ஐ. கிருத்திகா

“தொந்தர எங்க போயி தொலஞ்சிது………?”
ரேசனிலிருந்து இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கிக்கொண்டு வியர்த்தபடி வந்து நின்ற அம்மா முதலில் கேட்ட கேள்வி இதுதான்.
நான் உதட்டைப் பிதுக்க, அவள் முகம் சிடுசிடுப்புக்குள்ளானது. மடமடவென்று உள்ளே சென்று குடத்திலிருந்த நீரை சொம்பில் மொண்டு வழிய, வழியக் குடித்தாள்.
பின், புடவை முந்தானையால் கழுத்தைத் துடைத்துக்கொண்டு வந்து எனக்கெதிரே கால் நீட்டி அமர்ந்தாள்.
“யப்பா…..என்னா வெயிலு. ரெண்டு பையையும் தூக்கிட்டு வாரதுக்குள்ள ஆசு, ஊசுன்னு ஆயிப் போயிட்டு. போவும்போதே தொந்தரய அரை மணி நேரத்துக்கப்புறம் வரச் சொல்லியிருந்தேன். என்ட்ட தலையாட்டிப்புட்டு எங்க போயி தொலஞ்சிது……?”
அம்மா மறுபடியும் கோபமாக கேட்க, நான் பதில் கூறாது தைப்பதில் கவனமாய் இருந்தேன்.
இருபத்தைந்து வருடங்களில் அம்மா சொல்லி தொந்தரை ஒரு வேலை செய்ததில்லை. அது தெரிந்தும் அம்மா ஏதாவது வேலை சொல்லிக்கொண்டேயிருந்தாள். அதை செய்யாமல் தொந்தரை தட்டிக்கழித்தபோது பொறுக்காமல் புலம்பினாள்.
கல்யாணத்துக்குப் பிறகு அப்பாவோடு இலவச இணைப்பாக வந்தது தான் தொந்தரை. அப்பாவின் சித்தப்பா மகன்.
“கூடமாட ஒத்தாசையா இருப்பான். வச்சிக்குங்க…..…” என்று தாத்தா சொல்லி அனுப்பினாராம்.
“ஒரு நா இப்படி இருக்க பொருள அப்புடி எடுத்து வச்சதில்ல. வந்த நாள்லேருந்து குந்தி தின்னே அது காலம் போச்சி. நாந்தான் இன்னமும் செக்கு மாடாட்டம் சுத்திக்கிட்டி ருக்கேன்” என்று அம்மா அடிக்கடி முணுமுணுப்பாள். தொந்தரை எங்கு போனாலும் சோறு திங்க வீட்டுக்கு வந்து விடும்.
“மணி பன்னென்டாயிட்டுதே….. வெரசா ஒல வைக்கணும். ஒரு மணிக்கெல்லாம் தொந்தரக்கி வயத்துல மணி அடிச்சிரும். அதுக்குள்ளாற சோறாக்கி முடிச்சிரணும்” என்று அம்மா பரபரத்து சமைப்பாள்.
வேலை வெட்டி எதுவுமில்லாமல் சும்மா கிடக்கும் சித்தப்பாவுக்கு தொந்தரை (தொந்தரவு) என்று அம்மா பெயர் வைத்தது சரிதான் என்று எனக்குத் தோன்றும்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அது தொந்தரை என்றுதான் எல்லோராலும் அழைக்கப்பட்டது. அதனால் நானும் அதை அப்படியே கூப்பிடுவேன்.
அதற்காக அது கோபித்துக் கொண்டதில்லை. தன் சொந்தப் பெயரையே மறந்து போகுமளவுக்கு அந்தப் பெயர் அதை ஆட்கொண்டு விட்டிருந்தது.
“சாமிநாதங்கற பேரே மறந்து போச்சி. நீ நல்லா பேரு வச்ச போ..…” என்று அப்பா, அம்மாவிடம் அங்கலாய்ப்பார்.
மணி ஒன்றடித்தபோது தொந்தரை வேக, வேகமாக வீட்டுக்குள் வந்தது.
“ஒங்கள ரேசனுக்கு வர சொல்லியிருந்தேனில்ல. வராம எங்க போனிங்க……?”
அம்மா வாசப்படியில் வழிமறித்து நின்று கேட்டாள். எதிரேதான் வாங்க, போங்க எல்லாம். ஆள் தலை மறைந்துவிட்டால் அவன், இவன்தான். அது அம்மாவின் மனநிலையைப் பொருத்தது.
