மகரந்தம்

கோரா

பேய் நடமாடும் சொகுசுக் குடியிருப்புகள்

கொரோனா வைரஸ் பரவல் தரும் கோவிட் -19 வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காக்களில் விண்ணைத் தொடுமளவுக்கு மேலும் மேலும் உயர்கையில் அது ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசியப் பகுதிகளில் நனைந்த பட்டாசுபோல் அடக்கி வாசித்து வருகிறது. ஏன் அப்படி என்பது புரியாதபோதிலும், சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் என்ற சிறு பகுதியில் கொரோனா பரவல் கடந்த 10 நாள்களில் இருநூறை நெருங்கிவிட்டது என்ற செய்தி, ஜனவரியில் நிலைமை சீராகிவிடும் என நம்பியிருந்த தமிழ்நாட்டு மக்களைக் கலங்க வைத்திருக்கிறது, வலிமை மிக்க இரண்டாவது அலையின் ஆரம்பம் இது என அவர்கள் கருதியதால்.

உலக நாடுகளில் வைரஸ் தாக்கம் எப்படி இருந்தாலும், எல்லா இடங்களிலும் மக்களின் எதிர்வினைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பது பொதுவான கருத்து . முதலில் இந்தியத் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் வாழும் மக்களின் கொரோனா எதிர்வினைகளை ஆராயலாம்.

கொரோனா பரவல் காரணமாகப் பெங்களூருவில் மத்திய வணிகப் பகுதியில் வாடகை வீடுகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்தது. வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி (WFH-Work From Home) மற்றும் குழந்தைகளுக்கு ஆன்-லைன் வகுப்புகள் போன்ற காரணங்களால் தொழில் வல்லுநர்கள் புறநகரிலுள்ள பெரிய வசதியான வீடுகளை நாடிச் சென்றார்கள். நகரத்தின் ஆடம்பரமான கட்டுமானங்களில் பொதுப் பயன்பாட்டில் இருந்த நீச்சல் குளம், ஜிம் health போன்றவை தவிர்க்கப்பட்டன. ஊதியக் குறைப்பு, வேலை இழப்பு போன்றவையும் குடிப்பெயர்வுக்குக் காரணிகளாயின. பாதிக்கப்பட்டோர் வாடகை மற்றும் வசதி குறைந்த வீடுகளுக்கோ அல்லது சொந்த ஊர்களுக்கோ சென்றுவிட்டனர். நகர்ப்புறத்தில் பல வீடுகள் காலியானதால், வாடகைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை மே மாதத்தைவிட ஜூன் மாதத்தில் 112% கூடி இருந்தது. அதே சமயம் புறநகர்ப் பகுதிகளில் வாடகை வீட்டுக்கான தேவை 35% அதிகரித்தது.

கொரோனா காலத்தில் பேரங்காடிகள் (malls ) பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. இவ்வாண்டில் கட்டிமுடிக்கத் திட்டமிட்டிருந்த 54 புதுப் பேரங்காடிகளில் வெறும் 5 மட்டுமே முற்றுப்பெற்றன. பேரங்காடிகளில் அதிகக் கூட்டத்தை ஈர்க்கும் உணவு விடுதி மற்றும் திரையரங்குகள் ஊரடங்கின் கடைசியில் பயன்பாட்டுக்கு வந்தன. நிதியாண்டின் கடைசிக் காலாண்டு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஒட்டுமொத்த வணிகம் 80 விழுக்காடாகக் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில் மிதமான கொரோனா தாக்கமே இத்தகைய இருத்தலிய நெருக்கடிக்கு இட்டுச் சென்றுவிட்டதென்றால், கொரோனா மூன்றாவது அலையாக முடுக்கிவிடப்பட்ட வேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் நிலை என்னவாகும்? நிலம் மற்றும் உழைப்பின் விலையேற்றத்தைச் சரிக்கட்டி லாபம் பெறவேண்டுமானால், இதுவரை கண்டிராத மிகப் பெரிய அளவில் டாம்பீக வீடுகளை உருவாக்கிப் பணக்காரர்களுக்கு விற்பதுவே விவேகம் என்ற நினைப்பில் இருக்கும் அமெரிக்கக் கட்டுமான மேம்பாட்டாளர்கள், 1980-க்குப்பின் முதன் முறையாகப் பெருத்த லாபமடைய, 2020-ல் கட்டிவரும் 3,71,000 வீடுகளில் 80 விழுக்காடான சொகுசு வீடுகளை யாருக்கு வாடகைக்குக் கொடுப்பது, அதன் வசதிகளே சாபங்களாகிவிட்ட இந்த கொரோனா காலத்தில்?

