சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்

This entry is part 15 of 15 in the series விஞ்ஞான திரித்தல்

ரவி நடராஜன்

இந்திய சினிமாக்களில், குறிப்பாகத் தமிழ் சினிமாவில், பல காட்சிகளில் ‘புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும், புற்று நோய் உண்டாக்கும்,’ என்ற அறிவிப்பு எழுத்துகளில் வருவதை நாம் பார்த்திருப்போம். சினிமா ரசிகர்கள் இதை ஓர் இடையூறாகப் பார்க்கிறார்களே தவிர, இந்த அறிவிப்புகளால் பெரிய பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஓரளவிற்கு, இயக்குனர் பாலசந்தர் தன்னுடைய வியாபாரத்திற்காகச் செய்த ஒரு செயல், சிகரெட் தொழிலின் இன்றைய தொடரும் வெற்றிக்குக் காரணமாகிவிட்டது.

அவர் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த், பல படங்களில், இன்றுவரை, சிகரெட் பிடிப்பதை ஒரு ஸ்டைலாக இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திவிட்டார். அவரைத் தொடர்ந்து இன்றுள்ள சினிமா நடிகர்கள் எல்லோரும் புகைபிடிப்பதை ஓர் இளைஞனின் அடையாளம் ஆக்கிவிட்டார்கள். அத்துடன், பெண்கள் புகைபிடிக்கும் காட்சிகளும் சினிமாவில் அதிகம் இடம்பெறுகிறது. சமூகத்தில் இருப்பதைத்தானே நாங்கள் காட்டுகிறோம் என்று சொல்லி நழுவுகிறார்கள் சினிமாக்காரர்கள்.

 • உலகில் இன்று புகை பிடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது உண்மையென்றாலும் இந்தியா, கிழக்கு யுரோப் மற்றும் ஆப்பிரிகாவில் அது இன்னும் குறையவில்லை என்பது உண்மை.
 • மேலை நாடுகளில், பெரும்பாலான கட்டிடங்களில் புகைபிடிக்க அனுமதிப்பதில்லை. வாடகைக் கார்கள், விமானங்கள், ரயில்கள், தியேட்டர்கள், கடைகள் என்று எங்கும் புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
 • சிகரெட் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் அனுமதிக்கப்படுவதில்லை.
 • யுரோப், வட அமெரிக்காவைவிட இந்த விஷயத்தில் சற்றுப் பின்தங்கி, இன்று விழித்துக்கொண்டுள்ளது. 2004–ல் நான் ஜெர்மெனி சென்றபோது, அங்கு உணவு விடுதிகள் போர்க்காலப் புகைமண்டலம்போலக் காட்சியளித்தன. புகையினால் எனக்கு மிகுந்த தலைவலி வரும் என்பதால், அது இன்னமும் நினைவிருக்கிறது.
 • ல மேற்கத்திய விடுதிகள், புகைபிடிப்பதை முற்றிலும் தடை செய்துள்ளன. This is a smoke free property என்று எழுதிவைத்துப் புகைபிடிப்பவர்களைத் தர்மசங்கடப்படுத்துவதை ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.
 • பள்ளி மாணவர்கள் மற்றும் 18 வயதிற்குக் குறைந்தவர்களுக்குச் சிகரெட் விற்பது மேற்குலகில் குற்றம். பெரும்பாலான பெட்ரோல் பம்புகள், வாங்குவோரின் வயதைச் சரிபார்க்க, கார் ஓட்டும் உரிமத்தைக் கேட்டு வாங்கிச் சரிபார்க்கலாம்.
 • புகைபிடித்தல், ஒரு பொது மருத்துவச் சவால். யு.கே., கனடா மற்றும் சில யுரோப்பிய நாடுகளில், வரிப் பணத்தில் இயங்கும் மருத்துவ அமைப்பு, மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள, பல வகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. (Tobacco deaddiction centers.) புற்றுநோய் வந்து மருத்துவம் பார்ப்பதைவிட இது தேவலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு, இவ்வகை முயற்சிகள்.

