற எச்சரிக்கைகளைக் கொட்டை எழுத்தில் போடவேண்டும்.
  5. எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அது வெளிப்படையாகவும் கணிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும்.
  6. கடினமான தீர்ப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள், மறு முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்கும் சுயாதீனமான சட்டரீதியான வாரியங்கள் அமையவேண்டும்.
  7. உகாண்டாவில் தன் நிரலி கிடைக்காது என்பதற்காக, நாட்டிற்கேற்ப வளைந்து கொடுக்காத சுதந்திரச் செயலிகள் இயங்கவேண்டும்.
  8. இன்றைக்குச் சரியெனப்படுவது நாளைக்குத் தவறாக இருக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் 12 வயதில் மணமுடித்து, 13ல் குழந்தை பெறுவது சகஜமாக இருந்தது. அதுபோல், காலத்திற்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் மாறும் சட்ட திட்டங்களைச் சமூகங்களும் பிரஜைகளும் உருவாக்க வேண்டும். விற்பனையைக் குறிக்கோளாக வைக்கும் நிறுவனங்கள் கையில் இந்த முடிவுகள் இருக்கக்கூடாது.
  9. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இழிமொழியைக் கதையில் வரும் கதாபாத்திரம், அந்தச் சூழலுக்கேற்ப பயன்படுத்தலாம். அது ஒப்புக்கொள்ளக் கூடியதே. அதே வெறுப்பு மொழியை டிவிட்டரில் பயன்படுத்தமுடியாது. இது சுதந்திர நாட்டிற்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் பிரதேசத்திற்கும் இடையே வேறுபடும். சீனர்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்கர்களுக்கு ஒரு சட்டம் என்று பிரிவுபடுத்தாத உலகளாவிய ஒரு நோக்கு வரவேண்டும்.

One Reply to “பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?”

  1. முழு விபரங்கள் அடங்கிய பதிவு. நிறையட் தெரிந்துகொண்டேன். இந்தியாவிலும் முயற்சிகள் நடக்கின்றன. Zohoவின் அரட்டைக்கு நல்ல எதிர்காலம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Telegramஐப் பலர் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். ஏகபோக முதலாளிகளின் கொட்டம் இன்று இல்லாவிட்டால் நாளை அடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டு “உபீஸ்” கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களால் ட்விட்டர் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. விளக்கு அணையும்போது ஒளி ஒளிந்துகொள்ளும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.