இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?

50, 20-ஓவர்களென ஒரு நாளைக்குள் கதை முடிந்துவிடும் வகையான வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் உலகில் பிரபலமாகிவிட்ட காலமிது. லட்சோபலட்சம் ரசிகர்களின் கவனம் பெரிதும் இந்தப்பக்கம் இருப்பதால், கிரிக்கெட்டின் மூலமும் பணம்பார்க்க ஆசைப்படும் கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் பார்வையும் இங்கேதான். வருமானமின்றி கடை ஓட்ட முடியுமா என்ன? கிரிக்கெட்டின் சர்வதேசத் தலைமை நிர்வாகமான ஐசிசி-யும் இந்தவகைக் கிரிக்கெட் ஆட்டங்களின் வளர்ச்சிக்கு ஒத்துப்போக, ஒவ்வொரு கிரிக்கெட் விளையாடும் நாடும் வேறு நாட்டினதோடான இருதரப்பு தொடர்களில் அதிகம் டி-20, ஒரு-நாள் கிரிக்கெட் போட்டிகளை அட்டவணையில் சேர்க்கின்றன. நான்கு வருடத்திற்கு ஒருமுறை தலைகாட்டும் 50-ஓவர் மற்றும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பைகளுக்காக,  உலகின் ஒவ்வொரு பிரதான அணியும் தன்னைத் தயார்செய்துகொள்ள வேண்டியிருப்பதும் இதற்குக் காரணம். 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து போன்ற  நாடுகளின் கிரிக்கெட் அணிகள், டெஸ்ட் மற்றும் ஒரு-நாள்/ டி-20 போட்டிகளுக்கென தனித்தனி கேப்டன்களை நியமித்திருக்கின்றன. ஐந்து-நாள் டெஸ்ட் போட்டியின் கதை ஒருபுறம் இருக்க, ஒரே நாளில், சிலமணிநேரங்களில் முடிந்துவிடும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் மேட்ச்சுகளின் கதையே அலாதி என்பதும், அதற்கான திட்டமிடல், களவியூகம் போன்றவை வேறுவித தளங்களில் பயணிப்பவை என்பதுமே இதற்குக் காரணம்.

இந்திய அணியும் டெஸ்ட்டிற்கு  ஒருவர், மற்றவகைக் கிரிக்கெட்டிற்கென இன்னொருவர் என இரண்டு கேப்டன்களைக் கொண்டிருப்பதே நல்லது என்கிற கோரிக்கைகள் ஏற்கனவே  உலவிவந்தவைதான். நவம்பர் 2020-ல் அமீரகத்தில் ஐபிஎல்  நடந்துமுடிந்த கையோடு, அது சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. மும்பை இண்டியன்ஸ் அணிக்கு சிறப்பாகத் தலைமை தாங்கிய ரோஹித் ஷர்மா ஐபிஎல் கோப்பையை வென்றபின், அவரே இந்தியாவின் டி-20 மற்றும் ஒரு-நாள் அணிகளுக்கும் தலைமை தாங்கவேண்டும் என்கிற ஆலோசனைகள், அலசல்கள் மீடியாவில், சமூகவலைதளங்களில் நுரைத்துப் பொங்கின. இந்தியாவின் ப்ரிமியர் டி-20 கிரிக்கெட் போட்டியான ஐபிஎல்-இன்போது இளம் வீரர்களின் திறன் வெளிப்பாடோடு, கேப்டன்களின் பிரதான பங்களிப்பு/தலைமைப் பண்புகள் போன்றவையும் கூர்மையாக ரசிகர்கள், விமர்சகர்கள், வர்ணனையாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுவது இயற்கைதான். ஐந்தாவது தடவையாக, ஐபிஎல் கோப்பையை உயர்த்திப் பிடித்த மும்பையின் ரோஹித், அனைவரின் கவனத்திலும் நிலவினார். ஐபிஎல் ஃபைனலில் ஒருமுறைகூடத் தன் பெங்களூரு அணியைக் கொண்டுவந்து நிறுத்தமுடியாத கேப்டன் கோஹ்லியும் ஸ்கேனரில் வந்தார் அப்போது.  உயர்திறன் கொண்ட இரு சர்வதேச பேட்ஸ்மன்கள், கேப்டன்கள் ஒப்பிடப்படல் ஒருபுறம் இருக்கட்டும். இரட்டைத் தலைமை விஷயத்தில் மற்ற அணிகளை இந்தியா தொடரவேண்டுமா என்பது இப்போது படபடத்துக்கொண்டிருக்கும் கேள்வி. ஆம் எனவும், தேவையில்லை எனவும் ஆங்காங்கே உயரும் சத்தங்கள். 