ஆனாலும், சிகரெட் கம்பெனிகள் இன்னும் கொடிகட்டிப் பறக்கின்றன. இன்று, புகைபிடித்தல் நோயிலிருந்து விடுவிக்கிறோம் என்று மின் சிகரெட்டுக்கள் வந்து, அதிலும் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. சிகரெட்டிற்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு, பல்லாண்டுகளாகத் தெரிந்த ஒரு விஞ்ஞானமே. ஆனாலும் சிகரெட் தொழில்கள் வெற்றிகரமாக விஞ்ஞானத்தைத் திரித்து இன்னும் உலா வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளில், இவர்களின் திரித்தல் நாடகங்களை விரிவாகப் பார்ப்போம்.

1 950–களில், புகைபிடிப்பதால் புற்றுநோய் உண்டாகும் என்று உலகெங்கும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டது. உடனே சிகரெட் தொழில், அது போதாக்குறை விஞ்ஞானம் என்று சொல்லி ஒப்புக்கொள்ள மறுத்தது. வழக்கம்போல, வழக்கறிஞர்கள் மற்றும் பொதுத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் பிரச்னையைத் திசை திருப்பவும் முயன்றது.

சிகரெட்டில் நிகோடின் என்ற ரசாயனம் உண்டு. சமீப காலம்வரை, சிகரெட் தொழில் தன்னுடைய தயாரிப்பால் நிகோடின் அடிமைத்தனம் (nicotine addiction) உருவாவதில்லை என்று பறைசாற்றி வந்தது. சிகரெட் தொழிலுக்கு, அதன் தயாரிப்பில் மனிதர்கள் அடிமையாவது மிக முக்கியம். ஒரு நாளைக்குப் 12 பாக்கெட் சிகரெட் பிடிப்பேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் மனிதர்கள் அதற்கு மிகத் தேவை.

ிகரெட் தொழில், இளைஞர்கள் / இளைஞிகள் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினரைக் குறிவைத்து வசப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் இவர்களின் குறி இளைஞர்கள் / இளைஞிகள் மீதே இருந்தது என்பது இன்று தெரியவந்துள்ளது. இளமையில் புகைபிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், சிகரெட் தொழிலுக்கு இது பல்லாண்டுகள் லாபம் ஈட்டும்.

தவறான விளம்பரம் (ரஜினி முதல் இன்றைய நடிகர்கள் இதைத்தான் செய்கிறார்கள்) சிகரெட் தொழிலுக்கு அவசியமாக இருந்தது / இருக்கிறது. வீரம், ஆண்மையின் அடையாளம், புத்திசாலித்தனம் மற்றும் கவர்ச்சி சிகரெட் பிடிப்பதால் இருப்பதாகப் பொதுமக்களை நம்பவைப்பது இந்தத் தொழிலின் முக்கிய அங்கம். இதில் எதுவுமே உண்மையன்று. தமிழ் சினிமாவைப் பார்த்த எத்தனை பெண்கள், தங்களுடைய காதலன் சிகரெட் பிடித்தால் பெருமைப் பட்டுக்கொண்டுள்ளார்கள்! சிகரெட் நிறுவனங்கள், தங்கள் சந்தைப் பங்கை தக்க வைத்துக்கொள்வதற்கே இப்படிப் புதிய முறைகளில் விளம்பரம் செய்வதாகப் பறைசாற்றுகிறார்கள்.

பில்டர் சிகரெட் உடல் நலத்திற்குப் பாதகம் விளைவிக்காது என்று நம்பவைத்ததும் சிகரெட் தொழில்தான். இதை நம்பிப் பலரும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்கள். சிகரெட் தொழிலின் சில விளம்பரங்கள் நேரடியாக அல்லாமல், மறைமுகமாக இவ்வகைச் சிகரெட்டு பாக்கெட்களை வசீகரப் பொட்டலங்களின் மூலம் நுகர்வோரை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். ஃபில்டர் அல்லாத சிகரெட் பெட்டிகளை வேண்டுமென்றே அழுது வடியும் பாக்கெட்டில் விற்கிறார்கள். இதையும் சிகரெட் நிறுவனங்கள் மறுக்கின்றன. ஃபில்டர் சிகரெட் தயாரிக்க அதிகச் செலவாகிறது, அதனால் அதன் விலை அதிகம். அத்துடன் அவற்றை விற்க வசீகரம் தேவை என்று பொய்யை அடுக்கிறார்கள்.

