தேன்மிட்டாய்

கே. பாலசுப்பிரமணி

‘வீடுவரை உறவு வீதி வரை மனைவி’ என்ற அன்பு மைக் செட் குழாய்ல பாட்டு சத்தம் கேட்டு விடியகாலையிலேயே முழிச்சுட்டேன். 

வழக்கமா எங்க அப்பாதான் என்னைய எழுப்பிவிடுவாரு.

“டேய் இன்னும் என்ன தூக்கம். எழுந்திட்றா” ணு முதுகில் ஒரு அடிவிழும்.

“நானெலாம் உன் வயசுல மளிகைக்கடைல பொட்டலம் போட கத்துக்கிட்டேன். உங்களையெல்லாம் அந்தமாதிரி வேலை செய்யுன்னா சொல்றோம். காலங்காத்தால சுறுசுறுப்பா எந்திருச்சு பழகுடா” என்றபடியே அடிப்பார். 

இன்றைக்கு அன்பு மைக் செட் எழுப்பி விட்டுவிட்டது. யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்று நினைத்தேன்.

அப்பதான் இந்தப் பாட்டை அன்பு மைக்செட்டில் போடுவார்கள்.

என்கூட அஞ்சாப்பு வரைக்கும் அன்பு படிச்சான். அவன் பேருலதான் அவங்க அப்பா மைக்செட்  வச்சிருக்கார். 

ஆனா, அவன் ஆறாவது படிக்க பஞ்சம்பட்டிக்கு வரல. அவன் அப்பா கூடவே மைக் செட் போட போறான்.

வக்கம்பட்டில ஆர்சி  ஸ்கூல்ல அஞ்சாப்பு படிக்கும்போது அவன், நான், விக்டர், சிவராமன், பிரின்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் விளையாடுவோம்.

பள்ளிக்கூடத்துக்குபின்னாடி மண்ணை குழச்சு களிமண்ணுலயே மைக்செட், ரிக்கார்ட் பிளேயர் எல்லாம் செஞ்சு விளையாடுவோம்.

வீடு வரை உறவு முடிஞ்ச உடனே ஆறு மனமே ஆறுன்னு ஒரு பாட்டுப் போட்டாங்க.

இன்னைக்குப் புல்லா சோகப்பாட்டுத்தான் போடுவாங்க. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு தப்புக்காரங்க வந்து தப்பு கொட்டுவாங்க. அந்த சவுண்ட் கேட்கறதுக்கு நல்லா இருக்கும்.

இன்னைக்கு ஸ்கூல் இருக்கு. அதை பார்க்கப் போக முடியாதுன்னு நெனைச்சேன்.

அதுக்குள்ளே எங்க அப்பாவும் எந்திரிச்சிட்டாரு. நானும் அப்பாவும் ஆத்துக்கு குளிக்கப்போனோம்.

தெற்கு தெரு வழியா நடந்துபோனோம்.

எங்க வீட்டை தாண்டுடன உடனே ஒரு கிணறு வரும். அது விக்டர் வீட்டுக்குப் பின்னாடி இருக்கு. அந்த கிணத்துல தண்ணியே இல்ல. கிணத்துல எட்டிப்பார்த்தா பழை துணி, உடைஞ்சுபோன வாளி எல்லாம் கெடக்குது. ஒரு நாள் பந்து விளையாடும்போது அதுக்குள்ள விழுந்துடுச்சு. .

அன்னமயில் சித்தி வீட்டுல அவங்க அம்மா பணியாரம் சுட்டுக்கிட்டு இருந்தாங்க.

நாங்க ஆத்துக்குப் போயிட்டு வர்றதுக்குள்ளே விக்க ஆரம்பிச்சிடுவாங்க.

வீட்ல காலேல அம்மா ஏதும் செய்யாட்டி அங்கதான் வாங்கிச்சாப்பிடுவேன்.

வீடுக எல்லாம் முடிஞ்சுடுச்சு, ஆத்துக்குப் போற ஒத்தையடிப்பாதைல அப்பா முன்னாடி போனாரு. நான் பின்னாடியே போனேன்.

காலங்காத்தால எங்க அப்பா செருப்பு சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு

சரக், சரக்குன்னு நடந்து போனாரு.

