சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?

கடலூர் வாசு

கோன்ராட் எல்ஸ்ட் எழுதிய இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஐந்தாம் அத்தியாயம்

டச் மொழிப் பேச்சாளர்களின் யோகா கூட்டமைப்பின் அங்கத்தினரானதால் நாடுகளின் இணையம் (United Nations) அரங்கேற்றிய சர்வதேச யோகா நாளையொட்டி இந்திய அரசாங்கம் வெளியிட்ட புத்தகப் பிரதியொன்று என் கைக்கு வந்தது. கொண்டாடப்படும் நாள் ஜூன் 21, கோடைக் கால சங்கராந்தி (Solstice) தினம், வருடத்திலேயே மிக நீண்ட பகற்பொழுதையுடைய நாள் என்ற குதூகலம் ஒரு பக்கமிருக்கச் சூரியனின் சரிவின் ஆரம்பம் என்பதால் கலப்பான மன உணர்வையும் உண்டு பண்ணும் நாள்.

புத்தகப் பிரதிக்கு வருவோம்; முதல் பக்கத்தில் இந்து பாரம்பரியத்திற்குப் புறம்பான ஒரு சித்திரம் வரையப்பட்டுள்ளது. ஆனால், பரவலாக எதிர்பார்த்ததுபோல் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் சின்னம் (ॐ) அதில் எங்குமே காணப்படவில்லை. தனியார் நோக்கில் இது முக்கியமாகத் தெரியாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவைச் சாந்தப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும், ஆளும் அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்துபவர்களின் மனப்பாங்கை வைத்துப் பார்த்தால் இந்தத் தவிர்ப்பு முக்கியமானதாகத் தெரிகிறது. மதச் சார்பற்ற உலக நோக்கில், இந்தியா ஒரு நடுநிலை நாடு. எனவே, இந்திய அரசாங்கம் ரிக் வேதத்தில் முதல் வார்ததையான ‘ஓம்’ போன்ற இந்து ஐக்கியச் சிறப்புச் சின்னங்களை ஊக்குவிப்பது அதனுடைய வேலையன்று. வேதங்கள் கிருத்துவையோ, நபிகளையோ, மெக்காலேவையோ, மார்க்ஸையோ குறிப்பிடவில்லை. ஆகையால், அது ஓர் இனவாதப் புத்தகம். ஓம் என்ற சொல்லின் மேல் ஏன் தடைவிழுந்துள்ளது என்பது புரிந்துவிட்டது அல்லவா!

நான் சமூக ஊடகத்தில் இச்செய்தியை எழுதினேன். பெல்ஜியத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து உடனே வந்த பதில்; “தயவுசெய்து ஒன்பதாம் பக்கத்தில் இருக்கும் தேவநாகரி பிரார்த்தனையைப் பாருங்கள். அது ஓம் என்று ஆரம்பிக்கிறது. தேவநாகரி அறியாத மேற்கத்திய யோகப் பயிற்சியாளர்கள்கூட ஓம் சின்னத்தைச் சுலபமாகக் கண்டுகொள்வர்.”

இது உண்மைதான். மேற்கத்திய யோகாப்பியாசர்கள் எல்லோருக்குமே ஓம் என்ற சின்னம் மிகவும் பழக்கமான ஒன்றுதான். அவர்களது கூடங்களையும் ஆடைகளையும் புத்தகங்களையும் அழகாக அலங்கரிக்கும் சின்னம். இது யோகச் சின்னமென்றுதான் அவர்களுக்குத் தெரியுமே தவிர, இந்துக்களுக்கு எதிரான இயக்கங்களிடையே இது வஞ்சனை மிகுந்த இனவாதச் சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுமே, ஓம் சின்னத்தை இந்தச் சிற்றேட்டில் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், கருத்தியல் நிர்பந்தத்தினால்தான் இச்சின்னம் வெளியே தலைகாட்டவில்லை என்பது அவர்களுக்குத் தெரியுமா?

இருந்தாலும், ‘ஓம்’ முழுவதுமாகத் தடை செய்யப்படவில்லை. நகலெடுத்து ஒட்டப்பட்ட பிரார்த்தனையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லவேளை! பிரார்த்தனையைத் தணிக்கை செய்யாமல் இருந்தார்களே! கிருத்துவப் புத்தகத்தில் கிருத்துவக் கடவுளின் பெயரைக் கூறாத பிரார்த்தனையைக் காணமுடியுமா? எனவே, இச்சிற்றேட்டைப் பற்றிய நல்ல விஷயம், ஹிந்து பிரார்த்தனையைப் பதித்திருக்கிறார்கள் என்பதேயாகும். இதன் மூலம் யோகம் பெயர் சொல்லக்கூடாத கலாசாரத்தின் உட்பொதிப்புதான் என்பது தெரியவருகிறது. எனவே, இச்சிற்றேடு இந்துக்களுக்குக் கொடுக்கப்படும் ஆறுதல் பரிசே. இந்துக்களின் கொக்கி போன்ற ‘ஓம்’ முழுவதுமாகத் தடைசெய்யப்படவில்லை.; சிறியதாக அச்சடிக்கப்பட்டு ஒரு பக்கத்தில் செருகப்பட்டுள்ளது.