இன்னொரு முக்கியப் பிரச்னை, புகை பிடிப்பவர்களைச் சூழ்ந்திருக்கும் நபர்களின் உடல்நிலை. வேறு வழியில்லாமல், சிகரெட்டினால் புற்றுநோய் வரப் பெரும் வாய்ப்புள்ளதை ஒப்புக்கொண்ட இந்தத் தொழில், இரண்டாம் பட்ச பாதிப்பை (second hand smoke impacts) இல்லவே இல்லை என்று சொல்லிவந்தது. புகைபிடிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும், அலுவலகத்தில் தம்முடைய மேலாளர் புகைபிடித்தால், அவருக்குக் கீழிருக்கும் ஊழியர்கள் பொறுத்துக்கொள்ளவே செய்கிறார்கள். இவ்வாறு பொறுத்துக்கொண்டே போனால், மற்றவர்களின் உடல்நலமும் பாதிக்கப்படும். நுரையீரல் புற்றுநோய் புகைபிடிப்பவரைத் தொற்றிக்கொள்வதில் நியாயமிருக்கிறது – சுற்றி இருப்பவர் என்ன பாவம் செய்தார்? கடந்த 10 – 15 ஆண்டுகளாகக் கட்டடங்கள் முழுவதும் புகைபிடிக்கக்கூடாது என்று தடை வந்ததால் பலரும் தப்பித்தார்கள். நல்ல வேளையாக, அரசாங்கங்கள் விஞ்ஞானத்தை நம்பி இன்று சட்டங்களை மாற்றியுள்ளார்கள்.

அரசாங்கங்கள், சிகரெட் தொழிலின் வரிப் பணத்தை ஒரு பெரிய வருமானமாகக் கருதுகின்றன. உதாரணத்திற்கு, இந்திய அரசாங்கம் சிகரெட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் சுங்க வரி ஏராளமானது. சிகரெட்டில் வரியைக் கூட்டினால், அரசாங்கம் இந்தப் பழக்கத்தைக் குறைப்பதுபோலத் தோன்றும். ஆனால், இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எத்தனை விலையானாலும் கொடுக்கத் தயாராக இருப்பர். இதை அறிந்த அரசாங்கம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட் மீதான வரியைக் கூட்டிக்கொண்டே போகிறது. இந்தியச் சிகரெட் நிறுவனமான ஐ,டி.சி.க்கும் அரசாங்கத்துக்கும் சுங்க வரி தொடர்பாக நடந்த ஒரு வழக்கு பல்லாண்டுகள் நீடித்தது. சர்ச்சையில் இருந்த சுங்க வரிப் பணத்தை வைத்து ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டல் சங்கிலியையே உருவாக்கியது ஐ,டி.சி.! சர்ச்சை வேறு ஒன்றுமில்லை. சுங்க வரி, ஒரு சிகரெட் பெட்டியின் விற்பனை மதிப்பில் கணக்கிட வேண்டுமா (tax on retail value) அல்லது பொருளின் அடக்கவிலை மதிப்பில் கணக்கிட வேண்டுமா (tax on cost value) என்பது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், சில ஆயிரம் கோடிகள்.

லகெங்கும் சிகரெட் நிறுவனங்கள் பல விளையாட்டுப் போட்டிகளை ஸ்பான்சர் செய்கின்றன. இந்தியாவில் கிரிகெட், இங்கிலாந்தில் டென்னிஸ் என்று மக்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் இந்த நிறுவனங்கள் என்றும் உலா வருகின்றன. இதில் இரண்டு முக்கிய வியாபாரத் தந்திரங்கள் அடங்கும். முதல் விஷயம், இளைஞர்களை ஊக்குவிப்பதைப்போலத் தோற்றம் அளிக்கவேண்டும். உண்மையான குறிக்கோள், இவர்களது பிராண்ட் இளைஞர்கள் மத்தியில் பரவவேண்டும். மற்றொன்று, பிரபலமான இந்த விளையாட்டுப் போட்டிகளில் விளம்பரம் செய்வது. (Hoardings.) இந்தப் போட்டிகள் உலகெங்கும் ஒளிபரப்பப்படுவதால் சிகரெட் பிராண்டுகள் பிரபலமடைகின்றன.

