வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி

இதை விடக் கனவு இலேசாக மிதக்குமா என்பது போல்
ஒரு வண்ணத்துபூச்சி மிதக்கும் வெளியில்.

வண்ணத்துப்பூச்சியாய் நான்
என்னைக் கனவு கண்டு
மிதக்கிறேனா?

அல்லது

வண்ணத்துப் பூச்சி தன் கனவில்
என்னைத் தானெனக் கண்டு
மிதக்கிறதா?

ஆனால் , இப்படி அதை நானும்
அது என்னையும் கனவு காண
நான் *சுவாங் ட்சு இல்லையேயென்று யோசிப்பேன்.

வண்ணத்துப் பூச்சியோ,
கனவில்
மிதக்க முடியாது
நினைவில்
நொண்டும் என்
வெற்று யோசனையில் தன்
சிறகுகள் சிக்கி விடாமல்
கனவின் புதிர்ப் பாதையில்,
கனவு
கனவு காணும்
நனவெனவும்,
ஆனால்
கனவு
கனவு காணின்
நனவும் நனவின்றி
கனவெனவும்
தூர மிதந்து போகும்,

தன்னைத்
தொட முயற்சித்ததால்
தொட முடியாது,
தொட முயற்சிக்காதிருந்திருந்தால்
தொட முடிந்திருக்கும் என்
வெற்று யோசனையைத்
தவிக்க விட்டு
வெளியில்-
வெயிலில்…

*குறிப்பு : சுவாங்-ட்சு ( In mandarin, Zhuangzi ; historically romanized Chuang-Tzu ) புராதான சீனாவின் (4th Century BC) முக்கியமான தாவோயிசத் தத்துவவாதி. ஒரு சமயம், சுவாங்-ட்சு தன்னை ஒரு வண்ணத்துப் பூச்சியாய்க் கனவு கண்டார். தான் ஒரு வண்ணத்துப் பூச்சியே என்று உவந்தார். ஆனால் தான் சுவாங்-ட்சுவே என்று தெரியவில்லை. சட்டென்று விழித்த போது, தான் வண்ணத்துப் பூச்சியல்ல, சுவாங்-ட்சுவே என்று தெரிய வந்தது. அப்போது அவருக்கு உதித்த ஒரு கேள்வி: தான் ஒரு வண்ணத்துப் பூச்சியாய்த் தன்னைக் கனவு காணும் சுவாங்-ட்சுவா நான் அல்லது தான் சுவாங்-ட்சுவாய்த் தன்னைக் கனவு காணும் ஒரு வண்ணத்துப் பூச்சியா நான்? (Whether it was Chuang Tzu dreaming that he was a butterfly or a butterfly dreaming that it was Chuang-Tzu). அனைத்து அனுபவங்களின், அவதானிப்புகளின் சார்பு நிலைக்கும் (relativity), அதே சமயத்தில் அனைத்தின் ஒற்றுமைக்கும் (unity of all things) இடையே இருக்கும் பதற்றத்தின் (tension) இருப்பு நிலையைக் குறிப்பதாய் இது கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.