கெய்ரா

சுஷில் குமார்

“என்ன மேடம் செலினா, இன்று நீங்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போல? உங்கள் கால் தரையில் படவேயில்லையே?”

“யெஸ்… யெஸ்.. ஒரு விசயம் இருக்கிறது… இடைவேளையின்போது சொல்கிறேன் டியர்…” என்று சொல்லிக் கண்ணடித்துவிட்டு ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு ஒயின் பாட்டில்களையும் தின்பண்டப் பெட்டிகளையும் அடுக்கிவைப்பதைத் தொடர்ந்தாள் செலினா. ஒவ்வொருமுறை அவளது பகுதியைக் கடக்கும்போதும் அவளிடம் ஏதாவது பேசி அவளது புன்னகையை வாங்கிச்செல்வது எனக்கான ஓர் ஆசுவாசம்.

நாற்பதுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் அவள் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஓர் இனிய பதின் பருவத்துப் பெண்தான். வேலை தேடி வந்திருந்தபோது அவளது வாழ்க்கையின் வலிமிகுந்த நாள்களில் இருந்தாள். அல்லது எனது கணிப்பு அப்படியிருந்தது. வலியை மறைத்து நேர்முகத் தேர்வில் எங்கள் நிர்வாக அதிகாரிகள் அனைவரையும் அசத்திவிட்டாள். வேலையில் அவளை மிஞ்ச ஆள் கிடையாது. வாடிக்கையாளர்கள் அவள் இருக்கும் பகுதியை நோக்கி ஏதோ காந்தத்தால் ஈர்க்கப்பட்டதைப்போலச் செல்வதைப் பார்த்து நாங்கள் அவளைக் கிண்டல் செய்வதுண்டு.

“பேசாமல் ஹாலிவுட்டிற்குச் சென்றுவிடுங்கள் மேடம் செலினா.. எத்தனை ஆஸ்கார்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன தெரியுமா?”

“ஆம்.. எனக்குத் தெரியும் நண்பர்களே!”

ஒயின் பாட்டில்களைக் காற்றில் சுழற்றிவிட்டு அவற்றிற்கான அடுக்குகளில் லாவகமாக நிறுத்தித் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பாள்.

இடைவேளைகளில் அதிவேக கார்கள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நடந்தவாறு ஒருசில சிகரெட்டுகளைப் புகைத்துவிட்டுத் திரும்புவோம். இல்லையில்லை, நான் மட்டும் புகைப்பேன், அவள் ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள்.

“ம்ம்.. இப்போது சொல்லலாமே! என்ன அவ்வளவு மகிழ்ச்சிகரமான விசயம் மேடம் செலினா?”

“யெஸ்.. யெஸ்… ஐம் ஸோ ஹேப்பி டுடே..” என்று சொல்லி நின்ற இடத்தில் துள்ளினாள். முகம் முழுதும் புன்னகை.

“எனது மகனும் மகளும் நாளை வருகிறார்கள்… அவர்களைப் பார்த்து எத்தனை நாள்களாகிவிட்டன!”

“மகனும் மகளுமா? உங்களுக்கு ஒரு பெண்குழந்தை மட்டும்தானே செலினா? இதென்ன, உங்கள் வழக்கமான மாயக் கதைகளில் ஒன்றா?”

சற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். அவளது முகத்தில் புன்னகையும் குழப்பமும் மாறிமாறி வந்துபோனது போலிருந்தது.

“சரி! இரகசியத்தை உடைத்து விடலாமா?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு தொடர்ந்தாள்.

“எனக்கு இன்னொரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மூன்றாவது மாவட்டத்தில் அவர்களது அப்பாவுடன் வாழ்கிறார்கள். யு நோ, என்னிடம் வசதி இருந்திருந்தால் அவர்களை நானே வைத்துப் பார்த்திருப்பேன். இட் ஆல் ஹேப்பன்ட்.”

“என்ன சொல்கிறீர்கள்? உங்களை எப்போது நம்புவது, எப்போது நம்பாமல் இருப்பது என்று எனக்குப் புரியவேயில்லை…”

பேச்சினூடே தன் தலையில் விழுந்த ஓர் இலையை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு அதை மெல்லிய இழைகளாகக் கிழிக்க ஆரம்பித்தாள். பின், ஒவ்வொரு இழையையும் உள்ளங்கையில் வைத்து ஊதிப் பறக்கவிட்டாள்.

“கேளுங்கள்… அந்தக் காதல் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது… அவரும் குழந்தைகளும்… என்ன மகிழ்ச்சியான நாள்கள்! என்ன செய்வது? எல்லாம் நமக்கு ஏற்றபடி நடக்குமா என்ன!”