அப்ப எங்களுக்கு பின்னாடி பால்சாமி பெரியப்பா வந்துக்கிட்டு இருந்தாரு. அவங்க வயக்காட்டுக்குப்போறாரு போல.

“என்ன பழனிய்யப்பா. நேத்திக்கு பருத்தி என்ன வெல போச்சு”ன்னு  விசாரிச்சாரு. 

எங்க அப்பா அடிக்கடி திண்டுக்கல்ல இருக்க கமிஷன் மண்டிக்கெல்லாம் போயிட்டு வருவாரு. அதனால அவருக்கு விலையெல்லாம் தெரியும்.

“ஒரு குவிண்டால் நூறு ரூபா போகுதுன்னாரு” எங்க அப்பா

“இப்படியே இருக்குமா கொறஞ்சுடுமான்னு” பால்சாமி பெரியப்பா கேட்டாரு.

“விலை கூடத்தான் செய்யும், குறையாதுன்னு” எங்கப்பா சொன்னாரு.

அதுக்குள்ள ஆத்துக்கு வந்துட்டோம். குடகனாறுன்னு பேரு. அரைபரிச்சை லீவுலதான் ஆத்து நெறைய தண்ணி போவும். இப்போ குறைஞ்சு போச்சு

ஆத்துல கொஞ்சமாத் தண்ணி ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் டவுசரை கழட்டி கரைல போட்டுட்டு, ஆத்துக்குள்ள எறங்குனேன். தண்ணி ஜில்லுன்னு இருந்துச்சு.  என்னோட இடுப்பு வரைக்குத்தான் தண்ணி போச்சு. எங்க அப்பாவுக்கு முழங்காலு அளவுதான் இருந்துச்சு.

எங்க அப்பா துண்டை இடுப்பை சுத்திக் கட்டிக்கிட்டு, வேஷ்டியை கழட்டி கரைல வச்சுட்டு குளிக்க வந்தாரு.

நானு, தண்ணில முங்கி, முங்கி குளிச்சேன். எங்க அப்பா அப்படியே தண்ணீல காலை நீட்டிப் படுத்துட்டாரு. அப்பத்தான் அவரால குளிக்க முடியும்.

என்னையப் பார்த்து, “டேய் நல்லா சோப்பு தேச்சுக்குளி”ன்னாரு.

நான் நல்லா தண்ணில முங்கி எந்திருச்சுட்டு, கரைல வச்சிருந்த லைப்பாய் சோப்ப எடுத்து போட்டு நல்லாதேச்சேன்.

அப்புறம் திரும்புவும் வந்து குளிச்சேன்.

நான் குளிச்சு முடிச்சு, துண்டை எடுத்து உடம்பைத் துவட்டிக்கிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு எங்க அப்பாவும் குளிச்சுமுடிச்சுட்டாரு. கரையேறுனோம்.

கரையில மா மரத்துக்குக் கீழே பிள்ளையார் சிலை இருந்துச்சு. அதைப் பார்த்து எங்க அப்பா கும்பிட்டாரு.

அப்புறம் திரும்பி வந்த வழியே நடந்தோம்.

கொஞ்சம், கொஞ்சமா வெளிச்சம் வந்துச்சு.

“பார்த்து வாடா பாதையில போயி யாரோ பேண்டு வச்சிருக்காய்ங்க” என்றார் அப்பா.

“சரிப்பா” என்று கவனமாக பாதையை பார்த்தபடி கவனமாக நடந்து வந்தேன்.

 போனதடவை வாங்கிக் கொடுத்த செருப்பை பள்ளிகூடத்துல தொலைச்சுட்டேன். அதுல இருந்து நீ வெறும்காலோட போனாத்தான் புத்தி வரும்னு எனக்கு இன்னும் செருப்பு வாங்கித்தரல. 

எதையும் மிதிக்காம ரொம்ப ஜாக்கிரதையா நடந்தேன். அதுக்கும் வேற திட்டுவாரு.

“வீட்டுக்குப் போன உடனே காலைக்கழுவு” 

“சரிப்பா” 

தெற்கு தெருவிலேயே எங்க வீடு, விக்டர் வீடு, ஜெனிபர் வீடு, ஜெயராம் சித்தப்பா வீடுங்க இருக்கு.

