ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?

கடலூர் வாசு

கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் (2)

ராமகிருஷ்ணா இயக்கம் இந்து மதத்தைச் சார்ந்ததில்லை எனும் நீதிமன்ற வாதத்தில் உள்ளடங்கி இருக்கும் பெரிய பிரச்சினை, சுயமதிப்பின்மையும் இயக்கத்தைத் தாழ்மையான மட்டத்திற்குக் கொண்டுசெல்லும் அவ்வியக்கத்தின் மனோநிலையும் ஆகும். மேற்கத்திய வாழ்வை மேற்கொண்டுள்ள இந்து சமுதாயத்திலும் இந்த மனநிலை பரவலாக உள்ளது. இதன் தாக்கத்தினால் இந்து மதத்தைக் கீழ்ப்படுத்திப் பேசுவதையும் தன்னிச்சைப்படி, தான் மதிக்கும் மற்ற மதங்களுக்கேற்றாற்போல் இந்து மத மார்க்கத்தை திருத்தி அமைப்பதையும் செய்துகொண்டிருக்கிறார்கள். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடாத இந்துக்களின் லக்ஷணம் என்னவென்றால் காலனி ஆட்சியாளர்களின் பார்வையைக் கொண்டிருப்பதுதான். இதனாலேயே, இந்து மதப் பாட நூல்களெல்லாம் விவிலியப் பாடநூல்களைத் தழுவி எழுதப்படுகின்றன. இப்புத்தகங்களில் இந்து அருட்தொண்டர்கள் இயேசுவைபோல் வருணிக்கப்படுகின்றனர். சமீபத்திய இந்து மறைநூல்களின் மொழிபெயர்ப்புகள் பல கடவுள் வழிபாட்டினைப் பற்றி அதிகம் சொல்லாமல் பிற மதங்களைத் திருப்திசெய்ய ஒரு கடவுள் வழிபாட்டை முன்வைக்கிறது.

உதாரணமாக, ஆரிய சமாஜம் வெளியிட்ட காயத்ரி மந்திரத்தின் மொழிபெயர்ப்பில் மூல மந்திரத்தில் இல்லாத வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. யூஸ்டன் ஆரிய சமாஜம்,

ஓ! இறைவா! நீ எங்குமிருக்கிறாய். எல்லையற்ற ஆற்றல் படைத்திருக்கிறாய், எல்லாம் வல்லவர் நீ.
நீதான்ஒளி (2)
நீதான் ஞானம் ஆனந்தம் (3)
நீ பயத்தை நீக்குகிறாய், சிருஷ்டிகர்த்தா, எல்லோரையும்விடஉயர்ந்தவர் (4)
உன் ஒளியை வணங்குகிறோம்; உன்னொளியில் தியானம் செய்கிறோம்.
எங்களறிவைச் சரியான பாதையில் செலுத்துவாயாக.

– இதில் 2 – 4 வரிகள் இடைச்செருகல். மூல மந்திரத்தில் காணப்படாதவை. பல நூற்றாண்டுகளாக இந்துமதம் பிற மதத்தினரால் அலட்சிப்படுத்தப்பட்டது, அவமதிக்கப்பட்டது. தற்போதைய இந்துக்களிடையே இம்மனப்பாங்கு ஆழமாக உள்ளே இறங்கியுள்ளது. இதன் அறிகுறி பிற மதங்களை உயர்த்திப் பேசுவதில் உற்சாகமும் இந்துவாக மட்டும் இருப்பதில் திருப்தியின்மையும் ஆகும்.

ராமகிருஷ்ணர் சொல்கிறார், “நீங்கள் கேள்விப்படும் பிற சமயங்களெல்லாம் இறைவனின் இச்சையினால் வந்தவை; அவையெல்லாம் அவன் இச்சையினாலேயே அழிந்துபோகும். இந்து மதம் மட்டுமே சனாதன தர்மம். ஏனென்றால் அது மட்டுமே எப்போதும் இருந்தது, எப்போதும் இருக்கப்போவது.

ராமகிருஷ்ண மடம் இந்து இயக்கமே

ராமகிருஷ்ணா மடம் இந்து மதத்தைச் சார்ந்ததில்லை என நினைப்பதே தவறு என ஒருவர் என்னைத் திட்டினார். அனைத்து ராமகிருஷ்ண மையங்களிலும் ஹிந்து சூழ்நிலைதான் நிலவுகிறது. இந்துச் சடங்குகளும் அனுஷ்டானங்களுமே நடைபெறுகின்றன என்றார். மடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர் எல்லோருமே இந்துக்கள்தான். பிற மதத்தினர், பல கடவுள் வழிபாடுள்ள இவ்வியக்கத்தில் எவ்வாறு சேருவார்கள் என்பதும் அர்த்தமுள்ள கேள்விதான். இது ஒன்றே போதும் ராமகிருஷ்ண மடம். எல்லா மதங்களையும் அணைத்துச் செல்கிறது எனும் வாதத்தை முறியடிக்க. ராமகிருஷ்ண மடம் இந்துக்களடங்கிய ஒரு குழு. எல்லா மதங்களும் சரிசமமானவையே என்ற பகட்டான கூற்று பெரும்பான்மையான இந்துக்களாலும் கூறப்படுவதுதான். மஹாத்மா காந்தியடிகள், “நான் ஒரு ஹிந்து, நான் ஒரு முஸ்லீம், நான் ஒரு சீக்கியர், நான் ஒரு கிருத்துவன் என்று அறிவித்தபோது ஜின்னாவின் பதில், “இந்துக்கள் மட்டுமே இவ்வாறு கூறுவார்கள்” என்பதாகும்.