அமெரிக்க நகரங்களின் இன்றைய நிலைமை என்ன? நியூ யார்க்கில் சொகுசு அடுக்ககக் குடியிருப்பில் இருந்த பணக்கார மாணவர்கள், அதிகச் சம்பளம் பெறும் இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் நகரில் இரண்டாவது வீடு வைத்திருப்போர் நகர மையங்களை விட்டகன்றனர் அல்லது செலவுகளைக் குறைத்துக்கொண்டனர். சொகுசு வீட்டு வாடகை கடந்த ஆண்டைவிட 19% குறைந்தது. அவற்றின் தேவையும் குறைந்தது. வாடகை குறைந்த பின்னரும் ஏற்க ஆளில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் நிலைமையும் அவ்வாறே.

Slate: Luxury Ghost Towns.
https://slate.com/business/2020/12/cities-luxury-apartments-condos-pandemic.html

வாஷிங்டன் D.C. சிட்டி சென்டரின் வரலாற்றுடன் மேற்காணும் இணைப்பிலுள்ள கட்டுரை ஆரம்பிக்கிறது. வாஷிங்டன் நகர மையத்தில் பத்துக்கும் குறைந்த ஆண்டுகளாக நகரின் கருத்தரங்கு மையமாக, சீருந்து தரிப்பிடமாக, இன்டர்சிட்டி பேருந்து முனையமாக, டென்னிஸ் விளையாட்டு அரங்கமாக வெவ்வேறு பயன்பாடுகளில் நகர மேட்டிமைக்குப் பொருந்தாமல் திருஷ்டிப் பரிகாரமாக இருந்துவந்த 4 தொகுப்பு ( 10 ஏக்கர் )வீட்டுமனை அது. நகர மேயர் அந்தோணி வில்லியம்ஸ் அதில் நூலகம், மலிவு விலை வீட்டு வசதி கொண்ட கலப்புப் பயன்பாட்டுச் சமுதாயத்தை உருவாக்க நினைத்தார். ஆனால் 2013-ல் அதே இடத்தில் சிட்டி சென்டர் DC என்னும் உணவகங்களும் கடைகளும் நிறைந்து மினுங்கும் பிரம்மாண்டம் 950 மில்லியன் டாலர் செலவில் திறக்கப்பட்டது. தரைத் தளத்தில் டாம்பீக சில்லறை விற்பனை (Gucci, Ferragamo, Herme`s) மற்றும் சொகுசு அலுவலகம், சொந்த வீடுகள், அடுக்ககங்கள் எனப் பலவும் இருந்தன. பிரபலங்கள் அங்கே வீடு வாங்கினார்கள். 500 சதுர அடி ஸ்டூடியோ வீட்டு மாத வாடகை 1,900 டாலரில் தொடங்கியது.

2020 கடைசியில் அந்த இடம் பயனர்களால் அநேகமாகக் கைவிடப்பட்டிருந்தது. பயனர் வராத கடைகளில் சிப்பந்திகள் எதையோ குடைந்துகொண்டிருந்தனர். பாதுகாவலர் தங்க முலாமிட்ட கதவுகளை வெறித்துப் பார்த்திருந்தனர். பார்வையாளர் இல்லாத நீரூற்றுகள் அச்சமூட்டின. சிறப்பாகப் பராமரிக்கப்படும் தீம்-பார்க்கைக் காட்சிகள் முடிந்த நேரத்தில் பார்ப்பது போன்ற அனுபவமே நாள் முழுதும் கிடைத்தது. அடுக்ககங்களை வாடகை தந்து பயன்படுத்திவந்த மேல்தட்டுப் பயனர்கள் எங்கோ ஓடிப்போயினர்.

