
இளைய பாரதத்தை வரவேற்றுப் பாரதி ‘கற்றலொன்று பொய்க்கிலாய்’ எனப் பாடுகிறார். புகழ்பெற்ற, இந்தியாவிலுள்ள அல்லது வெளிநாட்டில் பணி செய்யும் இந்திய அறிவியலாளர்கள், மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள் போன்றவர்களை இன்ஃபோசிஸ் கௌரவித்திருக்கிறது. டிசம்பர் 2, 2020 அன்று நிகழ்நிலை நிகழ்வின்மூலம் அறுவருக்கும் தங்கப்பதக்கம், விருது மற்றும் பணமுடிப்பு $100,000 கொடுத்து, இன்ஃபோசிஸ் அறிவியல் அமைப்பு, திறமைகளைக் கொண்டாடியிருக்கிறது.
துறை | பரிசு பெற்றவர் | பணி இடம் |
உயிர் அறிவியல் (Life Sciences) | ராஜன் சங்கர நாராயணன் | कोशिकीय एवं आणविक जीवविज्ञान केंद्र, செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம், ஹைதராபாத் (CCMB) |
பொறியியல் மற்றும் கணினி அறிவியல் (Engineering and Computer Science) | ஹரி பாலக்ருஷ்ணன் | எம்.ஐ.டி. பொறியியல் அமெரிக்கா |
மனித வளம் (Humanities) | ப்ரா(ச்)சி தேஷ்பாண்டே | சமூக அறிவியலுக்கான ஆய்வு மையம் (CSSSC) கொல்கத்தா |
கணித அறிவியல் (Mathematical Sciences) | சௌரவ் சட்டர்ஜி | ஸ்டான்ஃபோர்டு, அமெரிக்கா |
இயற்பியல் விஞ்ஞானம் (Physical Science) | அரிந்தம் கோஷ் | இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.), பெங்களூரு |
சமூக அறிவியல் (Social Science) | ராஜ் செட்டி | ஹார்வர்டு, அமெரிக்கா |
257 நபர்களின் தகவல்கள் மற்றும் ஆக்கங்களைப் பரிசீலித்து, பேராசிரியர்களும் அறிவாளிகளுமான சிறந்த அறங்கூறுவோர்களால் மேற்குறிப்பிட்ட அறுவர் 2020 இன்ஃபோசிஸ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். “வளர்ந்த நாடுகள், கல்வியிலும் ஆய்வுகளிலும் தங்களை மேம்படுத்திக்கொண்டதால் சிறந்த நிலையை அடைந்துள்ளார்கள். இத்தகைய செயல்பாடுகளைக் குறிக்கோள் என்றுகொண்டு, நாம் வாழும் உலகை முன்னேற்றும் சாத்தியங்களுள்ள அறிவியல் மற்றும் இதரத் துறைகளில் பங்காற்றுபவர்களை மதிக்கும் விதமாக இந்த விருது கொடுக்கப்படுகிறது” என்று திரு, நாராயணமூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

இனி, விருதாளர்களின் சிறந்த செயல்கள் பற்றிப் பார்ப்போம்
ராஜன் சங்கர நாராயணன்
உயிரிகளின் அடிப்படைச் செயல்பாடான, பழுதற்ற மொழிபெயர்ப்பாக மரபணுத் தகவல்கள், புரோட்டீன் மூலக்கூறுகளாக அமைவதை அறிவது இவரது ஆய்வு. இது நுண்ணுயிர்க்கொல்லி மற்றும் நோயெதிர்ப்பை அடக்கும் மருந்துகளை வடிவமைப்பதில் மிகவும் பயன்படும். சிறு பாக்டீரியா முதல் மனிதன் வரை, வாழும் திசுக்களின் உயிரியல் செயல்பாடுகள் புரதத்தால் அமைகின்றன. அமினோ அமிலங்கள், மரபணுவின் கட்டளைக்கேற்ப, ஒரு மாலையில் கோர்க்கப்பட்ட பல மணிகளைப்போல இந்தப் புரதத்தினைப் பெரிய பல்படிக் கோர்வைகளாக்குகின்றன. இந்தக் கோர்வை பிரத்யேக மூலக்கூறு செயல்பாடுகளைச் செய்கிறது- உடல் வளர்ச்சி, மரபணு சார்ந்த விதிமுறைகள், நோய்க் கிருமிகளுக்கு எதிரான ஆற்றல், உடலுக்குள் பல பொருட்களை தேவையான இடத்திற்குக் கொண்டுசெல்லுவது போன்றவை இதில் அடங்கும். எனவே, புரதக் கட்டுமானமான அமினோ அமிலங்களில் வாழ்வு அமைந்திருக்கிறது.