தர்க்கம்

மேற்சொன்னதற்கு எதிராகச் சிலர், ராமகிருஷ்ண மடம் பல மதங்களைத் தழுவிய ராமகிருஷ்ணரையும் மற்ற நிறுவனர்களையும்தான் பின்பற்றுகிறது என்கின்றனர். இவர்களில் குறிப்பாக ஒருவர், ராமகிருஷ்ணரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் என்று தம்மை அறிவித்துக்கொள்பவர், எழுப்பும் வாதங்களுக்கு விஸ்தாரமான மறுமொழி கூறுவது அவசியமாகிறது. இவரிடமிருந்து வந்த பெரும்பாலான மின்னஞ்சல்கள் என்னை ஏசுவதாகவே அமைந்துள்ளன. இவர், வலைதளத்தில் நான் அடிக்கடிச் சந்திக்கும் நபர்களைப் போன்றவர்களில் ஒருவராவார். முட்டாள்தனமான, சில சமயங்களில் வேடிக்கையான, ஆனால் இந்து மதத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பிரச்சினைகளுக்கு இந்துக்களாகப் பிறந்தும் முடிவில்லாத வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்துசெய்யும், பிரச்சினைகளைச் சாமர்த்தியமாக முறுக்கும், அதிநவீனப் பிரசங்கங்களைச் செய்யும் கூட்டமிது.

இதற்கு உதாரணம், இயேசு கிறிஸ்து இந்தியாவில் வாழ்ந்ததாகவும் இறந்ததாகவும் உள்ள நம்பிக்கையைப் பற்றிய விவாதமும் பிரதிவாதமும் ஆகும். இதன் பின்னணி, 1894ல் பிரசுரமான La vie inconnue de Jesus-Christ (The Unknown life of Jesus Christ) என்ற தலைப்பிலான, நிகோலஸ் நோட்டோவிட்ச் என்னும் ரஷ்யப் பிரபு எழுதிய புத்தகம். இப்புத்தகத்தில் அவர் இயேசு கிறிஸ்து இந்தியாவில் இருந்ததற்கான சீட்டுக் குறிப்புகளை இமய மலையிலுள்ள ஒரு மடாலயத்தில் கண்டதாக எழுதியுள்ளார். இந்தக் கையெழுத்துப் பிரதி அங்கு இல்லவும் இல்லை, அத்தகைய பிரதி எப்போதுமே இருந்ததில்லை என்று அதன் மடாதிபதியும் கூறியுள்ளார். மேலும் அச்சீட்டுக் குறிப்புகளில் யேசுவிற்கும் பிராம்மணர்களுக்குமிடையே நடந்த சச்சரவுகளையும் பற்றிப் படித்ததாக எழுதபட்டுள்ளதால் இக்குறிப்புகள் காலனி ஆதிக்கத்தின் கடைசிப் பகுதியில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும்; நிச்சயமாக முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டது அன்று என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

இதே முறையைத்தான் ராமகிருஷ்ணரின் கொள்கைகளைப் பின்பற்றும் நபரும் கையாள்கிறார். அவருடைய வாக்கு வன்மையை ஒரு பிரமைக்காக உபயோகப்படுத்துகிறார் ஆனால் ராமகிருஷ்ணர் எல்லா மதக் கடவுள்களையும் வழிபட்டார் எனும் அவர் கூற்றை நிரூபிப்பதற்குத் தேவையான சான்றுகளைக் கொடுக்கத் தவறிவிடுகிறார். இக்கூற்றிற்கு ஆதாரங்களே இல்லை என்று ராம் ஸ்வரூப் அவருடைய சிறிய புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில், இரண்டாம் நபர் ஒருவர் ராமகிருஷ்ணர் தரிசனம் ஒன்றைக் கண்டார் என்றெழுதியதைப் பல வருடங்களுக்குப்பிறகு, மூன்றாம் நபர் அது நபிகளாக இருக்கலாம் என்கிறார். பல வருடங்கள் கழிந்தபின் நான்காம் நபர், இத்தரிசனம் நபிகளுடையதே என்று அழுத்திச்சொல்கிறார் . ராமகிருஷ்ண மடம் போன்ற ஒரு முக்கியமான இயக்கம் இம்மாதிரி விளக்கங்களை சான்றாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. இத்தரிசனம் உண்மை என்று ஒப்புக்கொண்டாலும் ராமகிருஷ்ண மடம் கூறுவதுபோல் அவர் கிருத்துவ மதத்திலோ இஸ்லாமிய மதத்திலோ தொடர்ந்து வழிபட்டார் என்பதாகாது. ஒரு முஸ்லீம் கூறியதுபோல் ஒருவர் தனது விடுமுறை நாள்களில் முஸ்லீமாகவும் விடுமுறை முடிந்தபின் தேவி உபாசனை செய்பவராகவும் மாறமுடியாது. இரண்டு மதங்களுமே இம்மாதிரித் தரிசனங்களை நம்புவதில்லை.

ராமகிருஷ்ண மடத்தின் அனுதாபி முடிவாக விடுக்கும் சவால்: வரையறுக்கப்பட்ட இவ்வாக்குவாதத்தில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்றுதான்; “ராமகிருஷ்ணர் இயேசுவின் தெய்வீகத் தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்ததால் கிருத்துவ மத வழிபாட்டை மேற்கொண்டார், இவ்வழிபாட்டின் பயன்கள் அவரது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது. இது போலவே முகம்மதிய மத வழிபாட்டின்மூலம் தெய்வீக / ஆன்மீகத் திருப்தியடைந்தார் என்னும் இந்த நோக்கைப்பற்றிக் கோன்ராட் எல்ஸ்ட் அவரது முடிவை ஒரேயடியாக எடுத்துச்சொல்ல வேண்டும்.”

