அப்பயி ஏமாற்றினாள்

அவன் நினைப்பது போல ஒருநாளும் நடந்ததேயில்லை. அன்றும் கூட அப்படித்தான். எப்போதும் சல்லாபிக்கும் அதே நாடக நடிகையுடன் மேக மெத்தையில் ஒன்றாக புரண்டு உருண்டது மாதிரி நினைத்து பிசுபிசுத்து கிடந்த அவனை உசிப்பி பீத்த பாயில் கொண்டு வந்து போட்டது தொலைபேசியின் அந்த சிணுங்கல்.

…………

ம்…என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.

தான் நினைத்தது மாதிரியே நடந்து விட்டதை எண்ணி முதல் முறையாக வருந்தினான் சுந்தரம். முந்தைய மாலையில் தோன்றிய அதே நினைப்பை சொற்பெயர்த்திருந்தாள் தொலைபேசியின் இணைப்பில் இருந்த அம்மா, மூக்கை உறிஞ்சிக்கொண்டே!

எப்போதும் போல இதுவும் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே! ஒருகணம் நினைத்தான்.

இணைப்பை துண்டித்தப் பின்னரும் அவள் குரல். அந்த செய்தி. கேட்டுக்கொண்டே இருந்தது!

ம்.…ஆவ்…சொல்லுங்க அப்ப…

டேய்…நான் அம்மா பேசுறேன்…

ம்…சொல்லு மோவ்..

…………

…..…ங்…

டேய்… தம்பி…இருக்கியா…

ம்ம்…சொல்லு…சொல்லு… எப்போ? நான் வரக்குள்ள நல்லாதானே இருந்திச்சி…அப்புறம் என்னாச்சு… யாரு பாத்தா…நல்லா பாருங்க…அது இப்படித்தான் விளையாடும்.

இல்லடா…இந்த வாட்டி அவுங்க ஏமாத்தல…நெசமா தான் டா…இரு உங்க அப்பாகிட்டயே பேசு… ஏங்க …ஏங்க…

என்ன ப்பா…அம்மா என்ன சொல்லுது…

ஆமாடா…நீயி ஒன்னு செய்யி…

…………

கேக்குரியா…டேய் தம்பி…

ம்…சொல்லுங்க…

அங்க நம்ம கணேசன் வீட்டுல சொல்லிடு…அப்படியே போயி சூரி வீட்டுக்கு…பின்ன குண்டன் வீட்டுக்கு, மறக்காம டைலர் ஜெயராமன் வீடு… கொளஞ்சி மாமா வீட்டுக்கு எல்லாம் சொல்லிடு டா. நீயும் ஒடனே கெளம்பி வா…அப்படியே முடுக்கு சந்து ஆனந்து,,…ம்ம்.…அப்புறம் என இழுத்து இழுத்து இன்னும் யார் யார் பெயர்களையோ அவர் சொன்னது சுந்தரத்தின் காதில் விழவேயில்லை.

அம்மா சொன்னதை மட்டும் மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க செய்து கேட்டான். கண்கள் கலங்கின. புருவங்கள் உயர்ந்தது. ‘ஊஃப்’ வென மூச்செறிந்தான். விஷயம் இதுதான். அப்பயி இறந்துவிட்டாள்!

பாயிலேயே சில நிமிடங்கள் மௌனித்து உட்கார்ந்திருந்தான். கொல்லைநடையில் மூத்திர வீச்சத்தில் கிடந்த அப்பயிடம் ஹாஸ்டலுக்கு திரும்புவதாக சொன்னபோது, காலையில வரியா?காலையில வரியா வென அப்பயி திரும்ப திரும்ப சொல்ல, காது தப்பி போச்சுது போல என்று நினைத்ததும்,

ந்த…காலையில இல்ல அடுத்த வார லீவுலனு சொன்னேன் என்றதும்,

செரி…காலையில வா! என்று திடமாக சொல்லி முந்தியில் முடிச்சிட்டு வைத்திருந்த காசை சுருட்டி தன் கையில் அழுத்திய அப்பயியின் அந்த ஸ்பரிச வெப்பமும், அது பார்த்த பார்வையும் சுந்தரத்தின் நினைவில் வந்து போயின. ஒருமுறை உள்ளங்கை ரேகைகளை உற்று வெறித்து கையை மடக்கிக் கொண்டான்.

திடீரென நினைவு வந்தாற்போல எழுந்து கொல்லைப்புறம் சென்று வந்தான். அவசரமாக கைலியை உதறிவிட்டு பேண்ட் மாட்டிக் கொண்டான். பித்தான்கள் மாற்றி பூட்டப்பட்ட சட்டை மேலும் கீழுமாக இருந்ததை அவன் அறிந்தானில்லை. பையில் அப்பயி மூன்றாக மடித்து சுருட்டி தந்த ஒரு புது இருபது ரூபா தாளும், கசங்கிய பத்து ரூபா தாளும் இருந்தது.

காசு தரும்போது அவனையே குறுகுறுத்த போது, படுத்த படுக்கையிலேயே கிடந்தபடி லேசாக எழும்பி, அவனை தன்பக்கமாக இழுத்து பல நாளாக விளக்காத ஊத்த வாயால உச்சிமோர்ந்து முத்தமிட்ட அந்த நொடியில் தான் தோன்றியது சுந்தரத்துக்கு. காலையில அப்பயி செத்துவிடுமோ!

