சிறுவயதில் சின்னச் சின்ன கதைகளாக மட்டுமே மகாபாரதக்கதையைக் கேட்டுள்ளேன். முழு கதையாக அல்லாது தனித்தனி கதாபாத்திரங்களின் கதைகள் பள்ளியின் துணை நூல் பாடத்திலும், வீட்டுப்பெரியவர்களிடம் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அச்சிறு கதைகளுக்குப் பின்னால் ஒரு பெரிய கேன்வாஸில் இந்திய அளவிலானக் கதை ஒன்று உள்ளது என்பதை தொலைக்காட்சித் தொடர் வழியாகவே அறிய முடிந்தது. அதுவரை அர்ஜுனனுக்கு தேரோட்டிய கண்ணனின் கதை, துச்சாதனன் துகில் உரித்த கதை, சகுனியின் சொல்படி கேட்டு உருளும் தாயத்தின் கதை, அஸ்வத்தாமனின் மறைவு, பீஷ்மரின் அம்புப்படுக்கை என சிறு கதைகளாகக் கேட்டு வளர்ந்த கதை ஒரு பெரிய காவியத்தின் சிறு தீற்றல்கள் எனப் புரிந்தது. மிக எளிமையாகச் சொல்லப்பட்ட தொலைக்காட்சித் தொடர் ஒரு முக்கியமானத் தொடக்கம். அதன் பின் தமிழ் புனைவுலகில் மகாபாரதக்கதை வந்தபோதெல்லாம் அதன் மீதான நவீன அலசல்முறை கதை மீதான ஈர்ப்பாக மாறவில்லை.
ஜெயமோகன் எழுதத்தொடங்கிய வெண்முரசு நாவல் வரிசையின் ஒவ்வொரு நூலின் சில அத்தியாயங்களைத் தொடர்ந்து வாசிக்கத்தொடங்கி எங்கோ தேங்கி நின்றுவிடுவேன். இது ஒவ்வொரு நாவலில் நடந்ததினால் அடுத்தடுத்த நாவல்களைத் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. தனித்தனியாக நாவல்களை வாசிக்க முடியும் என ஒவ்வொருமுறையும் நண்பர்கள் கூறினாலும் ஏனோ திடுமென பதினாறாவது நாவலை எடுத்து வாசிப்பதில் ஒவ்வாமை இருந்தது. கொரானா காலத்தில் அதிக மாற்றமில்லாது செல்லும் நாளின் ஓட்டத்தில் ஒவ்வொரு நாவலாகப் படித்து முடிக்கலாம் என மீண்டும் தொடங்கியுள்ளேன்.
வெண்முரசின் முதல் நாவலான முதற்கனல், காவிய நாவலின் இயல்புக்கு ஏற்ப மரபாகத் தொடங்கும் இடத்தில் அல்லாது நாகர்களின் குலக்கதையிலிருந்து தொடங்கியுள்ளது. குருஷேத்திரப் போர் நடந்து முடிந்து இரு தலைமுறைகளுக்குப் பிறகு அஸ்தினபுரியின் அரசனான ஜனமேஜயன் நடத்தும் சர்ப்பசத்ர யாகத்திலிருந்து கதை தொடங்குகிறது. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷனின் தங்கை ஜரத்காருவுக்குப் (மானசாதேவிக்கும்) பிறந்த ஆஸ்திகன் எனும் சிறுவன் ஜனமேஜெயன் வேள்விக்குச் செல்லும் நிகழ்விலிருந்து கதை தொடங்குகிறது. இங்கு ஜரத்காரு எனச் சுட்டாமல் மானசாதேவி என ஆசிரியர் கையாண்டதில் ஒரு நுட்பம் உள்ளதாகத் தோன்றுகிறது. கிசாரி கங்குலியின் மஹாபாரத்தில் ஆதி பர்வத்தில் வரும் இந்தக் கதை ஜரத்காரு தனது பெயருள்ள ஒரு பெண்ணை மட்டுமே மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார் எனச் சொல்கிறது. நாகங்களுக்கு அரசியான மானசாதேவி தன் குலத்துக்கு வர இருக்கும் அழிவிலிருந்து காப்பதற்காகத் தனது மகனான ஆஸ்தீகனை ஜனமேஜயன் வேள்விக்கு அனுப்புகிறாள். வங்க நாட்டார் கதைகளில் சைவத்துக்கும் மாந்திரீக உலகத்துக்கும் தொடர்புடையவளாக மானசாதேவியைக் கொண்டாடுகிறார்கள். சுவாமி சித்பவானந்தரின் மஹாபாரதத்தில் கூட மானசாதேவியிலிருந்து கதை தொடங்குவதில்லை. இங்கு ஜெயமோகன், மஹாபாரத்தின் துணை கொண்டு இந்தியாவின் பல தரப்பட்ட வரலாறுகளை இணைக்க முற்படுவது தெரிகிறது. நாகர் குலத்தின் ஆதிகதைக்கு செல்வதன் மூலம் சத்வ குணத்தைக் கொண்டு மட்டுமே புடவியின் விதியைத் தீர்மானித்துவிட முடியாது எனும் தத்துவ விவாதத்துக்கு கதை செல்கிறது. உலகில் முழுமை என்றால் என்ன எனும் கேள்விக்கான விடையாக ஆஸ்திகனின் பயணம் இருக்கிறது. நாகம் என்பது மனித மனதின் இச்சை எனவும் அதை அழிப்பதன் மூலமே சத்வ குணத்தை அஸ்தினாபுரியில் நிலை நிறுத்த முடியும் எனவும் ஜனமேஜெயன் சொல்வதைச் சுட்டிக்காட்டி நாகம் என்பது இச்சையின் குறியீடு என்றாலும் அதை சமன்படுத்திச் செலுத்தும்போது அது புடவியை வழிநடத்தும் விளக்காகிறது. அந்த இச்சையிலிருந்து எழும் சமன்படுத்தாத காமமும் அகங்காரமுமே மஹாபாரதத்தின் அடிநாதமாகிறது எனச் சொல்லும் வியாஸர் தனது மாணவனான வைசம்பாயனரை ஶ்ரீஜய என தான் எழுதிய காவியத்தைப் பாடச்சொல்கிறார.
இராவதிகார்வே தனது யுகத்தின் முடிவில் நூலில் ஒரு கற்பனையான உரையாடலைச் சொல்கிறார்.
ஒரு நண்பர் கேட்டார் – “வேதம், உபநிஷதம், மகாபாரதம் என்று தொடங்கிய பின்னர் நம்முடைய முழுச்சமுதாயமும் தலைகீழாக மாறியதேன்? பக்தி மார்க்கத்தையும், விபூதி பூஜையையும் அவன் எப்படி ஏற்றுக்கொண்டான்?”
அவர் கேட்பதன் அர்த்தம் நமக்குப் புரியாமல் இல்லை. இந்திய தத்துவத்தின் உச்சாணியாக இருந்த வேதம், உபநிஷதம், மஹாபாரதம் எனும் தத்துவ சாஸ்திரத்தில் தனது மனதை நிலைநிறுத்தி மறுமைக்கு வழி தேடாமல் ஏன் பக்தி, பூஜை போன்றவற்றில் மனம் நிலைத்துவிட்டான்? அதற்கு விளக்கமாக அவரே கூறியது, “வேறு எதுவும் நிலைக்கவில்லை. ஆனால் மொழி நிலைத்திருக்கின்றது. அதுவே சிறப்பு என்று எண்ணுங்கள். இன்றும் உங்களுக்கு மஹாபாரதத்தைப் படிக்க முடிகிறது. பொருள் புரிகிறது அதுவே உங்களது பாக்கியம் அல்லவா? நான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘ஜய’ என்ற பெயருடைய கதையைப் படிக்க முடிகிறது. அதில் என்னுடைய மறு உருவத்தைப் பார்க்க முடிகிறது என்பதே வியப்பான ஒன்றாகும்.”
