ஆனந்த் பாபு

அந்தக் கண்களில் தெரியும் கொடும் வெம்மையை நான் இதேபோல் வேறொரு சமயத்தில் பார்த்தது ஞாபகம் வந்தது. மென்மையாக வருடிச்செல்லும் சாயங்காலக் கடல் காற்று அவனுடைய கொடும் பார்வையை மறக்கச் செய்துகொண்டிருந்தது. அவன் தன்னுடைய சார்ட்ஸ் டவுசருக்குள் கை நுழைத்தவாறே வேறெங்கோ பார்த்தபடி வந்துகொண்டிருந்தான். நான் கடலுக்கு அருகில் அதன் சாம்பல் பரப்பில் தூரமாய் அலையுறும் கரும்புள்ளிப் படகுகளைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தேன். இந்த அசௌகரியமான அமைதிக்குக் காரணமாக நான் சொன்னது எதுவென அசை போட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அன்று நடந்த நிகழ்வு ஞாபகம் வந்தது.
நகரத்து சலசலப்புகளைத் தாண்டி கிராமம் நோக்கிப் போவது எப்போதும் குதூகலமாயிருக்கும். இதற்காகவே வருடா வருடம் கோடை விடுமுறையை எதிர்நோக்கிக் காத்திருப்பேன். நினைத்தால் வருடம் முழுவதும் கல்யாண வீடு, சடங்கு வீடென்று போகலாம்தான். ஆனால் ஒன்றுக்கு ரெண்டு முறை படித்தால்தான் மனதிலாகிறது, இந்த அழகில் மாதத்துக்கு நான்கு முறை ஊர்வழி போனால் படித்து முடியாது. அதற்கேற்றாற்போல் வகுப்பிலும் முதல் மூன்றுக்குள் வருவது ஒரு போதையாகியிருந்தது.
நகரத்தின் இயந்திர ஓலங்களைத் தாண்டி பேருந்து மெதுவாக ஒவ்வொரு கிராமமாக நின்று போகிறதைப் பார்க்க ஆர்வமாயிருக்கும். சன்னலோரமாய் உட்கார்ந்துகொண்டால் விதவிதமான கார இனிப்புத் தீனிகளை டீக்கடை முகப்புகளில் அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம். வெளிறிய அழுக்கேறிய உடைகளுடன் வேலை முடித்து வந்தவர்கள் கையிலொரு காரத்தையும் இனிப்பையும் கடிப்பதைப் பார்க்கலாம். இரண்டு மூன்று கடிகளில் அந்த பலகாரங்களைப் பசித்த வயிறுகள் மாயம் செய்வதைப் பார்க்கலாம். உழைத்து உழைத்து முறுக்கேறிய கரிய கைகளையும் சகதியோ, சாம்பலோ, கட்டிட வேலை சாந்துக் கலவையோ சேர்ந்து கரண்டைக் காலுக்கு மேல்வரை வெள்ளையடித்திருப்பதையும் பார்க்கலாம். பஸ் வந்தவுடன் பாய்ந்து ஏறும் பெண்களின் பிளாஸ்டிக் கூடைகளில் காலியான சம்படமோ , பன்னருவாளோ, களவத்தியோ அல்லது சும்மாடு துண்டுகளைப் பார்க்கலாம். வெற்றிலை ஒதுக்கிய வாயோடு டிக்கெட் வாங்கி உட்கார இடமில்லாமல் ஒதுங்கிக் கைத்தாங்கலாய் கம்பிகளைப் பிடித்து நிற்கும்போது முழங்கை உள்பக்க மடிப்பு விரிந்து உப்புப்பாறியதைக் காட்டி நிற்கும்.