எப்பவுமே கள்ளத்தனமாக யாருக்கும் தெரியாதபடி தான் அவனுக்கு காசு கொடுக்கும் அப்பயி. கொடுக்கும் போது யாரேனும் பார்த்துவிட்டால் அப்பாவுக்கு வெத்தலை வாங்கி கொடுடா வென்று சொல்லிக்கொண்டே இல்லை என்பது போல அவனுக்கு மட்டுமே புரியும்படி கண்ஜாடை செய்யும். நேற்றைக்கும் கூட அதே மாதிரி தான் கொடுத்தது. ஆனா இந்த வாட்டி தந்தது கொஞ்சம் பெரிய தொகை. முப்பது ரூபா. பெரிய வீட்டுக்கு போனா, அதுக்கு மாத்திரை வாங்கிகொடு என்று சொல்லி அப்பா கொடுத்த அதே புது இருபது ரூபா தாளும், கசங்கிய பத்து ரூபா தாளும். ரெண்டு நாள் கழித்து, அப்பயி திருப்பி தந்த போது அந்த பத்துரூபா தாள் இன்னுமும் கசங்கி போயிருந்தது.

அப்பயிக்கு ரெண்டு நாளுக்கு ஒருக்க பத்து ரூபா செட்டு மாத்திரை போட்டுக்கனும். உடம்புக்கு என்ன ஏது என்பதெல்லாம் ரெண்டாம் பட்சம். மருந்து மாத்திரை யாரும் வாங்கி குடுக்கிறோமா என்பதே முதல் பட்சம். ஒரு கட்டத்தில் சுந்தரத்தை பார்த்தவுடனே அப்பயியின் பத்து ரூபா செட்டு மாத்திரைகளை அனிச்சையாக எடுத்து கொடுக்கும் அளவுக்கு பார்மஸிகாரர் பழகியிருந்தார்!

உடம்புக்கு முடியாம தான கிடக்குறோம். ஒன்னுக்கு ரெண்டு புள்ளைங்க இருந்து என்ன பிரயோஜனம். எவன்னா ஒருத்தன் மருந்து மாத்திரை வாங்கி தாரானுவோலா என்று வீட்டுக்கு வருவோர் போவோரிடம் சொல்லி புலம்புவதை தடுக்க செஞ்ச ஏற்பாடுதான் அந்த பத்து ரூபா மாத்திரை செட்டு என்பதை பாவம் அப்பயி தெரியாமலே செத்துவிட்டிருந்தாள்.

பலதடவை இப்படி போக்குக் காட்டியிருக்கிறது அப்பயி. ஒருமுறை அப்படித்தான். பச்சை பச்சையாக வாந்தி, வயித்தால போய்ட்டு கிடந்த மறுநாள் குளிர் ஜுரம் வந்து, உடம்பு உதற ஆரம்பித்து, பல்லெல்லாம் கெட்டி போச்சுது. பெரியாஸ்பத்திரியில இது ஒன்னும் தேறாது, முடிஞ்சிடும், வீட்டுக்கு தூக்கிட்டு போங்க என்று வார்டு நர்ஸம்மா சொல்ல, அப்பா வேகமா வீட்டு கொல்லநடைய ஒழிச்சு, மரபெஞ்சல்லாம் அக்கம் பக்கத்திலிருந்து எடுத்து போட்டு சொந்தக்காரங்க எல்லாருக்கும் தகவல் சொல்ல ஆள் அனுப்பியும் விட்டார். வீடே எளவு சாயத்தை பூசிக்கிட்டு நின்றது, தெரு ஜனங்க வந்து உயிர் தொக்கி நிற்கும் அப்பயியை பார்த்து திரும்பியவண்ணம் இருந்தனர். பிள்ளைகள், பேர பிள்ளைகள் கடைசி பாலும் ஊற்றியாகிவிட்டது. பாலை ஊத்த ஊத்த குடிச்சிக்கிட்டே இருந்தது அப்பயி, இரவு முழுக்க!

விடிஞ்சதும் அதுவாகவே எழுந்து போய், கொல்லை சாக்கடையில் விழுந்து கிடந்த வாதாங்காய்களையும், தேங்காக்களையும், பொறுக்கி எடுத்து கேணியில் தண்ணீர் இறைத்து கழுவி கொண்டிருந்த அப்பயியை பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம் தான்! வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் சோகம் மறந்து சிரித்துபேசி கும்மாளமிட, அம்மா மட்டும் அப்பாவை ஏனோ முறைத்து பார்த்தது சுந்தரத்துக்கு வியப்பாக இருந்தது.

கொல்லையடி தான் அப்பயிக்கு உருத்தான இடம். சாப்பிடுவது தூங்குவது போக மீதி நேரம் அங்கு தான். தென்னையோலை செத்தைகளை எரித்து வீட்டிலிருப்பவர்கள் குளிப்பதற்கு வெந்நீர் வைப்பது மட்டுமே அதுக்கு இருந்த வேலை. ஒருவர் பின் ஒருவராக குளித்துவர, கடைசியாக தான் அப்பயி குளிக்கும். நிதம் ஷாம்பு போட்டு தலை குளிக்கணும் அதுக்கு. அப்பயிக்கு நல்ல வெண்பட்டு போல தலைமுடி. பெருசு பெருசா பளிங்கு போல பூனை முழி. செகப்பு தோல். குளித்து முடித்து வெயிலுக்கு உணத்தையாக கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு தலை துவட்டும் அப்பயியை பார்க்கும் போது பருவத்தில் அப்பயி ரொம்ப அழகா இருந்திருக்கும் என நினைக்க தோன்றும்.

