தமிழாக்கம்: மைத்ரேயன்
[பப்ளிக் புக்ஸ் வலைத்தளப் பத்திரிகையில், ஜனவரி 12, 2021 அன்று வெளியான கட்டுரை.]
மொழிபெயர்ப்பாளரின் முன்குறிப்பு: கட்டுரை ஸ்காண்டிநேவிய நாடுகளின் மர்மப் புனைவுகள் பற்றியது. பல நபர்களின் பெயர்களும், இடங்களின், நகர்களின் பெயர்களும் நாம் பழக்கத்தில் வைத்திருக்கும் உச்சரிப்புகளிலிருந்து மாறியவையாக இருக்கும். கட்டுரையின் இறுதியில் ஒரு பெயர்ப்பட்டியல் கொடுத்திருக்கிறேன். அதில் இங்கிலிஷ் எழுத்தில் உள்ளபடி மூலப்பெயர்களையும், தமிழில் தருகையில் அந்தந்த மொழிக்குழுவின் உச்சரிப்பைத் தமிழில் எத்தனை நெருங்க முடியுமோ அத்தனை நெருங்கிய உச்சரிப்புமாகக் கொடுத்திருக்கிறேன். கட்டுரையில் உள்ள சில இங்கிலிஷ் சொற்கள் நமக்கு தமிழ்ச் சொல் போலவே நிறையக் கேட்ட பழக்கம் உள்ளவை. உதா: Police. இதை நாம் போலீஸ் என்றே உச்சரிக்கிறோம். இது இங்கிலிஷில் பொலீஸ் என்று வரும். இது போன்றவையும் கட்டுரையில் மாறிய ஒலிப்போடு வரும், ஆனால் இவற்றைப் பட்டியலில் சேர்க்கவில்லை. Copenhagen நகரம். இதை இங்கிலிஷில் கோபென்ஹாகன் என்று நாம் சொல்ல முடியும். ஆனால் டென்மார்க்கின் நகரமான இதை கோபென்ஹா(வ்)ன் என்று அந்த நாட்டு மக்கள் உச்சரிக்கிறார்கள். அது பெயர்ப்பட்டியலில் உள்ளது.
எப்போதும் போல, நாம் ஒரு சடலத்தோடு துவங்குகிறோம். 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், 84 வயதான ஸ்வீடியப் பெண் ஒருவர், நல்ல வேளையாக, சந்தேகமேதும் தேவையில்லாத சூழலில், முதுமையால் இறந்தார். அவருடைய பெயர் மாய் கொயவால்.[1] இருண்ட பார்வை கொண்ட சில வாசகர்களுக்கு என்னவோ, அவர் “நார்டிக் மர்மப் புனைவுகளின் வரிப்புத் தாய்,”, புதுவகைத் துப்பறியும் நாவல் ஒன்றைப் படைத்ததால் மிக நேசிக்கப்பட்டவர். அவருடைய கூட்டாளியான பெர் வா(ஹ்)லூ (இறப்பு 1975) உடன் சேர்ந்து கொயவால் பத்துப் புத்தகங்கள் எழுதினார், அவை மார்ட்டின் பெக் வரிசைகள் என்று அறியப்படுவன: 1965 – 1975 கால இடைவெளியில் எழுதப்பட்ட இந்த நாவல்கள், மொத்த ஸ்வீடிய சமூகத்தையும் அதன் மரபு சார்ந்த காவல் துறையின் நன்கு தெரிய வந்த நடவடிக்கை முறைகளின் வழியே சித்திரிக்க முயன்றவை.
இந்த நாவல்கள் தயக்கமில்லாது அலுப்பையும் முன்வைத்தன. இவற்றின் முக்கியப் பாத்திரமான மார்ட்டின் பெக் – அமெரிக்காவின் இறுக்கமான மர்ம நாவல்களில் காணப்படும் அழிக்கப்பட முடியாதவரும், பாதிக் கடவுள் போன்றவரும், ஆனால் எதிலும் நம்பிக்கை அற்றவருமான ஒரு துப்பறிபவரைப் போல இல்லாமல் – தொடர்ந்து ஜலதோஷத்தால் பீடிக்கப்படுகிறார், ஒரு குழுவோடு இணைந்து செயல்படுகிறார், அவருடைய வேலை நேரத்தில் பெரும்பகுதியை அடுக்கடுக்காக எதிரே இருக்கும் காகிதக் கற்றைகளைப் படித்து வகைப்படுத்துவதில் செலவழிக்கிறார். பொறுமையான எதார்த்த நோக்கும், சமூகத்தைப் பற்றிய அலசலறிவும் கொண்ட மார்ட்டின் பெக் புத்தகங்கள், குற்ற நடவடிக்கை என்பது தனி நபரின் நோய்ப்பட்ட குணத்திலிருந்து வருவதல்ல, ஆனால் ஸ்வீடனின் இறுகிக் கட்டப்பட்ட சமூக உறவுகளில் ஏற்படும் ஓட்டைகள், கிழிசல்களிலிருந்து வருகிறது என்பதான கருத்தை முன்வைத்தன. கொயவாலும் வா(ஹ்)லூவும் எழுதிய பெக் வரிசை நாவல்கள் தற்கால இலக்கியத்தில் நிறைய கவனத்தை ஈர்த்த வார்ப்புகளுக்கு அடித்தளமிட்டன: அந்த வார்ப்புகளே ஸ்காண்டிநேவிய குற்ற நாவல்கள்.
மார்ட்டின் பெக் புத்தகங்கள் சிந்தனை நிறைந்த கலைப் படைப்புகள், ஆனால் பரவலான வாசகர்களுக்கான கேளிக்கை நூல்கள் என்பது போன்ற ஓர் ஒப்பனையைத் தரித்திருந்தன. அந்த நாவல்களில், நேசிக்கப்படக் கூடிய பாத்திரங்கள் மூலமாக அரசியல் விமர்சனம் வாசக வரவேற்பை அடைந்தது; அலங்காரமில்லாத எளிய விவரணைகள் அதிலிருந்த மர்ம உணர்வை உயர்த்தின. இப்படி ஒரு புறம் எதார்த்தத்துக்கும், கிளர்ச்சி ஊட்டுவதற்கும், இன்னொரு புறம் அரசியல் கருத்துக்கும் பரவலான மக்கள் ரசிப்புக்கும் இடையே இந்த நாவல்கள் கொணர்ந்த நெருங்கிய உறவு தற்காலிகமான, சுலபமாக நைந்து போகும் சாதனையாகவே இருந்தது என்பது இன்று புலனாகிறது. கொயவாலும் வா(ஹ்)லூவும் உண்டாக்கிய இலட்சியபூர்வமான துவக்கங்களுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. ஸ்காண்டிநேவிய மர்ம நாவல் தன் கலாபூர்வமானதும், அரசியல் சார்ந்ததுமான குறிக்கோள்களை அனேகமாக இன்று கைவிட்டு விட்டது, அவை தான் அன்று அந்தப் புனைவடிவின் உறுதியான அடித்தளமாக இருந்தன.
உலக இலக்கிய வெளியில் ‘நார்டிக் மர்ம இலக்கியம்’ வெடித்துப் பரவத் தொடங்கியது உலகளாவிய பொருளாதாரச் சிக்கல் வந்தபோதுதான்[2], ஆனால் அப்படிப் பரவத் தொடங்கிய போது இந்த இலக்கிய வகை கொயவாலும், வா(ஹ்)லூவும் கொணர்ந்த எதார்த்தத்தைக் கொண்டு எழுதப்படவில்லை, மாறாக கடும் வன்முறையை உள்ளடக்கியதாக எழுதப்பட்டது. பணச்சந்தையின் வீழ்ச்சியை ஒட்டி சுற்றுப் புறமெங்கும் இருந்த கலவரச் சூழலில், உடலெங்கும் பச்சை குத்திக் கொண்டிருக்கிற, தொடர்ந்து புகை பிடிக்கிற, கணினிக் கொந்தரான லிஸ்பெத் ஸலாண்டெர் உலக இலக்கியத்தில் அவளுடைய முகத்தில் துளைத்துப் பொருத்தப்பட்ட அணிகலன்களுடன் தோன்றுகிறாள். ஸ்டீ(ய்)க் லார்ஷொனின்[3] புனைவான த கேர்ள் வித் த ட்ராகன் டாட்டூ (2008), சித்திரவதை அறைகள், வன்புணர்வு செய்வோருக்கு எதிரான பழி வாங்கல், பனிப் பொழிவில் மூழ்கிய நிலப் பரப்புகள் கொண்ட கதைகளுக்குத் தீராத ஏக்கத்தை வாசகரிடையே உருவாக்கியது. பிரசுரகர்களும், வேட்டை வாய்ப்பை முகர்ந்தார்கள். மொழிபெயர்ப்புகளின் அலை ஒன்று எழுந்தது, அனேகமாக ஸ்வீடனிலிருந்துதான் வந்தது, ஆனால் சீக்கிரமே அந்த அலை நார்வே, டென்மார்க், மற்றும் சற்றுக் குறைந்த அளவில் ஐஸ்லாந்த், ஃபின்லாந்த் ஆகிய நாடுகளில் உள்ள எழுத்தாளர்களையும் கவர்ந்து கொண்டது.[1]
சுருக்கமாகச் சொன்னால், மார்ட்டின் பெக்கின் புத்தகங்கள் சுத்தமாகப் பின் தள்ளப்பட்டு, லார்ஷொன் போன்றாரின் ஆரவாரமான நடையால் களம் ஆக்கிரமிக்கப்பட்டதால், ஸ்காண்டிநேவிய மர்மப் புனைவுகள் என்றால் பொதுமக்களின் கற்பனையில் உடல் சிதைப்பு, குழந்தைகளின் மீது செலுத்தப்பட்ட குற்ற நடவடிக்கைகள், மற்றும் விஸ்தாரமாக வருணிக்கப்பட்ட பாலுறவு வன்முறைகள் நிரம்பிய இலக்கியம் என்று ஆகிப் போனது. வன்முறையில் இன்பம் காண்பதை எழுத்தாளர் தன் பாணியாக்குவது இந்த ருசியில் பகுதியாகியது.