அம்மா சந்தோஷமாக இருந்தால் அது, இதுவே கொஞ்சம் இளக்கமாக வரும். கோபத்தில் வரும் அவன், இவன் மிளகாயைப் பட்டு, பட்டாக அரைத்து வழித்தெடுத்த எரிச்சல் பூசிக்கொண்டிருக்கும்.
தொந்தரைக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது. உடம்பு வளர்க்க, உயிரை வளர்க்க தின்று கொண்டிருப்பதே அதன் பாடு. வயிறு ரெண்டுபடி வடிக்கும் பானையைப் போல வீங்கியிருக்க அதன் மையத்தில் தொப்புள் குபுக்கென்று வெளிவந்ததுபோல துருத்திக்கொண்டிருக்கும். அப்பா இருந்தவரை அதை சட்டைப் போடச் சொல்லி திட்டுவார்.
“சட்டைய எடுத்து மாட்டுடா. பொம்பளைங்க நடமாடுற தெருவுல இப்புடி பாதி அம்மணமா திரியிறது நல்லாவா இருக்கு. மொதல்ல ரெண்டு வெரக்கட மனுசனா இருந்த. நீ எப்புடிப் போனா என்னான்னு இருந்தேன். இப்பவும் அதேமாரி வெளிக்கெளம்புனா பாக்குறவங்க என்னா நெனப்பாங்க…..”
அப்பா இரையும்போது தொந்தரை அசட்டுச் சிரிப்பு சிரிக்கும். இப்போது அம்மா கேட்ட கேள்விக்கும் அதே அசட்டுச் சிரிப்புதான்.
“மறந்துட்டண்ணி. அடுத்த மொற போவும்போது ஒங்ககூடவே வந்துர்றேன்.”
அம்மாவை சமாதானப்படுத்தும் முகமாக அது சொன்னது எனக்கே சகிக்கவில்லை.
தொந்தரைக்கு இருபத்தெட்டு வயதானபோது அப்பா அதற்கு கல்யாணம் முடித்துவிட வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினார்.
“நா முழுக்க ஒழச்சி நாலு காசு சம்பாரிச்சி கொண்டாந்தா பொம்பள மதிப்பா. ஒங்க தம்பிக்கு காலெடுத்து வைக்கவே காமண்ணேரம் ஆவுது. இந்த கருமத்த எவ தலையில கட்டலாமுன்னு நீங்க அலையிறீங்க…..”
அம்மா சுருக்கென்று சொன்னபோது அப்பாவுக்கு கோபம் வந்தது.
“கலியாணம் கட்டுனா பய ஒளுங்கா வேலக்கி போவ ஆரம்பிச்சிருவான். அவனுக்குன்னு ஒரு குடும்பம் ஏற்பட்டுச்சின்னா பொறுப்பு உண்டாயிரும்” என்ற அப்பா தொந்தரையை கூப்பிட்டு விஷயம் சொன்னபோது அது திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
“எனக்கு கலியாணமெல்லாம் வேணாம்ணே. நான் இப்புடியே இருந்துடுறேன்” என்றது.
அதற்குப்பிறகு அந்தப் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை. குடும்பம் அமைந்துவிட்டால் உழைக்க வேண்டுமென்ற பயமோ அல்லது பால் சார்ந்த ஈர்ப்பு இல்லையோ என்னவோ. அப்பாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
தொந்தரை சோற்றை உருட்டி, உருட்டி விழுங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சோறு எங்கிருந்து வருகிறது என்பது பற்றிய யோசனை அதற்கில்லாதது ஆச்சரியமாக இருந்தது.
அம்மாவும், அப்பாவும் தினக்கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து வந்தக்காசை வைத்து நான்கு வயிறுகள் பசியாறின. அப்பா போனபிறகு அம்மா மட்டும் போராடிக்கொண்டிருந்தாள்.
நான் ஓரமடித்தும் கிழிசல் தைத்தும் சேர்த்த காசு தலைக்கு எண்ணெய் வாங்கவும், சவுக்காரம் வாங்கவும் சரியாக இருந்தது.