பச்சை நெல் வாசம் வீசும் வயல்வெளிகளைப் பஸ் கடந்தால் பாட்டி ஊர் வருவதற்கான அடையாளம். கண்டக்டர் விசில் ஊதி ‘ரெய்’ எனச் சொல்லும்போது உறுமும் பஸ் சத்தம்தான் நீங்கள் கேட்கும் கடைசி நகரத்து வாடை. அப்புறம் கேட்பதெல்லாம் “ஹ்ம்” என்ற சீல் வண்டு ரீங்காரமும், இடையிடையே கூப்பிடும் மாடுகள் சத்தம் மட்டும்தான். பஸ் வந்த ரோடு அந்த ஊரை தென்வடலாகச் சரியாக ரெண்டாகப் பிரித்தது. நான் இறங்கிப் போகவேண்டிய வடக்கூரை நோக்கி நடையைப் போட்டேன். சின்னச் சின்ன தெருக்கள் ஒன்றுசேரும் மாரியம்மன் கோயில் முற்றத்திலிருந்து பார்த்தால் எண்ணி நாலைந்து தெருக்கள்தான் இந்த வடக்கூர். பசுஞ்சாணம் மெழுகிய அடுப்பாங்கரையில் பாட்டியின் அரவம் கேட்டது. பகல் வெளிச்சத்தில் கூர்ந்து நோக்கியவாறே ஏதோ பழுப்பேறிய புத்தகத்தில் முழுகியிருந்தார் தாத்தா. தலையை நிமிர்த்தி நெற்றியில் கை வைத்து ஏறெட்டு பார்த்து, “ஏ, வா வா… என்னடே அரவமில்லமா நிக்க. வா வா உக்காரு”என்றார்.
“எப்பிடிருக்கிய தாத்தா?” என்றேன்.
“நல்லாருக்கம் டே” என்றவாறே கண்ணாடியை ஏத்தி விட்டுக்கொண்டு சுவரில் சாய்ந்து கொண்டார். கீசு கீசென்று மூச்சிரைந்தது. வலது நாசியை ஒட்டி வளர்ந்திருந்த கட்டி சிறு நெல்லிக் காயளவு புடைத்து கொத்து மீசையில் மறைந்திருந்தது.
“ஏளா” அடுப்பங்கரையை நோக்கி கூப்பிட்டார்.
“ஏய்யா வா” என்ற வாறே பாட்டி வந்து திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
“4.30 கணபதிக்கா வந்த” என்றார் பாட்டி.
ஆமாம் என்றேன். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு பாட்டி வேலைக்குச் சென்றுவிட்டார். செவ்வகமாக மடித்த காகிதங்களில் ஏதோ சூரணங்களை தாத்தா பொதிந்து கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்த நான் ஆர்வமாய்ப் பழுப்பேறிய புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். காலிப் பக்கத்தில் வெ. கிருட்டிணன் என மையால் எழுதியிருந்தார். இரண்டாம் பதிப்பு 1952 , அணா 2-0 போட்டிருந்தது. ஏதோ மருந்துப் புத்தகம் சூரணம், செந்தூரம், குளிகை என்று போட்டிருந்தது.
அரவம் கேட்டு வாசலைப் பார்த்தேன்.காக்கி டவுசரை அரணாக் கயிறால் இறுக்கிவாறு மேல்சட்டை இல்லையில்லாமல் ஒரு பொடியன் நின்றிருந்தான்.
“யாரு வேணும்” என்றேன்.
“கிருஷ்ணன் இருக்கானா” என்றான்.
சுரீர் என்றது எனக்கு பேச வாயெடுப்பதற்குள் வாசலுக்கு வந்த தாத்தா,
” யாரு”
பொடியன் பேசினான், “கிருஷ்ணன் உன்ன எங்க அய்யா கூப்புட்டுட்டாவ…உடன வரணுமாம்” என்றான்.
அவன் ஒருமையில் சொன்னதைக் கேட்டு ஆத்திரமாய் வந்தாலும் தாத்தாவின் அமைதி வினோதமாயிருந்தது.