.இதற்கு பதில் கூறுவதற்குமுன் புரிந்துகொள்ளவேண்டியது, நான் இதை விளக்க வேண்டியதோ இதற்கான சான்றுகளை முன்வைக்க வேண்டியதோ தேவையில்லை. ராமகிருஷ்ணர் பல மதங்களை வழிபட்டார் என்று நான் கூறவில்லை தங்களுடைய அக்கூற்று சந்தேகத்திற்கிடமானது என்றுதான் நான் சொல்கிறேன். உங்கள் கூற்றுக்கு நீங்கள்தான் சான்று வழங்கவேண்டும். இக்கூற்றை எவரும் மறுக்க முன்வராவிட்டாலும் சான்று தேவையில்லை என்றாகாது. சான்று அளிக்கப்படாதவரை ராம் ஸ்வரூப், சிவப்ரசாத் ரே போன்ற தூய ஹிந்துக்களுக்கு, இக்கூற்றிற்கு ஆதாரமில்லை எனச் சந்தேகப்பட உரிமை உண்டு.

இயேசுவிடம் நம்பிக்கை

ராமகிருஷ்ணர் இந்து மதம் முழுமையானதன்று என நினைத்து ஒரு புதிய மதத்தை ஸ்தாபித்துக் கிருத்துவ முகம்மதியக் கொள்கைகளையும் இப்புதிய மதத்தில் இணைத்து இம்மதங்களின் உண்மைத் தன்மைக்கு தனது தரிசனங்களை ஆதாரமாக வைத்திருந்தால் இது ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கும். அவரது வாழ்நாள் முழுவதும் இப்புதிய மதத்தை விளக்குவதிலும் விரிவுபடுத்தலிலும் கழிந்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? தரிசனங்களைப் பற்றியோ, கிருத்துவ முகம்மதிய மதங்கள் உண்மையானவையா என்பதைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை. இவ்வரிகள் “இது போதாதா உங்கள் கூற்று தவறானது என்றறிய” என வாதாடுகிறது. மேலும் கடந்த 24 வருடங்களாக நடந்த வாக்குவாதத்தில் ஒருமுறைகூட ராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ணர் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையைப்பற்றி அவர் சொன்னதாக ஒரு வரியைக்கூட வெளியிடவில்லை. ராமகிருஷ்ணரின் அனுதாபியும் அவர் சொன்னதையே சுற்றிச்சுற்றி வருகிறாரே தவிர இந்தச் சொற்போரை முடிக்கக்கூடிய ஒன்றை மட்டும் இதுவரை செய்யவில்லை; அதுதான் தக்க ஆதாரத்தை முன்வைப்பது.

ராமகிருஷ்ணர் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தார் என்பதை மதிப்பீடு செய்யவேண்டுமானால் இயேசு கிறிஸ்து பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ராமகிருஷ்ண மடாதிபதிகள் சாரதானந்தாவும் நிகிலானந்தாவும் ராமகிருஷ்ணர் இயேசுவை தரிசித்தாரென்றும் அவருடைய தெய்வீகத்தில் நம்பிக்கைகொண்டவர் என்னும் சர்ச்சையை ஆரம்பித்ததால் அதற்கு மூல காரணமான இயேசுவையே வாதத்திற்குள் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது. உங்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை! வளர்ப்பு முறையினால் இந்துக்கள் இந்து பூஜை புனஸ்காரம் போன்றவைகளைபற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அந்த அளவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. கத்தோலிக்கக் கல்வித் திட்டத்திலேயே படித்ததுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் குணாதிசயங்களை மேற்கொண்டு படித்ததனால் ராமகிருஷ்ண மடத்திலுள்ள இயேசு அனுதாபிகள் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் படித்துத் தெரிந்துகொள்வதைவிடப் பல மடங்கு அளவு ஏற்கெனவே அறிந்தவன் நான். மேலும், புத்திமான்களின் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவு பக்திமான்கள் சமயப் பரப்பாளர்களின் மத போதகங்களை ஏமாந்த ஜனங்களிடையே பரப்புவதற்காக உள்வாங்கிக்கொண்டதைவிட சிறந்ததும் அதிக அளவும் ஆகும் என்பதில் சந்தேகமேயில்லை. மாறாக, சமய ஒப்பீட்டைப் பாடமாக, அதிலும் முக்கியமாகக் கிருத்துவ மதத்தை எடுத்துக் படிக்காத இந்துக்கள் இயேசுவைப்பற்றி உபதேசம் செய்ய முழுத்தகுதி பெற்றவர்களல்லர் என்பதும் உண்மையே.