“சோறு போடுங்கண்ணி……”
தொந்தரை இரண்டாவது சோற்றுக்காக அம்மாவை அழைத்தது. அம்மா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது குண்டானிலிருந்த சோற்றை கரண்டியால் இரண்டுமுறை அள்ளி தட்டில் போட்டு மேலே குழம்பை ஊற்றினாள்.
“பருப்பு கொளம்பு வச்சி நாளாச்சில்ல அண்ணி…..?”
சோற்றை நொறுக்கி பிசைந்தபடியே அது கேட்க, நான் அம்மாவைக் கூர்ந்தேன். அம்மாவிடம் எந்த பதிலுமில்லை. தொந்தரையும் அவள் பதிலை எதிர்பார்க்கவில்லை.
“ஏன் பாப்பா இப்புடி கோதுற….. நல்லா நொறுக்கி பெசஞ்சி சாப்புடு. வயசுப்புள்ள இந்தமாரி சாப்புட்டீன்னா ஓணாங்குஞ்சியாட்டம் ஆயிருவ. அப்புறம் முப்பது வயசு முடியிறதுக்குள்ள ஒடம்பு பெலமில்லாம போயிரும். நாளக்கி இன்னூரு வூட்டுக்குப் போறப்புள்ள நல்லா தாட்டியமா இருக்கவேணாமா….”
அது சொல்வதற்கு தலையசைப்பதா, வேண்டாமா என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போதே அம்மா பெரிதாய் தலையாட்டினாள்.
தொந்தரை மெல்ல எழுந்து அந்த பெரிய வட்டத் தட்டை எடுத்துக்கொண்டு போய் கொல்லையில் போட்டு கைகழுவிவிட்டு வந்தது. நெஞ்சு மட்டும் சாப்பிட்டு விட்டதில் அதற்கு மூச்சு வாங்கியது.
“ஆப்பட்டவுங்களுக்கு அஸ்டமத்துல சனிம்பாங்க. ஒங்கப்பாரு பூட்டாரு. நான் ஆப்டுக்கிட்டு அவஸ்தப்படுறேன்”என்றாள் அம்மா மெல்லிய குரலில்.
“நீயா இருக்கத்தொட்டு அந்தாள வச்சி சோறு போட்டுக்கிட்டிருக்க. நானாயிருந்தா வெளக்கமாத்தால அடிச்சி தொரத்தி வுட்ருப்பேன் ” என்பாள் பக்கத்துவீட்டு கனகு.
அவளுக்கு தொந்தரையைக் கண்டாலே ஆவதில்லை. அவளுக்கென்று இல்லை. தெருவில் யாருக்குமே அதைப் பிடிக்காது.
“எங்கிட்ருந்தோ வந்து ஒட்டிக்கிட்டப் பயலுக்கு நீயும் ஒபகாரம் பண்ணிக்கிட்டிருக்க. ஒனக்கப்புறம் அந்தப்புள்ள அவனப் பாக்குமா….?” என்பார்கள்.
அம்மா பெருமூச்சு விடுவாள். நாலு வார்த்தை நறுக்காக கேட்டு விரட்டிவிடலாம் என்றால் ஏனோ அவளால் முடியவேயில்லை. தொந்தரை கையை தலைக்குக்கொடுத்து சுவரோரம் படுத்து நிமிடமாய் தூங்கிப்போயிருந்தது.
காலை சாப்பிட்டானதும் ஒரு தூக்கம் போட்டுவிடவேண்டும். ஒருமணி நேரம் அடித்து போட்டதுபோல் தூங்கும் தொந்தரைக்கு என்னுடைய தையல் இயந்திரத்தின் சத்தமோ, வாசல் திண்ணையிலமர்ந்து அம்மா அரிசி புடைக்கும் சத்தமோ இடையூறாக இருப்பதில்லை.
“அதென்னவோ தெர்ல பாப்பா. வயித்துல சோத்த போட்டதும் கண்ண சொயட்டுது. பத்து நிமிசமாவது ஒடம்ப கெடத்தலன்னா ஆவட்ட, சாவட்ட அடிச்சிப்புடுது” என்று தொந்தரை சிரித்தபடி கூறும்.
“திங்குறதும், பேள்றதும், தூங்குறதும் தவுத்து ஒஞ்சித்தப்பனுக்கு வேற ஏதாவது வேல தெரியிமா சொல்லு.…” என்று அம்மா புகைவாள்.
