- பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு
- பரோபகாரம் – நம்பகத்தன்மை
- பரோபகாரம் – தன்னார்வுலா
- பரோபகாரம் – மஹா உதவல்கள்
- பரோபகாரம் – நாட்டுக்கு நாடு
நாம் யாராவது ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ உதவ முற்படும்போது நமக்குள் குறைந்தது மூன்று விதமான மதிப்பீடுகள் நடப்பது வழக்கம். முதலாவதாக அந்த தூண்டும் காரணம் (cause) ஏதாவதொரு அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்து உணர்வுபூர்வமாக நம்மைக் கவர்வதாக இருக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு ஏழையாக இருந்தாலும், அவர் ஜாலியாக கொஞ்சம் கஞ்சா அடித்துவிட்டு, சூதாடப் பணம் கேட்டாலோ, அல்லது உலகைச் சுற்றிப்பார்த்துவிட்டு வரப்போகிறேன் என்று பிளேன் டிக்கெட் வாங்கப் பணம் கேட்டாலோ, அது அவர் கவலைகளை மறக்கடித்து அவரை மகிழ வைக்கும் என்றாலும் கூட, நாம் உதவ விரும்புவதில்லை.
நமது உதவியைப் பெறுபவர் (அல்லது அமைப்பு) எவ்வளவு தூரம் நம்பத்தகுந்தது என்பது இரண்டாவது கேள்வி. நாம் கேள்விப்படும் குறிக்கோள் நல்லதாக இருந்தாலும், நமது உதவி அந்தக் குறிக்கோளை அடைய மட்டுமே பயன்படுத்தப்படும் என்று நம்மால் சரியாக நம்ப முடியாவிட்டால், நாம் உதவத் தயங்குவோம்.
மூன்றாவதாக நமது உதவியின் பலன் எவ்வளவு பெரிதாக இருக்கப் போகிறது என்ற கணிப்பு. இந்தக் கோணத்தை புரிந்து வைத்திருக்கும் அமைப்புகள் நம்மிடம் உதவி கோரும் போது “ஏதாவது கொடுங்கள்” என்று அசிரத்தையாகக் கேட்காமல், நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் (அல்லது எந்த ஒரு சிறு உதவியும்) தங்களின் குறிக்கோளை அடைய மிக அதிக அளவில் (Leverage) உதவப் போகிறது என்று கட்டம் போட்டுக் காட்டி விடுவார்கள்.
அதற்கு ஒரு நல்ல உதாரணமாக அமெரிக்காவில் உள்ள NPR (நேஷனல் பப்ளிக் ரேடியோ) உபயோகிக்கும் ஒரு யுத்தியைச் சொல்லலாம். அந்த அமைப்பு, விளம்பரதாரர்களை நம்பாமல், பெரும்பாலும் நேயர்கள் தரும் நன்கொடைகளை வைத்து தனது வானொலி சேவையைக் கொடுத்து வருகிறது. ஏதாவதொரு கொடையாளி அவர்களுக்கு பத்தாயிரம் டாலர் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை பேசாமல் வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொள்வதற்கு பதில், தங்கள் வானொலி நிலையத்திலிருந்து இப்படி ஒரு வேண்டுதல் விடுப்பார்கள். “நமது வானொலி சேவையை மிகவும் விரும்பும் ஒரு கொடையாளி ஒரு சவால் விடுத்திருக்கிறார். அதன்படி அடுத்த ஒரு மணி நேரத்தில் நன்கொடையாக நமது நேயர்கள் ஓராயிரம் டாலர்கள் நமது நிலையத்திற்கு கொடுத்து உதவினால், அப்படி வந்து சேரும் ஒவ்வொரு டாலருக்கும் இணையாக அவர் பத்து டாலர்கள் தரவிருக்கிறார். நீங்கள் ஒரு டாலர் கொடுத்தால் அது எங்களுக்கு பதினொரு டாலராக வந்து சேரும். நீங்கள் பத்து டாலர் கொடுத்தால் அது எங்களுக்கு நூத்திப்பத்து டாலருக்கு இணை. இது அடுத்த ஒரு மணி நேரம் மட்டுமே. உங்கள் நன்கொடையை பதினொரு மடங்காகப் பெருக்க கிடைக்கும் இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள். உடனே உங்கள் கிரெடிட் கார்டுடன் எங்கள் தொலைபேசி எண்ணை அழையுங்கள்”. அவர்கள் சொல்வதில் ஏதும் பொய் இல்லை என்றாலும், நீங்கள் பணம் தந்தாலும், தராவிட்டாலும் அவர்களுடைய பெரிய கொடையாளி பத்தாயிரம் டாலரைக் நிச்சயமாக கொடுக்கத்தான் போகிறார் என்று உங்களுக்கு தெரிந்தால், அடித்துப்பிடித்து அடுத்த ஒரு மணிக்குள் உங்கள் நன்கொடையை கொடுக்கத் தூண்டும் அவசரம் காணாமல் போய்விடும்.