அப்பயிடம் எப்பவுமே காசு இருப்பு இருந்துகொண்டே இருக்கும். முந்தி தலைப்பில் மூன்று மடி மடித்த நோட்டுகளை அடியில் வைத்து மேலே சில்லறை காசுகளை அளவுக்கு தகுந்தாற்போல அடுக்கி சேலை நுனியில் சுத்தி ஆட்காட்டி விரலால் சுருக்கு போட்டு வைத்திருக்கும். டிசம்பர் பூ விற்ற காசு, மல்லி விற்ற காசு, தேங்காய், இளநீர் விற்ற காசு, பப்பாளி, மாங்காய், முருங்கைக்காய், முருங்கைக்கீரை விற்ற காசு என்று இன்னாருக்கு இவ்வளவு என்று எல்லாத்துக்கும் தனி தனி பக்கம் விட்டு துல்லியமாக மணக்கணக்கில் எழுதி வைத்திருக்கும். வர வேண்டியதற்கும் வரவுக்கும் உள்ள கணக்கு கூட இருக்கும் அப்பயிடம்.

ந்த…இத்தொட சேர்த்து மூணு ரூவா ஆச்சு. காசு ஒப்பங்கிட்ட கேட்டு வாங்கியா, அப்போதான் பூவு என்று கறார் காட்டினாலும், மொவலாசி பண்ணினாலும், சிடுசிடுவென விழுந்தாலும், இந்தா பிடி…இதான் கடைசி…நாளைக்கு சும்மா வரப்பிடாது…ஓடு…னு திட்டிக்கிட்டே கொடுத்து விடும்.

அப்பயி அப்பயி என்று பேர பிள்ளைங்க கூப்பிட போய் தெருவே அப்பயி என்றே கூப்பிட பழகிவிட்டிருந்தது. அதுக்கும் கூட தன் சொந்த பேரை சட்டென யாரேனும் கேட்டா தடுமாறி தான் சொல்லும். நான் அப்பயி வந்திருக்கேன்…பூவு வேணுமா பா… ஈர முந்தியில் பறித்து வைத்துள்ள பூக்களை மும்மூணா எண்ணி குடுத்துவிட்டு கணக்கு சொல்லும்.

பள்ளிக்கூடம் முடிந்து பத்மா அக்கா வீட்டில் சாயங்கால பிரேட்டுக்கு போகும் தனக்கு மஞ்சள் விட்டு சுண்ட காய்ச்சிய பாலை குழாய் வைத்த சில்வர் டம்ளரில் எடுத்துகிட்டு சாஞ்சு சாஞ்சு வரும் அப்பயியை நினைக்கும் போது கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது சுந்தரத்துக்கு. வீட்டிற்கு வாங்கும் பால் போக அவனுக்கென்று தனியா இருநூறு பால் வாங்கி பூ காசு தரவேண்டிய யாரிடமும் சென்று காய்ச்சி வாங்கிக்கொண்டு பாக்கிக் கணக்கை முடித்துக் கொள்ளும் அப்பயியை எண்ணி கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டான் அவன்.

பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பார்த்து விடாதபடி பார்வையை பின்னோக்கி நகரும் மரங்களின் மீது திருப்பினான். எதிரிலிருந்து ப்…பா…ம்…பாம்…வென ஒலியெழுப்பி சர்ரென கடந்தது ரங்கா பஸ்.

சோழபுரம் அத்தை வீட்டுக்கு அப்பயி உடன் ரங்கா பஸ்ஸில் பயணம் செய்ததை நினைத்து களுக் கென சிரித்து வைத்தான் சுந்தரம். கண் கலங்கிக் கொண்டிருந்தவன் திடீரென சிரித்தது பக்கத்து சீட்காரருக்கு என்னவோ போல இருந்திருக்க வேண்டும். முகத்தை கோணலாக்கிக் கொண்டார். சற்றெ நெளிந்தார். ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவில் விலகி அமர்ந்தார். ம்…க்கும் முக்கிக்கொண்டே அண்ணாந்து சாய்ந்து கண் மூடிக் கொண்டார்.

அப்படிதான் அது நிகழ்ந்தது. அப்போது பெரியாஸ்பத்திரியில நர்ஸ் வேலை பார்த்தாள் கமலம். ஆஸ்பத்திரிக்கு வந்துட்டு போகும் அப்பயிக்கு அவள் தான் ஊசி குத்துவதும், மருந்து மாத்திரை எடுத்து தர்றதும். கமலம் லீவுல இருந்தானாக்கா அப்பயி ஆஸ்பத்திரிலிருந்து திரும்பியே வந்துவிடுவாள். மொராட்டு ஊசி குத்திப் போட்ருவாளுவோ நான் போமாட்டேன், கமலம் னா கொஞ்சம் இதம்மா நடந்துக்கும். மனசுக்கு ஆறுதலாக பேசும். பொறுமையா வலிக்காம ஊசி போடும். மத்தவளுவோ நமக்கு சரிவராது. நாளைக்கே வந்து நா பாத்துக்குறேன் என்பாள்.

கொஞ்ச நாளிலே ஆஸ்பத்திரிக்கு உடம்பை காட்ட போவது சாக்காக மாறிப்போனது அப்பயிக்கு. யாரோ இல்லாத குறையை கமலத்தை இட்டு நிரப்பிக் கொண்டாள் அப்பயி.

ஆஸ்பத்திரி கேன்டீனில் மயக்கத்தில் குந்தியிருந்த அப்பயியை ரிக்சா வண்டி வைத்து வீட்டை விசாரித்துக் கொண்டு கூட்டிவந்திருந்தாள் நயிட் டூட்டி முடித்து விட்டு வந்த கமலம். மயக்கத்தில் இருந்தவளுக்கு டீ பண் வாங்கியும் தந்திருந்தாள். அம்மா அம்மா னு கமலம் கூப்பிட போயி அப்பயியும் கமலத்தை மகளாகவே ஏற்றுக்கொண்டாள். வீட்டு விசேஷம், நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கமலத்துக்கு தான் முதல் அழைப்பு. ஒங்கக்கா மாதிரிடா அவ என்று அப்பயி பலமுறை அப்பாவின் கைப்பற்றி சொல்லியிருக்கிறாள். நர்ஸ் கமலம் சுந்தரத்தின் சோழபுரம் அத்தையாகினாள்.

