
மேற்கின் கடற்கரையில்
அந்திவான சூரியன்
சிவப்பை தெளித்து
விடைபெறும் வேளையில்..
அலைகளிடமிருந்து
அதுகாறும் காத்துநின்ற
தன் மணல் கோபுரத்தை
பச்சை வண்ண வாளியில்
பெயர்த்தெடுத்து வந்து
தங்கமீன்கள் வளரும்
தொட்டியில் பரப்பி
என் கடல் என்றான்..
பின்னொரு நாளில்
முன்னெப்போதோ
அடர் வனமாயிருந்த
இன்றைக்கு
நகருக்கு மிக அருகில்
கட்டடங்களாக
காத்திருக்கும்
கட்டங்களுக்குள்
ஒன்றையேனும்
கையகப்படுத்த
அலைந்த வேளையில்
வழுவழுப்பை
போர்த்தியிருந்த
சில கற்கள்
அவன் வசமாயின…
அன்றிலிருந்து
கடலோடு
ஒரு காடும்
வசிக்கிறது
எங்கள் கூட்டில்…