ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?

கடலூர் வாசு

ராமகிருஷ்ணர் பலமத வழக்கங்களைக் கையாண்டவரா?

முன்குறிப்பு :

ஆங்கிலேயர்களைபோல் வாழும் மதச்சார்பற்ற, மத வழக்கங்களைப் பின்பற்றும் இருவகை இந்துக்களுமே காலனிய காலத்திய எண்ண நீரோட்டமாகிய வங்காள மறுமலர்ச்சி அல்லது இந்து மத மறுஉயிர்ப்பின் வசியத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. இதில் முளைத்துப்பின் காந்தி காலத்தில் மந்திரமாகி, தற்கால மதசார்பற்ற இந்தியாவின் அசைக்கமுடியாத கொள்கையாக மாறியுள்ள முக்கியமான கருத்து, “எல்லா மதங்களும் சரிசமமானவை; மேலும் ஒரே அளவிற்கு உண்மையானவையே” என்பதாகும். கல்கத்தாவில் நிறுவப்பட்ட பிரம்ம ஸமாஜம் முன்வைத்துப்பின் வங்காள மாநிலமனைத்திலும் 1900த்திற்கு முன்பே மெய்யறிவாக இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது இதற்கு ஓர் உதாரணம், ராமகிருஷ்ணரின் சீடரான விவேகானந்தர் தொடங்கிய ராமகிருஷ்ணா மிஷனாகும்.

இவ்வியக்கம் 1900ல் சிறுபான்மை அங்கீகாரத்தைப் பெற முன்வைத்த மையவாதம் “ எல்லா மதங்களும் உண்மையே; எல்லா மதங்களும் சமமான மதிப்பிற்குரியவையே.” ஆகவே, இவ்வியக்கம் இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்பதே. மஹாத்மா காந்தி பிரபலமாக்கிய இரண்டாவது கருத்தைப் பாரதிய ஜனதாக் கட்சியமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. 1983ல், இவ்வியக்கத்தின் பிரதிநிதி ஸ்வாமி. லோகேஸ்வரானந்தா, “ராமகிருஷ்ணர் இந்துவா? பின், ஏன் கிருத்துவ இஸ்லாமிய இறைவழிபாட்டை மேற்கொண்டார்? அவர் எல்லா மதங்களின் அவதாரம்; எல்லா மத நம்பிக்கைகளின் கூட்டுச்சேர்ப்பு” என்கிறார்.

இதற்கான ஆதாரமென்ன என்பதை ராம் ஸ்வரூப் சொல்கிறார்; ராமகிருஷ்ணர் ஒரு முறை கிருத்துவர் போலவும் முகம்மதியர்களைப் போலவும் உடையணிந்துகொண்டு வழக்கமாகச் செய்யும் வழிபாட்டைச் செய்தாராம்! இது ஒன்றும் பெரிய செய்தியில்லை; அவர் ராமரை வழிபடும்போது ஹனுமாரைப்போல் மரத்திலேறி உட்கார்ந்து கொள்வாராம். கிருஷ்ணரை வழிபடும்போது கோபிகைபோல் பெண்ணுடையை அணிவாராம். இது எந்தளவிற்கு உண்மை என்பதை ராமஸ்வரூப் ஆராய்ந்ததில் தெரியவருவது இதுதான்; ராமகிருஷ்ணரின் உரைகளில் எதுவும் காணப்படவில்லை. ராமகிருஷ்ணர் மறைந்து 25 வருடங்களுக்குப்பின் அவருடன் இறுதி இரண்டு வருடங்களைக் கழித்த சீடர் ஸ்வாமி சாரதானந்தா எழுதிய1050பக்கங்களடங்கிய ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு நூலின் ஒரு பக்கத்தில் அவரது குரு பிரகாசமான ஒளியொன்றைக் கண்டார் என ஒரு வரி எழுதியுள்ளார். அடுத்த வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் ஸ்வாமி நிகிலானந்தா இவ்வொளி நபிகள் நாயகத்தின் உருவமாக இருக்கலாமென்று ஊகிக்கிறார். பின்னர் வந்த வரலாறுகளில், இந்த ஊகம் சந்தேகத்திற்கிடமின்றி நபிகள் நாயகம்தான் என மாறியுள்ளது. இந்த அடிப்படையில்தான் ராமகிருஷ்ணர் சில சமயங்களில் முகம்மதியராகவும் சில சமயங்களில் கிருத்துவராகவும் அவரது யோகத்தின் உச்சநிலையில் மாறினார் என்றும் அதன் மூலம் இம்மதங்களும் உண்மையானவையே என்ற இயக்கத்தின் கொள்கை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என வாதாடுகின்றனர். பல சமயமரபுகளின் நம்ப இயலாத கூற்றுகள் பரவலாகவுள்ள இக்காலத்தில் இம்மாதிரிக் கொள்கைகளைப் பரப்புபவர்கள் அதற்கான சான்றுகளைக் காண்பித்தாலேயொழிய இவை வெறும் ஊகங்களே; உண்மையாகா என்று நாமறிய வேண்டும். மேலும் ஓர் இயக்கத்தின் தலைவர் அல்லது நிறுவனரின் வாழ்க்கையில் 100 வருடங்களுக்குமுன் நடந்ததாகக் கூறப்படும் சந்தேகப்படத்தக்க சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லை. ஆராய்ச்சியாளர்களும் இது போன்றவைகளை உண்மையாக நினைத்துக் கட்டுக்கதைகளைப் புனைகிறார்கள். விவேகானந்தரோ மற்ற ராமகிருஷ்ணா மடத்துச் சந்நியாசிகளோ இது போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. குரு சொன்னதையும் செய்ததையும் கேட்டும் பார்த்தும் எடுத்த முடிவுதான் எல்லா மதங்களும் உண்மையே என்பதாகும். எல்லாச் சமய மரபுகளிலுமே சாதாரணச் சீடர்கள், தங்களது குருவின் எல்லையைத் தொடமுடியாவிட்டாலும் அவருடைய தனி மஹிமையைப் பற்றிய கேள்வி ஞானத்திலிருந்தே அவர்களது மரபின் மஹிமையாகப் பிறகு மாற்றி அமைப்பதென்பது பழக்கத்தில் இருப்பதுதான்.

ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?

இந்தச் சர்ச்சையைச் சிறிது மேலே கொண்டுசெல்வோம். எல்லா மதங்களும் மதிப்பிற்குரியவையே; எல்லா மதங்களும் உண்மையே எனும் கோட்பாடுதான் ராமகிருஷ்ணர் இயக்கத்தை இந்து மதத்திலிருந்து பிரிவுபடுத்துகிறது. இக்கோட்பாட்டை ஆங்கிலம் பேசும் குருக்கள் உலகெங்கும் பரப்புகிறார்கள். இதனால் ஏற்படும் முக்கிய விளைவு என்ன? இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் மேற்கத்திய நாகரீகத்தில் ஊறியிருக்கும் இந்துப் பெண்கள் தாம் காதலிக்கும் முகம்மதிய வாலிபர்களைத் திருமணம் செய்துகொள்ள விழையும்போது பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்கள் கூறும் பதில் இதுதான்: “நான் ஒரு முஸ்லீமை ஏன் மணம் செய்துகொள்ளக்கூடாது, உங்கள் பேரன் பேத்திகள் முஸ்லீம்களாக வளர்வதில் என்ன தவறு உள்ளது? நீங்கள் பணம் கொடுத்து வழிபடும் பாபாக்களெல்லாம் எல்லா மதங்களும் மதிப்பிற்குரியது; எல்லா மதங்களும் உண்மையே என்றுதானே அடித்துச் சொல்கிறார்கள் என்கின்றனர். இக்கலப்புத் திருமணங்களில் பல, நீண்ட காலம் நீடிப்பதில்லை. இந்து அல்லது மேற்கத்தியச் சூழ்நிலையில் இம்மதமாற்றத்திற்கு முக்கியத்துவமின்மையால் குழந்தைகள் முஸ்லீம்களாக வளர்வதில்லை. ஆனால் இஸ்லாமியச் சட்டம் முஸ்லீம் தந்தையோ தாயோ குழந்தைகளை முஸ்லீம்களாகத்தான் வளர்க்க வேண்டுமென்ற கட்டளையைத் திணிக்கிறது முஸ்லீம்கள் அதிககமாக உள்ள சமுதாயங்களில் இதைத் தவிர்க்க இயலாது. 1981ல் மீனாட்சிபுரத்தில் ஜனங்களைத் திரளாகக் கூட்டி மதமாற்றம் செய்தபின் ஹிந்து ஹரிஜனங்களை மதம் மாறிய முஸ்லீம்கள் மணம் செய்துகொண்டு அவர்களையும் மதம் மாறும்படி நெருக்குகிறார்கள் என்று ஊர் ஜனங்களே கூறுகிறார்கள்.

