கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை

கு. அழகர்சாமி

கோயம்பேடு பேருந்து நிலையம்; ஓரிடத்தில் வட்டம் போடப்பட்டிருந்தது. வட்டத்திற்குள் ஓர் உடல். கைவிடப்பட்டு; ஒருவர்கூட இல்லை அழுது புலம்ப; ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த; பயணிகள் அவரவர் பேருந்து நிறுத்தங்களுக்கு விரைகின்றனர்; நின்று பரிதாபிக்க நேரமில்லை; அவர்களுக்கு அவர்களின் இலக்கு; இலக்கின்றி ஆதரவின்றி இறந்து போனவன் யார்? யாருக்குத் தெரியும்? நடைபாதையிலே நடைப்பிணமாய் இருந்து இன்று நிஜமாகவே பிணமாயிருக்க வேண்டும். ஒரு போலீஸ்காரன் தன் லத்தியால் உடலைத் தொடுகிறான், வெறும் மரக் கட்டைக்கு இருக்கும் மரியாதைகூட அந்த மனிதக் கட்டைக்கு இல்லையென்பதுபோல். இன்னொரு போலீஸ்காரன் இறந்த உடலை விதவிதமான கோணங்களில் ஏதோ சாவின் பலவித மர்மங்களை அறிவதுபோல் புகைப்படமெடுக்கிறான். இன்னும் கைவிடப்பட்ட உடல் அங்கேயே கிடக்கிறது; ஈக்கள் மொய்க்கின்றன, கைவிடப்பட உடலுக்கு அவையே சுற்றம்போல்; கைவிடப்படவில்லை நீயென்று அவன் உடலை மொய்த்து ரீங்கரிக்கின்றனவா ஈக்கள்? அரற்றி அஞ்சலி செலுத்துகின்றனவா அவை?

எப்போதோ கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நான் கண்ட காட்சி இது; உலுக்கிப்போட்டது கண்டபோது என்னை; உறைந்துபோனது என் சித்தம். அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாத இயலாமை எனக்கு; விரைவில் நான் ஊர் போய்ச் சேரவேண்டும்; என் பேருந்துக்காகக் காத்திருந்தேன். பேருந்து வரும்வரை நேரம் போகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனா என்ற ஒரு குற்ற உணர்வும் என் மனதில் கூடியது. பேருந்து வந்ததும் விரைந்துபோய் அதில் ஏறிக்கொண்டேன்; ஓடுகின்ற பேருந்தில் என்னோடுகூட ஓடிவந்தது கண்ட காட்சி சிறிது தூரம்; சிறிது நேரம்; நிகழ்வின் பாதிப்பிலிருந்து கடந்துபோய் ஆண்டுகள் பல உருண்டுவிட்டன. ஆனால் நீ அப்படி எளிதாய்க் கடந்து போய்விட முடியாது என்று என் சித்தத்தின் சிகையைப் பிடித்து உலுக்கியதுபோல் உணர்ந்தேன் ஒரு கவிதையை வாசித்தபோது. இலக்கியத்திற்கான நோபெல் விருது பெற்ற (2005) ஹெரால்டு பிண்ட்டரின் (Harold Pinter) இறப்பு” என்ற தலைப்பிலான கவிதை அது. கலை, உண்மை மற்றும் அரசியல்”( Art, Truth and Politics) என்ற தலைப்பில் அவர் ஆற்றிய நோபெல் ஏற்புரையில் இடம்பெறும் இக்கவிதை அவர் இயற்றியது. போர்ப் படுகொலைகளில் பலியான கைவிடப்பட்ட அடையாளம் தெரியாத ஒட்டுமொத்த மனிதச் சாவுகளின் கொடுந்துயரத்தைச் சொல்லும் இக்கவிதை, நான் கண்ட கைவிடப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு தனி மனிதச் துயர்ச்சாவுக்கும் தொந்தமாகித் தொடுகிறது மனதை.

ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”இத்துணிபுகள் அர்த்தமுள்ளவையாய்க் கலையினூடான உண்மையின் தேடலுக்கு உதவுமென்று நம்பும் பிண்ட்டர், தான் படைப்பாளியாய் அவற்றோடு உடன்பட முடியும்போது, ஒரு குடிமகனாய் முடியாதென்று தெளிவாக்குகிறார். ஒரு குடிமகனாய் எது உண்மை எது பொய்மை என்று வினவுவது அவசியமாகிறது. கலையினூடான உண்மையின் தேடல்போல் அரசியல்வாதிகள் பேசும் அரசியல் மொழி அமைவதில்லை. அரசியல்வாதிகளின் அக்கறை அதிகாரமேயன்றி உண்மையன்று. அதனால் நம்மைச் சூழ்ந்திருப்பவை பொய்களின் விரிந்த வலைப்பின்னலே. உதாரணமாக, இராக்கின் மீதான தன் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசு கூறிய காரணம் எதுவும் உண்மையன்று. ஆனால் அமெரிக்க வல்லரசோ நமக்கு உறுதியளித்தது அது உண்மையென்று. ஆனால் அது உண்மையன்று. உண்மை முற்றிலும் வேறானதாயிருக்கிறது. எப்படி அமெரிக்க வல்லரசு உலகில் தன் பங்கைத் தான் புரிந்துகொள்கிறது, எப்படி அதைச் செயல்படுத்துவதைத் தேர்ந்தெடுக்கிறது என்பது பற்றிய உண்மையே அது. இதை விளக்க பிண்ட்டர் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னைய அமெரிக்க வல்லரசின் வெளிநாட்டுக் கொள்கையை அடிப்படையாய் எடுத்துக்கொள்கிறார். எப்படி அமெரிக்க வல்லரசு எத்தனையோ நாடுகளில், குறிப்பாகச் சிலே, நிகாரகுவா, குவாதிமாலா, இராக் ஆகிய நாடுகளில், தான் உலக ஜனநாயகத்தின் அரண் என்ற தோரணையில் தலையிட்டுப் போர்ப் படுகொலைகளை நிகழ்த்தி வலதுசாரி ஏதேச்சாதிகார அரசுகளை நிறுவியது என்பதை விவரிக்கிறார். இராக்கில் அமெரிக்க வல்லரசு வீசிய குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் பலியான அப்பாவி ஜனங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு இலட்சமாக இருக்கும். இப்படிப் பலியானவர்க்குக் காலங்களில்லை; அவர்கள் இருக்கவே இல்லை. அவர்கள் வெறும் வெற்று; அவர்கள் இறந்தவர்கள் என்றுகூடப் பதிவில்லை. அமெரிக்கத் தளபதியொருவரின் கூற்றுப்படி இறந்த உடல்கள் எத்தனையென்றுகூட எண்ணப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில், உண்மையைப் பேசும் ஒரு படைப்பாளியின் வாழ்வு திறந்த செயல்பாடுடையதாய் நொய்மையாயுள்ளதாகிறது. தன்னந்தனியாகிறது; பொய்மைக்கு உடன்பட்டுத் தன் பாதுகாப்பை உறுதிசெய்தாலொழிய, அதாவது அரசியல்வாதியானாலொழிய, பாதுகாப்பற்றதாகிறது. இதன் தொடர்ச்சியாய், இறப்பு என்ற தலைப்பிலமைந்த தன் கவிதையைக் குறிப்பிடுகிறார் ஹெரால்டு பிண்ட்டர்.

இக்கவிதை, கைவிடப்பட்ட இறந்த உடலைப்பற்றி எத்தனையோ கேள்விகளைக் கேட்கிறது. கவிதையின் ஒவ்வொரு வரியும் கேள்வியே. ஒவ்வொரு கேள்வியும் கேட்கப்படவேண்டிய இன்னும் எத்தனையோ கேள்விகளைக் கேட்காமல் கேட்கிறது; உன்னிடம்; என்னிடம்; யாரிடமும்? சக மனிதனோடு தனக்கிருக்க வேண்டிய சமூகப் பிரக்ஞையிலிருந்து யாரும் தப்பிவிட முடியாதென்று மென்னியைப் பிடித்து இறுக்கிறது கவிதை; கவிதையின் கடைசிப் பத்தியில் கேட்கப்படும் கேள்விகள் கேள்வியின் குறியீடு(?) இல்லாமல் உள்ளன. கேள்விகளும் கைவிட்டுவிட்ட உடலின் கையறு நிலைமை பூதாகரமாய் விரிகிறது நம் முன்னே; ஆனால் கைவிடப்பட்ட உடலே கேள்வியாய், அது புதைக்கப்பட முடியாத கேள்வியாய்க் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பதுபோல் இருக்கிறது. தன் விரல் நீட்டி கவிதை கடைசியாய்க் கேட்கிறது: நீ இறந்த உடலை முத்தமிட்டாயா? இந்த அறைகூவலில் கவிதை தன் தார்மீகத்தில் உயிர்ப்புள்ளாதாகிறது. கைவிடப்பட்டு அனாதையாய் எந்த ஒரு மனிதனும், ஏன் எந்த ஓருயிரும் இறந்துவிடாமலிருக்க, யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடாமலிருக்க, மனிதகுலம் ஒருபோதும் தன் ஈரத்தை உலரவிடாமலிருக்க, மனிதகுலத்தின் மனச்சாட்சி நீளுறக்கத்தில் ஆழ்ந்துவிடாமலிருக்க, போர்க் கொலைகளிலிருந்து மனிதகுல மாண்பின் மீட்சியைச் சாத்தியமாக்க, கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடுகிறது இக்கவிதை.