சில விளையாட்டுகளில், சிகரெட் பிராண்டுகளின் ஸ்பான்ஸர்ஷிப் பற்றிப் பார்ப்போம்:

 1. ஆஸ்த்ரேலிய டெஸ்ட் கிரிகெட்டிற்கு, நெடுநாளைய ஸ்பான்ஸர் Benson and Hedges.
 2. அமெரிக்காவில் ரோடியோ போட்டிகளுக்கு Camel பிராண்டு ஸ்பான்ஸர் செய்துவந்தது.
 3. 1970–களில், Marlboro குதிரை பந்தயக் கோப்பை.
 4. 1970–களில், Philip Morris’ Virginia Slims Women’s Tennis Circuit என்ற பெண்கள் டென்னிஸ் ஸ்பான்ஸர்ஷிப் இருந்தது.
 5. 1994–ல் RJ Reynolds நிறுவனம் 2,736 விளையாட்டுப் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
 6. இந்தியாவில் Wills Trophy என்ற கிரிகெட் போட்டி இருந்தது.

இன்று, நல்ல வேளையாக இந்தப் போட்டிகள் இன்னமும் இருக்கின்றன; ஆனால், சிகரெட் நிறுவனங்கள் மேற்குலகில் விளையாட்டு விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள் வளரும் நாடுகளுக்குத் தாவிவிட்டார்கள்.

இன்று கோவிட்-19 நோயால் பலர் இறந்துவிடுவார்கள் என்று அஞ்சும் நாம், புகைபிடித்தல் காரணமாக வருடத்திற்கு 60 லட்சம் மனிதர்கள் புற்றுநோயால் கொல்லப்படுகிறார்கள் என்பதுபற்றிச் சற்றும் சிந்திப்பதில்லை. இத்தனைக்கும் 2004–ல், 178 நாடுகள் புகையிலை விளம்பரம் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் இந்தியாவும் ஒரு நாடு. 2016–ல், இந்திய நீதிமன்றங்களில் 62 வழக்குகள் சிகரெட் நிறுவனங்கள்மீது விசாரணையில் உள்ளன. இந்தியாவில் 35% முதிர்ந்த மக்கள் (adult population) புகையிலையை ஏதோ ஒரு வகையில் (புகை, மெல்லுதல்) பயன்படுத்திவருகிறார்கள். வருடத்தில் 10 லட்சம் இந்தியர்கள் புகையிலை சார்ந்த நோய்களால் இறக்கிறார்கள். பீடி போன்ற புகையிலைத் தயாரிப்புகள் குடிசைத் தொழிலாக அமோகமாக நடக்கின்றன.

விஞ்ஞான ரீதியாகச் சிகரெட் பற்றியும் அதனால் வரும் உடல்நலக் கேடுகளையும் அடுத்த விஞ்ஞானப் பகுதியில் பார்ப்போம்.

Series Navigation<< உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை

One Reply to “சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்”

 1. தமிழில் அறிவியல் கட்டுரைகள் வெளியிடுவதற்கு சொல்வனம் குழுவுக்கு மிக்க நன்றிகள்.

  இந்தக் கட்டுரையில் நடிகர் ரஜினியியால் தான் சிகரெட் பழக்கம் அதிகரித்தது என்பது ஏதாவது தகவல்கள் சார்ந்ததா அல்லது கட்டுரையாசிரியரின் சொந்த மனப்பதிவு அல்லது வெறுப்பா என்ற கேள்வி எழுகிறது.

  சிகெரெடின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு தேவை என்பது வரவேற்கக்கூடிய கருத்து, அது சரியான தகவல்கள் வழி சொல்லப்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

  தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் இப்போது சிகரெட் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு எல்லா நாடுகளிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. நாம் அவற்றைப் பற்றி அறிவியல் தரவுகளுடன் கொண்டுசெல்லவெண்டும்

  அறிவியல் எந்த தலைப்பில் வரும் கட்டுரைகள் தகவல்கள் சார்ந்த்தாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தக் கேள்வி. பாலச்சந்தர் என்பவர் ரஜினியை அறிமுகப் படுத்தியதே மிகப் பெரிய குற்றம் என நினைக்கும் சொந்த வெறுப்புகளை, அறிவியல் என்ற தலைப்பில் வெளியிடுவது திசைதிருப்பும் முன்னுதரணமாக அமைந்துவிடும்.

  இது போன்ற ‘அறிவியல்’ கட்டுரைகளில் சிகரெட் பழக்க வளர்ச்சிக்கும் சொல்லப்படும் காரணங்களுக்கும் நம்பகமான தகவல்கள் இருந்தால் கட்டுரையில் பகிரவும். அது பலருக்கும் உதவியாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.