மத மாற்றம் நடைபெறாவிட்டாலும் இத்தகைய கலப்பு மணங்களைப் பற்றி ஊர் மக்கள் எக்காளமாகப் பேசும்போது இந்து ஜனங்களுக்குத் தாம் இந்துவாக இருப்பதும் தொடர்வதும் அர்த்தமற்றதோ என்ற எண்ணம் மனத்தில் பதிந்துவிடுகிறது. முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களின் மனங்களில் அச்சத்தையும் மனக் கலக்கத்தையும் உண்டு பண்ணி விடுகின்றது. இந்தியவாழ் இந்துக்களிடம் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது.

மேலும், இக்குடும்பப் பிரிவினைகளைப் போன்ற தீய விளைவுகளைத் தவிர எல்லா மதங்களும் சமமானவையே என்று இந்து குருமார்கள் சொல்வதை மற்ற மதத்தினர் இந்துக்கள் முன்னால் வைக்கும்போது, இந்துக்கள் எதிர்வாதம் செய்யும் சக்தியை இழந்துவிடுகின்றனர் என்று Turning of the wheel (Houston1985) எனும் புத்தகத்தின் ஆசிரியர் சிவப்ரசாத் ரே The lullaby of Sarva-Dharma-Samabhava எனும் 7ஆம் அத்தியாயத்தில் கூறுகிறார். இவ்வாசிரியர், ராமகிருஷ்ணர் கிறிஸ்துவ முகம்மதிய வழிபாடுகளை மேற்கொண்டார் என்று சொல்பவர்களுக்குக் கூறும் பதில் மிக வலுவானது: ராமகிருஷ்ணர் ஞானஸ்நானமோ சுன்னத்தோ செய்துகொள்ளவில்லை. இஸ்லாமிய அல்லது கிருத்தவ சமயக் கோட்பாடுகளையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ரம்ஜான், லெண்ட் போன்ற உணவுக் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கவில்லை. அவர் மனைவியுடன் கிருத்துவ முகம்மதிய உறுதிமொழிகளை மணமேடையில் சொல்லவில்லை. ஏசுவை நினைப்பதாலோ முகம்மதிய புத்தகங்களைப் படிப்பதாலோ ஒருவர் கிருத்துவராகவோ முஸ்லீமாகவோ மாறிவிடமுடியாது. ராமகிருஷ்ணர் கடவுளின் அவதாரம் என்பதை இந்துக்கள் முழுமனதுடன் ஏற்பர். கிருத்துவர்களோ இயேசுவைத் தவிர மற்றவர்களை அவதாரங்களாக ஒப்புக்கொள்வதில்லை முகம்மதியர்களிடம் அவதாரம் என்ற பேச்சையே எடுக்கமுடியாது. இவ்வாறிருக்க ராமகிருஷ்ணரை எல்லாம் பொதுவான அவதாரம் என்பதை அவர்கள் தங்கள் மதத்தைப் பழிப்பதாகவே எண்ணுவர். தியானத்திலமர்ந்து யேசுவையோ நபிகளையோ தரிசிப்பது போன்ற யோகப்பயிற்சி இரண்டு மதங்களுக்குமே ஒவ்வாததாகும். மேலும் யோகத்தின் எல்லை முக்தி எனும் கருத்து கிருத்துவர்களும் முஸ்லீம்களும் ஏற்கக்கூடாத ஒன்று. ஆகவே மற்ற மதங்களுடன் சமரசம் செய்துகொள்ளும்முன் அம்மதங்கள் அதற்கு தயாரா என்று அறிவது முக்கியம்.

இதேபோல், விவேகானந்தரும் முகம்மதியரே என்பதும் அவதூறான கூற்றாகும். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 41வது மடாதிபதி குன்றக்குடி அடிகளார், ”விவேகானந்தருக்கு இந்து மதத்தின் மேல் திட நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் இந்து மதத்தை மட்டும் பின்பற்றவில்லை. அவர் எல்லா மத வழிபாடுகளையும் மேற்கொண்டார். எல்லா மதப் புத்ததகங்களையும் படித்தறிந்தார். அவர் தலை எல்லா மத தீர்க்கதரிசிகளையும் வணங்கியது என்கிறார். எல்லா மதங்களையும் வழிபட்டார் என்பதே கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் ஒப்புக்கொள்ளாததாகும். இது பல மத தெய்வங்களை வழிபடும் மதங்களுக்கே உரியதாகும். இதுதான் நவயுக மதம் என்றும் தற்சமயம் அழைக்கப்படுகிறது.

