நானன்றி யார் வருவார்….

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி  சபரீஸ் ஹோட்டலில் ‘ஆர்டர்’ செய்து விட்டுக் காத்திருந்தபொழுது, ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை…..’ என்று மனதுக்குள் காலையிலிருந்து பாடிக்கொண்டிருந்த வாணி ஜெயராம் திடீரென்று ஆம்பிளைக் குரலில் வெளிப்பட்டுவிட, எதிரே பிரும்மாண்டமான சோலாப்பூரிக்குப் பின்னிருந்து தலையைத் தூக்கி ‘தர்பாரி கானடா?’ என்றவரின் முகம் இன்னும் மறக்கவில்லை.  

பின், அம்மாவிடம் கேட்டுச் சரிபார்த்துக்கொண்டேன். ‘இளமை இதோ இதோ’ விற்குக்கூட ராகம் சொன்னவர் என் அம்மா. முதலில் ‘உட்டாலங்கிடி’ என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது மரபின் கூறு இல்லாத எந்த இசையும் காலம் கடந்து நிற்கமுடியாது என்று.  என் அப்பா பாடலின் முதல் இசைப் பிசிறிலேயே ராகத்தைச் சொல்லிவிட்டு, ‘அதுக்கு என்ன இப்போ?’ என்பது போலப் பார்ப்பார். அவருக்கு இசை என்பது அவ்வளவுதான். எதனுடைய ஜன்ய ராகம் இது? இதனுடைய ஜன்ய ராகம் எது? இதன் சகபாடி ராகங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து இந்தராகம் வேறுபடும் இடங்கள்? இந்த ராகத்தின் ஹிந்துஸ்தானி சகபாடி எந்த ராகம்? இந்தச் சழக்குகளுக்குள்ளேயே நான் இல்லை. எனக்கு ராகங்களின் பெயர்களைத் தவிர வேறெதுவும் தெரியாது.   ஆனால் ‘சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கண’க்காக இசையில்  திளைத்துக்கிடக்க அதெல்லாம் ஒரு தடையில்லைதானே?  

ஒரு பாடல் நம்மை அதிகபட்சம் என்ன செய்ய முடியும்? மறுபடியும் கேட்கச் செய்யலாம். ஒருவேளை மறுபடியும்.. மறுபடியும்.. ஒரு கட்டத்தில் அது உங்கள் மூளையடுக்குகளில் போய் உறைந்துவிடுகிறது. அதன்பின் அந்தப் பாடல்களை நீங்கள் ‘கேட்க’ வேண்டியதில்லை. நினைத்தால் ஒலிக்கும் பின்னணி இசையோடு. நினைத்ததால் ஒலிக்கிறதா? அல்லது ஒலித்ததால் நினைக்கிறோமா? ஜெயமோகனின் ‘ஏழாம் உலகத்’தில்  ஒருவரின் தலைக்குள் விடாது ஒலித்துக்கொண்டிருக்கும்  ‘பனி விழும் மலர்வன’த்தைச் சொல்வார் ‘ஏவல் மாதிரி வந்துக்கிட்டுருக்கு’ என்று. எல்லோருக்கும் இந்த மாதிரி ‘ஏவல்’ பாடல்களின் ஒரு தொகுப்பு மூளையில் உறைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அன்று காலையில் மனதே (மூளையா? ) ஒரு பாட்டைத் தேர்ந்தெடுத்து ஒலிக்கச் செய்கிறது. முழுப்பாடலெல்லாம்கூட இல்லை. பல்லவியிலிருந்தோ, சரணத்திலிருந்தோ சில வரிகள். அதே வரிகள்தான் மறுபடியும்..மறுபடியும்… உங்கள் மனநிலையையோ, இருக்கும் சூழ்நிலையையோ அது பொருட்படுத்துவதில்லை.