இயேசுவைப் பற்றி எனக்குத் தெரிந்தது என்ன? அவர் உங்களையும் என்னையும்விட அதிகமான தெய்வத்தன்மை உடையவர் அல்லர். அவர் ஊர் ஊராகச் சென்று நோய்களைக் குணப்படுத்தியவர். நீதிக் கதைகளையும் உவமைகளையும் மக்களைக் கவரும் விதத்தில் பிரசங்கம் செய்தவர். இவருடைய முறைகளை இவரது உறவினர்களும் நண்பர்களும் கண்டுகொண்டதால் இவருடைய சொந்த இடத்தில் ஓர் அதிசயத்தையும் செய்துகாட்டவில்லை (Matthew 13:57, Mark 6:16, Mark 4:1-24.) மற்ற இடங்களில் சிலவற்றைச் செய்யமுடிந்தாலும் சரியான மருந்துகள் இவற்றைவிட நன்றாக வேலை செய்தன. வலிப்பு வந்த ஒருவரை எழுப்பி உட்கார வைத்தாராம். வலிப்பு வந்தவர்களெல்லாமே சிறிது நேரத்தில் நினைவு வந்தவுடன் தானாகவே எழுந்து உட்காருவது அதிசயமன்று, சகஜமான ஒன்றுதான். வலிப்பு முழுவதுமாக குணமடையவில்லை என்று ஓர் உபதேச நூல் கூறுகிறது. (Matthew 12: 3-45.) குணமாக்கும் ஆற்றலில் தவறான நம்பிக்கை வைப்பது இகழ்ச்சியானதுமன்று தெய்வீகமானதுமன்று. பிற மத ஸ்தாபகர்களைப்போல் இயேசுவும் தம்மைத் தீர்க்கதரிசியாகவும் கடவுளின் வாக்குறுதியை மக்களுக்கு அறிவிப்பவராகவும் நினைத்தவர். நான் மறுபடியும் உங்கள் ஆயுட்காலம் முடிவதற்குள்ளேயே இறந்துபின் திரும்புவேன் என பலமுறை கேட்போரிடம் கூறியுள்ளார். நடந்தது என்ன? 2000 வருடங்கள் கழிந்தபின்னும் திரும்பிவரவில்லை. தவறான யூகங்கள் தினசரி நடப்பதும் மிகச் சாதாரணமானதும்தான். ஒரு காசிற்குப் பத்து யூகங்களைக் கேட்கலாம். ஜெஹோவாவின் சாட்சிய மரபைச் சேர்ந்தவர்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி இவ்வுலகம் என்று அழியப்போகிறது என்று அறிவித்தபடி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடி உலகம் 1914-லிலோ 1975-திலோ அழியவில்லை.

இயேசு இறந்தபின் உயிர்த்தெழுந்தார் என்பதுதான் கிருத்துவ மத நம்பிக்கையின் உட்கரு. இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் உள்ள வித்தியாசம், உயிருள்ளவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கலாம்; இறந்தவர்களை அவ்வாறு சந்திக்க இயலாது. இயேசுவைப் பொருத்தவரை உயிர்த்தெழுந்தபின் உயிருள்ள எவரும் அவரைச் சந்திக்கவில்லை. பலர் அவருடைய தோற்றத்தைக் கண்டதாகச் சொல்கின்றனர் ஒருவரும் அவரைச் சந்தித்ததாகத் தெரியவில்லை. செய்யும் பாவத்திற்கு மனிதர்கள் செலுத்தும் ஊதியம் இறப்பும் பிரசவ வேதனையுமாகும். இயேசு கிறிஸ்து இறக்காமல் நம்மிடையே உலாவிக்கொண்டிருந்தால் அவர் தெய்வீகத்தன்மையுடையவர் என ஒப்புக்கொள்ளலாம். புதிய விவிலியத்தை எழுதியவர்கள் இதை அழகாக மேல்நோக்கி சென்றார் என மாற்றியமைத்துள்ளனர். பிரமிக்கத்தக்கதாகத் தோன்றினாலும் மனிதர்களும் சுவர்க்கம் போக மேல்நோக்கிச் செல்வதால் இதுவும் யேசுவிற்கு தெய்வீகத்தன்மையை அளிக்கவில்லை.

இயேசு கிறிஸ்து தெய்வீகத்தன்மை பொருந்தியவரல்லர் என்பதை வேண்டுமளவிற்குச் சொல்லிவிட்டேன். ராமகிருஷ்ண மடம் சொல்வதுபோல் ராமகிருஷ்ணர் முஸ்லீமாக இருந்தாரென்றால் அம்மதத்தினரைப் போலவே அவரும் இயேசுவைத் தெய்வீகமானவரென்று கருதவில்லை என்றுதான் கொள்ளவேண்டும். மாறாக, ராமகிருஷ்ணரின் அனுதாபி வலியுறுத்துவதுபோல் அவர் இயேசுவின் தெய்வீகத்தில் நம்பிக்கை வைத்தவர் என்பது உண்மையானால் ஒன்று அவர் இயேசுவைப்பற்றி முழு விவரங்களை அறிந்தவரல்லர் அல்லது தவறான முடிவை எடுத்தவர் என்றே கொள்ளவேண்டும்.

ராமகிருஷ்ணரின் அனுதாபி, மத போதகர்களின் கண்ணீர் வடிக்கும் கதைகளைக் கேட்டுத் தன்னைத்தானே மயக்கிக்கொண்டு இயேசுவை தரிசித்த ராமகிருஷ்ணரை பூஜிக்கச் சொல்கிறார். நானோ, ஸ்வருப்போ, ரேயோ சமயப் பரப்பாளர்களை அண்டவிடாத பகுத்துணர்வுள்ள ராமகிருஷ்ணரை வழங்குகிறோம். இந்த ராமகிருஷ்ணர் கிருத்துவர் அல்லர். கிருஷ்ணர், ஹனுமான், அதற்கும் மேலாக காளி மாதாவையும் வழிபட்டவர். நீங்களும் ஆனந்தமான ஆரோக்கியமான புனிதமான வாழ்வை, இயேசுவை பொருட்படுத்தத் தேவையில்லாத ஹிந்துவாகவே வாழலாம்.