எங்க வீட்டுக்குப் பின்னால் எங்கூட ஐஞ்சாவது வரைக்கும் படிச்ச கருப்பணன் வீடு இருக்கு. அவன் வீட்டுக்குப் பின்னால் இப்ப எங்கூட பஞ்சம்பட்டில படிக்கிற நிர்மலா வீடும் இருக்கு. 

அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டோம். எங்க வீட்டு முன்னாடி தாழ்வராமா ஒரு கூரையை இறக்கி, அம்மா, தங்கச்சி குளிகறதுக்காக வசதி பண்ணியிருந்தோம். 

அங்கதான் அம்மா வாளியில தண்ணி வச்சுருந்தா. தண்ணீரை மொண்டு கால்களை கழுவி விட்டு வீட்டுக்குள் போனேன்.

அப்பா பீரோவுல இருந்து அயர்ன் பண்ண சட்டை, வேஷ்டியை எடுத்துப் போட்டுக்கிட்டு திண்டுக்கல்லுக்கு கிளம்பிப்போனார். இன்னைக்கு திங்ககிழமைங்கிறதால அவருக்கு கமிஷன் கடைக்கு சீக்கிரமே கிளம்பி போனாரு. சாப்பிடக் கூட இல்ல.

நான் நேத்து அம்மா துவைச்சுபோட்டிருந்த யூனிபார்மை எடுத்து போட்டுக்கிட்டேன்.

அப்பா போன பிறகு, நான் ரேடியோவை போட்டு ஸ்லோன்ஸ்டேஷன் வச்சேன். வாடி என் கப்ப கிழங்கே பாட்டு வச்சுக்கேட்டேன். அந்த பாட்டெல்லாம் ஆல்இந்தியா ரேடியோவுல போடமாட்டேங்கிறாங்க.

“அது அசிங்கம்மான பாட்டுன்னு அதை எல்லாம் ரேடியோவுல போடக்கூடாது”ன்னு கவர்மெண்ட் சொல்லி இருக்கிறதா மதலை முத்து சொன்னான்.

அப்பா இருந்தா  திருச்சி வானொலில  ஆறரை மணிக்கு செய்தி கேட்பாரு. ஏழைகால் மணிக்கு திரும்பவும் டெல்லி  செய்தி கேட்பாரு.

அவர்இருக்கும்போது நியூஸ் மட்டும்தான் கேட்க முடியும். அதனால அவரு எப்படா வெளிய கிளம்புவாருன்னு பார்த்துக்கிட்டே இருந்து ரேடியோவை போடுவேன்.

ஞாயித்துக்கிழமை அப்பா வீட்டுலதான் இருப்பாரு. நான் ரேடியவோ போட்டுட்டு, சத்தம் கம்மியா வச்சுட்டு, தண்ணி பிடிக்கிற பிளாஸ்டிக் குழாயைரேடியோ ஸ்பீக்கருக்கு பக்கத்துல வச்சுட்டு, கீழே படுத்துக்கிட்டு தூங்குற மாதிரி இன்னொரு முனையை என் காதுல வச்சுக்கிட்டு பாட்டு கேப்பேன்.

“டேய் என்ன யோசனை சாப்புட்டுட்டு ஸ்கூலுக்குப் போடா” என்று அம்மா சத்தம்போட்டாள்.

பழைய சோறு போட்டு வைத்திருந்தாள். அதை சாப்பிட்டு விட்டு, தூக்குப் போணியில் பழைய சோறு கொடுத்தாள். அதையும்எடுத்துக் கொண்டு, பைக்கட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

அப்பத்தான் அமிர்த்தம்மா வந்துச்சு. அது அம்மாவுக்கு துணையா எங்க வீட்டுலேயே இருக்கும். அம்மாவுக்கு கூடமாட வேலை பார்க்கும்.  நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அதுதான் என்னை தூக்கி வளத்துச்சு.