உதாரணமாக, ஒரு வீட்டிற்குச் சாவிற்குத் துக்கம் கேட்கப் போயிருக்கிறீர்கள். ம்ஹூம்.. எதிரே அழுதுகொண்டிருப்பவர்களைப் பொருட்படுத்தாமல், உள்ளேயிருந்து ‘கண்டேனெங்கும்… பூமகள்… நாட்டியம்…’ என்று குதூகலித்துக் கொண்டிருப்பார் ஜானகி. அன்று முழுவதும் ஒலிப்பது அந்தப் பாடலுக்கிடப்பட்ட பணி. அன்று முழுதும். காலையில் பல் துலக்கும்போது ஒலிக்க ஆரம்பித்தால் இரவு படுக்கச் செல்லும்வரை. ‘வசந்த காலத்தில் மழை தரும் மேகம், அந்த மழைநீர் அருந்த மனிதனில் மோகம்’ அல்லது ‘கானப் பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல்’ என்று ஆரம்பித்தால் அன்று முழுதும் அந்தச் சரணம் மட்டுமே. அபூர்வமாக எனக்குச் சில ‘ஏவல்’ சொற்களும் வந்து வந்து ஒலித்துக்கொண்டிருக்கும். சகஸ்ர கோடி பாஸ்கர துல்யம், கதிராயிரம் இரவி கலந்தாற்போல, கஜராஜ விரார்ஜிதம், கதிர் மதியம்போல் முகத்தான்…. இப்படி .ஆரம்பித்த நிமிடத்திலிருந்து இரவு படுக்கும்வரை.  இந்த மனதின் குரல் தினமும்கூட ஒலிப்பதில்லை. மோடியைப் போலவே, எனக்கும் வாரத்திற்கு ஒருமுறை. மற்றவர்களுக்கு எப்படியோ? இது ஒரு மனோ வியாதியென்றால் நான் விரும்பி ஏற்றுக்கொள்கிறேன். இப்படி ஒலிக்கும் பாடல்களுக்கும் நம் குணாதிசயங்களும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ?            

பொதுவாகத்  தானாக ஒலிக்க ஆரம்பிக்கும். சமயத்தில் சின்னத் தூண்டுதல் வேண்டியிருக்கும். பக்கத்து வீட்டிலிருந்து ஒலிக்கும், பாடல்கூட வேண்டாம், இசைக் கோர்வையின் ஒரு சின்னப் பிசுறு, அதன் ராகக் கூட்டத்தைச் சேர்ந்த ஏதாவதொரு பாடலை உங்கள் ஏவல் தொகுப்பிலிருந்து ஒலிக்கச்செய்து விடும். என்னுடைய ஏவல் பாடல்களில் வாணியின் ‘மேகமே.. மேகமே..’, ‘பொங்கும் கடலோசை..’, ‘என் உள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்…’, ‘கண்டேனெங்கும்..’, உமா ரமணனின் ‘ஆ..னந்த ராகம் கேட்கும் காலம்’, ஜேசுதாஸின் ‘ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா..’, ‘அதிசய ராகம்…’, ‘அழகே அழகு தேவதை..’ டி எம்.எஸ் சின் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’, ‘அம்மானை.. அழகுமிகும் கண்மானை..’, ‘நான் உன்னை அழைக்கவில்லை..’

http://shajiwriter.blogspot.com/2012/03/tr-mahalingam-honeyed-voice-of-tamil.html

சினிமாப் பாடல்தான் என்றில்லை. திடீரென்று ஒரு நாள் சுசிலாவின் ‘வைகறைப் பொழுதினில் விழித்தேன்… அந்த வடிவேல் முருகனை நினைத்தேன்’, பள்ளியில் ப்ரேயரில் பாடிய ‘பாடுங்கள் இறைவனுக்கு… புதியதோர் பாடல்’, ஜிக்கியின் ‘சர்வலோகாதிப நமஸ்காரம்’,  ‘சின்னப் பெண்ணான போதிலே.’ இதன் ஒரிஜினலான When I was just a little girl, சீர்காழியின் ‘உனைப் பாடும் பணி ஒன்று போதும்’ என்ற ரகளையான கலவையில் சாதாரணமாக வந்து சேர்ந்து கொண்டது இந்தப்பாடல். இத்தனைக்கும் பள்ளியில் படிக்கும்போது எழுபது எண்பதுகளில் சிலோன் ரேடியோவில் கேட்டதற்குப்பின் ‘உச்ச ஸ்தாயியில் பாடிப் புகழ்பெற்ற டி.ஆர்.மகாலிங்கம் கீழ் ஸ்தாயியில் பாடிப் புகழ்பெற்ற பாடல்’என்ற செய்தியைப் பத்திரிகையில் படித்தபின், கிட்டத்தட்ட நாற்பது வருட இடைவெளியில் இப்போதுதான் ஒரு இரவில் கேட்கிறேன்.

