சூர்ய சக்தி வேதியியல்

பானுமதி ந.

சூர்ய நமஸ்காரம் செய்வது நம் உடலுக்கும் உள்உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது என யோக சாத்திரங்கள் சொல்கின்றன. வால்மீகி இராமாயணத்தில், அகஸ்தியர் இராமனுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்லிக்கொடுக்க, அதை உச்சாடனம் செய்து இராவணனை அவர் ஆதவனின் சக்திகொண்டு வெற்றிகொள்கிறார் எனச் சொல்லப்பட்டுள்ளது. கண் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் இந்தத் துதியைச் சொல்லிவர குறைபாடு நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது. அந்தச் சொற்களுக்கு நரம்பினைச் சரிசெய்யும் ஆற்றல் இருக்கலாம். இதைத் தனிப்பட்ட முறையில்தான் புரிந்துகொள்ள முடியும்.

கரிவளியைப் (Carbon dioxide) பழங்கும் பொருட்களாக மாற்றம் செய்யும் செயல்முறையில் அவனுடைய சுடரொளி பயன்படுத்தப்படுகிறது என்கிறது நவீன அறிவியல்.

மனித நலத்திற்கும் அவனது சுகத்திற்கும் தேவையான வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கையில், தொல்லெச்ச எரிபொருள் (fossil fuels) பயன்படுத்தப்படுவதால், பிரித்தெடுக்கும் செயல்முறைகளும் கரி உமிழ்வும் (Carbon emission) சூழல் கேடுகளும் ஏற்படுகின்றன. வீணாகும் கரிவளியை, சூர்ய சக்தியை உபயோகித்துத் தேவையான வேதிப் பொருட்களை உருவாக்கும் ஒரு புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது; இது இரு வகையான நன்மைகளைச் செய்யும் சாத்தியங்கள் உள்ளன – ஒன்று, இந்தத் தேவையற்ற வாயுவை இடு பொருளாகப் பயன்படுத்துவது; இரண்டு, சூர்ய சக்தியை உபயோகிப்பதால், தொல்லெச்சப் பொருட்களை உபயோகிக்காமல், இயற்கை சக்தியைக்கொண்டு மற்றப் பொருட்களை உற்பத்தி செய்வது.

ஒளிச்சேர்க்கை வினையூக்கிகள் (Photo catalysts) இன்று அடைந்துள்ள மேம்படுதலால், இந்தச் செயல்முறை நடைமுறைச் சாத்தியங்களுடன் இருக்கிறது. கரிவளியில், ஆக்ஸிஜனுக்கும் கார்பனுக்கும் இருக்கும் அந்த இறுகிய இரட்டைப் பிணைப்பை அகற்ற உதவும் ஒளிச்சேர்க்கை வினையூக்கிகளை அறிவியலாளர்கள் வடிவமைத்துள்ளனர். சூரியச் சுத்திகரிப்பு (Solar Refineries) நிலையங்கள் அமைக்க இது மிகத் தேவையான ஒன்று; இந்த நிலையங்கள், வீணாகும் வாயுவிலிருந்து உபயோகப்படும் கலவைகளை, முக்கியமாக இயங்குதள மூலக்கூறுகளை (Platform Molecules) உருவாக்கும்; இந்த மூலக்கூறுகளை இடுபொருளாக்கித் தொகுப்பு அல்லது சேர்க்கையின் வழி மருந்துகள், சோப்புகள், உரங்கள், ஜவுளி ஆடைகள் ஆகியவற்றை உற்பத்திசெய்யலாம்.

