
ஜன்னலுக்கு வெளியே வெகுதூரத்தில் தெரிந்த பொட்டல் வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பொட்டல் வெளி மௌனமாய் அசைவது தெரியாமல் மெதுவாக அசைந்துகொண்டிருந்தது ; மின் கம்பங்கள் கத்திக்கொண்டே வேகமாக பின்னோக்கி ஓடின.
அவள் அருகில் அமர்ந்திருந்த ராம் அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அவனுக்கு அந்தப்பக்கத்தில் உட்கார்ந்திருந்த மன்னியிடம் அவன் ட்ரேட் மார்க் கட கட சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தான்.
எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த குஜராத்தி மாமி இவளிடம் “கஹாங்க் தக் ஜாரஹே ஹோ” ( எது வரை போகிறாய்)” என்று கேட்டாள் .இவள் மெதுவாக “பூனா” என்றாள்.
“பம்பாயில் சுத்திப் பார்க்கப் போனீர்களா” என ஹிந்தியில் கேட்டாள்.
ராம் உற்சாகமான குரலில் “அவளுக்கு ஹிந்தி வராது, இதோ இவர் நன்றாக பேசுவார் “என்று மன்னியைக் காண்பித்து ஹிந்தியில் சொன்னான்.
இவள் “ஆமா ! சுற்றிப் பார்த்தோம்” என சன்னமான குரலில் சொன்னாள்.
குஜராத்தி மாமி “ரொம்ப நன்றாகப் பேசுகிறாளே? ஏன் இப்படி சொல்லுகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு இவர்கள் மூவரையும் மாறி மாறி குழப்பத்தோடுபார்த்தாள்.
ராம் “இல்லை….. ஒரு வார்த்தை அரை வார்த்தைப் பேசி சமாளிப்பாள். முழுக்கப் பேச வராது” என்று சிரித்தான். அதென்ன ஒவ்வொரு வாக்கியம் சொல்லி முடித்தவுடன் முற்றுப்புள்ளி போல ஒரு சிரிப்பு எப்போதும் என நினைத்துக் கொண்டாள்.
மன்னி ”ஸ்.. என்ன இது ராம்! எப்பப் பாரு அவளை ஏதோ சொல்லிண்டு..”என்று சொல்லிவிட்டு “சரோ! முகம் வாடி இருக்கே ? உடம்பு சரியில்லயா?” என்றாள் .
அவன் கட கட சிரிப்பு சிரித்துக்கொண்டே “அவ முகம் எப்போதுமே அப்படித்தான்” என்றான்.
மன்னி தன் இடத்தில் இருந்து எழுந்து அவள் அருகில் வந்து அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். மன்னியின் கை மென்மையாக, குளுமையாக இதமாக இருந்தது.
“கத கதன்னு இருக்கே! லேசா ஜ்வரம் இருக்கு, தலையை வலிக்கறதா?” பரிவாகக் கேட்டாள்.
அவள் தலையை ஆம் என்பதாக அசைத்தாள். மன்னி தலையை லேசாக பிடித்துவிட்டாள். இவள் கண்களை மூடிக்கொண்டாள்.
“இரு! க்ரோசின் தரேன்! போட்டுண்டு கண்ணை மூடிண்டு ரெஸ்ட் எடு!”
மன்னியின் மேல் சந்தன பவுடர் வாசனை அடித்தது.
மாத்திரையை கொடுத்துவிட்டு தன் இடத்துக்கு திரும்பும்பொழுது மன்னியின் கால் குஜராத்தி மாமியின் காலில் லேசாக பட்டு விட்டது போலிருந்தது. மன்னி அவளைத் தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டு “மன்னியுங்கள்” என்றாள்.
ஆன்டி சிரித்துவிட்டு “பரவாயில்லை” என்ற பின்னர் சின்ன இடைவெளி விட்டு “நீங்கள் அவளுக்கு என்ன உறவாக வேண்டும்?” ரொம்ப நேர சந்தேகத்தை கேட்டுவிட்டாள்.