கிருத்துவராக இருத்தல்

ராமகிருஷ்ணரைப் பற்றிய இரண்டாவது கூற்று, ராமகிருஷ்ணர் கிருத்துவ மதப் பழக்கவழக்கங்களால் கிருத்துவ மதமும் உண்மையானது எனக் கண்டறிந்தார், ஹிந்து சாதனைமூலம் அவரடைந்த பயன்களைக் கிருத்துவ மார்க்கங்களும் அளிக்கும் என்கிறார் என்பதாகும். கிருத்துவராகவோ அல்லது முகம்மதியராகவோ இருத்தல் என்பது துல்லியமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும் . ராமகிருஷ்ணர் இதைப் பூரணமாக நிறைவேற்றவில்லை. எந்தப் பாதிரியும் மௌல்வியும் அவர்களுடைய மதத்தினராக அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சமயப் பரப்பாளர்கள் தாங்கள் மதம் மாற்றியவர்களின் அறிக்கைப் பட்டியலை வெளியிடத் தவறியதில்லை. அவ்வாறிருக்கும்போது ராமகிருஷ்ணரைப் போன்ற முன்னணியில் இருந்த அருட்தொண்டரின் மதமாற்றம் எவ்வாறு அப்பட்டியலில் இடம்பெறாமல் போகும்? ராமகிருஷ்ண மடம் 100 வருடங்கள் ஆகியும் அவர் பெயரைக் குறிப்பிடும் பட்டியலைக் காட்டி ராமகிருஷ்ணர் குறுகிய ஹிந்து மதத்தைப் புறக்கணித்துவிட்டார் என்பதை நிரூபிக்க இயலவில்லை.

ஹிந்து சமய உட்பிரிவுகளில் அங்கத்தினராகச் சேர்வதற்கே சம்பிரதாயமான சடங்குகள் உள்ளன. ராமகிருஷ்ணர் இம்மாதிரியான முகம்மதிய கிருத்துவச் சடங்குகளில் பங்கேற்றதாகத் தெரியவில்லை. சுன்னத்தோ அல்லது ஞானஸ்நானமோ செய்துகொள்ளவில்லை. அவர் கண்டதாகச் சொல்லப்படும் தரிசனமே அவரைக் கிருத்துவராகவோ முகம்மதியராகவோ மாற்றிவிடாது.

மேலும் கிருத்துவப் பழக்கம் முகம்மதியப் பழக்கம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. கிறித்துவராக இருக்கவேண்டும் அல்லது முகம்மதியராக இருக்கவேண்டும். முகம்மதியராகவோ கிருத்துவராகவோ சில சமயங்களிலும் பல கடவுள்களை வழிபடும் ஹிந்துவாக மற்ற சமயங்களிலும் இருப்பதென்பது எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று. மேலும், அவரது பிற மதப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ரம்ஜான் அல்லது லெண்ட் சடங்கைக் கடைபிடித்தாரா? இந்த வாழ்நாள் சைவ உணவுக்காரர் முகம்மதியர்களைப்போல் ஆட்டைப் பலி கொடுத்தாரா? வெள்ளிக் கிழமைதோறும் கத்தோலிக்கர்களைப்போல் மீன் உண்டாரா? அல்லது தற்காலக் கிருத்தக்ச் சமயப் பரப்பாளர்கள் கூறுவதுபோல் சாதிப் பிரிவினையைக் கண்டித்தாரா? போற்றத்தக்க கிருத்துவர் எவராவது அவரைக் கிருத்துவர் என ஏற்றுக்கொண்டாரா? ராமகிருஷ்ணரின் அனுதாபியும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். இதற்கான பதில்களெல்லாம் ஒருவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ராமகிருஷ்ணரின் நம்பிக்கை மட்டுமே இயேசுவைத் தெய்வீகமானவராக ஆக்கவிட முடியாது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ராமகிருஷ்ணர் இயேசுவை வழிபட்டார் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டினாலும் அவர் தவறு செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டியிருக்கும்.

ராமகிருஷ்ண மடத்தின் கூற்றிலுள்ள பல சிக்கல்கள்

முன்பே சொன்னதுபோல், ஒருவர் கிருத்துவராகவும் முஸ்லீமாகவும் ஒரே சமயத்தில் எவ்வாறு இருக்கமுடியும்? ஒரு கிருத்துவரோ முஸ்லீமோ இதை ஒப்புக்கொள்ளவேமாட்டார். கிருத்துவர்கள் இயேசுவைக் கடவுளின் மகனாகவும் கடவுளாகவுமே ஏற்றுக்கொண்டவர்கள். முஸ்லிம்களோ இயேசுவை மனிதராகத்தான் கருதுகின்றனர். கிருத்துவர்கள் இயேசுவின் உயிர்தெழுதலில் நம்பிக்கை உடையவர்கள். முஸ்லிம்களோ இயேசு சிலுவையில் உயிரிழந்தார் என்பதைக்கூட நம்புவதில்லை. நம்பிக்கைகளே வேறுபட்ட இரண்டு மதங்களை ராமகிருஷ்ணரால் ஒரே சமயத்தில் எவ்வாறு தழுவமுடியும்?

முடிவாக, ராமகிருஷ்ணர் காளியை வணங்கிகொண்டே உயிர் நீத்தார் என்பது அனைவரும் அறிந்ததாகும். காளி பெண் கடவுள். இதைவிடப் பல கடவுள்களை வழிபடும் ஒருவரைக் காண்பதரிது. அவர் முஸ்லீமாகவோ கிருத்துவராகவோ இருந்து, இறக்கும் தருவாயில் காளியை வழிபட்டார் என்றால் அவர் ஒரு விசுவாச துரோகியாகிறார். பல கடவுள்களை வழிபடுவதோடு விசுவாச துரோகியாகவும் ஒருவர் இறந்தால் அவர் பேயாக அலைவதோடு நரகத் தீயிலும் தள்ளப்படுவார். இதுதான் கிருத்துவ முகம்மதிய மதங்கள் அளிக்கும் வாக்குறுதி. ஆகவே, ராமகிருஷ்ண மடத்தின் கூற்று உண்மையானால் நூறு வருடங்களுக்கும் மேலாக ராமகிருஷ்ண பரமஹம்சர் நரகத் தீயில் வெந்துகொண்டிருக்கிறார் என்றாகிறது.