ராமகிருஷ்ணர் பிற மதங்களைச் சார்ந்தவரல்லர் என்பதற்குச் சிவ ப்ரசாத் ரே அவர்கள் முன்வைத்த காரணங்கள் விவேகானந்தருக்கும் பொருந்தும். மேலும் விவேகானந்தர் வெளிநாடுகளுக்குச் சென்றபோதும்கூட மெக்காவிற்குச் செல்லவில்லை. வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே உண்டவர். பல இந்துக் கடவுள் விக்கிரகங்களின்முன் வழிபட்டவர். விக்கிரக வழிபாடு முஸ்லீம்களிடம் தடை செய்யப்பட்டுள்ள ஒன்று. அவ்வாறு வழிபடுபவர்கள் இஸ்லாமிய நரகக் குழியில் விழுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இவரது குரு காளியை அம்மா என்றழைத்து வணங்கியவர். பெண்ணைத் தெய்வமாகக் கருதுவதை இந்து மதம் தவிர வேறெந்த மதமும் ஏற்கவில்லை. படித்த மேதைகளிடம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: எல்லா மதங்களும் ஒன்றே என்று சொல்கிறீர்களே! இஸ்லாமிய மதத்தில் ராமகிருஷ்ணரின் இடம் எங்கென்று தயவுசெய்து சொல்வீர்களா? உண்மை என்னவென்றால், ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்து மதத்தைத் தவிர வேறெந்த மதத்தையும் வழிபடவில்லை. இஸ்லாமிய இரட்சிப்பையும் அடையவில்லை.

ஆசிரியர் ரே, ராமகிருஷ்ண மடத்துச் சந்நியாசிகளிடம் சவால் விடுகிறார்! நீங்கள் ராமகிருஷ்ணரைப் பற்றி இந்துக்களிடம் கூறுவதைக் கிருத்துவ அல்லது இஸ்லாமிய சபையில் போய்ச் சொல்லிப்பாருங்கள் என்கிறார். அது மட்டுமல்லாமல், இவ்வாறு அடித்துச் சொல்வதெல்லாம் மூர்க்கத்தனமான குழப்பமடைந்த சந்நியாசிகளின் பேச்சு என்கிறார். ஒரு பாதிரியோ மௌல்வியோ இத்தகைய கோட்பாடுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்கும்மேல் ஒருபடி போய் அவர்கள் இந்து சந்நியாசிகளைப் பற்றிய இழிவான கருத்துகளை எடுத்துரைப்பதுடன் அவர்களது அறியாமையையும் கேலி செய்கிறார்கள் என்கிறார்.

ரே, இந்த அவதூறுகளை வெளிப்படையாகவே கொணர்கிறார். “ஹிந்துக்கள் மட்டுமே இம்மாதிரிக் கோட்பாடுகளை மற்ற மதங்களோடு சம்பந்தப்படுத்திப் பரப்புகிறார்கள். மதிகெட்ட மூளை மழுங்கிய இந்துக்கள்தான் தங்களுடைய சுய சந்தோஷத்திற்காக இப்பொல்லாத கருத்துகளில் நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.“ இதன் உட்கருத்து என்னவென்றால் மற்ற மத குருமார்களுடன் உரையாடுவதாக நினைத்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்கள், இது வெறும் கற்பனையே ஆகும். மற்ற மதத்தினர் இதில் கூட்டாளிகள் அல்லர் என்கிறார் ரே.

