சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள்

நாம் பல்வேறு தற்காலிக உடல் உபாதைகளுக்கும் நாள்பட்ட நோய்களுக்கும் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பல்வேறு மருந்துகளை உட்கொள்கின்றோம். பெரும்பாலான நேரங்களில், குறிப்பாகச் சாதாரணக் காய்ச்சல், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, சிறுநீரகத் தொற்று போன்ற நோய்களுக்கு மருந்து உட்கொண்ட பின்பு நாம் நம் வழக்கமான பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விடுவோம். சில குறிப்பிட்ட மருந்துகள் நாம் உட்கொண்டபின்பு, சூரிய ஒளியில் நடமாடும்போது செயலூக்கம் பெற்று நச்சுதன்மை உடையவைகளாக மாறித் தோல் செல்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சூரிய ஒளியால் ஊக்கம்பெறும் மருந்துகள் தோல் புற்றுநோயை உருவாக்குவதற்கான சமிக்ஞைகளையும் உண்டாக்குகின்றன. இதுபோன்ற மருந்துகளைப் பற்றித் தெரிந்துகொள்வது நம்மைச் சூரிய ஒளியால் செயலூக்கம் பெற்று, நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்துகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழிவகுக்கும் .

இம்மாதிரியான பக்க விளைவுகள், உட்கொள்ளும் மருந்தின் அளவைப் பொருத்தும் சூரிய ஒளிக்கு உட்படும் கால அளவு மற்றும் அதன் வீரியம் (intensity) ஆகியவற்றைப் பொருந்தும் மாறுபடும். பொதுவாக வேதியியல் சேர்மங்கள் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சிவிடும் மூலக்கூறு அமைப்பினைப் பெற்றுள்ளன. இந்த மருந்து மூலக்கூறுகளில் உள்ள எலக்ட்ரான்கள் எழுச்சிபெற்று விரீயமுடையவைகளாக மாறுகின்றன. அவை தனிநிலை வீரிய மூலக்கூறுகளான (Free radicals) வீரியத் தன்மையுடைய ஆக்சிஜன் மூலக்கூறுகளை (reactive oxygen species) உருவாக்குகின்றன. இவை தோல் செல்களில் உள்ள மரபணு மூலக்கூறுகளையும் புரதம் உள்ளிட்ட மேலும் பல மூலக்கூறுகளையும் சேதமடையச் செய்கின்றன.

சூரிய ஒளியால் ஊக்கம்பெற்றுத் தோலில் நச்சுத் தன்மை ஏற்படுத்தும் மருந்துகள்

மருந்து வகைஉதாரணம்விளைவு
எதிர்உயிரிகள்டாக்சிசைகிளின் டெட்ராசைகிளின் சிப்ரோபிளாக்சின் லிபோபிளாக்சின்

நச்சுதன்மை
எதிர்ப்பூஞ்சைகள்கிரிசியோபில்வின்ஒவ்வாமை
உயர் அழுத்த மருந்துகள்ஹைட்ரோகுளோரோதயசைட்
வேனிற் கட்டிகள்
கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள்அடார்வஸ்டாடின் லோவாஸ்டாடின் ப்ரவாஸ்டாடின்வேனிற் கட்டிகள் மற்றும் நச்சுத்தன்மை
புற்றுநோய் மருந்துகள்டாக்சோரூபிசின் மீத்தோட்ரிக்சேட்வேனிற் கட்டிகள் தோல் நச்சுத்தன்மை
எதிர்மலேரியா மருந்துகள்குளோரோ குயினைன்நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை
நரம்பு மண்டலம் சார்ந்த மருந்துகள்கார்பமாசிபைன் டாக்சிபின்தோல் நச்சுத்தன்மை
நீரழிவு மருந்துகள்கிளைபன் கிளைமைடு கிளைபுரைடுவேனிற் கட்டிகள்

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள், குறிப்பாக (320-400) நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள்-A (UVA) தோல் செல்களில் உள்ள மூலக்கூறுகளால் உறிஞ்சப்படும்போது நச்சு வினைகளைத் தோல் செல்களில் உண்டாக்குகின்றன.

உதாரணமாக, ஹைட்ரோகுளோரோதயசைட் (Hydrochlorothiazide) வாய்வழி உட்கொள்ளப்படும், உயர் இரத்தம் அழுத்தம், இதய மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்தாகும். மருத்துவர்கள் இதனைச் சிறுநீர் ஊக்கியாகப் (diuretics) பரிந்துரைக்கின்றனர். இந்த மூலக்கூறு புற ஊதாக் கதிர்களை உட்கிரகிக்கும்போது வினையூக்கம் பெற்றுத் தனது ஆற்றல்களை மரபணுக்களில் இருக்கும் தயமின்களுக்கு (T) வழங்கித் தயமின்-தயமின் (T=T) இரட்டை வளைய மூலக்கூறுகளை உருவாக்குகின்றது. இது மரபணுவில் பெரிய அளவிலான சேதத்தினை (damage) ஏற்படுத்தும். இந்தச் சேதங்கள் தோல் செல்களில் இருக்கும் சீர்செய்யும் மூலக்கூறுகளால் (DNA repair mechanism) சரிசெய்யப்படவில்லையெனில் அவை நிரந்தர மரபணுச் சேதமாக உருவாகித் தோல்ப் புற்றுநோய்கள் வருவதற்கு வழிவகுக்கும்.

புற ஊதாக் கதிர்களால் செயலூக்கம் பெரும் மருந்து மூலக்கூறுகளை நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் புதிய வெளிப்பொருளாகக் (antigen) கருதி எதிர் வினையாற்றும்போது ஒவ்வாமை (allergy) போன்ற விளைவுகளையும் தோல்களில் ஏற்படுத்துகின்றது. ஆகவே, இந்தக் கடும் வெயில் காலத்தில் மருந்துகளை உட்கொள்பவர்கள் வெயிலின் தாக்கம் தோல் செல்களின் ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.

(கட்டுரை ஆசிரியர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியியல் துறை இணைப் பேராசிரியர்.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.