“சரி” என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு உள்ளே போய் துணிப்பையில் சில மருந்துகளை எடுத்துக்கொண்டார். பையனை அழைத்துக்கொண்டு கிளம்பும் போது என்னைப் பார்த்து
“இருடே, தெக்கூரு வரைக்கும் போயிட்டு வாறேன்” என்றார். ஓலை கிடுவுக்குத் தப்பி மூக்கு கண்ணாடி வழி இறங்கிய வெயில், முழுக்க நரைத்த மீசையை இன்னும் வெள்ளையாக்கியது. ஊன்று கம்பை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
“தாத்தா நானும் வரேன்” என்றேன்.
ரோட்டைக் கடந்து தெக்கூருக்கு மூவரும் நடக்கலானோம்.பொடியன் முன்னாடி எட்டு வைத்துப் போய்க்கொண்டிருந்தான். பத்துப் பதினைந்து தெருக்களைக் கொண்ட தெக்கூரு பெரிதாகவே இருந்தது. பொடியன் ஒரு சிறிய வீட்டின் பின்கட்டில் நுழைந்தான். பொடியன் சொன்னான்,
“அப்பா கிருஷ்ணன் வந்திருக்கான்”.
நான் பின்கட்டு வாசலில் நின்றுகொண்டேன். நாற்பது வயது ஆணும் சம வயது மதிக்கத்தக்க பெண்ணும் தொழுவத்தில் நின்றிருந்தார்கள்.
“கிருஷ்ண வா… இந்தப் பசுவு காலைலருந்து ஒன்னும் சாப்பிடல பாரு வச்சதெல்லாம் அப்பிடியே இருக்கு என்னெனு பாரும்”
தாத்தா தொழுவத்தின் ஓரத்தின் பையை வைத்துவிட்டு மாட்டைப் பார்த்தார்.
“மாடு துள்ளுமோ” என்றார்.
“துள்ளாது… நீ வா”…
“வேணா நாங்க பிடிச்சிக்கிறோம்” என ஆணும் பெண்ணும் மாட்டைப் பிடித்துக்கொள்ள மாடு திமிறிக் கொண்டிருந்தது. தாத்தா அதன் கண், சுவாசம், நாக்கு மற்றும் உடம்பைப் பாரத்துக்கொண்டிருந்தார். திமிறிய மாட்டை அந்த முறுக்கேறிய கைகளும் கால்களும் பிடித்துக்கொண்டிருந்தன. கால்களில் சகதியோ, தொழியோ, சிமெண்டோ வெள்ளையடித்திருந்தது. பொடியன் உள்பக்கத்திலிருந்த கொம்பில் ஏறி நின்றிருந்தான். வாசலிலிருந்த நான் இப்போது இந்தக் கடற்கரை அழகை அனுபவிக்காமல் குழம்பி நிற்கிறேனே அதைப்போல நின்றிருந்தேன் .
கிராமங்கள் எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கின்றன என்பதை இந்த சென்னை நகரப் பரபரப்புக்குள் வந்த புதிதில் தெரிந்துகொண்டேன். போன் பேசியபடியே வந்த அவன், “ரூம் போறேன்” என்றான்.
வரும்போது இருந்ததைவிடப் பேச்சு மாறியிருந்தது. பேச்சில் சிறிது கடுமை தெரிந்தது.
“நீங்க போங்க ரூம் பக்கத்துலதானே நான் வர்றேன்…” நான் பேசி முடிப்பதற்குள் அவன் நடக்க ஆரம்பித்திருந்தான். இந்த அளவு வேண்டா வெறுப்பாய் போகும்வரை நாம் என்ன செய்து விட்டோம் இவனுக்கு என யோசனை போயிற்று. வெயில் சாய்ந்து வானம் எல்லாம் அநித்யமான வர்ணங்கள் தோன்றியது மனதிற்கு அழகாய் இருந்தது.தூரத்தில் பலபேர் நீந்திக் கொண்டிருந்தார்கள்.
நான் முதன் முதலாய் நீச்சல் கற்றதும் ஒரு கிராமத்து கிணற்றில்தான். ஒரு சின்ன நீச்சல் குளம் போலிருந்த கிணற்றில் மரகதப் பச்சையாகத் தண்ணீர். மணிக் கணக்கில் தண்ணீரில் விளையாடியதில் கண்களெல்லாம் வெள்ளை வெள்ளையாய்த் தெரிய ஆரம்பித்திருந்தது.