ராமகிருஷ்ண மடத்தின் ராமக்ரிஷ்ணவியம் பல மத ஒத்திசைவைப் போதிக்கிறது. .இதைப் போன்ற, எல்லா மதங்களும் உண்மையே எனும் ஒத்திசைவை வேறெங்கும் காணமுடியாது. ஒத்திசைவு என்பதையே கிருத்துவப் பாதிரிகள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். கிருத்துவ மதம் என்றுமே பன்மைத்துவக் கொள்கையைச் சகித்துக் கொண்டதேயில்லை. கிரேக்க ரோமானியச் சூழ்நிலையில் ஆதி கிருத்துவர்கள் ஒத்திசைவுடன் ஒன்றுபட்டு வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர். வயதான ரோமானியப் பெண்கள் குழந்தை ஹோரஸ்ஸுடன் உள்ள ஐசிசை வழிபட்டனர். (பிற்காலத்தில் மேரி குழந்தை இயேசுவோடு இருப்பதைப் போன்ற உணர்வுகளுக்குத் தூண்டுகோலாக இது அமைந்தது.) படையணிப் போர்வீரர்கள் பாரசீகக் கடவுளான மித்ராஸை வழிபட்டனர். பேரரசைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சோல் இன்விக்டஸ் என்றழைக்கப்பட்ட வெல்லமுடியாத சூரியக் கடவுளை வழிபட்டனர். இதற்கெதிராகக் கிருத்துவப் பாதிரிகள் கிருத்துவத் தேவாலயத்திற்கு வெளியே இரட்சிப்பு கிடைக்காது என அறைகூவினர். அவர்கள் பல கடவுள் வழிபாடு, பன்மைத்துவம் ஆகிய இரண்டுமே பொய்யாக இருக்கும் பட்சத்தில் ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தேர்வுசெய்வது அர்த்தமற்றது என இரண்டையுமே நிராகரித்துவிட்டனர்.

ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று

எனது மின்னஞ்சல் நண்பர் விவேகானந்தர் கூறியதாக எழுதுகிறார், “இந்த மனிதரின் (ராமகிருஷ்ணர்) ஆன்மாவை அபகரித்த அடுத்த ஆவல் பிற மதங்கள் உண்மையானவையா என்றறிவதாகும். அதுவரை தன்னுடைய மதத்தைத் தவிரப் பிற மதங்களைப் பற்றி ஒன்றுமே அறியாதவர், பிற மதங்கள் எத்தகையவை எனப் புரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அதற்காக மற்ற மதங்களின் குருமார்களைத் தேடினார். ஒரு முகம்மதிய அருட்தொண்டரைக் கண்டுபிடித்து அவரைப் பணிந்தார். அவர் பரிந்துரைத்த பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்டார். இந்த பக்திப் பயிற்சிகளைத் திட நம்பிக்கையுடன் செய்ததில், முன்செய்த அனுஷ்டானத்தின் மூலம் அடைந்த அதே இலக்கை அடையலாம் என்பதைக் கண்டு வியந்துபோனார். பிறகு இயேசுவின் உண்மையான கிருத்துவ மத அனுபவங்களையும் சேகரித்தார்.“ இதை எழுதியபின், ராமகிருஷ்ண மடத்தின் அனுதாபி எழுதுகிறார், “ராமகிருஷ்ணரின் முதன்மையான சீடர் சொன்னது தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய சுமை என்னுடையது என்கிறார். இல்லையென்றால் ராமகிருஷ்ண மடத்தின் கூற்று உண்மையேயாகும் என்கிறார். மேலும், சுவாமி விவேகானந்தர் சொன்னது பொய்யென்றால் அதற்கான காரணங்களைப் பகிர்ந்து கொள்ளச்சொல்கிறார்.

மறுபடியும் முன்செய்த தவறையே செய்கிறார்; அவர் கூறும் கூற்றிற்கு ஆதாரங்களைக் கொடுக்கவேண்டியது 100 சதவீதம் அவரது பொறுப்பே. என்னுடையதன்று சுவாமி விவேகானந்தர் இதை நேராகப் பார்த்தவரல்லர். பல வருடங்கள் கழிந்த பின்னரே இதைக் கூறியதாகத் தெரிகிறது. (விவேகானந்தரின் அறிக்கை உண்மையென்றே வைத்துகொள்வோம்; ராம் ஸ்வரூப் சுவாமி விவேகானந்தர் எழுதியவைகளெல்லாம் தேர்ந்தறிந்தவர் ராமகிருஷ்ண மடத்தின் இக்கூற்றுகளை விவாதிக்கும் சமயம் விவேகானந்தரை ஒருமுறைகூடக் குறிப்பிடவேயில்லை.) இது எதுவுமே, “ராமகிருஷ்ண மடத்தின் அதிகாரபூர்வமான கொள்கைக்கு வழிவகுத்த, நூறுக்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவத்திற்குச் சான்றுகள் இல்லை” என்று முன்கூறியதின் சீற்றத்தை ஒரு விதத்திலும் தணிக்கவில்லை.