முதல் பெண் மானுடவியலாளரான இராவதிகார்வே மஹாபாரத்தை மானுட வளர்ச்சியின் நீட்சியாகவும், பொருள்முதல்வாத அணுகுமுறையோடு வரலாற்றை பார்க்கக்கூடிய சாத்தியத்தையும் பதிந்துள்ளார். யுகத்தின் முடிவில் நூலில் கூறப்பட்டுள்ள மஹாபாரதக்கால சமூகத்தையும், தத்துவ நீட்சிகளையும் அடிப்படையாக மட்டுமே கொண்டு எழுதாமல் காவிய மரபின் பல கிளைகளில் வளர்ந்த மரபுக்கதைகள், தொன்மங்கள், மாற்று வரலாறுகள் போன்றவற்றையும் தொகுத்து வெண்முரசு எனும் நாவல் தொடராக ஜெயமோகன் எழுதியுள்ளார்.
“பொற்கதவம்” எனும் ரெண்டாம் பகுதியில் பீஷ்மரும் சத்யவதியும் அறிமுகமாகிறார்கள். நவீன நாவலின் அழகியலின் படி கதை மாந்தர்களின் அகச்சிக்கலிலிருந்து தொடங்கி, சற்று பின் சென்று அவர்களது பிறப்புக்கதையைத் தொட்டுச்சென்று, சூதர்களின் பாடல்கள் வழி மாற்று வரலாற்றுக்கான சாத்தியங்களைத் திறந்து காட்டி, ஊடாக குலக்கதையின் ஆற்றொழுக்கத்தோடு கதை நகர்கிறது. நவீன வாசகன் எதிர்பார்க்கும் அகச் சிக்கல்களை முன் வைக்கும் அதே நேரத்தில் சூதர்களின் கதைகள் மூலம் முன்னோர் கதையின் தொடர்ச்சி சொல்லப்படுகிறது. இது கதையாக மட்டுமல்லாது கதாபாத்திரங்களுக்கு அடுத்தகட்ட நகர்வுகளை அடையாளம் காட்டும் வழியாகவும் அமைந்திருக்கிறது. உதாரணத்துக்கு, காசி நாட்டு இளவரசிகளை சுயம்வரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் எனும் ஆணையை சாத்தியப்படுத்துவது எப்படி எனத் தெரியாத பீஷ்மருக்கு பராசரபட்டருக்குப் பிறந்த வியாசரின் கதையைக் கூறுவதன் மூலம் ஒரு தெளிவு பிறக்கிறது. ஷத்ரிய தர்மத்தின் படி நாட்டின் நன்மைக்காகப் பெண்ணை வென்று வருவதில் தவறில்லை என பீஷ்மர் சொன்னாலும் அதையும் தாண்டி “மழையில் கரைக்கப்படாத பாறை போல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது. அந்த பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் விடப்போகும் கண்ணீர்” நூல் முழுவதும் மீண்டும் மீண்டும் நடைபெறும் உரையாடலுக்கானத் தொடக்கம் இதில் உள்ளது. பெரும் நீதி, குலத் தர்மம் எனும் அரணால் சூழப்பட்ட சமூகமாக இருந்த காலகட்டம் நெகிழ்ந்து உலகலாவிய தர்மம், மானுட உண்மை எனும் சற்றே விரிந்த தர்மத்தை நோக்கி நகரத்தொடங்கிய காலகட்டமாக மஹாபாரதத்தை ஜெயமோகன் சித்தரிக்கிறார். இக்கதையில் நல்லவன் கெட்டவன் என்ற அடையாளத்துடன் யாரும் வருவதில்லை. சின்ன பூ முதல், மலை, ஆறு, சிங்கம், பசு மிருகம் , மனிதன் என அனைவரும் அவரது ஸ்வதர்மத்துக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். எப்போதெல்லாம் அந்த ஸ்வதர்மம் அவர்களை மானுட தர்மத்தின் எல்லையை மீறச் செய்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இருளில் விடப்பட்ட ஆடுகளாக துலாகோலின்றி தவிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு துணையாக எந்த தர்மமும் வருவதில்லை, அவர்களது உலகத்தில் மானுட அறத்துக்கான கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அவற்றின் பதிலாக கிருஷ்ண வேதம் உருவாகும் காலகட்டமே மஹாபாரதம் எனும் பார்வையை வெண்முரசு முன்வைக்கிறது. அதற்கானத் தொடக்கமே பீஷ்மரின் சஞ்சலமாக முதற்கனல் நூலின் மையமாக அமைந்துள்ளது.