வரும் வழியே ஒரு வீட்டின் வாசலில் கொய்யாக் கொழுந்துகளைப் பறித்துக் கொண்டிருந்தேன். உப்பு, புளி வைத்துத் தின்னால் செமயாக இருக்கும் என்று கூட இருந்த நண்பன் சொன்னான். அந்தக் கூட்டத்தில் அவனும் , நானும் தான் வெளியூரிலிருந்து வந்தவர்கள். மற்றவர்களெல்லாம் ‘ஏய்! ஏய்! வேணாடாம் ! வாங்க போலாம் !’
என்று அவசரப்படுத்தி சொன்னதையும் பொருட்படுத்தாமல் பறிக்க ஆரம்பித்திருந்தேன்.
தோளில் யாரோ தட்டுவது போலிருந்தது. ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
“செரிக்கயுள்ளேளா! யார்ல நீங்க!” என்றான். அதுக்குள் உள்ளூர்காரப் பையன்கள் வர,
“யார் வீட்டுக்குல வந்திருக்கானுவ”
“இல்ல அண்ணாச்சி அவனுவோ வெளியூரு”
“ஏ, பாத்து கூட்டுப் போடே” என மிரட்டலாகப் பார்த்தான்.
மறுநாள் காலை பஸ் ஏறி ஊர் வரும்வரை அதே நினைப்பாக இருந்தது. இரண்டு கொய்யா இலைகளுக்கு இவ்வளவு கோபப்படுகிறானே எனக் நண்பர்களிடம் கேட்டபோது. இங்க அப்பிடித்தான் என முடித்துக் கொண்டார்கள் ‘வீட்லயும் சொல்லாத’ எனக் கேட்டுக்.கொண்டார்கள்.
ரூமுக்கு வந்து பார்த்ததில் முதலில் பார்த்த மூன்று பேர் ஆளைக் காணவில்லை அவனையும் சேர்த்து.
தூரத்து சொந்தமான மகேந்திரன் மட்டும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். கடற்கரை மணலில் நடந்து வந்ததில் கால்கள் ஓய்ந்திருக்க ஆசுவாசமாய் சேரில் சாய்ந்தேன்.
“என்ன உக்காந்திருக்க “
“வா போலாம் பேக் எடுத்துக்க” என்றான்.
“இருந்து காலைல போலாம்னு சொன்னியே…”
“ஆமாமா… இப்ப கிளம்பு சொல்றேன்” எனத் தோளைத் தட்டினான்.
நான் குழப்பத்துடன் பேக் எடுத்துக் கொண்டு அவன்கூட நடக்க ஆரம்பித்தேன். மகேந்திரன் தெரு முனைவரை உம்மென்னு வந்து கொண்டிருந்துவிட்டு கேட்டான்,
“நீ அவன்ட என்ன சொன்ன” சுண்டியிருந்த முகம் படபடக்கக் கேட்டான்.
“நான் ஒன்னுஞ் சொல்லலியே” என்றேன்.
ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டுச் சொன்னான்,
“ஒன்னும் சொல்லாமயாடே என்னக்கும் இல்லாம இன்னைக்கு என்ட கோபப்பட்டான். நீ அவன்ட சொன்னியாம் உங்க ஊர்ல இந்தத் தெருவுன்னு. ஒங் கெட்ட நேரமா இல்ல எங் கெட்ட நேரமாத் தெரில அவனுக்கு உங்க ஊர்ல ஒரு சொந்தக்காரன் இருந்திருக்கான். ஃபோன் போட்டுக் கேட்டுட்டு குதி குதின்னு குதிச்சிட்டான். தெரியுமாடே.”
“அப்பிடி என்னடே கேட்டான்” எனக்கும் வெடு வெடுவென கோபம் வந்தது.