ஊர் ஆஸ்பத்திரி மாத்திரை போதாதுன்னு வண்டியேறி சோழபுரம் நர்ஸ் அத்தையை வருஷத்துக்கு ஒருமுறையேனும் போய் பார்த்து வருவது அப்பயிக்கு வழக்கம். மருந்து, மாத்திரை, சத்து டானிக், சத்து மாவு பவுடரோடு, சில ரூபா தாள்களையும் அத்தை கட்டிக் கொடுத்து அனுப்பும். அப்பயி ஒருமுறை சுந்தரத்தையும் கூடவே கூட்டிச்சென்றிருந்தாள் சோழபுரத்துக்கு. அம்மாவையும் தன்னையும் சைக்கிளில் வைத்து மிதித்து செல்லும் அப்பாவின் சைக்கிளில் இருக்கும் பெடல் கட்டைகள் போல பஸ்ஸிலும் பெரிய பெடல்கள் இருக்கும் என்று நினைத்திருந்தான் சுந்தரம். ட்ரைவர் ஏதோ சக்கரத்தை பிடித்து சுத்துவதை பார்த்து அதை பஸ் பெடல் என்று ரொம்ப நாட்கள் அவன் நம்பிக்கொண்டிருந்ததை எண்ணி சிரித்துக் கொண்டான்.

அதுவரையில் சுந்தரம் பஸ்ஸில் பயணம் செய்தது இல்லை. அது தான் முதல் முறை. அதுவும் அப்பயி கூட. மிட்டாய் வாங்க எப்போ காசு கேட்டாலும் இல்லைனு சொல்லாத அப்பயிகூட. பஸ் பயணத்தில் வாந்தி வரும் என்பது கூட அப்பயி கூட போன அந்த முதல் பயணத்தில் தான் அவனுக்கு தெரிந்தது. டவுன் வண்டி கிடைக்காம ரங்காவில் ஏறிகொண்டனர் பாட்டியும் பேரனும். ரெண்டு ரூபாய்க்கு ஊரையே சுற்றிக் காட்டுகிற சுத்து வண்டி அது, என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஸ்டாண்டிலிருந்து வண்டி கிளம்புவதற்கு முன்னர் கண்ணில் பட்ட அவித்த பட்டாணி சுண்டல், நிலக்கடலை, பலாச்சுளை, பிஸ்கட், சாவரிக்கட்டை வறுவல் என்று ஒவ்வொன்றாக கேட்டு வாங்கி கொறித்து கொண்டிருந்தவன், உர்…என உருமி வண்டி ஒரு குலுக்கு குலுக்க விழுங்கின எல்லாமும் பலாபழ வாசனையோடு வெளி வந்து விழுந்தது பஸ் தளத்தில். பயணிகளும் நடத்துனரும் சத்தம் போட மணலை அள்ளி கொட்டி சுந்தரம் வாயிலெடுத்த தடங்களை மூடினாள் அப்பயி. சும்மா சும்மா கத்தி கொண்டிருந்த பஸ்ஸிலிருந்தோர்களின் வாய்களையும் சேர்த்து தான்.

இருபது மைல் தூரத்தில் உள்ள ஊரை ரெண்டரை மணி நேரம் பயணித்திருந்தார்கள். ஊரையே சுத்துறானே, நாசாமா போனவன், காளியாயில போவ, கழிசல்ல போவ என்று இப்போது அப்பயி வாய் கிழிய வாசாக்கு விட்டதை நடத்துனர் லகுவாக அலட்சியம் செய்தார்.

அ…ங்…நான் அம்மாகிட்ட போனும்…வீட்டுக்கு போனும் என்று வண்டி புறப்படும்போது ஆரம்பித்த சுந்தரத்தின் அழுகை சோழபுரம் அத்தை வீட்டுல கொடுத்த பால்கோவாவை தின்று முடிக்கும் வரையில் தொடர்ந்தது . அதன் பின்னர் பள்ளிக்கூடம் போகும்போது ப்…பா…ம்…பாம்… வென ஹாரன் ஒலித்தப்படி வேகமாக கடக்கும் ரங்கா பஸ்ஸை பார்க்கும் போதெல்லாம் அப்பயி நினைவு வந்துவிடுகிறது அவனுக்கு. இப்போது ரங்கா பஸ் கடந்தது கூட அப்பயியை நியாபக படுத்ததான் போல என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

சேத்துவச்ச காசுகளை சுந்தரத்தின் பெயரில் மீனா மிஸ் ஆரம்பித்திருந்த எட்டனா தின சீட்டில் போட்டுவைப்பாள். தேவைக்கு எடுத்துக்க கொள்வாள். பிள்ளையார் கோவிலில் போட்ட சக்கரபொங்கல் கிடைக்காம போனதுக்கு ராத்திரி முச்சூடும் அழுது அழுது தூங்காம ஜுரம் வந்த சுந்தரத்தை மடியில கிடத்தி தட்டிகொடுத்துக் கொண்டே தூங்கிப்போன அப்பயி, விடிஞ்சதும் செய்த மொத வேலை சக்கரபொங்க கிண்டுனது தான். வெந்நீர் அடுப்பில் கிண்டிய புகையடித்து அடிப்பிடித்த அந்த மாதிரியான சக்கரை பொங்கலின் ருசியை போல அதற்குபின்னே ஒருநாளும் அவன் சாப்பிட்டதேயில்லை.