ஸ்காண்டிநேவிய மர்மப் புனைவுகளின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்றும், கொயவாலின் மறைவு ஒரு யுகத்தின் முடிவுக்கு ஒரு அறிகுறியாகிறதா என்றும் கேட்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. 1960களில் துவங்கியதிலிருந்து இந்த வகை இலக்கியத்தின் பிரபல்யமும், அதில் உள்ள வன்முறையும் அதிகரித்து வந்திருக்கின்றன. ஆனால் அதன் சிறப்புத் தன்மை மங்கி விட்டது, அதன் வணிக வெற்றியும் சரிந்து வருகிறதாகத் தோன்றுகிறது. ஹென்னிங் மாங்கெல்லிற்குப் பிறகு நார்டிக் மர்மப் புனைவுகளில் அத்தனை கலைநுட்பத்தோடு எழுதுபவர் யாரும் எழவில்லை, மாங்கெல் 1990களில் எழுதிய வரிசை நாவல்கள், எப்போதும் உணர்வுகளில் தோய்ந்த மனநிலையும், தன்னுள் நோக்கி வாழும் பண்பும் கொண்ட பொலீஸ்காரர் குர்ட் வாலாண்டரைப் பற்றியே எழுதப்பட்டவை. அவை ஸ்வீடிய தேசிய அடையாளத்தைப் பற்றிய புத்திசாலித்தனமான அலசலையும், மையப் பாத்திரமானவரின் கலக்கம் நிறைந்த மனதின் சிக்கலான சித்திரிப்பையும் கொண்டிருந்தன. விற்பனை என்று பார்த்தால் லார்ஷொன் விதிவிலக்கான ஆனால் பிரும்மாண்டமான ஓரு அளவை அடைந்திருந்தார், அவருடைய (லிஸ்பெத்) ஸலாண்டெர் வரிசைப் புத்தகங்கள் உலகெங்கும் 10 கோடி (1000 லட்சம்) பிரதிகள் போல விற்றிருக்கின்றன.[2] ஒப்பீட்டில் யோ நெஸ்போ, இந்த வகை இலக்கியத்தின் எழுத்தாளர்களில் உயிரோடிருப்பவர்களில், மிக்க வெற்றி பெற்ற ஒருவர், அவர் தன் ஒரு டஜன் நாவல்களின் மூலம் 400 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறார்- மாங்கெல்லோடு ஒப்பிடத் தக்க அளவு விற்பனை இவருடையது, ஆனால் இப்போது இவருடைய நாவல்களின் விற்பனை சரிவில் உள்ளது. நெஸ்போவின் சமீபத்திய புத்தகம், நைஃப் (2019) அமெரிக்காவில் ஒன்றரை வருடம் முன்பு வெளியான போது 30,000 பிரதிகளுக்குச் சிறிது கூடுதலாக மட்டுமே விற்றிருந்தது. [3]
சரி, நமக்கு மர்மமாக இருப்பது என்ன என்று பார்க்கலாமே. ஸ்காண்டிநேவியன் குற்ற நாவல் உயிரோடு இருப்பதோடு நல்ல நிலையிலும் இருக்கிறதா, பரந்த அளவில் வேறு ஒரு அடக்கமான மாறுவேடத்தில் உலவுகிறதா? – மலைகளிடையே கடற்கழியில் பாய்கிற நீரில், மீன்பிடி படகின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு முடிந்தமட்டில் நீரைப் பார்க்க எட்டிச் சாய்ந்தபடி, பெரிய மீன்களைப் பிடிப்பதற்காகச் சிறு துண்டு மீன்களை வீசிய வண்ணம் இருக்கிறதா? அல்லது பூட்டிய கதவுக்குப் பின்னே நாக்கு உப்பித் தொங்க, செத்துக் கிடக்கிறதா? இரண்டில் பின்னதுதான் நிலை என்றால், யார் நார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது?
சந்தேகத்துக்குரியவர்களைச் சுவரருகே வரிசையாக நிறுத்துவோம்: லாபம் சம்பாதிக்க அலையும் பிரசுரகர்த்தர்கள், சுகமான வாசிப்பையே நாடும் வாசகர்கள், லட்சியங்களை நம்பாத எழுத்தாளர்கள், சந்தையின் நாடியை நன்கு புரிந்து கொண்ட காட்சி ஊடகத் தயாரிப்பாளர்கள். (விசாரணை நடத்தியவர்கள் சந்தேகத்துக்குரிய ஒரு நபரை ஏற்கனவே தொடர்பில்லாதவர் என்று ஒதுக்கி விட்டார்கள்.- விமர்சகர்தான் அந்த நபர்- அவரால் இப்படி ஒரு செயலைச் செய்ய முடியாது, அவர் தம் கடமையைச் செய்யத் தவறி இருந்தாலும் கூட இந்தக் குற்றம் அவருடையதாகாது என்று கருதினார்கள் போலும்.)
மூன்று தடயங்களை மேஜை மீது வைக்கிறேன், எல்லாம் புத்தகங்கள்தாம். (கோப்புகளில் மூழ்கித் தத்தளித்த மார்ட்டின் பெக் இதைக் கேட்டால், களைப்போடு தன் ஏற்பைத் தெரிவிப்பார்.) மிக முக்கியமானது, வெண்டி லெஸ்ஸர் என்ற விமர்சகர் எழுதிய ஒரு அறிக்கை, ஸ்காண்டிநேவிய மர்ம இலக்கியம் (2020) என்பது இந்தப் புத்தகத்தின் தலைப்பு. புனைவுகளில் குற்றப் புனைவுகள்தான் விற்பனையில் மேலிடத்தைப் பிடிக்கிறவை என்றாலும், ஸ்காண்டிநேவியன் நாவல்கள் பல ஆண்டுகளாக இந்த வகை இலக்கியத்தில் முதலிடங்களைப் பிடித்திருந்தன என்றாலும், லெஸ்ஸரின் புத்தகம்தான் பல்கலைச் சூழலைத் தாண்டிய உலகில் நார்டிக் மர்மநாவல்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம். லெஸ்ஸரின் சித்திரிப்போடு நாம் கவனிக்க வேண்டியவை இன்னும் இரு, சமீபத்திய, சிலாகிக்கப்பட்ட ஸ்காண்டிநேவிய மர்ம நாவல்கள்: நெஸ்போவின் ‘நைஃப்’ மற்றும் எம்.டி. எட்வர்ட்ஷொனின் ‘எ நியர்லி நார்மல் ஃபாமிலி’ (2019) ஆகியன அவை. நெஸ்போவின் நாவல் இந்த வகை இலக்கியத்தை தேவைக்கு மீறிய நாடகத் தன்மையோடு காட்டுகிறது; எட்வர்ட்ஷொனின் நூல் இந்த இலக்கியத்தை ஜீவத் துடிப்பற்றதாகக் காட்டுகிறது.
மூன்றையும் சேர்த்து நோக்கினால், பன்னாட்டுச் சந்தையின் பற்சக்கரங்களில் சிக்கிச் சிதைக்கப்பட்ட ஓர் இலக்கிய மரபை இவை சித்திரிப்பது தெரியவரும்.
___________
கண்ணைப் பறிக்கும் அட்டைகளோடு விமான நிலையங்களின் புத்தகக்கடைகளிலும், மலிவு விலைக் கடைகளிலும் அலமாரிகளில் பளபளப்பாக உள்ள புத்தகங்களாக, நார்டிக் மர்மப் புனைவுகள் என்று இப்போது நமக்குத் தெரியவருகிற வணிக வகை இலக்கியம், துவங்குகையில், மார்க்சியம் செயல்படும் விதத்தைக் காட்டும் முயற்சிகளாகத் துவங்கியது. ஆனால், காலப் போக்கில் நார்டிக் மர்மப் புனைவுகள் ஒப்பீட்டில் ஓர் இறுகிய மரபு வடிவை அடைந்துள்ளன, வன்முறைக்கு வேர்களாக சமூக உறவுகளை நுட்பமாகச் சோதிப்பதில் ஈடுபாடு குறைந்து போய், விகாரமான வில்லென்களையும், தனியனாகச் செயல்படும் துப்பறிவாளர்களையும், ரத்தவிளாறான பழிவாங்கல்களையும் சித்திரிக்கத் துவங்கிவிட்டன.