கீவாவைப் பற்றி ஆராய்ந்த சென்ற அத்தியாயத்தில் நமக்கு அறிமுகமான எனது நண்பர், “அருகே சென்று பார்க்கும்போது இரண்டாம், மூன்றாம் மதிப்பீடுகள் கொஞ்சம் இடிக்கின்றன”, என்றார். உதாரணமாக, சில நாடுகளில் கொடுக்கும் கடனுக்கு மேல் நாற்பது சதவீதம் வரை கீவா கட்டணமாக கடனாளிகளிடம் வசூலிக்கிறது என்று அறிக்கைகள் கூறுவதை சுட்டிக்காட்டினார். தேடிப் பார்த்தபோது இது உண்மைதான் என்பதும் கீவாவே இதற்கு பதிலும் அளித்திருக்கிறது என்பதும் தெரிந்தது. மிகவும் பின்தங்கிய, படிப்பறிவு, வாகன வசதி ஏதும் இல்லாத சமூகங்களில் பணியாற்றும்போது, தாங்கள் உள்ளூரில் இருக்கும் சிறு நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் போன்றவர்களுடன் பணியாற்ற வேண்டி இருப்பதின் அவசியத்தையும், அந்த உள்ளூர் பணியாளர்கள் எல்லோரும் (உதாரணமாக தினமும் வெறும் பத்து ரூபாயை தங்கள் கடனை அடைக்கக் கட்டும் சுமார் இருபது கடனாளிகளின் வீடுகளுக்குச் சென்று அந்தத் தவணைப் பணத்தை தினமும் பெற்றுவரும் ஒரு கிராமத்து சேவகர்) சம்பளம் ஏதும் எதிர்பார்க்காத தன்னார்வத் தொண்டர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்கிறது கீவா. அந்த வாதம் நிச்சயம் சரிதான் என்றாலும், அவர்களின் வலைதளத்தில் இந்தக் கட்டண விகிதங்களைப் பற்றி அவர்கள் அதிகம் வெளிச்சமிட்டுப் காட்டுவதில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
எனக்குப் பிடித்து நான் ஆதரவளிக்கும் எந்த ஒரு கருத்தோ அல்லது அமைப்போ பற்றிய நம்பத்தகுந்த தரவுகள் எனது புரிதல் சரியல்ல என்று நிரூபித்தால், நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று அசட்டுப் பிடிவாதம் பிடிக்க முயலாமல், தவறான என் கருத்தை மாற்றிக் கொள்வது என் வழக்கம். எனவே, என் நண்பர் நிறைய அலசி விட்டுத்தான் சொல்கிறார் என்று தெரிந்ததால், நானும் நுண்கடன்களின் விளைபயன்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போது கையில் கிடைத்த ஒரு புத்தகம் டேவிட் ரூட்மேன்னின் Due Diligence – An impertinent Inquiry into Microfinance. ரூட்மேன் எந்தப் பக்கமும் சாயாமல், சென்டிமென்ட் எதற்கும் இடம் தராமல், நுண்கடன் அமைப்புகளை உலகெங்கும் சென்று ஆராய்ந்து பாரபட்சமில்லாத அறிக்கைகளை வெளியிட்டு பெயர் பெற்றவர். இந்தப் புத்தகத்தில் கீவாவை மட்டுமின்றி மொஹம்மத் யூனஸ்ஸின் கிராமீன், இந்தியாவில் இயங்கும் ஸ்பன்தானா, BASIX அமைப்புகள், மற்றும் இந்தோனேஷியா, பிரசில் என்று உலகின் பல நாடுகளில் இயங்கும் பல்வேறு நுண்கடன் அமைப்புகளை நேரே சென்று ஆய்ந்து, தரவுகளைச் சேகரித்து, களப்பணியில் நிறைய நேர்காணல்கள் நடத்தி, புரிந்ததை புத்தகமாக எழுதியிருக்கிறார். நுண்கடன் மூலம் ஒரு தொழிலை ஆரம்பித்து வெகுவாக முன்னேறி, குடும்ப/சமூக மரியாதையும் அந்தஸ்தையும் பெற்ற ஒரு பெண்மணி ஒருவரின் கதையையும், அதற்கு மாறாக, பெற்ற நுண்கடனை நிறையக் கட்டணங்களுடன் திரும்ப அடைக்க ஊராலும், அமைப்பாலும் மிகவும் வற்புறுத்தப் பட்டதால் தனது சொந்தவீட்டையே இழக்க நேர்ந்த (இனி செத்தாலும் நுண்கடன் வாங்க மாட்டேன் என்று உறுதி பூண்டிருக்கும்) இன்னொரு பெண்ணின் கதையுடனும் புத்தகம் தொடங்குகிறது.