என்மேல ரொம்ப பாசமா இருக்கும். அதுதான் என்னை பஞ்சம்பட்டிக்கு பாஸ்கு திருவிழாவுக்கு கூட்டிட்டுப் போகும். யேசுவை சிலுவையில் அறையிறத பாத்து அழுதுக்கிட்டு இருக்கும்.

அமிர்தம்மாகிட்ட, “யாரு இன்னைக்கு செத்துப்போயிட்டாங்க”ண்ணு கேட்டேன்.

“நடுத்தெருவுல சந்தியாகுன்னு ஒருத்தர் இருந்தாருல்ல அவருதான் செத்துப்போயிட்டாரு. ரொம்ப நாளாவே உடம்பு சரியில்லாம இருந்தாரு  காள” என்றாள் அமிர்தம்மா.

அமிர்தம்மா எப்போதுமே என்னை காள என்று தான் கூப்பிடும். என்னை மட்டுமல்ல. என்னோட  பிரண்ட்ஸ்களையும் அப்படித்தான்  இங்க வா காள, போ காளன்னுதான் கூப்புடும். .

நான் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பினேன். அப்போதுதான் மைக்செட்டில்  டமுக்கு, டமுக்கு, டமுக்கு என்று தப்பு அடிக்குற சத்தம் கேட்டுச்சு.

மெயின்ரோட்டில பிள்ளையார் கோவில் முன்னாடி கொஞ்ச நேரம் நின்னேன். செம்பட்டி போகும் ரோட்ல பார்த்தேன். தூரத்தில மதலை முத்து வந்துக்கிட்டு இருந்தான். 

அவன் வந்ததும். அவன் பைக்கட்ல இருந்து கைநெறைய தக்காளி பழங்கள  எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கி கடிச்சு தின்னேன்.

மதலை முத்து வீட்டில் எப்பவுமே தக்காளிப்பழங்கதான் இருக்கும். அவங்க அப்பா திண்டுக்கல் மார்க்கெட்ல காய்கறி கடை வச்சுருக்காரு. தக்காளி பழங்கள வாங்கிட்டு வந்து அதை பிழிஞ்சு விதையை எடுத்து அதை காயவச்சு, விதையை அவங்க அப்பா விப்பாரு. அதனால மதலைமுத்து வீட்டுல எப்பவுமே தக்காளிப்பழங்க இருக்கும். அவங்க வீட்டுக்குப் போனாவே தக்காளிப்பழம் வாசனை அடிக்கும். அவனும் நானும், மெயின்ரோட்டுல நடந்து போனோம். பஸ்ஸ்டாப்புல வெங்கட்டு ஒயிட் அண்ட் ஒயிட் யூனிபார்ம் போட்டுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தான். வெள்ளை ஷூவும் போட்டிருந்தான். அவன் பக்கத்துல விக்டரும் நின்னுக்கிட்டு இருந்தான். விக்டர் காப்பி கலர் டவுசர் போட்டுஇருந்தான். அதே கலர்ல கோடுபோட்ட சட்டபோட்டிருந்தான். கருப்பு ஷூ போட்டுருந்தான்.

வெங்கட்டு போட்டுருந்த வெள்ளை கலர் ஷூதான் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. அது மாதிரி நானும் ஷூ போடணும்னு ரொம்பநாளா ஆச.

வெங்கட்டு வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவங்க வீட்டுக்கு உள்ளே நுழையும்போது ஒரு திண்ணை இருக்கும். அந்த திண்ணையில ஓரத்துல வெங்கட்டு ஷூ இருக்கும். அவங்க வீட்டுக்கு போகும்போதும், வரும்போது அந்த ஷூவை  பார்த்துக்கிட்டே வருவேன். அந்த ஷூ மேல அவ்வளவு பிரியம் எனக்கு.

வெங்கட்டு அம்மா என் மேல பாசமா  இருப்பாங்க. நான் அவங்கள பெரியம்மான்னுதான் கூப்புடுவேன். அவங்க  விகடன் புக்கெல்லாம் பைண்டிங் பண்ணி படிச்சிகிட்டு இருப்பாங்க.

