வலிதரா நுண் ஊசிகள்

வளர்ந்து வரும் பத்து தொழில் நுட்பங்கள்-2020 என்ற அறிமுகக் கட்டுரையைச் சென்ற இதழில் பார்த்தோம். ஒவ்வொன்றாக அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம்.

திரைப்படங்களில் தந்தையின் அன்பைக் காட்டும் விதமாக ஒரு காட்சி இடம் பெறும். அவரது குழந்தைக்கு மருத்துவர் ஊசி போடுவார்; இவர் கண்களில் நீர் திரளும். இன்றும் கூட வன்மையாக மேனியை நிரடும் ஊசிகள் பலருக்கு வலி நிறைந்த ஒன்றுதான். நுண் ஊசிகள் வலி ஏற்படுத்தாமல் உங்கள் உடலில் உங்களுக்குத் தேவையான மருந்தினை செலுத்தும் என்றால், நீங்கள் ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துவிட்டீர்கள் என்று பொருள்.

தீ நுண்மியினால் மனித இனம் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கண்டறிவது முதல் அதற்கான தடுப்பூசிகளை உண்டாக்குவது வரை தன்னார்வல மனிதர்களை நாம் ‘சோதனை மாதிரி’ யாகக் கொள்ள வேண்டியுள்ளது. ‘இலக்க’ (Digital) முறைகளில் இவற்றை பரிசோதித்துப் பார்ப்பது தடுப்பூசியின் திறனை நன்கு அறியவும், மேம்படுத்தவும், பக்க விளைவுகளை அறியவும், அவற்றைப் போக்கவும் மிக ஏற்புடைய ஒன்றாகப் பரிணமிக்கும் அல்லவா? தன்னார்வலர்கள் இல்லாமல் எண் இலக்க வழி முறைகளைப் பயன்படுத்தும் போது நேர விரயங்கள் குறைந்து துல்லியமானத் தரவுகளைக் கொண்டு சிறந்த இறுதியை அடைய முடியும். ‘அறிவியல் அமெரிக்கன்’ (Scientific American)  மற்றும் ‘உலகப் பொருளாதார அமைப்பு’ (World Economic Forum) முன்னெடுத்த, வளர்ந்து வரும் தொழில் நுட்ப மாநாட்டில் பரிசீலிக்கப்பட்ட 75-ல், இடம் பெற்ற பத்தில், ஒன்று நுண் ஊசி தொழில் நுட்பமாகும்.

நுண் ஊசிகள் வலியற்ற முறையில் மருந்தை செலுத்துவதற்கும், இரத்தப் பரிசோதனைக்காக உறிஞ்சப்படும் குருதியை நோயாளியே அறியாமல் எடுப்பதற்கும் பயன்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில் மிகவும்  தேவையான இது, பெரு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. உறிகுழலில் உள்ளதோ, ஒட்டோ, நுண் ஊசிகள் நரம்பு முடிவுகளை அணுகாததால், வலி ஏற்படுத்துவதில்லை. நீளத்தில் 50-2000 மைக்ரான்தான் அவை ( ஒரு தாளின் ஆழ அளவு) 1-100 மைக்ரான் அகலம் (மனித முடியின் அகலம்) இறந்த, வெளித் தோல் அடுக்கை ஊடுருவி, இரண்டாவது அடுக்கான மேல் தோலில் நுழைகின்றன. இந்த இரண்டாவது அடுக்கில் திசுக்களும், இடையிடையே திரவமும் உள்ளது; இந்த நுண் ஊசிகள் உள் தோலை, எங்கே நரம்புகளின் இறுதி உள்ளதோ, அதைப் பெரும்பாலும் தொடுவதில்லை. அந்த உள் தோலில்தான் குருதிக் குழாய்களும், நிண நீர்க் குழாய்களும் இணைப்புத் திசுக்களும் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. எனவே அவைகள் உட்செலுத்தப்படும் ஊசியால் சேதமடைவதில்லை.