இந்தத் தலைமுறையின் “நகரச் சார்பியத்துக்குத் திரும்பி வருதல்” (Return to urbanism) என்னும் இயக்கத்தின்படி, வேலை, இன்பக் கேளிக்கை, மதுபானக் கூடம், உணவகங்கள் அனைத்தும் வீட்டிலிருந்து சிறு நடையில் கடக்கக்கூடிய தூரத்தில் இருக்கவேண்டும். நகர்ப்புற புத்தெழுச்சி (urban revitalization) என்னும் அவர்களின் கருத்தாக்கம் வேண்டுவதெல்லாம், நகரெங்கும் புதிதாகச் சொகுசு வீடுகளைக் கட்டிப் பளிச்சிடும் அக்கம்பக்கத்தை உருவாக்கி, வாழத் தகுந்ததாக நகரத் தன்மைகொண்டதாகச் செய்துமுடித்தல். ஒரே இடத்தில் உண்டு, உறங்கி, வேலை பார்த்து,விளையாடிக் களிக்க முடிகிற வாழ்க்கை இந்த வளர்ச்சிக்கான தாரக மந்திரம். உலகில் இத்தகைய சுலப நடமாட்டம் வேண்டுவோரின் நோக்கம், பிரத்யேக மேல்மட்டச் சமூகத்தை உருவாக்கிக்கொள்வதுதான். அதையே அவர்கள் பரம்பரைச் சொத்தாகப் பாவித்துக்கொள்வார்கள்.

கொரோனா காலத்தில் இந்தக் கொள்கையின் எதிர்உரை (antithesis) நிறுவப்பட்டுவிட்டது தனிமைப்படுத்திக்கொள்ளல், சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவை சமூக உருவாக்கலுக்கு எதிரானவை. நகர்ப்புறச் சொகுசு அடுக்ககக் குடியிருப்புகள் கொரோனா காலத்தில் வேண்டப்படாதவையாக ஆகிவிட்டன. ஏனெனில் அவற்றின் குறுகலான நடமாட்டப் பகுதிகள் (corridors), பொதுப் பயன்பாட்டுக்கு உரிய வசதிகள் (shared amenities) மற்றும் நீச்சல் குளம், நீராவிக் குளியல், உடற்பயிற்சிக் கூடம் ஆகியன அனைத்தும் சமூக நெருக்கத்தை ஊக்குவிப்பவை. கொரோனா காலத்தில் தவிர்க்கப்படவேண்டியவை. மேலும் நகர நிர்வாகங்கள் மூன்றாவது அலை கோவிட் பயத்தால் தளர்வு செய்திருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி இருக்கின்றன.

சொகுசு வீடுகளுக்குப் பயனர் கிடைக்காமலும் தேடுவோருக்கு வாடகை குறைந்த வீடுகள் ஏதும் இல்லாமலும் போய்விட்ட இன்றைய நிலையில், கோவிட் ஊரடங்கின்போது முடக்கப்பட்ட சிறு மளிகைக் கடைகள் (bodegas), புத்தகக் கடைகள் மற்றும் சிறு உணவகம், பழுதுபார்ப்புக் கடைகள் போன்றவை (niche mom and பாப் shops)வாடகை இடம் தேடி அணி திரண்டுள்ளன. விதிகளைத் தளர்த்தி இவர்களுக்கு உதவுவதே நியாயமான அணுகுமுறை. கோவிட் கால நஷ்டத்தை ஈடு செய்வதற்காகவாவது கட்டுமான மேம்பாட்டாளர்கள் மலிவு விலை வீட்டுவசதி ஏற்படுத்த முன்வரவேண்டும். அதைச் சமூகச் சேவையாகக் கருதவேண்டும்.


கமகம: பழங்கால மணங்களின் அரும்பொருளகம் (Museum of Past Scents )

OLYMPUS DIGITAL CAMERA

பழங்கால வாசனைகளை மீட்டெடுக்கும் திட்டப் பணிகளைக் குறிக்கும் இக்கட்டுரையை அறிமுகப்படுத்துகிற வேளையில், 2018-ல் தன் சஞ்சாரம் என்ற தமிழ்ப் புதினத்துக்காக சாகித்ய அகாடெமி பரிசுபெற்ற தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் (எஸ். ரா) அவர்களின் யாமம் என்ற புதினம் நினைவுக்கு வருகிறது. அது, விடுதலைக்கு முந்தைய தமிழகத்தில், தயாரிப்புப் பக்குவம் (formula) அறிந்த ஒரு குடும்பம், தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக மட்டுமே தயாரித்து வந்த ஓர் அற்புதமான நறுமண திரவத்தைப் ( perfume) பயன்படுத்திய குடும்பங்களின் வாழ்வில் அது என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்தது என்பது நேர்ப்பாங்கற்ற முறையில் (nonlinear ) எழுதப்பட்ட அற்புதப் படைப்பு. என்னைத் தொடர்ந்து மூன்று முறை படிக்கத்தூண்டி முழுமையான வாசிப்பு இன்பமளித்த புதினம் அது.