மார்ட்டின் பெக் வரிசை நாவல்கள்தாம் இந்த வகைப் புனைவுகளைத் துவங்கின, அவற்றின் முடிவுகளை மார்க்ஸின் கருத்துகள் பாதிக்கின்றன. அந்த வரிசை நாவல்களின் கடைசிக் காட்சியில், ஒரு குழுவினர், வார்த்தைகளை வைத்து ஆடும் ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள், அப்போது மேலை உலகெங்கும் சீறிப் பொங்கும் வன்முறையைப் பற்றிச் சொல்லி வருந்துகிறார்கள். பெக்கின் நம்பகமான சக பொலீஸ்காரர், கோல்பெர்க் ஒரு எழுத்தை முன்வைக்கிறார், அது அந்த விளையாட்டை முடிவுக்குக் கொணரும் எழுத்து, ஆனால் சமூகத்திற்கு நம்பிக்கையைக் கொடுக்கும்- “நான் சொல்வது எக்ஸ்- மார்க்ஸில் வருமே அந்த எக்ஸ்.”[4]
ஸ்காண்டிநேவியா பலகாலமாக இடதுசாரிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்திருக்கிறது – மனிதாபிமானமுள்ள அரசியலுக்கு ஒரு முன்மாதிரி போல இருந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தின் குற்ற நாவல்கள் சமூக ஜனநாயக கனவுச் சமுதாயத்தில்[4] எதிர்பார்க்க முடியாத கொடூரங்களை, கண்ணாடி உருண்டையின் மீது பொறிக்கப்பட்ட விரிசல் போன்ற கோடுகளைப் போலப் புலப்படுத்துகின்றன. மாங்கெல்லின் நாவல்கள், உதாரணமாக, 1980களிலும் 1990களிலும் புகலிடம் கேட்டு வந்த அகதிகளின் எண்ணிக்கை உயர்கையில் ஸ்வீடனில் எழுந்து வந்த இனவெறியைத் தொடர்ந்து கவனிக்கின்றன. கொயவாலும், வா(ஹ்)லூவும், மார்க்சியத்தில் ஊறி வந்த இருவரும், தங்கள் மார்ட்டின் பெக் நாவல்களை ஒரு சமூகச் சித்திரம் போல உருவகித்திருந்தனர்- அது ஸ்டெந்தாலின் ஆடியைச் சேறு நிறைந்த நெடுஞ்சாலை வழியே எடுத்துப் போனதை ஒத்திருந்தது[5]– எனவே அந்தப் புத்தகங்கள் ஸ்வீடனின் ‘சமூக நல’ அரசின் போதாமைகளை வெளிப்படுத்தின. கடைசிச் சொல்லை மார்க்ஸிற்குக் கொடுத்தது அதைச் சுட்டத்தான்.
இருந்தும் நார்டிக் மர்மப் புனைவுகள் லட்சியவாதிகளுக்கு ஊட்டம் கொடுப்பது போலவே நம்பிக்கைகளை வெறுப்பவர்களுக்கும் வசதி செய்வனதாம். கிழக்கு யூரோப்பிலும், அமெரிக்கக் கூட்டு நாடுகளிலும், மேலும் இதர பகுதிகளிலும் உள்ள வாசகர்களுக்கு- (வாழ்க்கைத் தரத்துக்கான மதிப்பீடுகளில் பெரும்பாலானவற்றில் உலகின் அனேக நாடுகளையும் விட இந்த நாடுகள் மேல் நிலையில் இருந்தன என்பது உண்மையாக இருந்த போதும்) – முற்போக்கு ஆட்சி உள்ள நார்டிக் நாடுகள் அப்படி ஒன்றும் பரிபூரண நலம் கொண்ட நாடுகள் இல்லை என்று காட்டின.
1960களில் அமெரிக்க மரபுவாதிகளுக்கு ஸ்வீடனில் தற்கொலைகள் அதிக அளவில் இருந்தன என்று காட்டுவது வசதியான ஒரு தாக்குதலாகி விட்டிருந்தது, சமூக நல அரசாட்சி முறை குடிமக்களின் வாழ்வை அர்த்தமிழந்ததாக ஆக்கி விடுகிறது என்பதற்கு ஒரு சான்றாக இதை அவர்கள் முன்வைத்தனர். அதே கால கட்டத்தில், அற்புதமாக மனவியாகூலங்களை முன்வைக்கும் இங்மார் பெரிமானின் திரைப்படங்களும் (ஹென்னிங் மான்கெல்லின் மாமனார்தான் இங்மார் பெரிமான்), அப்போது பிரபலமடைந்த குறைந்த பட்ச அலங்கரிப்பு உள்ள வீட்டுக் கலன்களும் அந்தப் பிரதேசத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஏற்றுமதிப் பொருட்களாக இருந்தன. இப்போதும், அன்றைப் போலவே, ஸ்காண்டிநேவியா உலகத்துக்கு தன் இரட்டை முகங்களைக் காட்டுகிறது, ஒரு புறம் ப்ளாக் மெடல் (இசைக் குழுக்கள்), குற்றப் புனைவுகள், லார்ஸ் வான் ட்ரியரின் திரைப்படங்கள் போன்றவற்றை உலகுக்கு அளித்தபடியே, மறுபுறம் சொகுசான கம்பளிக் காலுறைகள், வாசனை ஊட்டிய மெழுகுவர்த்திகள், மற்றும் இதர, சுகமான வாழ்வுக்கான[6] நுகர் பொருட்களோடும் காட்சி தருகிறது.
லெஸ்ஸருடைய புத்தகம் ஸ்காண்டிநேவிய மர்ம இலக்கியத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் அதில் அவர் இந்த நார்டிக் இலக்கியத்தை இன்று சூழ்ந்துள்ள அனைத்தையும் மறுக்கும், வெறுக்கும் எழுத்தை ஒதுக்குகிறார். அதனுடைய மறுபுறமாக இருக்கும், தங்கநிற முடிப் பின்னல்கள் கொண்ட சிரித்த முகமுடைய குழந்தைகளே நிரம்பிய இலக்கியத்தையும் ஒதுக்குகிறார். லெஸ்ஸரால் கத்தியால் முகம் சிதைக்கும் பாத்திரங்கள் கொண்ட நாவல்களில் மகிழ்ச்சியடைய முடியும், அதேநேரம், கதகதப்பான கம்பளிக் காலுறைகளில் அச்சுறுத்தலையும் காண முடியும். ஆனால் ஸ்வீடிஷ், டேனிஷ், மேலும் நார்வீஜிய மொழி மர்ம இலக்கியத்தில் அவர் அடையும் மகிழ்ச்சி, சாரத்தில் வெற்றுக் கேளிக்கைதான். இந்த நாவல்களில் கொலைகாரர்கள் மிஞ்சிப் போனால் 12-14 வருடங்களுக்குத்தான் சிறை தண்டனையை எதிர்நோக்குகிறார்கள்; பொலீஸ்காரர்கள் அனேகமாக துப்பாக்கி எடுத்துப் போவதில்லை, அவர்கள் விசாரிக்கப் போகும் சாட்சிகள் அவர்களுக்கு இனிப்புகளையும், காஃபியையும் கொடுத்து உபசரிக்கிறார்கள். மிகவும் இருண்ட கதைகளைக் கொண்ட நார்டிக் மர்மப் புனைவுகள் கூட வர வர மேன்மேலும் வன்முறையில் ஆழ்ந்து வரும் அமெரிக்காவோடு வைத்துப் பார்த்தால் அங்கும் இங்கும் மின்வெட்டு போல ஆறுதல் தரக்கூடியவையாக இருக்கும். ஆகவே லெஸ்ஸர், மைய ஓட்டத்தில் இணைந்த இலக்கியங்களிலேயே மிகக் குரூரத்தைக் கொண்ட ஓர் இலக்கிய வகையைப் பற்றி எழுதுகையில் மென்மையான, நட்பு கலந்த அணுகல் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
ஸ்காண்டிநேவியன் நுவா(ஹ்)[7] புத்தகம் ஸ்காண்டிநேவிய மக்களின் குணாம்சங்களைப் பற்றியது, நடை உடை பாவனைகளைப் பற்றியது, அதுவும் குற்ற நாவல்கள் என்ற ஒரு முகம் காட்டும் கண்ணாடி வழியே பார்த்துப் பற்றிக் கொண்ட அனுபவத்தைக் கொண்டது.[5] நிபுணத்தன்மையோடு எழுதப்பட்டுள்ள முதல் பாதி நூற்றுக்கணக்கான நாவல்களிலிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த வகை இலக்கியத்தின் முறைமைகளையும், உளைச்சல்களையும் பற்றிய துப்புரவான சுற்றாய்வை அளிக்கிறது. லெஸ்ஸர் அகரவரிசையில் செல்கிறார்- ஆல்கஹால் என்று துவங்கி (இதுதான் நார்டிக் குற்ற நாவல்களில் எப்போதும் எங்கும் காணப்படும் வஸ்து, அதே போல எப்போதும் ஓர் ஆபத்தான பொருளாகவும் காட்டப்படும்) ‘ஸெலஸ்’[8] வரை போகிறார். (ஸெலஸ் என்பது எந்த வாய்ப்பையும் பயன்படுத்தத் தயாராக இருக்கும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துப்பறிவாள-நாயகர்களைத் தொல்லை செய்து கொண்டே இருப்பதன் வர்ணனை.) கலங்க அடிப்பதிலிருந்து, மிகச் சாதாரணமானவை வரை எல்லா பாணிகளையும் கவனிக்கிறார்: கட்டற்ற பெண் பாலுணர்வு பற்றிய அச்சம்; மத்திய தரக் குடும்பங்களில் கலைப் பொருட்களைச் சேகரிக்க இருக்கும் ஆர்வம்; அதிகார அடுக்குகளின் தடை செய்யும் நடைமுறைகள் பற்றிய மனக்குறைகள்; இந்தப் பாத்திரங்கள் விடுப்புகளில் செலவழிக்கும் ஏகப்பட்ட அவகாசம் போன்றன இந்தக் கவனிப்பில் அடங்கும். ஒவ்வொரு அம்சமும் நார்டிக் பண்பாட்டின் ஒரு பங்கைத் திறந்து காட்டுகிறது.
