- விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
- சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
- பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
- பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
- விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன
- விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
- ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
- ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
- விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
- டால்கம் பவுடர்
- டால்கம் பவுடர் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
- விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
ரவி நடராஜன்
வாதம் செய்வது என் கடமை
அதில் வழியைக் காண்பது உன் திறமை
– கவிஞர் கண்ணதாசன்
ரோலேண்ட் மற்றும் மோலினா, CFC–யைத் தடைசெய்யவேண்டும் என்றவுடன், ரசாயனத் தொழில் ஒன்றும் சும்மா இருந்துவிடவில்லை. 1970-களில் இது ஒரு ஏழு பில்லியன் டாலர் வியாபாரம். இவர்களின் முதல் அஸ்திரம் – ”இது வெறும் ஒரு விஞ்ஞானக் கோட்பாடு. இதுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை. இது வெறும் கட்டுக்கதை.” மேலே சொல்லியுள்ள கண்ணதாசனின் பாடல் வரிகள் இவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்!
விஞ்ஞானக் கோட்பாடுகள், பொதுவெளிப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் போன்றவை அல்ல. கோட்பாடுகள், திறமை பெற்ற சக விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், அத்துடன், கோட்பாடுகள் ஊர்ஜிதப்படுத்தத் தகுந்த சோதனை முடிவுகளுடன் வெளிவரவேண்டும். அத்துடன், சில விஞ்ஞான அளவுகளை ஒரு நல்ல கோட்பாடு, கறாரான கணக்கீடுகள்கொண்டு ஊகிக்கவும் வேண்டும். இதில் ஒரு விஷயத்தைத்தவிர, மற்ற எல்லாவற்றிலும் ரோலேண்ட் மற்றும் மோலினாவின் ஓஸோன் கோட்பாடு சரியாகவே செய்தது – அந்த ஒரு விஷயம், சோதனை முடிவுகள் எதுவும் அந்தக் காலத்தில் இல்லாதது – அதுவே எதிர்பாளர்களின் அஸ்திரமானது.
டூபாண்ட் நிறுவனம், 1975–ல், செய்தித்தாள்களில் ராட்சச விளம்பரங்கள்மூலம் ரோலேண்ட் மற்றும் மோலினாவின் கோட்பாட்டைத் திசை திருப்பமுயன்றது. ரசாயனத் தொழிலின் பொது மக்கட்தொடர்பு அமைப்புமூலம், லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் பணிபுரிந்த ரிச்சர்டு ஸ்கோரர் (Richard Scorer) என்னும் வளிமண்டல மாசு ஆராய்ச்சியாளரைத் தொடர்புகொண்டு, இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ள முயற்சித்தது. ஸ்கோரர், தன்னுடைய கருத்தில், “வளிமண்டலம் என்பது பூமியைச் சுற்றி, மிகவும் திடமான இயற்கையின் அமைப்பு. மனிதன் உருவாக்கும் இந்த CFC, எந்த வகையிலும் ஓஸோன் அடுக்கைப் பாதிக்காது. இது நிரூபிக்கப்படாத விஞ்ஞானக் கற்பனை,” என்றார். அத்துடன் வளிமண்டலம், இதுபோன்ற சிறிய ரசாயனங்களை எளிதில் சமாளிக்கும் சக்திகொண்டது என்று அவர் சொன்னது ரசாயன தொழிலுக்கு ஊக்கமாகப் போய்விட்டது. அத்துடன், அடுத்த அஸ்திரமான சந்தேகத்தையும் மிக எளிதில் அவர்மூலம் பொதுமக்கள் மனதில் தூண்டிவிடுவதற்காக, ‘எரிமலைகள், பூமியில் பல மில்லியன் ஆண்டுகளாகச் சாம்பலையும் அமிலத்தையும் எறிந்து வந்துள்ளன. வளிமண்டலம் இதைச் சமாளிக்கவில்லையா?’ இப்படித் தனியார் துறை லாபத்திற்காக, விஞ்ஞானத் திரித்தலுக்குத் துணைபோனவர்கள் பலர்.