பீஷ்மரின் சஞ்சலத்தைப் போக்குவதற்கு வியாஸர் சிபிச் சக்கிரவர்த்தியின் கதையைச் சொல்கிறார். தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தடைந்த புறாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் தர்மம் ஒரு பக்கம், அதை வேட்டைக்காகச் சாப்பிடும் பருந்தின் தர்மம் மறுபக்கம். சிபி எடுக்கும் முடிவை எடுத்துச்சோல்லி வியாசர் பீஷ்மரின் சஞ்சலத்துக்கு விடை தேடச் சொல்கிறார். ஆனால் பீஷ்மர் ஒரு வீரன் எனும் நிலையிலிருந்து ஞானி எனும் நிலைக்குச் செல்கிறார். எல்லா தர்மங்களையும் தாண்டி பெண்ணின் ஓலமும் சாபமும் உள்ளது எனும் நிலையை ஆணித்தரமாக ஏற்றுக்கொள்கிறார். பெரும் பழியும் பாவமும் வந்து சேரும் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஷத்ரியனாகத் தன் கடமையைச் செய்கிறார் என்றாலும் இதன் பெரும் சுமைக்கு அதிக விலை கொடுக்கப்போவதையும் அறிந்தே இருக்கிறார். இந்த சுமையே மஹாபாரதத்தின் முதல் விதை.
அடுத்தப்பகுதி பீஷ்மரால் சிறைபிடித்து வரும் காசி நாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை போன்றோரில் தொடங்கினாலும் மையம் கொள்வது அம்பை மீது. அம்பை ஏற்கனவே சால்வ மன்னனை மனதில் வரித்துக்கொண்டதால் பீஷ்மரின் தாக்குதலால் நிலைகுலைந்து போகிறாள். ஹஸ்தினாபுரம் நோக்கிச் செல்லும் போது பீஷ்மரிடம் தனது காதலைச் சொல்லி விடைபெற்றுக்கொள்கிறாள். ஷ்த்ரிய தர்மத்தின்படி வென்றதால் அவள் பீஷ்மருக்கானவள் என சால்யனும், அவளைப் பெண்ணெடுத்துச் சென்றுவிட்டதால் அவளுக்கு அடைக்கலம் இல்லை என காசி மன்னனும் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. காசி மன்னர் ஃபால்குனர் “அத்தனை கன்னியருக்கும் ஒரு தருணத்தில் பிறந்த வீடு அன்னியமாகிவிடுகிறது” எனச் சொல்லும் இடத்தில் மகளாக அவளது இடத்தை இழந்ததை அம்பை உணர்கிறாள். பீஷ்மர் வென்றதினால் அவள் ஹஸ்தினபுரியின் அரசி எனவும், தன்னைக் கண்டிப்பாக அடையவேண்டுமென்றால் சால்வனின் அந்தப்புரத்தில் இருக்கலாம் எனவும் சொல்வதன் மூலம் காதலை அடைந்த பெண்ணாக அவள் அடைந்த முதல் ஏமாற்றத்தை அம்பை உணர்கிறாள். திருமணம் செய்ய முடியாத விரதத்தை மேற்கொள்ளும் பீஷ்மர் மீதான காதலை வெளிப்படுத்தியபின் அவரால் நிராகரிக்கப்பட்ட பின் உண்டான அகங்காரக் குலைவு அம்பையை அணங்காக்கியது.