’விராட் கோலி டி-20 நன்றாக விளையாடுகிறார், அணியில் இருக்கிறார் என்றால், அவரே டி-20-யிலும் கேப்டனாக இருக்கட்டுமே..நமது (கிரிக்கெட்) கலாச்சாரம் இரண்டு கேப்டன்களை அனுமதிப்பதில்லை..’ என்கிறார் முன்னாள் இந்தியா கேப்டன் கபில்தேவ். மாறாக இந்திய உலகக்கோப்பை ஆடிய வீரரான கௌதம் கம்பீர் சீறுகிறார் இன்னொரு முனையிலிருந்து. ’டி-20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா காட்டிவரும் தலைமைப்பண்புகள், மனிதமேலாண்மை ஆகியவை கவனிக்கத் தக்கவை. எந்த ஒரு டி-20 இறுதிப்போட்டிக்கும் அணியை நடத்திச் செல்லமுடியாத விராட் கோஹ்லி ஏன் இந்திய டி-20 கேப்டனாக நீடிக்கவேண்டும்?’ என்பது அவரது கூரான கேள்வி. ’ஐபிஎல் பங்களிப்பைக்கொண்டு, இந்திய அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படலாமெனில், கேப்டன் மட்டும் ஏன் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படக் கூடாது?’ – எனவும் கேட்டார்.  ’ரோஹித்தின் தலைமைக் குணங்களை, ஆட்டவியூகத் திறனை, அவருக்கு இந்தியாவின் டி-20 அணித் தலைமையைத் தருவதன் மூலம் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவுக்குத்தான் நஷ்டம்’ என்கிறார் கம்பீர்.

குறைந்த-ஓவர் கிரிக்கெட்டில், கடந்த இரண்டாண்டுகளில் கோஹ்லி,  ரோஹித்தின் தலைமைகளை ஒப்பிடவேண்டுமானால், கோஹ்லி கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்காகத் தலைமை தாங்கிய ஒரு-நாள் மற்றும் டி-20 என 16 போட்டிகள் கணக்கில் வரும். அதில் அவரது வெற்றிவிகிதம் கிட்டத்தட்ட  60%. தலைமை மோசமில்லை. ரோஹித்தை கவனிக்க, அவரது ஐபிஎல்-மும்பை இண்டியன்ஸ் தலைமை செயல்பாடுகளே முன் நிற்கின்றன. கடுமையான போட்டிதளத்தில் ஆடப்படும் ஐபிஎல்-இல், ஐந்து முறை சேம்பியன்ஷிப் ’டைட்டில் வின்னர்’ என்பது, எந்த ஒரு டி-20 கேப்டனுக்கும் பெருமை தரும் விஷயம். கேப்டனாக அதில் அவரது வெற்றி விகிதம் 65%. கூடவே அணியின் வெவ்வேறுவகை,  மாறுபட்ட திறன் நிலை ஆட்டக்காரர்களில் அனுபவ மற்றும் கத்துக்குட்டிகளை தட்டிக்கொடுத்து, அணைத்துச் செல்லும் ரோஹித்தின் பாங்கே வேறு. மைதானத்தில் ஏதேனும் குளறுபடி நேர்ந்தால் உடனே முகத்தில் படபடப்புக் கோடுகளைக் காண்பிப்பவர் அல்லர் அவர். ‘கம்பை எடுத்துக்கொண்டு அணி வீரர்களின் பின்னால் ஓடும் கேப்டன்சி அல்ல என்னுடையது’ என்று சமீபத்தில் அவரது வாயிலிருந்தே வந்திருக்கிறது. உண்மையும் அதுதான்.   