பொழிப்புரை தேவையில்லாத எளிமையான பாடல். உதட்டில் என்னடி காயம்? என்கிறான் காதலன். அது வண்ணக்கிளி செய்த மாயம்? என்கிறாள் காதலி. அதானே பார்த்தேன்…. நான் இல்லாதபோது உன் உதட்டை ஒருவர் தீண்டுவதாவது? என்று தேற்றிக்கொள்கிறான் காதலன். பாஆ…வை, கோஓ..வை, காஆ..யம், மாஆ..யம் என்று அசைத்துப்பாடி இனிமையையும் குழைவையும் வார்த்தைகள்தோறும் அள்ளிப் பூசியிருப்பார்கள் டி.ஆர்.மகாலிங்கமும் ஏ.பி.கோமளாவும். கேட்டபின்பு மெதுவாகப் பாடினேன்.  மறுபடியும்..மறுபடியும்… பின் தொண்டை களைப்படைய, மகரக் கம்மலில் தொண்டைக்குள் எனக்குமட்டும் கேட்பது போல. தூக்கம் வராமல் புரண்டுகொண்டே இருந்தேன், மனதுக்குள் பாடிக்கொண்டே.

ஒரு கட்டத்தில் ‘இதழ் கோஓ …வை என நினைத்துக் கொண்ட….தோஓஓ …’ என்று வாய்விட்டே பாடிவிட்டேன். நல்லவேளையாக யாரும் எழுந்திருக்கவில்லை. ஒருவேளை வாய்விட்டு முழுப்பாட்டையும் பாடினால் போய்விடுமோ? மெதுவாக எழுந்து அடுத்த அறைக்குச் சென்று முதலிலிருந்து மற்றவர்களை எழுப்பாத சத்தத்தில் வாய்விட்டு முழுப்பாடலையும் ஒருமுறை பாடினேன். மீண்டும் ஒருமுறை. பிரயோசனமில்லை. தொடர் ஒலிபரப்பு ஓய்வதாகத் தெரியவில்லை. மகரக் குறுக்கத்தில் பாடிக்கொண்டே எப்படியோ சிறிதுநேரம் தூங்கி எழுந்தேன். இந்த ஏவல் பாடல்களின் இயல்பு என்னவென்றால்  ஒலிபரப்பு அன்றோடு முடிந்துவிடும். மறுநாள் தொடராது. ஆனால் மறுநாள் காலை எழுந்தவுடன் திரும்பவும் ‘வண்ணப்பாஆ…வை உந்தன் இதழ் கோஓ…வை தன்னி..ல்’. அலுவலகத்தில் குறைந்தது ஒரு நூறுமுறை. ஒரு வழியாக மூன்றாம் நாளோடு ஒலிபரப்பு நிறைவடைந்தது. ஆச்சரியம்.. அதன்பின் அந்தப் பாடல் மறுஒலிபரப்பு செய்யப்படவே இல்லை.  

தென்கரை ராமகிருஷ்ணன் மகாலிங்கம். மதுரை மாவட்டம் சோழவந்தான் (சோழன் உவந்தான் – சோழ நாட்டையே போலிருந்த நெல் வயல்களைக்கண்டு) அருகில் ஓடும் வைகையாற்றின் தென்கரையில் உள்ள கிராமம் தென்கரை. படிப்பு வராவிட்டாலும் இசையில் மழலை மேதையாக இருந்தார் மகாலிங்கம். சேஷய்யங்காரிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டு அவர் பஜனைகளிலே பாடிக்கொண்டிருந்தபோது மகாலிங்கத்திற்கு ஐந்து வயது. பன்னிரண்டு வயதிலேயே ‘பாய்ஸ்’ கம்பெனியின் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கும் அந்தஸ்தை அடைந்துவிட்டிருந்தார்.