ஒளிச்சேர்க்கை வினையூக்கிகள் குறைக்கடத்திகள். (Semi conductors.) கரிவளியின் மாற்றத்திற்குத் தேவையான எதிர் மின்னணுக்களை (electrons) உண்டாக்குவதற்கு இந்த வினையூக்கிகளுக்கு மிகு சக்தியுள்ள புறஊதாக் கதிர்கள் (ultraviolet rays) தேவை. சூர்ய ஒளியில் புறஊதாக் கதிர்கள் 5%தான்; அதனால் அது பற்றாக்குறையாக இருக்கிறது; மேலும் புறஊதாக் கதிர்கள் தீங்கு செய்பவை. அபரிமிதமானதும் தீங்கற்றதுமான ஒளியைக்கொண்டு மாசற்ற வேதிப் பொருட்களை உற்பத்திசெய்ய இந்தப் புதிய வினையூக்கிகளைக் கண்டறிவது ஒரு முக்கியக் குறிக்கோளாக இருந்தது. தற்போது இருக்கும் டை(ட்)டானியம் டயாக்ஸ்சைட் (Titanium dioxide) போன்ற வினையூக்கிகளின் கலவை சார்ந்த வடிவம் மற்றும் உருவமைப்பில் கவனமான பொறியியல் மாற்றங்களைச் செய்து இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் வினையூக்கிகளை வடிவமைத்துள்ளார்கள். இது புறஊதாக் கதிர்களினாலேயே கரிவளியை ஆற்றலுடன் மூலக்கூறாக மாற்றினாலும் அதைச் சற்று மயக்கமூட்டி நைட்ரஜனையும் சேர்க்கையில், அதை உண்டாக்குவதில் செலவு செய்யப்படும் சக்தி மிகக் குறைகிறது. பிசின்கள், நுரைகள், ஒட்டுப் பலகைகள், அறைகலன்கள், தரைகள், கிருமி நாசினிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கையில் உபயோகப்படுத்தப்படும் வேதிப் பொருட்களான மெதனால், ஃபார்மால்டிஹெய்ட், ஃபார்மிக் அமிலம் போன்றவைகளைக் கட்புலனாகும் ஒளியுடன் இப்போது சொல்லப்படும் வினையூக்கிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யமுடியும்.

தற்சமயம் கல்வி ஆய்வகங்களிலேயே சூர்ய வேதியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. லாரன்ஸ் பெர்க்லே (Lawrence Berkeley) தேசிய ஆய்வகத்துடன் கூட்டணி அமைத்துக் கலிஃபோர்னியா தொழில்நுட்ப அமைப்பு நடத்தும் செயற்கை ஒளிசேர்ப்பு இணைப்புக் கூட்டமைப்பு (Joint Center for Artificial Photosynthesis) இவற்றில் ஒன்று; சூர்யோதயக் கூட்டமைப்பு (Sunrise Consortium) என்று சொல்லப்படும், நெதர்லேன்ட்ஸ் சார்ந்த பல்கலைகள், தொழிற்கூடத் தொழில்நுட்ப ஆய்வகங்களின் கூட்டணி மற்றொன்று; முல்ஹைம், ஜெர்மனியிலுள்ள (Mulheim, Germanay) பன்முக எதிர்வினைத் துறையின் (Heterogeneous reactions) மேக்ஸ் ப்ளேங்க் (Max Planck) வேதிசக்தி மாற்றுத் துறையும் (Chemical Energy Conversion) இத்தகைய ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றன. சில தொழில் – தொடங்கு நிறுவனங்கள் (Start-ups) கரிவளியை மாற்றம்செய்துப் பயன்படுத்துவதற்கு மாறுபட்ட வழிகளைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ளன – உதாரணமாக, மின்சாரத்தைச் செலுத்தி வேதி மாற்றங்களைக் கொணர்வது. ஆனால் இம்முறையில், மின்சாரம் சூர்ய சக்தியைப் பயன்படுத்தாமல், தொல்லெச்சப் பொருட்களை எரித்துத் தயாரிக்கப்பட்ட ஒன்றென்றால் அது சூழல் மாசுகளை ஏற்படுத்தும்; ஒளி மின்னழுத்தங்கள் (Photovoltaics) மூலம் இந்தக் குறைபாட்டைச் சரி செய்யமுடியும்.

சூர்ய ஒளியைப் பயன்படுத்தி கரிவளியினை தகுந்த வேதிப்பொருட்களாக மாற்றும் இந்த அறிவியல் முறை முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது; இது வணிக மயமாக்கப்படும்; வரும் ஆண்டுகளில் தொழில் – தொடங்கு நிறுவனங்களாலும் மற்ற குழுமங்களாலும் மேலும் வளரும். வேதிப் பொருள் தயாரிக்கும் தொழில் அமைப்புகள், இன்றைய வீணாகும் கரிவளியிலிருந்து உபயோகமாகும் வேதிப் பொருட்களை உற்பத்திசெய்து, கழிவுகளற்ற, சுழல் முறைப் பொருளாதாரமுள்ள, நச்சு உமிழ்வுகளற்ற இலக்கை நோக்கி முன்னேறும் சாத்தியங்கள் மெய்ப்படும்.

Series Navigation<< வலிதரா நுண் ஊசிகள்மெய்நிகர் நோயாளிகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.