ஹரி பாலக்ருஷ்ணன்
மாஸச்சூஸெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலையில் பேராசிரியாக உள்ளார். கணினி வலைப்பின்னலிலும் வளரும் சாத்தியங்களுள்ள மொபைல் மற்றும் கம்பியில்லா அமைப்புகளிலும் அரிய சாதனை செய்துள்ளார். மொபைல் டெலிமேடிக்ஸ் (தொலைதூரத்திற்குக் கணினிச் செய்திகளை அனுப்பும் செயல்) இவரது சிறப்பு. இதை வணிகப்படுத்தினால் ஓட்டுனரின் செயல்களைக் கண்காணித்து, பயண வீதிகளைப் பாதுகாப்பாக்கலாம்.
ப்ராச்சி தேஷ்பாண்டே
தெற்கு ஆசியாவின் வரலாற்றின் வரலாறை நுட்பமான, நுணுக்கமான விதத்தில் அணுகியவர். ‘க்ரியேடிவ் பாஸ்ட்’ என்ற நூலுக்காக இந்த விருதினைப் பெறுகிறார். மஹாராஷ்ட்ராவில் ‘நவீன வரலாற்று எழுத்து’ மலர்ந்த விதத்தை மராத்தியர்களின் காலம் தொட்டு இந்த நூல் பேசுகிறது. மேற்கு இந்தியாவின் வரலாறு பற்றிப் புதுமையான திறப்புகளைத் தருகிறது.
சௌரவ் சட்டர்ஜி
நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் இயற்பியல் துறையில் இந்தப் பேராசிரியர் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். இது கணித அறிவியல் துறை சார்ந்த விருது. இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பணியாற்றுகிறார். பெரிதும் மாறுபடும், தொடர்பின்றி எடுக்கப்பட்ட(சீரற்ற) வரைபடங்களில் உள்ள, ஒத்துப்போகும் மாறுபடும் தரவுகளைத் தொகுக்கும் இதன் உபயோகம் அளவிட முடியாதது. வேறுபடும் ஒன்றுபடும் தகவல்களின் மூலம் அடையும் தரவுகளைக்கொண்டு பல முடிவுகளை எளிதாக எடுக்கமுடியும்.
அரிந்தம் கோஷ்
இந்திய அறிவியல் கழகம், பெங்களூருவில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இயற்பியல் அறிவியலுக்கான பரிசு இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அணுவளவில் மெலிதான, இரு- பரிமாண, குறைக் கடத்திகளை இவர் அமைத்துள்ளார். இது புது வகையான செயல்பாட்டு மின்னணு சாதனங்களையும் ஒளிச்சாதனங்களையும் வெப்ப அளவீட்டுக் கருவிகளையும் உருவாக்குவதில் உதவும். இவர் கண்டறிந்துள்ள ஒளி – பொருள் உட்செயல்பாடுகள் குவாண்டம் தொழில்நுட்பத்திற்கு இன்றியமையாதவை.
ராஜ் செட்டி
சமூக அறிவியல் துறையில் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேராசிரியர் முன்னெடுத்த முக்கிய ஆய்வுகள்: ‘பொருளாதார வாய்ப்புகளின் தடைகளை அடையாளப்படுத்துதல்’, ‘வாழ்வு மேம்பட வறுமையைத் தவிர்க்க உதவும் தீர்வுகள்.’ இரண்டுமே இன்று மூன்றாம் உலக நாடுகளுக்கு மிகவும் அவசியம். மிகப் பெரும் தகவல்களிலிருந்து விவேகத்துடன் தரவுகள்பெற இவர் செய்துள்ள ஆய்வும் இவரது அதிதிறமையும் பொருளாதாரத் துறையின் அணுகு முறையை மாற்றும் வல்லமை உடையவை.
விருதாளர்களை இன்ஃபோசிஸ் மிகுதிறமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது என்பது வரலாறு. முன்னர் இந்த விருதினைப் பெற்ற சிலர், புகழ் வாய்ந்த அனைத்துலக விருதுகளான ‘பொருளாதார அறிவியலில் நோபல் நினைவுப் பரிசு’, ‘ஃபீல்ட்ஸ் மெடல்’, ‘பத்மஸ்ரீ’ பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதிமிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போகிறது என்பதே நற்செய்தி. தெளிவுபெற்ற மதியினைக் கொண்டாடுவோம்.