நாளுக்கும், பொழுதுக்கும் துக்கினியூண்டு வயிற்றுக்காகப் போராட வேண்டியுள்ளதே என்கிற ஆதங்கம் அவளுக்கு.
“நான் பத்து ரூவா சம்பாரிச்சி கொண்டாரேன், நீ பத்து ரூவா கொண்டா….ரெண்டையும் சேத்துப்போட்டு குடும்பத்த நடத்துவோங்குற பகுமானம் வேணும். அது இல்லாட்டி நீ என்னா ஆம்புள…..சோத்துல ஒரு கை கொறஞ்சாலும் கேட்டு வாங்கித் திங்கிறியில்ல. …அந்தளவுக்கு சுதாரிப்பா இருக்க ஒனக்கு ரெண்டு காசு சம்பாரிக்க துப்பில்ல….த்தூ………”
அம்மா என்னை நோக்கி வசவு வார்த்தைகளை வீசுவாள். எதிராளியாய் எண்ணிக்கொண்டு, கேட்பவர்களை ஏசுவது நம்மூர் வழக்கம்தானே…….
ஆனால் தொந்தரைக்கு இம்மியளவும் குற்றவுணர்ச்சி இருந்ததில்லை. ஏதோ பாத்தியதைப் பட்டதைப்போல உண்ணவும், உறங்கவும் அது எங்களை அண்டிக்கிடந்தது.
“சீரகசம்பா சோத்த ஒருநாளாவது தின்னுப் பாத்துடனுண்ணி. அதென்னவோ இணுக்கு, இணுக்கு அரிசியா இருக்குமாம். நெய் வாசமடிக்கிமாம். சோறு வேவுறப்பவே அள்ளித் திங்கலாம்போல ஆசையத் தூண்டுமாம். அதுல பருப்புக்கொளம்ப ஊத்தித் தின்னா மரத்துக் கெடக்குற நாக்குக்கும் தீப்புடிச்சமாரி ருசி பத்திக்குமாம். பேசிக்கிட்டானுவோ..…” என்று தொந்தரை ஒருநாள் சொன்னபோது அதன் கண்கள் ஒளிர்ந்தன.
சாப்பாடு, தூக்கம், ஊர்வம்பு என்று தொந்தரையின் பொழுதுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. தன் இடுப்பு வேட்டி துவைத்துக்கொள்ளும். அதைத்தவிர ஒருவேலை செய்வது கிடையாது.
குளத்து நீரில் முங்கி எழுந்துவிட்டு வந்து காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு தொந்தரை வெளியே கிளம்பிவிடும்.
குளத்தங்கரையில் உள்ள அரசமரப் பிள்ளையார் திட்டில் அமர்ந்து, வந்து போகும் பேருந்துகளை வேடிக்கைப் பார்க்கவும், நடந்து செல்பவர்களை இழுத்து வைத்து கதை பேசவும் அதற்கு ரொம்பப் பிடிக்கும்.
பேச்சு சலிப்பை உண்டாக்கினால் அப்படியே கால் நீட்டி படுத்துக்கொள்ளும். காற்று சற்று வேகமாக வீசும்பொழுது அதற்கு கண்கள் செருகிக்கொள்ளும்.
கடைவாயோரம் எச்சில் ஒழுக, சிவராத்திரியன்று கண் விழித்தவன் மறுநாள் தூங்குவதுபோல அசந்து தூங்கும். சில நேரம் இப்படியும், சில நேரம் வீடுவீடாக சென்று கதை பேசியும் அதற்கு பொழுதுகள் கழிந்தன.
திண்ணைகளில் அமர்ந்து நாட்டு நடப்புகளை அலசியும், பார்க்காத சினிமாக்களை விமர்சனம் செய்தும் காலம் கடத்தும் தொந்தரைக்கு மணி ஒன்றடித்தால் வயிற்றுக்குள் உய்ங் என்று சத்தம் வந்துவிடும். உடனே சட்டென எழுந்துவிடும்.
“கெளம்புறேன் நேரமாச்சி….”
“பாதியில வுட்டுட்டு போறியே.…” என்றால்,
“பொறவு பாக்கலாம்…” என்பதுதான் அதனுடைய பதிலாக இருக்கும்.
“கைவேலைய வுட்டுட்டு வந்தாப்ல தெண்டசோறு கெளம்புறதப்பாரு…” என்று சனம் பின்னாலிருந்து கிண்டலடிக்கும்.