கீவாவைப் பற்றி பேசும்போது அதிகம் விளம்பரப் படுத்தப் படாத கட்டணங்களுடன் வேறு பல சுவாரஸ்யமான விளக்கங்களையும் எடுத்து வீசுகிறார். ஒவ்வொரு நுண்கடன் விண்ணப்பதாரரைப் பற்றியும் ஒரு குட்டிக் கதையெழுதி அவர்கள் படத்துடன் தங்கள் வலைதளத்தில் பிரசுரித்து கீவா நமது இதயத்தைச் சுண்டி இழுத்தாலும், பெரும்பாலான கடன்கள் களத்தில் முன்னாலேயே கொடுக்கப் பட்டிருக்கும் என்கிறார் அவர்! நீங்களும் நானும் எப்போது ஐந்தும் பத்துமாக சேர்த்து முழுக்கடனையும் கொடுக்க முன்வருவோம் என்பதை சரியாக கணிக்க இயலாது. அவசரமாக கடன் தேவைப்படும் ஒருவரை, நமது சௌகரியத்தைப் பொறுத்து எப்போது வலைத்தளத்திற்கு சென்று கடன் கொடுக்கிறோமோ அதுவரை காக்கச் செய்வது நடைமுறையில் சரியில்லை. தவிர வியட்நாமில் ஒரு கடனுக்கும், உகண்டாவில் ஒரு கடனுக்கும் பணம் சேரும்போது அந்தந்த நாடுகளில் ஒரே ஒரு கடனைக் கொடுக்க முயல்வது கீவாவின் பராமரிப்புச் செலவுகளை மிகவுமே அதிகரிக்கும். எனவே அவர்கள் பயன்விளைவு (efficiency) அதிகரிக்கும் வகையில், ஒரு நாடு அல்லது ஊரில் தேவைப்படும் பல டஜன் கடன்களை ஒரே நாளில் கொடுத்து, கடனைத் திரும்ப வாங்க உள்ளூர் ஒப்பந்தக்காரர்களையும் அமர்த்தி விடுகிறார்கள். வேலை விரைவாக முடியவும், செலவுகளைக் குறைக்கவும் இதுதான் சரியான முறை. ஆனால், இப்படித்தான் அவர்கள் கடன்களைக் கொடுக்கிறார்கள் என்ற குட்டு உடைபடும்போது, நாம் ஏதோ உகாண்டாவில் கீரை விற்கும் அம்மாவிற்கு நேரடியாக உதவுவதாக நினைப்பதெல்லாம் கொஞ்சம் அசட்டுத்தனம் என்று தோன்ற ஆரம்பிக்கிறது. நாம் தர விழையும் உதவியின் தனிமனிதத் தொடர்பு அறுபடும்போது, நமது அனுபவம் நீர்த்து விடுகிறது. ஏறக்குறைய NPR ரேடியோகாரர்கள் நீங்கள் கொடுக்கும் பணம் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு பத்து மடங்காய் உயரும் என்று சொல்வது போலத்தான் இதுவும். பொய் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அவர்கள் சொல்வது முழு உண்மை (Truth in Advertising) இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
உலகின் பல நாடுகளில் ஒரு நாளைக்கு நூறு, நூற்றி ஐம்பது ரூபாய்க்கு குறைவான பணத்தில் வாழும் ஏழை மக்கள், மாத அல்லது வார சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அவர்கள் வருமானம் நாளுக்கு நாள் நிறைய வேறுபடுகிறது. நுண்கடன் அமைப்புகளால் அவர்கள் வருவாயை சீராக்க முடிந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும். அவர்களுக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, கட்டணங்களுடன் நூற்றி நாற்பது ரூபாயை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர்கள் கழுத்தில் கை வைப்பதை விட, அத்தகைய சீரான வருவாய் நிலையை அடைய சேமிக்க உதவுதல், காப்புறுதி வழங்குதல் போன்ற உதவிகள் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறார் ரூட்மேன். சிறிய தொகை என்றாலும், மொத்தக்கடன் பணமும் கையில் கிடைக்கும்போது தங்கள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யவோ, அல்லது குடும்பத்தின் வற்புறுத்தலினாலோ, தும்பை விட்டு வாலைப்பிடித்தேன் என்று கடன் பெறுபவர்கள் வேறு எதிலாவது எல்லா பணத்தையும் செலவழிக்க வேண்டிய அவசியங்கள் இருக்கும். உதாரணமாக, தொழில் தொடங்க கொடுக்கப்பட்ட கடனை, சமீபத்திய மழையில் பிய்ந்துபோன கூரையை அவசரமாக சரிசெய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் அதில் செலவழித்து விடுவார்கள். கூரையை மராமத்து செய்வது மிகவும் அவசியம். ஆனால் பின்னால் கடன் தவணையை திரும்பக் கட்ட வேண்டிய சமயத்தில், நினைத்த அளவு முதலீடு செய்யப்படாத தொழிலில் எதிர்பார்த்த வருவாய் இல்லாமல் கடந்தாரர் தடுமாறுவது சகஜம். அதற்கு பதில், தினமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று, அன்றைய தினம் பணம் நிறைய இருக்கும் பட்சத்தில், உபரித்தொகையை வாங்கிவந்து அவர்கள் கணக்கில் போடுவதும், வருமானம் குறைந்த நாட்களில், அவர்கள் சேமிப்பிலிருந்து பணத்தைக் கொடுத்து ஈடு செய்வதும், அவர்கள் தின வாழ்க்கையை சீராகத் திட்டமிட்டு நடத்த உதவும்.