இந்த நுண் ஊசி உறிகுழல்களும், ஒட்டுக்களும் ஏற்கெனவே தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கின்றன. நரம்பு சார்ந்த வலிகளுக்கும், நீரிழிவு நோய்க்கும், புற்று நோய்க்குமான குணப்படுத்தும் மருத்துவ முன் செயல்பாடுகளில் இடம் பெறும் வகையில் அமைந்துள்ளன. மரபான முறையில் தோலில் பரந்து ஊடுறுவும் மருந்துகள், அத்தகைய பரவு முறையினாலேயே ஆற்றலைச் சிறிது இழந்துவிடுகின்றன. ஆனால், மேல் தோலிலோ, உள் தோலிலோ நேரே மருந்தைச் செலுத்தும் நுண் ஊசிகள், குறியை நோக்கிச் செயல்படும் அம்புகளைப் போன்றவை. தோல் நோய்களான தடிப்புத் தோல் அழற்சி, மரு, பாலுண்ணி, சில வகையான புற்று நோய் இவற்றைக் குணப்படுத்துவதற்காக நக்ஷத்திர வடிவிலுள்ள ஊசிகளுடன் பிணி நீக்கும் பூச்சுகளைச் செலுத்தும் புது மாதிரி செயல் முறையை இந்த வருடம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மென்மையான உள் நுழைவுகள் கொண்ட இந்த ஊசிகள், தோலை வலியில்லாமல் துளைத்து பிணி போக்கும் மருந்தை சிறப்பாகச் செலுத்துகின்றன.

விரைவாக, வலியற்ற முறைகளில் இரத்தத்தையும், திரவத்தையும் (இடைவெளிகளில் உள்ளவை) உடல் நலப் பரிசோதனைகளுக்காகவும் நோயைக் கண்டறியும் பரிசோதனைகளுக்காவும் பயன்படுத்தும் வகையில் இந்த ஊசிகள் வணிகமுறைப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.  இந்த ஊசி ஏற்படுத்தும் நுண் துளைகள், மேல் தோலிலோ, உள் தோலிலோ இடம் சார்ந்த அழுத்தத்தை உண்டாக்கி சேமிப்புக் கலனில் குருதியோ, திரவமோ  சேர வழி செய்கின்றன. இவ் ஊசிகள் உயிர் உணரிகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், சில நிமிடங்களில் நம் உடல் நலம் சார்ந்த சில முக்கிய அடிப்படை விவரங்களான சர்க்கரை, கொழுப்பு, மது, மருந்துகள் கொண்டு வந்திருக்கும் சில விளைவுகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை அறிந்து துரிதமாகச் செயல் பட முடியும்.

நலப் பரிசோதனை செய்யும் ஆய்வகத்திலோ, நம் வீட்டிலோ, நாம் இருக்கும் இடத்திலோ இவற்றைப் பயன்படுத்த முடியும். நாம் இருக்கும் இடத்தில் இருக்க, நம் பரிசோதனை முடிவுகள் உடனடியாகத் தெரிய வரும் வகையில் சில வகைகள் உள்ளன; அல்லது அதை ஆய்வகத்திற்கு அனுப்பி விடையறியும் வழிகளும் உள்ளன. ஒழுங்கு முறைத் தடைகளை வென்று ஒரு பொருள் இன்று பயன்பாட்டிற்கு வந்து விட்டது. செவென்த் சென்ஸ் பயோசிஸ்ட்த்தின் (Seventh Sense Bio System) டேப் (TAP-push button system) என்ற குருதி சேகரிப்புக் கலன் அமெரிக்காவாலும் யூரோப்பாவாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது; தனி மனிதர் தானே தன் அடிப்படை நலத்தை அறியவோ, தொடர்ந்து கண்காணிக்கவோ, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கவோ உதவும் வகையில் இக்கருவி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆய்வகச் சூழல்களில், நுண் ஊசிகள், கம்பியற்ற தொடர்பு சாதனங்களுடன் இணைக்கப்பட்டு, உயிரின் மூலக்கூறை (Molecules) அளவிடும் வகை உருவாகியுள்ளது. தத்தம் உடல் நிலைக்கேற்ற அளவில் மருந்து என்ற கனவு இதில் நனவாகும்; மூலக்கூறின் அளவின் படி, மருந்தின் அளவு நிர்ணயிக்கப்படும், அது ஊசியின் மூலம் வழங்கப்படும். அனைவருக்கும் பொருந்தும் ஆயத்த ஆடைகள் அல்ல, நமக்கென்றே தைக்கப்பட்டவை, சரியாகத்தானே இருக்க வேண்டும்?