பொழுதுபோகாமல் திண்ணையைத் தேய்க்கும் பெருசுகளுக்கு தொந்தரை நல்ல கம்பெனி. பிடிக்காவிட்டாலும் அதன் பேச்சு நேரத்தை கடத்த உதவியதில் அவர்கள் தொந்தரையை எதிர்பார்த்தனர். தொந்தரைக்கும் நியாயம் பேச எதிரே ஒரு குட்டிச்சுவராவது இருந்தாகவேண்டும்.
“நேரத்துக்கு சாப்புடலீன்னா வயித்துக்குள்ள உயிங்ன்னு ஒரு சத்தம் கேக்குது பாப்பா. ஏன் அப்புடி கேக்குது….?” என்று அது ஒருமுறை கேட்டபோது எனக்குச் சிரிப்பு வந்தது.
அதை மறைத்துக்கொண்டு நான் தலையாட்ட, அதன் பார்வை அம்மா மேல் விழுந்தது. அம்மா அதை கவனியாததுபோல ஆட்டுக்கொட்டகையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.
ஆட்டாம் புழுக்கைகளை கூட்டித் தள்ளுவது போல தொந்தரையை வெளியே தள்ளமுடியவில்லையே என்கிற ஆதங்கம் அவளுடைய கைவீச்சில் தெரிந்தது.
“அம்மா, அப்பா ஒருத்தரு பின்னாடி ஒருத்தரா தவறிட்டாங்க. அவன் எங்கூட்டுலதான் வளந்தான். எங்கப்பாருக்கு தம்பி புள்ளன்னா உசிரு. ரெண்டுங்கெட்டான் பயல நீதான்டா பாத்துக்கணும்னு சொல்லிக்கிட்டேயிருப்பாரு. சொன்னமாரியே எங்கிட்ட தள்ளியும் வுட்டுட்டாரு. தம்பி புள்ளைய தாம்புள்ளையா அவரு நெனச்சதுனாலதான் எனக்கும் அவன்மேல பாசம் ஏற்பட்டுப்போச்சி. ….நீ அவன தொந்தரவா நெனக்கிறது மனசுக்கு கஸ்டமா இருக்கு” என்று அப்பா ஒருநாள் சொன்னபோது அம்மாவின் முகம் உக்கிரமானது.
“அந்தா கெடக்குற வெளக்கமாத்தால குப்பைய கூட்டி தள்ளிபுடலாம். கொல்லையில கெடக்குற வெறவுக்கட்டைய வச்சி ரெண்டுநா சோறாக்கிடலாம். அரிஞ்சி போட்ட புளியங்கொட்ட, அதோ கெடக்கே, அதுல தாயமாவது ஆடலாம். ஆனா ஒங்க தொந்தரைய வச்சிக்கிட்டு என்னா செய்யமுடியும் சொல்லுங்க…..?”
அம்மா இடுப்பில் கைவைத்து நின்று கேட்க, அப்பா அசந்துபோனார்.
“நீ செத்த படுண்ணே, நான் போயி புல்லறுத்துட்டு வாரேன்னு சொல்லட்டும். அல்லது நவருண்ணி, நான் ஆட்டுக்கு தண்ணி காட்டுறேன்னு முன்னாடி வந்து நிக்கட்டும். நான் அப்புடி சொல்றத நிறுத்திக்குறேன்” என்ற அம்மாவை, அப்பா பரிதாபமாகப் பார்த்தார்.
அவன் செய்வான் என்று சொல்ல அவருக்கு நா எழவில்லை.
அன்று மழை நசநசத்துக்கொண்டேயிருந்தது. தொந்தரை திண்ணையிலமர்ந்து மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டிகள் குளிரில் நடுங்கியபடி அதோடு உரசிக்கொண்டு கிடந்தன.
மழை நாட்களில் தொந்தரை ஊர்வலம் போகமுடியாமல் சுணங்கிக்கிடக்கும். கூடவே,
“பாவிப்பய மானம் வெளுக்குதா பாரு.…” என்று முணுமுணுப்பு எழும்.
பாதிநேரம் தூக்கத்திலும், பாதிநேரம் திண்ணையில் ஆட்டுக்குட்டிகளோடு உராய்ந்தும் அதற்கு பொழுதுபோகும்.