ஒலிபெருக்கி இல்லாத அந்தக் காலத்தில் நாள்தோறும் மேடை மேடையாக உச்சஸ்தாயியில் கத்திப் பாடுவது எத்தகைய உழைப்பைக் கோருவது என்பதை இன்றைய விஞ்ஞான உலகத்தில் இருக்கும் நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது. உச்ச ஸ்தாயியில் பாடுவதில் நாடகமேதை எஸ்.ஜி.கிட்டப்பாவின் நீட்சியாகத் தன்னை அறிவித்துக்கொண்டார் டி.ஆர். மகாலிங்கம். எஸ்.ஜி. கிட்டப்பா இறந்து பல ஆண்டுகளுக்குப்பின்னும் பட்டிதொட்டியெங்கும் அவர் குரலை ஒலிக்கச்செய்தார்.  உச்சஸ்தாயியின் உச்சஸ்தாயியைப் பிடிக்கும் முயற்சியில் கிரீச்சிடும் ஒலியுடன் முடியும் கிட்டப்பாவின் பாணியிலேயே முதலில் பாடிவந்தவர் பின்னர் தனக்கென ஒரு பிரத்தியேக பாணியைக் கண்டடைந்தார்.

இவர் பாட்டில் மயங்கிப்போன ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் ஏ.வி.எம்மின் தாய் நிறுவனமான பிரகதி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘நந்தகுமா’ரில் (1937) இவரை அறிமுகப்படுத்தினார். எஸ்.ஜி. கிட்டப்பாவின் ‘காயாத கானகத்தே’, ‘ எல்லோரையும் போலவே என்னை..’ போன்ற பாடல்களை தான் நடித்த ‘ஸ்ரீவள்ளி’ (1945) யில் பாடி நடித்து பெரும் புகழ் பெற்றார். அமுதவல்லியில் ‘ஆடை கட்டி வந்த நிலவோ..’ திருவிளையாடலில் ‘இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை..’, அகத்தியரில் ‘ஆண்டவன் தரிசனமே..’, ராஜராஜ சோழனில் ‘தென்றலோடு உடன்பிறந்தாள்…’  என்று இவரைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச்சென்ற எத்தனையோ பாடல்கள். 

இவர் நாடக உலகின் முடிசூடாமன்னனாக கடைசி வரை விளங்கினார். இவர் நாடகங்களே படங்களாகவும் எடுக்கப்பட்டு, பெரிய வெற்றியைப் பெற்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. பாடல்களின் காலம் முடிந்து வசனங்களின் காலம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபொழுது வந்த படம்தான் ‘மாலையிட்ட மங்கை’ தயாரிப்பு, வசனம், பாடல்கள் கண்ணதாசன். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த கண்ணதாசன், டி.ஆர்.மகாலிங்கம் இரண்டு பேருக்குமே மறுவாழ்வளித்த வெற்றிப் படம். மகாலிங்கத்திற்கு ஒரு புத்தம்புதுக் காரை பரிசளித்து மகிழ்ந்தார் கண்ணதாசன். நான்கு வருடம் படமே நடிக்காமலிருந்து மகாலிங்கம் நடித்த படம் ‘மாலையிட்ட மங்கை.’

‘தலைவர் படம் இல்லாத தீபாவளி எங்களுக்கு கருப்புதினம்’ என்று ரஜினி ரசிகர்களின் போஸ்டர்களை மதுரையில் இன்றும் பார்க்கலாம். அத்தகைய தன் ரசிகர்களின் மனம் குளிர  ‘விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடேஏஏ…..’ என்று உச்சஸ்தாயியில்,  ‘டைட்டில்’ பாடலிலேயே தியேட்டர்களை அதிரச்செய்தார் மகாலிங்கம். ‘எங்கள் திராவிடப் பொன்னாடே…’ தி.மு.க வின் மேடைதோறும் ஒலித்தது.  படத்தில் பதினேழு பாடல்கள். இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இந்தப் படத்தில் இடம்பெற்ற அவ்வளவாகப் புகழ் பெறாத பாடல் ‘நானன்றி யார் வருவார்…. ‘.  பெரும்புகழ் பெற்ற இன்னொரு பாடல் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’. இரண்டு பாடல்களுமே நேர் எதிர் துருவங்கள்.  ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ என்கிற உச்சஸ்தாயிப் பாடல் இன்றுவரை மேடைகள்தோறும் பாடகர்கள் உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறது.  ஏ.பி.கோமளாவோடு கீழ் ஸ்தாயியில் பாடிய ‘நானன்றி யார் வருவார்…. ‘ டி.ஆர்.மகாலிங்கத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த பாடல். 