ஹெரால்டு பிண்ட்டர் தனது உரையின் முடிவில் இப்படிக் குறிப்பிடுகிறார்: கண்ணாடியில் நம்மை எதிர்கொள்ளும் பிம்பம் சரியாகவே உள்ளதென்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஒரு மில்லி மீட்டர் நகர்ந்தால் பிம்பம் மாறுகிறது. உண்மையிலே நாம் முடியவே முடியாத பிரதிபலிப்புகளைத்தான் பார்க்கிறோம். ஆயின், சில சமயங்களில் ஒரு படைப்பாளி கண்ணாடியை உடைத்து நொறுக்கவேண்டும். ஏனெனில், கண்ணாடியின் மறுபக்கத்தில்தான் உண்மை நம்மை வெறித்து நோக்குகிறது.இப்படித்தான் இக்கவிதை ஜனநாயகப் போர்வையில் ஒளிந்திருக்கும் அமெரிக்க வல்லரசின் ஆதிக்க பிம்பத்தை உடைத்து நொறுக்குகிறது. இப்படி அமெரிக்க வல்லரசின்மீதான ஒரு வெளிப்படையான விமர்சனம் நோபெல் ஏற்புரையில் இடம்பெறுவதை அபூர்வமாகவே கருதவேண்டும். இங்கு பிண்ட்டர் படைப்பாளுமையாய் மட்டுமல்ல, மனித உரிமைப் போராளி என்றும் மிகவும் அறியப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கவிதையின் இலட்சணம் கலை நேர்த்தியானது; அதே சமயத்தில் உண்மையை அச்சமின்றி உயர்த்திச்சொல்வது; அதனால் அது அரசியலாயும் இருப்பது; எப்படி இம்மும்முகங்களில் ஒரு கவிதை முழுமையடைய முடியும் என்பதற்கு உதாரணமாய் இருக்கிறது ஹெரால்டு பிண்டரின் காத்திரமான இக்கவிதை.

இறப்பு

எங்கு இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது?

யார் கண்டுபிடித்தது இறந்த உடலை?

கண்டுபிடிக்கப்பட்ட போது இறந்த உடல் இறந்திருந்ததா?

எப்படி இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது?

இறந்த உடலானது யார்?

இறந்த கைவிடப்பட்ட உடலுக்கு

யார் தந்தை அல்லது மகள் அல்லது சகோதரன்

அல்லது மாமன் அல்லது சகோதரி அல்லது தாய் அல்லது தனயன்?

இறந்திருந்ததா உடல் கைவிடப்பட்ட போது?

உடல் கைவிடப்பட்டிருந்ததா?

யாரால் அது கைவிடப்பட்டிருந்தது?

இறந்த உடல் உடையின்றி இருந்ததா அல்லது

உடுத்தப்பட்டிருந்ததா ஒரு பயணத்திற்கு?

எது இறந்த உடல் இறந்ததென்று நீ அறிவிக்க செய்தது?

நீ அறிவித்தாயா இறந்த உடல் இறந்ததென்று?

எவ்வளவு நன்றாகத் தெரியும் இறந்த உடலை உனக்கு?

எப்படித் தெரியும் உனக்கு இறந்த உடல் இறந்து விட்டதென்று?

நீ இறந்த உடலை நீராட்டினாயா

நீ அதன் விழிகளிரண்டையும் மூடினாயா

நீ உடலைப் புதைத்தாயா

நீ அதைக் கைவிட்டு விட்டு நீங்கினாயா

நீ இறந்த உடலை முத்தமிட்டாயா

Death

Where was the dead body found?

Who found the dead body?

Was the dead body dead when found?

How was the dead body found?

Who was the dead body?

Who was the father or daughter or brother

Or uncle or sister or mother or son

Of the dead and abandoned body?

Was the body dead when abandoned?

Was the body abandoned?

By whom it had been abandoned?

Was the dead body naked or dressed for a journey?

What made you declare dead body dead?