சத்யவதி சாந்தனுவுக்குப் பிறந்த ரெண்டாம் மைந்தன் விசித்ரவீரியன். நோய்வாய்ப்பட்டவன். பெண்ணுடன் கூடும் நரம்புசக்தி அற்றவன். கூடினால் இறந்துவிடும் அபாயமும் உண்டு. ஆதூரசாலையில் மட்டுமே முழு வாழ்நாளும் கழித்துவிட்டவன் என்றாலும் தனது அன்னையான சத்யவதியை மிகவும் நெருக்கமாக அறிந்தவன். அம்பிகைக்கு விசித்திரவீரியன் மீது ஒரு குழந்தைத்தனமான அன்பும் காதலும் பிறக்கிறது. மிகக்குறைவான நேரம் மட்டுமே இருந்தாலும் அவர்கள் இருவருக்குள்ளும் மிக நெருக்கமான காதல் உண்டாகிறது. சத்தியவான் சாவித்திரி கதையை அம்பிகை விசித்திரவீரியனிடன் சொல்லும்போது ஆழத்தில் இவர்களது காதல் மரணத்தையும் எதிர்த்து நிலைத்து நிற்கவேண்டும் எனும் ஆவல் எழச்செய்கிறது. பாம்பு விடம் ஏற்றிய மருந்துடன் விசித்திரவீரியன் அம்பிகையுடன் கூடுவதற்கு முற்பட்டு இறந்துபோகிறான்.
சத்யவதிக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. அரசனில்லாத ஹஸ்தினபுரி வெல்லத்துக்கு வரிசைக்கட்டும் எறும்பு என பிற 52 ஷத்ரிய மன்னர்களை ஈர்க்கும் என்பதை அவள் அறிந்திருந்தாள். அது மட்டுமல்லாது, கங்கனின் வாரிசுகளான சத்யவதியும் பீஷ்மரும் பிற ஷத்ரியர்களின் குலக்கலப்பு எனும் ஏச்சுக்கு ஆளாகியிருப்பவர்கள். அரசியல் சதுரங்கக்காயாக ஒரு மன்னனை அரசூட்டுவது ஹஸ்தினாபுரியை ஸ்திரப்படுத்தும். மேலும், காசி அரசனான ஃபல்குனனின் ஆதரவும் கிட்டும் என சத்யவதி திட்டமிடுகிறாள். பீஷ்மர் நைஷ்டிக பிரமச்சரியம் பூண்டிருப்பதால் பராசுரபட்டருக்கும் சத்யவதிக்கும் பிறந்த வியாசனைக் கொண்டு அம்பிகை, அம்பாலிகையை கூடவைக்கும் ஆலோசனையைக் கூறுகிறாள்.