“வூட்டுல ஒரு ஆம்பள இருக்குன்னுதான் பேரு…சல்லிக்காசுக்கு ஒபயோகமில்ல. நாள் முச்சூடும் மாடாட்டம் ஒழக்கிணுமுன்னு எந்தலையிலயும், காலாட்டி ஆம்பளையா கஸ்டமில்லாம வாழணுமுன்னு அது தலையிலயும் எளுதியிருக்குறப்ப நான் பொலம்பிதான் என்னாவப்போவுது.”
ஈரவிறகின் புகைச்சலுக்கு நடுவில் அம்மாவின் முணுமுணுப்பு எழுந்து அடங்கிற்று. மணி ஒன்றடித்தால் தொந்தரைக்கு வயிற்றில் மணியடித்துவிடுமே என்கிற பரபரப்பு வேறு. தன் பொழுதுகளை கழிக்க தொந்தரை அதிகம் பிரயாசைப்படவில்லை.
வெறுமனே சோற்றை நம்பி வாழும் மனிதனுக்கு பெரிதாக ஆசைகளோ, லட்சியங்களோ உண்டாவதில்லை என்ற எண்ணத்தை தொந்தரை வாஸ்தவமாக்கியிருந்தது.
மூன்றுவேளை சோற்றுக்குக்கப்பாலிருந்த உலகம் அதற்கு வசப்படவில்லை. வசப்படுத்திக்கொள்வதற்கான எந்த முயற்சியும் அது எடுக்கவுமில்லை. அது பற்றிய புரிதலோ அல்லது நாட்டமில்லாததோ காரணமாயிருக்கலாம்.
பேச்சு வெறும் பொழுதை கடத்த உதவிற்று. பேச்சற்ற தருணங்களில் உறக்கம் அந்தப் பணியை செய்தது. முதுகுக்குப் பின்னால் புலம்பும் அம்மாவின் பாடுகளை தொந்தரை ஒருநாளும் எண்ணிப்பார்த்ததேயில்லை.
மழை அடித்து பெய்தது. இரண்டுநாட்கள் மழை நீடிக்கும் என்று வானொலியில் வானிலை அறிக்கை வாசித்தார்கள். மின்சாரம் தடைபட்டு ஊரே இருளுக்குள் மூழ்கிக்கிடந்தது.
நான் தையல் இயந்திரத்துக்கு உறைபோட்டுவிட்டு தேமேயென்று படுத்துக் கிடந்தேன். சும்மா கிடப்பது பலதையும் யோசிக்கவைத்தது. அம்மா இறுக்கமான முகத்தோடு குந்திக்கிடந்தாள்.
வேலையற்ற பொழுதுகளில் அவள் மனசு தானியங்கி இயந்திரம் போல வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அதை அவளால் அடக்க முடிந்ததேயில்லை.
எதிர்காலம் பற்றிய பயமோ, என் திருமணம் குறித்த கவலையோ, ஏதோ ஒன்று அவளை ஆக்கிரமித்துவிடும். அவள் அந்தக் கவலையில் மூழ்கிப்போய்விடுவாள். அதிலிருந்து மீள அவளால் இயலாது.
தொந்தரை திண்ணைக்கும், உள்ளுக்குமாக இருந்தது. மழைநாட்களில் அதன்பாடு திண்டாட்டம்தான். வெளியே போகவர இருப்பதை மழை வீட்டுக்குள் முடக்கிப்போட்டு வேடிக்கைப் பார்த்தது.
“வெளிய, தெருவு போவமுடியாம மொடக்கிப்போட்டு உசிரவாங்குது. செத்த வெக்காளிச்சா அப்புடியே போயிட்டு வரலாமுன்னு பாக்குறேன். வுடாது போலிருக்கு..”
தொந்தரை கண்கள் இடுக்கி வானத்தைப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தது. விட்டால் குடலையை தூக்கி தலையில் போட்டுக்கொண்டாவது போய்விடும் போலிருந்தது.
வழுக்கிவிடும் சேறு அதன் மனதில் பயத்தை விளைவித்திருக்கலாம். சேற்றில் வழுக்கி விழுந்த முனுசாமி இடுப்புக்கு கீழே உணர்வின்றி படுத்த படுக்கையாகிப்போனது ஞாபகத்துக்கு வந்ததோ என்னவோ, ஆட்டுக்குட்டியை நகர்த்திவிட்டு பேசாமல் அமர்ந்துகொண்டது.