அப்படிச் செய்தாலும் அவர்கள் தொழில் நொடித்துப் போய் பல நாட்கள் வருவாயின்றி அடிக்கடி தடுமாறுவார்கள் என்பதால், வருவாயை சீராக்கும் காப்புறுதி (insurance policy) திட்டங்களில் அவர்களைச் சேர்த்து விடுவது இன்னும் உசிதம். ஆனால் பொதுவாக அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் ஏழை மக்களை காப்பீட்டுக் கட்டணம் கட்டச்செய்வது கடினம். ஏனெனில் வருமானம் பல மாதங்கள் சீராக வந்து கொண்டிருந்தால், அந்தக் காப்புறுதி திட்டங்களில் இருந்து அவர்களுக்கு ஒரு பயனும் கிடைக்காது. ஆதலால் காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவது பலருக்கு லாட்டரி சீட்டு வாங்குவது போன்ற, பெரும்பாலும் பயனில்லாமல் போகும், தேவை இல்லாத ஒரு செலவாகத் தோன்றும். எனவே காப்பீடு என்பதையே கொஞ்சம் சந்தேகக் கண்களோடுதான் பார்க்கிறார்கள்.
சாதாரணமாக நுண்கடன் பெற்று தொழில் தொடங்கும் ஒரு பெண், சின்ன கூட்டுறவு சங்கங்களில் சேர்ந்து, தைரியம் பெற்று, அமைப்புகளை அணுகிக் கடன் தொகையைப் பெறும்போது தன் குடும்பத்திலும், சுற்றுவட்ட சமூகத்திலும் ஒரு மதிக்கத்தக்க பெண் என்ற கௌரவத்தைப் பெறுகிறார். அதே சமயம், அந்த கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள, வாராந்திரக் கூட்டுறவு சங்கக் கூட்டங்களில் பங்கேற்பது, அவ்வப்போது நுண்கடன் மையங்களுக்கு சென்றுவர வேண்டி இருப்பது, தவணையைச் செலுத்தத் தவறும் ஓரிருவரை, மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்கள் வீட்டிற்கோ, கடைக்கோ, கோவிலுக்கோ சென்று நாலு பேருக்கு முன் சாம, பேத, தான, தண்ட உத்திகளை உபயோகித்து அவர்களை பணம் கட்டச் சொல்லி வற்புறுத்துவது போன்ற கட்டாயங்கள் அவர்களின் வாராந்திர வாழ்முறைகளில் இருந்து பல மணிநேரங்களை எளிதாக உறிஞ்சி எடுத்துக் கொண்டுவிடும். இப்படி உள்ளே நுழைந்து பார்க்கப்பார்க்க நிறைய சிக்கல்கள் தென்படுகின்றன.

இந்தோனேஷிய அரசாங்கம் அமைத்து நடத்தும் MICRA என்ற அமைப்பு, தான் வழிகாட்டி உதவும் நுண்கடன் அமைப்புகளை ஆரம்பத்திலிருந்தே பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது கொடையாளிகளிடம் இருந்து பண உதவி எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறது. கீவா போன்ற அமைப்புகளில், கடன்கள் திரும்பச் செலுத்தப்படும் சதவீதம் 95%க்கு மேலே இருந்தால்தான், நம்மைப்போல் கடன் கொடுக்க முன் வருபவர்களுக்கு எல்லாம் ஒழுங்காக இயங்குவதாகத் தோன்றும். அந்த சதவீதம் 60%தான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மேம்போக்காக எண்களைப் பார்க்கும் பலர், இந்த அமைப்பு சரியாக இயங்கவில்லை என்று தங்கள் கொடையை வேறெதாவது அமைப்புக்குக் கொடுக்கப் போய் விடுவார்கள். இது தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிக்கூடங்கள் எங்கள் பள்ளியின் +2 பாஸ் சதவீதம் 100% என்று விளம்பரம் செய்வது போலத்தான். அந்த சதவீதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே சுமாராகப் படிக்கும் நல்ல மாணவர்களை தேர்வு நெருங்குகையில் தங்கள் பள்ளிகளில் இருந்து துரத்தி விடுவார்கள். அத்தோடு ஒப்பிட்டால் எல்லோரையும் தேர்வெழுத அனுமதிக்கும் அரசாங்கப் பள்ளிகளின் சதவீதம் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி புகட்டும் கிராம/சிறுநகர அரசாங்கப் பள்ளிகளிலும், +2 மட்டும் ஆங்கில வழிக்கல்வி