நுண் ஊசிகள் அதிக செலவு வைக்கும் ஒன்றல்ல; அவற்றைப் பயன் படுத்துவதும் எளிதே. மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களிலும், புவியியல் ரீதியாக உடனடியாக அணுக முடியாத இடங்களிலும் இதன் பயன்பாடு மனித நலத்தைக் காக்கும். எளிதாகப் பயன் படுத்தும் வகையில் மைக்ரான் பயோ மெடிகல் (Micron Biomedical) அப்படி ஒரு கருவியை வடிவமைத்துள்ளது- மென்மையான கட்டு ஒட்டுத் துணி (Bandage) அது; எவரும் உபயோகிக்க முடியும். விலங்குகள் மற்றும் (ஆரம்ப நிலை) மனித முன்னோட்டங்களில் பரிசோதித்து Vaxxas வடிவமைத்துவரும் நுண் ஊசி ஒட்டு (Patch), வழக்கமான மருந்தில் ஒரு சிறு பகுதி அளவே எடுத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பது நற்செய்தியே. விருந்தும், மருந்தும் அளவு கெட, கேடதிகம். நுண் ஊசிகள் குருதித் தொற்றினை ஏற்படுத்தாது; மேலும், மரபார்ந்த ஊசிகளை நாம் கழிவுகளாக்குவதில் சூழல் கேடுகள் உண்டாகின்றன.

சிறு ஊசிகள் எப்போதுமே நன்மை செய்பவையா? அதிக அளவில் மருந்து செலுத்த அவை பயன்படாது. எல்லா மருந்துகளையும் நுண் ஊசிகளால் செலுத்த முடியாது. உயிர்சுட்டுக் குறிகள் (Bio Markers) அனைத்தையும் இதன் மூலமே கண்டறிவதும் இயலாததே. நோயாளியின் வயது, எடை, ஊசி போட வேண்டிய இடம், அதன் நுட்பம் ஆகியவை பற்றி மேலும் ஆராய்ச்சிகள் நடக்க வேண்டும். ஆனாலும், இந்த வலி தரா செல்லக் கிள்ளல்கள், மருந்தினைச் செலுத்துவதிலும், நோயைக் கண்டறிவதிலும் திறம்படச் செயல்பட்டு விரிவடையும் சாத்தியங்கள் உள்ளன. தோலையும் தாண்டி இவை உறுப்புகளை அணுகுவதற்கும் ஆய்வாளர்கள் வழிவகை செய்வார்கள்.

பச்சைக் குத்துதல் என்ற ஒரு பழக்கம் பழங்குடி காலத்திலிருந்து உலகில் உண்டு. காதுகளில் துளையிட்டு தோடுகள் அணிவிப்பது இன்று வரை தென் இந்தியாவில் நிலவுகிறது. குலம், இனம், பெயர், நாடு அனைத்தும் பச்சை குத்துவதில் தென்பட்டுவிடும். அவை நரம்பு முடிச்சினை சீண்டாத வண்ணம் திறமையானவர்களால் ஆரோக்கியத்தின் பொருட்டு குத்தப்படும். அவை அழியாமலும் இருக்கும். ஆனாலும், பச்சைக் குத்துவதை மருத்துவ அறிவியல் ஏற்கவில்லை.

அக்யூ பஞ்சர் மருத்துவம், ஊசிகளை பயன்படுத்தி கழுத்து வலி, முதுகு வலி, தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் ஆகியவைகளைப் போக்குவதாகச் சொல்லப்படுகிறது. பழையன புது வடிவெடுத்து எந்தத் துறையிலும் வருகிறது. வலி தரா ஊசிகளை வரவேற்போம்.

Series Navigation<< வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020சூர்ய சக்தி வேதியியல் >>

One Reply to “வலிதரா நுண் ஊசிகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.