சித்தார்த் வெங்கடேசன் – பேட்டி

குறிப்பு : கேள்விகளை படித்தபொழுது இவற்றிற்கு பதில் அளிப்பதில் ஒரு சிறு தயக்கம் இருந்தது. இங்கு பேசுவதற்கான எனது தகுதி என்ன? நான் ஒரு வாசகன் மட்டுமே. அதிலும் தீவிர இலக்கியத்தில் இருந்து விலகி பெரும்பாலும் அதிபுனைவு / அறிபுனைவு நூல்களை மட்டும் வாசிக்கும் ஒருவன். எனது வாசிப்பு என்பது வாசிப்பின்பத்தை மட்டுமே இலக்காக கொண்டது. ஆனால் மக்கள் வரலாற்றின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. இக்கேள்விகளுக்கான பல்வேறு வயதும் பின்புலமும் கொண்டவர்களின் பதில்களைத் தொகுப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் வாசிப்பு நோக்கையும் திசையையும் அறியலாம் என்ற கோணத்தில் இருந்தே இந்த பதில்களை எழுதுகிறேன்.

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? (அப்பா, அம்மாவிற்கு எது சொந்த ஊர்? நீங்கள் பிறந்த, வளர்ந்த, படித்த இடங்கள் குறித்து சில வரிகள் சொல்ல முடியுமா? எப்படி இப்போதைய வேலைக்கு, — முந்தைய வாழ்க்கை — பாதை அமைத்துக் கொடுத்தது? )

பெயர் சித்தார்த் வெங்கடேசன். பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில். இப்பொழுது குவைத்தில் ஒரு வங்கியில் தொழில்நுட்ப இடர் மேலாண்மை துறையில் பணிபுரிகிறேன். அப்பா வெங்கடேசனுக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. அம்மா கருணாதேவிக்கு மதுராந்தகம். பள்ளிப்படிப்பு Spartan மேல்நிலை பள்ளியில். கல்லூரிப்படிப்பு பச்சையப்பன் கல்லூரியில். மனைவி காயத்ரி தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். எழுத்தாளர். என் வாசிப்பிற்கு ஏதேனும் பயன்மதிப்பு இருக்குமெனில் அது காயத்ரியை அறிமுகப்படுத்தியதாக தான் இருக்க வேண்டும். நான் குறுந்தொகை பாடல் ஒன்றை குறித்து எழுதிய வலைப்பதிவின் பின்னூட்டத்தின் மூலமாகத்தான் காயத்ரி அறிமுகம் ஆனார்.

2. தற்போது நடக்கும் கோவிட் அமளி துமளிகளுக்கு நடுவே உங்களின் வாசிப்பு எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது? அன்றாடக் குழப்பங்களின் தாக்கத்தினால் படிப்பது மாறியிருக்கிறதா?

அன்றாட குழப்பங்களின் தாக்கத்தினால் படிப்பது மாறி இருக்கிறதா? தெரியவில்லை. இந்த கொரோனா காலகட்டத்தை பொறுத்தவரை எல்லோரும் ஒரே வகையில் பாதிக்கப்படவில்லை. வாழ்வாதாரமே இழந்துவிட்டது என்ற நிலையில் இருந்து என் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க நல்ல படங்கள் ஏதும் மிச்சமில்லை என்பது வரை பாதிப்பு என்பது ஒரு gradientஆகவே இருக்கிறது. நான் இந்த மூலையின் அருகில் நின்றுகொண்டிருக்கிறேன். அந்த போதத்துடனே இதை குறித்து பேசுகிறேன். கோவிட் காலத்தில் உண்மையில் வாசிப்பு குறைந்துவிட்டது. கடந்த 2-3 ஆண்டுகளாகவே என் பிரதான வாசிப்பு ஒலிநூல்களின் மூலமாகத் தான். காலை நடை 45 நிமிடங்கள். அலுவலகம் சென்று வர இரண்டு மணி நேர பயணம் . இந்த இரண்டே முக்கால் மணி நேரங்கள் தான் என் வாசிப்பிற்கான நேரம். நாவல்கள், பாட்காஸ்டுகள், பேட்டிகள் என அனைத்தும் இந்த நேரத்தில் தான். Audible, Apple Books, YouTube Premium… இவை தான் பிரதானமான ஊடகங்கள். இந்த கோவிட் காலத்தில் பெரும்பகுதி வீட்டிலேயே கழிந்ததில் வாசிப்பு இயல்பாகவே குறைந்தது. ஆனால் இந்த காலத்தில் புனைவு அல்லாத சில நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்க முடிந்தது. அதில் முக்கியமானது பிரனய் லாலின் Indica – A Deep Natural History of the Indian Subcontinent மற்றும் கொரோனா குறித்த யுவாலின்  சில கட்டுரைகள்.

3. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது?

வாசிக்கும் பழக்கம் அம்மாவின் மூலமாகவே வந்தது. அம்மா ஒரு நல்ல கதைசொல்லி. கதை கேட்டலின் வழியாகத்தான் அனைவருக்குமே வாசிப்பு துவங்குகிறது என நம்புகிறேன். ஒரு கட்டத்தில் நம் கதைசொல்லிகளின் எல்லைகளை உணரும் பொழுது அல்லது அது ஒரு போதாமையை நமக்கு தரும் பொழுது வேறு கதைசொல்லல் ஊடகத்தை தேர்ந்தெடுக்கிறோம். நான் வளர்ந்த காலத்தில் காட்சி ஊடகம் பெரிதாக இல்லாததால் வாசிப்பு இயல்பான அடுத்தக்கட்டமாக இருந்தது.  அம்மா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணிபுரிந்தார்கள். சனிக்கிழமைகள் அவருக்கு அரை நாள் தான் பணி. ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை உடன் அழைத்துச்சென்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் நூலகத்தில் விட்டுவிடுவார்கள். சொர்கம் அது. எனக்கு புரிந்த, புரியாத அத்தனை நூல்களையும் எடுத்து வைத்து வாசிப்பேன். நூலகத்தில் பத்தாண்டுகள் , இருபதாண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை எல்லாம் எடுத்து வாசித்திருக்கிறேன். வாசிப்பு என்பது வேறோர் வெளியில் பயணம் செய்தல் என்பது என் எண்ணம். அது அந்த காலத்தில் தான் உருவாகி இருக்க வேண்டும். இப்போது நினைத்தாலும் உள்ளே களிபொங்கச்செய்யும் நினைவுகள் அவை.

இப்பொழுது என் மனைவி காயத்ரி என் மகள்களுக்கு ஜெயமோகனின் வெண்முரசு நாவல் தொடரை கதையாக சொல்கிறார். நேற்றோடு வண்ணக்கடல் முடிந்தது. இந்த பருவத்தில் கதை கேட்டு வளர்தல் குழந்தைகளுக்கு பெரும் பேறு.

4. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன? பள்ளிப் பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது?

சிறுவர்களுக்கான வார, மாத இதழ்களின் பொற்காலம் நான் வளர்ந்த 80-90கள். வீட்டில் பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம், விஜயபாரதம், சோவியத்தில் இருந்து வந்த ஆங்கில சிறார் இதழான மிஷா, சிறுவர் மணி, சிறுவர் மலர், ஹிந்து நாளிதழின் சிறுவர் இணைப்பான The Young World என வாரம் முழுக்க வாசிக்க நூல்கள் வந்துகொண்டே இருக்கும். என் மாமாவும் அவர் பங்கிற்கு அமர் சித்ர கதா நூல்களை மாதம் ஒரு முறை வாங்கித்தருவார். பள்ளி காலங்களில் பெரும்பாலும் ஆங்கில நாவல் வாசிப்பு தான் பிரதானமாக இருந்தது. பள்ளியாண்டு துவங்கும் முன்பே அந்த ஆண்டுக்கென Non-Detailed ஆக வகுத்து தரப்படும் ஒன்று அல்லது இரண்டு நாவல்களை படித்துவிடுவேன். பள்ளி நூலகத்தில் Enid Blytonன் Nancy Drew, Secret Seven, Famous Five, Hardy Boys இவை விருப்ப நாவல்களாக இன்று நினைவில் இருக்கின்றன.

5. உங்களின் தற்போதைய சிந்தனையையும் இலட்சியங்களையும் எவ்வாறு கண்டடைந்தீர்கள்? அந்தப் பயணம் குறித்து சற்றே வெளிச்சம் பாய்ச்சுவீர்களா?