அந்த அப்பயி தான் இறந்துவிட்டாள்.

அப்பா பிறந்தவுடனே தாத்தா செத்துபோய்விட்டாராம். அப்பயி தான் தனி மனுஷியா இருந்து தான் மூனு பிள்ளைகளையும் வளர்த்ததாம். அப்பாவுக்கு முன்னே அப்பயிக்கு நாலு பிள்ளைகள் இருந்ததாம். காமாலைக்கு ஒன்னு, காய்ச்ச பேதியில் ஒன்னுன்னு ஒவ்வொன்னா பறிக்கொடுக்க மிஞ்சினது ஒங்க அத்தையும் அப்பனும் தான் என்று அப்பயி தன் கதையை இரவு கதைகளாக்கி சொல்லும் போதெல்லாம் தோன்றுவது ஒன்னு தான். அப்பயி மிதப்பான பெண்மணி.

அத்தைக்கு முன்னே பெரிய அத்தை ஒன்று கிணத்தடியில் பாம்பு கடிச்சு செத்துப் பேச்சாம். பெரிய அத்தையை பற்றி செல்லும் போது மட்டும் அப்பயி லேசாக கண் கலங்கும். பெரிய அத்தை அவ்ளோ அழகாம். நாடகக்காரி கணக்கா. செவேலென இருக்குமாம். பொறந்தப்போவே ஒன்றடி நீளம் இருந்துச்சாம். தலைமயிரை பாக்கனும் முசுமுசுவென சுருட்ட சுருட்டயா. பெரிய பெரிய கண்ணு. சின்ன வாயி. சீராளம் பொம்ம கணக்கா அவ்ளோ அழகு. அப்போ பெரிய அத்தை வயசுக்கு வந்த புதுசாம். தீட்டு நாளு அன்னைக்கு கொல்லைக்கு தனியா போவாதனு சொன்னத கேட்காம போனவள பாம்பு கடிச்சிப் போச்சு தாம். தடுக்குல இருந்த பெரிய அத்தையை காணோமுன்னு கொல்லையில் போயி பாத்தாக்கா வாயில நுரை தள்ள நீண்டு கிடந்துச்சாம் பெரிய அத்தை. உடம்பு பூரா மஞ்சள் பூசின மாதிரி மஞ்ச மஞ்சேலென கிடந்ததாம் பெரிய அத்தையின் உடல். வீட்டு தெய்வத்துக்கு படைக்கிறது கூட பெரிய அத்தைக்கு தானாம். அப்போ உன் பெரியப்பன், ஒத்தைலாம் சின்ன புள்ளங்க. அதுக்கு பெறவு தான் ஒப்பன் பொறந்தான். அவுகளும் போய் சேர்ந்துட்டாங்க என்று அப்பயி சொல்லும் போதெல்லாம் பெரிய அத்தை உயிரோட இருந்திருக்கலாம் என நினைக்க தோன்றும் சுந்தரத்துக்கு.

மற்றுமொருமுறை கெணத்தடியில் சறுக்கி விழுந்து விலா எலும்பு முறிந்து, நடக்க முடியாமல் போனது அப்பயிக்கு. ஆஸ்பத்திரி படுக்கையில் கிடத்தப்பட்ட அப்பயியின் தலைமாட்டில் சுந்தரமும், கால் பக்கத்தில் எக்ஸ்ரேகாரனும் ஒருசேர எதிரெதிர் திசைக்கு பிடுத்து இழுக்க, அய்யோ…வென உயிர்வலியில் அடிவயிற்றில் இருந்து கதறிய அப்பயியை ஆட்டோ வச்சி வீட்டுக்கு கூட்டிவந்துவிட்டான் சுந்தரம், எக்ஸ்ரேகாரனை கீழே தள்ளிவிட்டு. அப்போதிலிருந்து நேற்றைக்கு வரையில் சூத்தாமட்டையை தேச்சி தேச்சி தான் அப்பயியின் நடமாட்டம். கிட்டத்தட்ட ஒன்பது பத்து வருஷமா அப்படித்தான். ஒருகட்டத்தில் சூத்துகறி தேஞ்சி, ரத்தம்கெட்டி, கண்ணிபோயி, சீழ் வைத்த புண்ணாகிவிட்டது. டாக்டரிடம் காட்ட வற்புறுத்திய அப்பயியை கூட்டிகிட்டு போன சுந்தரம், புண்ணுக்கு மருந்தும் ஊசியும் வாங்கிக்கொண்டான். வலிக்கு ஊசி குத்தி குத்தி மரத்துபோய் ஒருகட்டத்தில் ஊசியை எதிர்த்தது அப்பயியின் உடம்பு.

சின்ன காய்ச்சலுக்குகூட உயிர்போவது மாதிரி முக்கி, முனகி, புலம்பி தள்ளும் அப்பாவை பார்க்க அப்பயின் திமிரில் கொஞ்சம் கூட அப்பாவுக்கு இல்லையோ என தோன்றும் சுந்தரத்துக்கு! அந்த அப்பயி தான் இறந்துவிட்டாள்!