புகட்டும் தனியார் பள்ளியிலும் படித்தவன் நான் என்பதால், இரண்டு பக்க அனுபவங்களையும் பள்ளி நாட்களில் பெற்றிருக்கிறேன். அந்த அரசாங்கப் பள்ளிகள் இல்லையென்றால் நிறையத் தேவைகள் உள்ள என்னைப் போன்ற மாணவ மாணவியர் பலருக்கு கல்வி பெற சரியான வாய்ப்புகள் இருக்காது. அதே போல், அயல் நாட்டுக் கொடைகளைப் பெரும் அமைப்புகள், நிச்சயம் கடனை திருப்பி அடைத்துவிடுவார் என்று நம்பத் தகுந்தவர்களுக்கு மட்டுமே கடன்களை வழங்கிக் கொண்டிருக்க, நிஜமாகவே பணத்தேவையுள்ள பலர் கடன்களைப் பெற முடியாமல் வெளியே தள்ளப்படலாம். இந்தோனேஷியாவின் நிறுவனங்களுக்கு இந்த தர்மசங்கடம் கிடையாதென்பதால், சதவீதம் குறைந்தாலும் கண்டுகொள்ளாமல் தேவை அவசியம் உள்ளவர்களுக்கு, சொந்த சேமிப்பிலிருந்தே கடன்களை அவை கொடுத்து வருகின்றன. அத்துடன் ஒருமுறை கடன் கொடுத்து அது முழுதும் திரும்ப வந்தவுடன்தான் அடுத்த கடன் என்ற எளிய முறைக்கு பதில், அவ்வப்போது தேவைக்கேற்றபடி Line of Credit முறையில் பணத்தை போடவும் எடுத்துக்கொள்ளவும் அனுமதிப்பதின் மூலம் அந்த அமைப்புகள் கடனாளிகளின் வாராந்திர ஏற்ற தாழ்வுகளை சீராக்கி உதவுகின்றன.
புத்தகத்தில் இந்த நுண்ணிய சங்கடங்களை அழகாக அலசும் போது வெறும் குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்கும் நக்கீரராக மட்டுமே ரூட்மேன் இருப்பதில்லை. இவரைப் போன்றவர்கள் தரும் அறிக்கைகள், அறிவுரைகள், மற்றும் தாங்களே களப்பணிகளின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் போன்றவற்றின் மூலம் சில அமைப்புகள் தங்கள் செயல் முறைகளை மாற்றிக் கொள்கின்றன என்பதைப் போன்ற நல்ல விளைவுகளையும் உற்சாகத்துடன் நிறையவே விவரிக்கிறார். உதாரணமாக பங்களாதேஷ் பேராசிரியர் மொஹம்மத் யூனஸ் அறிமுகப் படுத்தியிருக்கும் கிராமீன்-2 திட்டம் நுண்கடன்கள் கொடுப்பதோடு வாடிக்கையாளர்கள் தங்கள் வருமானத்தை சேமிப்பதை எளிதாக்கும் திட்டங்களையும் இறுக்கி இணைத்திருக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய கிராமீன் திட்டம் நிச்சயம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்றாகப் பூர்த்தி செய்கிறது என்கிறார் ரூட்மேன்.
இப்படி பல அமைப்புகளை பல கோணங்களில் இருந்து அலசியபின், ரூட்மேன் கடைசி அத்தியாயத்தில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முற்றிலும் வேறுபட்ட சில அணுகுமுறைகளும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த எல்லா அமைப்புகளும் மிகக் குறைந்த செலவில் ஏழை மக்களுக்கு ஒரு சராசரி வங்கி வழங்கும் சில சேவைகளை வழங்க முயன்று கொண்டிருக்கின்றன. இதற்கு மாறாக கென்யாவில் இயங்கிவரும் ஸஃபாரிகாம் என்ற ஒரு மொபைல் தொலைபேசி நிறுவனம் M-PESA என்ற ஒரு பண மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி பத்துப் பன்னிரண்டு வருடங்களாக வெகு வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சேவையின் பெயரில் உள்ள M மொபைல் என்பதைக் குறிக்க, PESA என்பது (நமது பைசாவைப் போல்) ஆப்பிரிக்க மொழியான ஸ்வாஹிலியில் காசு என்பதற்கான சொல். இந்த சேவையினை உபயோகித்து ஒரு மொபைல் தொலைபேசியிலிருந்து இன்னொருவரின் தொலைபேசிக்கு OTP பாதுகாப்புடன் பணத்தை அனுப்பலாம், பெற்றுக் கொள்ளலாம். கணக்கிலிருக்கும் பணம் கையில் வேண்டும் என்றால், நமது பழைய PCO போன்ற ஸஃபாரிகாம் பெட்டிக்கடைகளில் போய் பெற்றுக்கொள்ளலாம்.