வெங்கட்டு அப்பாவை ப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கும். ஆள்  உயரமா இருப்பாரு. மீசை ரொம்ப வளத்தியா இருக்கும். அவரைப் பார்த்தாவே பயமா இருக்கும். வெங்கட் ஏதாவது தப்பு செஞ்சா அடிப்பார்னு அவன் எங்கிட்ட சொல்லி இருக்கான். அதனால அவரைப் பார்த்தாலே பயமா இருக்கும்.

வெங்கட் அப்பா ஒரு மளிகைக்கடை வச்சுருந்தாரு. அங்கதான் எப்பவும் இருப்பாரு. வெங்கட்டுக்கு ஒரு அண்ணன், அக்கா, ஒரு தம்பி இருக்காங்க.

வெங்கட்டோட ஷூ பத்தி ஞாபகம் வந்த உடனே எனக்கு ஆடி மாச திருவிழா ஞாபகத்துக்கு வந்துச்சு. ஆடி மாசத்திருவிழா ஆரோக்கியசாமிங்கிற ஊர் பெரியவர் தலைமையிலதான் நடக்கும்.

ஆடிமாசத்திருவிழா தொடங்கறதுக்கு முன்னாடி இருந்து சப்பரத்தை அலங்காரம் பண்ணுவாங்க. 

கலர் காகிதங்கள்லாம் வாங்கிட்டு வந்து சர்ச்சுல வச்சு ஒட்டிக்கிட்டு இருப்பாங்க. அப்பவெல்லாம் சாயங்கால நேரத்துல நான் சர்ச்சுலதான் இருப்பேன்.

யேசய்யாங்கிறவருதான் கலர், கலர் காகிதத்தை மடிச்சு பூ மாதிரி செய்வாரு. அந்த காகித பூவெல்லாம் சரமாக்குவாரு.

சரம், சரமா தயாரிச்சு அதை சப்பரம் முன்னாடி தொங்க விடுவாங்க.அழகா இருக்கும்.

ஆடி மாசத் திருவிழாநடக்கும்போது ஆரோக்கியசாமி  வீட்டுக்கு அவங்க சொந்தக்காரங்க மெட்ராஸ்ல இருந்து கார்ல  வருவாங்க. அவங்க ஷூவெல்லாம் போட்டுட்டு வருவாங்க. அதெல்லாம் பார்க்க ஆசை, ஆசையா இருக்கும்.

“என்னடா யோசனை பண்ணிக்கிட்டே வர்ற” என்றான் மதலைமுத்து.

“ஒண்ணுமில்லைடா” என்றேன்.

ரோட்டுக்கு அந்தப் புறம் லைன்வீடுகள். நடுவில் இருந்த வீட்டில் ஜோசியர் இருக்கிறாரு. எங்க ஊர் ஜோசியர்னா அவ்வளவு பிரபலம். அவரைப் பார்க்க அந்த நேரத்திலேயே கார்ல வந்தவங்க காத்திருந்தாங்க.

எங்க அப்பாவும் எப்பவாவது கட்டம் கட்டமா போட்ட நோட்டை எடுத்துக்கிட்டுப் போய் அவருக்கிட்ட ஏதாவது கேட்பாரு.  

எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கல்யாணம் ஆன புதுசுல இந்த லைன்வீட்லதான் குடியிருந்தாங்கன்னு அம்மா சொல்லியிருக்கு.

லைன்வீட்டுல கடைசில ஒரு ஹோட்டல் இருந்துச்சு. அந்த ஹோட்டல் வச்சிருந்தவரு பேரும், எங்க அப்பா பேரும் ஒரே பேரு. அவரு எங்க வீட்டுக்கு வந்து ஒருமுறை பிரியாணி செஞ்சு கொடுத்தாரு.

வீட்டுக்கு வெளியே அடுப்பு விறகு அடுப்பு வச்சு, பெரிய பாத்திரத்துல கறி, அரிசியைப் போட்டு வேக வச்சு வச்சாரு. அன்னைக்குத்தான் மொத,மொதல்ல பிரியாணி சாப்பிட்டேன். ரொம்ப  ருசியா இருந்துச்சு.

பஸ்டாப்பை தாண்டி நடந்து போயிட்டு இருந்தோம். மாவு அரைக்கிற மிஷினைத் தாண்டி கொஞ்ச தூரத்துல கல்லறை வந்துச்சு. கல்லறைல ரெண்டு பேரு குழி தோண்டிக்கிட்டு இருந்தாங்க.