என்னதான் அயல்நாட்டு வாழ்க்கை எனக்கு பொருந்திப் போயிருந்தாலும் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விசித்திரமான முன்வாழ்க்கையைத் தனக்குள் புதைத்து வைத்திருப்பதை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. இதோ இத்தனை நாள் ஒரு கனவு தேவதை போலிருந்தவள் இப்போது மெல்லத் தன் பங்கிற்குச் சில முடிச்சுகளை அவிழ்க்கிறாள். எனக்கிருக்கும் கவலைகளையும் சுமைகளையும் கடந்துசெல்ல இந்த மாதிரி முகங்கள்தானே உதவுகின்றன. ஒவ்வொரு முறை அம்மாவின் அழைப்பு வரும்போதும் திருமணம் குறித்த உரையாடலை எப்படியாவது கடந்துவிடத் தோன்றும். இந்த வயதிற்குப் பிறகு எதற்காகத் திருமணம் என்று மனம் ஒருபுறம் சொன்னாலும் நமக்கேன் ஒன்றும் அமையவில்லை, அப்படி என்ன துரதிருஷ்டத்தை என்கூடவே வைத்திருக்கிறேன், இங்கே நண்பர்கள் சொல்வதைப்போல மிக எளிதாக ஒரு ‘ஹோர் ஹௌஸிற்கு’ என்னால் ஏன் செல்லமுடியவில்லை? இங்கே மலிந்து கிடக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள ஏன் என் மனம் மறுக்கிறது? அப்படியென்ன ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்துவிட்டேன் நான்? கேள்விகள்.. கேள்விகள்…

“ஹலோ பாஸ்.. என்ன, அதற்குள் கனவிற்குள் சென்றுவிட்டீர்களா?”

“இல்லையில்லை.. இன்டரஸ்டிங்…” என்று அவளைத் தொடருமாறு கையசைத்தேன். அவள் சொல்வதை இன்னும் நான் நம்பவில்லை.

“என் காதல் அவருக்குச் சலித்துப் போயிருக்கவேண்டும்.. ஒருநாள் ஒரு ஹோர் ஹௌஸிற்குள் அவர் செல்வதைப் பார்த்தேன்… பின் சிலமுறை அவரது காரில் ஒரு பெண்ணுடன் சென்றார்.. பின், விசயங்கள் மிகவும் எளிதாக முடிந்துவிட்டன…”

“என்ன? என்ன ஆயிற்று?”

“ஓர் இதமான காலைப்பொழுதில் அந்தப் பெண்ணை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்.. அவளுடன்தான் இனி வாழப்போவதாக அறிவித்தார்… என் மகளும் மகனும் அப்போது பதின் பருவத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர்… சில தினங்களுக்குப் பிறகு அவர்களையும் அழைத்துக்கொண்டு என்னை விட்டுச் சென்றுவிட்டார்…”

“என்ன இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்? அதெப்படி அவர் செல்லமுடியும்? நீங்கள் தடுக்கவில்லையா?”

“இல்லை… அதற்கு மேல் தடுத்துவைத்து நான் என்ன சாதித்துவிட முடியும்? அவர் எவ்வளவோ யோசித்துத் தெளிவான முடிவு எடுத்திருப்பதாகத்தான் எனக்கும் தோன்றியது. பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவரவர் விருப்பம்தானே? எனக்கு வலிதான்… ஆனால், வேறு வழியுமில்லையே? விட்டுவிட்டேன்… பின், சில நாள்கள் அமைதி, தனிமை.… எல்லாம் கடந்து போயின… அதுதான் வாழ்க்கையின் அழகு, இல்லையா? எவருடைய அனுமதிக்கும் அது காத்திருப்பதில்லை… தான் நினைப்பதை நடத்தியே தீரும்போல… ஆனால், என் குழந்தைகள் அவருடன் சென்றதுதான் நல்ல முடிவு, என்னால் அவர்களுக்குத் தேவையானவற்றை ஒருபோதும் கொடுத்திருக்க முடியாது… அவ்வப்போது என்னைப் பார்க்க வருவார்கள்… சச் நைஸ் கிட்ஸ்… இப்போது அவர்கள் நிமிர்ந்து விட்டார்கள், பிரச்சினையில்லை… ஐம் ஹேப்பி…”

இதையெல்லாம் சொல்லும்போது செலினா சிறிது வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. எங்கோ கேள்விப்பட்ட கதையை சொல்வதுபோலச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்… ஸோ, யு காட் மேரீட் எகெயின்?”

“இல்லை… இவர் எனது நீண்ட கால நண்பர்.… நாங்கள் சேர்ந்து இருக்கிறோம்… குழந்தையும் பெற்றுக்கொண்டோம்… நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது..”

தொடர்ந்து சிறிது தூரம் நடந்தோம்.