அடுத்து லெஸ்ஸர் வீடுகளில் உள்புறங்களைப் பற்றி நார்டிக் மர்மப் புனைவுகளில் கிட்டுகிற விரிவான வர்ணனைகளை அலசி நோக்குகிறார். இது தம் வீட்டு வாழ்க்கை சுகமாக இருந்தே ஆக வேண்டும் என்ற அனேகமாக எல்லா ஸ்காண்டிநேவிய மக்களுக்கும் இருக்கும் மனப்பாங்கிலிருந்து எழுவது என்பது அவர் கருத்து. ஒரு மார்ட்டின் பெக் புத்தகத்தை ஆரம்பிக்கையில் ஒரு பக்கத்துக்கும் மேலாக ஒரு அறையில் சாயம் போன சுவர்க் காகிதத்தில் துவங்கி, மர நாற்காலிகளின் ஸ்திதியைச் சொல்லி முடித்த பின்னரே, கொயவாலும் வா(ஹ்)லூவும் அங்கு தரையில் கிடக்கும் சடலத்தை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். [6]
ஒரு விமர்சகர் இப்படி மரக்கலன்களையும், வீடுகளின் உள்புறங்களையும் பற்றிய விரிவான வர்ணனைகளை விளக்கும் பொருட்டு அசல் வாழ்வை நோக்காமல் முழுதும் இலக்கியத்திலேயே மூலக் காரணங்களைத் தேட முடியும். (ஃப்ரெஞ்சு எழுத்தாளரான) எமில் ஜோலாவின் இயற்கை விவரிப்புப் பாணி சென்று முடிந்ததென்னவோ இறுதியில் ஒரு பொலீஸ் செயல்முறை பற்றிய கதையில், அதன் தனிப்பட்ட வேலை சார்ந்த உலகம், மோசமான பல களங்கள், காலச் சூழல்கள் பற்றிய விவரணையில். லெஸ்ஸருக்கு இலக்கிய வரலாற்றில் ஈடுபாடு இல்லாமல் இல்லை. ஆனால் அவர் வேறொரு கடினமான, கிறுக்குத்தனமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்: எங்கோ தொலைதூரத்தில் உள்ள ஒரு பிரதேசத்தை அதன் புனைவுகளின் மூலம் வாசகர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும் என்று காட்டி விட முனைகிறார்.
புனைவு எதார்த்தத்துக்கு நெருக்கமான ஆனால் தவிர்க்கவியலாதபடிக்கு வக்கிரமான வழிகாட்டியாகவே இருக்கும். எனவே இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாதி (முதல் பாதியின் திரிந்த வழிகாட்டலுக்கு) மாறாக நல்ல வழிகாட்டுவது போல ஒரு பயணக் குறிப்பாகக் காட்சி தருகிறது. எட்மண்(ட்) கோஸ் 1870களில் ஸ்காண்டிநேவியாவுக்கு வந்தவர், “தம் அளவற்றதும், வளமானதும், வழுக்கி ஓடும் திரவம் போன்றதுமான குரலைக் கொண்ட ஸ்வீடியர், நிச்சயம் மனிதரிடையே ஒரு கரும்பறவைதான்,” என்று முடிவு கட்டி இருந்தார்; கோபென்ஹாவ்ன் நகரில் ஒரு விருந்தினர் விடுதியில் இருந்த மீன் தொட்டியில் உப்புத் தண்ணீரில் சாப்பாட்டுக்குச் சமைப்பதற்காக மீன்கள் “நீந்திக் கொண்டு, பருத்துக் கொண்டிருக்கின்றன,” என்று வியந்தார். [7] 21ஆம் நூற்றாண்டில் தான் ஸ்காண்டிநேவியாவுக்குப் போகும்போது, லெஸ்ஸர் அதைப் போன்ற வியப்பில் விரிந்த கண்கொண்ட நபராகத் தோற்றம் கொள்கிறார். 21ஆம் நூற்றாண்டின் உலகை அவர் பதிவு செய்கிறார் என்ற போதும், அவருடைய கவனிப்புகள் 19ஆம் நூற்றாண்டின் பயணப் பதிவுகளின் சுகந்தத்தை மறுபடி சுவாசிப்பது போல இருக்கின்றன.
புனைவுகளில் ஊட்டம் பெற்றிருக்கிற லெஸ்ஸர், சமூக சலவைக் கூடங்களையும், பீங்கான் ஓடுகளாலான கணப்பு அடுப்புகளையும் பார்த்து கிளர்ச்சி அடைகிறார். அப்பாவியாக இருப்பதான இந்தப் பாவனை, ஹென்ரி ஆடம்ஸின் உத்தி[9] போன்ற, மூன்றாம் நபர் குரலில் எழுதுகிற மாற்றத்தால் ஆழப்பட்டு, வாசகரின் கவனத்தை ஸ்காண்டிநேவியக் காட்சிகள், ஒலிகள், மேலும் வாசனைகளின் மீது தக்க வைக்கிறது. இருப்பினும் இந்த உத்தி தன்னைக் கேள்வி கேட்க விடாமலும், உணர்வுகளின் செழிப்பைப் பெற விடாமலும் தடுக்கிறது. அவை லெஸ்ஸரின் முந்தைய புத்தகங்களான ‘தி அமெச்சூர்’ (1999) மற்றும் ‘ரூம் ஃபார் டௌட்’ (20007) ஆகியவற்றிலிருந்த கட்டுரைகளுக்குச் செழுமை கூட்டிய முறைகள்.
லெஸ்ஸரின் ஆய்வு மெச்சும் நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது, அற்பமான வகை இலக்கியம் என்பது போலக் கருதப்படும் ஒரு பிரிவுக்கு அதைவிட உயர்வான மதிப்பைக் கொடுப்பது அவசியம் என்று வாசகர்களை நம்ப வைக்க முயல்கிறது. அதனால் அவர் இன்று நார்டிக் மர்ம நாவல்கள் வந்தடைந்திருக்கும் நிலை பற்றிக் கண்டனம் தெரிவிக்காமல் தவிர்க்கிறார், ஆனால் அவர் தன்னுடைய பெருமதிப்பை கொயவால்/ வா(ஹ்)லூ கூட்டாளிகளுக்கும், மாங்கெல்லுக்கும்தான் தருகிறார். நம் தற்கால இலக்கிய விமர்சனத்தில் ஆழமுள்ள பாராட்டுதல்தான் நிறைய தேவை, குறைவாக அல்ல என்று நான் கருதுகிறேன். ஆனால் லெஸ்ஸருக்கு முதல் கட்ட ஸ்வீடிய எழுத்தாளர்கள் மீது இருக்கும் அபிமானம், இன்றைய நார்டிக் மர்மப் புனைவுகளின் நற்குணங்களை அதிகப்படுத்திக் காட்டச் செய்கிறது.