“இன்னைக்கு மத்தியாஸ்னு ஒருத்தரு செத்துப்போனாருல்ல அதுக்குத்தான் தோண்டுறாங்க போல” ன்னு மதலை முத்துவிடம் சொன்னேன்.

அவன் “ஆமாண்டா”ன்னான்.

தீபாவளிக்கு முன்னாடி கல்லறைத்திருவிழா நடக்கும். . அப்பெல்லாம் ஒவ்வொரு கல்லறையும் சுத்தப்படுத்துவாங்க. பெரிய கல்லறைகள்ல வெள்ளையெல்லாம் அடிப்பாங்க. செவ்வந்தி பூ போட்டு அலங்காரம்  பண்ணுவாங்க. மெழுகுவத்தி ஏத்தி வைப்பாங்க.

கல்லறையைத் தாண்டி கள்ளுக்கடை பஸ்டாப்புக்கு வந்துட்டோம். பஸ்டாப் பக்கத்துல மாவுமில் இருக்கு. சட்டிங்கிறவர்தான் அதை கவனிச்சுக்கிறார். ஏன் அவருக்கு அப்படி ஒரு பேர் வந்துச்சுன்னு தெரியல.  அவர் குட்டையாகத்தான் இருப்பார்.

எப்பவும் டிராயர் போட்டிருப்பார். சட்டை போடமாட்டார். ரைஸ் மில்லிலேயே இருக்கறதால அவர் உடம்பு முழுதும் மாவு, மிளகாய்தூள் ஒட்டி இருக்கும்.

அவரு மகன் அந்தோணி எங்க கூடத்தான் படிக்கிறான்.

நாங்க வர்றதைப் பார்த்து, “வாங்கடா உங்க கூட்டாளி இப்பத்தான் ரெடியாக்கிட்டு இருக்கான்”ன்னு அந்தோணியோட அப்பா சொன்னார். 

அந்தோணியின் வீட்டுக்குள் போய் அவனை கூப்பிட்டேன்.

 சட்டையை மாட்டிகிட்டே, பைக்கட்டை ஒரு கையில எடுத்துக்கிட்டு வெளியே வந்தான்.

நாங்க மூணு பேரும் பஞ்சம்பட்டியை நோக்கி நடந்தோம். பஞ்சம்பட்டி ரோட்டுக்கு அந்தபுறம் இருந்தது.

ரோட்டுக்கு இந்த பக்கம், ஊரைச் சுற்றி தென்னை மரம், வாழைமரம் எல்லாம் இருக்கும். ஆனா, ரோட்டுக்கு அந்த பக்கம் புளிய மரங்கதான் அதிகமாக இருக்கும்.

பஞ்சம்பட்டிக்குப் போற ஒற்றையடிப்பாதையில ரெண்டு பக்கமும் மொச்சை கொடிக படர்ந்திருஞ்சு. வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து போனோம். 

ஒற்றையடிப் பாதை ஓரத்தில் கரட்டான் ஒண்ணு போச்சு, மதலைமுத்து அதை பார்த்து கல்லைவிட்டு எறிஞ்சான்.

மதலைமுத்து லீவு நாளில் முயல்வேட்டைக்கு எல்லாம் போவான்.

வேட்டைக்கு போய்விட்டு வந்து அதுபத்தி ஸ்கூல்ல வந்து நிறையச் சொல்வான். முயல் கறி சாப்பிட்டது பத்தியெல்லாம் சொல்வான். 

எனக்கும் அவன் கூட போக ஆசை. ஆனால் என் அப்பா தோலை உரித்துவிடுவார்ன்னு பயமா இருந்துச்சு.

ஓடை ஒன்னு குறுக்கே வந்துச்சு. ஆனா, அதுல தண்ணில ஓடல. ஓடையில் இறங்கி ஏறுனோம். கொஞ்ச தூரம் நடந்ததும் புளியந்தோப்பு வந்துச்சு.

புளியந்தோப்பில் வெங்காயம் பட்டறை போட்டு வச்சுருந்தாங்க.