என் சிந்தனையை ஒரு வாக்கியத்தில் விளக்கலாம் என்று படுகிறது : “அகலாது அணுகாது”

எங்களின் குடும்பம் அரசியல் போர்களம் போலவே இருக்கும். அம்மா வழி தாத்தா ஒ. நா. துரைபாபு ஒரு சோஷியலிஸ்ட் கட்சி தலைவர். எனக்கு ஐந்து மாமாக்கள். ஐவரும் தங்களுக்குள் சோஷியலிஸ்ட் கட்சி, திமுக, ஆர் எஸ் எஸ், ஜனதா தளம் என ஆளுக்கொரு கட்சியுடன் தொடர்பில் இருந்தனர். என் அண்ணன்கள் (பெரியம்மா மகன்கள்) மார்க்ஸிய லெனினிய கட்சியுடன் தொடர்பில் இருந்தனர். இந்த சூழல் இயல்பாகவே எல்லா சிந்தாந்தங்களையும் அகலாது அணுகாது அவ்வவற்றின் நிறைகளோடும் போதாமைகளோடும் எதிர்கொள்ள பழக்கியது.

கல்லூரி காலத்தில் நான் வாசித்த இரு நூல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஒன்று நா. பாவின் குறிஞ்சி மலர். மற்றது Ayn Randன் Fountainhead. இன்று யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. வெவ்வேறு துருவங்கள் இவை. ஆனால் அன்று ஒரு புறம் பூரணியும் அரவிந்தனும் மறுபுறம் டோமினிக் ஃப்ராங்கனும் ஹோவர்ட் ரார்க்கும் செலுத்திய ஆதிக்கத்தை இன்று விளக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு புறம் முழுக்க சுயத்தை அழித்து சமூகத்திற்கு பணி செய்தலை முன்வைக்கும் பாத்திரங்கள். மறுபுறம் சுயநலத்தின் மேன்மையை அதன் மூலமாக மட்டுமே ஒரு மனிதனும் சமூகமும் தங்களின் உச்சக்கட்ட சாத்தியத்தை அடைய முடியும் என்று சொல்லும் பாத்திரங்கள். ஒரு வகையில் இது முன் சொன்ன “அகலாது அணுகாது” நோக்கின் நீட்சியாக அமைந்தது.

கல்லூரி காலத்தில் வைரமுத்துவின் மீது பெரிய அபிமானம் இருந்தது. தண்ணீர் தேசம் நூல் வெளியீட்டினை காண கலைவாணர் அரங்கம் சென்று உள்ளே நுழைய முடியாமல் திரும்பியது நினைவில் இருக்கிறது. பள்ளி முடித்து ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிந்தபோது உடன் பணிபுரிந்தவர் இயேசு சிலுவையில் அறைந்து கிடக்கும் ஓவியத்தை அட்டைப்படமாக கொண்ட “கல்யாண்ஜி கவிதைகள்” நூலை அளித்து படிக்கச்சொன்னார். ஒரு புதிய உலகிற்கான வாசலை திறந்தது போல இருந்தது. அந்த கவிதைகளை வாசித்த பொழுது முதலில் எழுந்து வந்த உணர்வு “இது பாசாங்கற்றது” என்பதாகவே இருந்தது. அது வரை என் ஆதர்சமாக இருந்த வைரமுத்துவின் கவிதைகள் இதன் முன் வெளிறின. அதன் பிறகு அவற்றிற்குள் என்னால் நுழையவே முடியவில்லை. ஒரு வகையில் என் வாசிப்பில் கல்யாண்ஜி கவிதைகள் ஒரு Singularity தருணம் என்று இன்று தோன்றுகிறது. இந்த காலத்தில் நான் வாசித்த இன்னொரு மிக முக்கிய நூல் ஆ. இரா. வேங்கடாசலபதியின் “அந்த காலத்தில் காபி இல்லை” கட்டுரை தொகுப்பு. அதுவரை நான் வரலாறு என படித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வரலாற்று நூல் அது.

அதை தொடர்ந்து குவைத்திற்கு வந்துவிட்டேன். வரும்பொழுது வாங்கி வந்திருந்த பாவண்ணன் தொகுத்த இருபதாம் நூற்றாண்டில் புதிய சிறுகதைகள் தொகுப்பு என் வாசிப்பில் அடுத்த பெரும் நகர்வு. அதில் அதுவரை நான் பெயரே கேள்விப்படாத ஜெயமோகன் என்பவர் எழுதிய “திசைகளின் நடுவே” என்ற சிறுகதை. அந்த கதையை மீண்டும் மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் இப்படியான உவகையும் அனுபவமும் கிடைக்கும் என்பது எனக்கு புதியதாக இருந்தது. அதை தொடர்ந்து பின் தொடரும் நிழலின் குரலையும் விஷ்ணுபுரத்தையும் வாசித்தேன். ஒரு நாவலின் சாரத்தை எழுத்தாளனும் வாசகனும் இணைந்தே கண்டடைகிறார்கள் என்பது என் எண்ணம். விஷ்ணுபுரமும் பி.தொ.நி.குவும்  “அகலாது அணுகாது” வரலாற்றையும் சித்தாந்தங்களையும் பார்ப்பதையே காட்டுவதாக எனக்கு பட்டது. எனக்கான ஆசிரியர் இவர் என்ற எண்ணத்தை அளித்தது. இருபது வருடங்கள் ஓடிவிட்டன. இன்றும் அவர் தந்த அந்த உவகை தொடர்கிறது.

