குமார் சேகரன்

வெளியில்
நல்ல மழை
மழைக்காற்றில்
என் அறையின்
ஒரு பக்க
மர ஜன்னல்
வேகமாகத்
தடதடக்கிறது
அந்த ஓசை
மழையின் ஓசையை விட
அதிகமாகிறது
எழுந்து சென்று அதை
இழுத்துச் சாத்த
தோன்றவில்லை எனக்கு
கூடிக் கொண்டே போகும்
அந்த சத்தத்தில்
உள்ளிருந்து வரும்
ஒரு சத்தத்தை
மெல்ல மெல்ல
கொல்கிறேன் இப்போது
இந்த
நீள் இரவில்
எந்த காரியமுமில்லை எனக்கு
மெல்ல மெல்ல
எனை மென்று தின்னும்
உந்தன் நினைவுகளை
இரசித்துக் கொண்டிருக்கிறேன்
இந்த நினைவுகளைத் தவிர்த்து
வேறென்ன என்னிடத்தை
நிரப்பி விட முடியும்
எப்போதும்
உன் நினைவுகள்
அதன் மேல்
மேலும் இன்னும்
உன் நினைவுகள்
அவ்வளவு தான்
ஒவ்வொரு விடியலிலும்
கண் விழித்தெழும் போது
முடிவில்லாத எச்சமாக
ஓர் அரைகுறை கனவு
மீதமிருக்கிறது
நினைவில் நிற்காத
எத்தனையோ கனவுகளுக்கு மத்தியில்
சில கனவுகள் மட்டுமே
நினைவில் நிற்கின்றன
விழித்திருக்கும் தருணங்களில்
அவற்றின் முடிவுகளைத்
தேடிப் பார்க்கும்
ஓர் அற்ப சுவாரஸ்யம்
தொற்றிக் கொள்கிறது
சிந்தையின் கண்களில்
முற்றுப் பெறாத
ஏராளமான கனவுகளால்
நிரம்பியே கழிகிறது
இந்த சிறு வாழ்வு
என் கவிதைகளை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.