“தொந்தர குட்டிப்போட்ட பூனையாட்டம் தவிக்கிறதப்பாரு. அந்த புள்ளையாருக்கும் இதப் பாக்காத, இதோட கொறட்ட சத்தம் கேக்காத வெறிச்சின்னு இருக்கும்”என்றாள் அம்மா.
“ஏண்ணி, ஏதும் சொன்னீங்களா….?” உள்ளே வந்த தொந்தரை கேட்டது.
“அட, நான் என்னாத்த சொல்லப்போறேன்…..ஏதோ எம்பாட்டுக்கு ஒளறிக்கிட்டிருக்கேன்” என்றவள்,
“குடிய கெடுக்குறதுக்குன்னே வந்திருக்கும்போல….”என்றாள் அழுத்தமாக, வெளியே பெய்து கொண்டிருக்கும் மழையைப் பார்த்து.
தொந்தரை சிறிதுநேரம் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு போய் திண்ணையிலமர்ந்து கொண்டது.
சொல்லிவைத்தாற்போல் அடுத்த மூன்றாவது நாள் வானம் பளிச்சென்றாகியது. சூரியன் மெல்ல எட்டிப்பார்க்க, பூமி உலரத்தொடங்கியது. அன்று காலை வெளியே சென்ற தொந்தரை வீடு திரும்பவேயில்லை.
“தொந்தரய எங்கயாச்சும் பாத்தீங்களா….?” என்று அம்மா ஊர்முழுக்க விசாரித்துவிட்டாள். ஒருவருக்கும் தெரியவில்லை.
“தொலஞ்சிது சனியன்னு வுட்டுத்தள்ளேன். எதுக்கு இப்புடி தேடிக்கிட்டு அலையிற….?” என்றனர் சிலர்.
“சட்டி சோறு மிச்சம் ” என்றாள் கனகு.
“போனவன் சுருக்கா திரும்பி வந்துரக்கூடாது. ராமரு வனவாசம் போனமாரி போயிட்டானே” என்றனர் திண்ணைப் பெருசுகள்.
நாட்கள் ஓடியதே தவிர தொந்தரை வரவேயில்லை.
“ஒடம்பு வணங்கி வேல செஞ்சி பளக்கமேயில்ல. சும்மா கெடந்தே சொகம் கண்டது. இப்ப எங்க போயி என்னா பாடுபடுதோ” என்று புலம்பிய அம்மா திடீரென்று ஒருநாள், “அது ஏன்டி அப்புடி போச்சி…?” என்றாள்.
“காரணம் ஒனக்குத் தெரியாதா….?” என்று நான் கேட்கவும் அவள் தலை தாழ்ந்தது.
அம்மா தினந்தோறும் சோறு வடிக்கும்போது அரைப்படி அரிசி சேர்த்துப்போட்டு வடித்தாள்.
“திடீர்ன்னு வந்து நின்னுச்சின்னா சோத்துக்கு எங்க போறது. கொஞ்சம் பொறுத்தா மறு ஒல வச்சிரலாம். அதுக்கு பொறும இருக்கணுமில்ல.…” என்று ஏதோ நியாயம் சொன்னாள்.
பத்து நாட்கள் சென்றிருக்கும். பன்னிரண்டு மணி வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்த அந்த மதியப் பொழுதில் வெளிப்படல் திறக்கும் சத்தம் கேட்டு தையல் இயந்திரத்தை நிறுத்தி விட்டு நான் மெல்ல எட்டிப்பார்த்தேன்.
தொந்தரைப் படலை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தது. சோறு வடித்துக்கொண்டிருந்த அம்மா அதை அப்படியே போட்டுவிட்டு எழுந்தோடி வந்து பார்த்தாள்.
தொந்தரை எங்களிருவரையும் ஒரு வினாடி மாறி மாறிப் பார்த்தது. பத்து நாட்களுக்குள் ஒரு சுற்று குறைந்திருந்த தொந்தரைக்கு அந்த உருவம் பொருந்தவேயில்லை. அது உள்ளே சென்று தன்னுடைய பெரிய தட்டை எடுத்து வைத்து உட்கார்ந்து கொண்டது
“பசிக்குதுண்ணி…சோறு போடுங்க……” குரல் கொடுத்தது.
“பழைய குருடி கதவத் தொறடி” அம்மா முணுமுணுத்துவிட்டுப் போனாள்.