 6. சிறந்த கட்டுரையாளர்களாக, அபுனைவு எழுத்தாளர்களாக எவரை எல்லாம் பட்டியல் இடுவீர்கள்? தமிழுக்கு மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். வியாசம் என்றால் “ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை” என்கிறது அகராதி. உங்களின் வியாசர்கள் யார் யார்?

எனக்கான புனைவையும் அபுனைவையும் தேர்ந்தெடுக்க இருவேறு அலகுகள் உண்டு. புனைவு என்பது எனக்கு வேறு ஒரு உலகில் பயணித்தல். அந்த உலக உருவாக்கத்தில் எழுத்தாளரும் வாசகனும் இணைந்தே ஈடுபடுகின்றனர். ஆனால் அபுனைவை பொறுத்தவரை எனக்கு அசலான தெறிப்புகளே உவகை அளிக்கின்றன. அவை ஆய்வுத்துறையில் நிறுவப்பட்ட உண்மைகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் மூலமாக வந்தடையும் பொழுது அது அளிக்கும் உவகையையே அபுனைவின் வாசிப்பின்பத்தின் அலகாக கொள்கிறேன். எதை தெறிப்புகள் என்று சொல்கிறேன் என்று விளக்க உதாரணங்கள் சில:

* ஆ. இரா. வேங்கடாசலபதியின் “நாவல் : தோற்றமும் வளர்ச்சியும்” நூலில் ஓலைச் சுவடிகளின் வடிவப் போதாமைகளுக்கும் நம் பாரம்பரிய கல்விமுறையில் நிகண்டுகளின் (அகராதிகள்) முக்கியத்துவத்திற்குமான தொடர்பினை குறித்து எழுதப்பட்ட பத்திகள். ஓலைச் சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்கான புள்ளிகளை வைக்க முடியாது. புள்ளி என்பது ஓட்டையாக மாறி ஓலையை கிழித்துவிடும். ஆகையால் புள்ளிகள் இல்லாமலேயே சுவடிகள் எழுதப்படும். வாசிப்பவர்களுக்கு நிகண்டுகள் தெரிந்தால் தான் அது என்ன சொல் என்பதை அறியமுடியும்.  

* ஜெயமோகனின் ஒரு கட்டுரையில் பேரிலக்கியங்கள் தான் மொழிகளை உருவாக்குகின்றன என சொல்லி இருப்பார். துஞ்சத்து எழுத்தச்சனின் கிளிப்பாட்டு தான் மலையாளம் என்ற மொழியை உருவாக்கியது என்றார். அதை போலவே தாந்தேவின் டிவைன் காமடியின் மூலம் தான் இத்தாலியன் ஒரு மொழியாக உருவாகி வந்தது என்றார். ஜெயமோகனின் வரிகள் பல இப்படியானவை.

* யுவால் தனது சேப்பியன்ஸ் நூலில் குறிப்பிடும் ஒரு அலாதியான கோணம். மனிதன் காட்டுப்பயிராக இருந்த கோதுமையை பழக்கினான் என்பது தான் நாம் அறிந்த வரலாறு. ஆனால் அதுகாறும் நாடோடியாக திரிந்த மனிதனை கோதுமை ஒரு இடத்தில் அமரச்செய்தது. அவனது கலாச்சார போக்கையே மாற்றி அமைத்தது. அந்த நோக்கில் சுதந்திரமாய் திரிந்த மனிதனை வீட்டு விலங்கினை போல பழக்கியது கோதுமை என்று கூட கொள்ளலாம்.