உண்மையில் அவருடைய புத்தகம் ஸ்காண்டிநேவிய மர்மப் புனைவு வகை மீதும், அதற்கு உந்துதலாக இருந்த பனியில் உறைந்த நிலப்பரப்பு மீதும் அவை அற்புதங்கள் என்னும் பளபளப்பைச் சேர்க்க முயல்கிறது. கொலைக் குற்றங்களை துப்பறிவோரை (திரைப்படங்களைப் போல அன்றி, நிஜத்தில் இவர்களில் பலர் பெண்கள்) லெஸ்ஸர் பேட்டி காண்பதையும், அருங்காட்சியகங்களூடே நடந்து போவதையும் நாம் காண்கையில், நம் கதாநாயகிக்கு (லெஸ்ஸருக்கு), ஸ்டாக்ஹோம் நகரின் நெடிதுயர்ந்த கலசங்களை விட, அங்குள்ள பால்டிக் கடலின் மின்னும் பரப்பை விட, இந்தப் பிராந்தியத்தின் புனைவுகளே கூடுதலான கனபரிமாணமுள்ள எதார்த்தமாகத் தெரிகின்றன என்று நாம் கவனிக்கத் தொடங்குகிறோம். இலக்கியம் எதார்த்தத்தைப் பெருக்கிக் காட்டக் கூடும்; அதைப் பெயர்த்து அகற்றி அங்கே தானே அமரவும் கூடும்.
——-
இங்கிலிஷ் இலக்கியத்தின் மையத்தில் ஒரு கலைப் படைப்பு இருக்கிறது, அதை நாம் நார்டிக் மர்ம இலக்கியம் என்ற பெயர் தோன்றுமுன்னரே தோன்றிய ஒரு படைப்பாகக் கருதலாம். உணர்ச்சிகளில் தோய்ந்த ஒரு துப்பறிவாளர், கொலை ஒன்றின் மர்மம் தீர்க்க அதை ஆராய்கிறார். – அது விஷம் கொடுக்கப்பட்டு நடந்திருக்கிறது- ஆனால் ஒரு சதியின் சிக்கலில் தான் சிக்கி இருப்பதை அறிகிறார். ஒரு நபர் கத்தியால் குத்தப்படுகிறார்; ஒரு பெண்ணின் சடலம் ஆறு ஒன்றிலிருந்து மீட்கப்படுகிறது. கடைசிக் காட்சியை டேனிஷ் ரத்தம் வழுக்கலாக்குகிறது.
நவீன யுகத்தின் எந்த ஸ்காண்டிநேவிய மர்ம இலக்கியமும் ‘ஹாம்லெட்’ அளவிற்கு உயரவில்லை என்றாலும், இந்த மொத்த வகை இலக்கியத்தையும் இலக்கியத் தரத்தை எட்டாத வகை இலக்கியம் என்று கழிப்பது மடத்தனமாக இருக்கும். கொயவால்/வா(ஹ்)லூ இரட்டையரும், மாங்கெல்லும், அனேகமாக வணிக நோக்கமே நிறைந்த இந்தச் சிற்றிலக்கியம் கூட கலைப் படைப்புக்கான உயரிய தரத்தை எட்ட முடியும் என்று காட்டி இருக்கிறார்கள். வெளிப்படையான அரசியல் திட்டம் கொண்ட எழுத்தாளர்கள் பலரும் அனேகமாக தண்டமானதும் அல்லது இளக்கார நோக்கு கொண்டதுமான திரள் வாசகருக்கான படைப்புகளைக் கொடுக்கிறார்கள் என்பது உண்மையானாலும், இவர்களின் விஷயத்தில் எழுத்தாளரின் அரசியல் நிலைகள் – கொயவால்/ வா(ஹ்)லூவின் மார்க்சியம், மாங்கெல்லின் உலகளாவிய நோக்கு- தேங்கிப் போன இந்த இலக்கிய வகைக்கு அறநோக்கின் புத்திக் கூர்மையைச் சேர்த்து உயிர்ப்பூட்டுகின்றன.
மாங்கெல்லிடமிருந்து எம்.டி.எட்வர்ட்ஷொனின் ‘எ நியர்லி நார்மல் ஃபாமிலி’ நாவலுக்கு நகர்வது என்பது, ஒரு காலத்தில் நிறைய சாதிக்க முடியும் என்று நம்பிக்கை தந்த ஒருவகை இலக்கியம் தன் அரசியல் கூர்மையையும், உளவியல் ஆழத்தையும் விற்று சௌகரியமான ஃபார்முலாக்களைப் பதிலுக்குப் பெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறிந்து மனச் சோர்வு எழும்.
தலைப்பில் உள்ள ‘நியர்லி நார்மல்’ என்ற சொல் கிட்டத்தட்ட நலமாக உள்ள குடும்பம் என்று பொருள் தரும். கதையில் உள்ள குடும்பத்தில் ஓர் அப்பா (இவர் மன உபாதைக்கு உள்ளான மதபோதகர்), ஓர் அம்மா (சாதனை வேகம் உள்ள வழக்குரைஞர்), மற்றும் ஒரு பதின்ம வயதுப் பெண், கட்டுப்பாடுகளை எதிர்க்கும் பெண். இந்தப் பெண் ஓர் ஆண் மகனைக்வல் கத்தியால் குத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாள். கதை மூன்று பாகங்களில் சொல்லப்படுகிறது, ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் கதை சொல்ல வாய்ப்பு கிட்டுகிறது.
மூன்று குரல்களும் தட்டையாக, நம்பகமற்றவையாக உள்ளன. நடை நகாசு வேலை என்ற நோக்கில் நாவல் சலிப்பு தரும் குறியீடுகளையும் – (சட்டமிட்ட குடும்பப் படத்தின் கண்ணாடி விரிசல் விட்டிருக்கிறது.) உயிரற்ற உவமானங்களையும் (வன்புணர்வைப் பற்றிய என் நினைவுகள் கத்திகளைப் போலக் கூர்மையாக உள்ளன; அந்த பிம்பங்கள் கண்ணாடி போலத் தெளிவாகத் தெரிகின்றன”) கொணர்கிறது. நார்டிக் மர்மப் புனைவுகளின் முக்கிய குணமான ஆடம்பரமற்ற, நேரடியான எழுத்து நடை, இங்கே (பள்ளியில்) இரண்டாம் வகுப்புப் படிப்புக்கு ஏற்றதாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. (எட்வர்ட்ஷொனின் முந்தைய புத்தகங்கள், ‘இளம்பிராயத்தினருக்கானவை” என்று அவரது ஆசிரியர் குறிப்பு சொல்கிறது.) மொத்தப் புத்தகத்திலும் இந்த நாவலின் உணர்வுத் தொனி லைஃப்டைம் நிறுவனத்தின் திரைப்படங்களுடையதாக இருக்கிறது.[10] அந்த மதபோதக அப்பா இப்படி நினைக்கிறார்: “என் மனம் ஜாப் (விவிலியப் பாத்திரம்) பக்கம் திரும்பியது. இது என்னுடைய சோதனையா?”
அந்த மகள் மீதான கொலை வழக்கு விசாரணையின் போது, இந்த நாவலுக்கே உரித்தான, உள்ளீடு ஏதுமற்ற ஒரு கணம் நிகழ்கிறது, அந்த விசாரணையில் குற்றம் சாட்டும் வழக்குரைஞர், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை விசாரிக்கும்போது, இறந்த மனிதன் அவளுடைய உற்ற தோழியோடு கொண்ட நட்பு “ப்ளாடோனிக்” ஆனதா என்று கேட்கிறார்.[11] அந்த மகள் சொல்கிறாள், “ப்ளேடோ என்னுடைய அபிமான தத்துவாளர்.” அந்த வழக்குரைஞர் சொல்கிறார், “நான் எப்போதுமே சாக்ரடீஸையே விரும்பி இருக்கிறேன்,” இது பொருத்தமற்ற, பொருளற்ற பதில்.
எட்வர்ஷொனின் நாவல், படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லாத போதும், இப்படி ஒரு நாவல் இருப்பதே, ஸ்காண்டிநேவிய புனைவுகளின் பிரசுரகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ள பண விநியோக முறைகளின் கேவல நிலையைக் காட்டிக் கொடுக்கிறது. இப்படி ஒரு பயனற்ற நாவல் மொழி பெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் விளம்பரத்தோடு விற்கப்படும் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. அமெரிக்க விமர்சகர்கள் இதற்கு மட்டான ஆனால் ஆதரவான கவனத்தைக் கொடுத்திருக்கிறார்கள்- இது மட்டும் ஏதோ நார்டிக் மர்ம இலக்கியத்தோடு இலேசான தொடர்பு கொண்டிராவிட்டால், அந்த கவனிப்பு கிட்டியிருக்க வாய்ப்பில்லை.