காற்றில் பரவியுள்ள திடப்பொருளின் அடர்த்தியே மணமாக உணரப்படுகிறது. தீப்பற்றி எரிகையில் காற்றில் பரவும் கரிமப் புகையை நாம் சிறிது சுவாசித்துவிடும்போது எச்சரிக்கையடைவது இதனாலேயே. கோவிட் பாதிப்புக்கு ஆளான சிலர் தொண்டைப் புண், சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் முகர்வு மற்றும் சுவை உணர்வில்லாமல் இருந்தது மூளை நரம்புகள் பாதிப்பால்தான் என்று மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக, முகர்வுணர்வு என்பது மூளையுடன் இணைந்து நிகழும் ஓர் அற்புதம்.

மூக்கு நாம் வாசனைகளை நுகர்வதற்காக அமைந்த பிரத்யேகச் செல்களைக்கொண்ட தரவுப் பகுப்பாய்வு எந்திரம். (Data analytic machine.) ஐம்புலன்களுள் முக்கியமானதும்கூட. அது மூளையின் துணையோடு நறுமணம் முதல் துர்நாற்றம் வரையிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணங்களை வேறுபடுத்தி உணரும் மிக நுட்பமான அங்கம்.

மணங்கள் நிலையற்றவை. நம் நினைவகங்களில் பதித்து நினைவூட்டிக்கொள்ள முடியாதவை. இறந்தகாலக் காட்சிகளை நினைவுக்குக் கொண்டுவருவது போலவோ அல்லது மனதில் பதிந்த பாடலைக் குரல் எழுப்பாமல் மனதுக்குள் ஓடவிட்டு ரசிப்பது போலவோ நினைத்த நேரத்தில் மதுரை மல்லிகையின் நறுமணத்தையும் மாதவரம் பால் பண்ணையின் சாண நாற்றத்தையும் மனதால் நுகரமுடியாது.

நகர்ப்புற இயற்கை நிலத் தோற்றப் (urban landscaping) பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்திவரும் நகர அதிகாரிகள், நகர்ப்புற மணக்கூறுகளில் (smellscape) சிலவற்றை ஓர் எதிர்மறை நோக்குடன் செயல்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட சில துர்நாற்றங்களை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும் என நினைக்கின்றனர். இத்தகைய குறுகிய செயல் திட்டம் உருவாவதின் மூலக்காரணம், மணக்கூறுகளை அளவிடுவது மிகக் கடினம் என்பதே. SmellyMaps என்ற அமைப்பு சமூக ஊடகத்தின் தரவுகளில் இருந்து அனைத்து நகர்ப்புற மணக்கூறுகளையும் பெற்று இலக்கமாக்கி (digitise) நகரின் இலக்கமுறை வரைபடம் உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. இந்த வரைபடத்தில் ஏதாவது ஒரு தெருவை க்ளிக்கி அதன் நாற்ற அளவைத் அறிந்துகொள்ளலாம். இதைச் செயல்படுத்தினால் நம் கவனம் வழக்கமான சில நாற்றங்களில் மட்டும் குவிவதைத் தவிர்க்கலாம். மேலும் நகரின் சிக்கலான ஒட்டுமொத்த மணக்கூறுகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.

முன்பெல்லாம் சென்னை மாநகரின் பழமை வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் விலங்கியல் பூங்கா ஆகியவை முறையே செத்த காலேஜ், உயிர் காலேஜ் என்று பாமரர்களால் அழைக்கப்பட்டுவந்தன. பாமரர்களின் ரசனை பண்படுத்தப்படாததாகத் தோன்றலாம். ஆனால் அதில் கொஞ்சம் யதார்த்தவாதமும் புலப்படுகிறது. ராஜா ரவிவர்மா ஓவியங்களில் பெண்ணின் இயற்கை மணம் வீசாமல் இருப்பதால் அப்படிப் பெயரிட்டிருக்கலாம். அந்தக் கால மணங்களை எப்படி உயிர்ப்பிப்பது?ஐரோப்பிய நாடுகள் அத்தகைய முயற்சியில் தற்போது இறங்கியுள்ளன.

16ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரைக்குமான காலத்து ஐரோப்பாவின் மணங்களின் சேகரிப்பு மற்றும் மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில், Odeuropa என்னும் பன்னாட்டு திட்டப்பணி, கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. திட்டப் பணிக்காலம் மூன்று ஆண்டுகள், செலவு 3.3 மில்லியன் டாலர்கள். விரிவான செயல் திட்டங்கள்: வரலாறு மற்றும் இலக்கியப் பகுப்பாய்வுகள், பொறிகற்றல் (Machine learning) மற்றும் வேதியியல் முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மணங்களை உறுதிசெய்வது. பழங்கால மணங்களைப் பற்றிய தரவுகள் அனைத்தும் மக்கள் தம் மனப் பதிவுகளை (impressions) வார்த்தைகளில் சொன்னவை. அதைக்கொண்டு தயாரிக்கப்படும் விவரச் சீட்டுகள் வெறும் கருத்துருவாக்கங்கள் (conceptualizations) மட்டுமே. அவை அகப் பார்வைக்கு (perception) சமமாகிவிட மாட்டா. உதாரணமாக, மல்லிகையில் 26 வகைகள் உண்டு. தோட்டக்கலை நிபுணர் மட்டுமே மதுரை மல்லியின் காற்றில் பரவும் தன்மையின் அளவு மற்றும் நறுமணத்தின் குறிப்புகளை அறிந்திருக்க முடியும்.

அருங்காட்சியகங்கள், கலைப் பொருட்கள், ஓவியங்கள், கற்கள், எலும்புகள், விவசாயக் கருவிகள், போர்க் கருவிகள் போன்ற பலவற்றை காட்சிப்படுத்தி வரலாற்றைச் செரிவூட்டுகின்றன. எனினும் தொடுதல், முகர்தல் போன்ற புலன் சார்ந்த பரிமாணங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதால் மனிதத்தின் கடந்த காலத்துடன் முறையான இணைப்பை உண்டாக்குவது நமக்கு இயலாமல் போகிறது.

Odeuropa ஆராய்ச்சியாளர்கள், 2,50,000 படங்கள் (images ) மற்றும் ஏழு மொழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பிரதிகள் (texts) – பாடப் புத்தகங்களில் உள்ள மணம் பற்றிய மருத்துவ விவரிப்புகள் முதற்கொண்டு புதினங்களில் அல்லது சஞ்சிகைகளில் வரும் நறுமணப் பொருள் பற்றிய விவரங்கள் வரை அனைத்தும் – ஆகியவற்றைத் தேடியெடுத்து எந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பத்தைக்கொண்டு வகைப்படுத்தித் தொகுத்து பழங்கால மணங்களைப் பட்டியலிடுகிறார்கள் . இது நறுமணப் பொருள் செய்வோருக்கும் வேதியியலாளருக்கும் வழிகாட்டியாகப் பயன்படும்.

மணங்களின் அரும்பொருளகம் (museum of scents) பற்றிக் குறிப்பிடும் கட்டுரை ஆசிரியர், அது ஏற்கெனவே அரிதான மணங்களின் நூலகம் (Library of Curious Scents) என்ற பெயரில் கலிஃபோர்னியாவின் பேர்க்கேளேயில் இயங்கி வருகிறது என்கிறார். Mandy Aftel (2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Fragrant – என்ற நூலின் ஆசிரியர்) அதன் காப்பாளர் என்கிறார். Odeuroppa இதில் விட்டுப்போன ஆனால் மனித குலம் சார்ந்த முக்கிய மணங்களை (உதாரணமாக இறந்தவர்களின் உணர்ச்சிச் செறிவுள்ள ஆடைகள்) இணைத்துப் பட்டியலை நிறைவு செய்யும் என்கிறார்.

Odeuropa குழுவின் ஒரு துணைக்குழு பாரம்பரிய மணம் (Smell of Heritage) என்னும் பெயர்கொண்ட ஆராய்ச்சித் திட்டப் பணியை கையாளுகிறது. பழங்கால உலகு எவ்வித மணம் கொண்டிருந்தது என்று ஆய்ந்து வருகிறது.

சுட்டி:
http://nautil.us/issue/93/forerunners/what-did-the-past-smell-like


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.