குருதியை அளித்து தனது குலத்தை செழிக்கவைக்கும் சித்ரகர்ணிகை எனும் கழுதைப்புலியின் வழியாகக் வியாசருக்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. தந்தை என அறியாது பராசரிடம் வேதம் பயின்ற நாட்களையும் அங்கு தன் உடலில் இருந்த மீனின் வாசத்தால் பிற மாணவர்களால் புறக்கணிக்கப்பட்ட கதையையும் சொல்கிறார். கிருஷ்ண துவைபாயனர் எனும் பெயரை சத்யவதி அவருக்கு அறிமுகப்படுத்தியபோது அவர் தாயிடமிருந்து விலகப்பார்க்கிறார். அவளுக்குக் கொடுத்த சாபம் பலிக்கவில்லை. தனது பிறப்பினால் ஏற்பட்ட இழிவு என எண்ணி பராசரிடம் ஓடுகிறார் – ஞானத்தினால் பிறவித் தளைகள் எனச் சொல்லப்பட்டும் குல தர்மத்தை அறுக்க முடியும் எனும் பெரும் உண்மையை அன்று அறிகிறார். தனது தந்தையின் சொல்கேட்டு வேதங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபடுகிறார். குலக்கல்வியிலிருந்து உலக ஞானம் எனும் நகர்வுக்கானத் தொடக்கமாக ஜெயமோகன் எழுதிய இந்தப்பகுதி அமைந்துள்ளது. தாயின் ஆணைக்காகக் காத்திருந்தவர் பீஷ்மரின் சொல்கேட்டு ஹஸ்தினாபுரம் செல்கிறார். அம்பிகை, அம்பாலிகையுடன் இணைகிறார். சத்யவதி தனது மகன் மீது கொண்ட பாசத்தின் பலனாக ஹஸ்தினாபுரம் புது இளவரசர்களுக்குத் தயாராகிறது.
முதற்கனலில் வரும் எல்லாவற்றுக்கும் ஒரு பெயரும் குலக்கதையும் உள்ளது. அது அம்பையைச் சுற்றி வரும் சிறு நிழல்களான தேவியர் அவளுக்கு பெண்மையின் உணர்வுகளைப் புகட்டுகிறார்கள். அந்த மூன்று தேவியருக்கும் பெயரும் குலக்கதையும் உள்ளது. அதே போல, கங்கை, காற்று, நிருதன் எனும் படகுக்காரன் என எல்லாருக்கும் தெளிவான அடையாளமும் வமிச கதையும் இருப்பது காவிய அழகியலின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும். தொன்ம அழகியலுக்குத் தேவையான அம்சமாக கதை நெடுக இவ்வியல்பு அமைந்துள்ளது. பெருங்காவியங்களில் வரும் ஒவ்வொரு அசைவும் காவியத்தின் அழகைக் கூட்டச் செய்வதுடன் படிமங்களை மீட்டுருவாக்கம் செய்வதனால் கிடைக்கும் உணர்வாழத்தையும் நமக்கு அளிக்கிறது. அம்பையுடன் தேவியர் மூவரும் பேசும் இடம் இத்தகைய அழகுக்கு உதாரணம். அம்பையின் அம்சங்களை மூன்று விதங்களாகப் பிரித்துக்கொண்டு அவளது இயல்பின் வளர்ச்சிப்போக்கை உள்ளத்தின் இயல்புடன் ஊசலாட விடும் இடமாக இந்தப்பகுதி அமைந்துள்ளது. அம்பை அவளையே கண்டுகொண்டு மறு உருவாக்கம் செய்யும் இடம் இது. மூன்று விதங்களில் அவள் புறக்கணிப்புக்கு உள்ளாகிறாள் என்றாலும் அடியாழத்தில் அவள் அடங்கா காதலை சிறு வயதிலிருந்து வளர்த்து வந்தவளாக இருக்கிறாள். அந்த அகங்காரமும், காதலும் அவளிடம் சீண்டலாகவும் பெண் எனும் அடையாளமாகவும் உருவாகி இருந்தது. அவை உடைந்து மறு கோடியில் முழுமையான சினமாக உருவெடுக்கத் தேவையான படிமங்கள் இப்பகுதியில் மிகச் சிறப்பாக வந்துள்ளன.