அடுத்தபடியாக ரசாயன நிறுவனங்கள், அரசாங்கங்களின்முன் பல மறைமுக வியாபார மிரட்டல்களையும் முன்வைத்தன. பல்லாயிரக்கணக்கான வேலைகள் போய்விடும். பொருளாதாரம் நிலைகுலைந்துவிடும். ரோலேண்ட் மற்றும் மோலினா போன்ற மோசடி விஞ்ஞானிகள் – அமெரிக்காவைச் சோஷலிஸ்ட் கொள்கைகள்கொண்டு அதன் முதலாளித்துவப் பொருளாதாரத்தை அழித்துவிடுவார்கள் என்று பலவாறும் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியது.
இது போதாதென்று, தொழில்நுட்பக் குழப்பத்திலும் ரசாயனத் தொழில் ஈடுபட்டது. அதாவது,
- CFC–க்கு மாற்று ரசாயனங்கள் உருவாக்கப் பல்லாண்டுகள் ஆகலாம்.
- CFC–யைப்போல அவை இயக்கத் திறமையோடு இயங்குமா என்பது சந்தேகம்.
- குறைந்த இயக்கத் திறமைகொண்ட மாற்று ரசாயனங்களால் நுகர்வோருக்கு அதிகப் பராமரிப்புச் செலவு, கால விரயம் என்று பல பாதிப்புகள் இருக்கலாம்.
- உலகெங்கும் CFC–யை மாற்ற 200 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் இதுதான். இந்தப் பூச்சாண்டி ஆராய்ச்சியில், CFC–யை நீக்கினால் வரும் நலத்தைப் பற்றி எந்தக் கருத்தையும் ரசாயனத் தொழில் வெளியிடவில்லை.


974 முதல் 1987 வரை ரசாயனத் தொழில், இன்னும் சில ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பின்னரே அரசாங்கம் CFC பற்றிய முடிவு எடுக்கவேண்டும் என்று சொல்லிவந்தன. அரசாங்க முடிவுகளைத் தள்ளிப்போட வைப்பது, அன்றும் இன்றைய புவி சூடேற்ற விஷயத்திலும் லாபம் கருதி மட்டுமே செய்யப்படுகிறது.
1978 முதல் அமெரிக்கா, CFC–யைப் பயன்படுத்தும் தெளிப்பான்கள் மற்றும் சில தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஃப்ரீயான் போன்றவற்றைத் தடைசெய்யத் தொடங்கியது. முழு மூச்சாக CFC–யைத் தடைசெய்ய அமெரிக்கா தயங்கியது. இந்த இழுபறி நிலையை மாற்றியது, அண்டார்டிகா கண்டத்தில் மிகப் பெரிய ஓஸோன் ஓட்டை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு. பொது மக்கள், விஞ்ஞானிகள் பக்கம் சாயத்தொடங்கினர். CFC–யை தடை செய்யுமாறு அரசியல்வாதிகளை வலியுறுத்தும் கோரிக்கைகள் அதிகமாகத் தொடங்கின.
1988–ல், ஃப்ரியானுக்கான பேடன்டை வைத்துப் பல ஆண்டுகள் லாபம் பார்த்த டுபாண்ட் நிறுவனம், திடீரென்று அந்தர் பல்டியடித்து, CFC–யைத் தடைசெய்வதை ஆதரிக்கத் தொடங்கியது. பத்து ஆண்டுகளில், CFC உற்பத்தியை நிறுத்திவிடுவதாகச் சொன்னது! இதற்கான காரணங்கள் அந்த நிறுவனத்துக்கே வெளிச்சம். ஆனால், சில முக்கிய காரணங்கள் நம்மால் ஊகிக்கமுடியும்.
- டூபாண்டின் பேடண்ட், சில ஆண்டுகளுக்குமுன் காலாவதியாகியிருந்தது.
- இன்னொரு காரணம், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டூபாண்ட்மீது வழக்குத் தொடர்ந்து, அதற்காகப் பெருந்தொகை அபராதமாகக் கட்டவேண்டிய நிர்பந்தத்தை உணர்ந்திருக்கலாம்.
- எல்லாவற்றிற்கும் மேலாக, ஃப்ரியானுக்கு மாற்று ரசாயனத்தை டூபாண்ட் உருவாக்கிவிட்டது. அடுத்த ஆட்டத்திற்கு டூபாண்ட் தயார்!