Did you declare the dead body dead?

How well did you know the dead body?

How did you know the dead body was dead?

Did you wash the dead body

Did you close both its eyes

Did you bury the dead body

Did you leave it abandoned

Did you kiss the dead body

குறிப்பு 1: ஹெரால்டு பிண்ட்டர் (1930-2008) இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலீஷ் நாடகங்களின் முன்னோடி. ஒரு நாடகத்தில் இயல்கின்ற ஒரு குறிப்பிட்ட சூழலுக்கும் சூழ்நிலைக்கும் பிண்டரின் தன்மை (Pinteresque) என்று சிறப்பிக்கப்படுமளவுக்குத் தனித்துவமிக்க நவீனச் செவ்வியல் நாடக ஆளுமை. பிண்ட்டர் நாடகக் கலையைச் சூழ்வெளி, பாத்திரங்கள் ஒன்றையொன்று சார்ந்து பாசாங்கு நொறுங்கி விழ நிகழ்த்தும் முன்கணிக்க முடியாத உரையாடல்கள் என்று அதன் அடிப்படைக் கூறுகளுக்குத் திரும்பிப் போகச்செய்தவர்.. குறைவான கதைக்கருவுடன், நாடகம் அதிகாரப் போராட்டத்தில் கண்ணாமூச்சி உரையாடல்களில் உருவெடுக்கிறது. பிண்ட்டரின் நாடகம் அபத்த நாடகத்தின் இன்னொரு வகை என்றே முதலில் அவதானிக்கப்பட்டது. ஆயின், அதன்பின் மிகச் சரியாக அச்சுறுத்தல் பாற்பட்ட நகைச்சுவை நாடகமென (comedy of menace) அடையாளப்படுத்தப்பட்டது. இதில் படைப்பாளி, மிகச் சாதாரணமான உரையாடல்களில் மறைந்திருக்கும் மேலாதிக்கத்திற்கும், அடிபணிதலுக்கும் இடையிலான ஊடாடலை நாம் ஒட்டுக்கேட்க அனுமதிக்கிறார். பிண்டருக்கே உரித்தான நாடகத்தில், ஒடுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட இருப்பில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு, தம் மீதான தலையீட்டுக்கும் அல்லது தம் உடனடி உணர்ச்சிகளுக்கும் எதிராகத் தம்மை நியாயப்படுத்திக்கொள்ளும் மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர் நாடகத்தில் இன்னொரு பாடுபொருள் கடந்த காலத்தின் நிலைஅலைவும் (volatility), நழுவலும் (elusiveness), The Birthday Party, Homecoming, Ashes to Ashes உள்ளிட்ட 29 நாடகங்களும் The Disappeared and Other Poems, War (Eight Poems and One Speech)போன்ற கவிதைத் தொகுதிகளும் அவரின் படைப்புகளில் அடங்கும்.

( Source: The Nobel Foundation 2005, Art, Truth and Politics).

குறிப்பு 2: Comedy of Menace:இவ் வகையான நாடகத்தில் பார்வையாளர்களின் நகைப்பைத் தொடர்ந்து, நிகழவிருக்கும் அச்சுறுத்தல் அல்லது ஆபத்தைப் பற்றியதோர் உணர்வு உடனடியாய்த் தொற்றுகிறது. பார்வையாளர்கள் நகைத்துக் கொண்டிருக்கும்போதே ஏதோ ஓர் அச்சுறுத்தல் குறித்து உணர்த்தப்படுகின்றனர்.. பிண்ட்டரின் நாடகத்தில் இந்த அச்சுறுத்தல் நிகழவிருக்கும் அல்லது உண்மையாகவே நிகழும் வன்முறையாலும் அல்லது நாடகம் முழுதும் அடிச்சரடாய் இயலும் வன்முறை உணர்த்தலாலும் கேலியான முன்கணிக்க முடியாத உரையாடல்களில் உருவாக்கப்படுகிறது. பாத்திரங்கள் அதனால் தாம் உணரும் பாதுகாப்பின்மையிலும் நிச்சயமினமையிலும் அச்சுறுத்தல் அதிகப்படுத்தப்படுகிறது. பாத்திரங்களின் பாதுகாப்பு மட்டுமன்று, பார்வையாளர்களும் நிகழவிருக்கும் ஆபத்தால் தம் பாதுகாப்பும் அச்சுறுத்தப்படுவதை உணர்கின்றனர். பிண்ட்டரின் நாடகமான The Birthday Party, Comedy of Menace என்ற நாடக வகையின் சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.