சன்னமாக குறட்டை விட்டுக்கொண்டடே சுந்தரத்தின் தோளில் சாய்ந்திருந்த பக்கத்து சீட் கிழவர் வண்டியின் குலுங்களில் சட்டென நிமிர்ந்து புறங்கையால் கோட்டுவாயை துடைத்துக் கொண்டார். தன் வழுக்கை தலையில் தேய்த்த எண்ணெய் சுந்தரத்தின் சட்டையில் படிந்ததிருந்ததை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார். பக்கத்து சீட் கிழவர், ஏகாந்த தாத்தாவை நினைவுபடுத்தினார் சுந்தரத்துக்கு. அப்பயியின் கூடபிறந்த தம்பியை. அப்பாவின் தாய் மாமனனை.

பேரு ஏகாந்தலிங்கம்.

அது யாரும்மா என்று ஒருமுறை கேட்டதற்கு, ஒன்னுக்கும் உதவாத ஜென்மம் , எந்த வேலைக்கும் லாயக்கு கிடையாது, ஒரு வேலையும் உருப்படியா தெரியாது, சட்டி சோறு பானை கொளம்பு னு திரியிற மனுசன்…அதே விடு… என்று அம்மா சலித்து கொண்டாள்.

பழையசோற்றை நீராகாரத்திலிருந்து வடித்து உருட்டி கட்டைவிரலால் குழியிட்டு ராத்திரி குழம்பை ஊற்றி பருக்கைகளுக்கு இடையே குழம்பு பரவிய பின்னர் வாயுக்குள் வீசும் ஏகாந்த தாத்தா நிலை இனி கொஞ்சம் கவலை தான். வருது பாரு தீவிட்டி கணக்கா, கால சீத்தி சீத்திக்கிட்டு கொட்டிக்க வந்துடும் சொல்லி வாச்சா போல, வீட்ல கவிச்சை ஆக்கினா போதும் எங்கே இருந்தாலும் மூக்கு வேர்த்துடும், சரியா சாப்பிடுற நேரத்துக்கு டான்னு ஆஜராகி விடும். அம்மா திட்டினாலும் தாத்தாவுக்கு சோறு போட்டதற்கு அப்பயி மேலே இருந்த பயம் கூட காரணமாக இருந்திருக்கலாம்.

பெரும்பாலும் தாத்தா வாய் திறந்து செல்வி எனக்கு கொஞ்சம் சோறு போடுன்னு கேட்டதேயில்லை. அல்லது அப்படி அவர் கேட்டு சுந்தரம் பார்த்ததில்லை. மிட்டாய் வாங்க எப்பவாவது கா ருவா தருவார். அந்த அளவில் தான் அவனுக்கு அவரை தெரிந்திருந்தது. எவ்ளோ நேரம் ஆனாலும் சாப்பிட கூப்பிடும் வரையில் திண்ணையில உட்கார்ந்திருப்பார் ஏகாந்த தாத்தா. வீம்புக்குன்னு கடைசி வரைக்கும் சாப்பிட கூப்பிடாத நாட்களும் உண்டு.

கோவித்துக் கொண்டு தாத்தா யாருக்கும் ஒன்னும் சொல்லாம எங்கேயாவது கிளம்பி போய்விடுவார். பத்து இருபது நாட்கள் கழித்து திரும்பி வரும்போது, கண்கள் பஞ்சடைந்து போயிருக்கும். மேலும் கறுத்திருப்பார். யாரிடமும் பேச மாட்டார். திண்ணையில் உட்கார்ந்து கொள்வார். பின்னர் சுருக்கென எழுந்து நேராக அடுபடிக்கோ, கொல்லைபுறதுக்கோ போயி அம்மாவின் கைகளில் சில பத்து ரூபாய் தாள்களை வைத்துவிட்டு மீண்டும் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொள்வார். தட்டில் சோறுபோட்டு வைத்துவிட்டு சுந்தரம், தாத்தாவை சாப்பிட கூப்பிடு என்று சொல்லிவிட்டு கொல்லபுறத்தில் சென்று கண்கலங்கும் அம்மாவை அவனுக்கு தெரியும். மாமூலாக நடக்கும் இந்த கூத்தையும், அதையொட்டி அம்மாவும் அப்பயியும் போடும் சண்டையும் பார்த்து அவனுக்கு சலித்துவிட்டிருந்தது.

அப்பயி இருந்த தெம்பில் வந்து போய்க்கிட்டு இருந்த தாத்தா இனிமேல் வருவாரா, சுந்தரம் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்.

அம்மாவுக்கும் அப்பயிக்கும் அவ்வளவாக ஆவதில்லை. எதற்கென்றே தெரியாமல் இருவரும் சண்டையிட்டுகொள்வார்கள். போடீ…குஷ்டரோகி மொவளே என்று அப்பயி திட்டுவதும், பதிலுக்கு அம்மா பேசுவதும் பக்கத்து வீட்டாளுங்க வந்து சமரசம் செய்யும் அளவுக்கு கூட போகும் சில வேளைகளில். ஆனாலும் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று இருந்ததை புரிந்துகொள்ளும் அளவிற்கு சுந்தரத்துக்கு அனுபவம் இருக்கவில்லை.

சோறு வடிக்க அரசி எடுக்க சாமி ரூம்புக்கு போன அம்மாவை தேள் கொட்ட துடித்தது என்னவோ அப்பயி தான். வெங்காயத்தை தேள்கொட்டிய இடத்தில் வச்சி தேய்த்துவிடுடீ, பூண்டை தின்னு, சோப்பு போட்டு கடிச்ச இடத்தை அலம்பு, அது இது னு பெரியாஸ்பத்திரிக்கு போகும்வரை எதையாவது சொல்லிகொண்டே நீர் கோர்த்த கண்ணோடு புலம்பும் அப்பயி ஒரு முரணான பொம்பளையாக தான் பட்டது சுந்தரத்துக்கு!