தர்க்க விதிகளை அறியாத ஒருவர் முதன்மைச் சீடர் எனும் ஒரே அதிகார பலத்தைத் துருப்புச் சீட்டாக வாதத்தில் உபயோகிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நான் தைரியமாக விவேகானந்தர் கூறியது பொய் என்று சொன்னால் அதைப் படிக்கும் பெரும்பாலான இந்தியர்களிடையே சினத்தை எழுப்பும் என்று தெரிந்தே இச்சீட்டை விளையாடுகிறார். சமய, அமானுஷ்ய உலகில் எனக்குத் தெரிந்து யாருமே தெரிந்தே பொய்களை உரைப்பதில்லை. ஆனால் பொய்களை உண்மை என நினைத்துப் பேசும் ஆயிரக்கணக்கான மக்களை நான் பார்த்திருக்கிறேன்! கேட்டிருக்கிறேன்!

சுவாமி விவேகானந்தரும் தவறு செய்யக்கூடிய மனிதர்தான். இதைப் படிப்பவர்கள் நான் விவேகானந்தரைப் பழிக்கிறேன் என நினைப்பர். ஆனால், அவரே இதை முழு மனதுடன் ஒப்புக்கொள்வார். ராமகிருஷ்ணரின் தரிசனங்களைப் பற்றிய தவறான விவரத்தை நம்பி அதனை ராமகிருஷ்ண மடம் பரப்பியதற்கான காரணங்களே விவேகானந்தரையும் ஈர்த்திருக்கலாம். அல்லது, இந்துக்களின் பாராட்டத்தக்க குணங்களான ஆர்வமும் கண்ணியமும் பிற மதங்கள் ராமகிருஷ்ணரின் கவனத்தைக் கவர்ந்தது என விவேகானந்தர் கருதியிருக்கலாம். எந்தக் காரணங்கள் விவேகானந்தர் மனத்தில் வேலை செய்தன என்பதை நாம் அறிவதற்கில்லை. ஆனால் அவர் கூறியதாகச் சொல்லப்படும் அறிக்கையை நாம் மதிப்பீடு செய்யலாம். இவ்வறிக்கையை நேராக நோக்கினால் இது உண்மையன்று என்றே மதிப்பிடவேண்டும்.

ரிஷிகளும் ஹிந்து மத மரபுகளும் கூறும் முக்தியெனும் இலக்கு கிருத்துவ மதத்திற்கு அந்நியமானது. ஒரு கிருத்துவும் இந்த இலக்கை அடைந்ததாகக் கூறவில்லை. மற்ற கிருத்துவர்களும் எந்த ஒரு கிருத்துவரையும் இதை அடைந்தவராகக் கூறியதில்லை. இஸ்லாமிய மதமும் இந்த இலக்கை அப்பட்டமாக ஒதுக்குகிறது. அம்மதத்தினுடைய ஐந்து தூண்களின் இலக்கு குரானில் சொல்லும் அல்லாவின் கட்டளைகளைக் கீழ்படிவதுதான். இந்து அனுஷ்டானங்களின் இலக்கும் கிருத்துவ முகம்மதிய அனுஷ்டானங்களின் இலக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. கிருத்துவ வழிபாட்டின் மூலம் ராமகிருஷ்ணர் அவர் முன்னடைந்த இலக்கையே அடைந்தார் என்பது தவறு.

ஹிந்து அனுஷ்டானங்கள் மூலம் அவர் அடைந்த உணர்வு நிலை அவரது முகம்மதிய குருவிடம் கற்ற பயிற்சிகளைச் செய்யும் சமயம் அவரை அண்டியே இருந்திருந்தால் இது சாத்தியம். ஆனால் அந்த உணர்வு நிலையை அவர் முன்னரே அடையாமல் இருந்திருந்தால் கிருத்துவ அல்லது முகம்மதியப் பயிற்சிகளால் மட்டுமே அந்த நிலையை அடைந்திருக்க முடியுமா என்பதே என் கேள்வி.

முடிவுரை

சீதாராம் கோயல் ஒரு சமயம், “ஹிந்துக்கள் தங்களுக்கு எல்லாவற்றைப் பற்றியும் எல்லாம் தெரியும் என நினைப்பவர்கள்” என்றார். ஒரு கையளவு மதங்களைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வது என்பதே கடினமாயிருக்கும்போது ஹிந்துக்களோ அனைத்து மதங்களும் ஒரே உண்மையைத்தான் கூறுகின்றன என எல்லா மதங்களையும் கற்றுணர்ந்ததுபோல் தைரியமாகக் கூறுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில் ராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் எல்லோருமே ஹிந்துக்கள்தான்.

ஹிந்து மதத்தின் வெளிப்புறத்திலும் வளர்ந்து உலகளாவிய மதமாக வளர வேண்டும் என்னும் ராமகிருஷ்ண மடத்தின் லட்சியம் ஹுப்ரிஸ் என்னும் இறுமாப்பே ஆகும். கிரேக்க மதத்தில் ஹபிரிஸ் என்றழைக்கப்படும் இறுமாப்பிற்குக் கடவுளுக்கு நிகராக வேண்டும் என்ற மனிதர்களின் விருப்பத்தையே குறிக்கிறது. இது பெருங்குற்றம். கிருத்துவ மதமும் ஆதாம் ஈவாள் பரம்பரைக் குற்றத்தைச் செய்தார்கள் என்கிறது. பலர் இக்குற்றம் சிற்றின்ப இச்சை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவும் “ஹுபிரிஸ்”தான். இருவரும் கடவுளுக்குச் சமமாக நல்லதையும் கெட்டதையும் முன்கூட்டியே அறிய விரும்பினர். எனவே, பல மதங்கள், (எல்லா மதங்களும் என்றால் அது ஹுப்ரிஸ் ஆகும்) எல்லா மதங்களும் உண்மையானவையே என்பதை “ஹப்ரீஸ்” என்று சொல்வது சரியே. எனவே, எல்லா மதங்களும் என்று கூறும் கெட்ட வழக்கத்தைக் கைவிடுவோம். ஹிந்துக்களின் போராட்டங்கள் என்னை ஈர்த்ததற்குக் காரணம் நான் சந்தித்த சாதாரண ஹிந்துக்களின் எளிமையும் பணிவும்தான். தாம் ஆற்றல் மிகுந்தவர்கள், முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்ற மாயையில் உழலும் ஹிந்துக்கள் அவர்களுடைய உயரக் குதிரையிலிருந்து இறங்கிவந்து தங்களுடைய எளிமையை மீண்டும் கண்டறிந்தால் நன்றாக இருக்கும்.