“இதெல்லாம் விசயமில்லை… இப்போது ஒரு சிறிய குழப்பத்தில் இருக்கிறேன்… ம்ம்… குழப்பமெல்லாம் இல்லை… ஒரு ட்விஸ்ட் என்று வைத்துக்கொள்ளலாம்…”

“நினைத்தேன்… சொல்லுங்கள்…”

“அவரது இரண்டாம் திருமண வாழ்க்கை வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடப் போகிறதாம்… அவர்கள் பிரிவதாக முடிவும் செய்துவிட்டார்கள்… இப்போது, அவருக்கு மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழவேண்டுமாம்… எனது மகனும் மகளும்கூட அப்படியே நினைத்திருக்க வாய்ப்புண்டு.. மீண்டும் ஒரு குடும்பமாக… கூடவே என் குட்டிப் பெண்ணும் இருப்பதில் அவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையாம்…”

நான் என்ன செல்வதெனத் தெரியாமல் அவள் அடுத்து என்ன சொல்லப்போகிறாள் எனப் பார்த்து நின்றேன்.

“யு நோ வாட்? என் இப்போதைய துணைவரிடமும் இதைப்பற்றிச் சொல்லிவிட்டேன்…” என்று சொல்லிச் சிரித்தாள்.

“என்ன? நிஜமாகவா? நீங்கள் என்ன முடிவு செய்யப்போகிறீர்கள்?” என்று படபடத்துக்கொண்டு கேட்டேன்.

“அதை நான் நாளை முடிவு செய்யப் போகிறேன்… இல்லையில்லை, ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன்.. அதெப்படி மறுபடியும் அவருடன் மனைவியாக வாழ முடியும்? எனக்கு இப்போது ஒரு துணைவர் இருக்கிறார். அவருடன் வாழ்வதுதான் சரி. அதுதான் என் விருப்பமும்கூட,” என்று புன்னகைத்துக் கண்ணடித்தாள். மீண்டும் ஓர் இலையை முகர்ந்துவிட்டுக் கிழிக்க ஆரம்பித்தாள்.

நான் தூரத்து வாகனங்களை வெறித்துப்பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். அவள் செய்வதுதான் சரி, அசாத்தியமான தைரியம்தான்! திடீரென பின்புறமிருந்து வலுவான இரண்டு கைகள் என்னைக் கழுத்தோடு சேர்த்து அணைத்தன. நான் திமிறிக்கொண்டு யாரெனப் பார்ப்பதற்காக திரும்ப முயற்சித்தேன். என்னருகே நின்றிருந்த செலினா ஏதும் சொல்லாமல் சட்டெனத் திரும்பி வெடுவெடுவென நடக்க ஆரம்பித்தாள்.

திமிறியவாறு, “செலினா, செலினா…” என்று அழைத்தேன். அவள் திரும்பிப் பார்க்காமல் விரைந்து சென்றாள். இவள் ஏன் இப்படிப் போகிறாள் என்று யோசித்தவாறு வலிமையாக அந்தக் கைகளைப் பிடித்து முன்னால் இழுத்தேன்.

“இத்தனை வலிமையான கைகள் இந்தத் தீவில் உன்னைத் தவிர யாருக்கு இருக்க முடியும் ஆபீசர் மைக்கேல்!” என்று அவனது தோளில் ஓங்கி அறைந்தேன்.

“அப்படிச் சொல் என் செல்ல நண்பனே!” என்று என்னை இழுத்துக் கட்டிக்கொண்டான் மைக்கேல். மைக்கேல் ஜமைக்காவைச் சேர்ந்தவன், சின்ட் மார்ட்டின் அரசாங்கத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் இருக்கிறான். என் சமீபகால நண்பன்.

“அது சரி, செலினாவை உனக்குத் தெரியுமா என்ன? உன்னைப் பார்த்ததும் அவள் ஏன் இப்படி ஓடுகிறாள்?” என்று கேட்டேன்.

“ஹிஹிஹி.. அது ஓர் இரகசியம். பிறகு சொல்கிறேன். அதை விடு. என்ன ஆயிற்று, உன் திருமண முயற்சி? எப்போதுதான் அந்தப் பெண்ணை என் கண்களில் காட்டப்போகிறாய்?”

“கூடிய விரைவில் ஓர் இடம் அமைந்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனால், திருமணம் வேண்டுமா, வேண்டாமா என்று குழப்பமாகவும் இருக்கிறது மைக்கேல்.”

“நெவர் கன்ஃபியூஸ்… திருமணம் செய்துகொள் நண்பா… வாழ்க்கை அழகாகிவிடும் பார்…”

“ம்ம்… அது இருக்கட்டும், என்ன ஆனாள் உன் புதிய பெண் தோழி? உங்கள் காதல் எப்படிப் போகிறது?”

“அமேசிங்… வாழ்க்கை பறந்துகொண்டிருக்கிறது நண்பா! ஆனால், நேற்று ஒரு திடீர்க் குழப்பம்…”

“ஏன்? என்ன ஆயிற்று?”