கென்யாவில் மட்டும் இரண்டு கோடிப் பேர் இந்த சேவையை உபயோகிப்பதால், பெரும்பாலோர் நாம் காகிதப் பணத்தை அன்றாட வாழ்வில் தொடாமல் கிரெடிட் கார்டையே வைத்து சமாளிப்பதைப் போல், அவர்கள் சாதாரண மொபைல் தொலைபேசிகளையே (Smartphone வேண்டும் என்ற அவசியமின்றி) வைத்து வாழ்க்கை நடத்தி விடுகிறார்கள்.
இந்தியாவின் மிஸ்டு கால் வழக்கத்தைப்போல், இன்னும் சில சுவையான உள்ளூர் வழக்குகளும் இதற்குள் உருவாகி இருக்கின்றன. நைரோபிதான் கென்யாவில் இருக்கும் மிகப்பெரிய நகரம். அங்கு பணிபுரியும் மகன் கியோக்கோ தூரத்திலிருக்கும் சிற்றூரான டகாபாவில் வசிக்கும் தன் தாய் கெருபோவுக்கு பணம் அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். டகாபா ரொம்பவே சின்ன ஊர் என்பதால் அங்கே ஸஃபாரிகாம் பெட்டிக்கடையும் இல்லை, ஊரில் ஃபோன் வைத்துப் புழங்கும் மக்களும் நிறைய இல்லை. பின் எப்படி நைரோபி தனயன் டகாபா தாய்க்கு பணம் அனுப்புவார்? சுலபம். கியோக்கோ M-PESA வழியே அம்மா கெருபோவின் ஃபோனுக்கு பணத்தை அனுப்பிவிட, அம்மா அந்தப்பணத்தை பயன்படுத்தி தன் தொலைபேசியில் 10,000 நிமிடங்கள் ரீசார்ஜ் செய்து கொண்டுவிடுவார். (இதை ஊக்குவிக்க ஸஃபாரிகாம் 5% தள்ளுபடி கூட தருகிறது.) அதன்பின் அந்தச் சிற்றூரில் இருக்கும் யார் ஃபோன் பேச வேண்டுமென்றாலும், கெருபோ வீட்டிற்குப் போய் அவரையே PCO கடையாய் பாவித்து பேசி விட்டு, பேசிய நிமிடங்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து விடுவார்கள். இப்படியாக கெருபோ கையில் இருக்கும் தொலைபேசி ஒரு ATMஆக மாறி விடுகிறது! சரிதான், ஆனால் ஊரில் எல்லோரும் ஃபோன் வாங்கிவிட்டால் கெருபோ பிசினஸ் படுத்து விடுமே என்கிறீர்களா? எல்லோரிடமும் ஃபோன் வந்து விட்டால் கெருபோ ஃபோன் வழியாகவே M-PESA பணப் பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்து விடுவார் என்பதால், காகிதப் பணத்தை அவருக்குக் கொடுக்கும் ATM சேவையே அவருக்குத் தேவையற்றுப் போய் விடும்!
இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து பலவிதமான வங்கி சேவைகளை, வங்கிக் கட்டிடங்களே இல்லாமல் அங்கே அறிமுகப் படுத்திவிட்டது M-PESA. கென்யாவிலிருந்து தொடங்கி, டான்சானியா, எகிப்து, கானா என்று பல நாடுகளுக்கு சென்றிருக்கும் இந்த சேவை, இந்தியாவிலும் அறிமுகப் படுத்தப்பட்டு பெரிய வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்டு விட்டது. M-PESA திட்டம் வெற்றி பெற்றிருக்கும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா முழுதும் ஓரளவுக்கு வங்கிகளும் அவை தரும் சேவைகளும் விரவி இருந்ததால், இதன் தேவை அதிகமாக உணரப்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. M-PESA வெறும் பரோபகாரத் திட்டம் இல்லை, ஸஃபாரிகாம் மற்றும் வோடஃபோன் முதலிய லாப நோக்குடன் செயல்படும் நிறுவனங்களின் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. கடன் வாங்குவது திரும்பக் கட்டுவது என்றில்லாமல், இருக்கும் பணத்தை போட்டு, எடுத்து தேவைக்கேற்றபடி புழங்க முடிவதால் கிடைக்கும் பண நெகிழ்வுத்தன்மை (flexibility) பயனார்களுக்கு ஒரு பெரிய வசதியாக விளங்குகிறது.