இருந்தாலும் மதச் சார்பற்றவர்களிடையே இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஹிந்துக்கள் மதச் சார்பற்றவர்களாக வேண்டுமென்பதற்காகத் தங்களது கலாசாரத்தையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். போதவே போதாது. இன்னும் கடினமான முயற்சி தேவை என்கிறார்கள் மதச் சார்பற்றவர்கள்.

பா.ஜ.க. அதிகாரத்திலுள்ள அரசாங்கம் இந்தச் சிற்றேட்டை இவ்விதம் வடிவமைத்ததனால் அடைந்த லாபமென்ன? மதச் சார்பற்றவர்களும் சிறுபான்மையினரும் இந்த இந்துச் சின்னத்தை இச்சிற்றேட்டில் மறைமுகமாகச் செருகியதன்மூலம் இந்த அரசாங்கம் இந்துக்களின் அனுஷ்டானங்களை ஊக்குவிக்கிறது என்கின்றனர். இந்துக்களுக்கோ, இது பெரிய ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. இந்து தேசியவாத அரசாங்கமாகக் கருதப்படும் ஓர் அரசாங்கம் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள சமயத்தில், முதன்முதலாகக் கொண்டாடப்படும் சர்வதேச யோகா நாளன்று யோகம், உலகிற்கு இந்து நாகரீகம் அளித்த நன்கொடை என்று பறைசாற்றுவதற்கு மாறாக, இந்து நாகரீகத்திலிருந்தே யோகத்தைக் கழற்றிவிட்டனர். இது வேண்டாத தேவையில்லாத ஒன்று. ‘ஓம்’ என்ற சின்னம், சிறுபான்மையினரை அச்சுறுத்துவதன்று. இதைத் தவிர்த்ததனால் மதச் சார்பின்மை என்னும் குறிக்கோளுக்காகப் பெரிதாக ஒன்றும் சாதித்துவிட்டதாகவும் தெரியவில்லை. மாறாக, இந்துத் தன்மையை மேலும் குலைத்துவிட்டார்கள். மதச் சார்பின்மைதான் எங்களது நோக்கம் என்று கூறும் இயக்கங்களின் உண்மையான இலக்கு, ஹிந்துத் தன்மையை நிர்மூலமாக்குவதே என்பது என் அபிப்பிராயம். பா.ஜ.க. இந்துக்களை ஆதரிக்கும் கட்சி என நினைப்பவர்கள், அக்கட்சி இத்திட்டத்தை ஆதரித்தது என்றறிந்தால் ஆச்சரியப்படுவர். இதன் விளைவு என்ன? மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல் ஒருபக்கம், இக்கட்சியின் ஹிந்து வாக்காளர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. மற்றொரு பக்கம், மதச்சார்பற்ற எஜமான்களை முழுவதுமாகச் சந்தோஷப்படுத்தவும் முடியவில்லை.

ராஜதந்திர விதிகள் தர்க்க சாஸ்திர விதிகளிலிருந்து வேறுபட்டது என்பதை நான் நன்கறிவேன். சில சமயங்களில் ஒன்றைப் பெறுவதற்காக ஒன்றை விட்டுக்கொடுப்பது அவசியம்தான். யோகத்தைப் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சின்னத்தைத் தவிர்க்க வேண்டியிருந்தால் அது தவறில்லை. இச்சின்னம் ஹிமாலயக் குகைகளில் வசிக்கும் யோக நிபுணர்களுக்கும் வேத விற்பன்னர்களுக்கும் உபயோகமற்றது. ஆனால், நாம் உரையாடுவது இவர்களைப் பற்றி அன்று.

மதச் சார்பற்றவர்கள் இச்சிற்றேட்டில் இந்துத் தன்மை அதிக அளவில் கலந்துள்ளது என்கின்றனர். இந்துக்களையோ இச்சிற்றேடு சுத்தமாகக் கவரவேயில்லை. இருந்தாலும் இச்சிற்றேடு ஓரளவிற்கு இந்துத் தன்மையைக் கொண்டதாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. மற்ற தேசியவாத சச்சரவுகளைப் போலவே இதுவும் ஒரு முடிவின்றி திரிசங்குபோல் அந்தரத்தில் நிற்கின்றது.

(Hindu Human Rights,15 May 2015 – இல் பிரசுரமானது.)

Series Navigation<< ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.