“நான் சிகரெட் புகைக்க வேண்டுமாம். புகை மணத்துடன் நான் எப்படியிருக்கிறேன் என்று அவள் பார்க்க வேண்டுமாம்.” என்று சொல்லித் தலையில் அடித்துக்கொண்டான். மைக்கேல் புகைப்பதில்லை. போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இருப்பதால் அன்று. அந்த வாடை அவனுக்கு ஆகவே ஆகாது. இங்கே, புகைப்பவர்கள் அருகே செல்லாமல் விலகிச் செல்லும் ஒரே உயிரினம் அவன்தான்.

“அப்படிப் போடு. இப்போது என்ன செய்யப்போகிறாய் ஆபீசர் மைக்கேல்? நன்றாக மாட்டிக்கொண்டாய். என்ன? ஒரு முத்தத்திற்கு ஒரு சிகரெட்டா? எப்படி ஒப்பந்தம்?”

“தெரியவில்லை நண்பா. அதுதான் உன்னிடம் வந்தேன். எனக்கு நீ ஏதும் யோசனை சொல்லமாட்டாயா?”

“ம்ம்ம். ஒரு வழி இருக்கிறது. நீ முதலில் ஜூல் (Juul) சிகரெட் ஒன்றை வாங்கிப் புகைத்துப் பாரேன். தேறிவிட்டாயென்றால் மற்ற சிகரெட்டுகளைப் பார்க்கலாம்.”

“ம்ம். அது என்ன விலை நண்பா?”

“நூறு டாலர் இருக்கும் ஆபீசர். கவலைப்படாதே. என்னிடம் ஒரு ஜூல் இருக்கிறது. நீ அதை உபயோகித்துப் பார். என்ன செய்ய? நண்பனாகிவிட்டாயே!”

“எல்லாம் என் நிலைமை. பார், பார். இன்னும் கொஞ்ச நாள்தான். உன் நண்பன் மைக்கேல் வாழ்க்கையே மாறப்போகிறது.” என்று சொல்லிச் சிரித்தான்.

என்னதான் அரசுப் பணியாக இருந்தாலும் அவனுக்கு என்ன, ஒரு சில ஆயிரம் டாலர்கள்தான் சம்பளமாகக் கிடைக்கும். மிக நேர்மையான அதிகாரி வேறு. லஞ்சமோ, சலுகைகளோ ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனுடைய தொழிலில் அவன் ஒரு முன்னுதாரணம். அவனது நடை, உடை, செயல்பாடு எல்லாமே மிகமிக நாகரீகமாக, ஒரு நிபுணனைப் போலிருக்கும். ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு மறுவினையும் அவனிடமிருந்து சரியான நேரத்தில் சரியாக வந்துவிழும். நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பான். ஊரின் பிரபலங்களுக்கு அந்த வசதிகளைப் பற்றித் தெரியப்படுத்துவது அவனது சிறு வியாபாரம். அதற்கான விளம்பர யுத்திகளுக்காக என்னைத் தேடிவந்தான். எந்தவொரு புதிய கருவி கிடைத்தாலும் முதலில் என்னிடம்தான் கொண்டுவருவான். அப்படித்தான் எங்கள் நட்பு தொடங்கியது.

விரைவில் மிகப்பெரிய பணக்காரனாக ஆகிவிடுவேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான். ஊர் நடுவே உள்ள ஒரு நட்சத்திர விடுதியை விலைக்கு வாங்குவானாம். பல வெளிநாட்டுக் கார்களை இறக்குமதிசெய்து ஓட்டுவானாம். பின், அவனது நீண்டநாள் கனவு! ஜமைக்காவிலிருந்து தன் மொத்தக் குடும்பத்தையும் அழைத்துவந்து இங்கே குடியேற்றுவது. ஒவ்வொரு கடல் கடந்து வந்தவனுக்கும் உள்ள சோகங்களும் மறக்க நினைக்கும் நிகழ்வுகளும் மைக்கேலுக்கும் உண்டு. அதையெல்லாம் துளியும் காட்டிக்கொள்ளாமல் என்ன ஒரு கம்பீரம்!

கடற்கரைச் சாலையின் புல்வெளி விடுதியில் ஆளுக்கொரு தின்பண்டம் சொல்லிக் காத்திருந்தோம்.

“ஆபீசர் மைக்கேல். அதென்ன, அடிக்கடி பணக்காரனாகி விடுவேன் என்று சொல்கிறாய்? ஏதேனும் புதையல் தோண்டும் யோசனை இருக்கிறதா? இல்லை எங்கேனும் கொள்ளையடிக்கப் போகிறாயா? நீயாவது, கொள்ளையாவது? கறாரான அதிகாரி ஆயிற்றே? உன் வியாபாரத்தில் அப்படியென்ன பணம் வந்து கொட்டிவிடப்போகிறது?”

“ம்ம்… நான் சொன்னால் உன்னால் நம்பவே முடியாது நண்பா. எனது நீண்டகாலத் திட்டம் ஒன்று இருக்கிறது. பிரம்மாண்டமானது. கோடிகள் என் காலடியில் புரளும் பார்,” என்று சொல்லி என் கையில் அடித்தான்.