“பாபி!(மன்னி!) இவர் என் கணவரின் தம்பி, அது அவர் மனைவி”
“ஓ!! புரிந்தது! புரிந்தது!” என்றாள் மாமி.
“என் பெண் பம்பாயில் இருக்கிறாள். போன வருடம் கல்யாணம் ஆயிற்று. இப்போது போய் அவளைப் பார்த்துவிட்டு ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம்” சித்ரா மன்னி சொன்னாள்.
“ஓ! நீங்களே சின்னவராக இருக்கிறீர்களே? உனக்கு கல்யாணமான பெண் இருக்கிறாளா?”
குஜராத்தி மாமி ஹிந்தி சுமார்தான். ஒருமையும் பன்மையும் கலந்து கட்டிப் பேசினார்.
இவள் அம்மா கும்பகோணத்திற்குப் போன வருஷம் இவர்கள் புகுந்த வீட்டுக்கு வந்த போது கொல்லைக் கிணற்றடியில் நின்றுகொண்டு அடிக்குரலில் “ இன்னிக்கு மனையிலே உக்காத்தி வச்சாலும் கல்யாணம் பண்ணிவைக்கலாம் போலன்னா இருக்கா உங்க சித்ரா மன்னீ……ஈஈஈ சிக்கு சிறுகுன்னு! ( இந்த இடத்தில் அம்மா குரலில் ஈஈஈஈ… கொஞ்சம் நீட்டி முழங்கி சத்தமாக வேற இருந்தது) நன்னா டிரஸ் வேற பண்ணிக்கத் தெரியறது, அதான் இந்தாத்துல அவ ராஜ்யமா இருக்கு!” என்றாள்.
“ஐயோ அம்மா! சித்த சும்மா இரேன்! அவா யார் காதிலயாவது விழுந்துடப் போறது!”
“ஆமா! நீ இப்படி பயந்தே சாகு! உனக்கு சமத்துப் போறாது!”
“எனக்கு இருக்கற சமத்து போறும்!”
அம்மா ஆத்திரத்துடன் “என் வாயை அடக்கு!……. “என ஆரம்பித்தாள்.
கொல்லையில் பாத்திரங்களை எடுக்க வந்த சித்ரா மன்னி அம்மாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே “ நம்ம பொண்களோட எவ்வளவு பேசினாலும் போறாது போலதான் இருக்கும், இல்லையா மாமி! எனக்கும் ஜலஜா நாலு மாசம் முன்னால கல்யாணம் ஆகிப் போறச்ச இனிமே நினைச்சபோது பேச முடியாதேங்கறதுதான் பெரிய கவலையா இருந்தது! ஹூம்… என்ன பண்றது? அதுவும் சரோ மாதிரி ஒரு சமத்து சாது பொண்ணை விட்டுட்டு இருக்கறது கஷ்டம்தான் மாமி! “ சொன்னாள்.
போகும் போது “மாமி ரெண்டாம் டோஸ் காபி ரெடியா இருக்கு! இங்க கொண்டு வரட்டுமா?”என்றாள்.
“இல்லம்மா, நா உள்ளே வரேன்!”
“ ம்க்கும்…” அவள் முதுகிற்குப் பின்னால் பழிப்பு காட்டினாள் அம்மா.
ஜானகி மாமி இவளைப் பார்த்தவுடன் ஓடி வந்து கட்டிக்கொண்டாள். “எத்தனை வருஷங்கள் ஆச்சு? பதினஞ்சு பதினாறு வருஷம் இருக்குமா? மாமியை நினைவு வச்சுண்டு பாக்க வந்தியேடிம்மா! ரொம்ப ஸந்தோஷம்”
“மாமி என்னையும் கொஞ்சம் பாருங்கோ!” ராம் சொல்லிவிட்டு கட கவென்று சிரித்தான்.
மாமி “நன்னா இருக்கே! ராம்! உன்னை விட்டுடுவேனா? வா! வா! நீங்களும் வாங்கோ” என்று மன்னியையும் வரவேற்றாள்.
மன்னி சிரித்துக்கொண்டே மாமி சரோவை அன்போடு கையைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தாள்.
“கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் உங்களோட, மாமனார், மாமியாரோட எல்லாம் கும்பகோணத்தில இருந்துட்டு மூணாம் வருஷம்தான் இங்க ஆம்படையானோட குடித்தனம் பண்ண வந்தா! இந்த காலத்தில எந்த பொண்ணாவது அப்படி இருக்குமா சொல்லுங்கோ” என்றாள் மாமி மன்னியைப் பார்த்து.
“அதுக்கென்ன பண்றது? அதுக்கு முந்தி நான் இருந்த இடமெல்லாம் ஒரே வன, வனாந்தரம்! உருப்படியா ஊர் மாதிரி போஸ்டிங்க் வந்த இடமே பூனாதான்!”
மாமி ராமைப் பார்த்து சிரித்தாள், “சரி! ஃபர்ஸ்ட் காபியா, டீயா? இல்ல லன்ச் சாப்பிடறேளா? எல்லாம் ரெடியா இருக்கு? எப்ப சாப்பிட்டேள்?”
“லன்ச் டிரைன்லயே பண்ணிட்டோம் மாமி! பொண்ணு பாக் பண்ணிக் குடுத்திருந்தா, டிரைன் இங்க ரண்டும் கெட்டான் டயத்தில வரது இல்லையா, அதான்” மன்னி சொன்னாள்.
“இருங்கோ! பின்ன காபியும் பட்சணமும் எடுத்துண்டு வரேன்” மாமி உள்ளே போனாள், சரோவும் பின் தொடர்ந்தாள்.
மாமி பாலை அடுப்பில் ஏற்றிவிட்டு, “சொல்லு! எப்படி இருக்க?”
இவள் சிரித்தாள் . ”இருக்கேன் மாமி!”
“நீ மாறவே இல்லடி”
ஹாலில் ராமும் , மன்னியும் உரக்க சிரிக்கும் சத்தம் கேட்டது. மாமி எட்டிப் பார்த்தாள். மன்னி ராமைப் பார்த்து விளையாட்டாக கையை ஓங்குவது தெரிந்தது.
“ரொம்ப ஃபிரண்ட் போலிருக்கே ரண்டு பேரும்!”
“ம்..”
“வேலை பாக்கறா இல்லை?”
“ஆமா அவளுக்கும் வேற என்ன வச்சுருக்கு வாழ்க்கையில? ப்ச்…..!”
மாமி அவளை நிமிர்ந்து கண்களுக்குள் பார்த்தாள்.
“டிரிப் எப்படி இருந்தது?”
“ம்..” மாமி எப்படி சரியான கேள்விகளைத் தேர்ந்தெடுத்து கேட்கிறாள் என நினைத்தாள்.
பட்சணத்தை தட்டில் வைத்துக் கொண்டே “நீ இதை எடுத்துண்டு போ, நான் காபி எடுத்துண்டு வரேன்! அப்புறம் உங்கிட்ட பேசறேன்!”
காபியைக் குடித்துக்கொண்டே ராம் சொன்னான் ,“மாமி வீடு ஜோரா இருக்கு! கட்டி இங்கு வந்து நாலைந்து வருஷம் இருக்குமா?”
“ம்.. ஆச்சு , அஞ்சு வருஷம்!”
“மன்னி !உங்களுக்குத் தெரியுமா? மாமி , நாங்க எல்லாம் முன்னாடி இருந்த சோம்வார்பேட் பில்டிங்க்ல இடம் ரொம்ப சின்னதுதான். ஆனா ஒரு மாதிரி லைஃப் நல்ல ஜாலியாதான் இருந்தது! இல்லையா மாமி! அதுவும் இவ வந்தவுடனே மாமிக்கு ஒரே சந்தோஷம்! எங்கிட்ட எண்ணி எண்ணிப் பேசற இவ, மாமி கிட்ட விடாம பேசிண்டே இருப்பா!” கட கடவென சிரித்தான்.
மாமி கேட்டாள் ” நீ அவ கிட்ட பேசினயா என்ன?”