டெஸ்ட் மற்றும் குறைந்த-ஓவர் கிரிக்கெட்டுக்கு என இரண்டு இந்திய கேப்டன்கள் நியமிக்கப்பட்டால் அதனை வெவ்வேறு தளங்களில்  எதிர்கொள்வதில், வீரர்களின் மனநிலையில் அழுத்தம் உண்டாகும். ஆட்டப் பங்களிப்பும் பாதிக்கப்படலாம் என்கிற சிலரின் கருத்து ஒத்துக்கொள்ளமுடியாதது. அசட்டுத்தனமானது. டெஸ்ட்,  ஒரு-நாள், டி-20 என மூன்றுவகை கிரிக்கெட்டிலும் பொதுவாக ஆடும் பௌலர்கள், பேட்ஸ்மன்கள் என, ஒவ்வொரு நாட்டு அணியிலும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். இந்தியாவிலும் அவ்வாறே சில வீரர்கள் பொதுவாக உண்டு. டெஸ்ட்டில் கோஹ்லியின் கீழே ஆடியதால், ஒரு-நாள், டி-20 போட்டிகளில் ரோஹித்தின் கீழ் விளையாடுவதற்கு, அனுபவ, மற்றும் தொழில்-நிலை வீரர்களான அவர்களுக்கு எந்தவிதத் தயக்கமோ, சிக்கலோ நேராது. எந்த வகை கிரிக்கெட்டானாலும், அணியில் அவர்களது பொறுப்பு என்பது வகைப்படுத்தப்பட்டது, வரையறுக்கப்பட்டதுதான். பிரச்னையேதும் அவர்களுக்கோ, அவர்களோடு கூட ஆடும் மற்றவர்களுக்கோ எழ வாய்ப்பில்லை. மேலும், ரோஹித் ஷர்மா அணியின் அனுபவம் மிக்க வீரர் என்பதோடல்லாமல்,  அனைத்து வீரர்களாலும் மதிக்கப்படுபவரும்கூட என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். தனிப்பட்ட முறையிலும் அவர் இந்தியாவின் ஒரு தலைசிறந்த ’ஒரு-நாள்’ மற்றும் டி-20 கிரிக்கெட் வீரர் என்பதும், வெள்ளைப்பந்து கிரிக்கெட் தலைமை விஷயத்தில் அவருக்கு சாதகமாகவே செல்லும். மேலும், ரோஹித்தின் தலைமையில், அவரது பண்பு மட்டும் அணுகுமுறைகளினால், வியூகங்களால் டி-20, ஒருநாள் போட்டிகளின்போது, இந்திய அணியில் ஒரு புத்துணர்ச்சி புகுவதற்கும் வாய்ப்பு உண்டு.

இந்தியக் கிரிக்கெட் கேப்டன்சியை இரண்டாகப் பிரிப்பதில் மேலும் அனுகூலம் இருக்கிறது. விராட் கோஹ்லி இந்தியாவின் பிரதான பேட்ஸ்மன் மற்றும் அனைத்து வகைமைகளிலும் தற்போதைய கேப்டன் என்பதால், கூடுதல் பொறுப்பு தரும் அழுத்தம் எப்போதும் அவர் மீது இருக்கத்தான் செய்யும் – அவர் அதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும். மூன்றுவகை கிரிக்கெட்டுகளிலும் அவர் தொடர்ந்து தலைமை வகித்துக்கொண்டு, தனிப்பட்ட பேட்ஸ்மன் என்கிற நிலையில் ஆடுகையில் அழுத்தம் கூடுமே தவிர, குறையாது. தொடர்ந்த கடும் உழைப்பு, அதிகப்படியான பொறுப்பு என்பது மன, உடல் ஆரோக்யத்தில் எங்கோ ஒரு நிலையில், ஒரு கட்டத்தில் காவு வாங்கத்தான் செய்யும். போதிய ஓய்வு என்பது, பொறுப்புக் குறைத்தலின் வழியாகத் தரப்பட்டால்தான், கோஹ்லியைப்போன்ற ஒரு திறனான பேட்ஸ்மன் வெகுகாலத்துக்கு இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு தர வழி வகுக்கும். அதனால், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான தலைமையை மட்டும் அவருக்குக் கொடுத்து, மற்றவகை ஆட்டங்களின் தலைமையிலிருந்து உடனடியாக அவரை விடுவித்து, அணியின் ஒரு முக்கிய பேட்ஸ்மனாக மட்டும் அவற்றில் பங்களிப்பு செய்ய அனுமதிக்கவேண்டும். 

மேலே சொன்னவற்றை ஆழ்ந்து நோக்குகையில், இந்திய கிரிக்கெட்டுக்கு இரட்டைத் தலைமை வருவதற்கான நேரம் தற்போது கூடிவந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.  கிரிக்கெட் தேர்வுக்குழு மேலும் இதனைத் தள்ளிப்போடாமல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், அடுத்த வருடம் வரப்போகும் டி-20 உலகக்கோப்பையிலேயே அதன் நல்லபலனைக் காண நேரும். சர்வதேசவெளியில் இந்திய அணிகளின் எதிர்காலம் சீராக முன்னேற, பிரகாசிக்கவும் இந்த அணுகுமுறை வழிவகுக்கும்.

5 Replies to “இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?”

  1. நல்ல அலசல்.  என்னைப்பொறுத்த வரை கோஹ்லிக்கு எந்த வகை கிரிக்கெட்டிலும் தலைமைப்பண்பு குறைவு என்றே தோன்றுகிறது.  அக்ரெஸ்ஸிவ் என்கிற வார்த்தைக்கு தவறான பொருள் மனதில் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றும்.  கங்குலியிடம் அக்ரெஷனும் உண்டு, அரவனைத்துச் செல்லும் பங்கும் உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.