‘அந்தக் கால சென்னைப் பிரமுகர்கள்’ என்று எண்பதுகளின் ஆரம்பத்தில் தினமணிக் கதிரில் ரகமி எழுதிய ஒரு தொடர் வந்துகொண்டிருந்தது. அதில் டி.ஆர்.மகாலிங்கத்தைப் பற்றி எழுதும்போது கூறுகிறார் ‘டி.ஆர்.மகாலிங்கத்திடம் இல்லாத வெளிநாட்டுக் கார்களே இல்லை’ என்று. மகாலிங்கத்திற்கு பாதாம் அல்வா என்றால் உயிர்.  ‘அம்பி இந்த ஷாட்ட ‘கரெக்ட்’ ஆ முடிச்சுட்டேன்னா சுடச்சுட பாதாம் அல்வா, என்ன சொல்ற?’ என்றே ‘ஸ்ரீ வள்ளி’ (கதாநாயகி குமாரி ருக்மணி, நடிகை லட்சுமியின் அம்மா) ஷூட்டிங்கில் வேலை வாங்கி விடுவாராம் ஏ.வி.மெய்யப்பச்செட்டியார். ‘லட்சுமிகாந்தன் கொலைவழக்கில்’ சிக்கி நொடித்துப் போயிருந்த எம்.கே.டி க்கு தன்னுடைய பிள்ளையின் பூணூல் கல்யாணத்தில் வெள்ளித்தட்டில் பத்தாயிரம் ரூபாயை வைத்து அவரிடம் அளித்திருக்கிறார் மகாலிங்கம். எம்.கே.டி சிரித்துக்கொண்டே வாங்கி பூணூல் பையன் கையிலேயே அளித்து விட்டாராம். 

பூலோக ரம்பை, நாம் இருவர், ஞான சௌந்தரி, வேதாள உலகம் என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து  எம்.கே.டி, பி.யு.சின்னப்பா வரிசையில் மூன்றாவது ‘சூப்பர் ஸ்டாரா’க வலம் வந்த டி.ஆர்.மகாலிங்கம் பாடகர்களாய் உச்சம் தொட்ட கதாநாயகர்கள் வரிசையின் கடைசிக் கண்ணி. சொந்தப்பட ஆசை மகாலிங்கத்தையும் விடவில்லை. தன் மகன் சுகுமாரின் பெயரில் சொந்தப் படக் கம்பெனி ஆரம்பித்து வரிசையாக படங்கள் தயாரித்தார். 1950-55 இடையே ஐந்து படங்கள். அனைத்துமே தோல்விப்படங்கள். ஒரு படத்தின் பெயர் ‘தெருப்பாடகன்’.

மயிலாப்பூரில் இருந்த தன்னுடைய மாளிகை உட்பட அனைத்து சொத்துக்களையும் இழந்து ‘மஞ்சக்கடுதாசி’ கொடுத்துவிட்டு தென்கரையில் வந்து ஒதுங்கினார் மகாலிங்கம். தாய்வீடான நாடகமேடை கைவிடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். எப்போதாவது படங்களிலும். தமிழகத்தில் இவர் ‘வள்ளி திருமணம்’ நாடகம் நடைபெறாத கிராமமே இல்லை என்னும் அளவிற்கு வேடனாகவும் விருத்தனாகவும் மாறி மாறி வள்ளியைப் பார்த்து கடைசிவரை பாடிக்கொண்டே இருந்தார். விருத்தனாகும் முன்பே ஐம்பத்திநாலு வயதிலேயே உயிர் நீத்தார். அவர் இறந்தபோது ‘புக்’ ஆகியிருந்த நாடகங்கள் எழுபத்தியிரண்டு. குடும்பத்தினர் முன்பணத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்தபோது பலரும் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர். ஒப்பந்தமான  கச்சேரிகளை பாடி தந்தையின் கடனை முடித்துக் கொடுத்தார் மகள். 