“ஓஹோ! அதென்ன திட்டம்? என்னிடம் சொல்வதில் பிரச்சினையில்லை என்றால் சொல்.”

“அட நண்பா. உன்னிடம் மட்டும்தான் நான் சொல்லப்போகிறேன். சொல்லப்போனால், இதற்கும் உன் மூளை எனக்குத் தேவைப்படும்.”

“ம்ம். சொல், பார்க்கலாம்.”

“உனக்கு கிக் (GIG) இகானமி பற்றித் தெரியுமா? இன்றைய இளைய தலைமுறையில் அதன் விளைவென்ன தெரியுமா?”

அடுத்த சில நிமிடங்களில் அவன் பகிர்ந்த விசயங்களைக் கேட்டு எனக்கு வியர்த்தேவிட்டது.

“இங்கே வாழ்கின்ற ஒவ்வொரு ஆணிற்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பின்னால் ஓர் இரகசிய வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. அந்த இரகசிய வாழ்க்கையில் எத்தனையோ கசப்புகள், பரிதாபங்கள், வறுமை, பசி, பட்டினி. இவை எல்லாவற்றையும் தாண்டி எத்தனையோ ஏக்கங்கள், நிறைவேறா ஆசைகள். உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதன் பிறகு கொண்டாட்டம். குடி, போதை, காமம். மாதம் ஆயிரம் டாலருக்குள் சம்பாதிப்பவர்களின் தினசரி வாழ்க்கை இதுதானே? இவர்களுடன் சிறிதும் தொடர்பின்றி ஓர் உயரத்தில் ஒரு சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆடம்பரம், உற்சாகம், விதிகளற்ற கொண்டாட்டம்! அவர்களுக்கேயான ஓர் இரகசிய இருள் உலகம் இருக்கிறது. அந்த இரகசிய உலகம்தான் என் மூலப்பொருள்.”

எனக்கு அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.

“புரியவில்லை, இல்லையா? இங்கே இருக்கிற மேட்டுக்குடி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்குத் தெரியாமல் ஒரு வாழ்க்கை இருக்கிறது, தெரியுமா? அதைப்போலவே வாழ நினைக்கும் நடுத்தர வர்க்க ஆண்களும் முக்கியமாகப் பெண்களும் இருக்கிறார்கள். அங்குதான் நான் உள்ளே வருகிறேன்.” என்று சொல்லித் தன் அலைபேசியில் எதையோ தேடினான்.

“பார்” என்று என்னிடம் நீட்டினான். தேவதைகள். கிட்டத்தட்ட பத்து பேர். பல்வேறு நாட்டு தேவதைகள். ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்த அழகு. சொல்லப்போனால், அதையும் மிஞ்சும் அழகு. கவர்ச்சியான, ஆபாசமான புகைப்படங்கள். ஆனால், நுணுக்கமான கலை நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அதிர்ச்சியும் குழப்பமுமாக, “என்ன மைக்கேல்? நான் நினைப்பது சரிதானா? என்னால் நம்ப முடியவேயில்லை. ஆனால், முழுதாகப் புரியவுமில்லை,” என்றேன்.

“இந்த மாதிரிப் பெண்களை இந்தத் தீவில் நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டான்.

நான் இல்லையெனத் தலையாட்டினேன்.

“ம்ம்ம்.. அதுதான் விசயம். இதே ஊரில், இதே சாலையில்தான் அவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உன்னைப் போன்றவர்களின் கண்களுக்கு அவர்கள் புலப்படமாட்டார்கள். அவர்களது வாழ்க்கை ஒரு புகை மூட்டம்போல.”

“ஆனால், அதற்குத்தான் ஹோர் ஹௌஸ் இருக்கிறதே? அங்கே இருக்கும் பெண்களும் நன்றாகச் சம்பாதிக்கிறார்களே?”

“ஹோர் ஹௌஸ்? அதெல்லாம் யாருக்காக? நீ ஏன் இதுவரை ஹோர் ஹௌஸிற்குள் சென்றதில்லை, சொல் பார்க்கலாம்.” என்று என்னைத் தீவிரமாகப் பார்த்தான்.

என்னிடம் பதில் இல்லை. அமைதியாக எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவேளை பயம் மட்டும்தான் காரணமா? நிச்சயமாக அது ஒழுக்கம் சார்ந்த முடிவாக இருக்காது. ஒருவேளை யாருக்கும் தெரியாமல் வாய்ப்பு கிடைத்தால் நான் என்ன செய்வேன்?

“உனக்கு இப்போதைக்குப் புரியாது. ஒருநாள் புரியும். சரி விடு, விசயத்திற்கு வருகிறேன். பெரிய பணக்காரர்களுக்கு அவர்களுக்குத் தேவையான சுகத்தை இந்த தேவதைகள் மூலமாகக் கொடுக்கப்போகிறேன். பதிலுக்கு கட்டுக்கட்டாகப் பணம். எலீட் எஸ்கார்ட் சர்வீஸ்!”