“மாமி நீங்க எப்பவுமே உங்க ஃப்ரண்டுக்குத்தான் சப்போர்ட், இத்தனைக்கும் என்னைத்தான் உங்களுக்கு முதல்ல தெரியும்!”
சித்ரா அவர்கள் பேசுவதை குறுஞ்சிரிப்புடன் பார்த்தாள்.
அன்றைக்கும் அவன் இதைத்தானே சொன்னான்?
சோம்வார் பேட் அடுக்ககத்தில்அன்று பம்ப் உடைந்து போனதால் அவர்கள் பில்டிங்க்கில் எல்லாருக்குமே தண்ணீர், கீழே இருந்து எடுத்துக்கொண்டு வர வேண்டியிருந்தது.
மாமி காலி குடங்களுடன் கீழே இறங்கி வரும் பொழுது, அவள் மேலே ஏறி வந்தாள். மேல் படியிலிருந்த மாமிதன் குடங்களைஅங்கேயே வைத்துவிட்டு வேகமாக கீழே இறங்கி வந்து, அவள் கைகளில் இருந்த தண்ணீர் குடங்களை வாங்கிக் கொண்டாள்.”ஏண்டிமா, என்ன ஆச்சு, காலுக்கு?, இப்படி தாங்கி தாங்கி நடக்கறயே, எங்கிட்ட சொன்னா நான் கொண்டு வர மாட்டேனா? “
குடங்களைத் தூக்கிகொண்டு “வா என் பின்னாடி!” என்றாள்.
“இல்லை மாமி! பரவாயில்லை!!”
“பரவாயில்லையாவது, ஒண்ணாவது!, வலியில நீ எப்படி தவிக்கறே, உன் மூஞ்சியைப் பாத்தாலே தெரிகிறது! வா பேசாம! “
அவள் சொல்லச் சொல்ல கேட்காமல், புடவையை லேசாகத் தூக்கி காலைப் பார்த்தாள்.
“அடிப் பாவி! இப்படி ஆழமா காயம் பட்டிருக்கே! எப்பிடிடி ஆச்சு? எப்ப ஆச்சு? மருந்து கூட போட்டுக்கலை போல இருக்கே!”
அவள் புடவையை இறக்கி விட்டுக்கொண்டே ”இல்லை மாமி, நேத்திக்கி கடையில சாமான் வாங்கப்போகும்போது வழியில ஒரு பையன் சைக்கிள்ல வந்து மோதிட்டான், விழுந்த இடத்துல பெரிய கல்லு கிடந்தது, அதுல முட்டி காயம் பட்டுடுத்து.”
“டாக்டர்ட்ட போனயா? ராம் என்ன சொன்னான்?”
“அவருக்குத் தெரியாது!”
“தெரியாதா?” மாமியின் புருவங்கள் நெரிந்தன.
“வா! என் கூட” மாமி பல்லைக் கடித்தவாறு, அடிக்குரலில் சொன்னாள்.
குடங்களுடன் மாமி வீட்டுக்குள் நுழைந்தபோது, “ஐயோ! மாமி! நீங்க ஏன் எடுத்துண்டு வரீங்க?’ என்றான் ராம்.
“சரோக்கு கால்ல அடிபட்டிருக்கே!”
“அப்படியா? எனக்குத் தெரியாதே! உங்க ஃப்ரண்ட் வாயைத் திறந்து பேசினாதானே தெரியும்?’
“என் கிட்டயும்தான் சொல்லல , ஆனா எனக்குத் தெரிஞ்சுதே! எப்படி?” மாமி முகத்தைத் திருப்பாமல், குடத்தை இறக்கி வைத்தாள்.
“ அவ நடக்கறதைக் கூட பாக்கலையா ராம் நீ?”
“சாரி! மாமி! ,ஆனா நீங்க என்னிக்குமே உங்க ஃப்ரண்ட்க்குதான் சப்போர்ட்”
மாமி சிரித்துக்கொண்டே “ பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி என்ன சொன்னயோ, இப்பவும் சொல்லிண்டிருக்கயே” என்றாள்.