மதியானம் இங்க வந்துதான் சாப்பிடுவோம். பட்டறையில் இருந்து வெங்காயம் கொஞ்சம் நோண்டி எடுத்து, பழைய சாதம் சாப்பிடுவோம். வெங்காயத்துக்கும் பழைய சாத த்துக்கும் ரொம்ப நல்லா இருக்கும்.

நாங்க போன கொஞ்ச நேரத்துல ஸ்கூல்ல பெல் அடிச்சுட்டாங்க. 

முதல் பீரியட் தமிழ்,  தில்லான் அய்யா வந்தார்.

பாடத்தைத்தவிர பல விஷயங்களைப் பத்தி சொல்லுவார்.

“டேய்எல்லோரும் நூலகத்துக்குப் போய் புத்தகம் படிக்கணும்டான்”னு சொன்னார். 

இரண்டாவது பீரியட் கணக்கு, ஆரோக்கியம் வாத்தியார்.

எனக்கு , மதலைமுத்துவுக்கெல்லாம் கணக்கு வராது. 

ராஜாதான் நல்லா கணக்குப் போடுவான். அவங்கிட்டதான் நாங்க வீட்டுப்பாடங்களை போட்டுத்ரச்சொல்லி வாங்குவோம்.

எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற விமலா, எங்கள் பள்ளிக்கூடத்திலேயே ஓவிய டீச்சராக இருந்த லாரன்ஸ் வாத்தியாரோட மகள் செல்வின்னு எங்க கூட பத்து பொம்பளைப் பிள்ளைங்க படிச்சாங்க.

செல்வியோட போட்டோ ஒன்னை ஜேசுராஜ் கொண்டு வந்து எல்லோருக்கும் காட்டினான். எங்கே இருந்தோ தெரியாமல் எடுத்து வந்திருந்தான். அதை நோட்டுப் புத்தகத்தில் வைத்துக் கொண்டு அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.

பிரிட்டோ லீவில் பெரியகுளத்துக்கு அவர்களின் சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போய் வந்தானாம். பெரிய தியேட்டரில் போய் அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்து விட்டு வந்ததா  சொன்னான்.

“எப்படி இருந்துச்சு தெரியுமா. சாஞ்சுக்க வசதியா சீட்டு, மெத்து, மெத்துன்னு இருந்துச்சுடா” என்றான்.

வக்கம்பட்டியில் டெண்ட் கொட்டகை இருந்தப்ப சிவாஜி படங்களுக்கு அப்பா கூட்டிப்போவார். ரொம்ப நாள் கழிச்சு திண்டுக்கல்ல சக்தி தியேட்டரில் விதி படம் பார்க்கப்போனோம். அதுக்கப்புறம் படமே பார்க்கவில்லை.

அன்னைக்கு ஒருநாள் வழக்கம்போல பள்ளிக்கூடம் விட்டு சாயங்காலம். நானும்,மதலைமுத்துவும் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம். குழாயடிக்கு பக்கத்துல இருந்த வெங்கட்டு கடை முன்னாடி கூட்டமா இருந்து. பொம்பளைங்க எல்லாம் அழுதுக்கிட்டு இருந்தாங்க.

என்னன்னு தெரியல.

நானும் அந்த கூட்டத்தை நோக்கிப் போனேன்.

அப்ப என்னோட அம்மா எதிர்ல அழுதுகிட்டே வந்துச்சு.

ஏன் அழுகுதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு.

“என்னம்மா ஆச்சு ஏன் இப்படி அழுவுற. அப்பா அடிச்சிட்டாரா”ன்ணு கேட்டேன். 

“இல்லடா. வெங்கட்டோ அப்பா கிணத்துல தவறி விழுந்து செத்துப் போயிட்டார்டா” என்று சொல்லி விட்டு அழுதாள்.

எனக்கும் அழுகை வந்தது.

பைக்கட்டை வீட்டில் கொண்டு போய் வைத்து விட்டு, வெங்கட் வீட்டுக்கு போனேன். வீடு முழுவதும் கசகசன்னு ஆட்களா இருந்தாங்க. எல்லோரும் அழுதுக்கிட்டு இருந்தாங்க.

