கு. அழகர்சாமி

(1)
எறும்புகளின் ஊர்வலத்தில்
ஒரே நெரிசல்-
ஓரெறும்பும் நெரிசலில் சிக்கிச்
செத்திருக்கவில்லை-
எறும்புகளின் தோள்கள் மேல்
எங்கோ நெரிசலின்றி சவாரிக்கும்
ஒரு பல்லி தவிர.
(2)
எறும்புகளில்
எது
துரிதம்?
எது
தாமதம்?
எது
முந்தி
எது
பிந்தி?
செல்வதன்றி
வெல்வதில்லாத
எறும்புகளின்
பயணம்
என்று களைத்து
ஊர் போய்ச்
சேராதிருந்தது?
(3)
ஓ
ரெறும்பு
கடித்து
ஒரு
விநாடி
துடி
துடிக்கும்-
சகாப்தமாய்
(4)
நிரம்பி
எறும்புகள்
நெடுகச் செல்லும் வரைக்கும்
நெடுகச் செல்லும்,
எறும்புகளின்றி
வெறிச்சோடியிருக்கும்
வழியில்லாத
வழி
எங்கே?
(5)
எப்படி
எறும்புகள் கண்ணுறங்கி
புற்றுக்குள் புற்றாய்
கனவுகளின்
புற்றைக்
கட்டும்?