“மைக்கேல்…”

“ஆம் நண்பா. நானேதான் சொல்கிறேன். நான் செய்வது குற்றமெல்லாம் இல்லை… சொல்கிறேன் கேள்…”

எனக்கு மேலும் குழப்பமாக இருக்க ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு அவனைப் பார்த்தேன்.

“இந்தப் பெண்களை நான் அவ்வளவு சுலபமாக ஒன்றும் தேர்வு செய்துவிடவில்லை. பல சோதனைகள்… என்னுடனான இரவுகள், பயணங்கள். ஒரு நொடியில் எனக்கொரு வெளிச்சம் கிடைக்கும். அப்போது முடிவுசெய்வேன். இவர்களால் எந்தவொரு ஆணின் தேவையையும் பூர்த்திசெய்து அவனை மிதக்கச் செய்யமுடியும்.”

எனக்குச் சட்டென ஊரில் நடந்த பெண் பார்க்கும் படலங்கள் நினைவிற்கு வந்தன. அத்தனைப் பெண்களின் முகங்களும் என் கண்முன் மீண்டும் மீண்டும் வந்தன.

“இந்தப் பெண்கள் கடும் வறுமையில் இந்தத் தீவிற்கு வந்தவர்கள்தான். உன்னைப்போல, என்னைப்போல பசியிலும் பட்டினியிலும் வாடிக் கிடந்தவர்கள்தான். ஏதேதோ வேலைகள் செய்து தங்களுக்கான ஒரு நடுத்தர வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டவர்கள்தான். இன்று அவர்களுக்கு நான் உருவாக்கிக் கொடுத்திருப்பது அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கை. யு நோ வாட்? எனது ஒரு மாத அரசாங்கச் சம்பளத்தை இவர்கள் ஓரிரவில் சம்பாதித்துவிட முடியும்.”

“ஆனால் மைக்கேல்? இவர்கள் ஏன் இப்படி ஒரு வாழ்க்கைக்கு வரச் சம்மதிக்க வேண்டும்?”

“யெஸ்.. தட்ஸ் த பாய்ண்ட்… மனிதனுக்கு ஆசை என்ற ஒன்று இருக்கிறதே! ஆசை… ஆசை… பேராசை… கிக் இகானமி என்று சொன்னேன் இல்லையா? இன்றைய தேதியில் தனது தினசரித் தேவைகளுக்காக, அதுவும் ஆடம்பரத் தேவைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் இளம்பெண்களும் ஏன், ஆண்களும் பெருகி வந்துகொண்டிருக்கிறார்கள். வருமானத்தை மீறி நம் தேவைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும்போது என்ன செய்ய முடியும்? உலகம் போகும் வேகத்தில் நாம் மட்டும் நின்று வாய் பார்த்துக்கொண்டிருக்கலாமா? குறுகிய கால வேலையில் பலமடங்கு பணம் வருகிறதென்றால் சும்மா விட்டுவிடுவோமா, என்ன? இவர்களை கச்சாப் பொருளாகக்கொண்டு இருண்ட, மில்லியன்களில் மிதக்கும் ஓர் உலகம் இருக்கிறது. அதில் நான் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய நூலிழைதான்.”

“சரி, உன் திட்டம்தான் என்ன? இது எப்படிச் சாத்தியம்?”

“அதில்தான் எனக்கு உனது உதவி வேண்டும். சொல்கிறேன். இப்போதைக்கு என் திட்டம் இதுதான்… என்னிடம் இருக்கிற இந்தப் பெண்கள் நான் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களுக்காக அலைந்து திரிந்துகொண்டிருக்கும் பெரிய பணமுதலைகளை நம் பொறியில் விழ வைப்பதுதான் முதல் வேலை… அவர்கள் சொல்லும் இடத்தில், இல்லையென்றால் நான் உருவாக்கி வைத்திருக்கும் இரகசியப் பண்ணை வீடுகளில் யாருக்கும் தெரியாமல் அவர்களுக்குத் தேவையானதை நாம் கொடுப்போம். நமக்கும் இந்தப் பெண்களுக்கும் தேவையானது தானாக வந்துசேரும். இதில் இன்னொரு முக்கியமான விசயம். இதில் என் முகமோ, ஏன் பெயரோகூட வெளியே வராது.”

“மைக்கேல், நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறாய். எனக்கு இது சரியாகப் படவில்லை.”

“நண்பா, இதில் என்ன குழப்பம் உனக்கு? நான் யாரையும் கட்டாயப்படுத்தி இதைச் செய்யவில்லையே? எல்லோருக்கும் win-win திட்டம்தானே?”

“ம்..ஆனாலும் எனக்கு மனது உறுத்துகிறது. இந்தப் பெண்கள் பாவமில்லையா? அவர்களது தேவையை நீ உனக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறாய்தானே?”