இந்நூலின் மிக முக்கியமான பகுதியாக அம்பை சிகண்டியாக மாறும் நிகழ்வுகளைச் சொல்லலாம். அணங்கென அவள் புறப்பட்டு காடு மலை எல்லாம் அலைகிறாள். பித்தியென சுற்றும்போது பன்றிகளுடன் சேர்ந்துகொள்கிறாள். பெண் எனும் அடையாளத்தால் தான் பெற்ற அவமதிப்பை கிழித்து தூர வீசுவதற்கான வழியைத் தேடி பித்தி போல அலைகிறாள். ஸ்தூனகர்ணனையிடம் வேண்டிக்கொண்டு பெண் அடையாளம் கலைந்து சிகண்டி ஆகிறாள். பீஷ்மரைக்கொல்வது மட்டுமே அவளது தர்மம் என அலைகிறாள். அக்னிவேசரிடம் பயிற்சிக்குச் சென்றபோது எதிரியை முற்றறியும் ரகசியமே வெற்றிக்கானத் திறவுகோள் என்பதை அறிகிறாள். பீஷ்மரை முன்னர் தோற்கடித்த பால்ஹிகரை சந்திக்க சிபி நாடு செல்கிறாள்.
பெண்களின் சாபம் பெரும் சுமையென பீஷ்மரை வாட்டுகிறது. நாட்டை விட்டு விலகி பல வருடங்கள் பாதமே வழியெனச் செல்கிறார். பீஷ்மர் தன் முன்னோர்களின் ஊரைத் தேடி அலைகிறார். வழியில் ஓரிரவு தங்க நேரும் இடத்தில் அவள் மீது மையல் கொள்ளும் பெண்ணை விலக்கிச்செல்கிறார். கனவில் தன்னைக் கொல்ல வருபவளை அவள் அடையாளம் காட்டுகிறாள். அதே கனவை சிகண்டியும் காண்கிறாள். இருவர் கண்ட ஒரே கனவு. பீஷ்மர் யாரெனத் தெரியாமலே அவரிடம் ஆசிர்வாதம் வேண்டி நிற்கிறாள் சிகண்டி.
வெண்முரசின் தொடக்கமான முதற்கனல் யுகசந்தி எனும் சொல்லுக்கு ஏற்ப குல தர்மத்தை மீறி எழும் அறத்தைப் பேசுகிறது. மஹாபாரதம் எனும் விதைநிலம் வேதத்துக்கும், மேலான மானுட அறத்துக்கும், அசுர வேதத்திலிருந்து கிருஷ்ண வேதத்துக்கு ஏறிச்செல்லும் வழியாக அமைகிறது. அதற்கு மானுட இச்சையே ஒரு காரணம் எனவும் அதற்கான சமானமான சக்திகளின் உருவாக்கமும் அழிவுமே மஹாபாரதத்தின் விளைநிலம் என்பதை முன்வைக்கும் நாவலாக முதற்கனல் உருவாகியுள்ளது. அந்த விளைநிலத்தின் முதல் நீர் சத்யவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை போன்றோரின் கண்ணீர் துளிகளே.
அருமையாகத் தொகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இது போன்று ஏனைய 24 நாவல்களுக்குமான அறிமுகக் கட்டுரைகளைத் தொகுத்து வெண்முரசு – அறிமுகம் என்றொரு நூல் வருமானால்…..ரோசன மஞ்சி வாண்டுதான்…அதுவும் ஆங்கிலத்தில் வந்தால் வெண்முரசு எதிர் காலத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட ஒரு ‘முதற்கன’லாக இருக்கும்.
முதற்கனலின் சாராம்சத்தையும், ஜெயமோகனின், மகாபாரதத்தை அவர் எடுத்து சொல்லும் விதத்தையும் செறிவாக சொல்லியிருக்கிறீர்கள். நாவலின் முக்கிய பகுதிகளை தொட்டு, ஆனாலும் இன்னும் வாசகனுக்கு வாசிக்க இடம் வைத்து எழுதியுள்ளீர்கள். முதற்கனலை, சத்யவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை அவர்களின் கண்ணீர்த்துளிகளை முதல் நீராக உருவகப்படுத்தி பார்த்திருக்கும் பார்வை சிறப்பு.
மீதம் இருக்கும் 25 நாவல்களுக்கும் தங்களிடமிருந்து விமர்சனம் வரும் என்று எதிர்பார்ப்புடன்.
வ. சௌந்தரராஜன்,
ஆஸ்டின்