ஸ்காண்டிநேவிய கொலைக் குற்ற நாவல்களுக்கு மையத்திலிருந்து விரிவட்டம் ஒன்றில் ஈர்ப்பு விசை இருக்கிறது, அது பிரசுரகர்கள் மீது மட்டுமல்ல, எழுத்தாளர்கள் மீதும் தாக்கமுள்ளது. ஸ்வீடனில் இளம் வாசகர்களுக்குப் புத்தகங்கள் எழுதுபவனாக நான் இருந்தால், நானும் குற்ற நாவல்கள் எழுதத் திரும்புவேன். எட்வர்ட்ஷொனின் புத்தகம் ஒரு உதாரணம் என்றால், இந்தத் திருப்பத்தை அடைவது எளிய செயல்: ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம், மேலோட்டமான பெண்ணியத்தைக் கொஞ்சம் கதை மீது பரப்ப வேண்டியதுதான், ஸ்டீய்க் லார்ஷொன் செய்தது போல. கதை ஒரு வன்புணர்வுக்குப் பலியான பெண்ணைக் கொண்டிருக்க வேண்டும் – எட்வர்ட்ஷொன் கதையில் எதிர்ப்புணர்வு கொண்ட ஒரு பதின்ம வயது மகள்- அந்தப் பெண் பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம் என்று வீறு கொண்டு எழவேண்டும். (பதின்மருக்கான எழுத்து நடையை மாற்றத் தேவையில்லை.)
இந்த வகை உத்திகளைப் பயன்படுத்தும் மனப்பாங்கை வருணிக்க பெண்ணியம் என்பது சரியான சொல் இல்லை, சந்தர்ப்பவாதம் என்பதே பொருத்தமான வர்ணனை. டேனிஷ் விமர்சகர் மார்டெச்ன் ஹாய் யென்ஸென் ஒரு மின்னஞ்சலில் என்னிடம் சொன்னார்: “ஸ்காண்டிநேவிய மர்ம நாவல்கள் எழுதுவோர் தம் புனைவில் இருப்பதை, ஏதாவது உயர்ந்த அரசியல் நோக்குள்ள அரசியல் என்றுசொல்லிக் கொள்ளலாம்- ஆனால் அவர்கள் அதற்கு ஏதாவது ஒரு திரைப்பட அல்லது தொலைக்காட்சி விற்பனை வாய்ப்பு கிட்டும் என்ற எதிர்பார்ப்போடுதான் எழுதுகிறார்கள்.”
இதற்கு மாறாக யோ நெஸ்போவின் ‘நைஃப்’ ஒரு சிறு வட்டத்து இலக்கியப் பாணிக்குள் அழகியல் சாதனை புரிவது எப்படி என்பதற்கு ஒரு சான்றாக இருக்கிறது. அதே நேரம் அந்த நாவல், நார்டிக் மர்ம நாவல்கள் எப்படி கொயவால்/ வா(ஹ்)லூ மர்ம நாவல்களின் சமூக விமர்சன நோக்கிலிருந்து கீழிறங்கி விட்டன என்பதை ஒரு வகைப் பகட்டோடு காட்டுகிறது. கொயவால்/ வா(ஹ்)லூ நாவல்கள் கூட்டணியாக வேலை செய்வதையும், தடயங்களைப் பொறுமையாக ஆராய்வதையும், வன்முறைச் சம்பவங்களில் திட்டமிட்ட கெடுநோக்கை விடத் தற்செயல் நிகழ்வுகளுக்கு இருக்கக் கூடிய பங்கையும் முன்வைக்கின்றன. நெஸ்போ புத்தகங்களோ, ஒரு துப்பறிவாளரைக் கொண்டவை; அமெரிக்க மர்ம நாவல்களின் பாணியில் நாயகத் தன்மை இல்லாத அசாதாரண மனிதர் இந்தத் துப்பறிவாளர்- உஷ்லோ மாநகரின்[12] ஊழல் நிறைந்த காவல் துறையிடமிருந்து ஒரு உதவியும் இல்லாது, சூபர்வில்லென்களை எதிர்த்து நிற்பவர்.
ஹரி ஹூலா[13] என்ற காவல் துறைக்காரர், உஷ்லோ மாநகரத்தில் பணி புரிபவர். ஓய்வு நேரத்தில் மது போதைக்கு அடிமையானவராக, ஏறுமாறாக நடந்து கொள்கிறவராக உலவுபவர். ’நைஃப்’ நாவல் ஹரி ஹூலாவை மையமாகக் கொண்ட நாவல்களின் 12 ஆவது புத்தகம். இதில் ஹூலா காலையில் படுமோசமான தலைவலியோடு எழுந்திருக்கிறார்- முந்தைய நாள் இரவு மது போதையின் விளைவு- உடலெங்கும் ரத்தக் கறை. முந்தைய நாள் இரவு பற்றி எதுவும் அவருக்கு நினைவில்லை. ஆனால் அவர் நினைவற்றிருந்த மணிகளில், அவரிடமிருந்து தற்காலிகமாகப் பிரிந்து போய் வாழ்கிற அவர் மனைவி, தன் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார். ஹூலா கொலைகாரரைக் கண்டு பிடிக்குமுன்னர், முதல் சந்தேகத்துக்குரிய நபரான தன்னை, அந்தக் கொலையைச் செய்தவரா என்று சோதித்து, விலக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
’நைஃப்’ குற்ற விசாரணை நடவடிக்கையில் முழுமொத்தமாகச் சேர்ந்து விட்டிருக்கிறது. தன் மனைவியின் கொலையை விசாரிப்பதிலிருந்து தடுக்கப்பட்டு, காவல் துறையிலிருந்தும் தற்காலிகமாக வெளித்தள்ளப்பட்டு விட்ட (ஸஸ்பென்ஷன்) ஹூலா மொத்த நாவலிலும் தன் துறையின் விதிகளுக்கு அடிபணியாதவராகவே செயல்படுகிறார்; அவருடைய விசாரணை முறைகளில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரைச் சித்திரவதை செய்வதும் இருக்கிறது. (சந்தேகத்துக்குரியவரோ ஒரு சூபர்வில்லென், ஸ்வைன் ஃபின்ன என்ற நபர். தொடராக வன்புணர்வுக் குற்றங்கள் செய்பவர், கொலைகாரர், தன் மரபணுவைப் பல பெண்களிடம் பரப்ப வேண்டும் என்ற வெறி கொண்டவர். இதனாலெல்லாம் வாசகர்களுக்கு – சித்திரவதை செய்வது சரிதான் என்று- தோன்ற வேண்டும்போல இருக்கிறது. இது அற நிலைப்பாட்டில் தர்மசங்கடங்களைத் தீர்க்க நெஸ்போ மேற்கொள்ளும் பல எளிமைப்படுத்தல்களுக்கு ஓர் உதாரணம்.) இந்த மர்மமெல்லாம் தீர்க்கப்படும் முறையுமே எளிது, சட்டத்தை மீறி, தொலைதூரம் சுடக் கூடிய ரைஃபிளால் ஒரு எதிரி கொல்லப்படுகிறான், மற்றவன் தற்கொலை செய்து கொள்கிறான்.
அரசியல் ரீதியாக ‘நைஃப்’ நாவல் நார்வீஜிய மர்மப் புனைவுகள் மார்ட்டின் பெக் காலத்துக் கதைகளிலிருந்து எத்தனை தூரம் விலகிய வலது சாரி நாவல்களாக ஆகி விட்டிருக்கின்றன என்பதைச் சுட்டும். குற்றவாளிகளைத் திருத்தி மேம்பட்டவர்களாக ஆக்குவது நல்லது என்று கருதும் நார்வீஜிய நீதிமுறை அளவு கடந்து மென்மையாக உள்ளது: அதனால் வாசகர்கள் மரண தண்டனையையே விடையாகக் கருதுவார்கள். நைஃப், நாமே துப்பாக்கி ஏந்தி நீதியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற வகை அற நோக்குடன் எழுதப்படுவது, ஸ்காண்டிநேவிய குற்ற நாவல் எத்தனை தூரம் அமெரிக்கத் தனத்தை ஏற்று விட்டது என்பதைக் காட்டுகிறது.
நெஸ்போவின் நாவல்களில் படுமோசமான வலது சாரி தீவிரவாதிகள் பரவலாகப் பார்க்கக் கிட்டுகிறார்கள் என்றாலும், அவர் குற்ற நடவடிக்கையை அலசும் முறை சமூகவியலை விட, முழு மனதாக உளவியலைத்தான் நம்புகிறது. அவருடைய வில்லென்கள் தங்களுடைய காயம்பட்ட ஆண்மையால், சேதப்பட்ட, நோய்ப்பட்ட மனநிலையால்தான் வழக்கமாகக் குற்றம் புரிகிறார்கள்.