“யெஸ்… பட், இது அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கைதானே? ஒரு சிறு துளி கட்டாயம்கூட கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து வெளியே சென்றுவிடவும் முடியும். எல்லாம் பணம் நண்பா, பணம். இவர்களில் சிலர் திருமணமாகி குழந்தைகளோடு வாழ்பவர்கள், சிலர், இளம் கல்லூரி மாணவிகள், தெரியுமா?”

“ம்ம்… ஆமாம், நீ சொல்லும் பணக்கார ஆண்கள் ஏன் ஹோர் ஹௌஸிற்குச் செல்லாமல் உன்னிடம் வர வேண்டும்?”

“ஹிஹிஹி.… அதுதானே நம் தொழில் இரகசியமே நண்பா! அதை நீயே புரிந்துகொள்வாய் பார்,” என்று சொல்லி என் தோள்களில் கையைப்போட்டு என்னை இறுக்கி அணைத்துக்கொண்டான். எனக்கு ஏனோ அந்த கணத்தில் செலினாவின் ஞாபகம் வந்தது. அவள் ஏன் இவனைப் பார்த்ததும் அப்படிப் போனாள்?

அடுத்த நாள் மாலை என் அறைக்கு வந்திருந்தான் மைக்கேல். ஜூல் புகைப்பது எப்படி என்பதை அவனுக்குக் காட்டினேன்.

“இவளுக்காக நான் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பார் நண்பா!” என்று சிரித்தான். எனக்கு முந்தைய நாளின் உரையாடல் ஏதோ கனவைப்போல என் ஆழத்தில் புதைந்துபோனது போலிருந்தது. ஆனாலும் ஓர் உறுத்தல்.

“மைக்கேல், நீ இத்தனை பெண்களோடு இருக்கிறாய்? ஆனாலும் ஏன் இந்தப் பெண்ணை மட்டும் காதலியாக வைத்திருக்கிறாய்? திருமணமும் செய்யப் போகிறாய், இல்லையா? உன்னைப் பற்றிய இரகசியங்கள் ஏதும் தெரியாமல் இவள் உன்னோடு இருக்கிறாளே? இவளை ஏன் ஏமாற்றுகிறாய்?”

“ஓ… இன்டரஸ்டிங் கொஸ்டின். நான் உன்னிடம் அவளைப் பற்றிச் சொன்னதேயில்லை இல்லையா?”

நான் தலையாட்டிக் கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நின்றேன்.

“இவளைப் பார்த்த அந்த நொடியில் எனக்குத் தோன்றிவிட்டது, எனது மரணப் படுக்கையில் இவளது மடியில்தான் என் உயிர் பிரியும் என்று. ஐ’ம் நாட் கிட்டிங்… நிஜமாகத்தான் சொல்கிறேன்… அந்த ஒரு நொடியில் என் உள்மனதில் இவளுடன் ஒரு யுகம் வாழ்ந்து முடித்திருந்தேன்.”

“அருமை… எங்கே சந்தித்தீர்கள்?”

“மூன்றாம் மாவட்டத்தில் உள்ள ஒரு பாரில்…”

“நிஜமாகவா? நல்லவொரு முதல் சந்திப்பு!”

“யெஸ்… நான் அங்கு நுழைந்த நொடியில் தூரத்தில் இவள் தனியாக ஒரு மேசையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்த மேசை ஒரு தனி வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவளது அலைபாய்ந்த கண்கள் அன்று எனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தன.”

“நீ என்ன அதிசயப் பிறவியா? இன்னும் எத்தனை இரகசியங்கள் வைத்திருக்கிறாய் ஆபீசர் மைக்கேல்? அது சரி, பின் என்ன நடந்தது? ஜஸ்ட் கட் த க்ராப்.”

“வெயிட்டரை அழைத்து இருப்பதிலேயே விலையுயர்ந்த ஒயின் பாட்டிலைக் கொண்டுவரச் சொன்னேன்.”

“ம்ம்…”

“அதைக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்துவிட்டு ஒரு துண்டுச்சீட்டையும் கொடுக்குமாறு சொன்னேன்.”

“துண்டுச்சீட்டா? என்ன எழுதி அனுப்பினாய்?”

“வெரி சிம்பிள். ’தயவு செய்து இன்று நீ யாருடனும் நடனமாடி என் இதயத்தை நொறுக்கிவிடாதே அன்பே!’ என்று எழுதியிருந்தேன்.”

“கமான் மேன், அவள் என்ன செய்தாள்?”

“சீட்டை வாங்கிப் படித்தவள் ஒரு நிமிடம் சீட்டையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தாள். பின், மெல்ல என்னை நோக்கி நடந்துவரத் துவங்கினாள். நான் தூரத்திலிருந்து அவளை ‘வர வேண்டாம், அங்கேயே இரு’ என சைகை செய்தேன். அவள் குழப்பமாக திரும்பித் தன் மேசைக்குச் சென்று உட்கார்ந்தாள்.”

“என்னடா இது?”