எல்லா மதங்களும் சரிசமமானவையே; ராம், ரஹீம், அல்லா இவர்கள் எல்லாம் ஒருவரே; ஈஸ்வரன், அல்லா என்பவை ஒரு கடவுளின் பெயர்களே என்று சொல்லிக்கொண்டிருந்த, 1947க்குமுன் கிழக்கு வங்காளத்தில் வசித்த ராமகிருஷ்ண இயக்கத்தின் சந்நியாசிகளும் மற்ற ஹிந்து மத சந்நியாசிகளும் எங்கு குடிபெயந்தார்கள் என்ற கேள்வியையும் ரே எழுப்புகிறார். பிரிவினை ஆனவுடனேயே கிழக்கு வங்காள எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குச் சொந்தமான மேற்கு வங்காளத்தில் அடைக்கலம் புகுந்தனர். அதோடு நில்லாமல், பழைய கோட்பாடுகளை இந்துக்களிடையே மேற்கு வங்காளத்தில் பரப்பவும் ஆரம்பித்துவிட்டனர் என்கிறார். இக்கோட்பாடுகளில் இவர்களுக்கு நபிக்கையிருந்தால் கிழக்கு வங்காளத்தை விட்டுவந்தது தேவையில்லையே என்கிறார். இந்தியா – பாகிஸ்தான் அல்லது ஹிந்து – முஸ்லீம் விவாதங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் பனிப்போர்க் காலத்தில், ஆயுதங்களை அமெரிக்கா கைவிடவேண்டும் என்ற சமத்துவமில்லாத ஆர்ப்பாட்டங்களை நினைவுபடுத்துகின்றன. இப்போராட்டக்காரர்கள் ரஷ்யாவிற்குச் சென்று ரஷ்யாவும் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கேட்டிருந்தால் நடந்திருக்கும் கதையே வேறு என்பதை ஹிந்துக்களும் ஹிந்து சந்நியாசிகளும் நினைவில் கொள்ளவேண்டும்.

பிற மதங்களும் நிரந்தரமான மதமும்

மேலும் ரே, எல்லா மதங்களும் சமமானவையே என்றுகூற இவர்கள் எல்லா மதங்களையும் சீர்தூக்கிப் பார்த்தார்களா? என்று வினவுகிறார். ராமகிருஷ்ணர் சீக்கிய, புத்த, ஜைன, யூத, டாவோ, கன்பியூஷியஸ், ஷிண்டோ மதங்களை வழிபட்டாரா? எல்லா மதங்களையும் மதிப்பீடு செய்வது நல்ல திட்டம்தான்; அதற்கு நிறைய நேரத்தைச் செலவழிக்கவேண்டும் என்கிறார். எல்லா மதங்களும் உண்மையானவையே என்பது உணர்ச்சிமயமான வெற்றுக் கோஷம்தான் என்கிறார். இது சுய அழிவுப் பாதையை அகலமாக்கிறது. எவ்வழியும் நல்வழியே என்ற வாதம் அர்த்தமற்றது என்றறிய ஒருவர் அறிவாளியாக இருக்க வேண்டியதில்லை. எவ்வகையான காரியத்திலும் இக்கொள்கையை செயல்படுத்த இயலாது. ராமகிருஷ்ண இயக்கச் சந்நியாசிகளைப் போலல்லாமல் ரே, மற்ற மதங்களின் அடிப்படையையும் பகுத்தறியும் தன்மையையும் ஏற்றுக்கொள்கிறார். உதாரணமாகப் பிற மதங்கள் கூறும் “மாறுபட்ட கருத்துகளெல்லாம் உண்மையாகாது; ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்” என்பதாகும்.

ராமகிருஷ்ணா இயக்கத்தைப் பற்றிய ரே அவர்களின் குற்றச்சாட்டுகளின் சுருக்கம் இதுதான்: இந்த இயக்கம், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதிலும் மற்றவர்களின் கேலிக்கூத்திற்கு ஆளாவதிலும் வெட்ககரமான நிலைக்கு இறங்கிவிட்டது. காளியை வணங்கிய ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளையும் ஹிந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்த விவேகானந்தரின் பாரம்பரியத்தையும் சிதைத்துவிட்டது என்பதாகும். ஹிந்து மதத்திற்கு இயக்கம் இழைக்கும் அநீதி போன்ற குற்றச்சாட்டுகள் இந்த இயக்கத்திற்கு இந்து மதத்தின் வெளியே ஒரு தனி இடத்தை ஏற்படுத்தும் என்பது இயலாத காரியம். இவ்வியக்கத்தின் அழகான புதிய கண்டுபிடிப்புகள் எதுவானாலும் இது ஓர் ஹிந்து நிறுவனமாகத்தான் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் ஒரு ஹிந்து என்று சொல்பவர்களையெல்லாம் இந்துக்கள் என வரையறுத்தால் ராமகிருஷ்ண இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அதன் நிறுவனர்களைப்போல் ஹிந்துக்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது. ராமகிருஷ்ணரின் சீடர் ஆரம்பித்த இயக்கமும் ராமகிருஷ்ணா இயக்கமாகத் தொடரமுடியாது.

(கோன்ராட் எல்ஸ்ட் எழுதிய புத்தகத்தின் நான்காம் அத்தியாயத்தின் முதல் பகுதி. Hindu Human Rights 2, August 2013-இல் வெளியானது.)

Series Navigation<< யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.