வெங்கட் தோட்டத்துல புதுசா கிணறு வெட்றாங்க. அப்ப  மேலே நின்னு பார்த்திட்டு இருந்த வெங்கட்டோட அப்பா வழுக்கி கீழே விழுந்துட்டாராம். கிணத்துக்குள்ள பாறைல தலைமோதி செத்துப்போயிட்டார்னு அமிர்தம்மா என்கிட்ட சொல்லுச்சு.

ரொம்பநேரமா வெங்கட் வீட்ல உட்கார்ந்திருந்தேன்.

அன்புவும், அவனோட அப்பாவும் சைக்கிள்ல, மைக்செட், குழாய் எல்லாம் எடுத்துட்டு வந்தாங்க.

அவங்க அப்பா லைட் போஸ்ட்ல ஏறி குழாயை கட்டுனாரு. அன்பு பக்கத்துல நின்னு அவங்க அப்பா கீழே போட்ட வயரை பிடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தான்.

“வெங்கட்டோட அப்பா கிணத்துல விழுந்து செத்துப்போயிட்டாருடா”ன்னு சொன்னேன்.

“ஆமாண்டா அதனாலதான், வெங்கட்டோட மாமா வந்து கூப்புட்டாரு.அதான் மைக்செட் போட வந்திருக்கோம்”னு சொன்னான். .

கொஞ்ச நேரத்துல வீடு வரை உறவு வீதி வரை மனைவின்னு பாட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க.

இன்னும் வெங்கட் அப்பாவை கொண்டு வரலை. ராத்திரி ரொம்ப நேரம் ஆகிடுச்சு. நான் வெங்கட்டு வீட்டில மூலையில் உட்கார்ந்தபடியேதூங்கிட்டேன். 

மறுநாள் காலையில்தான் வெங்கட் அப்பாவை வெள்ளைத்துணியில் சுத்திக் கொண்டுட்டு வந்தாங்க. முகமே தெரியல. முகத்துல காயம்ங்கிறதால முகத்தை மூடிட்டாங்க.

ஆத்தை ஒட்டி இருந்த கல்லறைக்கு எடுத்துப் போய்புதைஞ்சாங்க. அதுக்கப்புறம் நான் பள்ளிக்கூடம் போகும்போது ரோட்ல வெங்கட் ஸ்கூலுக்கு போறதுக்கு நிக்கவே இல்ல.

“அவங்க அப்பா செத்துப்போயிட்டதால கொஞ்சநாள் ஸ்கூலுக்குப் போகமாட்டான்”னு மதலைமுத்து சொன்னான்.

வெங்கட் அப்பா செத்துப் போய் ஒரு மாசம் ஆச்சு. அப்பவும் அவன் ஸ்கூலுக்குப் போகல

அன்னைக்கு எங்க அம்மா என்கிட்ட காசு கொடுத்து, வெங்கட்டு கடைல எண்ணைய் வாங்கிட்டு வரச்சொன்னா.

வயர் கூடைல பாட்டிலை எடுத்து வச்சுக்கிட்டு வெங்கட் கடைக்குப் போனேன்.

 கடையில வெங்கட்டும், அவன் அம்மாவும் இருந்தாங்க .

வழக்கம்போல பெரியம்மா என்கிட்ட பாசமா பேசினாங்க. “டேய் இந்தா தேன் மிட்டாய்” என்று பாட்டிலில் இருந்து எடுத்துக் கொடுத்தாங்க

“வேணாம் பெரியம்மா”ன்னேன்

“டேய் வாங்கிக்கடா. உங்க அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்றாள்.

“வெங்கட்டு இன்னிமே ஸ்கூலுக்கு போகமாட்டானா பெரியம்மா”ன்னு கேட்டேன்.

நான் கேட்டதுக்கு பெரியம்மா ஒண்ணுமே சொல்லல.

நான் அப்ப வெங்கட்டை பார்த்தேன். அவன் தலையை குனிஞ்சுக்கிட்டான்.

பெரியம்மா கொடுத்த தேன் மிட்டாயை வாயில போட்டுக்கிட்டே வீட்டுக்கு வந்தேன். 

தேன் மிட்டாய் இனிக்கவே இல்லை.

One Reply to “தேன்மிட்டாய்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.