எல்லா அலசல்களையும் சேர்த்து சீர் தூக்கிப் பார்த்தால், மொத்தத்தில் நுண்கடன்கள் தந்துதவும் நிறுவனங்களின் சேவைக்கு பல சமூகங்களில் நிச்சயம் தேவை இருக்கிறது. நீங்களும் கீவா போன்ற அமைப்புகளில் சேர்ந்து கடன் கொடுக்க விழைந்தாலோ, அதை உபயோகித்து இளைய தலைமுறையினருக்கு உலகில் எங்கே என்ன சாத்தியம் என்று விளக்க முயன்றாலோ அதில் தவறேதுமில்லை. ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாம் நினைத்தது போல் நுண்கடன் ஒன்றும் உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் சஞ்சீவீயோ, அமிர்தமோ இல்லை என்பதுதான் இன்றைய புரிதல். இது தெரிந்த பின் நான் 4000 டாலர் வரை சுழற்றி சுழற்றி 100+ கடன்களை கொடுக்கப் பயன்படுத்திய சில நூறு டாலர்கள் பணத்தை கீவாவிடம் இருந்து திரும்ப பெற்று வேறு ஒரு நிறுவனத்திற்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டேன். அது எது என்று பின்னால் பார்ப்போம்.
இப்படி பழைய நோக்கியா ஃபோன்களைக் கூட ATM இயந்திரங்களாக்கி வித்தை காட்டும் மக்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருப்பதாலேயே அவர்கள் புத்திசாலிகள் இல்லை என்று தவறாக நினைத்துக் கொண்டு தனக்குத்தான் தெரியும் என்ற இறுமாப்புடன் உலக சேவை அமைப்புகள் உதவ முனைவதே முட்டாள்தனம் என்கிறது GiveDirectly.org என்ற சமீபத்திய புதிய சேவை அமைப்பு. அவர்களின் வாதம், பணம் தேவைப்படுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் முக்கியச் செலவு என்ன என்று நன்றாகவே தெரியும் என்பதுதான். எனவே உங்களால் முடிந்த பணத்தை தேவை என்று கேட்பவர்களுக்கு உலகெங்கிலும் நேரடியாக கொடுத்து விடுவதே சிறந்த அணுகுமுறை என்கிறது இந்த அமைப்பு. அமெரிக்காவிலிருந்து ஆப்ரிக்கா வரை பல இடங்களில் பணம் தேவை என்று சொல்பவர்களை உங்களோடு இணைக்க விழைகிறது அவர்களது வலைத்தளம்.
இதில் கடன், நுண்கடன், திரும்ப கடனை கட்டவைப்பது எதுவுமே கிடையாது என்பதால், வந்து சேரும் நன்கொடைகளில் இருந்து 88 சதவீதம் பணத்தை தேவை உள்ளவர்களுக்கு உடனுக்குடன் வழங்கி விடுகிறோம், எங்களிடம் இருந்து உதவி பெற்ற அத்தனை பேரையும் தொடர்ந்து கவனித்து அவர்களின் வாழ்வின் தரம் எப்படி மாறுபடுகிறது என்ற தரவுகளைத் சேகரித்து எல்லோருக்கும் தெரியும்படி பிரசுரிக்கிறோம். இப்படி நேரடியாக பணத்தைக் கொடுத்தால் அத்தனை பணத்தையும் சாராயம் குடித்து செலவழித்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறு. உலகில் உள்ள எந்த அமைப்புடனும் நாங்கள் போட்டியிட்டு யார் அணுகுமுறை மேன்மையானது என்று சீர் தூக்கி ஆய்ந்து பார்க்க நாங்கள் தயார், நீங்கள் தயாரா? என்று உலகுக்கு சவால் விடுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பணத்தை கேட்பவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பி நன்கொடையாகக் கொடுப்பீர்களா? இந்த அமைப்பின் தளத்தை ஒரு நோட்டம் விட்டுவிட்டு, யோசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
(தொடரும்)
முகப்பிலிருக்கும் ஓவியத்திற்கான சுட்டி: Belisarius Begging for Alms – Wikipedia
மிகவும் நடுநிலையுடன் விளக்குகிறது இந்த கட்டுரை. பொதுவாக மிகவும் ஏழையான மக்கள் மிக அதிக வட்டி செலுத்துகிறார்கள். காலையில் நூறு ரூபாய் கடன் வாங்கி, மொத்தமாக காய்கனி வாங்கி மலை நூற்றிப்பது ரூபாய் திருப்பி செலுத்தும் வழக்கம் பரிதாபம். வட்டிக்கு கொடுப்பவர் மீது கோபம் எல்லாம் வருகிறது. பத்தே நாளில் அவர்கள் வட்டியை சேமித்தால் தேவையான முதல் கிடைத்துவிடும் என்று தோன்றும். ஆனால் உதவுதில் உள்ள சிக்கல்கள் பல. என்ன செய்வது?
( குறை கண்டுபிடித்து பெயர் பெற்றது நக்கீரர், சொக்கனே ஆனாலும் குற்றம் குற்றமே என்று சொல்லி புகழ் பெற்றார். அகத்தியர் குறை காண்பவர் என்ற பெயர் பெற்றதாக எனக்கு தெரியவில்லை.குறை கண்டு பெயர் பெற்றவன் அகத்தியனும் அல்ல நக்கீரனும் அல்ல, இந்த ரவி சுந்தரம் தானோ?)