அம்மாவுக்கு சக்கரை இருப்பதை தெரிந்துக் கொண்ட அந்த இரவில், பாவம் அவ பதிமூணு வயசுலேர்ந்து மாடு மாதிரி வேலை செய்யிறா, அவளானாக்க செய்யிற, அவளும் போய்ட்டாளானாக்க அவ்ளோ தான், வீடு நாறிபோகும்…நாறி என்ற அப்பயின் கம்மிய குரல் அவன் காதில் ஒருமுறை ஒலித்து அடங்கியது.

ஊர் நெருங்கிவிட்டது. நிறுத்தத்தில் இறங்கி நடைப்போட்டபோது துல்ஜா ஸ்வீட்ஸில் சுடச்சுட கிண்டிக்கொண்டிருந்த நெய் அல்வாவின் வாசத்தில் அப்பயி மணந்தது. அது என்னவோ அப்பயிக்கு அல்வா என்றால் கொள்ளை பிரியம். சில சமயங்களில் அப்பயி வைத்தியம் கூட செய்யும். தலைவலி, வயித்த வலி, கை கால் குடைச்சல் என்று மேலுக்கு என்ன வந்தாலும் அப்பயிக்கு தெரிந்த நாட்டுவைத்தியம் அல்வா தான்! மிச்சர் தூவிய அம்பது அல்வா அல்லது ஜீராவில் ஊறிய ரெண்டு குளோப்ஜாமுன்! அவைகள் தான் சர்வரோக நிவாரணியாக இருந்தது அப்பயிக்கு. பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிபோகுற சாக்கில் தனக்கும் வாங்கி கொடுத்த அல்வா தொண்டையில் இன்னுமும் சன்னமாக சுடுவதாக நினைத்து எச்சில் கூட்டி விலுங்கினான் சுந்தரம்.

வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவே இருந்தது வீடு. ஒரு பெரும்சாவு விழுந்த வீடு போல இல்லை. சின்னசின்னதாக விசும்பல்கள், கேவல்கள், தொண்டை கனைப்புகள், மெல்லியதான செருமல்கள் அங்கங்கே! அவ்வளவுதான்! தெருவில் அமர்ந்திருந்த சொந்தகார பெருசுகள் வாடா பேராண்டியென்று வரவேற்றிவிட்டு ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். சிறுமி ஒருத்தி உட்கார்ந்திருந்தவர்களுக்கு டீ கொடுத்துக்கொண்டிந்தாள். அப்பா திண்ணையில் இருந்தார். கண்கள் ஏகாந்த தாத்தாவை தேடின. ஆள் இல்லை. அவருக்கு தகவல் கிடைத்திருக்குமா?

கொல்லைநடையை பார்த்த மாதிரி உட்காரவைக்கப்பட்டிருந்தாள் அப்பயி. நெற்றி மறைய திருநீறு இடப்பட்டிருந்தது. சுவரில் அடிக்கப்பட்ட ஆணி நாடிக்கட்டுடன் சேர்த்து தலையையும் இறுகபிடித்து இருந்தது. மூடிய கண்களுக்கு மேல் மேடு தேய்ந்த சோடா கண்ணாடி போட்டிருந்தாள். கண்ணாடியை மாற்ற கேட்டுக்கொண்ட அப்பயியின் குரல் அதன் ஒருபக்க வளைவில் செப்புகம்பியில் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. தனக்கு பிடித்தமான வெளிர் ராமர் பச்சை வண்ண சின்ன ஜரிகை புடவை பூணியிருந்தாள். சேர்ந்திருந்த ரெண்டு கைகளும் மடியின்மேலே இருந்தது. கால்கள் திடமாக தரையில் ஊனியிருந்தாள். வாழ்ந்து களைத்து ஓய்வில் இருப்பது போல இருந்தது முகம். நான் செத்துப்போனாக்கா சாமி ரூமில் மாட்றதுக்கு ஒரு போட்டோ புடிடாவென ஏதோ ஒரு கல்யாணத்தில் புடிக்க சொல்லி எடுத்துக் கொண்ட அந்த புகைப்படத்தில் இருந்தது மாதிரியே இருந்தாள் அப்பயி.

உள்மாடம் வெட்டிய அழகான சதுர குழி தயாராக இருந்தது அப்பயிக்கு. பெருமாண்டி படித்துறை வறண்டு கிடந்தது. பேருக்குகூட பொட்டு தண்ணி இல்லை. சிலர் மரநிழல்களில் அமர்ந்து குடித்துகொண்டிருந்தார்கள். வற்றிய நதியில் இறங்கி குழந்தைகள் விளையாடிகொண்டிருந்தார்கள். சிலர் சீட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். புதர்களின் அசைவில் நான்கு மனித கால்கள் கிடந்ததது.

தீபாய்ந்தாள் கோவிலில் யாரோ ஏற்றி வைத்த எலுமிச்சை விளக்கு சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

பூக்களை மிதித்துக் கொண்டே எங்கள் கால்களில் நடைபோட்டாள் அப்பயி குலுங்கியபடி. தெருமுனை திரும்பி மார்க்கெட்டை கடக்கும்போது அப்பயியின் முகத்தை திரும்பி பார்த்தான் சுந்தரம். எங்கே அப்பயி மார்க்கெட்டில் நிறுத்தசொல்லுமோ என்ற சந்தேகத்தில். அப்பயி முகம் மார்கெட்டை நோக்கி ஒருகணம் திரும்பிய மாதிரி இருந்தது அவனுக்கு. அப்பயியின் கண்கள் திறந்துகொண்டது மாதிரி. மீன்களை ஏக்கமாக பார்ப்பது மாதிரி, முகம், வாசம் பிடித்து லயித்தது மாதிரி, நெஞ்சு உயர விம்மி தாழ்ந்தது மாதிரி தோன்றியது. இல்லை. இருக்காது. தலையை ஆட்டினான். ஏதோ பிரமை!