நெஸ்போவின் உலகில், கலவரமுற்ற ஆண்களுக்குத் தங்கள் ஆண்மையை நிறுவ இரண்டு வழிகளே உள்ளன: அவர்களால் கொலை செய்ய முடியும் அல்லது அவர்கள் குழந்தைகளை உண்டு பண்ணுவார்கள்- கருத்தரிக்கச் செய்வார்கள். அதனால் ஹரி ஹூலா நாவல்களில் வரும் ஆண்கள் பலரும் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போவது பற்றித் தீவிர உளைச்சல் கொண்டவர்கள், ஒழுக்கமற்றுப் போவதற்காகப் பெண்களைக் கடுமையாகத் தண்டிப்பவர்கள், அல்லது பொதுவாக அப்பாவாக இருப்பதில் உள்ள பிரச்சனைகளோடு அல்லாடுகிறவர்கள். (நெஸ்போவின் சொந்த அப்பா இரண்டாம் உலகப் போரில் நாஜிகளின் பக்கம் சேர்ந்து போரிட்டவர், இந்தப் பாரம்பரியக் கொடையை மேற்படி வரிசை நாவல்களில் இல்லாத தனியான நாவல் ஒன்றில் நெஸ்போ விவரித்து எழுதுகிறார், அது ‘த ஸன்’ என்ற நாவல்.) களவுறவு கொண்ட மனைவியால் ஏமாற்றப்பட்ட ஒரு கொலைகாரன், ‘நைஃப்’ நாவலில், மார்க் க்ரைஃப் என்பவர் மோஸ்தர்களைத் துரத்தும் நபர்கள் தம் ஆண்மைக்கு நிறைவை அதில் தேடுகிறார்கள் என்று அலசி எழுதிய கட்டுரையைப் படித்து விட்டு, சீற்றமடைந்துதான், கொலைகளைச் செய்கிறவராகிறார்.[8]
நெஸ்போ தந்திரங்கள் செய்வதில் வல்லவர்; அவர் நிறைய முக்கியமான தகவல்களைக் கொடுப்பார்- சிலவற்றை மட்டும் கொடுக்காமல் ஒளித்து விடுவார்- அதனால் நாம் நம் இவரா, அவரா, மூன்றாம் நபரா என்று நம் சந்தேகத்தை மாற்றிக் கொண்டிருப்போம், கடைசியில் அதெல்லாமே தவறான பாதைகள் என்று காட்டுவார். இப்படி அவர் காட்டும் பொய்ப் பாதைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் எதிர்பார்க்கக் கூடியவையாக ஆகி விடுகின்றன, ஆனாலும் அவற்றுக்கு சுவாரசியம் என்பது அற்றுப் போவதில்லை. நெஸ்போ நாவல் என்பது ஒரு சர்க்கஸ், அதில் அரங்குகள் எல்லாம் அட்டையால் செய்யப்பட்டவை, கம்பிகளையும், அரங்குக்கு உதவும் ஆட்களையும் நாம் பார்க்க முடியும். ஏராளமான நாடகத்தன்மையைக் குற்ற நாவல்களில் எதிர்பார்த்து நார்டிக் மர்மப் புனைவுகளுக்கு வருபவர்களுக்கு – (நெஸ்போவின் நாவல்கள் போல அல்லாத) – மார்ட்டின் பெக்கின் சளி ஒழுகும் மூக்கை வருணிக்கும் நாவல்கள் சலிப்பைத்தான் தரும்.
எட்வர்ட்ஷொனிடம் இல்லாதது நெஸ்போவிடம் உண்டு- அதுதான் அடர்த்தியான கற்பனை- என்றாலும், அவருடைய படைப்புகள் காட்டுவதிலிருந்து ஸ்காண்டிநேவிய குற்ற நாவல்கள் எப்படி ஒரே மாதிரியான போக்கு கொண்ட, எதிலும் நம்பிக்கை இல்லாத வணிக வகைப் புனைவுகளாக இறுகி விட்டன என்பதை நாம் அறிவோம். நார்டிக் மர்மப் புனைவுகள் எப்படி வணிகரீதியாக வெற்றி பெறும் அதே சமயம் கலைப் பூர்வமாகவும் நேர்த்தியைக் கொண்டிருக்க முடியும் என்று கொயவால்/ வா(ஹ்)லூவும் மாங்கெல்லும் நமக்குக் காட்டியிருந்தனர், ஆனால் இறுதியில் வணிகம்தான் வென்றிருக்கிறது. தொலைக்காட்சிக்கும், திரைப்படத்திற்கும் விற்கும் எதிர்பார்ப்பும், பிரசுரகர்களிடமிருந்து ஒரே வார்ப்பில் எழுதச் சொல்லும் வற்புறுத்தலும், ஸ்வீடனிலோ, நார்வேயிலோ உள்ள அரசியல் இயக்கத்தின் சுழல்கள் பற்றிச் சிறிதும் அக்கறையில்லாத பன்னாட்டு வாசகக் கூட்டத்தின் வாசிப்பு எதிர்பார்ப்புகளும், முறை வைத்துக் கொண்டு , தனித்துவம் கொண்டிருந்த இந்த இலக்கிய மரபின் மீது தம் கத்திக் குத்துகளைப் பாய்ச்சி இருக்கின்றன.
வியப்பேற்படுத்தவில்லை என்றாலும், ஆழ்ந்த உணர்ச்சியைக் கிளப்பக் கூடியது என்னவென்றால், மார்க்சியர்கள் உருவாக்கிய ஓர் இலக்கிய வடிவம், சந்தையின் தேவைகளால் இத்தனை தீவிரமாக வக்கரித்துப் போய் இருப்பதுதான். இந்த இலக்கிய வடிவு தோன்றிய காலத்து இலக்கிய மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகள் இப்போது மறுபடியும் கைப்பற்ற முடியாதவையாகத் தெரிகின்றன.
ஒருகால் மறுபடி எதார்த்தமான அணுகலுக்குத் திரும்பும்படி தூண்டக் கூடிய எழுத்தாளர் யாரேனும் தோன்றக் கூடும், அப்போது சமூகப் பார்வையில் புனைவை வரைவது நேரலாம், குற்றங்கள் எப்படிச் சமூகத்தின் விரிசல்களையே சுட்டுகின்றன என்பதை ஆராயலாம். இந்தச் சம்பவம் நிகழ்வது துர்லபம்தான். ஸ்காண்டிநேவிய மர்ம இலக்கியத்துக்கு ஏதும் எதிர்காலம் உண்டென்றால், அது நெஸ்போவை ஓர் அங்குலம் தாண்டியிருக்கும் – அதாவது தொலைக்காட்சியில்தான்.
***
குறிப்பு:
இந்தக் கட்டுரையின் மூல வடிவை இங்கே காணலாம்: https://www.publicbooks.org/who-killed-nordic-noir/
மூலக் கட்டுரை ஆசிரியர்: சார்லி டைஸன்
தமிழாக்கம்: மைத்ரேயன்
இக்கட்டுரையில் வரும் அயல் மொழிப் பெயர்களுக்கு அந்தந்த மொழியில் உச்சரிப்பு இருப்பதை இங்கு தமிழில் கொடுக்க முயன்றிருக்கிறோம். கட்டுரையில் பெயர்கள் புரியாத பட்சத்தில் இங்கு சோதித்து உறுதி செய்து கொள்ளலாம்.
பெயர்ப்பட்டியல்
இங்கு பெயர்கள் முதல் பெயரின் அகர வரிசைப்படி அமைந்திருக்கின்றன. [ மேற்கில் பொதுவாக கடைசிப் பெயரின் வரிசையில்தான் அமைப்பார்கள்.] பெயர்கள் அந்தந்த மொழிக் குழுவின் உச்சரிப்பைச் சார்ந்துள்ளன.
Copenhagen = கோபென்ஹாவ்ன்
David lagercrantz= டாவிட் லாகெர்க்ராண்ட்ஸ்
Edmund Gosse= எட்மண்ட் கோஸ்
Emile Zola= எமில் ஜோலா
Harry Hole = ஹரி ஹூலா
Henning Mankel = ஹென்னிங் மாங்கெல்
Hugge = ஹோகு (டேனிஷ் உச்சரிப்பு)
Ingmar Bergman= இங்மார் பெரிமான்
Jo Nesbo = யோ நெஸ்போ
Kurt Wallander= குர்ட் வாலாண்டர்
Lisbeth Salander= லிஸ்பெத் ஸலாண்டர்
M.T.Edvardsson= எட்வர்ட்ஷொன்
Maj Sjöwall – மாய் கொயவால்
Mark Greif = மார்க் க்ரைஃப்
Martin Beck = மார்ட்டின் பெக்
Morten Høi Jensen= மார்டென் ஹாய் யென்ஸென்
Noir = நுவா(ஹ்) – ஃப்ரெஞ்ச் உச்சரிப்பு
Norwegian= நார்வீஜிய
Oslo = உஷ்லோ (நார்வீஜிய உச்சரிப்பு. இங்கிலிஷில் இதை ஆஸ்லோ என்கிறார்கள்)
Per Wahlöö = பெர் வா(ஹ்)லூ;
Stieg Larsson = ஸ்டீ(ய்)க் லார்ஷொன்
Svein Finne = ஸ்வைன் ஃபின்ன
Swedish= ஸ்வீடிய
Wendy Lesser= வெண்டி லெஸ்ஸர்
_______________________
மூலக்கட்டுரையின் பின் குறிப்புகள்:
[1] இந்தச் சந்தை திடீரென்று தோன்றி விடவில்லை: 1990களில் ஹென்னிங் மாங்கெல் படைத்த குர்ட் வாலாண்டெர் வரிசை நாவல்கள், வாசகர்களைச் சௌகரியமாக இருந்தபடி படிக்க உதவும் பிரிட்டிஷ் நாவல்களிலிருந்து நகர்ந்து ஆக்ரோஷமான அரசியல் சூழ்நிலைகள் கொண்ட ஸ்வீடிஷ் குற்றப் புனைவுகளைப் படிக்க வரும்படி மாற்றி இருந்தன. ஆனால் லார்ஷொனின் நாவல்களுக்குப் பிறகு, ஒரு விளிம்பு நிலை ருசியாக இருந்தது ஒரு தொழில்துறையின் மையச் சக்தியாகி விட்டது.