“அவன் உனக்கு சொந்தமான்னு கேட்டான். என்னடா இவ்வளவு கோவமா கேக்கிறானேன்னு நான் இல்லன்னு சொல்லிட்டேன்”
“ஏம்டே அப்பிடிச்சொன்ன காலைலதான சொந்தம்னு சொன்ன அவனுவட்ட”.
“பழக்கத்துல தெரிஞ்சவன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்” என்றான்.
குழம்பி நின்ற என்னைப் பார்த்து,
“இங்க பாருடே! உங்க ஊரு மாதிரி டவுண்ல வேணா நீ யாரு என்ன ஆளுகன்னு கேக்காம இருக்கலாம். ஆனா இங்க இருக்கிற ஒவ்வொரு பயல்வளும் கிராமத்துலருந்தே வந்தவனுவோ நான் உட்பட. ஒரு வெளியாள் ஊருக்கு வந்தா அத வச்சே நீ யாரப் பாக்க வந்திருக்கன்னு நிறுத்துப் பாப்பான். நீ அவன்ட தெருப் பேர சொன்னத வச்சி என்னப்போட்டு துளைச்சி எடுத்துட்டான். நானே ஹாஸ்டல்ல தங்க முடியாம இங்க வந்து தங்கிருக்கேன். நாலு பேரோட ஒரு ஆளா வாடகை குடுத்து ஓட்டிட்டுருக்கேன். நல்லாருப்ப நீ வந்து அத கெடுத்து மூடிடாத. நான் படிச்ச படிப்புக்கு இந்த பிரைவேட் காலேஜ்தான் கிடைச்சது. இதுக்கு பீஸ் கட்டவே எங்கப்பா கஷ்டப்படுறார். உனக்குத்தான் கவுர்மண்ட் காலேஜ், ஹாஸ்டல்ன்னு கிடைச்சதில்ல இங்க வந்து ஏன்டா உசுற வாங்குற. நீ எங் சொந்தக்காரனே இல்ல வேற ஆளுகன்னு சொல்லிட்டேன். இனிமே நீ என்னை பாக்க வராத. அந்தா பாரு 5B வருது, ஒன்னோட ஹாஸ்டல்ல நிக்கும்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தான்.
அதிர்ச்சியடைந்த நான் டிக்கெட் வாங்கிவிட்டு சன்னலோர சீட்டு பிடித்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். நகரம் பரபரத்துக் கிடந்தது. சிக்னலில் நின்ற கூட்டங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். முன் சீட்டிலிருந்தவரின் எஃப். எம். வானொலியின் விளம்பரத்தில் காற்று, இயற்கை, மாடுங்க வேறென்ன வேண்டும். நமது கிராமங்களிலிருந்து நேரடியாக உங்களுக்குத் தருகிறோம் என குரல்கள் விளமபரத்தனமாய்ச் சிரித்தன.
நானும் சிரித்துக்கொண்டேன்.
இன்னும் இந்த விராட நாட்டில் அஞ்ஞாதமாய் வாழும் கல்வி, தர்மத்தில் சிறந்த கங்கர்களும் சைரந்தரிகளும் பிருகன்னளைகளும் வல்லபன்களும் கிரந்திகன்களும் தந்திரி பாலன்களும் என் கூடவே எட்டுத் திக்கும் அதிரச் சிரித்தார்கள்.
என்ன செய்வது? சாதி கொடுமை பற்றிய கதை எழுதினாலும், மிக கவனமாக ஆதிக்க சாதி எது என்று தெளிவாக குறிப்பிடாமலே எழுத வேண்டி இருக்கிறது. விராட நாடு இணையம் கற்பனை உலகு ஆகியவற்றையும் உட்கொண்டிருக்கிறதே, சிரிப்பது அஞ்ஞாதவாசிகள் மட்டுமல்ல …
(வீமன் விராட நாட்டில் கொண்டிருந்த பெயர் வ்ருகோதரன் என்று எண்ணி இருந்தேன். வல்லபன் என்று தெளிவு கொண்டேன் இன்று. நன்றி. )
Very good story and intha storyla vara scenes ellam naan chinna vayasula nadaintha visyangal pola oru nimidam kan munnea vanthu poiena..!