எனக்கு பிடித்த அபுனைவு எழுத்தாளர்கள் என்பதைவிட என் மனதிற்கு நெருக்கமான நூல்கள் / கட்டுரைகள் சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

ஆ. இரா. வேங்கடாசலபதியின் அந்த காலத்தில் காபி இல்லை, ஜெயமோகனின் இன்றைய காந்தி, கண்ணீரை பின் தொடர்தல், நான் ஏன் தலித்தும் அல்ல – தர்மராஜ், Bitcoin : A Peer-to-Peer Electronic Cash System – Satoshi Nakamoto, What is it like to be a bat? – Thomas Nagel, Homo Deus – Yuval Noah Harari, Indica – Pranay Lal, Strom in a Teacup – Helen Czerski, The Hidden Life of Trees – Peter Wohllenben, Other Minds: The Octopus, the sea and the deep origins of consciousness – Peter Godfrey-Smith, Origins of Political Order – Francis Fukuyama, The Unfolding of Language – Guy Deutscher…

7. உங்களுக்குப் பிடித்த புனைவு எழுத்துக்கள் என்ன? எவரின் நாவல்கள் உங்களைக் கவர்கிறது? யாரின் கதைகளை ரசித்து வாசித்திருக்கிறீர்கள்?

எனது வாசிப்பில் புனைவே பெரும்பகுதி. எங்கு தொடங்கி எப்படி எடுத்துச்செல்வது என்று புரியவில்லை. இப்போது யோசிக்கும் பொழுது என் மனதிற்கு நெருக்கமான எழுத்தாளர்களை பட்டியலிடுகிறேன்.

இலக்கியம் : ஜெயமோகன், யுவன், ஃபிரான்சிஸ் கிருபா, ஷோபா சக்தி, Jose Saramago, Milorad Pavic

அறிவியல் புனைவுகளில் என் விருப்பமான எழுத்தாளர்கள் : Arthur C. Clarke, Douglas Adams, Ursula Le Guin, Octavia Butler, J. K. Rowling, Philip K Dick, Cixin Liu, Ted Chiang, Niel Stephenson.

அதிபுனைவுகளில் என் விருப்பமான எழுத்தாளர்கள் : Terry Pratchett, Robert Jordon, Brandon Sanderson, Nnedi Okorofor, Philip Pullman, Orson Scott Card, Neil Gaiman, Patrick Rothfuss

8. இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்களில் எது உங்களை ஈர்த்தது? எந்த நூலை (நூற்களை எல்லாம்) குறிப்பிடத்தகுந்ததாகச் சொல்வீர்கள்?

இந்த ஆண்டு மிக குறைவாகவே வாசித்தேன். வாசித்தவற்றில் மிக பிடித்ததாக பிரனய் லாலில் Indica – A Deep Natural History of the Indian Subcontinent நூலினையும் Brandon Sandersonஇன் The Rhythm of War நாவலையும் J. K. Rowling Robert Galbraith என்ற புனைப்பெயரில் எழுதும் துப்பறியும் நாவல் தொடரான Cormoron Strike தொடரின் 5வது நாவலான Troubled Blood நாவலையும் சொல்வேன். இந்த Rhythm of War நாவல் சான்டர்சனின் Stromlight Archives என்ற நாவல் தொடரின் நான்காவது நாவல். இந்த ஆண்டு வெளியானது. 

9. அலுவல்களும் குழந்தைகளும் சூழ்ந்த இன்றையச் சூழலில், உங்களின் வாசிப்பு எவ்வாறு மாறி இருக்கிறது? எப்பொழுது வாசிக்கிறீர்கள்? எதில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம் என்று பழக்கங்கள் இருத்திருந்திருக்கிறதா?

இந்த கேள்விக்கு முன்னரே பதில் அளித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்று எனது வாசிப்பு பெரும்பாலும் ஒலிநூல்கள் சார்ந்தே இருக்கிறது. மிக அரிதாகவே அச்சு நூல்களையும் கிண்டில் நூல்களையும் வாசிக்கிறேன். மின் வாசிப்பு என்பது பெரும்பாலும் துறை சார்ந்த இணைய இதழ்கள் வாசிப்பாகவே உள்ளது.

10. எதற்காக இலக்கியத்திலும் வாசிப்பிலும் நேரம் செல்விடுகிறீர்கள்? உங்களுக்கு அது எதை வழங்குகிறது?

வெகு நிச்சயமாக வாசிப்பு இன்பத்திற்காகவே வாசிக்கிறேன். புனைவுகளில் ஒரு உலகை உருவாக்கி அதனுள் வாழும் அனுபவமே என்னை ஈர்க்கிறது. அதனாலேயே என் விருப்பங்கள் மிக நீண்ட நாவல்களை நோக்கி உள்ளன. Wheel of Time நாவலின் மொத்த பக்க எண்ணிக்கை 15000ஐ தொடும். Stromlight Archives இது வரை நான்கு நாவல்கள் வந்துள்ளன. 6000 பக்கங்கள். நீண்ட நாவல்கள் நீண்ட நேரமாக அந்த உலகில் வாழ அனுமதிக்கின்றன என்பது மட்டும் அல்லாமல் அந்த உலகத்தினுள் ஆழ ஆழ செல்கின்றன. வாசித்தல் என்பது ஒரு வகை தப்பித்தல் என்று எங்கோ வாசித்தேன். என் அளவில் அது உண்மை தான். 