“சொல்கிறேன், அன்று இரவு முழுதும், அதிகாலை கிட்டத்தட்ட மூன்று மணி வரை நானும் அவளும் எங்கள் மேசைகளிலேயே உட்கார்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். இடையில் எத்தனையோ பேர் அவளை நெருங்கிப் பேச முயன்றார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை.”

“ஓ… பிறகு என்ன நடந்தது?”

“என் கைகளைப் பற்றிக்கொண்டு என்னோடு வந்துவிட்டாள். இன்றுவரை அவளது கைகள் என்னை இறுக்கமாகப் பற்றிக்கொண்டேதான் இருக்கின்றன… ஷி இஸ் அ காடஸ் மேன்!”

மைக்கேலை ஆரத் தழுவிக்கொண்டேன். அப்போதும் செலினாவின் முகம் என் கண்முன் வந்துநின்று என்னை ஏதோ கேட்பது போலிருந்தது. மைக்கேல் என் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான்.

“அதிர்ச்சியாகாதே… எனது எலீட் எஸ்கார்ட் சர்வீஸின் மைய மூளையே என் காதலிதான்! ஐம் நாட் கிட்டிங்…”

..

அடுத்த நாள் அலுவலகம் முடிந்து கிளம்பியபோது செலினா வந்தாள். அவளைப் பார்த்ததும் மைக்கேலைப் பற்றிக் கேட்கலாமா எனத் தோன்றியது.

“இன்று எங்கள் வீட்டில்தான் உனக்கு இரவு உணவு, வா!” என்றாள்.

“அது… செலினா, இன்னொரு நாள் வருகிறேனே…”

“நோ நோ, நான் என் குடும்பத்தில் எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். நீ வந்தே ஆகவேண்டும்.”

செலினாவின் வீட்டிற்கு அன்றுதான் முதல்முறை செல்கிறேன். ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் கடைசித் தளத்தில் இருந்தது அந்தக் கூண்டுபோன்ற வீடு. வாடகைக்கும் உணவிற்கும்தான் செலினாவின் சம்பளம் சரியாக இருக்கும். அவளது துணைவன் என்ன வேலை செய்கிறானோ என்னவோ?

உள்ளே நுழைந்ததும் அவளது துணைவன் வந்து கைகொடுத்து அணைத்து வரவேற்றான். அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு மறைந்து நின்றாள் அவளது குட்டிப்பெண்.

“உள்ளே வாருங்கள். மற்றவர்களையும் சந்திக்கலாம்,” என்று என்னை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றான். செலினா பரபரப்பாக சமையலறைக்கு ஓடினாள்.

சாப்பாட்டு மேசையில் ஒரு பெரியவரும் ஓர் இளைஞனும் உட்கார்ந்திருந்தார்கள். பெரியவர் என்னைப் பார்த்ததும் கையசைத்துப் புன்னகைத்தார். அந்த இளைஞன் தன் அலைபேசியில் மூழ்கியிருந்தான். விருப்பமின்றித் தலையைத் தூக்கி “ஹாய்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான்.

பெரியவரும் செலினாவின் துணைவனும் நானும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். நீண்டநாள் நண்பர்களைப்போல! நாட்டு நடப்பு, அரசியல், கொரோனா, வியாபாரம் என்று ஏதோதோ… சற்று நேரத்தில் செலினா ஒவ்வொரு பதார்த்தமாகக் கொண்டுவந்து மேசையில் அடுக்கினாள். என்னவொரு இத்தாலிய உணவு மணம்! முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவள், “சரி, சரி, சாப்பிடலாமா?” என்று கேட்டாள்.

எல்லோரும் எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தோம். அப்போதுதான் நான் கவனித்தேன். எனக்கு எதிரே இருந்த அந்தக் காலியான நாற்காலி…

“மேடம் செலினா, மறந்தே விட்டேன். எங்கே உங்கள் மகள்?”

“ஓ, யெஸ்… கெய்ரா, கெய்ரா.… வருகிறாயா, இல்லையா? அவளும் அவளது ஃபோனும்… எவ்வளவு நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள்? இருங்கள், நான் அவளை அழைத்து வருகிறேன்,” என்று உள்ளே சென்றாள்.

சில நிமிடங்களில் செலினா முன்னால் வர, அவளது தோள்மீது கைகளைப் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டே பின்னால் வந்தாள் கெய்ரா. என் கைகள் சட்டென நடுங்க ஆரம்பித்தன. இல்லை, இல்லை… இருக்கவே இருக்காது.… இவளுக்கென்ன ஒரு பதினெட்டு வயது இருக்குமா? இல்லை, அது இவள் இல்லை…

என் முன்னிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள் கெய்ரா. தேவதை! அனைவரும் உணவிற்கு முந்தைய பிரார்த்தனையில் கண்மூடியிருக்க, மைக்கேலின் அலைபேசியில் கடைசியாகப் பார்த்த அந்த முகமும் இந்த முகமும் ஒன்றாக இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன் நான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.