சித்ரா மன்னி, நாசிக்கில் பஞ்சவடியில் சீதா குகைக்குள் போய்விட்டு வந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்.
“குகைக்குள்ள இறங்கற பாதை, இவ்வளவு குறுகலா நாம் ஒரு தரம் போறதுக்கே கஷ்டமா இருக்கே, எப்படித்தான் சீதா தினம் தினம் அதுக்குள்ள போயிண்டிருந்தாளோ?”
‘எல்லா பொம்மனாட்டிகளுமே ஏதேதோ கஷ்டமான பாதையில்தான தினம் தினம் போயிட்டு போயிட்டு வரோம்? நீங்களும் கூடதான மன்னி!’ என்று நினைத்துக்கொண்டாள்.
மன்னி கேட்டாள் “என்ன பாக்கறே? நீ என்ன நினைக்கற அதைப் பத்தி?”
“கஷ்டம்தான், பாவம்!” என்றாள் சரோஜா.
“இந்த ட்ரிப் நன்னா இருந்தது இல்ல? ஆச்சு, நாளைக்கு ஊர் போய் சேர்ந்தா , பழைய குருடி, கதவைத் திறடி வாழ்க்கைதான்” என்ற மன்னியின் கேள்விக்கு
“அதுக்கென்ன பண்றது, எங்க போனாலும் வீட்டுக்குத்தானே திரும்பிப் போயாகணும்” என்றாள் சரோ.
படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையைத் தூக்கி அவளை ஒரு முறை பார்த்தான்.
கல்யாணமான இரண்டாம் வருஷம்.
கோடையின் மதியப் பொழுது. அவன் வாயில் நுழையாத பேர் உடைய ஒரு வடக்கத்தி ஊரிலிருந்து அப்போதுதான் லீவுக்கு கும்பகோணம் வந்திருந்தான்.
மன்னியும் அவளும், கூடத்து அலமாரியை ஒழித்து சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.
கழுத்து நீண்டு வாய் குறுகலான கண்ணடி பாட்டிலின் அகன்ற வயிற்று பகுதியில், சின்ன சின்ன வண்ண மணிகளால் ஆன காடும் அதன் நடுவே ஒரு சிறிய வீடும். மன்னி அதைக் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒரு அத்தையோ, மாமியோ, பெரியம்மாவோ, அத்தங்காவோ, அறுபது எழுபது வருஷத்திற்கு முன்னால், ரெண்டாம்கட்டு கூடத்திலோரத்திலோ , தாழ்வாரத்திலோ வெயில் படுகிற இடமாகப் பார்த்து உட்கார்ந்து செய்திருப்பாளாக இருக்கும்.
ஊஞ்சலில் படுத்திருந்த மாமியார் எழுந்தார், ஊஞ்சல் ரீங்க்…. என்று லேசாக அழுவது போல முனகியது.
தணிந்த கரகரத்த குரலில் கேட்டார், ”சித்ரா! உனக்கு என் மேல வருத்தம் எதுவும் இல்லையே?”
மன்னி பதில் சொல்லவில்லை; திரும்பவுமில்லை. அவள் கையிலிருந்த பாட்டிலை சரோ மெதுவாக வாங்கி அலமாரியில் வைத்தாள்.
“இங்க வா! பக்கத்தில உக்காரு, உங்கிட்ட நான் மன்னிப்பு கேக்கணும்”
“இத்தனை வருஷம் கழிச்சு இப்ப என்ன?” மன்னியின் குரல் கிசுகிசுப்பாய் ஒலித்தது.
“தப்புதாண்டிம்மா நான் பண்ணினது! என்ன சொன்னலும் போறாது! எனக்காக இங்க வா, உக்காரு!”
“இப்ப கூட உங்களுக்காகத்தான் உங்களால பேச முடியறது இல்ல!” மன்னியின் குரல் தணிந்து சீறியது.
இவள் மன்னியை லேசாகத்தொட்டாள்.
மன்னி ஊஞ்சலில் உட்கார்ந்தாள். ஊஞ்சல் க்ரீச்சென்று வீறீட்டு அழுதது.