11. நீங்கள் எழுதிய அல்லது நீங்கள் படித்த உங்களுக்கு மிகப் பிடித்த ஒரு வசனம்?

சில வரிகள் நம்முடனே தங்கி நம் அன்றாட சிந்தனையின் / உரையாடலின் பகுதியாகி விடும். மிக அர்த்தம் பொதிந்த வரியாக இருக்கவேண்டும் என்று கூட இல்லை. பிரபஞ்சனின் “மரி என்கிற ஆட்டுக்குட்டி” சிறுகதையில் “ஐயோ இந்த பயங்கரமே” என்றொரு வரி வரும். மரி வெங்காயம் நறுக்குவதை ஒரு பயங்கர எக்ஸ்பீரியன்ஸ் என்று சொன்னதும் ஆசிரியர் நினைத்துக்கொள்ளும் வரி. ஆனால் எனக்கு உரைநடையை விட கவிதையின் வரிகளே மீண்டும் மீண்டும் உள்ளே ஓடும். குறுந்தொகையின் “யார் அணங்குற்றனை கடலே”, புறநானூற்றின் “நிரைவளை முன்கை பற்றி நடந்திசின் சிறிதே” முதல் ஜெயமோகனின் “வானம் பருந்துக்கும் குருவிக்கும் சமதூரத்தில் உள்ளது”, யுவனின் “வேடன் அம்பினாலும் நீங்கள் பார்வையாலும் நான் சொல்லாலும் அணுகுவது ஒரே பறவையை தான்” என்ன பல கவிதை வரிகள் சூழலுக்கு ஏற்ப மேலெழுந்து வரும்.


12. உங்களுக்கு அகத்தூண்டல் தந்த ஒரு புத்தகம், உங்களை மீண்டும் படிக்க இழுக்கும் ஒரு புத்தகம் இருந்தால், அது என்ன?

மூன்று நூல்கள் நினைவுக்கு வருகின்றன. Guy Deutscher எழுதிய மொழியியல் நூலான The Unfolding of the Language. மொழி என நாம் சொல்லும் அந்த சிக்கலான கருவி தனது நுட்பத்தை படிமங்களின் மூலமாகவே அடைந்தது என்பது டியுஷரின் வாதம். ஒரு நேரடி பொருள் கொண்ட சொல் (உதா; பார்த்தல்) படிமமாக மாறி நுட்ப்மான, அதன் நேரடி பொருளையும் தாண்டிய சூழலிலும் பயன்படத்துவங்கும் பொழுது (சிந்தித்து ‘பார்த்தேன்’) ஒரு மொழி மேலும் நுட்பம் அடைகிறது. முதல் முறை வாசித்த பொழுது சிலிர்ப்பினை தந்த நூல் இது. இந்நூலின் சில பகுதிகளை அடிக்கடி வாசிப்பதுண்டு. 

அடுத்தது Peter Godfrey Smith எழுதிய The Other Minds. இந்த நூல் இரண்டு சம்மந்தமற்றதை போல தோன்றும் விஷயங்களை எடுத்துப்பேசுகிறது. ஒரு சரடு, ஆக்டோபஸ்களின் பரிணாம வளர்ச்சி குறித்த வரலாறு. ஆனால் இதை கொண்டு அவர் உண்மையில் பேசுவது மனித மனத்தின் பரிணாம ரீதியான வளர்ச்சி குறித்து. பீட்டர் ஒரு தத்துவவியல் பேராசிரியர். அவர் அறிவியல் குறித்து எழுதும் பொழுதும் தத்துவத்தின் கோணத்திலேயே எழுதுகிறார். இந்நூலின் Cambrian Explosion குறித்த பகுதி தந்த உணர்வெழுச்சிக்காகவே அதை மீண்டும் மீண்டும் படிப்பதுண்டு.

