
இருளுக்கும்
பகலுக்குமிடையே
விடியலுக்கு வழங்குகிறாய்
பனிப் பட்டுத்துணியை!
உன் திங்களில் தான்
சூரியனும் கூட
மோகத்தினால் எழுகிறான்
தாமதமாக!
மாலையில் வானமும்
விரைவாகப் போர்த்துகிறது
கம்பளி ஆடையை!
புற்களில் கூட
பூக்களைப் பூக்க விடும்
மார்கழியே!
முள்ளைக் கூட
நூலாக மாற்றி
கோர்த்து விடுகிறாய்
பனிப்பூக்களை!
அவளோடு வானமும்
போட்டிப் போட்டு
கோலமிட்டுள்ளது
பூமி முழுவதும்!
காற்றில்
குளிர் மருந்தேற்றி
உடலெல்லாம் குத்தும்
பனி ஊசியே!
பகலில் பார்!
உடலெல்லாம்
வழிந்து கிடக்கிறது
வெள்ளை இரத்தம்!
ஆலயமணி அடித்ததும்
இமைகள் மூடின
இதயம் திறந்தது
வேண்டுதல் மனுக்கள்
அவன்முன்!
விழுந்த பூ
கையிலா? காதிலா?
மனுவைப் பொருத்து
கோலத்தின் மத்தியில்
ஏற்றிய தீபம்
அழகாக சுடர் விடுகிறது
அவளின்
மூன்றாவது கண்ணாக!
புள்ளிகளிட்டு
அவளிழுத்த
கம்பிச் சிறைக்குள்
ஆசையாக சிறை சென்றன
எனதிரு கண்களும்!
நாள் முழுவதும்
உழைத்த மின் விசிறிக்கு
விடுமுறை மாதமானது
மார்கழி மாதம்!
கொட்டும்
வெள்ளைப் பனிக்கு மத்தியில்
சுருட்டால்
பனியை விரட்டி
கம்பீரமாக நிற்கிறான்
ஒரு காவல்காரன்!