[2] இந்த எண்ணிக்கையில் ஸ்வீடிய எழுத்தாளரான டாவிட் லாகிர்க்ராண்ட்ஸ், 2004 இல் லார்ஷொனின் மரணத்துக்குப் பிறகு லிஸ்பெத் ஸலாண்டெர் வரிசை நாவல்களைத் தொடர்ந்து எழுதிய நூல்களின் விற்பனையும் அடங்கும்.
[3] இந்த எண் NPD Bookscan data விலிருந்து கிட்டியது, இதில் ஈ-புக் மற்றும் ஆடியோபுக் விற்பனை எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை
[4] மாய் கொயவால், பெர் வா(ஹ்)லூ, த டெர்ரரிஸ்ட்ஸ் (விண்டேஜ் பிரசுரம், 2010), பக்-280
[5] லெஸ்ஸெர் “ஸ்காண்டிநேவியா,” என்று சொல்வதை நான் பயன்படுத்தினாலும், அவர் ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளை உன்னிப்பாகப் பார்க்கிறார் என்று சுட்ட வேண்டி உள்ளது – உதாரணமாக உஷ்லோ நகரின் லட்சியமாகக் கொள்ளக் கூடிய சுத்தத்தை, கோபென்ஹாவ்ன் நகரின் உறுத்தலான தூசிக்கு எதிராக வைக்கிறார். தவிர ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வெவ்வேறு பகுதிகளிடையே உள்ள வித்தியாசங்களையும் கவனிக்கிறார்.
[6] மாய் கொயவால், பெர் வா(ஹ்)லூ- த மான் ஹு வெண்ட் அப் இன் ஸ்மோக் (விண்டேஜ் பிரசுரம், 2008), பக்கங்கள்- 3-4.
[7]எட்மண்ட் கோஸ், டூ விஸிட்ஸ் டு டென்மார்க், 1872, 1874 (ஸ்மித், எல்டர், 1911) பக் 68-69.
[8]மார்க் க்ரைஃப், “த ஹிப்ஸ்டர் இன் த மிர்ரர்,” நியூயார்க் டைம்ஸ், நவம்பர் 12, 2010.
[1] இந்தக் கட்டுரையின் தலைப்பில் மூலக் கட்டுரையில் நார்டிக் நுவா(ஹ்) – Nordic Noir- என்று இருந்தது. அது ஸ்காண்டிநேவிய நாடுகளின் மர்மக் கதைகளை ஒரு வகைப்பட்ட இலக்கியமாக, நுவா(ஹ்) என்று சுட்டிய சொல்.
[2] 2007-8 ஆம் ஆண்டுகளில் உலக நிதிச் சந்தையில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பல நாட்டு வங்கிகள் திவாலான நிலைமை ஏற்பட்டது. ஏராளமான மத்திய வர்க்கத்து மக்கள் தம் சொத்துக்கள், வீடுகள் போன்றவற்றை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட பெரும் சரிவு ஓரளவு நிதானத்துக்கு வர அடுத்த ஏழெட்டு ஆண்டுகள் ஆயின. அந்தச் சரிவைக் குறிக்கிறது இந்த வாக்கியம்.
[3] Steig Larsson
[4] Social Democratic Utopia என்ற சொல்லில் உடோபியா என்பதைக் கனவுச் சமுதாயம் என்று மாற்றி இருக்கிறேன்.
[5] ஸ்டெந்தால் நவீன எதார்த்தத்தின் முன்னோடி என்று கருதப்படும் ஃப்ரெஞ்சு எழுத்தாளர். நிஜத்தில் இவர் ஒரு தாராளவாதி, மத எதிர்ப்பாளர் என்பவை இவருக்கு இடது சாரியினர் மத்தியில் உள்ள பிராபல்யத்திற்குக் காரணங்கள். மற்றபடி யூரோப்பிய இடதுசாரியினருக்குப் பிடித்தமான பெண்கள் மீது பரிவு கொள்ளுதல் என்ற குணத்தோடு கலந்த பெண் பித்தராக இருப்பதையும் செய்தவர். கட்டுரையாளருக்கு அபிமானக் கருத்தியல் மார்க்சியம் என்பதே இந்த உவமானம் இங்கே வரக் காரணம் என்றாலும் ஸ்டெந்தால் நாவல்களைக் கூடையில் சுமந்து செல்லப்பட்ட ஒரு (முகம் பார்க்கும்) கண்ணாடி என்று எழுதியது முக்கியமான காரணம். முகம் பார்க்கும் கண்ணாடியில் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் காட்டப்படும் என்பது இவருக்கோ, கட்டுரையாளருக்கோ நினைவில்லை போலும்.
[6] Hugge lifestyle என்பது மூலக் கட்டுரையின் சொல். அனேகமாக டேனிஷ் சொல், நார்வே மக்களும் பயன்படுத்துகிறார்கள். டேனிஷ் மொழியில் இது ஹோகு என்று உச்சரிக்கப்படுகிறது. சாதாரணப் பொருட்களைக் கொண்டே வாழ்வை அனுபவித்துச் சுகமாக உணரலாம் என்பது இந்த இயக்கத்தின் நோக்கம்.
[7] Scandinavian Noir என்பது மூலச் சொல். ஃப்ரெஞ்சு வார்த்தை என்பதால் Noir என்பது நுவா(ஹ்) என்று உச்சரிப்புப் பெறுகிறது. இது அந்தப் புத்தகத் தலைப்பு என்பதால் அப்படியே கொடுத்திருக்கிறேன்.
[8] Zealous என்பது சொல். இது இங்கிலிஷ் எழுத்தில் கடைசி எழுத்தான Z யில் துவங்குவதால் லெஸ்ஸரின் பட்டியலில் கடைசிச் சொல்லாக உள்ளது போலும்.
[9] ஹென்ரி ஆடம்ஸ் ஓர் அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர். தன் சுயசரிதையை மூன்றாம் நபரின் கதையைச் சொல்வது போன்ற அன்னியக் குரலில் எழுதினார். அந்த உத்தி அவர் மறைந்த பிறகு பிரசுரகர்த்தர்களால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன் வாசகர்கள் அதை வேறு யாரோ நெருங்கிய நண்பர்கள் எழுதி இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டிருந்தனர். இங்கு லெஸ்ஸர் தன் அனுபவங்களை அன்னியர் கவனித்து எழுதியது போல எழுதுகிறார் என்று தெரிகிறது.
[10] லைஃப்டைம் மூவிஸ் என்பன “உண்மைக் கதைகளை” அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள். இவை அனேகமாக த்ரில்லர் வகைப் படங்கள், ஆனால் முனை மழுங்கியவையாக இருக்கும். உதா: https://www.imdb.com/list/ls069728825/ இங்கே ஒரு நீண்ட பட்டியல் கிட்டும்.
[11] Platonic – என்ற சொல் கிரேக்க தத்துவாளர் ப்ளேடோவைச் சுட்டும். ப்ளேடோ பாலுறவில் நாட்டமில்லாத நட்பு என்று இன்று குறைந்த பொருளில் புழங்குகிறது. அதன் மூலப் பொருளுக்கு இங்கே செல்லவும்: https://www.etymonline.com/word/Platonic
[12] Oslo= உஷ்லோ என்று நார்வே நாட்டு மக்களால் உச்சரிக்கப்படுகிறது. (நார்வீஜியர்கள், நார்வீஜிய மொழி)
[13] Harry Hole= ஹரி ஹூலா என்று உச்சரிப்பு.
பொதுவாக நான் மர்ம இலக்கியங்களில் நாட்டமில்லாதவன். அவை சுவைக்காக அதிக வன்முறைகளையும், பாலியல் குற்றங்களையும் காட்சிப்படுத்துகின்றன என்ற என் எண்ணத்தை நான் படித்த இரண்டொரு நாவல்கள் உறுதிப்படுத்தின. ஆனால் இந்தக் கட்டுரை, சமூக, அரசியல், மனித மற்றும் கலைப் பார்வைகளோடு நார்டிக் மர்ம நாவல்கள் முன்னர் வந்திருப்பதையும், அதுவும் தேய்ந்து கட்டெறும்பானதையும் நன்றாகச் சொல்கிறது. ஒரு இடம் அசத்திவிட்டது- இலக்கியம் யதார்த்தத்தை எடுத்துக் காட்டும்; தேவையானல், அதை அகற்றி விட்டு தான் அமர்ந்து கொள்ளும். சிறப்பு.
Jaishankar Venkatraman, I appreciate your words. You are right.