கடைசியாக யுவால் நோவா ஹராரியின் Homo Deus. Big data, biotechnology, nanotechnology ஆகிய மூன்று துறைகளும் முயங்கி பரிணாமம் அடையும் பொழுது ஒரு புதிய மனித இனம் தோன்றலாம் என்கிறார். அதற்கு Homo Deus ( மனித கடவுள் ) என்று பெயரிடுகிறார். இப்பொழுது இந்த மேம்பட்ட இனம் சாதாரண மனித இனத்தை எப்படி நடத்த வேண்டும்? இந்தக் கேள்வியை நாம் நம்மிலும் திறன் குறைந்த விலங்குகளை எப்படி நடத்துகிறோம் என்பதுடன் ஒப்பிடுகிறார். இந்த வாதமே நூலின் சாரம். பல பகுதிகளில் என்னை அழ வைத்த நூல் இது. 

13. உங்கள் படைப்புகளுக்கோ அல்லது உங்களுக்கோக் கிடைத்த கடுமையான விமர்சனம் என்ன? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

நான் எழுத்தாளன் இல்லை. ஆதியில் சில கவிதைகள் எழுதினேன். எதிர்வினைகள் ஏதும் வரவில்லை. அப்பறம் திருந்தி விட்டேன். ஒரே ஒரு சிறுகதை தான் எழுதினேன். அதற்கான எதிர்வினை கதை புரியவில்லை என்பதாக தான் இருந்தது. :))) அதன் பிறகு படைப்பாக எதையும் எழுதும் எண்ணம் எழவில்லை. 

14. நீங்கள் வாசித்த கடைசிப் புத்தகம் எது? எப்படி உங்கள் புத்தகங்களை தெரிவு செய்கிறீர்கள்?

கடைசியாக வாசித்து முடித்தது Ready Player Two என்ற துன்பியல் சம்பவம் 🙂 . இப்போது படித்துக்கொண்டிருப்பது ஒபாமா எழுதிய “A Promised Land”. எனக்கு ஒபாமாவை பிடிக்கும். அவரது உரைகளை தேடித்தேடி கேட்கும் அளவிற்கு. இந்த நூலை ஒலிநூல் வடிவில் ஒபாமாவின் குரலிலேயே கேட்டுக்கொண்டிருக்கிறேன். நல்ல அனுபவம்.

புத்தகங்களை தெரிவு செய்வது குறித்து… சில நாவல் தொடர்களை காத்திருந்து அவை வெளியானதும் வாசிக்கிறேன். Brandon Sanderson’s Stromlight Archives நாவல் தொடரை கடந்த பத்தாண்டுகளாக தொடர்கிறேன். மேலே குறிப்பிட்டது போல அதன் நான்காவது நாவலை இந்த மாதம் முடித்தேன். அடுத்த நாவலுக்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

Patrick Rothfuss எழுதும் King Killer Chronicles நாவல் தொடர் ஒரு அலாதியான ஒன்று. ஒரு பெரும் வில்லனாக அறியப்பட்ட க்வோத் எனும் மனிதர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு சிறு கிராமத்தில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அவரை தேடி ஒருவன் வந்து அவரது வாழ்க்கை கதையை கேட்கிறான். க்வோத்தும் சொல்ல ஆரம்பிக்கிறார். மூன்று இரவுகளில் தன் மொத்த வாழ்வினையும் சொல்கிறார். ஒவ்வொரு இரவும் ஒரு நாவல். இரு நாவல்களும் ஒரு குறுநாவலும் வந்துள்ளன. மூன்றாவது நாவலான Doors of Stoneக்கு ஒன்பது ஆண்டுகளாக காத்திருக்கிறோம். பாட்ரிக் ராத்ஃபஸ் 80 முறை திருத்தி திருத்தி எழுதிவிட்டாராம். இன்னும் திருப்தி அடையாததால் நாவலை வெளியிடாமல் இழுத்தடிக்கிறார். 

ஹாரி பாட்டர் புகழ் ஜே. கே. ரௌலிங், ராபர்ட் கால்ப்ராயித் என்ற புனைப்பெயரில் ஒரு துப்பறியும் நாவல் தொடரை எழுதுகிறார். 1-2 ஆண்டுகளுக்கு ஒரு நாவல் வீதம் வந்துகொண்டிருக்கிறது. இத்தொடரின் ஐந்தாவது நாவலான Troubled Blood இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. 

இவை அல்லாமல் goodreads மூலமாகவும், Hugo மற்றும் Nebula விருதுப்பட்டியல்களின் மூலமாகவும் படிக்க வேண்டிய நூல்களின் அறிமுகம் கிடைக்கும். Goodreadsல் எனது want to read பட்டியல் குன்றா விளக்காக எரிந்துகொண்டே இருக்கிறது.


15. வாழ்க்கை வரலாறு, நாடகம், நகைச்சுவை – போன்ற பகுப்புகளில் உங்களின் ரசனையைப் பகிர இயலுமா?