இவள் ஓட்டில் பதித்திருந்த கண்ணாடி சதுரத்தின் வழியே சரிந்து கூடத்தில் இறங்கியிருந்த ஒளித் தூணைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
“அவன் பாவம்டி! குழந்தை… நான்…..”
“குழந்தைக்கு ஏன் கல்யாணம் பண்ணனும்? ” நாகத்தின் பிளந்த வாய் சீறல்!
மாமியார் அவள் தோளில் சாய்ந்து சத்தமில்லாமல் அழுதார்.
“நீ சிரிச்சு சிரிச்சு வளைய வரும்போது என் நெஞ்சை அறுக்கறதேடிம்மா” கேவினார்.
கொஞ்ச நேரம் கழித்து மன்னி அம்மா தலையைத் தடவி “போகட்டும் விடுங்கோ! இப்ப என்ன அதைப் பத்தி? கவலைப்படாதீங்கோ! எல்லாம் பழக்கம் ஆயிடுத்து இப்போ!” என்றாள்.
கூடத்தை ஒட்டி இருந்த காமரா உள்ளிலிருந்து புத்தகத்தை எடுத்துக்கொண்டு ராம் வேகமாக அவர்களைக் கடந்தான். ஒளித் தூணைக் கடக்கையில் அவன் இமைகளில் வைரத் துணுக்குகள்.
ராம் கீழே காலை நடைக்குப் போயிருந்தார். இப்பொழுதுதான் கொஞ்ச நாளாக அதை அனுமதித்திருந்தார்கள். கொரொனாவால், எல்லாருக்கும் அவரவர்க்கான நடை நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது.
சக்கர நாற்காலியில் லேசாக அசைந்து தொங்கப் போட்ட காலின் வலியை குறைத்துக் கொள்ள முயற்சித்தாள் சரோஜா.
கதவைத் திறந்து ராம் உள்ளே வரும் சத்தம் கேட்டது.
“என்ன உன் மூஞ்சி என்னவோ மாதிரி இருக்கே? என்ன சமாசாரம்?” என்றார்.
“சித்ரா மன்னி… மன்னி போயிட்டா…..” முடிக்கும்பொழுது முகம் அழுகையில் கரைந்து நடுங்கியது.
“அடடா.. எப்போ?”
“இப்பதான் ஏழரை மணிக்கு! பாலாஜி ஃபோன் பண்ணினான். மன்னி….. மன்னி… “அடி வயிற்றிலிருந்து கேவினாள்.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்.
“ ப்ச்…..என்னைக் காட்டிலும் இரண்டு வயசு சின்னவ! இப்பல்லாம் எழுவத்தெட்டு சாகற வயசேயில்லை! என்ன பண்றது?” என்றவர் ,அவள் அருகில் வந்து நின்றார்.
“புரியறதும்மா! உனக்குத் தாங்க முடியலை ! உனக்கு மன்னின்னா உசிரு! , மன்னிக்கும் நீன்னா தனி பிரியம்! என்ன பண்றது? இரு, கொஞ்சம் காபி கலந்து கொண்டு வரேன்! கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கோ! உனக்கு காபி குடுத்துட்டு நான் பாலாஜியோட பேசறேன்”
அவள் தோளை லேசாகத் தட்டினார்.
சமையலறைக்குப் போகத் திரும்பினார்.
அவள் “ ஸ்…..ப்பா..” கால் வேதனையில் முனகினாள்.
“என்ன கால் வலிக்கறதா?”
“ம்…கொஞ்சம் காலைத் தூக்கி அந்த குட்டி ஸ்டூலில் வைக்கறேளா?”
அவர் குனிந்து அவள் கால்களை மென்மையாகப் பிடித்து ஸ்டூல் மேல் வைத்து சின்ன குஷனை சௌகர்யமாக வைத்துவிட்டு
“சரியா இருக்கா?” என்று கேட்டார்.
“ம்…” தலையை ஆட்டினாள்.
அவர் காபி போட உள்ளே போனார்.