அன்றெல்லாம் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ‘பைக்’கை ‘ஸ்டாண்டி’ல் போட்டுவிட்டு மின்சாரரயிலின் முதல் பெட்டியில் ஏறுவேன். அடுத்த ஸ்டேஷனில் அடுத்த பெட்டிக்குச் சென்றுவிடுவேன். ஒரு ஸ்டேஷனுக்கு ஒரு பெட்டி. வண்டி கோட்டை ரயில் நிலையத்தை அடையும்போது கடைசிப் பெட்டியை அடைந்திருப்பேன். காரணம் வண்டியின் கடைசிப்பெட்டிக்கு நேரெதிராக எதிர்திசையில் ‘பீச்’ சில் இருந்து வேளச்சேரி செல்லும் தொடர்வண்டியின் கடைசிப்பெட்டி நின்றுகொண்டிருக்கும். ‘ட்ராக்’கைக் கடந்து ஓடி வண்டியைப்பிடிக்க வேண்டும். தவறவிட்டால் அரைமணிநேரம் வண்டி கிடையாது. மந்தைவெளியில் இருக்கும் அலுவலகம் செல்ல தாமதமாகிவிடும். கோட்டையின் முழுநடைமேடையையும் நடக்கும் நேரத்தை மிச்சப்படுத்தவே அந்தப் பெட்டி தாவல்.

இதில் பல்லாவரம் ‘கட் சர்வீஸ்’ காலை 9.10க்கு பல்லாவரத்தில் கிளம்பும். அதில் நடுவிலுள்ள ஒரு பெட்டியில் – வண்டியிலேயே கூட்டம் அதிகமான பெட்டி அதுதான் – இசைக்குழு ஒன்று பயணிக்கும். எல்லோரும் ‘போர்ட் டிரஸ்ட்’டில் வேலை செய்பவர்கள். அதில் ஒருவர் பழைய எம்.கே.டி, பி.யு. சின்னப்பா, டி .ஆர். மகாலிங்கம் பாடல்களைத் தொழில்முறைப் பாடகர்களைப்போல நேர்த்தியாகப் பாடுவார். பழைய பாபநாசம் சிவன் பாடல்களைப் பாடி உருகச்செய்து விடுவார். பனித்த கண்களோடு பயணியர் ஒருவித மெய்மறந்த நிலையில் இருப்பார்கள். ஒரு முறை அவர் பாடிய ‘கெட்டுப் போகாதே நெஞ்சே…’ (யார் சாகித்யமோ?) என்ற பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.  இந்த வண்டியில் ஏறினால் மட்டும் இந்தப் பெட்டியைத்தாண்டிப் போகமாட்டேன். ஆபிஸுக்கு ஒரு மணிநேரம் தாமதமாகும். போகட்டுமே? அன்றைக்குக் கர்ச்சீப், விசில் விற்பவர்கள்கூட அந்தப் பெட்டியைத் தாண்டிச்செல்லாமல் நின்றுவிட்டிருந்தனர். 

டி.ஆர். மகாலிங்கத்தின் ‘விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடேஏஏ…..’ என்ற விருத்தத்தோடு ‘எங்கள் திராவிடப் பொன்னாடே…’ என்று ஆரம்பித்தார் பாடகர். ஒரே ஆகாகாரம். மாலையிட்ட மங்கை படத்தின் ‘டைட்டில்’ சாங் என்று கேள்விப்பட்டிருந்தேன். எப்படி ரோலர்கோஸ்டர் மேலே போகிறதோ அதுபோலக் ‘குப்’ பென உயர்ந்து, அதே வேகத்தில் இறங்கி ஒரு குழைவு குழைவார் மகாலிங்கம் விருத்தத்திலே. அதை அப்படியே பாடி சிலிர்க்கச் செய்தார் பாடகர். ‘நான் சொல்லல?’ என்று  புல்லரித்தார் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர் புதிதாக அழைத்து வந்தவரிடம்.  அடுத்து புல்லாங்குழலில் ‘முத்துக்களோ கண்கள்….’ வாசித்தார் பக்கத்தில் அமர்ந்திருந்த கண்தெரியாத கலைஞர். அடேயப்பா!.. என்று இருந்தது வாசிப்பு. மறுபடி பாடகர் அதே படத்தில் ‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…’ என்று உச்சத்தில் ஆரம்பித்தார். அட..அட..அட… முடிக்கும்போது ஒரே ஆரவாரம். அதுவும் அந்த ‘மணம் பெறுமோ வாழ்வே…’க்குப் பிறகு ஒரு மூச்சை நிறுத்தும் நிரவல் ஒன்று செய்வார் மகாலிங்கம்.