1987–ல் கனேடிய அரசாங்கம், உலக அரசாங்கங்களை மான்ட்ரீயல் நகரில் கூட்டி, CFC–யினால் வரும் ஆபத்தை விளக்கியது. அரசாங்கங்கள் விஞ்ஞானபூர்வமாகத் தங்களது கொள்கைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் முன்வைத்தது. 1988–ல், உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் (197) கையெழுத்திட்டன. நல்லவேளையாக, அப்போது டிரம்ப் அரசாங்கம் போன்ற ஒன்று அமெரிக்காவில் இல்லை. (ஏற்கெனவே கையெழுத்திட்ட புவிச் சூடேற்றப் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.)1989–ல், உலகம் முழுவதும் CFC–யைத் தடை செய்ய வேண்டிய மாண்ட்ரீயால் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்த மான்ட்ரீயல் ஒப்பந்தப்படி:
- வளர்ந்த நாடுகளில், 2000 ஆண்டுக்குள் CFC முழுவதும் தடைசெய்யப்பட வேண்டும்.
- வளரும் நாடுகளில், 2010 ஆண்டுக்குள் CFC முழுவதும் தடைசெய்யப்பட வேண்டும்.
https://www.slideshare.net/BISWAJITorJEET/ozone-depletion-and-the-montreal-protocol

இன்று இது நடைமுறைக்கு வந்துள்ளது. 1997–ஆம் ஆண்டு, கனேடிய அரசாங்கத்தின் சுற்றுப்புறச் சூழல் அமைப்பு, ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், 19 மில்லியன் சருமப் புற்றுநோய், 129 மில்லியன் காடராக்ட் கேஸ்கள் குறைந்திருப்பதாக மதிப்பிட்டது. அத்துடன், 300,000 சருமப் புற்றுநோய் இறப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் மதிப்பிட்டது. இத்தனைக்கும் அரசாங்கங்கள் சேமித்த மருத்துவச் செலவை, இந்த அறிக்கை மதிப்பிடவே இல்லை.
ரசாயனத் தொழில் சொன்னதுபோல, CFC–க்கு மாற்று ரசாயனம் உருவாக்கப்பட அவ்வளவு ஆண்டுகள் ஆகவில்லை. இன்று, நாம் பலவித மாற்று ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இவை யாவுமே புவிச் சூடேற்றத்திற்குக் காரணமான வாயுக்களே. தலைவலி போய்த் திருகுவலி வந்ததைப் போன்ற இந்த விஷயத்தைப் புவிச் சூடேற்றப் பகுதியில் மேலும் விவாதிப்போம்.
https://en.wikipedia.org/wiki/List_of_refrigerants
நல்லவேளையாக 1990–லிருந்து CFC தடைசெய்யப்பட்டு வருவதால், விஞ்ஞானிகள் ஓஸோன் அடுக்கின் அளவு 2050–ஆம் ஆண்டில், 1980-ஆம் ஆண்டு அளவிற்கே திரும்பிவிடும் என்று கணக்கிட்டுள்ளார்கள். இதை அண்டார்டிகாவில் மிகத் தெளிவாகக் கணக்கிடமுடியும். இதைச் செய்யவில்லை என்றால், அதே 2050-ஆம் ஆண்டில், புறஊதா B கதிரிஅக்கம் 15 நிமிடச் சூரிய ஒளியளவில் மனிதர்களைப் பல நோய்களுக்கும் ஆளாக்கியிருக்கும்.
முழு வெற்றி என்று நினைக்கையில், 2019–திலும் சைனா CFC–யைப் பல பொருட்களில் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இப்படிச் சில நாடுகள் தில்லாலங்கடி செய்தாலும் ஒஸோன் அடுக்கைக் காத்தது, விஞ்ஞானமும் மனிதர்களும் பெரிய ஒரு புவியளவு ஆபத்தை ஒன்றுசேர்ந்து தடுத்தது மிகப் பெரிய சாதனை. இன்று நாம் புவிச்சூடேற்ற விஷயத்தில் தடுமாறுவதற்கு இது ஒரு முக்கிய வரலாற்றுப் பாடமாக இருக்கிறது. இந்தப் பாடத்தை முழுவதும் நாம் உணர்ந்தோமா என்பது என்னவோ சந்தேகம்தான்.