இரண்டாவதாக, ஹிந்து மதத்தின் எதிரிகளையும் அதன் சவால்களையும் பற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் அவர்களுடைய பிரிவுக்கு வரும் சவால்களால் மட்டுமே தூண்டப்படும் ஹிந்துக்கள் எனக்கு மன வருத்தத்தைத் தருகிறார்கள்.

இஸ்கான் (ISKCON- International Society for Krishna Consciousness) அங்கத்தினர்கள் கிருத்துவ மதத்தையோ இஸ்லாமையோ எதிர்ப்பதில்லை. ஆனால் அவர்களைப்போல் கிருஷ்ணரைச் சுற்றி நில்லாத ஹிந்துக்களை அசிங்கமாக நடத்துகிறார்கள். அதேபோல் ராமகிருஷ்ண மடத்தின் அங்கத்தினர்களும் ராமகிருஷ்ணரின் இயேசு, நபிகளின் தரிசனங்களை நம்பாத ஹிந்துக்களை அபாயகரமானவர்களாக நினைக்கிறார்கள். ராமகிருஷ்ண மடம் தாங்கள் உலகளாவிய தனிக்குழு என்னும் குறுகிய மனப்பான்மையை விலக்கிப் பழையபடி எல்லா ஹிந்துக்களும் அங்கீகரித்த, சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய குழுவாகத் திரும்புவது எல்லோருக்குமே நன்மை தருவதாகும்.

ஹிந்து மதம் இயேசுவிற்கும் நபிகளுக்கும் முன்னரே வந்தது. ரிஷிகளும் சாதுக்களும் நல்லதென்று ஏற்றுக்கொண்ட மதம் இயேசு, நபி, இவ்விருவரின் கொள்கைகளும் இதற்கு முன்னாளில் தேவையாயில்லை. ஹிந்து மதம் ராமகிருஷ்ணரைப் பற்றிய இப்பதிப்புகளை மறந்தால்தான் பிழைக்கும். ராமகிருஷ்ண மடமும் பல வருடங்களாக நாங்கள் தவறிழைத்து விட்டோமென்று ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை. இத்தனை வருடங்களாக இயேசு நபிகள் தெய்வீகமானவர்கள், இரண்டு மதங்களும் ஒரே உண்மையைத்தான் கூறுகின்றன என்னும் தவறான பொய்யான நம்பிக்கையைப் பரப்பி வந்திருக்கிறார்கள். தனித்துவத்திற்காகத் தாங்கள் நடத்திய போராட்டம் முடிவுற்றது, தாங்கள் ஹிந்து மதத்தினரே என்பதை ராமகிருஷ்ண மடம் உரக்க அறிவிக்க வேண்டும். உண்மையாகச் சொல்லப்போனால், அவர்களது நிறுவனர் விவேகானந்தர் அறிவித்தாற்போல் நாங்கள் ஹிந்துக்கள் என்று பெருமையுடன் பறைசாற்றுங்கள் என்று சொன்னதை மறுபடியும் கண்டறிய வேண்டும்.

(நான்காம் அத்தியாயம் – இரண்டாம் பகுதி. Published on Hindu Human Rights, 17, August 2013.)

Series Navigation<< ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா? >>

One Reply to “ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?”

 1. Sir, Hats off to you. Highly needed ideas of the time. The term secular is misunderstood and practiced so in India. Secular is considered as being pro 0ther religion and demeaning Hindu Thatva. The so called elite Hindus take pride in saying that all religions are one and the same and Christianity and Islam are practiced world over and hence there is nothing wrong in surrendering our specialities to them and consider these religions as equal to one another. The irony is neither Islam nor Christianity accept Hindu religion as equal to them. The approach should be that we are great in our own ways and a comparison between unequals is totally illogical. Hindus, in the name of speaking of unity of religions should never indulge in undermining the postulates of Sanatana Dharma.
  In one talk show this morning the speaker said that Adi Sankara brought in Shanmatham comprising various Hindu God’s but felt people can’t be so. He further said Acharya Ramanuja said only Vishnu is supreme and there can’t be different Gods and all people are one and the same. He further added that only Swami Vivekananda could consider people and God as one. It is very clear now that the speaker neither knows Advaita, Vishishtadvaita nor on the claims made in the names of Ramakrishna.The problem is these half baked ideas go deep in the minds of viewers as it is a visual show.
  Hindus should know first of all that
  -they inherited a great treasure
  -they have a duty to preserve and pass it on to next generation
  -they shall try to claim their status regarding the origin and development of Yoga
  -Hinduism is more a way of living and it is Sanatana Dharma
  – living harmoniously does not mean compromising
  -be clear about the nice distinction between Hinduism and Hindutva
  Thank you, Sir

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.