வண்டியிலே முகம் தெரியாத பெருங்கூட்டம். ஒரு கட்டத்தில் பாடகரின் முகம்கூட மறைந்துவிட்டது. நான் மகாலிங்கத்தின் குரலைத்தான் கேட்டேன். அவர் முகம் தெரிந்திருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஒருவர் முண்டியடித்துக்கொண்டு கூட்டத்திற்குள்ளே நுழைந்தவர் பாடகரைக் கும்பிட்டு ஒரு நூறு ரூபாயைக் கொடுத்தார். பாடகர் அதை வாங்கி பக்கத்தில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டுவந்த அந்தக் கண்தெரியாத கலைஞருக்குக் கொடுத்துவிட்டார். அடுத்து புல்லாங்குழலில் ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்….’

நானும் அதற்குள் முண்டியடித்துக்கொண்டு முன்னே சென்று விட்டிருந்தேன். வித்துவானிடம் ‘நானன்றி யார் வருவார்….’ என்று இழுத்தேன். ‘அது நல்ல பாட்டுதான். ஆனா இந்த ‘மஜா’ வுக்கு எடுக்காது ‘  என்று மறுத்துவிட்டார். எனக்கு ஏமாற்றமாகிவிட்டது . இதை நான் என் அம்மாவிடம் கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே அவர் அனுபவத்தைக் கூறினார். ஒருமுறை நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு துப்பாக்கி உரிமம் புதுப்பிக்க வந்திருந்த டி.ஆர்.மகாலிங்கத்தை சக ஊழியர்களோடு சென்று சந்தித்த என் அம்மா அவரை ‘ நானன்றி யார் வருவார்..  ‘ பாடக் கேட்டுக்கொள்ள, சுற்றும் முற்றும் பார்த்தவர் சிரித்துக்கொண்டே ‘இங்க வேண்டாமே’ என்று மறுத்துவிட்டார். 

அன்று மின்சார ரயிலில் அதே பெட்டியில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவரைப் பல வருடங்கள் கழித்துத்  தூரத்தில் பார்த்தேன். நடுவே பேச முடியாத அளவிற்குக் கூட்டம். கடைசிவரை பேச முடியவில்லை. அப்போதெல்லாம் கைபேசி வந்திருக்கவில்லை. இப்படி எப்போதாவது சந்தர்ப்பவசமாகப் பார்த்துப் பேசினால்தான் உண்டு. சென்னையில் அரசு வேலையாக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். எங்கள் ஊரின் ஒரே பிராமணாள் ஓட்டலின் முதலாளியின் மகன். தொழிலாளியும்கூட. அவர் பரிமாறியே ரெண்டொரு தடவை சாப்பிட்டிருக்கிறேன். பள்ளிக்கூட இடைவேளையில் அங்குதான் தண்ணீர் குடிக்கப் போவது. அவர் அப்பா செக்கச்செவேலென்று கண்ணைச் சுருக்கிக்கொண்டு ‘கல்லா’வில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருப்பார். நாசியில் நழுவும் கண்ணாடி. அவருக்கு நாங்கள் வைத்த பெயர் ராபர்ட் கிளைவ்.  ராபர்ட் கிளைவின் மகனைப் பார்த்ததையும் என் அம்மாவிடம் கூறினேன். ‘அது யாருன்னு நினைச்சே! மகாலிங்கத்தோட மாப்பிள்ளை’ என்றார். எந்த மகாலிங்கம் என்றேன். ‘வேறெந்த மகாலிங்கம், நீ பாட்டுக் கேட்டியே, அந்த  டி.ஆர். மகாலிங்கம்தான்’ என்றார். ஆமாம்.. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. ‘எங்கள் திராவிடப் பொன்னாடே…’ பாடுவதற்குமுன் பாடகர் தள்ளி நின்றுகொண்டிருந்த இவரைப் பார்த்துச் சிரித்தபோதுதான் நானும் இவரைப் பார்த்திருந்தேன்.           

One Reply to “நானன்றி யார் வருவார்….”

  1. நானன்றி யார் வருவார் படித்தேன். சந்தோஷமாக இருந்தது. பின்னோக்கிப் போய்  கடைய பாரதி , கடவு வரை படித்து விட்டேன். கடவு சிறப்பு. ஒவ்வொரு இதழிலும் எழுத வேண்டிய கை. கிருஷ்ணன் சங்கரன் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய பெயர்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.