அன்புள்ள ரவி,
உலகிற்கு நக்கீரர், ரவி, கட்டுரையில் நாம் சந்தித்த என் சக ஊழியர் போன்றவர்கள் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் என்னைப்போன்றவர்கள் குறைகளைக் களைந்து வாழ்வில் முன்னேற முடியாது! பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. உடனே திருத்தி விட்டேன்.
-சுந்தர்.
காலையில் நூறுரூபாய் கொடுத்து மாலையில் நூற்றி பத்து ரூபாயாக வசூல் செய்யும் முறை பல இடங்களில் இன்றும் நடந்து வருகிறது. பல கிராமங்களில் வங்கி சேவை வந்துவிட்டாலும் இன்றும் நூறு ரூபாய்க்கு மாதம் மூன்று ரூபாய் வட்டி என்பது குறையாமல் தான் இருக்கிறது விவசாயி ஒருவரிடம் விவரம் கேட்டதில் வங்கி ஒரு நாளைக்கு நாலு ஐந்து மணி நேரம்தான் இயங்குகிறது எங்களுக்கு வங்கிகளில் உள்ளது போல் எந்த வழிறைகளும் கடைப்பிடிக்காமல் இரவு பகல் எந்த நேரத்திலும் பணம் கிடைப்பதால் இதை தவிர்க முடிய வில்லை என்று சொன்னார்
நான் பெரிய அளவாக தானம் எதுவும் செய்ததில்லை. புயல், வெள்ளம் என்று வந்தால் நான் பணிபுரியும் (தனியார்) நிறுவனமே எங்களை உதவச் சொல்வார்கள். அதில் 3000 ரூபாய் வரை அளித்துதான். நான் செய்த பெரிய தொகை. மற்றபடி தொலைபேசியில் அவ்வப்போது நாங்கள் “…” இந்த தன்னார்வ நிறுவனத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு உதவுகிறோம் என்று கேட்பார்கள். அதையெல்லாம் நான் ஏற்பதில்லை. என் வீட்டில் வேலைக்க்காரி, மற்றபடி நான் தினசரி பார்க்கும் சிறுவேலைக் காரர்களுக்கு பணமோ, அல்லது பொருளோ ( வீட்டில் உபயோகித்து பழையதானது) கொடுப்பதோடு சரி. எனக்கென்னவோ எல்லோரும் வீட்டு வேலைக்காரர்கலுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி சம்யத்திலும் குழந்தைகள் பள்ளிக்குட்டம் தொடங்கும் சமயத்தில் எதோ கொஞ்cஅம் செய்தாலும் கொடுத்த பணம் நூறு சதவீதம் சென்று பயனாகும் என்று தோன்ற்கிறது. பெரிய தன்னார்வல நிறுவனங்களுக்குத் தேவையான பெருந்தொகை பெரும் பணக்காரர்களும், மற்ற பல அறக்கட்டளை நிறுவனங்களும் செய்தால் போதும் என்று தோன்றுகிறது.
நம் கண்ணில் தெரியும் பழகிய ஏழைகளுக்கு உதவும் கொள்கையே பெரும்பாலோருக்குப் போதும் என்று நினைக்கிறேன்.
மிக அருமை.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் விறு விறுப்பாக நகர்கிறது.
தினசரி வசூல் என்னும் முறைதான் இந்தியாவில் நான் அறிந்த வரை most successful model of loans and recovering method ஆக இருக்கிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் / வியாபாரிகளுக்கு வேலை பளுவிற்கு இடையில் ஞாபகமாக வங்கிக்குப்போய் கடனை செலுத்துவதற்கு நேரமோ நினைவோ இருப்பதில்லை, ஆனால் collection agent கடைக்கே வந்து தினமும் வசூலித்தால் பெரும்பாலும் வசூலாகிவிடுகன்றன.
சுவாரஸ்யமான தொடர், அடுத்த இதழை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.
Great series so far. A few thoughts:
– I love your characterization of giving to a potential grifter as an experiment worth the money. That mindset will change how I approach those situations.
– My wife and I donate regularly to charity:water, which started after I heard the founder give a compelling, impassioned interview. I was especially intrigued by their model that donors specify whether the donation will go towards either the charitable work or administrative fees, but there’s absolutely no inter-mingling of the two (according to the founder). Also they work with local orgs to build and maintain the wells. But I’ve always had a minor worry that, like your experience with the Mortensen’s organization, the story’s too good to be true. I sure hope not.
– I was wondering if you’d touch on the “give direct” model! I first heard about it on a podcast, freakonomics I think, and it seemed counter-intuitive then but I like it now. Even if the recipients use the money for something I don’t approve, it was probably worth it for the experiment :).
Looking forward to the remainder of the series!