வாழ்க்கை வரலாறு மீது அதிகம் ஆர்வம் இல்லை. ஒரு சில ஆளுமைகள் குறித்து ஒரு ஆர்வம் இருக்கும். அவர்கள் குறித்த நூல்களை வாசிப்பேன். சமீபத்தில் வாசித்த Walter Issacson எழுதிய Steve Jobs வாழ்க்கை வரலாறு, ஒபாமாவின் உரை எழுத்தாளரான Ben Rhodes எழுதிய The World As It Is : Inside Obama’s White House நல்ல வாழ்க்கை வரலாற்று நூல்கள். நாடகம் அதிகம் வாசித்ததில்லை. நகைச்சுவை எழுத்துக்களை விரும்பி வாசிப்பேன். Terry Pratchett, Douglas Adams, David Sedaris, George Carlin என் விருப்பமான நகைச்சுவை எழுத்தாளர்கள். 

16. எந்த சஞ்சிகைகள், பத்திரிகைகள், நாளிதழ்களை இன்றும் வாசிக்கிறீர்கள்? அவற்றின் எந்த பகுதிகள், பத்திகள் – உங்களை ஈர்க்கின்றன?

தகவல் தொழிற்நுட்பம் சார்ந்த இதழ்கள்தான் அதிகம் வாசிப்பது. அறிவியல் மின்னிதழான Quanta Magazineஐ வாசிக்க முயற்சிப்பேன். மிக தரமான இதழ் அது. பல கட்டுரைகளுள் அவற்றின் அடர்த்தி காரணமாக என்னால் நுழைய முடியாது. ஆனால் ஒவ்வொரு இதழிலும் ஒரு கட்டுரையோ பேட்டியோ பிடித்துவிடும். 

இணையத்தில் webcomics என்ற ஒரு வடிவம் உண்டு. அதில் சிலது பிடிக்கும். குறிப்பாக xkcd, Twitterல் குறுங்கதைகளை எழுதும் Micro SFF stories, A Small Fiction ஆகியவற்றை தொடர்ந்து வாசிக்கிறேன். 

 A Softer World (www.asofterworld.com) என்றொரு தொடர் வந்துகொண்டிருந்தது. Emily & Joey என்ற தம்பதியினர் இதை எழுதினார்கள்.  மூன்று அல்லது நான்கு பெட்டிகளாக பிரிக்கப்பட்ட ஒரு அழகிய புகைப்படம், கவிதை போன்றதொரு வரி. அவ்வளவு தான். பல நாட்கள் மிக சாதாரணமாகவே இருக்கும். ஆனால் சில நாட்கள் அபாரமாக கவித்துவம் கூடி வரும். இப்பொழுது இது நின்றுவிட்டது. ஆனால் பழைய இடுகைகளை எல்லாம் இன்னும் தளத்தில் வைத்திருக்கிறார்கள். 

இன்னொரு முக்கியமான ஆனால் இப்பொழுது நின்றுவிட்ட இணைய தொடர் the codeless code ( www.thecodelesscode.com). கணினி  நிரல் எழுதுவதை குறித்த குறுங்கதைகள். அவை ஜென் கதைவடிவமான Koan வடிவில் எழுப்படுகின்றன. பல கதைகளில் கவித்துவ கணங்கள் காணக்கிடைக்கும்.  

எல்லா வாசிப்பிலும் நான் தேடுவது ஒரு கவித்துவ கணத்தை, அது தரும் வாசிப்பின்பத்தை என்று தான் தோன்றுகிறது. எனக்கு வாசிப்பு மிக சுயநலமான ஒரு செயல்பாடு. அது ஒரு சிறு துளி ருசித்துவிட்டால் போதும். 

மேலே எழுதியவற்றை மீண்டும் வாசித்துப்பார்த்தால் வெறும் name droppingsஆகவும் தோற்றமளிக்கிறது. ஆனால் அது அல்ல. அப்படி தோன்றினால் அது என்னால் விளக்க இயலாத போதாமையே.  ஒவ்வொரு நூலும் ஏதோ ஒரு விதத்தில் என்னை அசைக்கிறது. என் பல குழப்பங்களுக்கும் கேள்விகளுக்குமான காரணங்களாகவும் விடைகளாகவும் செயல்படுகின்றன. 

இந்த வாய்ப்பளித்த சொல்வனத்திற்கு அன்பும் நன்றியும். 

சித்தார்த் வெ. வலைப்பதிவு: அங்கிங்கெனாதபடி

அந்த சிட்டுக்குருவியை போலே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.