அப்பயி தன் கால்களால் நடக்கிற நாட்கள் என்றால் கண்டிப்பாக அப்படி தான் நடந்திருக்கும். ஆனால் இன்று நடக்கவில்லை. நடக்காது. அப்பயி இறந்துவிட்டாள்.

அப்பயிக்கு மீன் என்றால் தனி இஷ்டம் தான். மதியம் வச்ச குழம்பை இரவுக்கு, காலை பழையசோறுக்கு, மதியத்துக்கு, பின்னே இரவுக்கு, மறுபடி காலை பழைய சோறுக்கு என்று சுண்டவச்சி சுண்டவச்சி எண்ணெய்சட்டியை சுரண்டும் வரைக்கும் விடாது. குழம்பில் ஊறிய மீன் மண்டையை வ்…ஃவ் வென உறிஞ்சி சப்புக்கொட்டுவதும், மீன் முழியை நறுக்கென்று நசுக்குவதும், கருக்கு கருக்குவென்று முள்களை மெல்லுவதும், தண்ணீர் விட்டு அலம்பின கண்ணாடி மாதிரி மண்டை எலும்புகளை சப்பி வீசுவதும்…..அப்பயி மீன் சோறு சாப்பிடுவது தனி அலாதியானது.

கொஞ்ச நாளாக அப்பயிக்கு மீன் சாப்பாடு செல்லவில்லை. தடிப்பு தடிப்பாக வீங்கி போனது உடம்பு. அரிப்பு பொறுக்காமல் சொறிந்து சொறிந்து படிந்தது நகத்தடங்கள். ஒருமுறை மீன் சாப்பாடு ஒத்துகொள்ளாமல் எதுக்களித்தது. முள் தொண்டைகுழியில் மாட்டியதாலோ என்னவோ வாயிலெடுத்தது. அதை அப்பயியால் ஒத்துக்கொள்ளவேமுடியவில்லை.

ரெண்டு மூன்று நாட்களுக்கு அதேயே சொல்லி புலம்பி கொண்டே இருந்தது. அப்பயியை தெரிந்த வரையில் மீன் குளம்பு சாப்பிட முடியாது இருந்த நாள் முதலே அது செத்துவிட்டது. அந்த ஆற்றாமையில் தான் அப்படி தோணியிருக்குமோ…சுந்தரம் நினைத்து கொண்டான்.

இடுகாட்டு பம்படியில் அடித்த தண்ணீரில் தலைக்கு ஊத்திவந்தார்கள். துவண்டு தொங்கிய தலையை ஒருவர் பிடித்துக் கொள்ள, சரிக்கப்படும் மண்ணை மடியில் வாங்கிக் கொண்டிருந்தாள் அப்பயி. குழியில் இறங்கியிருந்த மற்றவரின் மூட்டுவரை மண் புதைந்திருந்தது இப்போது. அப்பயி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் மறைந்துகொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரம்.

குமித்து அணைத்த மண்ணின் பிடியில் இருந்தாள் அப்பயி. “கடைசியா ஒருமுறை முகத்தை பாத்துக்கலாம்”…உரத்து கூவிய குடிமகனின் குரலுக்கு சுந்தரத்தை நிமிர்ந்து பார்த்தாள் குழிக்குள் இருந்த அப்பயி!

சுந்தரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதே பழுப்பேறிய பூனை கண்கள் கொண்டு. அவைகளில் மண் வீசப்பட்டும் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். தலைவரையில் கொட்டியாகிவிட்டது. முழுவதும். பின் சமமாக. மேலே சின்னதாக மேடும் கட்டியாகிவிட்டது. ஆனால் அப்பயியின் கண்கள் மட்டும் ஈரம் காய்ந்த தன் முதுகில் சுடுவதுபோல இருந்தது அவனுக்கு!

மூன்றாம் நாள் பாலுக்கு வந்திருந்தார்கள்.

தலைக்கு நேராக ஊனியிருந்த அடையாள கம்புக்கு விட இடுகாட்டு பைப்பில் அடித்த தண்ணீரில் தொப்பென்று விழுந்து துள்ளியது குட்டி மீன் ஒன்று. சொரேயென்று சில்லிட்டது அவனுக்கு. மார்க்கெட்டை கடக்கும் போது அப்பயி தான் திரும்பிற்றா? அந்த கண்கள் இன்னும் மூடவில்லையா? அந்த ஏக்கமான பெருமூச்சின் சத்தம் கேட்டது உண்மையா? அப்பீ…அப்பீ …அப்பீ வென அரட்டிக் கொண்டே துள்ளும் மீனை கையில் ஏந்திக் கொண்டு சமாதை நோக்கி ஓடினான் சுந்தரம். உள்ளங்கையில் துடித்தது உயிர். சமாது மேலே போட்டான். துடித்த மீனின் அடங்களில் அப்பயியின் இமைகள் நிம்மதியாக தாழ மூடுவது போல தோன்றியது.

தெருவில் பள்ளிக்கூடம் முடித்து புத்தக பையை முதுகில் மாட்டியிருந்த யாரோ ஒரு சிறுவனை சந்து முனையில் நிறுத்தி தெருவிலே சோறூட்டி அவன் வாயை அழுத்தி அழுத்தி துடைத்து விட்டு கொண்டிருந்தாள் யாரோ ஒரு கிழவி!

அப்பயிகள் இறப்பதில்லை!

2 Replies to “அப்பயி ஏமாற்றினாள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.